Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு? - கலாநிதி சர்வேந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு? - கலாநிதி சர்வேந்திரா

<p>தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு?</p>
 

 

இவ் வாரக் கட்டுரை டயாஸ்பொறா என்ற எண்ணக்கரு தொடர்பாக சில கோட்பாட்டு நிலைக் கருத்துக்களை முன்வைத்து தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு என்ற கேள்வியை எழுப்புகிறது. நாளாந்த பாவனையில் அனைத்துவகையான புலம்பெயர் மக்களையும் டயாஸ்பொறா என அழைத்தாலும் கோட்பாட்டு நிலையில் டயாஸ்பொறா என விழிக்கப்படுவோர் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். டயாஸ்பொறா தொடர்பாக குறிப்பிடப்படும் அம்சங்களில் முழுமையாக எல்லாம் பொருந்தாவிடினும் குறிப்பிட்ட முக்கியமான அம்சங்கள் பொருந்திவரின் அவ் வகையான புலம்பெயர் மக்களை டயாஸ்பொறா என அழைக்கலாம் என வாதிடப்படுகிறது. இதனை எல்லா ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்ளாவிடினும் டயாயாஸ்பொறாவுக்கு எத்தகைய வரைவிலக்கணம் கொடுப்பது என்பது ஆய்வாளர்கள் மத்தியில் கவனம் பெறும் ஒன்றாகவே உள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்களும் டயாஸ்பொறாவுக்கு வழங்கப்படும் விளக்கங்களுக்குள் உள்ளடங்கக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் முதலாம் தலைமுறையைக் கடந்து இரண்டாம் மூன்றாம் தலைமுறையென வளர்ந்து வரும் புலம்பெயர் தமிழர் சமூகம் டயாஸ்பொறாவுக்குரிய அம்சங்களாக அறிஞர்கள் குறிப்படும் விடயங்களுக்கு காலப்போக்கில் பொருந்தி வருபவர்களாக இருப்பார்களா? எதிர்காலப் புலம்பெயர் தமிழர் சமூகத்தை டயாஸ்பொறா எனக் கோட்பாட்டு நிலையில் இருந்து பார்க்க்கூடியதாக இருக்குமா? இக் கேள்விகள்தான் தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுள் எவ்வளவு என்ற கேள்வி எழும்புவதற்கு காரணங்களாக இருக்கின்றன. இது குறித்து பார்ப்பதற்கு டயாஸ்பொறா குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட சில அறிஞர்கள் முன்வைக்கும் சில கருத்துக்களை நோக்குவோம்.

தமது தாயகத்தில் இருந்து வெளியேறி புலத்தில் வாழ்வோர் தொடர்பான ஆய்வுகள் 90களின் ஆரம்பத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கின. டயாஸ்பொறா தொடர்பான கோட்பாட்டு ரீதியிலான வாதங்களும் அதிகரிக்கத் தொடங்கின.

இவற்றின் ஒரு குறியீடாக 1991 ஆம் ஆண்டு Diaspora: A Journal of Transnational Studies என்ற ஓர் ஆய்விதழ் வெளியாகத் தொடங்கியது.

இதன் முதலாவது இதழில் William Safran எனும் அரசியற்துறைப் பேராசிரியர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

இக் கட்டுரையில் டயாஸ்பெறா எனும் எண்ணக்கருவை வரையறை செய்த அவர் புலத்தில் வாழ்வோர் டயாஸ்பொறாவாகக் கருதப்படுவததற்கு ஆறு அம்சங்களை அடையாளப்படுத்தினார்.

அவை பின்வருமாறு:

1. ஒரு மையத்திலிருந்து இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களுக்கு சிதறிப் பரவியிருப்பது

<p>தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு?</p>

2. தமது தாயகத்தின் நினைவுகள், பார்வைகள், நம்பிக்கைகளைப் பேணிக் கொள்வது.

3. தாம் வாழும் நாட்டின், வாழும் சமூகத்தின் அங்கமாகவோ அல்லது அவ்வாறு அங்கமாக வரமுடியும் என்ற நம்பிக்கையினையோ கொண்டிருக்காமை.

4. உரிய நேரத்தில் தமது தாயகத்துக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கான விருப்பத்தினைக் கொண்டிருத்தல்.

5. தமது தாயகத்தின் பராமரிப்பிலும் மீட்சியிலும், பாதுகாப்பிலும், முன்னேற்றத்திலும் பற்றுறுதி கொண்டிருத்தல்.

6. தமது தாயகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளை உணர்வுடன் பேணிக் கொள்ளல்.

குறிப்பிட்ட இந்த எல்லா அம்சங்களையும் கொண்டிருத்தல் ஓர் இலட்சிய வகை (ideal type)  என்று கூறமுடியும் என்று குறிப்பிடும் William Safran தற்போதய காலத்து டயாஸ்பொறாக்களில் இவை எல்லாவற்றையும் ஒருங்குசேரக் காண்பது கடினம் எனவும் குறிப்பிடுகிறார்.

Safran முன்வைத்த டயாஸ்பொறா தொடர்பான இந்தக் குணாம்சங்கள் கோட்பாட்டு ரீதியிலான விவாதங்களை அறிஞர்களிடையே உருவாக்குகிறது. இவ் விவாதத்தில் முக்கியமாக ஈடுபட்டவர்களில் ஒருவர் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச குடிப்பெயர்வு நிறுவனத்தின் (Insitute for International Migration இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற விட்டார்) பேராசிரியர் Robin Cohen. இவர் டயாஸ்பொறா தொடர்பாக Global Diaspora:  An introduction எனும் நூலினை 1997 ஆம் ஆண்டில் முதலில் வெளியிட்டார். இந் நூல் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகவும் வெளியாகியது.

இந் நூலில் டாயாஸ்பொறா தொடர்பாக ஆய்வு செய்யும் Robin Cohen, டயாஸ்பொறாவினை அடையாளப்படுத்துவதற்கு ஏதுவான 9 அம்சங்களை வகைப்படுத்துகிறார். இந்த 9 அம்சங்களும் William Safran குறிப்பிட்ட 6 அம்சங்களிலும் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்டவைதான். Safran குறிப்பிட் 6 அம்சங்களையும் ஆய்வு செய்த Robin Cohen, அவற்றில் மூன்றினை ஏற்றுக் கொண்டும், இரண்டில் மாற்றங்களைக் கொண்டு வந்தும் நான்கினைப் புதிதாக அறிமுகப்படுத்தியும் 9 அம்சங்களை முன்வைத்தார். கட்டுரையின் விரிவஞ்சி இவை இங்கு குறிப்பிடப்படவில்லை.

2005 ஆம் ஆண்டில் Rodgers Brubaker எனும் அறிஞர் டயாஸ்பொறாக்கள் தொடர்பாக, இவ் எண்ணக்கரு நடைமுறையில் பயன்படுத்தப்படும் விதம் குறித்த விமர்சனத்தை தலைப்பிலேயே வெளிப்படுத்தும் முகமாக “The ‘diaspora’  diaspora”  என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதினார். டயாஸ்பொறாக்கள் சிதறிப்பரவி வாழ்வதைப்போல டயாஸ்பொறா என்ற எண்ணக்கருவும் இதனைது பாவனையும் எவ்வளவுதூரம் சிதறிப் பரவியிருக்கிறது என்பது தொடர்பான அவரது கவலையும் விமர்சனமும் இத் தலைப்பின் ஊடாகத் துல்லியமாக வெளிப்பட்டது. டயாஸ்பொறா என புலம்பெயர்ந்த சமூகத்தினர் அனைவரையும் அழைப்பது அர்த்தமற்றது எனும் கருத்தை ஏற்றுக் கொள்ளும் Brubaker, டயாஸ்பொறா தொடர்பான வாதங்களில் அறிஞர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களில் மூன்று அம்சங்கள் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது எனச் சுட்டிக் காட்டுகிறார். சிதறிப் பரவுதல் (Dispersion), தாய்நாட்டுடனான தொடர்பு (Homeland Orientation), வரம்பெல்லை பேணுதல் (Boundry maintenece) போன்ற இம் மூன்றும் டயாஸ்பொறாக்களுக்குரிய பிரதான அம்சங்களாக ஏனைய அறிஞர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி Brubaker குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் சேரன் டயாஸ்பொறாவினையும் புலத்தில் வாழும் நாடு கடந்த சமூகங்களையும்  (Transnational communities) வேறுபடுத்தித் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். டயாஸ்பொறாக்களைப் பொறுத்தவரை இச் சமூகங்களின் புலப்பெயர்வுச் சூழல் (Conditions of leaving) கவனத்தல் கொள்ளப்பட வேண்டும் எனக் கருத்து வெளியிடும் சேரன் புலம்பெயர் நாடு கடந்த சமூகங்களைப் பொறுத்தவரை புலத்தில் இவர்களது வாழ்க்கைச் சூழ்நிலை (Conditions of living) முக்கியமான கவனத்தைப் பிடிக்கிறது என வாதிடுகிறார்.

புலத்தில் வாழும் ஒரு சமூகம் அலைந்துழல் சமூகமாகக் கருதப்படவேண்டுமானால் இச் சமூகம் கொடிய அனுபவத்தின் ஊடாகப் புலப்பெயர்க்கப்பட்டிருப்பது கட்டாயமான ஒரு அளவுகோலாக இருக்க வேண்டும் என்பது சேரனின் ஒரு நிலைப்பாடு. எல்லா டயாஸ்பொறாக்களும் நாடு கடந்த சமூகங்களே, ஆனால் எல்லா நாடு கடந்த சமூகங்களும் டயாஸ்பொறாக்கள் அல்ல என சேரன் வாதிடுகிறார். இலங்கைத்தீவிலிருந்து வெளியேறி புலத்தில் வாழும் ஈழத் தமிழர் சமூகத்தை டயாஸ்பொறா என அடையாளப்படுத்தும் சேரன் புலத்தில் வாழும் சிங்கள சமூகம் நாடு கடந்த சமூகமேயன்றி (Transnational community) டயாஸ்பொறா அல்ல என வாதிடுகிறார்.

Diaspora: A Journal of Transnational studies என்ற ஆய்வுச் சஞ்சிகையின் ஆசிரியர் Khachig Tölölyan டயாஸ்பொறா தொடர்பாக குறிப்பிடும் சில கருத்துக்களையும் இங்கு கவனத்தற்கெடுத்துக் கொள்ளல் கூடுதல் பொருத்துமாக இருக்கும்.

ஏனைய பல அறிஞர்கள் போல் இவரும் டயாஸ்பொறா என்ற பதத்தினை புலம்பெயர்ந்து வாழும் அனைவருக்கும் பயன்படுத்தல் பிரச்சினையானது என்றே கருதுகிறார். ஆனால் நடைமுறையில் டயாஸ்பொறா பயன்படுத்தப்படும் விதம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளிப்படுத்தும் இவர் டயாஸ்பொறா தொடர்பாக இவ் எண்ணக்கரு கருத்துரீதியாகச் செழுமைப்படுத்தப்பட வேண்டும் என்றே கருதுகிறார்.

டயாஸ்பொறா தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்களை Khachig Tölölyan முன்வைக்கிறார்.

1. டயாஸ்பொறாக்களின் உருவாக்கம் இவர்கள் புலம் பெயர்க்கப்பட்டபோது அவர்களுக்கு கிடைத்த கொடிய அனுபவங்களுடனும், அவை அவர்கள் மீது ஏற்படுத்திய கடும் தாக்கங்களுடனும் - அவை தொடர்பாக இச் சமூகங்கள் பேணிக் கொள்ளும் கூட்டு நினைவுகளுடனும் தொடர்புபட்டது. இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக புலம்பெயர்ந்து சிதறிப் பரவியவர்களையும் டயாஸ்பொறாக்களையும் வேறுபடுத்திப் பார்த்தல் அவசியமானது.

2. டயாஸ்பெறாக்கள் தம்மை இனக்குழுக்களாக ஒழுங்கமைத்துக் கொண்டாலும் புலத்தில் வாழும் எல்லாவகையான இனக்குழுக்களையும் டாஸ்பொறாவாகக் கொள்ள முடியாது. இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் எல்லா டயாஸ்பொறக்களும் இனக்குழுக்களாக இருந்தாலும் எல்லா இனக்குழுக்களும் டயாஸ்பொறாக்கள் அல்ல. ஒரு இனக்குழு டயாஸ்பொறாவாக் கொள்ளப்படுவதற்கு அது தமது தாய்நாட்டுடனும் தாய்நாட்டு மக்களுடனும் நெருங்கிய உறவுளையும் தொடர்புகளையும் பேணிக் கொண்டிருக்க வேண்டும்.

3. டயாஸ்பொறாக்கள் தமது தாய்நாட்டுடன் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும் அதேவேளை தாயகம் நோக்கி மீளத் திரும்பும் (return) எண்ணத்தினையோ அல்லது இன்னும் கூடுதலாக நடைமுறையில் பின்பற்றப்படும் தாய்நாடு நோக்கி 'திரும்பி-மீள்தல்' (re-turn) நடைமுறையை பின்பற்றிக் கொள்கின்றனர்

மேற்குறிப்பிட்ட அறிஞர்கள் முன்வைத்த வாதங்களை கவனத்துக்கெடுத்து புலம்பெயர் தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை நோக்கினால் இன்னும் எவ்வளவு காலம் ஈழத் தாயகத்தை தாய்நாடாகவும் அந்தத் தாய் நாட்டுடனும் தாய்நாட்டு மக்களுடனும் நெருங்கிய தொடர்பைப் பேணி அடிக்கடித் தாயகம் சென்று திரும்பும் விருப்பமுடையவர்களாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் இருப்பார்கள்? தற்போதைய முதலாம் தலைமுறை காலம் ஆகிப் போக அடுத்து வரும் தலைமுறைகள் ஈழத் தாயகத்துடன் வலுவான தொடர்புகளைப் பேணுவார்களா? தம்மை ஈழத் தமிழர் தேசத்தின் அங்கமாக உணர்ந்து உறவாடுவார்களா? ஈழத் தமிழர் தலைமுறையொன்று தாம் தமிழ்ப் பின்னணி உடையவர்கள் என்று அறிந்தவர்களாக புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் தமது வேருடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருப்பார்களா? இவ்வாறு இல்லாதுவிடின் டயாஸ்பொறா குறித்த கோட்பாட்டுப் பின்னணியில் இவர்களை டயாஸ்பொறா என அழைக்கலாமா? தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு?

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=b38b644f-8c82-44a9-9170-16cb638fd0b5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.