Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேரம்

ஆர். அபிலாஷ்
 
நண்பர் விநாயக முருகன் ஒருமுறை என்னிடம் முழுநேர எழுத்தாளனாகும் தன் விருப்பத்தை கூறினார். அவர் இப்போது மென்பொருள் துறையில் இருக்கிறார். தினமும் எழுதும் பொருட்டு இரவெல்லாம் விழிக்க வேண்டி இருக்கிறது. அந்தளவுக்கு அவரது பகல் நேரத்தை முழுக்க வேலை உறிஞ்சிக் கொள்கிறது. இரவுத்தூக்கத்தை கடன் வாங்கி இருநாவல்களை எழுதி விட்டார். ஆனால் தனது ஒரு நாளின் முழுநேரத்தையும் எழுத்துக்கு செலவழிக்க ஆசை என்றவர் அதற்காய் எதிர்காலத்தை திட்டமிடுவதாய் கூறினார். எனக்கு அப்படி ஒருவர் முழுநேர எழுத்தாளனாவது உண்மையில் பயன் தருமா என ஐயம் தோன்றியது.
 
மேற்கில் எழுத்தாளர்கள், குறிப்பாய் வெற்றி பெற்ற வணிக மற்றும் இலக்கிய எழுத்தாளர்கள், முழுநேர எழுத்தாளர்களாய் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு அலுவலக அறை இருக்கும். ஒரு வழமை இருக்கும். தினமும் குறிப்பிட்ட நேரத்தை படிப்பிற்கும் எழுத்திற்கும் செலவழிப்பார்கள். ஒருநாளைக்கு இவ்வளவு சொற்கள் எழுதவேண்டும் என கணக்கு வைத்துக் கொள்வார்கள். அல்லாவிட்டால் எழுத்தாளன் வேறொன்றும் செய்யாமல் சும்மாவும் இருக்கலாம். சும்மா இருப்பது மனதை ஒரு நிலத்தை ஆறப் போட்டு விதைப்புக்கு தயார்படுத்துவது போல். அதுவும் படைப்பூக்கத்துக்கும் மிகவும் அவசியம். இந்தியாவில் இது இரண்டுமே சிரமம்.
 
எழுபது, எண்பதுகளில் நம் எழுத்தாளர்களுக்கு அரசு வேலை இருந்தது. குறைவான நேரம் மற்றும் குறைவான அழுத்தத்தில் வேலை. நிரந்தரமான ஒரு வேலை நடைமுறை. மாலையானால் சில மணிநேரங்கள் எழுத்துக்கு செலவழித்தார்கள். க.நா.சு, அசோகமித்திரன் போன்றோர்கள் வேலை பார்க்காது முழுநேர எழுத்தாளர்களாய் இருந்தார்கள். அதற்கான தியாகங்களை நடைமுறை வாழ்வில் செய்து சிரமப்பட்டார்கள். நான் கல்லூரியில் படிக்கையில் ஜெயமோகனின் அலுவலகத்துக்கு தினமும் போவேன். அவர் உயரதிகாரியாய் இருந்ததால் வேலை மிகவும் குறைவு. ஒரு பிளாஸ்டிக் பையில் எழுத காகிதம், அட்டை, படிக்க புத்தகங்களோடு தான் அலுவலகம் செல்வார். அங்கு அமர்ந்து வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் நீண்ட கடிதங்கள், கட்டுரைகள் எழுதுவார். வாசிப்பார். இடையிடையே ஒரு சிப்பந்தி வந்து அவரிடம் கையெழுத்துக்கு வாங்க ஒரு கோப்பை நீட்டுவார். கையெழுத்திடுவதுடன் அவர் வேலை முடிந்து விடும். ஒருவிதத்தில் தன் முழுநாளையும் இலக்கியத்துக்கு செலவிடும் வண்ணம் அவர் வேலை அமைந்திருந்தது. ஆனால் முழுநாளும் அலுவலகத்தில் கடும் நெருக்கடியான வேலையில் செலவழிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமக்கு ஜெயமோகனுக்கு கிடைத்தது போல் வேலை இருந்திருந்தால் இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் எனத் தோன்றும். ஆனால் இது உண்மை அல்ல. ஏன் என பிறகு சொல்கிறேன்.
 
தொண்ணூறுகளுக்கு பிறகு தோன்றின எழுத்தாளர்களில் எனக்குத் தெரிந்து அரசு வேலையில் உள்ளவர்கள் குறைவு. ஒரு பகுதியினர் தனியாரிலும் இன்னொரு பகுதியினர் பிடிவாதமாய் வேலை இல்லாமல் முழுநேர எழுத்துப் பணியிலும் இருக்கிறார்கள். ஜெயமோகன், எஸ்.ரா போன்றோர் திரைக்கதை எழுத்தில் தம்மை நிலைநாட்டிவதன் மூலம் பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற்றனர். இன்னும் சிலர் ரெண்டாயிரத்தின் பிற்பாடு ஏற்பட்ட அச்சு ஊடக வளர்ச்சியை பயன்படுத்தி பத்திரிகைகளில் நல்ல வேலைகளில் அமர்ந்தனர். எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் துவக்கத்திலும் கோலோச்சின கோட்பாடு சார்ந்த எழுத்தாளர்கள் கணிசமாய் பேராசிரியர்களாய் பணி புரிபவர்கள்.
 
 ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் இருந்து இப்போது வரை தோன்றி இயங்கும் இளம் எழுத்தாளர்களில் ஒரு பாதியினராவது மென்பொருள் துறையில் இருக்கிறார்கள். எழுதுதற்கான நேர நெருக்கடி இந்த தலைமுறையினருக்குத் தான் அதிகம். ஒன்று தனியார் நிறுவனங்கள் நாளின் பெரும்பகுதியை நீங்கள் வேலையில் செலவழிக்கும்படி எதிர்பார்க்கின்றன. மின்னணு சாதனங்களின் பெருக்கம், இணையம், சமூகமயமாக்கல் வலைதளங்கள் ஆகியன சதா யாருடனாவது உரையாடியபடி இருக்கும்படி உங்களைத் தூண்டுகின்றன. அது மட்டுமல்ல இணையம் இன்று தனிமனிதர்களை ஒரு நடமாடும் ஊடகமாய் மாற்றி விட்டது. எப்போதும் ஏதாவது ஒரு செய்தி உங்களுக்குள் புகட்டப்படுகிறது. தினம் தினம் பரபரப்பாய் ஏதேதோ நிகழ்வுகள் நடப்பதாய் ஒரு பொய்த்தோற்றத்தை மீடியா உருவாக்குகிறது. நீங்கள் இச்செய்திகளை முன்பு போல விலகி நின்று பார்க்க இயலாது. இன்று பரபரப்பு செய்திகளை ஒளிபரப்பும் ஒரு டிவியை போல் தனிமனிதன் மாறி விட்டான். அவன் அவற்றைப் பற்றி கவலை கொள்கிறான். ஒரு கருத்தை உருவாக்குகிறான். பிறகு மறந்து போகிறான். இன்னொரு பக்கம் நடுநிலை, வெகுஜன பத்திரிகைகள், பேஸ்புக் என எங்கும் அன்றாட அரசியல் சமூக செய்திக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் மிகுந்து விட்டது; புனைவுகள் கிட்டத்தட்ட மாயமாகி விட்டன. நாம் திகட்ட திகட்ட அபுனைவுகளை பிழியும் ஒரு காலத்தில் வாழ்கிறோம். பௌதிக நேரம் போக “மன நேரம்” என்று ஒன்று உள்ளது. ஓய்வாக இருந்து சிந்திப்பதற்கு, சிந்தனையின்றி இருப்பதற்கான நேரம். படைப்பூக்கத்துக்கு இது மிகவும் அவசியம். முந்தைய எழுத்தாளனுக்கு மன நேரம் இருந்தது. இன்றைய எழுத்தாளனுக்கு இல்லை.
 
 இப்படி பட்டியலிட்டு வரையறுக்க காரணம் வேலை மற்றும் பொருளாதார நிலை சார்ந்து அவர்களுக்கு கிடைக்கிற நேரமும் எழுதுவதற்கான வசதியும் எப்படி மாறி வந்துள்ளது எனக் காட்டவே.
 
ஒவ்வொரு தலைமுறைக்கும் எழுதுவதற்கு அவர்களுக்கான சவால்கள் இருந்துள்ளன. 70, 80களில் புத்தகங்கள் வாங்குவது, எழுதுவதை பிரசுரிப்பது ஆகியன சவால்கள். அடுத்து வந்த தலைமுறைக்கு குறைந்த சம்பளமும், ஒரு பக்கம் தமக்கு அறிமுகமாகும் உலக பரப்பில் நிகழும் இலக்கிய வளர்ச்சிகளும் கவனமும் தமக்கு ஏன் அமையவில்லை எனும் அழுத்தமும் ஏக்கமும் பிரச்சனைகள். ரெண்டாயிரத்துக்கு பிறகு பணம் சம்பாதிப்பதும், பதிப்பில் இடம் பெற்று தம்மை நிலை நிறுத்துவதும் ஊடகத்தில் கவனம் பெறுவதும் முக்கிய சவால்களாகின்றன. கடந்த பத்து வருடங்களில் ஓரளவுக்கு அன்றாடத் தேவைகளை நிறைவேற்றி நிம்மதியாய் வாழவே நிறைய சம்பாதிக்க வேண்டிய அழுத்தம் அதிகரித்தது. அதே போல பொதுவாய் இன்று உலகு முழுக்க மக்களின் பண்பாடு பௌதிகமானதாய், பணம் சார்ந்ததாய், சாமர்த்தியத்துக்கும் அதிகாரத்துக்கும் அதிக கவனம் அளிப்பதாய் இன்று மாறி உள்ளது. இது இலக்கியத்துக்கு தேவையான விட்டேத்தி மனப்பான்மைக்கு எதிரானது. கலைஞன் எப்போதும் பொருளாதார சாமர்த்தியம் அற்றவனாகவே இருப்பான். அப்போது தான் அரூபமான உலகினுள் அவன் இயங்க முடியும். ஆனால் லௌகீக சாமர்த்தியம் இன்று அவசியமாய் மாறி உள்ளது.
 
அதே போல இன்று உலக அளவில் கூட இலக்கிய எழுத்தாளர்களுக்கும் வணித்தன்மையுள்ள படைப்புகளை எழுதும் விருப்பம் அதிகரித்து வருகிறது. மிக பூடகமான, படிப்பதற்கு மிகவும் புதிர்த்தன்மை கொண்ட படைப்புகள் இப்போது உலகளவில் கூட அதிகம் தோன்றுவதில்லை. மனிதர்களும் பொதுவாய் இருண்மையை விட அதிகம் வெளிச்சத்தையும் கொண்டாட்டத்தையும் தான் இன்று எல்லா தளங்களிலும் எதிர்பார்க்கிறார்கள். இவையெல்லாம் தீவிரமான படைப்புக்ளை உருவாக்க நினைப்பவர்கள் இன்று சந்திக்கிற வேலை மற்றும் பண்பாடு சார்ந்த சவால்கள்.
 
இந்த நிலையில் இன்று நாம் எந்தளவு நேரத்தை படைப்புக்கு ஒதுக்க முடியும் என யோசிப்போம். எவ்வளவு நேரம் கிடைத்தாலும் போதாது என்று தான் தோன்றுகிறது. அந்தளவுக்கு எழுதவும் படிக்கவும் இன்று வாய்ப்புகள் உள்ளன. முழுநேர எழுத்தாளனாய் வசதியாய் தனக்கு ஏற்றபடி எழுதும் ஆசை எல்லாருக்கும் உள்ளது. குறிப்பாய் தினமும் பகல் முழுக்க வேலையில் கழிக்க நிர்பந்திக்கப்பட்டவர்களுக்கு. இப்போது நாம் எவ்வளவு எழுத வேண்டும் என்பது பற்றி ஒரு தெளிவைப் பெற வேண்டும். நிறைய பேர் படிக்கும்படியாய் உபயோகமாய் எழுதுகிற இப்போதுள்ள சூழலில் எழுத்தாளன் வருடத்திற்கு பல புத்தகங்கள் எழுத வேண்டியதில்லை. தன்னால் மட்டுமே எழுத முடியும் என நம்புகிற நூல்களை மட்டும் எழுத முயன்றால் போதும். அதில் தன்னால் மட்டும் முடிகிறதில் தான் ஏற்கனவே எழுதாததை மட்டும் எழுதினால் போதும் எனவும் முடிவெடுக்க முடியும். அபரிதமாய் தேவைக்கு அதிகமாய் எழுதுவதை அவன் இதன் மூலம் குறைக்கலாம்.
 
 அடுத்து ஒரு நாளில் எவ்வளவு நேரம் எழுத்துக்கு செலவழிக்கலாம்? இவ்விசயத்தில் முழுநேர எழுத்தாளனும் பகுதி நேர எழுத்தாளனும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு தொண்ணூறுகளில் எழுத நிறைய நேரம் கிடைத்திருக்கலாம். ஆனால் அப்போதும் அவரை தினமும் வந்து சந்திக்கிறவர்கள், அவர்களுக்கு அவர் எழுதும் கடிதங்கள், படிக்க வேண்டிய விசயங்கள் என கணிசமான நேரம் போய் விடும். எனக்குத் தெரிந்து அவர் இரவில் தான் எழுதினார். இரவெல்லாம் தூங்காததனால் மயங்கி விழுந்து மருத்துவ சிகிச்சை பெற்றதாய் ஒருமுறை என்னிடம் கூறினார். ஆக பகலெல்லாம் நேரம் இருந்தாலும் எழுத்தாளனுக்கு அது போதுமானதாய் இருப்பதில்லை. சிறப்பாய் நேரத்தை திட்டமிட்டு உழைத்து கழிக்கும் அவருக்கே இந்நிலை என்றால் முழுநேரத்தையும் நண்பர்களை சந்தித்து அரட்டையடிப்பதிலும் குடிப்பதிலும் கழிக்கும் பிற எழுத்தாளர்கள் எவ்வளவு நேரம் எழுத செலவழித்திருப்பார்கள் யோசித்துப் பாருங்கள். சொற்பமாய் தான். 
 
உண்மையில் ஒருநாளைக்கு ஒரு மணிநேரம் எழுதினாலே சிறப்பு. இரண்டு மணிநேரங்கள் தினமும் எழுதுகிறவர் வருடத்திற்கு ஒரு பெரிய நூல் எழுத முடியும். அப்படியென்றால் மிச்ச 16 மணிநேரங்கள்?
 
நேரம் என்பது பௌதிகமானது அல்ல. அதாவது 18 மணிநேரங்கள் உண்மையில் நிறைய நேரம் எனத் தோன்றலாம். ஆனால் 18 மணிநேரங்கள் கிடைத்தாலும் அதில் எழுதுவதற்கு அரைமணிநேரத்தை மிச்சம் பிடிப்பது மிக சிரமமாய் தோன்றலாம். இன்று நமக்கு அந்தளவுக்கு கவனச்சிதறல்கள் உள்ளன என்பது மட்டுமல்ல பொதுவாக நம் மனம் தான் காலத்தை வடிவமைக்கிறது என்பதும் ஒரு காரணம். அரைமணி நேரத்தை நான்கு மணிநேரங்களாகவும் 18 மணிநேரத்தை அரைமணியாகவும் விரிக்கவும் சுருக்கவும் நம் மனதால் முடியும். கராறாய் திட்டமிட்டாலும் கூட முழுமையாய் ஒரு நாளின் நேரத்தை எழுத்துக்கு செலவழிப்பது சிரமம். எழுதுகிற ஒரு மணிநேரத்தில் முழுமையாய் மூழ்கிப் போய் விடுவது தான் ஒரே தீர்வு. அப்போது தான் மனம் கட்டற்று காலத்தில் பயணிக்கும். முழுத்தீவிரத்துடன் கவனத்துடன் எழுத இயலும்.
 
 எனக்குத் தெரிந்த சில முழுநேர எழுத்தாள நண்பர்கள் ஒரு மாதத்தில் சில நாட்கள் தான் எழுதுகிறார்கள். இவ்வளவு சொற்ப நேரம் மட்டும் எழுத எதற்கு முழுநேர எழுத்தாளன் ஆக வேண்டும்?
 
சொல்லப் போனால் முழுநேர எழுத்தாளன் ஆகையில் நமக்கு எழுத்து சார்ந்து ஒரு தேவையற்ற அழுத்தம் ஏற்படும். தினமும் கால அட்டவணையின் படி எழுதுவது எழுத்தனுபவத்தை ரசிக்க முடியாமல் கசப்பானதாய் மாற்றலாம். எழுத்து பிரதான நோக்கமாகையில் எழுத்தாளன் எனும் பிரக்ஞை கூடும். அது செயற்கையான எழுத்துக்கு வழிகோலலாம்.
 
தான் 22 மணிநேரம் எழுத்துக்கு செலவழிப்பதாய் சாரு ஒருமுறை கூறினார். அவ்வளவு நேரமா எழுதுவார் என ஒரு நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்னார் “சாரு முழிச்சு உட்கார்ந்ததில் இருந்து தூங்குறவரைக்குமான நேரத்தை எழுத்துக்கு செலவழிப்பதாய் கூறுகிறார். அதாவது அவர் சாப்பிடுவது, மதியம் தூங்குவது, கணினியில் அரட்டை அடிப்பது, பத்திரிகை படிப்பது, வெட்டியாய் யோசிப்பது எல்லாமே எழுத்துப் பணி தான்”. அதெப்படி எழுத்தாளனின் மூளை சத்யம் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதும் எழுதிக் கொண்டிருக்குமா?
 
சாருவின் கூற்று சற்று வேடிக்கையானது என்றாலும் உண்மையானதும் தான். சும்மா இருக்கிற நேரம் கூட எழுத்தாளனுக்கு முக்கியமானது. மூளைக்கு ஓய்வு எவ்வளவு அதிகம் கிடைக்கிறதோ அந்தளவுக்கு புதுசான ஐடியாக்கள் அவனுக்கு கிடைக்கும். அவ்விதத்தில் தினமும் 12 மணிநேரத்தில் பிடிக்காத வேலையில் மூளையை தேய்ப்பவர்கள் இரவில் எழுத உட்காரும் போது களைத்து விடுகிறார்கள். ஆற்றல் வடிந்திருக்கும். ஆனால் இந்த ஆற்றல் உடல் சார்ந்தது மட்டும் தானா? இல்லை.   
 
நான் கடந்த சில வருடங்களாய் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறேன். இந்த காலத்தில் எனக்கு தினமும் அலுவலகம் போக வேண்டிய கட்டாயம் இல்லை. ஆய்வுக்கான காலத்தில் ஒரு பகுதியை நான் எழுத்துக்கும் பயன்படுத்த முடிகிறது. இதனால் என் எழுத்து அதிகமானதா? எழுதுவது சுலபமானதா?
இதற்கு முன் நான் இரண்டு கல்லூரிகளில் 4 வருடங்கள் பணி செய்தேன். அப்போது மதியம் வேலை முடித்து வீட்டுக்கு வந்து சற்று நேரம் தூங்கி விட்டு எழுத உட்கார்ந்து விடுவேன். அதற்கு முன் 4 வருடங்கள் தனியார் நிறுவனங்களில் 4 வருடங்கள் பணி செய்தேன். அப்போது வேலை நேரமும் பளுவும் அதிகம். வீட்டுக்கு வர இரவு எட்டாகி விடும். பிறகு உண்டு விட்டு எழுத அமர்வேன். பின்னோக்கி பார்த்தால் என் வேலை வாழ்வின் முதல் நான்கு வருடங்கள் நெருக்கடி கூடுதலாகவும், அடுத்த நான்கு வருடங்கள் நெருக்கடி குறைவாகவும், அதற்கு அடுத்த (கடந்த) இரண்டு வருடங்கள் சுலபமாகவும் இருந்திருக்க வேண்டும் அல்லவா! ஆனால் அது உண்மை அல்ல.
 
ஒரு கணக்கு போட்டுப் பார்த்தால் மிக அதிகமாய் நெருக்கடி இருந்த முதல் நான்கு வருடங்களில் தான் நான் அதிகம் எழுதி இருக்கிறேன். அதே போல மிக மோசமாய் உடல் நிலை பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியும் இருந்த அடுத்த நான்கு வருடங்களில் தான் என்னுடைய 550 பக்க முதல் நாவலான “கால்களை” எழுதி முடித்தேன். கடந்த இரு வருடங்களில் எனக்கு நினைத்த நேரம் எழுத முடிகிற வசதி உள்ளது. ஆனால் நான் அதே அளவு தான் எழுதி வருகிறேன். அதே போல இப்போதும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை முழுக்க எழுத்துக்கு ஒதுக்குவது லாரியை முடியில் கட்டி இழுப்பது போன்ற காரியமாக இருக்கிறது. சொல்லப் போனால் எப்போதெல்லாம் எனக்கு ஏராளமாய் நேரம் உள்ளதோ அப்போது தான் ஒரு குறிப்பிட்ட பொழுதை எழுத்துக்கு ஒதுக்குவது சிரமமாய் உள்ளது. ஆனால் குறைவாய் நேரம் கிடைக்கிற நெருக்கடி நாட்களில் எழுத நேரம் கண்டடைவது சுலபமாய் உள்ளது. 
 
அதாவது எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தால் அதில் சரியாய் தேர்ந்தெடுத்து செயல்பட மனம் திணறுகிறது. ஆனால் வாய்ப்புகள் குறைவென்றால் தன்னை அதற்கேற்றபடி வடிவமைப்பது மனதுக்கு சுலபமாகிறது. ஆகையால் முழுநேர எழுத்தாளன் ஆகையில் நேரக் கட்டுப்பாடு நமக்கு மிக மிக சிரமமான ஒன்றாகவும், பகுதி நேர எழுத்தாளனாய் இருக்கையில் அது சுலபமாகவும் இருக்கலாம்.
 
முழுநேர எழுத்தாளன் சதா தன் எழுத்துப் பணி பற்றி யோசிக்க வாய்ப்புள்ளதால் அதிக எரிச்சலுறவும், தன் அலுப்பை போக்க போதைப்பழக்கங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் எழுத உட்காரும் நேரம் அவன் உடல் அதற்கு தயாராக முழு ஆற்றலுடன் இருக்கும். இது தான் பிரதான அனுகூலம். ஆனால் இது கூட மனம் சார்ந்தது தான்.
 
ஒரு மனிதனின் ஆற்றலுக்கும் சாத்தியங்களுக்கும் எல்லையே இல்லை என புரூஸ் லீ நம்பினார். அதாவது நாம் இது தான் முடியும் என நினைப்பது நம் கற்பிதம் மட்டுமே. உதாரணமாய் சிலர் தம்மால் ஒருநாள் ரெண்டு பக்கங்களுக்கு மேல் எழுத இயலாது என எண்ணலாம். ஆனால் தம்மை கடுமையாய் நெருக்கடிக்கு உள்ளாக்கி தொடர்ந்து முயன்றால் அதே நபர் ஒருநாளைக்கு 25 பக்கங்கள் கூட எழுத இயலும். புரூஸ் லீ தன்னுடைய சற்று வயதான அமெரிக்க சீடர் ஒருவருக்கு குங் பூ சண்டைக்கலை பயிற்சி அளிக்க துவங்கின காலத்தில் அச்சீடரால் கடுமையான நீண்ட நேர பயிற்சியை தாங்க இயலவில்லை. இரண்டாவது நாள் காலை எழுந்ததும் மொத்த உடலும் ஒரு இரும்புப்பாளத்தை போல் அவருக்கு தோன்றியது. சற்று அசைத்தாலே உயிர் போகிற வலி. அவரால் எழுந்து நடக்கவே இயலவில்லை. கிட்டத்தட்ட தவழ்ந்து காரில் ஏறி புரூஸ் லீயின் வீட்டுக்கு போனார். அங்கே போன பின் அவரால் காரில் இருந்து இறங்கவே இயலவில்லை. இறங்கி வராவிட்டால் புரூஸ் லீ அவரை அடிப்பதாய் மிரட்டினார். அப்போதும் அவர் இறங்கவில்லை. புரூஸ் லீ அவரை வலுக்கட்டாயமாய் இழுத்து கீழே தள்ளி தூக்கி நிறுத்தினார். ஒரு அடி எடுத்து வைத்தால் தன் இதயம் வெடித்து விடும் என அவர் கூறினார். புரூஸ் லீ  “நீங்கள் செத்தாலும் பரவாயில்லை, இன்று கட்டாயம் பயிற்சி செய்ய வேண்டும்” என வற்புறுத்தினார். வலி உண்மையில் நம் மனதின் கற்பனை என புரூஸ் லீ நம்பினார். உடலின் சாத்தியங்களூக்கு எல்லையே இல்லை. எல்லையை மீறிச் செல்ல செல்ல அது விரிந்தபடியே போகும். அன்று தன் நாற்பது வயதான சீடரை புரூஸ்லீ இரண்டு மணிநேரங்கள் கடும் பயிற்சி செய்ய வைத்தார். ஒரே வாரத்தில் அவரால் அதை விட இரட்டிப்பு பயிற்சியை செய்ய முடிந்தது. நானா இவ்வளவு பயிற்சி செய்கிறேன் என சீடர் வியந்தார். அவரது உடல் முன்பை விட இரட்டிப்பு வலுக்கொண்டதாக மாறி விட்டதாகவும் பத்து வருடங்கள் குறைந்து இளமையானதாகவும் அவர்  உணர்ந்தார். இது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். எந்தளவுக்கு அதிகமாய் நம் மீது அழுத்தம் செலுத்துகிறோமோ அந்தளவுக்கு நம் ஆற்றல் அதிகமாகும். ஒரு கடுமையான இலக்கை தேர்ந்து அதை நோக்கி கடுமையாய் நம்மை செலுத்தினால் விரைவில் எளிதில் அதை செய்கிறவராக நம்மை மாற்றிக் கொள்வோம். அதனால் தான் ஆய்வாளர்கள் நம் மூளை பிளாஸ்டிக்கானது என்கிறார்கள். தேவைக்கு ஏற்றபடி தன்னை தகவமைக்கும் அபார திறன் அதற்கு உள்ளது. அதனால் தான் தன் குறைந்த நேரத்தில் மிகுந்த நெருக்கடியில் வேலை செய்யும் பகுதி நேர எழுத்தாளனால் முழுநேர எழுத்தாளனை விட அதிகம் எழுத முடிகிறது. பெரும் சவால்களை வெற்றி கொள்ள முடிகிறது.
 
 
நன்றி: அம்ருதா ஆகஸ்ட் 2015
 
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் பொன்னைவிட மேலானது...!

அதை சோம்பல் என்னும் சாம்பல் மறைத்து விடுகின்றது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.