Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நொந்து கிடக்கும் நைஜீரியா

Featured Replies

நொந்து கிடக்கும் நைஜீரியா- 1

 
 
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் 2014 மே மாதம் சிறை பிடிக்கப்பட்ட மாணவிகள்.
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் 2014 மே மாதம் சிறை பிடிக்கப்பட்ட மாணவிகள்.

அபுஜாவைத் தலைநகராகக் கொண்ட நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கில் நைஜர், தெற்கில் கினி வளைகுடா, கிழக்கில் சாட் மற்றும் காமரூன் நாடுகள், மேற்கில் பெனின் குடியரசு ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு.

அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இது. தலைநகர் அபுஜாவின் முக்கிய சாலையின் நடுவில் வந்து நின்று கொண்டார் ஒரு முஸ்லிம் பெண்மணி. தலை முதல் கால் வரை கருப்பு வண்ணம் கொண்ட பாரம்பரிய உடை. ஆனால் அவர் தன் உடை மீது ஒரு சிறிய வெள்ளைப் பட்டையை அணிந்திருந்தார். அதில் “எங்கள் பெண்களை மீட்டுத் தாருங்கள்’’ என்ற வார்த்தைகள்.

“எங்களுக்கு எங்கள் மகள்கள் மீண்டும் உயிரோடு வேண்டுமே’’ என்று அவர் பெருங்குரலெடுத்துக் கத்தினார். அவரைச் சுற்றிலும் கூடிய மக்கள் கூட்டம் அவர் கூறுவதை எதிரொலித்தது. அவர்களில் பல பெற்றோர்களும் மார்பைப் பிடித்துக் கொண்டு கதறினர்.

தினமும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுகின்றன. உணர்ச்சிக் குவியலாக மக்கள். அரசின் கையாலாகாத்தனத்தை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அரசுக்கு எதிரான ஊர்வலங்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நைஜீரியாவில் பொதுத் தேர்தல் வேறு.

‘’எங்கள் மகள்கள் வேண்டும்’’ என்று எதற்காக ஒரு கூட்டமே கதற வேண்டும்? காரணம் 2014 ஏப்ரல் 14 15 தேதிகளில் நடந்த நிகழ்ச்சி.

உலகையே கொந்தளிக்க வைத்த சம்பவம் அது. சிபோக் என்பது நைஜீரியாவில் உள்ள ஒரு நகரம். அங்கு இருக்கிறது அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி. அதன்மீது தாக்குதல் நடத்தினார்கள் போகோ ஹராம் இயக்கத்தினர். அந்தப் பள்ளியின் புதிய வாட்ச்மேன்களை போல நடித்து `உடனடியாக உங்களை வேறு இடத்துக்குப் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டுமென்று அரசு உத்தரவு’ என்றார்கள்.

நாட்டில் அவ்வப்போது கலவரங்கள் நிகழ்வதை அறிந்திருந்த அந்த அப்பாவிப் பெண்களும் அதை நம்பி தீவிரவாதிகள் கொண்டு வந்த டிரக்குகளில் ஏறிக் கொண்டார்கள். அதன் பிறகு அவர்கள் என்னவானார்கள் என்பது அப்போது தெரியவில்லை.

உண்மையை அறிந்ததும் சிபோக் நகரம் உறைந்து போனது. சொல்லப்போனால் இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பாகவே அந்தப் பள்ளி மூடப்பட்டிருந்தது. காரணம் அந்தப் பகுதியில் நிலவிய அமைதியின்மை. என்றாலும் குறிப்பிட்ட நாட்களில் அறிவியல் பொதுத் தேர்வு நடைபெற்றது. அந்தப் பள்ளி தேர்வு மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

எனவே சிபோக்கின் அரசுப் பள்ளி மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்திலிருந்த பல தனியார் பள்ளிகளிலிருந்தும் மாணவிகள் அங்கு வரவேண்டி இருந்தது. பதினாறிலிருந்து பதினெட்டு வயது வரையான அந்த மாணவிகளுக்குதான் இப்படி ஓர் அதிர்ச்சி.

தொடக்கத்தில் 85 மாணவிகள்தான் கடத்திச் செல்லப்பட்டனர் என்றார்கள். அடுத்த நான்கைந்து நாட்களில் 129 என்று இதைத் திருத்தியது ராணுவம். ஆனால் அதற்கு அடுத்த நாட்களில் 234 என்று புள்ளிவிவரம் கூறி வேதனையை அதிகமாக்கியது அரசு.

காரணம் அத்தனை பெற்றோர் அந்தப் பள்ளியில் தேர்வு எழுதச் சென்ற தங்கள் மகளை அதற்குப் பிறகு காணவில்லை என்று புகார் கொடுத்ததுதான். இந்த எண்ணிக்கை உண்மையில் 329 என்றும், அவர்களில் 53 பேர் எப்படியோ சாமர்த்தியமாக தப்பித்துவிட்டனர் என்றும் செய்திகள் உலவுகின்றன.

இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது.

கடத்தப்பட்ட பெண்களின் கதி என்ன? கிடைக்கும் தகவல்கள் பதற்றத்தை அதிகப்படுத்துவதாகவே உள்ளன. முதல் கட்டமாக முஸ்லிம்கள் அல்லாத மாணவிகள் இஸ்லாம் மார்க்கத்துக்கு கட்டாயமாக மாற்றப்படுகிறார்கள்.

பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அது அப்படி ஒன்றும் அதிகமில்லையாம். அந்த விலை கொடுத்து முஸ்லிம்கள் அவர்களை வாங்கிக் கொள்ளலாம். நைஜீரியாவிலேயே இந்த விற்பனையை நடத்தாமல் அதன் பக்கத்து நாடுகளான சார்ட், காமருன் போன்றவற்றில் இந்த விற்பனையை நடத்துகிறார்கள்.

அப்படியானால் முஸ்லிம் மாணவிகளை விட்டுவிடுவார்களா? அதுதான் கிடையாது. இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறவேண்டிய தேவை அவர்களுக்குக் கிடையாது, அவ்வளவுதான். மற்றபடி `பெண்ணாக இருந்தும் படிக்க ஆசைப்பட்டதற்கான’ தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான்.

நைஜீரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள சம்பிஸா காடுதான் போகோ ஹராம் இயக்கத்தின் முக்கியக் களனாக இருக்கிறது. இங்குதான் மாணவிகளுக்கான மதமாற்றமும், விற்பனை ஒப்பந்தங்களும் நடைபெற்றன என்று சில உள்ளூர்வாசிகள் அரசுக்குத் தகவல் அளித்திருக்கிறார்கள்.

மே 4 அன்றுதான் நைஜீரிய அதிபர் ஜோனாதன் மாணவிகள் கடத்தலைப் பற்றி முதன்முறையாக வாய் திறந்தார். இந்தத் தாமதமே மக்களுக்கு கடும் எரிச்சலைத் தந்தது. “கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க அரசு எல்லாவிதங்களிலும் முயற்சிக்கும்’’ என்று அவர் கூறிய உறுதிமொழி யாருக்கும் (முக்கியமாக மகளை இழந்த பெற்றோர்களுக்கு) ஆறுதல் அளிக்கவில்லை.

போகோஹராம்தான் கடத்தலுக்குக் காரணமா என்று அதன் ஆதரவாளர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். இதில் சந்தேகமே வேண்டாம் என்பதுபோல் மே 5, அன்று ஒரு வீடியோவை வெளியிட்டார் போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் ஷெக்காவு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நொந்து-கிடக்கும்-நைஜீரியா-1/article7002695.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நொந்து கிடக்கும் நைஜீரியா - 2

 
 
 
போகோ ஹராம் தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் ஷெக்காவு.
போகோ ஹராம் தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் ஷெக்காவு.

போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் ஷெக்காவு தெளிவாகவே அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

‘‘அந்த மாணவிகளை நாங்கள்தான் கடத்தினோம் . மக்களைக் கடத்தி அவர்களை அடிமையாக்குவதில் தவறில்லை. முதலில் பெண்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கவே கூடாது. ஒன்பது வயதாகும்போதே பெண்கள் திருமணத்துக்கு ஏற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். எனவே அப்போதே அவர்களை கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும்’’.

‘‘மேற்கத்திய நவீனக் கல்வி’’ போகோ ஹராம் இயக்கத்துக்கு மிகவும் வெறுப்பைத் தரும் வார்த்தைகள். அதெப்படி, இஸ்லாமிய வழி கற்பித்தல்தானே வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். (போகோ ஹராம் என்ற வார்த்தைகளுக்கான அர்த்தமே ‘மேற்கத்தியக்கல்விக்குத் தடை’ என்பதுதான்.)

தனது கொள்கைக்கு இடைஞ்சலாக இருந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது இந்த அமைப்பு.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போர்னோ மாநிலத்தில அவசர நிலைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, தனது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியது அரசு. நூற்றுக்கணக்கான போகோ ஹராம் தீவிரவாதிகளைக் கொன்றது, கைது செய்தது. மிஞ்சியவர்கள் மலைப்பகுதிகளுக்குத் தப்பினர். தப்பியவர்கள் அங்கும் இங்கும் அப்பாவிகளைக் குறிவைத்தனர்.

2010-லிருந்து போகோ ஹராம் வேறொரு விபரீதத்தை நிகழ்த்தியது. பள்ளிகளை இலக்காக்குகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கொன்று குவிக்கிறது. இதன் காரணமாக பல பெற்றோர்கள் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பவே அச்சப்படுகிறார்கள். வருங்காலத்தில் நைஜீரியாவில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. சிறுமிகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை முக்கியமாகக் குறி வைக்கிறார்கள் இந்தத் தீவிரவாதிகள். அவர்களைப் பொறுத்தவரை பெண்களுக்குப் படிப்பறிவு அவசியமே இல்லை. தவிர படித்தால் அவர்கள் மனம் கெட்டுப்போய் விடும்.

‘அடடா, சிறுமிகளைக் கொலை செய்கிறார்களே!’ என்று உங்கள் நெஞ்சம் பதைபதைத்தால், மேலும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. சிறுமிகளைக் கடத்துகிறார்கள். அவர்களை சமையல் பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். அடிமைகளாக வைத்துக் கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இவர்கள் பெரும்பாலும் குறிவைப்பது வேற்று மத சிறுமிகளை. அவர்களைக் கட்டாயமாக மதம் மாற்றுகிறார்கள். அதோடு அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக் கிறார்கள்.

2014ல் போகோ ஹராம் இயக்கத்தினரின் அநீதியான செயல்பாடுகள் அதிகமாகிவிட்டன. டோரோன், பாகா ஆகிய கிராமங்களில் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களைக் கொன்றார்கள். இது நடந்த அதே பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஃபெடரல் அரசுக் கல்லூரியில் ஒரு தாக்குதலை நிகழ்த்தினார்கள். அதில் 59 இளைஞர்கள் இறந்தனர்.

மார்ச் மாதத்தில் ராணுவப் பகுதிகளை தாக்கி அங்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த தங்கள் சக தீவிரவாதிகளை மீட்டார்கள். அதே நாளில் அபுஜா நகரில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல். அதில் இறந்தவர்கள் 88 பேர். பட்டியலை மேலும் வளர்த்துவானேன்! போன வருடம் மட்டும் சுமார் 4000 பேர்களைக் கொன்றிருக்கிறது போகோ ஹராம்.

எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பதுபோல அல் காய்தா இயக்கத்தினரும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு தீவிரப் பயிற்சி கொடுக்கிறார்களாம்.

ஏற்கெனவே நைஜீரியாவின் கணிசமான பகுதியைத் தன் வசம் கொண்டு வந்துவிட்டது போகோ ஹராம். முக்கியமாக வடகிழக்குப்யை பகுதியில். இதனால் 30 லட்சம் பொது மக்களின் தினசரி வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.

போர்னோ மாநிலத்திலும் போகோ ஹராம் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது.

பெரும்பாலும் போகோ ஹராம் ஊடுருவல் இப்படித்தான் நடக்கிறது. தனது சில நூறு சிப்பாய்களை குறிப்பிட்ட நகரத்துக்கு அது அனுப்பும். அங்குள்ள ராணுவத்தினருக்கு ஒரு கட்டத்தில் தங்கள் உணவுக் கையிருப்பு தீர்ந்துவிட, வெளியிலிருந்தும் உணவு கிடைக்காமல் சிப்பாய்கள் தடுத்து விடுவதால், அந்தப் பகுதியைவிட்டு ஓடிவிடுவார்கள். பிறகென்ன, நுழைவதும் ஆக்கிரமிப்பதும் எளிதாகி விடும்.

நைஜீரிய ராணுவத்தினரின் ஒரு பகுதி தீவிரவாதிகளை தாக்குவதில் பயிற்சி பெறுவதற்காக அல்ஜீரியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்த ஒரு பெரிய இயக்கத்துக்கும் நிதி தேவை. போகோ ஹராம் இயக்கத்துக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது?

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நொந்து-கிடக்கும்-நைஜீரியா-2/article7006565.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நொந்து கிடக்கும் நைஜீரியா- 3

 
 
போகோ ஹராம் தீவிரவாதிகளிடம் இருந்து நைஜீரிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள். கோப்புப் படம் - ஏ.எப்.பி.
போகோ ஹராம் தீவிரவாதிகளிடம் இருந்து நைஜீரிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள். கோப்புப் படம் - ஏ.எப்.பி.

போகோ ஹராம் இயக்கத்துக்கு எப்படி நிதி கிடைக்கிறது?

அவ்வப்போது வங்கிகளைக் கொள்ளையடிக்கிறது. வணிகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரை பயமுறுத்தி பணம் பறிக்கிறது. “பணம் கொடுக்காவிட்டால் கடத்தி விடுவோம்’’ என்பதுதான் அச்சுறுத்தல்.

சில சமயம் பெரும் தொழில் அதிபர்களை கடத்தி வைத்துக் கொண்டு அவர்களைப் பணயக் கைதிகளாக்கி பணம் பெறுவதும் உண்டு. வெளிநாட்டு செல்வந்தர்கள் என்றால் அதற்கான ரேட் அதிகம். சமீபத்தில் பிரெஞ்சு குடும்பம் ஒன்றை பணயக் கைதிகளாக்கி 30 லட்சம் டாலர்களைப் பறித்தது போகோ ஹராம்.

லிபியாவில் ஆயுத சப்ளைகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவிகள் கடத்தலுக்கு சிபோக் பகுதியை எதற்காக போகோ ஹராம் தேர்ந்தெடுத்தது?

அது ஒரு கிராமம். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கிராமம்.

அல் காய்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளது போகோ ஹராம் என்று கூறப்பட்டது ஒருபுறம் இருக்க, போகோ ஹராம் தலைவர் வேறொரு வெடிகுண்டையும் வீசி இருக்கிறார்.

‘’ஐ.எஸ். அமைப்புக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு’’ என்றிருக்கிறார். இராக், சிரியா பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் அமைப்பு ஐ.எஸ். இப்படி அதற்கான ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐ.எஸ்.போராளிகளின் ஆதரவைத் தாங்கள் பெற முடியும் என்று நம்புகிறது போகோ ஹராம்.

தவிர பாரிஸ் நகரில் பத்திரிகை அலுவலகத்தின்மீது நடந்த தாக்குதலை யும் அரபு மொழியிலேயே பாராட்டி யிருக்கிறார் போகோ ஹராம் தலைவர்.

இதன் மூலம் உலக அளவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் ஆதரவை போகோ ஹராம் நாடியிருக்கிறது என்றும் சொல்லலாம். போகோ ஹராம், நைஜீரிய அரசுக்கு பெரும் தலைவலியாய் மாறிவருகிறது. 2009-ம் ஆண்டு முதல் தீவிரமாக இயங்கும் இவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவிக்கிறார்கள்.

இவர்களின் நோக்கம்தான் என்ன? இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரு முழுமையான முஸ்லிம் அரசுதான் நைஜீரியாவில் ஆட்சி செய்ய வேண்டும் - இதுதான் அந்தத் தீவிரவாதிகளின் ஒரே நோக்கம். ஒவ்வொரு மாதமும் நூற்றுக் கணக்கானவர்களைக் கொல்கிறார்கள்.

நைஜீரிய ராணுவம் சமீபத்தில் போகோ ஹராம் இயக்கத்தில் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை கண்டுபிடித்தது. புனி-யாழி என்ற நகரத்தில் உள்ள உரத் தயாரிப்புத் தொழிற்சாலைக்குள் அடக்கமாக இது மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

ஐ.எஸ்.அமைப்பு போகோ ஹராமின் ஆதரவை மனப்பூர்வமாக வரவேற்றிருக்கிறது. போகோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெக்காவுவைப் பற்றிய தகவல்கள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. நிழல் மனிதராகவே இருக்கிறார். எப்போதாவது ஒரு முறை அவராகவே வீடியோவில் தகவல்களை அனுப்பும்போது அவரை அறிய முடிகிறது.

நைஜர் நதிக்கரையில் உள்ள ஷெக்காவு என்ற கிராமத்தில் பிறந்தவர். இஸ்லாமிய உயர் கல்வி பயின்றவர். பல மொழிகள் தெரியும். ஆனால் அந்தப் பட்டியலில் ஆங்கிலம் இல்லை. அவர் வயது 38லிருந்து 40க்குள். தனிமை மிகவும் பிடிக்கும். மாறுவேடம் போடுவதில் கில்லாடி. பல பெயர்கள் உள்ளவர்.

போகோ ஹராம் இயக்கத்தை உருவாக்கியவரின் பெயர் முகம்மது யூசுப். என்றாலும் தளபதி அளவுக்குப் அவரால் புகழ்பெற முடியவில்லை. அந்தத் தளபதிதான் அபுபக்கர் ஷெக்காவு.

2009-ல் நடைபெற்ற ஒரு தாக்குதலில் 700 போகோ ஹராம் இயக்கத்தினர் இறந்தனர். அவர்களில் ஒருவர் முகம்மது யூசுப்.

2012 செப்டம்பரில் ஷெக்காவுவைப் பிடித்துவிட்டது ராணுவம். அதாவது கிட்டத்தட்ட பிடித்து `விட்டது’. தனது 7 வயது குழந்தைக்குப் பெயரிடும் விழாவுக்கு வந்திருந்தார் அவர். ஆனாலும் தப்பித்து விட்டார். ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்து விட்டது. அவர் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் ராணுவம் அழைத்துச் சென்றது.

இப்போதைக்கு நைஜீரியா மட்டும்தான் போகோ ஹராமின் இலக்கு. என்றாலும் மாலி, நைஜர் ஆகிய நாடுகளில் உள்ள தீவிர இஸ்லாமியக் குழுக்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. கேமரூன் தேசத்திலும் இது ஊடுருவி இருப்பதால் அங்கும் போகோ ஹராம் குறித்த அச்சம் நிலவுகிறது.

மே 2013 அன்றே முன்னறிவிப்பு கொடுத்து விட்டார் அபுபக்கர் ஷெக்காவு. “இனிமேல் பள்ளிகளில் படிக்கும் பெண்களை கடத்தப் போகிறேன்’’.

சென்ற வருடம் ஜூன் மாதத்தில் அமெரிக்கா ஓர் அறிவிப்பை வெளியிட்டது. “ஷெக்காவு இருக்கும் இடத்தைப் பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு 70 மில்லியன் டாலர் பரிசுத் தொகை உண்டு’’.

தீவிரவாதம் என்பது ஏதோ ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. தீவிரவாதம் எல்லை தாண்டியது என்பதால் அந்த விதத்தில் மொத்த உலகமுமே கவனம் செலுத்தி வருகிறது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நொந்து-கிடக்கும்-நைஜீரியா-3/article7010500.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நொந்து கிடக்கும் நைஜீரியா- 4

 
 
 
நைஜிரியாவில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். (கோப்புப் படம்)
நைஜிரியாவில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். (கோப்புப் படம்)

ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற எந்த நாட்டையும்விட அதிக மக்கள் தொகை கொண்டது நைஜீரியா. பதினேழு கோடிக்கும் அதிகம். பரப்பளவில் பெரியது. ஆப்பிரிக்காவின் மிகவும் பணக்கார நாடு. ஆனாலும் பாவம். அங்கு வேலை செய்யச் செல்லும் பிற நாட்டினர் பலரும் ஓரளவு பணத்தை சேமித்துக் கொண்டு சீக்கிரமே தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிட வேண்டும் என்று அலறுகிறார்கள். நிலைமை அப்படி.

நைஜீரியாவின் நவீன சரித்திரத்தின் தொடக்கமே கொஞ்சம் பாவமானதுதான். அப்போது மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக இருந்தது நைஜீரியா. பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே இந்தப் பகுதி மக்களை தங்கள் நாடுகளுக்கு வரவழைத்துக் கொண்டார்கள் ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும்.

இதுவல்லவா உலக சகோதர பாசம் என்றெல்லாம் மெய்சிலிர்க்க வேண்டாம். அமெரிக்காவுக்கு வேலை செய்ய மக்கள் தேவைப்பட்டன. ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைகள் தேவைப்பட்டனர். அந்த நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு அந்த அடிமைகள் விற்பனை செய்யப்பட்டார்கள்.

இப்படி அமெரிக்காவுக்குச் சென்றவர்களின் வாரிசுகள் இப்போதும் அமெரிக்காவில் வாழ்கிறார்கள். இன்று அடிமை முறை அங்கு ஒழிக்கப்பட்டு விட்டது. அந்த வாரிசுகள் ‘ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஒருகால கட்டத்தில் நைஜீரியாவில் கால் பதித்த ஆங்கிலேய அரசு சீக்கிரமே அதைத் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வந்தது. தொடக்கத்தில் உள்ளூர் தலைவர்களைக் கொண்டு மறைமுகமாகத்தான் ஆட்சி செய்தது. பிறகு அவர்களை ஒதுக்கிவிட்டு நேரடியாகக் களம் இறங்கியது. சுமார் 60 வருடங்கள் ஆட்சி செய்தது.

ஆனால் நாளாவட்டத்தில் எதிர்ப்பு எழவே நைஜீரியாவுக்கு சுதந்திரம் அளித்தது பிரிட்டன். 1960-ல் இப்படிச் சுதந்திரம் பெற்றபோது பிரதமர் ஆனார் அபுபக்கர் பலேவா என்பவர். கூட்டணி அரசுதான்.

1966 ஜனவரியில் அரசுக்கு எதிராக ராணுவம் செயல்பட்டு ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கலவரத்தில் அபுபக்கர் கொலை செய்யப்பட்டார். மேஜர் ஜெனரல் ஜான்சன் என்பவர் ராணுவ ஆட்சி செய்யத் தொடங்கினார். ஆனால் சில மாதங்களிலேயே ராணுவத்தின் மற்றொரு பிரிவு அவரது ஆட்சிக்கு எதிராகக் கிளம்பியது. இந்தக் கலவரத்தில் மேஜர் ஜெனரல் ஜான்சன் படுகொலை செய்யப்பட்டார். கர்னல் யகுபு கோவோன் என்பவர் தலைவரானார்.

ஆனால், சோதனை என்னவென்றால் வாணலிக்குத் தப்பி தீயில் விழுந்ததுபோல் நைஜீரியா உள்ளூர் சர்வாதிகாரிகளின் பிடியில் அடுத்தடுத்து மாட்டிக் கொண்டது.

நாடு தழுவிய கணக்கெடுப்பு நடைபெற்றபோது அது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற மதத்தின் அடிப்படையிலும், பல்வேறு இனங்களின் அடிப்படையிலும் நடைபெற்ற இந்தக் கணக்கெடுப்பு கள்ள நோக்கத்துடன் பலவிதங்களில் உண்மைக்கு மாறாக எடுக்கப்பட்டது என்று பலத்த எதிர்ப்பு.

முஸ்லிம் தலைமையில் இயங்கும் ஆட்சியில் இருக்கப் பிடிக்காமல் நைஜீரியாவின் கிழக்குப் பகுதியில் வசித்த கிறிஸ்தவ மக்கள் தங்கள் பகுதி தனி நாடாக வேண்டுமென்று போரிட்டனர். இது பயாஃப்ரா யுத்தம் என்ற பெயரில் நடத்தப்பட்டது. (பயாஃப்ரா என்பது தனிநாடாக மாறும்போது தங்கள் நாட்டின் பெயராக இருக்குமென்று அங்குள்ள கிறிஸ்தவர்களால் அறிவிக்கப்பட்டது).

போர் நடந்ததே தவிர கிறிஸ்தவக் குழுக்களின் தனி நாடு ஆசை வெற்றியடையவில்லை. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது மட்டுமே இந்த யுத்தத்தின் பலனாக இருந்தது.

போரின் தொடக்கத்தில் நைஜீரியாவின் மூன்று கிழக்கு மாநிலங்கள் தாங்கள் பிரிந்து விட்டோம் என்றும் தங்களை ‘பயாஃப்ரா குடியரசு’ என்றும் கூறிக் கொண்டன. ஆனால் போர் முடிவில் இந்தத் தனிநாடு இயக்கத் தலைவர்கள் சரண் அடைந்தார்கள். மூன்று கிழக்கு மாநிலங்களும் மீண்டும் நைஜீரியாவிடம் ஒன்றிணைந்தன.

ஒருவழியாக 1999-ல் நைஜீரியா ஜனநாயக நாடானது. தலைவர்களை மக்களே தேர்ந்தெடுத்தார்கள். அதற்குப் பிறகு தெற்கு நைஜீரியாவைச் சேர்ந்த ஒலுசெகென் ஒபாஸஞ்சோ என்ற கிறிஸ்தவர் அதிபர் ஆனார். 2007-ல் உமரு யராதுவா என்ற முஸ்லிம் அதிபரானார். அவர் 2009ல் எதிர்பாராத விதத்தில் இறந்துவிட, அப்போது துணை அதிபராக இருந்த குட்லக் ஜொனாதன் என்பவருக்கு அதிபராகும் வாய்ப்பு கிடைத்தது.

நைஜீரிய நாட்டின் தலைநகர் அபுஜா. ஆனால் அதைவிட அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் நைஜீரியாவில் உண்டு. லாவோஸ், கனோ, இபகான் போன்றவை மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகரங்கள்.

சொல்லப்போனால் அபுஜா நகரைப்போல நான்கு மடங்கு மக்கள் தொகை கொண்டது லாவோஸ் நகரம்.

நைஜீரியாவில் அதிகம் இருப்பது முஸ்லிம்களா, கிறிஸ்தவர்களா என்று கேட்டால் கிட்டத்தட்ட சமம் அல்லது கிறிஸ்தவர்கள் 40 சதவீதம் என்று விதவிதமாக பதில் கிடைக்கிறது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியில் வசிக்கிறார்கள். வடக்குப் பகுதியில் அதிகம் வசிப்பது முஸ்லிம்கள்.

இப்படி இரண்டு பெரும் மதங்களைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட சம அளவு இருக்கும் நாட்டில் இஸ்லாமிய சட்டமாக ஷரியாதான் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்று அதிரடியாகக் கூறி வன்முறைகளைக் கட்டவிழ்க்கிறது போகோ ஹராம்.

என்றாலும் நைஜீரியாவில் ஏற்படும் அத்தனை கலவரங்களுக்குமே மத வேறுபாடுதான் அடிப்படை என்று கூறிவிட முடியாது.

அரசியல் ரீதியாகவும் பிளவு பட்டிருக்கிறது நைஜீரியா. தென்கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் கலாச்சார ரீதியாகவும் மிகவும் மாறுபட்டிருக்கிறார்கள். இவர்களில் பலராலும் நைஜீரியாவின் பொது நீரோட்டத்தில் இணைந்து கொள்ள முடியவில்லை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நொந்து-கிடக்கும்-நைஜீரியா-4/article7027328.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நொந்து கிடக்கும் நைஜீரியா - 5

 
 
naijeria_2352304f.jpg
 

பதற்றம் அடைய வைக்கும் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லாத நாடு நைஜீரியா.

1993-ல் நைஜீரியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் சனி அபச்சா என்ற ராணுவத் தளபதி. சர்வாதிகாரி. சர்வாதிகாரம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உலகுக்குப் புரிய வைத்தவர்.

‘’நான் ஆட்சி செய்யும்போது நாட்டில் அரசியல் இயக்கங்கள் எதற்கு?’’ என்றார். அவற்றுக்குத் தடைவிதித்தார். (பின்னர் அவர் அரசு கஜானாவிலிருந்து தனது 5 ஆண்டு ஆட்சியில் மூன்று பில்லியன் டாலர் தொகையைத் திருடியதாகவும் தெரியவந்தது).

முக்கியமாக கென் சரோவிவா தொடர் பான இவரது ஆணை மனிதாபிமானம் கொண்ட யாரையுமே நடுங்க வைக்கும்.

கென் சரோவிவா ஓர் இயற்கை அபிமானி. நாடக ஆசிரியர். ஒகானி என்ற பழங்குடி இன மக்களுக்காக போராடியவர். அவரால் முக்கியமாக ஒரு விஷயத்தை பொறுத்துக் கொள்ளவே முடிவில்லை.

நைஜர் டெல்டா பகுதியில் பெட்ரோல் வளம் நிறைந்திருந்தது. ஆனால் தவறான வழிகளில் அந்தப் பெட்ரோலியத்தை அரசு சுத்திகரிப்பு செய்தததால் அந்தப் பகுதி முழுவதுமே மாசு அடைந்தது. தவிர கடலின் ஒரு பகுதியில் பெட்ரோலியம் கலந்தது. இதனால் அங்குள்ள கடல் வாழ் உயிரினங்கள் கொத்து கொத்தாக மடிந்தன. தவிர இதனால் அந்தப் பகுதியில் வசித்த பழங்குடி மக்களும் பல்வேறு நோய்களுக்கு உள்ளானார்கள்.

இதற்கெல்லாம் எதிராகத்தான் போராடினார் கென் சரோவிவா. அவருக்குப் பின்னால் மக்கள் அணி திரண்டார்கள்.

இதெல்லாம் சர்வாதிகாரி சனி அபச்சா வுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. “கென் சரோவிவா ஒரு தீவிரவாதி” என்று குற்றம் சுமத்தினார். அவரை தூக்கிலிட ஆணையிட்டார்.

கென் சரோவிவா இறந்தார் என்பதைவிட அதிர்ச்சியை அளிக்கும் தகவல் அவர் எப்படி இறந்தார் என்பது. ‘அதுதான் தூக்கிலிடப்பட்டார் என்று சொல்லிவிட்டீர்களே’ என்கிறீர்களா. அது உண்மைதான். ஆனால் அதிலும் சர்வாதிகாரியின் மிருகத்தனம் தெளிவாகவே வெளிப்பட்டது.

தூக்கிலிடப்பட்ட சில நொடிகளிலேயே ஒருவரது மரணம் நிகழ வேண்டும். அப்படித்தான் அத்தனை நாடுகளிலும் ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் கென் சரோவிவாவை துடிக்கத் துடிக்க வைத்து சாகடித்தார்கள்.

தூக்கில் மாட்டப்பட்டபோது 20 நிமிடங்கள் அவர் உயிரோடு துடித்தார். அந்தத் துடிப்பையும், அவரது கைகள் அங்குமிங்கும் ஆதரவு தேடி அலைபாய்ந்ததையும், அவரது மரணத்தையும் ஒருவர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ, நைஜீரிய சர்வாதிகாரிக்கு அனுப்பப்பட, அவர் அகமகிழ்ந்தார். ஆக கென் சரோவிவா அவ்வளவு நேரம் துடித்தபின் அடங்கியது அதிபரின் மிருகத்தனமான சதியாக இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

சனி அபசா பின்னர் மாரடைப்பால் இறந் தார். அபுபக்கர் என்ற அவரது வாரிசும் மக்களிடையே கடுமையாகவே நடந்து கொண்டார். உலக நாடுகளின் கடும் எதிர்ப் புக்குப் பிறகு ஒலுஷேகன் ஒபஸான்ஜோ என்பவர் நைஜீரிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ராணுவமும் இவருக்கு ஆதரவு தரத்தயார் என்று கூறியது.

இந்த அதிபர் நியமித்த விசாரணைக் குழுவில் சனி அபசாவின் வேறு பல அராஜகங்களும் வெளிப்பட்டன. ஒபஸான்ஜோ கூட ஒருவிதத்தில் பாதிக் கப்பட்டவர்தான். புரட்சி செய்ததாக மேற்படி சர்வாதிகாரியால் சிறைபடுத்தப்பட்டார். ‘4 ஆண்டுகள் காற்றோட்டமே இல்லாத ஒரு குடிசைக்குள் வைக்கப்பட்டிருந்தேன்’ என்பதிலிருந்து ‘சொல்லவே கூசும்படியான மனித உரிமை மீறல்கள்’ என்பதுவரை பலவித அரக்கத்தனங்கள்.

“ஓராண்டுக்கு என் கைகளையும், கால்களையும் தொடர்ந்து பிணைத்திருந் தார்கள். இப்படி ஓர் ஆணையைப் பிறப்பித்தது சர்வாதிகாரி சனி அபச்சாதான்” என்று மனித உரிமை விசாரணை கமிஷனுக்கு முன்பாக வாக்குமூலம் அளித்தார் ஒரு ராணுவ அதிகாரி.

வேறு பலருமே தங்களுக்கு அந்த சர்வாதிகாரியால் இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்தபோது கதறி தீர்த்து விட்டார்கள்.

ஆனால் இதெல்லாம் நடக்கும்போது சனி அபச்சா இறந்து விட்டிருந்தார்.

கென் சரோவிவா உண்மையில் 1993 அதிபர் தேர்தலில் ஜெயித்திருக்க வேண்டுமென்று கூறப்படுகிறது. ஒருவேளை அதனால்தான் இந்தமுடிவோ?

ஏற்கெனவே, ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினர் பதவியை நைஜீரியா இழந்திருந்தது. காரணம், அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள். தென்னாப்பிரிக்கா, நைஜீரியாவில் உள்ள தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.

கென் சரோவிவாவின் முடிவுக் குப் பிறகு எந்த நாடுமே நைஜீரியாவிட மிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யக் கூடாது என்று நெல்சன் மண்டேலா பகிரங்க மாகவே அறிக்கை விடுத்தார். ஆனால், இப்படிப்பட்ட தடைகளால் நைஜீரிய மக்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவார்கள் என்று பல நாடுகள் கருதியதால் மண்டேலா வின் திட்டம் வெற்றி பெறவில்லை.

ராணுவ ஆதரவு ஆட்சி முடிந்தவுடன் மதக்கலவரங்களும், இனப் போராட்டங்களும் அங்கு தலைவிரித்து ஆடத் தொடங்கின.

நைஜீரியாவின் இரண்டு மாநிலங்களில் ஏற்கெனவே ஷரியா அமலில் இருக்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கடுலா என்ற மாநிலத்திலும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நிலை உருவானவுடன், அந்த மாநிலத்தில் உள்ள மாதா கோவில்களில் கூடிய ஐயாயிரம் கிறிஸ்தவர்கள், மாநில கவர்னரின் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் நடத்தினர்.

போகும் வழியில் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்தும் போஸ்டர்களை தெருச் சுவர்களில் ஒட்டினர். முஸ்லிம்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொள்ள, வன்முறை வெடித்தது. இதன் விளைவாக 300-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.

நைஜீரியாவுக்கு பெரும் சவாலாக விளங்குவதில் இந்தப் பிரச்னையும் ஒன்று. இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கானது என்ற வாதத்தை கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இதைப் பொதுச் சட்டமாக்குவதற்கு முதல்படி அது என்றே நம்புகின்றனர்.

இதுவரை, “நாட்டின் உச்ச நீதிமன்றம் ஷரியாவைப் பற்றி என்ன முடிவெடுக்கிறது என்று பார்ப்போம்’ என்று சொல்லி காலத்தை ஓட்டி வந்த அதிபர், மேற்படி வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு பிறநாட்டு ‘டிவி’ மற்றும் பத்திரிகைகளுக்கும் பேட்டியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, ‘கல்லால் அடித்தே சாகடிப்பது, கைகால்களை வெட்டுவது போன்ற தண்டனைகள் சட்டமாக ஆகாது’ என்று உறுதியளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால், அதற்குப் பிறகு 4 மாநிலங்களில் ஷரியா ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. அந்தந்த மாநில ஆளுநர்கள், ‘என்ன செய்ய பெரும்பான்மை மக்களுக்கு இது பிடித்திருக்கிறதே! என்று கூறிச் சிரிக்கின்றனர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நொந்து-கிடக்கும்-நைஜீரியா-5/article7031254.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

நொந்து கிடக்கும் நைஜீரியா - 6

 
 
 
நைஜீரியாவில் தீவிரவாதிகளின் குண்டுவீச்சில் பற்றி எரியும் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம். கோப்புப்படம்
நைஜீரியாவில் தீவிரவாதிகளின் குண்டுவீச்சில் பற்றி எரியும் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம். கோப்புப்படம்

ஆப்ரிக்க கண்டத்தில் மிக அதிகமாக பெட்ரோல் கிடைக்கும் நாடுகள் அங்கோலாவும் நைஜீரியாவும்தான்.நைஜீரியாவின் 80 சதவீத அந்நிய செலாவணி பெட்ரோலியம் மூலமாகத்தான் வருகிறது. உலகின் 12-வது மிகப் பெரிய பெட்ரோலியத் தயாரிப்பாளர் நைஜீரியா. 8-வது மிகப்பெரும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடு.

பெட்ரோல் வளத்தினால் கிடைக்கும் லாபத்தில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று பலரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். முக்கியமாக நைஜர் டெல்டா பகுதியில் இந்த சண்டை சச்சரவுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. (நைஜர் நதி அட்லான்டிக் கலக்கும் பகுதிதான் நைஜர் டெல்டா).

1956-ல் ஷெல்-பிபி நிறுவனம் இங்கு பெட்ரோலியக் கிணறுகள் எங்கெங்கு உள்ளன என்பதற்கான தேடுதலில் ஈடுபட்டது. ஆனால் அப்போது கூட பெரும்பாலான நைஜீரிய மக்கள் அந்த நிறுவனம் பாமாயில் தொடர்பான தேடுதலில் ஈடுபட்டதாகத்தான் பாமரத்தனமாக எண்ணினார்கள்.

ஒரு வழியாக 1958-ல் நைஜர் டெல்டாவில் முதல் எண்ணெய்க் கிணறு கண்டு பிடிக்கப்பட்டது. நாட்டில் பரலவாக பெட்ரோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மக்கள் ஒரு வித அச்சம் கலந்த சூழலுக்கு ஆளானார்கள். பெட்ரோலினால் கிடைத்த லாபத்தை யார் பங்கு போட்டுக்கொள்வது என்பதில் பிரச்சினைகள் முளைத்தன.

நாட்டின் வளத்தில் ஒரு பகுதி கூட மக்களுக்குக் கிடைக்கவில்லை. பெட்ரோலிய லாபத்தை அரசு அதிகாரிகளே பங்கிட்டுக் கொண்டார்கள். அதாவது, எந்த பெட்ரோலிய நிறுவனம் தொடங்கினாலும் அதில் பெரும்பாலான பங்குகளை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். மேலும் மேலும் பெட்ரோலிய கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்டன. நீண்ட குழாய்கள் மூலம் பெட்ரோலியம் அண்டை நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

நைஜீரியாவில் கிடைக்கும் பெட்ரோல் கொஞ்சம் வித்தியாசமானது. அதை “இனிப்பு பெட்ரோல்” என்கிறார்கள். அதாவது இங்கு கிடைக்கும் பெட்ரோலியத்தில் சல்பர் கலப்பு இல்லை. அதனால்தான் இந்த வேறுபாடு.

ஆக நைஜீரிய அரசு அதிகாரிகள் பொருளாதரத்தில் கொழித்தபோதிலும் பொது மக்கள் தொடர்ந்து ஏழ்மையில் இருந்தனர்.

நைஜீரிய அரசு பல வெளிநாட்டினருக்குப் பெட்ரோல் கிணறுகளைத் தோண்டவும், பெட்ரோல் வளத்தை அவரவர் நாட்டுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்கிறது. இதில் குறிப்பிட்ட சதவீத தொகை நைஜீரிய அரசுக்குக் கிடைக்கும்.

எதற்காக வெளிநாட்டினருக்கு இந்த உரிமையை அளிக்க வேண்டும்? நைஜீரிய அரசே தங்கள் நாட்டில் உள்ள பெட்ரோலியக் கிணறுகளைத் தோண்டி முழுப் பலனையும் அடையலாமே என்கிறீர்களா? இதற்கு நிறைய நிதி தேவைப்படும் என்பது ஒரு காரணம்.

அதை விட முக்கியக் காரணம், நைஜீரிய அரசுக்கு என்று வெளிநாட்டினர் அளிக்கும் தொகையில் பெரும் பகுதி அரசில் பங்கு வகிக்கும் விஐபிக்களின் பாக்கெட்டுக்குப் போய் விடுகிறது. பிறகு ஏன் இதை மாற்றியமைக்கப் போகிறார்கள்?

இதன் விளையாக நைஜீரியா தொடர்ந்து வறுமையில் வாடுகிறது. போதாக்குறைக்கு பெட்ரோல் கிணறுகள் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துக் கொண்டு இருக்கின்றன. அதாவது, பெட்ரோல் கிணறுகள் இருக்க வாய்ப்பு உண்டு என்று கருதிய நிலங்களை எல்லாம் வெளிநாட்டுச் சக்திகள் வளைத்துப் போட்டுவிட்டன. இந்த நிலங்களில் பெரும் பகுதி விவசாய நிலங்கள். ஆக இன்றைய தேதிக்கு நாட்டின் விவசாயமும் அடிபட்டுக் கிடக்கிறது.

அரசிடம் வெறுப்பு. கையிலோ காசு இல்லை. இதனால், உள்ளூர்வாசிகளில் சிலர், வெளியூரிலிருந்து வந்து தங்குபவர்களை முற்றுகையிட்டுப் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். பணத்தைவிட உயிர் முக்கியம்தானே! எனவே, தப்பித்தால் போதும் எனக் கையில் உள்ள பணத்தைக் கொடுத்து விடுகிறார்கள். இதற்காகவே நைஜீரியாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு `ரிஸ்க் அலவன்ஸ்’ என்று ஒரு தொகையை மாதா மாதம் அளிக்கின்றன.

வெளிநாட்டு பெட்ரோலிய நிறுவன ஊழியர்களைக் கடத்திச் செல்வது, பெரும் தொகை கிடைத்த பிறகு அவர்களை விட்டுவிடுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இப்படிக் கடத்தப்பட்டவர்கள் யாரும் சித்ரவதைக்கு ஆளானதாகத் தெரியவில்லை என்பதுமட்டும் ஆறுதலான செய்தி.

நைஜர் டெல்டா விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான் அதிக அளவில் இதுபோன்ற கடத்தலில் ஈடுபடுகிறார்கள். கடத்தலோடு மட்டும் நின்றுவிடாமல் பெட்ரோல் செல்லும் நிலத்தடிக் குழாய்களை குண்டுவைத்துத் தகர்ப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதென்னவோ நைஜீரியாவில் வடக்குப்பகுதி, தெற்குப் பகுதி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கிறார்கள். இப்படியொரு மாறுதலான ஆட்சி அமைவதை மக்கள் விரும்புகிறார்கள் என்றே தோன்றுகிறது. அப்போதுதான் ஒட்டுமொத்த தேசத்துக்கு நியாயம் வழங்கப்பட்டதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

போகோ ஹராம் அச்சுறுத்தல் காரணமாக பல மக்கள் முக்கியமாக வடகிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் - வாக்களிக்க வருவதற்கே அஞ்சும் சூழ்நிலை உள்ளது.

பிப்ரவரி 15, 2015 அன்று அரசியல் கட்சி ஊர்வலம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் தானும் கலந்து கொண்டு மனித வெடிகுண்டாக மாறினார் ஒரு தீவிரவாதப் பெண். இது நிலைமையின் தீவிரவாதத்தை மேலும் அழுத்தமாக புலப்படுத்துகிறது.

போகோ ஹராம் இயக்கத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் இயங்குவதாகத் தகவல். இவர்கள் வெறும் எதிர்ப்பாளர்கள் என்றால் சமாளிப்பது அவ்வளவு கஷ்டம் அல்ல. ஆனால் இவர்கள் அனைவருமே மனித வெடிகுண்டுகளாக மாறுவதற்கும் தயாரானவர்கள் என்பதுதான் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

போதாக்குறைக்கு அண்டை நாடான கேமரூனுக்கும், இந்தத் தீவிரவாதிகளின் ஒரு பகுதியினர் அவ்வப்போது சென்று வருகிறார்கள். அங்கிருந்தும் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 80 பேரைக் கடத்தினார்கள். அவர்களில் 24 நபர்களை பின்பு விடுவித்தார்கள்.

‘தீவிரவாதிகளை அடக்குவதில் அரசு வெற்றி பெறவில்லை. கையால் ஆகாத அரசு’ என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக தொடர்கிறது. “கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தினால் அது அவர்கள் உயிருக்கே ஆபத்தாகி விடுமே, என்ன செய்வது?’’ என்று கைகளைப் பிசைகிறது அரசு. “எதையாவது செய்யுங்கள். உயிரோடு அவர்களை மீட்டுத் தாருங்கள். இது முடியவில்லை என்றால் நீங்கள் அரசாங்கமே அல்ல’’ என்கின்றனர் மக்கள்.

போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்.

இயற்கை வரமளித்தாலும் மனிதனின் சுயநலங்கள் அந்த வரங்களையே சாபமாக்கிக் கொள்ளும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது நைஜீரியா.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/நொந்து-கிடக்கும்-நைஜீரியா-6/article7052396.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.