Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலைதேசமா கொலம்பியா?

Featured Replies

கொலைதேசமா கொலம்பியா?

 
 
கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம்
கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம்

கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம்.

‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை.

தென் அமெரிக்காவின் நான்காவது பெரிய நாடு இது. அந்த கண்டத்தின் உச்சியின் இடது புறமாக அமைந்திருக்கிறது.

கொலம்பியாவை வட அமெரிக்காவுடன் இணைப்பது பனாமா. மற்றபடி வெனிசுவேலா, பிரேசில், பெரு, ஈக்வேடார் ஆகிய நாடுகளுக்கு நடுவே இது அமைந் துள்ளது. பசிஃபிக், அட்லாண்டிக் ஆகிய இரு மாபெரும் கடல்களின் கரைகளைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடு கொலம்பியாதான். அமெரிக்க கண்டத்தைக் கண்டு பிடித்த கொலம்பஸின் பெயரில் தான் கொலம்பியா உள்ளது.

கால்பந்து, எருதுச் சண்டை, கார் ரேஸ் - இவைதான் கொலம்பியர்களின் மிகப் பிரியமான விளையாட்டுகள். வேகம், வேகம் - இதுதான் அவர்கள் மூச்சுக் காற்று. கொஞ்சம் வன்முறையும் அதில் கலந்திருந்தால் இதுதான் இயல்பு! கால்பந்து வீரர் ஒருவர் கோல் போட்டால் என்ன ஆகும்? சக விளையாட்டு வீரர்கள் கட்டித் தழுவிப் பாராட்டலாம். விமர்சகர்கள் புகழ்ந்து எழுதலாம்.

எஸ்கோபார் என்ற கொலம்பிய நாட்டு கால்பந்து வீரர் தன் தலையின் மூலமாகவே கோல்கள் அடிக்கும் நுட்பத்தில் சிறப்பு பெற்றவர். ஆனால் ஒரு நாள் அவர் தன் தலையெழுத்தையே மாற்றிக் கொள்ளும்படி வித்தியாசமான ஒரு கோல் போட்டார். அது ஸேம் ஸைடு கோல்! அதுவும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில்.

1994 கால்பந்து உலகக் கோப்பை - தேதி ஜூன் 22. அமெரிக்காவுக்கு எதிரானது. பந்தை ‘பாஸ்’ செய்யும் நோக் கத்தில்தான் எஸ்கோபார் அதை உதைத்தார். ஆனால் அந்த ஊழ்வினைப் பந்து அவர் தரப்பு நெட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்து விட்டது. சேம் சைட் கோல். அமெரிக்கா 2 1 என்கிற கணக்கில் வென்றது. முதல் சுற்றிலேயே கொலம்பியா விலக்கப்பட்டது. எஸ்கோபாருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

பி.பி.சி. சானலின் வர்ணனையாளர் ஆலன் ஹான்சன் என்பவர் எஸ்கோபாரின் எதிர்பாராத கோல் குறித்து ‘’இப்படி ஒரு தவறு இழைத்தவரை சுட்டுத் தள்ளினால்கூட தப்பில்லை’’ என்று கூறித் தொலைத்தார். அவரது நாக்கில் ஏழரைநாட்டான் அமர்ந்திருந்தானோ?

எஸ்கோபாருக்கு பல உறவினர்கள் லாஸ் வேகாஸில் இருந்தனர் (போட்டிகள் நடைபெற்றது அமெரிக்காவில்). என்றாலும் அங்கெல்லாம் போகப் பிடிக்காமல் தாய்நாடு திரும்பினார். ஐந்து நாட்கள் வீட்டில் அடைந்து கிடந்த பிறகு நண்பர்களோடு ஒரு மதுவகத்துக்குச் சென்றார். பிறகு நண்பர்கள் பிரிந்தனர்.

தனியாகத் தன் வீட்டுக்குக் கிளம்பிய எஸ்கோபாரை திடீரென மூன்று பேர் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவன் கையில் துப்பாக்கி. அத்தனைபேர் முகங்களிலும் வெறுப்பு வழிந்தது. ஆறு முறை எஸ்கோபார் சுடப்பட்டார் எஸ்கோபாரின் உயிர் அடங்கியபோது ‘’ஐகோ’’ என்று கொலைகாரன் கத்தினான் (இந்த வார்த்தை தென் அமெரிக்க கால்பந்து வர்ணனையாளர்களால் அடிக்கடி கூறப்படுகிற ஒன்று).

ஆக தவறாகப் போட்ட ஒரே ஒரு கோல் எஸ்கோபாரின் உயிரைக் குடித்து விட்டது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்கோபார் இறப்பதற்கு முன்பாக ஐந்து வருடங்கள் பமேலா என்னும் பல் மருத்துவரைக் காதலித்தார். திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம்தான் பாக்கி என்கிற நிலையில், எஸ்கோபாரின் படுகொலை நிகழ்ந்தது.

எஸ்கோபாரின் அப்பா ஒரு சிறப்பான அமைப்பைத் தொடங்கியவர். தெருவில் திரிந்து வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருந்த கொலம்பிய இஞைர்களுக்கு கால்பந்து கற்றுக் கொடுத்து ஆக்கபூர்வமான வழிகளில் திருப்பிய அமைப்பு அது.

எஸ்கோபார் இறப்புக்குப் பிறகு பி.பி.சி. தொலைக்காட்சி சானல் ஒரு பொது மன்னிப்பு கேட்டுக் கொண்டது. தன் வர்ணனையாளரின் வாக்கியத்துக்காகத் தான். (இதற்கும் கொலைகாரர்களின் செயல்பாட்டுக்கும் தொடர்பே இல்லை என்ற போதிலும்) இதற்குப் போய் கொலையா? மற்ற நாடுகள் உறைந்து போயின. கொல்ம்பியர்கள்? சிலர் சந்தோஷப்பட்டனர்!. மற்றவர்கள் ஒரு ‘உச்’ கொட்டி விட்டு தத்தம் வேலையை கவனிக்கத் தொடங்கினார்கள். அற்ப விஷயத்துக்கும் வன்முறை பதிலடி என்பது அவர்களுக்குப் பழகிப் போன விஷயம்.

அதற்காக கொலம்பியா மக்கள் அனைவருமே கொடூரமானவர்கள் என்பதில்லை. ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எஸ்கோ பாரின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டனர். பதற்றங்கள் அடங்கிய பிறகு காலப்போக்கில் 2002ல் அவருக்கு ஒரு சிலையும் நிறுவப்பட்டது!

கொலம்பிய போதைப் பொருள் அமைப்பு ஒன்றுதான் எஸ்கோபாரின் படுகொலைக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு கொலைகார கும்பலும் கைது செய்யப்பட்டது. (குறிப்பிட்ட போட்டியில் கொலம்பியா வெல்லும் என்று எக்கச்சக்கமாக சூதாட்டத்தில் பெட் கட்டியிருந்தனர் அந்த அமைப்பின் உறுப்பினர்கள்).

எஸ்கோபாரின் படுகொலை மட்டுமல்ல, கொலம்பியாவின் ‘படுகொலை’க்குக்கூட போதை மருந்து அமைப்புகள்தான் காரணம்.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/கொலைதேசமா-கொலம்பியா/article6610633.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

கொலைதேசமா கொலம்பியா? - 2

 
 
பாப்லோ எஸ்கோபாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப் படத்தின் ஒரு காட்சி.
பாப்லோ எஸ்கோபாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப் படத்தின் ஒரு காட்சி.

கொலம்பியா ஒரு விவசாய நாடு. எல்லாவித தட்ப வெப்ப சூழல்களும் அதன் பல்வேறு பகுதிகளில் நிலவுவதால் விதவிதமான பயிர்களைப் பயிரிட முடிகிறது. பிரேசிலுக்கு அடுத்ததாக உலகிலேயே இங்குதான் காபித் தயாரிப்பு மிக அதிகம். அரிசி, உருளை, வாழை... இவற்றோடு மற்றொரு பயிரும் கணிசமான அளவுக்குப் பயிரிடப்பட்டதில்தான் கொலம்பியா ஆட்டம் கண்டது. அது கஞ்சாச் செடி!

உலகின் மொத்த போதைப் பொருள்களில் 75 சதவிகிதம் கொலம்பியாவிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. அதுவும் கடத்தல் மூலமாக.

‘’நார்கோ டெமாக்ரஸி’’ என்ற புதிய வார்த்தையையே கொலம்பிய அரசுக்கு சூட்டுமளவுக்கு போதை மருந்து வியாபாரமும், அரசியலும் சாரையும், நாகமும் போல பின்னிப் பிணைந்திருக்கின்றன.

கொலம்பியாவின் உண்மை முகத்தைக் காட்டுகின்ற வகையில் வெளியான திரைப்படங்களில் இரண்டு குறிப்பிடத்தக்கவை.

கொலம்பியாவின் கிராமப் பகுதியில் வசிக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். ஒருநாள் அவர்கள் தங்கள் பள்ளிக்கு அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது வெகுதூரம் அந்தப் பந்தை தட்டிச் செல்ல, அது ஒரு சுரங்கப் பகுதியில் விழுந்து விடுகிறது. அப்போதுதான் அவர்கள் தங்கள் நாட்டின் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்கிறார்கள். இளம் வயதினரின் கண்ணோட்டத்தி லிருந்து கொலம்பியாவின் வேதனையான உண்மைகள் பதிவாகின்றன. இது ‘கலர்ஸ் ஆஃப் தி மவுண்டன்’ என்ற திரைப் படத்தின் கதை.

மற்றொரு திரைப்படம் ‘ரோட்ரிஜோ டி நோ ஃப்யூச்சர்’. கொலம்பியாவில் உள்ள மிக வித்தியாசமான ஒரு கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து விழத் தொடங்குகிறான் ஓர் இளைஞன். காலம் திடீரென நின்று போகிறது. அவன் கடந்த கால வாழ்க்கையில் நடந்தவை அவன் மனதில் விரிகின்றன. போதை மருந்துக் கூட்டத்தில் அவன் சிக்கிச் சீரழிந்த கட்டங்களை நினைத்துப் பார்க்கிறான். ஒரு பிரமாதமான ட்ரம்ஸ் இசைக் கலைஞராக வரவேண்டுமென்பது அவன் விருப்பம். ஆனால் சிவமணியாக நினைத்த அவனுக்கு அவமானங்கள் மட்டுமே காத்திருக்கின்றன.

இந்தத் திரைப்படத்தின் முக்கிய நடிகர்கள் நடிப்பைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தவர்கள் அல்ல. அந்த நாட்டிலுள்ள சேரிகளில் வசித்தவர்கள். பல கொடுமைகளை கண்முன் பார்த்து வாழ்ந்தவர்கள். இதனால்தானோ என்னவோ படம் மிக மிக இயற்கையாக அமைந்திருந்தது.

கொலம்பியாவின் நிலையை உலகுக்கு உணர்த்தியதில் இந்தத் திரைப்படங்களுக்கும் பங்கு உண்டு.

ஸேம் சைடு கோல் போட்டதால் உயிரிழந்தவர் ஒரு எஸ்கோபார் என்றால், வேறொரு எஸ்கோபார் வேறொரு விதத்தில் கொலம்பியாவின் இமேஜைக் குழிபறித்தான். இவன் பாப்லோ எஸ்கோபார்.

கொலம்பியாவின் மிகப் பெரும் போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார்.

வெறும் 30 டாலர் மதிப்புள்ள கொக்கெய்ன் பேஸ்டை வாங்கி விற்கத் தொடங்கினான் பாப்லோ எஸ்கோபார். பின்னால் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் எழும்பு வதற்கான முதல் அடியாக இது இருந்தது. பழைய விமானங்களின் டயர்களுக்குள் இந்த போதைப் பொருளை வைத்துக் கடத்தத் தொடங்கினான். அமெரிக்காவில் போதைப் பொருளுக்கான டிமான்ட் அதிகமாகிக் கொண்டே வந்ததால் அங்கு தன் கடத்தலைக் குறியாக்கிக் கொண்டான்.

நாளடைவில் அவன் கடத்தல் வணிகம் கடத்தல் சாம்ராஜ்யமாக விரிவடைந்தது.

விமானம் ஓட்டத் தெரிந்தவன் என்பதோடு பல விமானங்களுக்குச் சொந்தக்காரனும் ஆனான். எல்லாமே போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்தவை.

எதற்கும் இருக்கட்டுமே என்று ஆறு ஹெலிகாப்டர்களையும் வாங்கி வைத்துக் கொண்டான்! கொலம்பியாவுக்கும், பனாமாவுக் குமாக இவன் செய்த பயணங் களும், கள்ளப் பயணங்களும் ஏராளம்.

நாளடைவில் விமானங்களுடன் இரண்டு நீர்முழ்கிக் கப்பல்களையும் வாங்கிக் கொண்டான்.

இவனுக்கெதிரான வழக்குகளுக்குக் குறைவில்லை. தொடக்கத்தில் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து சரிகட்ட இவன் முயல, அது முடியாமல் போனது. என்றாலும் காவல் அதிகாரிகளுக்கு அதிகத் தொகை கொடுத்து வழக்கை நீர்த்துப் போகச் செய்தான்.

‘வெள்ளியைப் பெற்றுக் கொள் அல்லது ஈயத்தைப் பெற்றுக் கொள்’’ என்பதுதான் அவன் சித்தாந்தம். ஸ்பானிஷ் மொழியில் இதை ‘ப்ளாடா ஓ ப்ளோமோ’’ என்பார்கள். அதாவது பணத்தை வாங்கிக்கொள் அல்லது துப்பாக்கிக் குண்டுகளை வாங்கிக் கொள். 1983-ல் கொஞ்சமாக அரசியலில் கால் பதித்தான்.

கொலம்பிய லிபரல் கட்சியில் சேர்ந்து அதன் மேல்சபை போன்ற அமைப்பில் உறுப்பினராக எஸ்கோபார் விளங்கும் கூத்தும் நடைபெற்றது. ஸ்பெயின் மூலமாக ஐரோப்பாவுக்கும் போதைப் பொருள்களை கடத்தத் தொடங்கினான்.

எக்கச்சக்கமான ஒரு கலக்கமும் கொடுத்தான். நூற்றுக் கணக்கானவர்களைக் கொலை செய்தான். 1989ல் ஐனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட லூயி கார்லோஸ் கலன் என்பவர் படுகொலை செய்யப்பட்டதில் பாப்லோ எஸ்கோபாருக்குப் பங்கு உண்டு என்று பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றத்தை (உள்ளே இருக்கும் நீதிபதிகளுடன் சேர்த்து) தகர்க்கச் செய்தானாம்.

வியாபாரத்தின் உச்சகட்டத்தில் ஒரு நாளைக்கு ஆறு கோடி டாலர் சம்பாதித்தது எஸ்கோபாரின் கூட்டம்.

கொலம்பியா மற்றும் அமெரிக்க அரசுகளின் கடும் பகைவனாக இருந்தான் என்றாலும் உள்ளூர் ஏழைகளின் மத்தியில் கதாநாயகனாகவே விளங்கினான் ’நாயகன்’ பாப்லோ எஸ்கோபார். மேற்கு கொலம்பியாவில் மருத்து வமனைகள், பள்ளிகள், மாதா தோவில்கள் ஆகியவற்றைக் கட்டினான். எனவே, இந்த ‘’ராபின் ஹுட்டை’’ சட்டத்திலிருந்து பாது காக்கப் பலரும் உதவினார்கள்.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/கொலைதேசமா-கொலம்பியா-2/article6614316.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

கொலைதேசமா கொலம்பியா? - 3

தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் உள்ள சைமன் பொலிவர் சிலை. கோப்புப் படம்.
தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் உள்ள சைமன் பொலிவர் சிலை. கோப்புப் படம்.

போதைக் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாரின் முடிவு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் கொலம்பியாவின் ஆரம்பத்தைத் தெரிந்து கொள்வோமா?

கொலம்பியாவின் பழங்காலச் சரித்திரம் தொடர்பான விவரங்கள் கிட்டத்தட்ட பதிவாகவே இல்லை. அதாவது ஸ்பானியர்கள் கொலம்பியாவை அடையும்வரை. கி.பி. 1510ல் ஸ்பானியர்கள் கொலம்பியாவில் டாரியன் என்ற பகுதியில் நிரந்தரமாகக் குடியேறினார்கள். சொல்லப்போனால் அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் முதல் நிரந்தரக் குடியேற்றம் என்றுகூட இதைக் குறிப்பிடலாம்.

கொலம்பியா எனப்படும் கொலம்பியக் குடியரசு பல பெயர் மாற்றங்களைக் கண்டபிறகுதான் இந்தப் பெயரைப் பெற்றது. 1538-ல் அவர்கள் நியூ கிரானடா என்ற காலனியை உருவாக்கிக் கொண்டார்கள். 1861-ல் அது ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் நியூ கிரானடா’ என்று பெயர் மாற்றம் கொண்டது. 1863-ல் மீண்டும் ஒரு பெயர் மாற்றம் - யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கொலம்பியா. பிறகு 1885-ல் கொலம்பியக் குடியரசு என்று ஆனது.

கொலம்பஸ் பெயரில்தான் கொலம்பியா விளங்குகிறது என்றாலும் கொலம்பஸ் கொலம்பிய மண்ணில் கால் பதித்ததில்லை. அவருடன் பயணம் செய்த அலோன்ஸோ ஒஜேடா என்பவர்தான் தன் காலை கொலம்பியாவில் பதித்தார்.

பதித்தவருக்குப் பெரும் வியப்பு. அங்கு கால காலமாக வசித்த உள்ளூர்வாசிகள் செல்வ வளம் கொண்டவர்களாக இருந்தனர். (ஒரு சிறு விளக்கம். ஒரு கண்டத்தையோ, தேசத்தையோ ஒருவர் கண்டுபிடித்தார் என்றால் அங்கு ஏற்கனவே மனிதர்களே இல்லை என்று அர்த்தம் அல்ல. உலகின் பிற பகுதிகளோடு தொடர்பே இல்லாமல் இருந்தனர் என்றுதான் அர்த்தம்).

‘‘ஐயோ, இது எல் டொரேடோ’’ என்று ஆனந்தக் கூக்குரலிட்டார். எல் டொரேடோ என்பது மாணிக்கக் கற்கள் மின்னும் தங்க மலைகள் அடங்கிய கற்பனைப் பிரதேசம். கொலம்பியாவைப் பற்றி அலோன்ஸோ எதனால் இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டும்? ஏற்கனவே தென் அமெரிக்காவைப் பற்றி இதுபோன்ற பல கற்பனைக் கதைகள் காற்றுவாக்கில் கலந்திருந்தன என்பது ஒரு காரணம். தவிர உள்ளூர் வாசிகள் தங்கள் சடங்குகளின்போது புனித நதிகளில் தங்கக் காசுகளை வீசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அலோன்ஸோ பிரமித்துப் போனார்.

பிறகென்ன, ஸ்பெயின் தனது வணிகத்தை அங்கு தொடங்கியது. முக்கியமாக சான்டா மார்ட்டா என்ற கொலம்பிய நகரிலிருந்து மாணிக்கக் கற்களை வாங்கத் தொடங்கியது. ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகள் புதுப் பகுதிகளில் வணிகம் செய்யத் தொடங்கும். அடுத்ததாக என்ன செய்யும்?

கரெக்ட். அதே தான். கொலம்பியாவை ஆக்ரமித்துக் கொண்டது ஸ்பெயின். அதைத் தனது அதிகாரத்தின்கீழ் கொண்டு வந்தது. நாளடைவில் சுரங்கங்களில் வேலை செய்ய உள்ளூர் ஆட்கள் போதவில்லை. ஆப்ரிக்காவிலிருந்து கப்பல் கப்பலாக அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டனர். அவர்கள் உள்ளூர் வணிகர்களுக்கு விற்கப்பட்டனர். பதினேழாம் நூற்றாண்டில் உள்ளூர் வாசிகளின் எண்ணிக்கையைவிட இறக்குமதி செய்யப்பட்ட கருப்பர்களின் எண்ணிக்கை அதிகமானது. கலப்பு மணங்கள், பலவித இனங்கள் என்றெல்லாம் மாறுதல்கள் ஏற்பட்டாலும், ஆட்சி அதிகாரம் ஸ்பெயின் கையில் என்பதில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை. இந்த காலகட்டத்தில் (1717ல்) பொகோடா ஸ்பெயினின் தலைநகரமானது.

அந்தக் காலத்தில் கொலம்பியா என்பது பனாமா, ஈக்வேடார், வெனிசுவேலா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது. அடிமை வாழ்வு தாங்க முடியாமல் போனதும் வரி விகிதம் அதிகமாகிக் கொண்டே போனதும் முக்கியமான இரண்டு காரணங்களாக அமைந்தன. நெப்போலியன் தன் தம்பியை ஸ்பெயினுக்கு அரசனாக நியமித்த போது கிளர்ச்சிகள் அதிகமாயின. புதிய சக்ரவர்த்தியை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

கொலம்பியாவின் பல்வேறு பகுதிகள் தாங்கள் சுதந்திரம் பெற்று விட்டதாக அறிவித்தன. ஆனால் அரசியல் பிரிவுகளும் உள்குத்து வேலைகளும் தொடர்ந்தன என்பதுதான் சோகம். போராட்டங்கள் வலுப்பெற்றன. சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் சைமன் பொலிவர். சைமன் பொலிவர் வெனிசுவேலா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர். பொலிவியா என்ற நாடு இவர் பெயரில்தான் அழைக்கப்படுகிறது. (அதன் பழைய பெயர் ‘அப்பர் பெரு’) ஒரு நாட்டுக்கே இவரது பெயர் சூடப்படும் அளவுக்கு இவர் என்ன செய்துவிட்டார் என்கிறீர்களா?

சைமன் பொலிவர் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்பப்பட்டு கல்வி பயின்றவர். ஐரோப்பிய அரசியலில் எக்கச்சக்கமான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 1808-ல் ஸ்பெயினை ஃபிரான்ஸ் ஆக்ரமித்தது. எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். இவருக்காகவே இவர் பெயரில் உருவானது பொலிவியக் குடியரசு.

காதல் மனைவி மரியா தெரஸா மஞ்சள் காமாலையில் இறந்துவிட, நெப்போலியனுடன் (பெயரின் முதல் பாதியை வைத்துக் கொண்டு மதுவோடு சம்பந்தப்படுத்திவிட வேண்டாம். இவர் சக்ரவர்த்தி நெப்போலியன்) நட்பு கொண்டார். ஆனால் நெப்போலியன் வெனிசுவேலா உட்பட்ட பகுதிகளை ஆக்ரமிக்க உத்தரவிட்டவுடன் இவர் அதை எதிர்க்கத் தொடங்கினார்.

சைமன் பொலிவர் சுதந்திரப் போராட்டத்தின் தலைவரானார். ஸ்பானிய ராணுவத்துக்கு எதிராக அவர் நடத்திய ஆறு யுத்தங்களிலும் வெற்றி பெற்றார். மக்கள் ஆதரவு அவருக்குப் பெருகியது. என்றாலும் இவற்றைத் தொடர்ந்து அவர் தோல்விகளையும் சந்திக்க நேர்ந்தது.

இவற்றின் சிகரமான போர் என்று 1819 ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற யுத்தத்தைச் சொல்லலாம். சைமன் பொலிவர் இதில் தன் தரப்பு வெற்றியை அழுத்தமாகவே பதிவு செய்தார். கொலம்பியா சுதந்திரம் பெற்றது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/கொலைதேசமா-கொலம்பியா-3/article6615699.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

கொலைதேசமா கொலம்பியா? - 4

 
கொலம்பியாவின் இஎல்என் தீவிரவாத குழுவினர் | கோப்பு படம்.
கொலம்பியாவின் இஎல்என் தீவிரவாத குழுவினர் | கோப்பு படம்.

போரில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெற்றி பெற்றனர். கொலம்பியா விடுதலை பெற்றது. ஸ்பெயினுக்கெதிரான அந்த வெற்றிக்களிப்பில் தங்கள் தேசத்தின் பெயரை ‘கிரான் கொலம்பியா’ (Gran Colombia) என்று அறிவித்துக் கொண்டது. கொலம்பியா, வெனி சுவேலா, பனாமா, ஈக்வேடார் எனப்படும் தற்போதைய நான்கு நாடுகளையும் அப்போது சேர்த்து அந்தப் பெயரில்தான் அழைத்தனர். ஆனால் வேடிக்கை என்னவென்றால் ஈக்வேடார் மற்றும் வெனிசுவேலாவின் சில பகுதிகள் மீது தங்களுக்கு இருந்த பிடியை ஸ்பெயின் அப்போது விட்டுக் கொடுத்து விடவில்லை.

அனைவரும் எதிர்பார்த்தபடி சைமன் பொலிவர் சுதந்திர கொலம்பியாவின் தலைவரானார். பாலா சன்டன்டர் என்பவர் துணை ஜனாதிபதி ஆனார். இவர்கள் இருவருமே மக்களின் மதிப்பைப் பெற்றவர்கள். ஆனால் அடிப்படையில் இவர்களுக் கிடையே ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது.

பொலிவர் மரபுசார் கட்சியைச் சேர்ந்தவர். அதாவது கன்சர்வேடிவ் பார்ட்டி. சன்டன்டர் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர். மத்திய அரசு அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது பொலிவர் எண்ணம். ஆனால் மாநில சுயாட்சிக்கு ஆதரவாக இருந்தார் சன்டன்டர்.

அப்போது ஸ்பெயினின் பிடியில் இன்னமும் இருந்தன ஈக்வேடார், பெரு, பொலிவியா போன்ற பகுதிகள். அவற்றிற்கும் சுதந்திரம் வேண்டும் என்று கருதி னார் பொலிவர். இதற்காக அவர் அடிக்கடி அந்தப் பகுதிகளுக்குச் செல்ல நேரிட்டது. அங்கிருந்து பல்வேறு போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இதன் காரணமாக கொலம்பியத் தலை நகரிலிருந்து அவர் தள்ளியிருக்கும் காலகட்டம் அதிகமானது. 1822-ல் ஈக்வேடார் சுதந்திரம் பெற்றது. கையோடு அது கொலம்பியாவின் அங்கமானது.

அந்தக் காலகட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு துணை ஜனாதிபதி சன்டன்டருக்கு வந்து சேர்ந்தது. ‘’கொலம்பியா மிகப் பெரிய தேசம். பல்வேறு பகுதிகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து அளிப்பதுதான் முறை’’ என்று எண்ணிச் செயல்பட்டார் அவர்.

கொலம்பியா விரைவில் பிளவு பட்டது. இதற்குப் பல்வேறு கார ணங்கள் உண்டு என்றாலும் சன்டன்டர் அளித்த அதீத உரிமைகளும் ஒரு காரணம். தவிர தங்கள் பகுதியைச் சேர்ந்த பொலிவரின் எண்ணங்களுக் கெதிராக சன்டன்டர் செயல்படுவது வெனிசுவேலாவுக்குப் பிடிக்க வில்லை. எனவே அவர்கள் தனிநாடு கோரத் தொடங்கினர். போராட்டங்களில் இறங்கினர்.

1830-ல் வெனிசுவேலாவும் ஈக்வேடாரும் தனிநாடுகளாகப் பிரிந்தன. ஆக பொலிவரின் பரந்துபட்ட கொலம்பியா என்ற கனவு சில வருடங்களுக்குதான் நீடித்தது. பரப்பு சுருங்கிய கொலம் பியா எதிர்நீச்சல் அடிக்கத் தொடங் கியது. அதில் மேற்படி இரண்டு கட்சிகளும் நேரெதிர் அணிகளாக இருந்து கலவரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 19ம் நூற்றாண்டில் மட்டும் எட்டு பெரும் உள்ளூர்க் கலவரங்களைச் சந்தித்தது கொலம்பியா.

அதுவும் 1899-ல் ஆட்சி செய்த கன்சர்வேடிவ் கட்சியினருக்கு எதிராக லிபரல் கட்சியினர் நிகழ்த்திய புரட்சி ஒரு போருக்கே வழிகோலியது. அதை ‘ஆயிரம் நாட்கள் போர்’ என்று சரித்திரம் குறிப்பிடுகிறது. போரின் முடிவில் கர்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி. ஆனால் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். போதாக்குறைக்கு 1903-ல் பனாமாவில் பலவித பிரிவினை எண்ணங்களை விதைத்து அதைத் தனி நாடாக்கியது அமெரிக்கா.

அமெரிக்கா-சோவியத் யூனி யன் பனிப்போர் கொலம்பியாவை யும் 1950-க்களில் எட்டியது. லிபரல் அணியைச் சேர்ந்தவர்கள் இடது சாரிக் கொள்கைகளை கடைப் பிடிக்கத் தொடங்கினார்கள். செல் வந்தர்களுக்கு எதிராகக் கொடி பிடித்தார்கள். இதை சமாளிக்க அங்குள்ள ஜமீன்தார்கள் தாங் களே சின்னச்சின்ன ‘ராணுவத்தை’ உருவாக்கிக் கொண்டார்கள்.

கொலம்பியாவில் முதலாளித் துவமும், கம்யூனிஸமும் நேருக்கு நேராக மோதிக் கொள்ளத் துவங்கின. ஏழை மக்கள் (அவர்களின் எண்ணிக்கைக்குக் கொலம்பி யாவில் குறைவே இல்லை) மார்க்ஸிய வலையில் விழுந்த னர். கெரில்லா போர் முறையைப் பின்பற்றிய இந்த இடதுசாரித் தீவிரவாதிகள் நாட்டின் செல் வந்தர்களுக்குப் பெரும் அச்சுறுத் தலை அளிக்கத் தொடங்கினார்கள்.

எதிர்கட்சிகளுக்கு சட்ட அந்தஸ்து இனி கிடையாது என்று அறிவித்தது அரசு. இதன் முக்கிய நோக்கம் எதிர்க் கட்சியாகிவிட்ட லிபரல் கட்சியை ஒடுக்குவதுதான். ஆனால் தீவிரவாத அமைப்புகள் உருவாவதையும், வளர்வதையும் அரசால் தடுக்க முடியவில்லை. முக்கியமாக FARC மற்றும் ELN ஆகிய தீவிர அமைப்புகளை.

அரசு ஊழல் நிறைந்ததாகவும், சுயநலம் மிக்கதாகவும் இருந்த காரணத்தால் இடதுசாரி கெரில் லாக்களுக்கு ஆதரவு பெருகியது. நாட்டில் போதைமருந்து ஆறாக ஓடுவதற்கும், போதைக் கடத்தல் உச்சத்தை அடைந்ததற்கும் அரசுதான் காரணம் என்றனர் இடதுசாரிகள். அரசு, ராணுவம், போதை வியாபாரிகள் ஆகிய அனைத்துப் பிரிவினருக்கும் எதிராக தீவிரமாகச் செயல்பட்டனர்.

ஆனால் அவர்கள் போதாத காலம் உலக நாடுகளில் கம்யூனிஸம் மெல்ல மெல்ல வலுவிழந்து கொண்டிருந்தது. சோவியத் யூனியன் மேற்கூறிய இரண்டு தீவிர அமைப்புகளுக்கும் செய்து வந்த உதவிகளை நிறுத்திக் கொண்டது. இதன் விளைவு பெரும் விபரீதமானது.

அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டத்துக்கு நிறைய தொகை வேண்டுமே என்ன செய்யலாம்? யோசித்த அந்த அமைப்புகள் தாங்களும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடத் தொடங்கின. தவிர அரசு மற்றும் பணக்கார வர்க்கத்தினரைப் பணயக் கைதி களாக்கி, பணம் பார்க்கத் தொடங் கினார்கள்.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/கொலைதேசமா-கொலம்பியா-4/article6621296.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

கொலைதேசமா கொலம்பியா?

 
கொலம்பியாவில் போதைப் பொருள் செடிகளை அழிக்கும் ராணுவத்தினர் | கோப்புப் படம்
கொலம்பியாவில் போதைப் பொருள் செடிகளை அழிக்கும் ராணுவத்தினர் | கோப்புப் படம்

நாட்டின் ராணுவமும், செல்வந்தர்கள் தாங்களா கவே உருவாக்கிக் கொண்ட ‘குட்டிக் குட்டி ராணுவங் களும் இணைந்து செயல்பட்டன. தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்ப வர்களை இவர்கள் கொலை செய்யத் தொடங்கினர். வருங் காலத்துக்கு நல்லதில்லையா?! வேதனை என்னவென்றால் இவர்கள் தங்கள் நிதிக்கு முக்கிய மாக நம்பியது போதை மருந்துக் கடத்தல் வியாபாரிகளைத்தான். இதில்தான் நாம் முன்பு குறிப்பிட்ட பாப்லோ எஸ்கோபாரும் இணைந்து கொண்டார்.

1983-ல் அரசு போதைப் பொருள் வணிகத்துக்கு எதிராக பலத்த பிரச்சாரம் செய்த துடன் கடுமையான நடவடிக்கைக ளையும் எடுத்தது. கூடவே அமைதி ஒப்பந்தத்திலும் ஈடுபட்டது.

பிடி இறுகுவதைக் கண்ட போதைப் பொருள் வியாபாரிகள் ‘’எங்கள் பணத்தை தேசிய முன் னேற்றத் திட்டங்களில் முதலீடு செய்கிறோம். கொலம்பியாவின் முழு வெளிநாட்டுக் கடனையும் நாங்கள் அடைக்கிறோம்’’ என்றெல் லாம் ஆசை காட்டினார்கள். இதற்குப் பிரதி பலனாக அவர்கள் கேட்டது தங்களுக்குத் தண்டனை தரக்கூடாது என்றும் தங்கள் போதை வியாபாரத்தை அரசு கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதும்தான்.

அரசு இதை மறுத்து விட்டது. எனவே மீண்டும் பெரும் கலவரங் கள் வெடித்தன.

இதனால் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டது. கொலம்பியா வின் பெரும்பாலான போதைப் பொருட்கள் அமெரிக்க நகரங்க ளுக்குதான் கடத்தப்பட்டுக் கொண் டிருந்தன. எனவே கொலம்பிய அரசு ‘‘எங்கள் நாட்டிலிருந்து தப்பி உங்கள் நாட்டுக்கு வரும் மாஃபியா நபர்களை நீங்கள் எங்களிடம் ஒப்படைக்க வேண் டும்’’ என்று கேட்க, அமெரிக்கா ஒத்துக்கொள்ள, இதற்குரிய ஒப்படைப்பு ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது.

மேலும் கோபமடைந்த மாஃபியா ஆட்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்த அரசியல் வாதிகளையெல்லாம் கொலை செய்யத் தொடங்கினார்கள். வங்கிகள், ஊடக அலுவலகங்கள் என்று பல இடங்களில் குண்டு வெடிப்பு. பொகோடாவிலிருந்து நவம்பர் 1989-ல் கிளம்பிய விமானம் ஒன்று குண்டு வெடித்துத் தகர்க்கப்பட்டது. அதிலிருந்த 107 பேரும் இறந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனது என்ற நிலையையும் தாண்டியது.

1990-ல் லிபரல் கட்சியைச் சேர்ந்த சீஸர் கவீரியா ஆட்சிக்கு வந்ததும் நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. நாம் முன்பு குறிப்பிட்ட பிரபல போதைக் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார் அரசிடம் சரணடைந்தான். ஆனால் பின்னர் தப்பித்து விட்டான். அவனைப் பிடிக்க 1500 பேர் அடங்கிய ஒரு தனிப் படையையே அரசு உருவாக்கிது. டிசம்பர் 1993-ல் மெடல்லின் என்ற நகரில் அவனை வளைத்துப் பிடித்துக் கொன்றது அந்த அணி.

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அரசு தன் பிடியை இறுக்க, இறுக்க எதிர்த் தரப்பு மேலும் உக்ர மானது. கொலம்பியாவில் குண்டு வீச்சு, படுகொலை போன்றவை பரவலாயின. 1989-ல் அதிகபட்க கொலம்பியர்களின் இறப்பிற்கான முக்கியக் காரணம் படுகொலை என்று ஆனது.

1990-ல் கொலம்பியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காவிரியா ட்ருஜில்லோ என்பவர் போதைக் கடத்தல் மன்னர்களுக்கு ‘‘சரண டையுங்கள். மிகக் குறைவான தண்டனையை வாங்கித் தருகி றேன்’’ என்று ஆசை காட்டினார்.

1994-1998 ஆண்டுகளில் ஆட்சி செய்த கொலம்பிய ஜனாதிபதி சாம்பர் மீது ஒரு கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தனது தேர்தல் பிரசாரத்திற்காக போதை மருந்து உலக தாதாக்களிடமிருந்து அவர் நிதி பெற்றார் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.

முழுமையாக போதைப் பொருள் விளைச்சலையும் கடத் தலையும் ஒழிக்க வேண்டுமென்று சில அரசியல்வாதிகள் நினைத் தாலும் அவர்களுக்கு நிறைய நடைமுறைப் பிரச்னைகள். ‘‘சிறு அளவில் கோகெய்ன் மற்றும் மரிஜுவானைவை வைத்திருப்பது குற்றமல்ல’’ என்கிறது அந்த நாட்டுச் சட்டம்!.

அரசியலில் தாதாக்களின் பங்கு மக்களை வெறுப்படையச் செய்ய (தனக்கு வேண்டிய அரசியல்வாதி நடத்தும் பொதுக் கூட்டமென்றால் 100 பஸ், அவரது கட்சியின் பெயர் பொறித்த ஆயிரக்கணக்ககான டீ ஷர்ட்டுகள், பிரபல ஹோட்டலில் வி.ஐ.பி.க்களுக்கு விருந்து என்று தாதாக்கள் தூள் கிளப்புவார்களாம்). அமெரிக்கா வும் இந்தப் போக்குக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தச் சூழலில் குற்றம் சாட்டப் பட்ட ஜனாதிபதியே களத்தில் சுறு சுறுப்பாக ஈடுபடத் தொடங்கினார். ‘‘ப்ராஸிக்யூட்டர் ஜெனரல்’ என்ற ஒரு புதிய பதவி உருவாக்கப் பட்டது. இந்தப் பதவியை வகிப்ப வரின் ஒரே வேலை போதை மருந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்து வதுதான். மிகுந்த சிரமங்களுக் கிடையே ‘காளி கார்ட்டல்’ என்ற பிரபல போதை மருந்து மாபியா கும்பலைச் சேர்ந்த சில தாதாக் களை அவர் சிறையில் தள்ளினார்.

‘‘தண்டனையைவிட மன மாற்றமே சிறந்த வழி’’ என்ற புதிய சித்தாந்தத்தை அருளிய ப்ராஸிக்யூட்டர் ஜெனரல் பலவித சலுகைகளை தாதாக்களுக்கு அள்ளி வீசினார். ‘‘குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடையுங்கள். மூன்றே வருட சிறைத் தண்டனை யோடு நிச்சயம் அரசு உங்களை விடுவித்து விடும்’’ என்றெல்லாம் இவர் கெஞ்சுவதை யும், இதற்கும் பலனில்லாமல் போவதையும் கண்டு திகைத்துப் போனார்கள் கொலம்பிய மக்கள்.

1998-ல் நாட்டின் அதிபரான ஆன்ட்ரெஸ் பாஸ்ட்ரனா அரங்கோ என்பவர் போதைப் பொருள் மாஃபியாக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். நாடு ரத்தக்களறி ஆனது. 20 லட்சம் பேர் நாட்டை விட்டே வெளியேறினர். 2000-ல் அமெரிக்க அரசு கொலம்பிய அரசுக்குப் பெரும் நிதி உதவி அளித்தது. ‘பிளான் கொலம் பியா’ என்று இதற்குப் பெயர். போராட் டக்காரர்களை ஒடுக்க அதிகப்படி உரிமைகளை ராணுவத்திற்கு அளித்தது கொலம்பியா அரசு.

2002-ல் ஜனாதிபதியாக அல்வரோ உரிபேவும் தொடர்ந்து கடுமை காட்டினார். 2004-ல் மனித உரிமைகள் மிக மிக அதிகமாக மீறப்பட்டன. எனினும் பின்னர் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வரத் தொடங்கியது. 16,000 இடதுசாரி கெரில்லாக்கள் சரணடைந்தனர் (மற்றும் கொல்லப்பட்டனர்). பல லட்சம் ஏக்கர்களில் விளைந்த கோக்கோ தாவரங்கள் கொளுத்தப்பட்டன.

2006 தேர்தலிலும் உரிபே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். நாடு பொருளா தார வளர்ச்சிப்பாதையில் நடை போடத் தொடங்கியிருக்கிறது. ராணுவ வன்முறையும் குறைந்தி ருக்கிறது.

தீவிரவாத அமைப்புகள் அரசுடன் நீண்டகாலப் பேச்சு வார்த் தைகளை நடத்தியபின் தங்கள் பணயக் கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து வருகிறார்கள்.

2014 ஜூன் 15 அன்று நடைபெற்ற தேர்தலில் ஜுவான் மேனுவல் சான்ரோஸ் என்பவர் ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.

கொலம்பியாவில் அமைதி மெதுவாகத் திரும்பத் தொடங்கியி ருக்கிறது. போக வேண்டிய தூரம் அதிகம் என்றாலும் போக வேண்டிய திசையில் பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறது.

http://tamil.thehindu.com/world/கொலைதேசமா-கொலம்பியா/article6624686.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.