Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன்

Featured Replies

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 1

 
 
 
சனா நகரின் ஒரு பகுதி.
சனா நகரின் ஒரு பகுதி.

ஏமன் நாட்டின் அதிகாரபூர்வப் பெயர் ஏமன் குடியரசு. தென் மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அரபு நாடு இது. அரேபிய தீபகற்பத்தின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. (முதலாவது - சவுதி அரேபியா).

வடக்கே சவுதி அரேபியா, தெற்கே அரேபியக் கடல், மேற்கே செங்கடல், கிழக்கே ஓமன் என்று இந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சனா அதுதான் ஏமன் நாட்டின் தலைநகர்.

ஒரு வெள்ளிக்கிழமை - மார்ச் 20, 2015. அன்று சனாவில் நடைபெற்றது ஒரு மாபெரும் விபரீதம். அந்த நகரின் மையத்தில் இரண்டு பெரும் மசூதிகள் இருந்தன. ஒவ்வொரு மசூதியையும் நோக்கி இரண்டு பேர் கிளம்பினார்கள். இந்த நால்வருமே மனித வெடிகுண்டுகள். அதாவது கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள். தீவிரவாதம் தவறல்ல எனறு மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள்.

அன்று வெள்ளி மதியம் என்பதால் அந்த மசூதிகளில் வழிபாட்டுக்காக பல முஸ்லிம்கள் கூடியிருந்தனர். மனித வெடிகுண்டுகள் வெடித்தன. 130 பேர் அந்த நொடியிலேயே இறந்தனர். இவர்களில் குழந்தைகளும் உண்டு.

வழிபாடு செய்து கொண்டிருந்தவர்கள் யார்? சந்தேகமில்லாமல் முஸ்லிம்கள்.

மனித வெடிகுண்டுகளாக மாறி அவர்களைக் கொன்றது யார்? அவர்களும் முஸ்லிம்கள்தான்.

எதனால் இந்த விபரீதம்? யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் யுத்தம் தொடர்ந்து நடப்பதை இஸ்ரேல்-பாலஸ்தீன் நாடுகளில் பார்க்கிறோம். எதனால் ஏமன் நகரில் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் பகைமைவெறி கொள்ள வேண்டும்?

ஏமன் நாட்டின் தலைநகரம் சனா என்றோம். ஆனால் நீங்கள் அந்த நாட்டின் தலைநகருக்கு இப்போது போக வேண்டுமானால் ஏடன் என்ற துறைமுக நகரத்துக்குத்தான் போக வேண்டும். (இது தெற்கு கடற்கரையில் உள்ளது).

என்ன ஆனது? தலைநகரம் மாறி விட்டதா? நடைமுறையில் அப்படித்தான். பிப்ரவரி 2015-ல் இருந்து இந்த மாற்றம். காரணம் அந்த நகரில் நடைபெற்றுவரும் கிளர்ச்சி. கிளர்ச்சியாளர்கள் சனாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இதனால் ஏமன் நாட்டின் தலைநகரம் தாற்காலிகமாக ஏடன் நகருக்கு மாற்றப்பட்டு விட்டது. கலவரம் ஓய்ந்ததா? அடப்போங்க.

பின்னணி என்ன? பார்ப்போம்.

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகியவை சந்திக்கும் இடமாக ஏமன் உள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மசாலாப் பொருட் களுக்கான கடல் வழிப் பாதையாக ஏமன் இருந்திருக்கிறது.

ரோமானியர்கள் இந்தப் பகுதியை ‘அரேபியா பெலிக்ஸ்’ என்று அழைத்தார்கள்.

பைபிளில் ஷேபா என்று ஓர் இனத்தைக் குறிப்பிட்டிருககிறார்கள். அவர்களின் தாயகமாகத்தான் ஏமன் இருந்திருக்கிறது. இப்போதைய ஏமன் மட்டுமல்ல, எத்தியோபியா, எரித்ரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகள்கூட ஏமனின் பகுதியாக அப்போது இருந்தது.

கி.பி.275ல் யூதர்களின் ஆட்சிக்கு உள்ளானது.

ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இப்படிப் பரவ முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது ஏமன் ராணுவமும்தான். அதைச் சேர்ந்த பலரும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறிவிட்டனர்.

அதற்குப் பிறகு பல சாம்ராஜ்யங்களின் பிடியில் மாறி மாறித் திணறியது ஏமன். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டாமன் சாம்ராஜ்யம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆகிய இரண்டுமே ஏமனைத் துண்டாடின. தொடக்கத்தில் வடக்கு ஏமன் மட்டும்தான் சுதந்திர நாடாக - ஏமன் குடியரசாக - மாற்றம் கண்டது. அப்போதும்கூட தெற்கு ஏமன் பிரிட்டிஷாரின் பிடியில்தான் இருந்தது. 1990-ல்தான் இரண்டு ஏமனும் இணைந்து தற்போதைய நவீன ஏமன் குடியரசாக மாறின.

இப்போது ஏமனில் நடைபெறும் கலவரங்களுக்கு முக்கிய காரணம் வேறு இரண்டு நாடுகளுக்குள் உண்டான பகைமை என்றும் கூறலாம். அவை, சவுதி அரேபியா, ஈரான்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/எண்ணற்ற-எதிரிகளுடன்-ஏமன்-1/article7137240.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 2

 
 
 
சவுதி அரேபியாவின் மதினா நகரில் உள்ள முகமது நபியால் கட்டப்பட்ட மஸ்ஜித்துன்நபவி மசூதி.
சவுதி அரேபியாவின் மதினா நகரில் உள்ள முகமது நபியால் கட்டப்பட்ட மஸ்ஜித்துன்நபவி மசூதி.

ஏமனில் தற்போது நடைபெறும் கலவரங்களின் ஆணிவேர் என்று இஸ்லாமின் இரு பிரிவுகளுக்கிடையே உள்ள விரோதத்தைக் கூறலாம்.

இஸ்லாமிய மார்க்கத்தின் சன்னி, ஷியா ஆகிய இரு பிரிவினருமே (முக்கிய மாக அவற்றின் பல தலைவர்கள்) ஒருவரை யொருவர் கடும் பகைவர்களாகத்தான் பார்க்கிறார்கள். எதனால் இந்தப் பிளவு? பல்வேறு நாடுகள் பற்றிய விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் இந்தப் பகுதியில் ஏற்கெனவே இது குறித்து நாம் ஓரளவு விளக்கியிருந்தாலும் இப்போது அதை மேலும் விளக்கமாக அறிந்து கொண்டால்தான் ஏமனில் நடக்கும் கலவரங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

முகமது நபிகள் பரப்பிய இஸ்லாமிய மார்க்கம் அவருக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்து நின்றது. நபிகள் நாயகத்தின் அடுத்தடுத்த வாரிசுகள் யாராக இருக்க வேண்டும்? இதில்தான் கருத்து வேறுபாடுகளும் பிளவும்.

ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் காலிஃப் (அதாவது முகமது நபியின் வாரிசுகள்) தங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். இவர்கள் தங்களை `சன்னி’ என்று அறிவித்துக் கொண்டனர்.

இரண்டாவது பிரிவினர் தங்களை `ஷியா’ என்று கூறிக் கொண்டனர். இவர் களைப் பொருத்தவரை முகமது நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான் தங்கள் தலைவர்களாக இருக்க வேண்டும். அல்லது அந்தப் பரம்பரையினர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர் தலைவராக இருக்கலாம்.

சன்னி, ஷியா ஆகிய இரு பிரிவினருக் குமே பல அடிப்படை ஒற்றுமைகள் உண்டு. இருதரப்பினருமே நபிகள் நாயகத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள். ஹஜ் யாத்திரையை முக்கியமானதாகவும், புனிதமானதாகவும் கருதுபவர்கள். என்றாலும் வேறு சில வேறுபாடுகள் பூதாகரமாகி விட்டன.

அப்படி என்ன இந்த இரண்டு பிரிவுகளுக்கிடையே வேறுபாடு? தெரிந்து கொள்வோம். சன்னி முஸ்லிம்கள் தங்களை இஸ்லாம் மார்க்கத்தின் தொன்மையான பிரிவினர் என்று கருதுகிறார்கள். சொல்லப் போனால் சன்னி என்ற வார்த்தையே “அஹ்ல் அல்-சுன்னா’’ என்ற வார்த்தை யிலிருந்து உண்டானதுதான். இதன் பொருள் தொன்மையான மக்கள் என்பதா கும். தொன்மை என்றால்? நபிகள் நாயகத் தின் செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவது. நபிகள் நாயகத்தைத்தான் இறுதியான இறைத்தூதர் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

ஷியா பிரிவு ஓர் அரசியல் பிரிவாகவே தொடக்கத்தில் கருதப்பட்டது. `ஷியட் அலி’ என்ற வார்த்தைகளிலிருந்து உருவானது தான் ஷியா என்ற சொல். ஷியட் அலி என்றால் அலியின் கட்சி என்று பொருள்.

அலி என்பவர் நபிகள் நாயகத்தின் மருமகன். முகமது நபி இறக்கும்போது அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. எனவே அவரது மகளின் கணவரான அலி என்பவரையே அவரது வாரிசாக ஏற்றுக் கொண்டனர் ஷியா பிரிவினர்.

ஆனால் உள்நாட்டுப் போர்களின் காரண மாக அலி கொல்லப்பட்டார். அவருடைய மகன்கள் (அதாவது நபிகள் நாயகத்தின் மகள் வழிப் பேரன்கள்) ஹாசன் மற்றும் உசேன். இவர்களுக்கே அடுத்த வாரிசுப் பதவி என்று ஷியா பிரிவினர் கருதினர். ஆனால் ஹாசன் எதிர்பாராத விதத்தில் இறந்தார்.

இவருக்கு விஷம் வைத்துக் கொன்றவர் முவாவியா (இவரே முதலாம் காலிஃப் அதாவது முஸ்லிம்களின் தலைவர்) என்று ஷியா பிரிவினர் கருது கிறார்கள். அலியின் மற்றொரு மகனான உசேன் யுத்தகளத்தில் கொல்லப்பட்டார்.

இப்போது உலகில் உள்ள ஷியா பிரிவினரின் எண்ணிக்கை சுமார் 15 கோடி. ஆனால் சன்னி பிரிவினரின் எண்ணிக்கை இதைப்போல சுமார் பத்து மடங்கு.

ஈரான், இராக், அஜர்பைஜான், ஏமன், பஹ்ரைன் போன்ற நாடுகளில் ஷியா பிரிவினர் மெஜாரிட்டியாக உள்ளனர்.

கி.பி.632-ல் முகமது நபி இறந்தபோது அவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருந்தது. அடுத்து இஸ்லாமிய மார்க்கத்தை தலைமை ஏற்று நடத்தக்கூடிய வாரிசு யார்?

முகமது நபிகள் குராஷ் இனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த இனத்தைச் சேர்ந்த, இஸ்லாமிய மார்க்கத்தில் பெருநம்பிக்கை கொண்ட ஒருவர்தான் வாரிசாக வேண்டும் என்று கருதியவர்கள் காலப்போக்கில் சன்னி பிரிவாக அறியப்பட்டனர். வாரிசு என்பவர் நபிகள் நாயகத்தில் ரத்த சம்பந்தம் உள்ளவர்களாகவே இருக்க வேண்டும் என்று வாதிட்ட பிரிவினர் நாளடைவில் ஷியா பிரிவாக அறியப்பட்டனர்.

தொடக்கத்திலேயே சில பிரச்சினைகள் உண்டாயின. நபிகள் நாயகத்தின் மாமனார் அபு பக்கர். இவர் அடுத்த வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் குராஷ் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஷியா பிரிவினரால் இதை ஏற்க முடியவில்லை. மாமனார் எப்படி நேரடி ரத்த சொந்தம் கொண்டவராக இருக்க முடியும்? எனவே அவரைத் தலைவராக ஏற்க முடியாது.

இப்படி ஏற்க மறுத்த பிரிவினர் நபிகள் நாயகத்தின் மாப்பிள்ளையும், மற்றபடி அவருக்கு ஒன்று விட்ட சகோதரனுமான அலியைத் தலைவராக அறிவித்தனர்.

நாளடைவில் அலி நான்காவது மதத் தலைவராக (காலிஃப்) அறியப்பட்டார். ஷியா, சன்னி ஆகிய இரு பிரிவினருமே அவரை மதித்தனர். ஆனால் ஷியா பிரிவைப் பொருத்தவரை முகமது நபிக்குப் பிறகு மிக முக்கியமான மதத் தலைவர் அலிதான். இடைப்பட்ட மூவர் அல்ல.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/எண்ணற்ற-எதிரிகளுடன்-ஏமன்-2/article7140659.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 3

 

 
ஷியா முஸ்லிம்களின் மொஹர்ரம் ஊர்வலம். கோப்புப் படம்
ஷியா முஸ்லிம்களின் மொஹர்ரம் ஊர்வலம். கோப்புப் படம்

இஸ்லாமின் இரு பிரிவினருக்குமிடையே வேறொரு வேறுபாடும் உண்டு. நபிகள் நாயகத்தின் பேரனான உசேன் இறந்த தினத்தை ஆஷுரா தினம் (மொஹர்ரம்) என்று அனைத்து முஸ்லிம்களும் கருதி துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இது மேலும் முக்கிய தினம். நபிகள் நாயகத்தின் ரத்தவாரிசு ஒருவர் இறந்த தினம். எனவே அந்த தினத்தில் அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுவது, தன்னையே சாட்டையால் அடித்துக் கொண்டு துன்புறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

அவர்களைப் பொருத்தவரை இது துக்கத்தின் வெளிப்பாடு. ஆனால் சன்னி பிரிவினர் இந்தச் செயல்பாடுகளை அங்கீகரிப்பதில்லை. சொல்லப் போனால் சில (சன்னிக்கள் ஆட்சி செய்யும்) நாடுகளில் இதுபோன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சரி, இஸ்லாமிய மார்க்கத்தின் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் ஏமனில் நடைபெறும் கலவரங்களுக்கும் என்ன தொடர்பு?

ஏமனை ஆட்சி செய்பவர் (செய்தவர்?) சன்னி பிரிவைச் சேர்ந்தவர். இந்த ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள் ஹவுதி என்னும் பிரிவினர். ஹவுதிக்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். யார் இந்த ஹவுதிக்கள் என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாமா?

ஹவுதிக்கள் என்று பரவலாக அழைக்கப்படும் இந்தப் பிரிவினரின் உண்மையான பெயர் அன்சர் அல்லா. 2004ல் ஒரு பெரும் தாக்குதல் உசேன் அல் ஹவுதி என்பவரின் தலைமையில் அரசின் மீது நிகழ்த்தப்பட்டது. இதன் காரணமாக ஏமன் நாட்டின் ராணுவத்தினர் பலரும் கொல்லப்பட்டார்கள். இந்த ஹவுதி என்பவரின் பெயரில்தான் அந்தப் பிரிவினர் அழைக்கப்படுகிறார்கள்.

உசேன் அல் ஹவுதி ஏமன் நாட்டு ராணுவத்தால் 2004 இறுதியில் கொல்லப்பட்டார். அவர் குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து ஐந்து கிளர்ச்சிகளில் ஈடுபட்டார்கள். ஒருவழியாக 2010-ல் அரசுடன் அமைதிக்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனாலும் அமைதி நிலவவில்லை.

2014ல் அப்துல் மாலிக் அல் ஹவுதி என்பவரின் தலைமையில் ஒரு குழு ஏமன் ஆட்சியாளர்களை சூழ்ந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது. அதில் ஓரளவு வெற்றியும் கிட்டியது. நாட்டின் பாராளுமன்றம் மட்டுமல்ல, தலைநகர் சனா முழுவதுமே கூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றது. இந்தப் பிரிவில் பெரும்பாலானவர்கள் வட ஏமனைச் சேர்ந்தவர்கள்.

சனாவை கைப்பற்றிய பிறகு ஹவுதிக்கள் பலவிதங்களில் முன்னேற திட்டமிட்டனர். தெற்குப் பகுதியில் உள்ள அடெல் என்ற நகரை அடைந்தார்கள். அங்கிருந்து கொண்டே ஒரு மாற்று அரசை நிர்ணயித்தார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர்கள் செய்த அறிவிப்புகள் இவை. ‘’சீக்கிரமே ஏமன் நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்படும். எங்களின் தாற்காலிக அரசு உருவாக்கப்படும். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட எங்கள் தலைமைக் குழுதான் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஏமனை ஆட்சி செய்யும். மற்றதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’’.

இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். தானாக முன்வந்து இந்த ராஜினாமாக்கள் அளிக்கப்படவில்லை. அதிபர் மற்றும் பல பிரபலங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். வேறு வழியில்லாமல் அவர்கள் ராஜினாமா செய்யும்படி ஆனது.

ஆனால் ஹவுதிக்களின் அறிவிப்பை சன்னி பிரிவினர் ஏற்கத் தயாராக இல்லை. அவர்களைப் பொருத்தவரை அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பிரிவுதான் ஷியா (அல்லது ஹவுதி). அவர்கள் எப்படி மொத்த நாட்டையும் ஆள முடியும்? எனவே தெற்கு ஏமன் தலைவர்களும் நாட்டில் உள்ள சன்னி பிரிவினரும் பதிலுக்கு ஹவுதி பிரிவினரை கடுமையாக எச்சரித்தனர்.

இருதரப்புக்குமே நடந்த உள்நாட்டுப் போரில் அதிபர், கடந்த பிப்ரவரி மாதம் சனாவை விட்டு வெளியேறினார். ஏமன் நகரிலுள்ள ராணுவத்தினர் இரண்டாகப் பிரிந்திருக்கின்றனர். ஆளுக்கு ஒரு பிரிவை ஆதரிக்கிறார்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/எண்ணற்ற-எதிரிகளுடன்-ஏமன்-3/article7141600.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 4

 
ஏமனில் 1962-ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பங்கேற்றவர்கள். (கோப்புப் படம்)
ஏமனில் 1962-ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பங்கேற்றவர்கள். (கோப்புப் படம்)

ஒட்டாமன் சாம்ராஜ்யத்தை துருக்கியர் சாம்ராஜ்யம் என்றும் கூறுவார்கள். தொடக்கத்தில் 1299-ல் துருக்கியில் ஒரு சிறிய பகுதியாகத்தான் இது தொடங்கியது. பின்னர் பரந்து, விரிந்து பல பகுதிகளை தனக்குள் கொண்டு வந்தது. இந்த சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் சுன்னி இஸ்லாமியர்.

1500-களில் ஏமனின் ஒரு பகுதியையும் இந்த சாம்ராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார்கள். ஆனால் அடுத்த 100 வருடங்களில் அவர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக வெளியேற நேரிட்டது.

ஏடன் என்பது ஏமன் நாட்டிலுள்ள ஒரு துறைமுக நகரம். இதை செங்கடல் மூலம் அணுக முடியும். இந்த நகரம் 1839-ல் பிரிட்டிஷ் ஆட்சியின் வசமானது. 1869-ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டபோது அங்கு செல்லும் வழியில் இருந்த இந்த ஏடன் துறைமுகத்தில் கப்பல்களில் எரிபொருள்களை நிரப்பிக் கொள்வது வழக்கமானது.

1849-ல் ஒட்டாமன் மன்னர்கள் தற்போதைய ஏமனின் வடக்குப் பகுதியை மீண்டும் ஆக்ரமிக்க முயன்றார்கள். ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அதிக நாட்களுக்கு அவர்களால் தங்கள் ஆக்ரமிப்பை தாக்குப்பிடிக்க முடியவில்லை. காலப்போக்கில் (கிட்டத்தட்ட 1918-ல்) ஒட்டாமன் சாம்ராஜ்யம் நீர்த்துவிட்டது. இதைத் தொடர்ந்து வடக்கு ஏமன் சுதந்திரம் பெற்றது. (அப்போது ஏமன் தனிநாடு அல்ல. வடக்கு ஏமன் பகுதிதான் தனிநாடாக ஆனது).

சுதந்திரம் பெற்றவுடன் வடக்கு ஏமன் பகுதி இமாம் யாஹியா என்பவரின் ஆளுகையில் வந்தது. இவர் (ஏமனின் தற்போதைய தலைநகரான ஸனாவில் பிறந்தவர்) ஏமனையும் இன்றைய சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியையும் 900 வருடங்களுக்குமேல் ஆண்ட அல் காசிம்ஸி சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்.

1948-ல் இவர் படுகொலை செய்யப் பட்டார். கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே அவர் மகன் அஹமது ஆட்சி அமைத்தார்.

1962-ல் அஹமது இறந்தவுடன் அவரது மகன் தலைமைப் பதவியை ஏற்றார். ஆனால் அதிக நாட்கள் இந்த அரசு நீடிக்கவில்லை. ராணுவ அதிகாரிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். ஏமன் அரபுக் குடியரசு என்று தங்கள் தேசத்துக்குப் பெயரிட்டார்கள். இதன் காரணமாக உள்ளூரில் தொடர்ந்து கலவரங்கள் வெடித்தன. அரச வம்சத்துக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், குடியரசாக அறிவித்தவர்களுக்கு ஆதரவாக எகிப்தும் துணை நின்றன.

1967-ல் ஏமன் மக்கள் குடியரசு என்ற பெயரில் இந்த தேசம் தன்னை வடிவமைத்துக் கொண்டது. (என்றாலும் ஏமன் அரபுக் குடியரசாகவே அது பிறரால் அறியப்பட்டது). பிரிட்டன் வசமிருந்த ஏடனும் இதன் எல்லைக்குள் வந்தது. சவுதி அரேபியா தன் கண்காணிப்பில் வைத்திருந்த சில பகுதிகளும் ஏமன் வசம் வந்தன.

1969-ல் கம்யூனிஸ்டுகள் ஏமனின் தெற்குப் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். இதைத் தொடர்ந்து ஏமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு என்று அதன் பெயரை மாற்றினார்கள். இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பொருளாதாரம், வெளியுறவு ஆகியவையெல்லாம் சோவியத் யூனியனுக்கு ஆதரவாகவே அமைந்தன. மத்திய கிழக்கில் அமைந்த ஒரே கம்யூனிஸ நாடு என்பதால் சோவியத்தும் நிதி உதவியை அதிகமாகவே இந்த நாட்டுக்கு அளித்தது. பெரும்பாலும் மதச்சார்பற்ற நாடாகவே இது விளங்கியது.

இந்த இடத்தில் ஒரு முக்கியத் தகவலை மனதில் கொள்ள வேண்டும். ஏமன் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து, பிறகு இரண்டாகப் பிரிந்து மீண்டும் சேரவில்லை. ஒட்டாமன் சாம்ராஜ்யம் நீர்த்தபிறகு வடக்கு ஏமன் (ஏமன் அரபுக் குடியரசு) தனி நாடானது. தெற்கு ஏமன் அப்போது ஒரு பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. இங்கிருந்த இரு முக்கியக் கட்சிகளும் சேர்ந்து எதிர்த்ததால் பிரிட்டன் தெற்கு ஏமனுக்கு சுதந்திரம் அளித்தது.

1971-ல் ஏமன் அரபுக் குடியரசில் (அதாவது தற்போதைய வடக்கு ஏமன்) நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால் இதில் ஒரு வியப்பூட்டும் நிகழ்வு. எந்த அரசியல் கட்சியும் இதில் பங்கெடுக்கவில்லை. காரணம் அரசியல் கட்சிகளுக்கு அந்த நாட்டில் தடை!

இதன் காரணமாக அத்தனை பேரும் சுயேச்சைகளாகவே போட்டியிட்டனர். தேர்தல் முடிவு வெளியானது. வென்றவர்களில் பெரும்பாலானவர்கள் பூர்வ குடியைச் சேர்ந்தவர்கள். அதே சமயம் நிறைய படித்தவர்கள்.

ராணுவத்துக்கு இது பிடிக்கவில்லை. படித்தவர்களின் கைக்கு அதிகாரம் சென்றால் தங்களின் சக்தி குறைக்கப்பட்டுவிடும் என்ற பயம். உடனே ராணுவப் புரட்சி ஒன்றை நடத்தினார்கள். 1974-ல் புதிய பாராளு மன்றத்தை இயங்க விடாமல் சஸ்பெண்ட் செய்தார்கள். இதைத் தொடர்ந்து உள்ளூர் கலவரங்கள் பெரிய அளவில் வெடித்தன. அரசை முழுவதுமாகக் கவிழ்க்க ராணுவம் முயற்சித்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/எண்ணற்ற-எதிரிகளுடன்-ஏமன்-4/article7149942.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 5

 
 
அலி அப்துல்லா ஸலே
அலி அப்துல்லா ஸலே

அலி அப்துல்லா ஸலே 1978 தொடங்கி வடக்கு ஏமன் பகுதியை ஆட்சி செய்தார். பிறகு ஒன்றிணைந்த ஏமனுக்கும் அதிபர் ஆனார். சுமார் 35 வருடங்களுக்கு இப்படி இவர் ஆட்சி செய்திருக்கிறார். அதன் பிறகு எழுந்த எதிர்ப்பின் காரணமாக இவர் பதவி விலக வேண்டியிருந்தது.

ஆனால் இவரால் தன் பதவி விலகலை சிறிதும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. “அதெப்படி இந்த நாடு நான் இல்லாமல் இயங்க முடியும்?’’ என்று வெளிப்படையாகவே இவர் கூறியதுண்டு. இதன் காரணமாக இயல்பான முறையில் பதவி விலக இவர் இடம் கொடுக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க, பல அரசியல் பூகம்பங்களை அனுபவித்த ஏமனை ஒரு நிஜமான பூகம்பம் 1982-ல் தாக்கியது. மாபெரும் அழிவை ஏற்படுத்திய பூகம்பம் இது.

வடக்கு ஏமன் நகரமான தமர் என்பதை மையம் கொண்டு வெடித்தது இந்த பூகம்பம். சுமார் 3,000 பேர் இதில் இறந்தனர். 1,500 பேருக்குக் கடும் காயம். சனாவின் தெற்குப் புறம் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் இருந்தன. பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாயின. ஏழு லட்சம் பேர் வீடுகளை இழந்து நின்றனர். இந்த பூகம்பத்தின் பாதிப்பு தெற்கு ஏமன் மற்றும் சவுதி அரேபியாவில்கூட ஓரளவு உணரப்பட்டது.

ஏப்ரல் 1980-ல் வேறொரு பெரும் கலவரத்தைச் சந்தித்தது ஏமன். அதிபர் அப்துல் இஸ்மாயில் பதவியை ராஜிநாமா செய்தார். அதுமட்டுமின்றி தலைமறைவும் ஆனார். அடுத்து அந்தப் பதவிக்கு வந்தவர் அலி நஸீர் முகம்மது. இவர் கொஞ்சம் தாராளமயப் போக்குடன் இருந்தார். அதாவது அண்டை நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை.

என்றாலும்கூட 1986-ல் பொது வாழ்க்கைக்கு மீண்டும் வந்து சேர்ந்த அப்துல் இஸ்மாயிலுக்கும், அலி நஸீர் முகம்மதுவுக்கும் கடுமையான பகைமை ஏற்பட்டது. இருதரப்பிலும் தொண்டர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். ஒரு மாதத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். அப்துல் இஸ்மாயில் இறந்தார். அலி நஸீர் முகம்மது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவரும், இவரது பல ஆதரவாளர்களும் ஏமன் அரபுக் குடியரசுக்கு குடிபெயர்ந்தனர்.

மே 1988-ல் இரு அரசுகளும் ஓர் உடன்படிக்கைக்கு வந்தன. இரு நாடுகளையும் ஒன்றாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டனர். எல்லைகளில் உள்ள ராணுவங்களை குறைத்துக் கொள்ளவும், பெட்ரோலிய வளப்பகுதிகளை இணைந்தே கண்டுபிடிக்கவும் சம்மதித்தனர்.

சொல்லப்போனால் இந்த இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பெட்ரோலிய வளம் இருப்பது அறியப்பட்டபின்பே ஒரே நாடாகும் விருப்பம் இவற்றுக்கு அதிகமானது. இதன் மூலம் ஏற்படக்கூடிய பொருளாதார ஆதாயம் இரண்டு நாடுகளுக்குமே அப்போது மிகவும் தேவைப்பட்டது.

மே 1990-ல் இரு ஏமன்களும் ஒன்றாயின. ஏமன் குடியரசு என்று பெயரிடப்பட்ட இதன் அதிபராக (ஏற்கனவே வடக்கு ஏமனை ஆண்ட) ஸலே நியமிக்கப்பட்டார். (இவரைக் குறித்துதான் முன்பே குறிப்பிட்டோமே).

முழுமையான இணைப்புக்கு 30 மாத அவகாசம் அளிக்கப்பட்டது. 1990-ல் பொதுவான அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்படி மக்களாட்சியை ஏமன் ஏற்றுக் கொண்டது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது தெளிவானது. பல கட்சி அரசியல் அமைப்பும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

1993-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் 143 தொகுதிகளை பொது மக்கள் காங்கிரஸ் பெற்றது. இது வடக்கு ஏமனில் செல்வாக்குடன் திகழும் கட்சி. 69 தொகுதிகளை ஏமனி சோஷலிஸ்ட் கட்சி பெற்றது. நாட்டின் பெரிய இஸ்லாமியக் கட்சியான இஸ்லா 63 தொகுதிகள் பெற்றது.

நாடாளுமன்றத்தில் வடக்கு கட்சி பலம் மிக்கதாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் தெற்கு ஏமனைவிட சுமார் 4 மடங்கு மக்கள்தொகை கொண்டது வடக்கு ஏமன்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/எண்ணற்ற-எதிரிகளுடன்-ஏமன்-5/article7153638.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 6

 
 
தீவிரவாதத் தாக்குதலில் பற்றியெரியும் லிம்பர்க் எண்ணெய்க் கப்பல். (கோப்புப்படம்)
தீவிரவாதத் தாக்குதலில் பற்றியெரியும் லிம்பர்க் எண்ணெய்க் கப்பல். (கோப்புப்படம்)

ஏமன் ஒருங்கிணைக்கப்பட்ட அடுத்த மூன்று வருடங்களிலேயே பிளவுகள் தோன்றின. தெற்குப் பகுதி புறக்கணிக்கப்படுகிறது என்றார் துணை அதிபர் அலி சலீம். தவிர வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெற்கில் இருப்பவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில் தலைநகரை விட்டு வெளியேறி ஏடனை அடைந்தார்.

உடனே அதிபர் ஸலே அவசர நிலைச் சட்டத்தை பிரகடனம் செய்தார். துணை அதிபரைப் பதவியிலிருந்து நீக்கினார். 1994-ல் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் (முன்னாள்) துணை அதிபர் அலி சலீம் வடக்கு ஏமன் இனி தனி நாடு என்று அறிவித்தார். ஏடன் நகரை தங்கள் வசம் கொண்டு வந்தார். தெற்கு ஏமனிலிருந்து வடக்கில் குடிபெயர்ந்த விஐபி.க்கள் பதறியடித்துக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்றனர். தங்கியவர்களில் பலர் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிபர் அலி அப்துல்லா ஸலேவின் `தி ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸ்’ பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அமைதியாக ஆட்சியை நடத்த முடியவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடத்தப்பட்டனர்.

கடத்தியது தீவிரவாத இஸ்லாமியக் குழு. அதன் பெயர் அடேம் அபியான் இஸ்லாமிய ராணுவம். தெற்கு ஏமனை அடிப்படையாகக் கொண்ட இந்தக் குழுவின் ஒரே நோக்கம் ஆட்சியைக் கலைத்துவிட்டு ஏமனை இஸ்லாமிய தேசமாக மாற்றுவதுதான்.

இந்தக் குழு அல் காய்தாவின் ஆசிகளைப் பெற்றது என நம்பப்படுகிறது.

(இப்போது அல் காய்தாவின் நேரடித் தாக்குதல்கள் ஏமனில் நடைபெறுகின்றன என்பதும், அதே சமயம் ஏமனின் ஆட்சியாளர்கள், கிளர்ச்சியாளர்கள் ஆகிய இருதரப்பினருமே அல் காய்தாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது).

ஏமனுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல் `கோலே’ கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 12, 2000 அன்று அந்தப் போர்க் கப்பல் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதலை நிகழ்த்தினர். இதில் பதினேழு அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்போதிலிருந்தே அமெரிக்காவுக்கும் ஏமனுக்கும் உறவு சீர்குலைந்தது. காரணம் தற்கொலைத் தாக்குதல் தொடர்பான போதிய விசாரணையை ஏமன் அரசு முடுக்கிவிடவில்லை என்பதுதான். தவிர இது தொடர்பாக பிடிபட்ட தீவரவாதிகளில் சிலர் தப்பிவிட்டதை அமெரிக்காவால் ஏற்க முடியவில்லை.

என்றாலும் செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவும் ஏமனும் தீவிரவாதத்துக்கு எதிராக மீண்டும் கைகோத்தன.

2002 அக்டோபரில் ஏடன் கிழக்கு துறைமுகப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லிம்பர்க் என்ற பிரெஞ்ச் எண்ணெய்க் கப்பல் மீது ஏமன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 90,000 பேரல் எண்ணெய் வீணானது. ஒருவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ஏமன் அரசு முடுக்கிவிட்டபோது, அமெரிக்கப் போர்க்கப்பல் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தப்பி ஓடியிருந்த தீவிரவாதிகளும் பிடிபட்டனர்.

2004 ஜுன் மாதத்தில் தொடங்கியது ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதிப் பிரிவினரின் தீவிரக் கிளர்ச்சிகள். இந்தக் கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர். அந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் “கிளர்ச்சிக் குழுவின் தலைவரான உசேன் அல் ஹவுதியைக் கொன்றுவிட்டோம்” என்று அரசு அறிவித்தது. மீண்டும் கலவரங்கள் முற்றின.

2005 மே மாதத்தில் “வடக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர் குழுத் தலைவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டால் அரசு போர் நிறுத்தம் செய்யும்” என்றார் அதிபர் ஸலே. யாரும் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆங்காங்கே கலவரங்களும் உயிரிழப்புகளும் நடந்து கொண்டிருந்தன. போதாக்குறைக்கு இயற்கை ஏமனிடம் மீண்டும் தன் கோர முகத்தைக் காட்டியது. சனாவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ஒரு கிராமப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட, 60 பேர் உயிரிழந்தனர்.

பதினைந்து தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 2006 செப்டம்பரில் மீண்டும் அதிபர் தேர்தல். 77 சதவீத வாக்குகளைப் பெற்று அலி அப்துல்லா ஸலே வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டு அலி முகம்மது முஹாவர் என்பவரை பிரதமராக நியமித்தார் ஸலே.

அப்போதுதான் ஹவுதி இயக்கம் வடக்கு ஏமனில் ஆக்ரோஷமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. 2004லிருந்தே அரசுக்கும், ஹவுதி இயக்கத்தினருக்குமான தொடர் மோதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருந்தனர்.

ஒருவழியாக பிப்ரவரி 2008-ல் அரசுக்கும், ஹவுதி இயக்கத்துக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் இது ஒரு வருடத்துக்குக்கூட செல்லுபடியாகவில்லை. மீண்டும் போர் மூண்டது. வடக்கு ஏமனின் கணிசமான பகுதிகளை - முக்கியமாக எல்லைப் பகுதியில் இருந்த ஸாதாவை தமது பிடிக்குள் கொண்டு வந்தனர் ஹவுதிக்கள்.

ஆகஸ்ட் 2009-ல் ராணுவம் அதிரடியாக நடவடிக்கைகளில் இறங்க, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஓரளவு பின்வாங்கினர்.

இத்தனை களேபரத்தில் 50,000 பொது மக்கள் பயத்தின் காரணமாக தங்கள் குடியிருப்புகளை பல்வேறு இடங்களுக்கு மாற்றிக் கொண்ட சோகமும் நடைபெற்றது. பல அப்பாவிப் பொது மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

“ஈரானிலிருந்து உங்களுக்கு நிதிஉதவி கிடைக்கிறது” என்று அரசு ஹவுதி இயக்கத்தினரை நோக்கி குற்றச்சாட்டை முன்வைக்க, “சவுதி அரேபியாவிடமிருந்து எங்களை எதிர்ப்பதற்காக நீங்கள் பெறும் உதவிகள் எங்களுக்குத் தெரியாதா?’’ என்று சீறினர் ஹவுதி இயக்கத்தினர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/எண்ணற்ற-எதிரிகளுடன்-ஏமன்-6/article7157480.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 7

 
ஏமன் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு
ஏமன் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு

செப்டம்பர் 2008-ல் நடந்தது அடுத்த விபரீதம். தலைநகர் சனாவில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தின்மீது ராக்கெட் ஏவுகணை ஒன்று விடப்பட்டது. அதே சமயம் அங்கிருந்த கார் ஒன்றும் வெடித்தது. அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் 16 பேரும், 4 உள்ளூர்வாசிகளும் இதில் இறந்தனர். இது தொடர்பாக அல் காய்தா தீவிரவாதிகள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூன் 2007- ல் கிளர்ச்சிக் குழுத்தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுதி அமைதிப் பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்டார்.

சனாவில் பல புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. யாரும் ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது. எந்தவித ஊர்வலத்துக்கும் அனுமதி இல்லை.

எனினும் அரசியல் கலவரமும், இயற்கைப் பேரிடரும் ஏமனின் பரம்பரைச் சொத்துக்களோ? 2007 அக்டோபரில் ஏமன் தனது ராணுவ கேந்திரமாக இயக்கிக் கொண்டிருந்த செங்கடல் தீவில் எரிமலை ஒன்று வெடித்தது.

அரசு வேலைவாய்ப்புகளில் வடக்கு ஏமன் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறி, 2008-ல் தெற்கு ஏமனைச் சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பலவிதமாகத் தெரிவித்தனர். காவல் துறையினர், தூதரக அலுவலகங்கள், வெளியுறவுத் துறை ஆகியவை குறிவைத்துத் தாக்கப்பட்டன. அமெரிக்கத் தூதரகம் ஏமனில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. மிகக் குறைவான நபர்களையே அதில் இயங்க வைத்தது. என்றபோதிலும் அப்போது அதன்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

2009 பிப்ரவரியில் ‘’இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்’’ என்ற நிபந்தனையுடன் அல் காய்தா தீவிரவாதிகள் என சந்தேகப்பட்டு பிடித்து வைத்திருந்த 176 பேரை விடுவித்தது அரசு.

இன்று வரை ஏமன் பலவித சக்திகளால் துண்டாடப்படும் ஒரு நாடாகவே இருந்து வருகிறது.

உள்ளூர் கலவரம் போதாதென்று அல் காய்தா, ஐ.எஸ். இயக்கத்தினரையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏமன் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

2007-ல் அல் காய்தா மனித வெடிகுண்டுகளால் 8 ஸ்பானிஷ் சுற்றுலாப் பயணிகளும், 2 உள்ளூர் ஓட்டுனர்களும் இறந்தனர். 2008-ல் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே இருந்த கார்கள் மீது வீசிய வெடிகுண்டுகளால் 16 பேர் இறந்தனர்.

2009-ல் சவுதி, ஏமன் ஆகிய இரண்டு நாடுகளின் அல் காய்தா கிளைகளும் இணைந்து அரேபிய தீபகற்பத்தின் அல் காய்தா என்று பெயர் வைத்துக் கொண்டன. டிசம்பர் 2009-ல் ஆம்ஸ்டர்டாமிலிருந்து டெட்ராய்ட் சென்று கொண்டிருந்த ஒரு விமானத்தில் நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவன் தனது உள்ளாடைக்குள்ளிருந்து ஒரு வெடிகுண்டை எடுத்தான்.

பிடிபட்டு விசாரணை நடந்தபோது, தான் நேரடியாகவே அல் காய்தா இயக்கத்தில் பயிற்சி பெற்றதாக அவன் குறிப்பிட்டான். இதற்கும் ஏமனுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? மேற்படி விமானத் தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்த முயற்சித்தது ஏமனிலுள்ள அல் காய்தா பிரிவுதான்.

பிப்ரவரி 2012-ல் அதிபர் இல்லத்துக்கு வெளியில் நிகழ்ந்த அல் காய்தா மனித வெடிகுண்டுகள் வெடிப்பில் 26 பாதுகாவலர்கள் இறந்தனர். அதே ஆண்டு மே மாதத்தில் 96 ராணுவ வீரர்கள், அல் காய்தா தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டனர். 2009 ஜுனில் 9 வெளிநாட்டினரை கடத்திச் சென்றது இந்த அமைப்பு. அதில் மூவரின் உடல்கள் மட்டும் வந்து சேர்ந்தன. 2010-ல் அல் காய்தா தீவிரவாதிகளுடன் பேச்சு

வார்த்தை நடத்தத் தயார் என்று மீண்டும் அறிவித்தார் அதிபர் சலே.

ஏமன் அரசும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் மீண்டும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிப்ரவரி 2010-ல் கையெழுத்திட்டனர். அதிபர் சலேவும், ஹவுதி தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுதியும் இந்த உடன்படிக்கையைச் செயல்படுத்துவதாக ஒப்புக் கொண்டனர். அரசின் தரப்பில் இந்த ஒப்பந்தத்தில் இடப்பட்ட நிபந்தனைகள் இவைதான். கிளர்ச்சியாளர்களால் தடுக்கப்பட்டிருந்த சாலைகள் திறந்துவிடப்பட வேண்டும்.

காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசின் ஆட்கள் விடுவிக்கப்பட வேண்டும். சவுதி அரேபியாவின்மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தக் கூடாது.மேம்போக்காகப் பார்த்தால் இந்தக் கடைசி நிபந்தனை கொஞ்சம் பொருந்தாததுபோலத்தான் தோன்றும். அதே சமயம் அரசின் நடவடிக்கைகளில் சவுதி அரேபியாவுக்கு எந்த அளவுக்கு தாக்கம் இருந்தது என்பதும் இதனால் புரியவரும். இந்த இருதரப்பின் போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான சவுதி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்ததும் உண்மை.

இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் ஏமன் அரசினால் அல் காய்தாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.ஆனால் இப்போது அது சிரமமான ஒன்றாகிவிட்டது. பல எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிக்க ஏமன் திணறி வருகிறது.

2015 மார்ச்சில் ஐ.எஸ்.அமைப்பும் தனது பெரும் தாக்குதல்களை ஏமனில் தொடங்கியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஷியா மசூதிகளைத் தாக்குவது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/எண்ணற்ற-எதிரிகளுடன்-ஏமன்-7/article7194672.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 8

 
 
 
ஏமன் தலைநகர் சனாவில் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுவதை அடுத்து குழந்தைகளுடன் தப்பி ஓடும் பெண்கள். படம் - ராய்ட்டர்ஸ்
ஏமன் தலைநகர் சனாவில் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுவதை அடுத்து குழந்தைகளுடன் தப்பி ஓடும் பெண்கள். படம் - ராய்ட்டர்ஸ்

சவுதி அரேபியா ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட மதம் மட்டுமே காரணமில்லை.

ஏமன் ஓர் ஏழை நாடு. என்றாலும் அது இருக்கும் இடம் காரணமாக ஒரு தனி முக்கியத்துவத்தை அது பெற்றிருக்கிறது. செங்கடலையும், ஏடன் வளைகுடாவையும் இணைக்கிறது பாப் அல்-மன்டப் ஜலசந்தி. இந்தப் பகுதியில்தான் ஏமன் இருக்கிறது.

உலகின் பல பெட்ரோலியக் கப்பல்களும் இந்த ஜலசந்தியின் வழியாகத்தான் செல்கின்றன. ஹவுதிக்கள் ஏமனைக் கைப்பற்றி விட்டால் இந்த ஜலசந்தி வழியாக நடைபெறும் தங்களது பெட்ரோலிய போக்குவரத்து தடைபடும் என்கிற அச்சம் எகிப்துக்கும், சவுதி அரேபியாவுக்கும் இருக்கிறது.

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற பலவித சக்திகள் போராடுகின்றன. நாட்டின் வடக்குப் பகுதியில் ஆட்சியாளர்களுக்கும், ஹவுதிக்களுக்குமிடையே ஆறு சுற்று சண்டை நடந்து முடிந்து விட்டது. தெற்கு தேசத்தில் ஆங்காங்கே தனிநாடு கோரி கலவரங்கள் நடந்து வருகின்றன.

அல் காய்தாவின் தாக்குதல்கள் வேறு இங்கு அதிகமாகி வருகின்றன. பூர்வ குடியினருக்கும், ராணுவ வீரர்களுக்கும் நடுவே நடைபெறும் அதிகார போராட்டங்கள் வேறு நிலைமையை உக்கிரமாக்குகிறது.

மேற்கத்திய நாடுகள் அல் காய்தாவின் மிக அபாயகரமான கிளையாக அரேபிய தீபகற்பத்துக்கான அல்-காய்தா பிரிவைக் கருதுகின்றன. காரணம் அதற்கு உள்ள தொழில்நுட்பத் திறமை மற்றும் ஊடுருவும் தன்மை. அதிபர் ஹதியின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா ஏமனில் உள்ள இந்தக் கிளையை அடக்க முயற்சி செய்து வந்தது. ஆனால் ஹவுதிக்கள் ஏமனில் முன்னேறிவரும் சூழலில் அமெரிக்கத் தாக்குதல்கள் கொஞ்சம் நின்றிருக்கின்றன.

போதாக்குறைக்கு சென்ற வருடக் கடைசியில் அங்கு புகுந்துள்ள ஐ.எஸ். ஜிஹாதிக் குழு “ அல்-காய்தாவை விட நாங்கள் வலிமையானவர்கள்’’ என்று அறிவித்தபடி சமீபகாலமாக தங்கள் மனித வெடிகுண்டுகளை ஏமனில் நடமாட விட்டிருக்கிறார்கள்.

ஹவுதி பிரிவினரில் பலரும் நாட்டைவிட்டு கடல் மார்க்கமாக வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். 1990-ல்தான் ஏமன் குடியரசாக உருமாற்றம் அடைந்தது. என்றாலும் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தாங்கள் அரசால் ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வருகிறது.

போதாக்குறைக்கு மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையான நாடான ஏமனில் ஊழல், பலவீனமான ஆட்சி, தரமற்ற கட்டமைப்புகள் போன்றவையும் எரிகிற தீயில் எண்ணெய் விடுவதாக உள்ளன.

செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய நோக்கம் பாகுபாடின்றி போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது. உலகப்போர்களின் போது கூட போரிடும் எதிரணியினர் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு உரிய மதிப்பை அளித்ததுண்டு.

ஆனால் ஏமனில் நடைபெறும் யுத்தத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தால் தனது பங்களிப்பை சரியாக ஆற்ற முடியவில்லை. மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களோடு இவர்களது விமானம் அங்கு தரை இறங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் மிக கடினமாகவே இருந்தது.

காரணம் ஏமன் நாட்டின் துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது சவுதி அரேபியாவைத் தலைமையாகக் கொண்ட ராணுவக் கூட்டமைப்பு. தொடர்ந்து 12 நாட்களுக்கு ஹவுதிக்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தியது இந்தக் கூட்டமைப்பு. ஏடனின் கடல்பகுதியில் வெளிநாட்டுப் போர்க் கப்பல் ஒன்று முகாமிட்டுள்ளதாக அங்கு வசிப்பவர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

நகரத்தில் தொடர்ந்து மின் வெட்டு என்பதால் மக்களின் வாழ்க்கை மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கையில் குழந்தைகளோடு தண்ணீரைத் தேடி தாய்மார்கள் சாலைகளில் நடக்கும் காட்சி மனிதாபிமானிகளுக்கு கண்ணீரை வரவழைக்கக் கூடிய ஒன்று.

போதாக்குறைக்கு பெட்ரோலிய வளமும், தண்ணீர் இருப்பும் குறைந்து கொண்டே வருகின்றன.

ஏமனின் செஞ்சிலுவைச் சங்கம் சுமார் 300 ஊழியர்களைக் கொண்டதாக இருக்கிறது. “போருக்கு நடுவே 24 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யுங்கள். அந்த நேரத்தில் உயிருக்கு ஊசலாடும் வீரர்களுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கிறோம்’’ என்று செஞ்சிலுவைச் சங்கம் மன்றாடியது. பலன் இல்லை.

சன்னி இனத்தவரை அதிகமாகக் கொண்ட சவுதி அரேபியா ஏமனின் தலைநகரைக் கைப்பற்றிய ஹவுதிக்களை விரட்ட பெருமுயற்சி எடுத்து வருகிறது. இதில் சவுதி அரேபியா வெளிப்படையாகத் தெரிகிறது என்றாலும் அது உண்மையில் ஐந்து நாடுகளில் கூட்டணி. பிற நான்கு வளைகுடா அரபு நாடுகள் - ஜோர்டான், மொராக்கோ, சூடான், எகிப்து.

ஹவுதிக்களின் ஆச்சர்யமான வெற்றிக்குப் பின்னணி எது? ஈரான் ஒரு பக்கம் இருக்க, அதைவிட முக்கியமான காரணம் மிக வியப்பான ஒன்று. ஐந்தாறு வருடங்களுக்குமுன் ஹவுதிக்களை அழிப்பதற்கு யார் நினைத்தாரோ அவருடனேயே டீல் போட்டிருக்கிறார்கள் ஹவுதிக்கள். மிக அதிக காலம் ஏமனை ஆட்சி செய்த அலி அப்துல்லா சலே இப்போது ஹவுதிக்களுக்கு உதவி வருகிறார். தன்னை ஆட்சியிலிருந்து நீக்கியதால் ஏற்பட்ட கோபம்.

அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அதிபர் ஹதி அவ்வளவு திறமையானவர் அல்ல. இன்றைய குழப்பத்துக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.

‘’எங்களுக்கு எந்த வெளிநாட்டு உதவி யும் வந்து சேரவில்லை என்று ஹவுதிக் கள் குரல் கொடுத்தாலும் அதில் உண்மை இல்லை என்பது பலருக்கும் தெரிந்திருக் கிறது. டெஹரானிலிருந்து (ஈரானின் தலை நகர்) அவர்களுக்கு பலவித உதவிகள் வந்து சேர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஏமனுக்கு ரோமானியர்கள் சூட்டிய பெயர் “அரேபியா ஃபெலிக்ஸ்’’. அழகான இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதி என்பதால் இந்தப் பெயராம்.

அதுசரி, “அரேபியா ஃபெலிக்ஸ்’’ என்றால் என்ன அர்த்தம்? “மகிழ்ச்சியான அரேபியா’’. என்னவோ போங்க!

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/எண்ணற்ற-எதிரிகளுடன்-ஏமன்-8/article7204778.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

எண்ணற்ற எதிரிகளுக்கிடையே ஏமன் - 9

 
 
 
ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்திய நர்ஸ்கள் (கோப்புப் படம்)
ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்திய நர்ஸ்கள் (கோப்புப் படம்)

அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்துகின்றன. இவர்களின் குறி ஹவுதி கிளர்ச்சிப் படை.

இது போதாதென்று வேறொரு வித்தியாசமான தாக்குதலும் நடந்தது. ஏமனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது ஹட்ரன்வாட் எனும் இடம். அங்குள்ள சிறையில் சுமார் 300 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தச் சிறை மீது கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அல் காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 300 கைதிகளும் விடுவிக்கப்பட்டார்கள். இவர்களில் அல் காய்தாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான காலித் என்பவரும் உண்டு.

சனா கையைவிட்டுப் போனாலும் ஏடன் துறைமுக நகரம் அதிபர் மன்சூர் ஹாதியின் கோட்டையாக விளங்குகிறது. எனவே இந்த நகரத்தையும் கைப்பற்ற வேண்டுமென்று ஹவுதி பிரிவினர் (அதாவது ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள்) தீவிரமாக இருக்கிறார்கள்.

ஏமன் ராணுவம் இவர்களை சமாளித்து வருகிறது. ஆனால் பல நிதர்சனங்கள் அவர்களை பயமுறுத்துகின்றன. முக்கியமாக ஏடன் மருத்துவமனையில் உள்ள மருந்துகள் காலியாகி வருகின்றன.

செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியைப் பெறலாம் என்றால் அதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள். எனவே காயம் அடைந்து வரும் ராணுவ வீரர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சைகூட கொடுக்க முடியாத நிலை.

ஏமன் அதிபரின் தற்போதைய முக்கிய ஆறுதல் சவுதியின் ஆதரவு. அதுவும் சவுதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல் ஹவுதிக்களுக்கு பின்னடைவை உண்டாக்கி வருகிறது.

ஏமன் நகரில் பல இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் சுமார் 1300 இந்தியர்கள் மீட்கப்பட்டு விட்டனர். ஒருவரியில் இப்படிச் சொல்லிவிட்டாலும் இந்த மீட்புப் படலம் என்பது எளிதானதாக இல்லை.

ஏமனிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு விமானங்களை செலுத்த முடியவில்லை. காரணம் அங்குள்ள பதற்ற நிலை. சவுதி அரேபியா வேறு வான்வழித் தாக்குதலை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்ததால் கடல்வழியாகத்தான் இந்தியர்களை மீட்டுவர முடியும் எனும் சூழல்.

இந்தியர்களை மீட்க ‘ஐஎன்எஸ் மும்பை’ என்ற கப்பல் அனுப்பப்பட்டது. என்றாலும் அதனால் ஏமனின் முக்கியத் துறைமுகத்தை நெருங்க முடியவில்லை. எனவே 56 கடல் மைல் தொலைவிலேயே கப்பல் நிறுத்தப்பட்டது. பல படகுகள் அங்கிருந்து செலுத்தப்பட்டன.

அந்தப் படகுகளில் இந்தியர்கள் கப்பலுக்கு வந்து சேர, அந்தக் கப்பல் இந்தியாவை அடைந்தது. கூடவே இந்திய அரசு ஒர் எச்சரிக்கையையும் விடுத்தது. ‘இந்தியக் கப்பலை நோக்கி எதாவது ஏவுகணை செலுத்தப்பட்டால் அதை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்படை செயல்படும்’ என்றது.

ஐஎன்எஸ் சுமத்ரா என்ற போர்க் கப்பலிலும் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஏடனிலிருந்து 349 இந்தியர்கள் அருகில் உள்ள ஜிபோதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். (ஜிபோதி என்பது ஆப்பிரிக்காவின் ஒரு முனையில் ஏமனுக்கு அருகே அமைந்த சிறிய குடியரசு). அந்த நாட்டின் அனுமதியைப் பெற்று மேற்படி இந்தியர்களை இந்தியக் கப்பல் மும்பைக்கு அழைத்து வந்தது.

இந்தியர்களின் பல்வேறு உடைமைகளும் வேறு வந்து சேர வேண்டுமே. எனவே இந்தியக் கடற்படையின் சரக்குக் கப்பல்கள் சில துறைமுக நகரங்களில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவுக்கு வந்தவர்கள் ஏமன் நிலவரத்தைப் பற்றி மிகவும் பீதியுடன் பேசுகின்றனர். ‘‘தொடக்கத்தில் குண்டு வெடிப்புகளும், வான்வழித் தாக்குதல்களும் இரவுகளில் மட்டுமே நடைபெற்றன. ஆனால் சமீபத்தில் இவை பகல் பொழுதுகளிலும் நடக்கின்றன. குடியிருப்புப் பகுதிகளில் மிக அருகில்கூட இந்த விபரீதத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன’’ என்கிறார்கள்.

ஆண்களில் பொறியியல் வேலைக்காகப் பலரும் சென்றார்கள் என்றால் பெண்களில் செவிலியர் வேலைக்காகப் பலரும் சென்றிருக்கிறார்கள். ஏமன் நாட்டில் அல் தவாரா நவீன பொது மருத்துவமனை என்று ஒன்று இருக்கிறது. 900 படுக்கை வசதி கொண்ட இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தலைநகர் சனாவில் இருக்கிறது. இந்த மருத்துவமனையில் 500-க்கும் அதிகமான இந்தியச் செவிலியர் (முக்கியமாக கேரளப் பெண்கள்) பணிபுரிந்து வந்தனர்.

இதில் இன்னொரு வியப்பு என்னவென்றால் இவ்வளவு கலவரமான சூழலிலும் கணிசமான இந்திய (கேரள) செவிலியர்கள் தாங்கள் தொடர்ந்து ஏமனிலேயே இருப்பதாகச் சொல்லித் தங்கிவிட்டதுதான். காரணம் அங்கு அளிக்கப்படும் அதிக ஊதியம். தவிர இந்த வேலைக்காக இடைத் தரகர்களுக்கு அதிகத் தொகையை இவர்கள் அளித்திருக்கிறார்கள். அதைத் திருப்பித் தரவும், குடும்பச் சுமைகளை சமாளிக்கவும் இவர்களுக்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது.

சிலசமயம் உயிரைவிட பணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

http://tamil.thehindu.com/world/எண்ணற்ற-எதிரிகளுக்கிடையே-ஏமன்-9/article7213485.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.