Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் விரும்பாத எந்த தீர்வையும் ஏற்கமாட்டோம் – இரா.சம்பந்தன் உறுதி

Featured Replies

தமிழ் மக்கள் விரும்பாத எந்த தீர்வையும் ஏற்கமாட்டோம் – இரா.சம்பந்தன் உறுதி

SEP 08, 2015by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள்

sampanthan-trinco-welcome (3)தமிழ்மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் தாம் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் மாலை நடந்த, கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் விருப்பத்துக்கு மாறாக நாம் எப்பொழுதும் நடந்து கொள்ளமாட்டோம். எமது இலக்கை நோக்கி நாம் முடியும் வரை தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்போம். எமது இலக்குக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி யென்பது எப்பொழுதும் தடையாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எனக்குத் தரப்பட்ட எதிர்க்கட்சித் தலைமை பதவியானது எனக்குரியதல்ல, அது எமது மக்களுக்குரியதாகும், அத்துடன், அந்த பதவி எமது கட்சிக்குரியதாகும்.

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னை நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமித்ததன் காரணமாக இப்பதவி கிடைத்துள்ளது. இப்பதவியை நான் பணிவுடனும் அடக்கத்துடனும் ஏற்றிருக்கின்றேன்.

அதற்காக எமது மக்களுக்கும் எம்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கின்றேன். இப்பதவியை நாம் கோரவில்லை. நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி இப்பதவி எமது கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளது.

எமது கட்சிக்கு பிரதம கொரடா பதவியொன்று உண்டு. அப்பதவியை இன்னுமொரு எதிர்க்கட்சியான ஜேவிபிக்கு கொடுக்கத் தீர்மானித்தோம். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இதனை செய்தோம்.

இந்த முடிவுக்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது பூரணமான சம்மதத்தைத் தெரிவித்திருந்தார்கள். அதன்படியே எதிர்க்கட்சி கொரடா பதவி ஜேவிபிக்கு வழங்கப்பட்டது.

sampanthan-trinco-welcome (3)

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி பாரிய அரசியல் மாற்றமொன்று நாட்டில் ஏற்பட்டது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையில் ஒரு அரசாங்கம் ஆட்சிபுரிந்து வந்தது. அது ஒரு அது பெரும்பான்மை பலமற்ற அரசாங்கமாகும். ஆகையால் அந்த அரசாங்கத்தால் முக்கியமான விடயங்களைச் செய்ய முடியவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் எதிர்பார்த்தது போல ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன.

குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து 19ஆவது அரசியலமைப்பின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார்கள். இதன் மூலம் இந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் ஆளும் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்புண்டு. ஏதாவதொரு விடயத்துக்கு நாம் அவர்களுடன் சேர்ந்து வாக்களித்தால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வரக்கூடும்.

இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டதன் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவேண்டும் என்பதே ஆகும்.

அத்துடன் ஊழல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மனித உரிமை மதிக்கப்பட வேண்டும். சட்ட ஆட்சி இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் சட்டம் மதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் கௌரவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவாகும். இவையெல்லாம் நல்லாட்சியின் சிறந்த அம்சங்களாகும்.

கடந்த 9 ஆண்டுகளில் மேற்படி பண்புகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. நாடு நல்லாட்சியிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றிருந்தது. இந்த குறைபாடு ஏற்பட அடிப்படைக்காரணங்கள் பல இருந்தன.

சமத்துவம் இருக்கவில்லை. இதனால் நிரந்தரமான சமாதானம் ஏற்படவில்லை. சமத்துவத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்விகண்டன. இதனால் யுத்தமொன்று கூட மூண்டது. 30 ஆண்டுகள் அந்த போர் நீடித்தது.

தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்தையும் அரசபடைகளையும் எதிர்த்து 30 ஆண்டுகள் போராடினார்கள். இது ஒரு சாதாரண விடயமல்ல, பெரிய சாதனை. இதையாரும் மறுக்க முடியாது.

இன்று தமிழ் மக்களுடைய பிரச்சினைஅனைத்துலக மயமாக்கப்பட்டுள்ளது.

sampanthan-trinco-welcome (1)

பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பொறுப்புக் கூறவேண்டும். உண்மை அறியப்பட வேண்டும். நீதிவழங்கப்பட வேண்டும். பாதித்தவர்களுக்கு பரிகாரம் தேடப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் கூறுகின்றது .

இவ்விதமான அழிவுகள் இந்த நாட்டில் மீண்டும் ஏற்படாமல் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்லப்போனால் இன்று காணப்படும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இதுதான் நமது குறிக்கோளாகும்.

எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற வகையில் எமது கட்சி இவ்விரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்தும். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் நாமும் மும்முரமாக ஈடுபடுவோம்.

அக்கடமையிலிருந்து விலகிச் செல்லமாட்டோம். ஏனைய விடயங்களில் நாட்டில் முன்னேற்றம் காணப்பட வேண்டுமாயின் தேசிய இனப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வு காணப்பட வேண்டும்.

என்ன விதமான தீர்வு தரப்பட வேண்டுமென்பதை தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது புரட்சிகரமான விடயமல்ல. நியாயமான நீதியான கோரிக்கையாகும்.

உலகில் பலநாடுகளில் பல்வேறு இனம், மதம், மொழி சார்ந்த மக்களுக்கு அரச சாசன ரீதியாக, சிறந்த ஒழுங்குகள் செய்யப்பட்டதன் நிமித்தம் ஆட்சி பகிர்ந்தளிக்கப்பட்டு, இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு, அந்த மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கக்கூடிய வகையில் ஆட்சி ஒழுங்குகள் உண்டு.

நாட்டைப் பிரிக்கும்படியாக நாங்கள் கோரவில்லை. பிளவுபடுத்தக் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களும் சமகுடிமக்களாக வாழக்கூடிய விதத்தில் போதிய சுயாட்சியைப்பெற்று வாழவேண்டு மென்று விரும்புகின்றோம்.

சமாதானத் தீர்வொன்றே நல்லாட்சிக்கான அத்திவாரமாக இருக்கமுடியும். அந்த அத்திவாரமில்லாமல் இந்த நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியாது.

எனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சிப் பதவியை ஏற்றிருக்கும் இவ்வேளையில் என்னமாதிரி நாம் செயற்படவேண்டும், திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மாற்றங்கள் நாம் எதிர்நாடாத மாற்றங்களாகும்.

மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். இது ஒரு துணிச்சலான செயலாகும்.

ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. பெரும்பான்மைபலம் இல்லாத ஒரு எதிர்க்கட்சித் தலைவரை பிரதமராக நியமித்தமை பாரிய சாதனையாகும்.

sampanthan-trinco-welcome (2)

அவ்வாறு அவர் செய்தமைக்குரிய காரணம் அதிபர் தேர்தல் நடைபெற்ற போது மக்களுக்கு ஒரு வாக்குறுதி வழங்கியிருந்தார். நான் வெற்றிபெற்றால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவே என்று கூறியிருந்தார்.தேர்தலின் பின்னர் மக்கள் ஆணையின் அடிப்படையில் ரணிலை பிரதமராக்கினார். மகிந்த ராஜபக்ச அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் மகிந்தவை நான் பிரதமராக நியமிக்க மாட்டேன் என தனது நிலைப்பாட்டைத் தெளிவாக மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மக்கள் தனக்குத் தந்த ஆணையைத் தொடரவே விரும்புகின்றேன் என அடித்துக் கூறினார். இதனால் தான் கடும் முயற்சி செய்தும் மகிந்தவினால் 100 ஆசனங்களைக் கூட இத்தேர்தலில் பெறமுடியவில்லை.

இம்மாற்றங்களை நாம் அவதானிக்க வேண்டும். இம்மாற்றங்களை சாதாரணமாக எடைபோடமுடியாது. சாதாரணமாக நடைபெறக் கூடியதுமல்ல. இது எமக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பங்கள் ஆகும்.

இம்மாற்றங்கள் நடந்ததன் காரணமாகவே நாம் நியாயத்தின் அடிப்படையில் நீதியின் பிரகாரம், சத்தியத்தின் பின்னணியில் தீர்வைப் பெறலாமென்று நம்புகின்றோம்.

மகிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் எதிர்பார்க்கும் எந்த விடயமும் நடைபெறமுடியாது. ஆகையினால் இதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது நமது கடமையாகும்.

எனவேதான் நாம் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம். பக்குவமாக செயற்படவேண்டியுள்ளது.

அனைத்துலக சமூகத்தின் ஆதரவை தக்கவைக்க வேண்டிய அவசியம் எமக்குண்டு. எங்களைப் பொறுத்தவரை நியாயமாக நடப்போம். எமது இலக்கில் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்.

நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டுக்குள் சமகுடிமக்களாக வாழ விரும்புகின்றோம் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இந்தச் செய்தியை அனைத்துலக சமூகத்துக்கு தொடர்ந்து சொல்ல விரும்புகின்றோம்.  இதை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டைச் சேர்ந்த பல தரப்பு சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று இப்பொழுது விரும்புகிறார்கள். அவர்களின் ஆதரவை நாம் பெறவேண்டும்.

வடகிழக்கைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்தின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும்.

நாங்கள் எத்தகைய பிரச்சினைகளை அனுபவிக்கின்றோமோ அதே பிரச்சினைகளை அவர்களும் அனுபவிக்கிறார்கள் , எதிர்நோக்குகின்றார்கள்.

ஆகையால் அவர்களையும் நாம் அரவணைத்துச்செல்ல வேண்டும். ஒழிவு மறைவின்றி நாம் செயற்படவேண்டியுள்ளது.

எம்மை நம்பியிருக்கும் மக்களை நாம் கைவிடமுடியாது. மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பொருத்தமற்ற எந்தத் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

தீர்வு சம்பந்தமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சு நடைபெறுமாக இருந்தால் தீர்வு பற்றிய முடிவை எடுப்பதற்கு முன் மக்களுடன் ஆதரவாளர்களுடன் புத்திஜீவிகளுடன் பேசி தீர்மானத்துக்கு வருவோம்.

அதைவிடுத்து தன்னிச்சையாக செயற்படப் போவதில்லை. எனவே எந்த முடிவாக இருந்தாலும் ஜனநாயக ரீதியாகவே முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

எவ்வாறு இருந்தாலும் இன்றைய சூழலில் யதார்த்தமாகச் செயற்பட வேண்டியது அவசியமாகிறது.

sampanthan-trinco-welcome (4)

எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கு கிடைத்ததால் எல்லாம் முடிந்து விடவுமில்லை தீர்ந்து விடவுமில்லை.

அண்ணன் அமிர்தலிங்கம் 1977 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அப்பொழுது எமக்கு நாடாளுமன்றத்தில் 18 ஆசனங்கள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எட்டு ஆசனங்கள் மாத்திரமேயிருந்தன. நாம் இரண்டாம் பெரும்பான்மைக் கட்சியாக இருந்தோம்.

அப்பொழுது நான் நாடாளுமன்றத்துக்கு முதல்முறையாகச் சென்றிருந்தேன் அண்ணன் அமிர்தலிங்கத்துக்குப் பின்னால் எனது ஆசனம் அமைந்திருந்தது. நாங்கள் அவருக்கு பூரணமான ஆதரவை நல்கினோம் ஒற்றுமையாக இருந்தோம். இன்று நாம் பாதுகாக்க வேண்டிய விடயம் எமது ஒற்றுமையாகும்.

எவ்வாறு இருந்த போதிலும் இன்று நாம் பலமாக இருக்கின்றோம். ஏன் நாம் பலமாக இருக்கின்றோம், எமது மக்கள் எம்மை அதிகப்படியாக ஆதரித்து 16 உறுப்பினர்களை வெற்றிபெற வைத்ததன் நிமித்தம் மக்களின் ஒற்றுமையான ஆணையின் அடிப்படையில் நாம் பலம் பெற்று நிற்கின்றோம்.

நாம் இன்னும் அதிகப்படியான ஆசனங்களை வென்றிருக்க முடியும். திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கேட்டதன் காரணமாக இரு ஆசனங்களை எம்மால் பெறமுடியாமல் போய்விட்டது. இன்னுமொரு ஆசனம் கிடைத்திருக்கலாம்.

எவ்வாறு இருந்த போதிலும் இதுவொரு நல்ல வெற்றியாகும். எல்லோரும் எமது வெற்றியை மதிக்கின்றார்கள். நாட்டின் ஆட்சியாளர்கள் மதிக்கின்றார்கள். சிங்கள மக்கள் மதிக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் விசுவாசமான கட்சியென ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களும் புத்திஜீவிகளும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

சர்வதேச சமூகம் ஏற்றுகொள்கிறது. இது இன்னும் பலமடையும் எதிர்க்கட்சியின் தலைமைப்பதவி கிடைத்திருப்பது எமக்கு இன்னும் பலம் சேர்க்கும். எனவே நாம் தெளிவாக சிந்தித்து பிரிவு பட்டு நிற்காமல் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/08/news/9497

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.