Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோறா? சுதந்திரமா? - கலாநிதி சர்வேந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோறா? சுதந்திரமா? - கலாநிதி சர்வேந்திரா

சோறா? சுதந்திரமா?
 

 

அண்மையில் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் (ரொபின்) நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் பொதுமக்கள் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இச் சந்திப்பு ஏனைய அரசியல் சந்திப்புக்களை விட வேறுபட்டதாக இருந்தது. இச் சந்திப்பில் ரொபின் அரசியல் விடயங்கள் பற்றிப் பேசவில்லை. மக்கள் மற்றும் பிரதேசங்களின் மேம்பாடு சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய கல்வி வளர்ச்சித் திட்டங்கள், தொழிற்துறை வளர்ச்சித் திட்டங்கள் பற்றியே கூடுதலாகப் பேசினார். சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கினார். மேம்பாடு பற்றியே கூடுதலாகப் பேசப்பட்டதனால் அரசியல் முரண்பாடுகளைக் கடந்த ஒர் ஒருமைப்பாட்டை இச் சந்திப்பில் காண முடிந்தது. இது சந்திப்பில் கலந்து கொண்ட பலருக்கும் உற்சாகத்தைத் தந்தமையினை அவதானிக்க முடிந்தது. மேம்பாட்டுக்கும் அரசியலுக்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்த கவனமும் இக் கலந்துரையாடலில் வெளிப்பட்டது.

இன்றை பத்தி மேம்பாட்டின் (அபிவிருத்தியின்) அரசியல் குறித்து சில விடயங்களைக் கவனத்திற் கொள்கிறது. சோறா? சுதந்திரமா? என்ற தலைப்பில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ஒரு சிறிய கவிதை வடிவிலான நூலை 70 களின் முற்பகுதியில் படித்த ஞாபகம் உண்டு. இங்கு சோறு என்பது அபிவிருத்தி அல்லது மேம்பாடு என்பதன் குறியீடாகிறது. சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தின் குறியீடாகிறது.

1970 களின் ஆரம்பத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சிக்காலத்தில் தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்வது அவசியம் என்ற கருத்தும் சில தமிழர்களால் பலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா இந்த அபிவிருத்திப் பாதையில் பயணம் செய்தவர்களில் முக்கியமானவர். இந்தக் காலகட்டத்தில்தான் யாழ்ப்பாணத்துக்கும் பல்கலைக்கழக வளாகம் வந்து சேர்ந்தது. இதே காலகட்டத்தில்தான் தமிழ் மாணவர்களுக்கெதிரான உயர்கல்வி வாய்ப்பில் தரப்படுத்தல் நடைமுறை கொண்டுவரப்பட்டது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு, இலங்கை, சிறிலங்காவாக மாற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸ் வன்முறையும் தமிழர் உயிர்ப்பலியும் நிகழ்ந்தன. தமிழ் இளைஞர்களின் தேசிய எழுச்சி திரட்சி அடையத் தொடங்கியதும் இக்கால கட்டத்தில்தான். ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கான விதைகள் தூவப்பட்டதும் இதே காலகட்டத்தில்தான்.

இக் காலகட்டத்தில், எனது சிறுபராயத்தில் சோறா? சுதந்திரமா? என்ற கவிஞர் காசி ஆனந்தனின் இந்த நூலை நான் படித்திருக்கிறேன். சிறிய கவிதை வடிவில் உணர்ச்சியைப் பிழிந்து கொடுத்து இந்நூல் ஆக்கப்பட்டிருந்ததாகவும் ஞாபகம். எனது நினைவில் இருக்கும் பதிவின்படி சோறு முக்கியம் அல்ல – சுதந்திரம்தான் முக்கியம் என்ற கருத்தை இந்நூல் ஆணித்தரமாக இடித்துரைத்தது. இன்று ஏறத்தாழ 40 வருடங்களுக்குப் பின் நாம் மீண்டும் சோறா? சுதந்திரமா? என்ற வகையிலான வாதப்பிரதிவாதங்களைக் கேட்கிறோம். உண்மையில் இங்கு எது முக்கியம்? சோறா? சுதந்திரமா?

சோறு இல்லாது மனிதன் மிகக் கீழ்நிலையை அடைந்து சீரழிந்த பின்னர் சுதந்திரம் வந்துதான் என்ன பயன்? இதனால் சோறுதான் முக்கியம் என்கிறது சோறுக்காக வாதாடுபவர்களின் வாதம். சுதந்திரம் வருவதற்கு மிகக்கூடிய காலம் எடுக்கலாம் அல்லது வராமல் கூடப் போகலாம். இதனால் சுதந்திரத்துக்காகக் காத்திருந்து சோற்றை இழந்து இழிநிலையை நாம் எட்டத்தான் வேண்டுமா? இதனால் சுதந்திரம் கிடைக்கும் நேரம் கிடைக்கட்டும். நாம் முதலில் சோற்றைக் கவனித்துக் கொள்வோம் எனப் போகிறது இவ் வாதம்.

இதனை மறுத்துரைக்கிறது சுதந்திரத்தை முதன்மைப்படுத்தும் மறுவாதம். சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் எமக்கு ஏற்ற வகையில் சோற்றை நாம் ஆக்க முடியாது. இதனால் சுதந்திரம்தான் முக்கியம் என்கிறது இவ்வாதம். சுதந்திரம் இல்லாது சோற்றுக்கு அலைந்தால் மற்றவர் கிள்ளிப்போடும் பிச்சைச் சோற்றில் காலத்தை ஓட்டவேண்டி வரும் என எச்சரிக்கிறது, சுதந்திரம்தான் முக்கியமானது எனக் கூறும் இவ் வாதம். இதனை இன்னொரு வகையில் கூறப்போனால் சுதந்திரம் குதிரை போன்றது. சோறு இக் குதிரையில் கட்டப்பட்டிருக்கும் வண்டி போன்றது. சுதந்திரம் என்ற குதிரை எமது கையில் இருந்தால்தான் சோறு என்ற வண்டியினை நாம் விரும்பும் திசையில் நம்மால் இழுத்துச் செல்ல முடியும். வண்டியை குதிரைக்கு முன்னால் கட்டுவதில் பயன் ஏதும் இல்லை என எடுத்துரைக்கும் இவ்வாதம் மேம்மாட்டுக்கு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்ட அறிஞர் அமார்தயா சென்னின் (Amartya Sen) Development as Freedom என்ற கருதுகோளையும் துணைக்கழைத்துக் கொள்கிறது.

இப் பத்தியைப் பொறுத்தவகையில் மேம்பாட்டைத் தீர்மானிப்பதில் அரசியலின் – அரசியல் அதிகாரத்தின் முதன்மைப் பாத்திரத்தைப் புரிந்து கொள்கிறது. ஏற்றுக் கொள்கிறது. மேம்பாட்டின் அரசியல் (Politics of development) குறித்த அக்கறையும் இப் பத்திக்கு உண்டு. ஒரு தேசம் – ஒரு மக்கள் கூட்டம் – தனது கைகளில் அரசியல் அதிகாரத்தை எடுக்கும்போது மட்டும்தான் மேம்பாடு உட்பட்ட அனைத்து விடயங்களையும் தனது தேவைக்கும் விருப்புக்கும் ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்த முடியும். இதனால் சுதந்திரம் இல்லாத சோறு நிலைத்து நிற்கக்கூடியதொன்றல்ல. ஈழத் தமிழர் தேசத்துக்கு ஆரோக்கியமான அடித்தளத்தை இடுவதற்கு உதவக்கூடியதல்ல. அதிலும் சோற்றுக்காகச் சுதந்திரத்தைக் கைவிடுவோமானால் அது நமது தேசத்தின் தலைமேல் நாமே கொள்ளிக்கட்டையினை தூக்கிப் போட்டது போலத்தான் ஆகிவிடும்.

இந்த அடிப்படையான அரசியல் புரிதலில் இருந்து கொண்டு நடைமுறையை நோக்குவோம். சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் இறைமையினை ஏற்றுக் கொள்ளவோ – ஏன் குறைந்த பட்சம் தன்னிடம் குவிந்திருக்கும் அதிகாரங்களை ஈழத் தமிழ் தேசத்துடன் பங்கீடு செய்து கொள்ளவோ தயாராக இல்லை. தற்போதைய புதிய ஆட்சியாளர்களில் கூட்டமைப்புத் தலைமை நம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், காலம் சிங்கள அரசின் தன்மையினை அனைவருக்கும் உணர்த்தும். இதனால் அரசியல் அதிகாரத்துக்காக – சுதந்திரத்துக்காகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய நிலையிலேயே ஈழத் தமிழர் தேசம் உள்ளது. இது நீண்டதொரு போராட்டமாக வளரவும் கூடும்.

இத்தகையதொரு சூழலில் சுதந்திரம் வரும் வரை நாம் சோற்றுக்காகக் காத்திருக்க முடியுமா? இவ்வாறு காத்திருப்பது நமது மக்களுக்கு நன்மை தரக்கூடியதா? தொடர்ச்சியான போர்க்காலத்திலும் இறுதிப் போர் நேரத்திலும் தம்மிடம் இருந்த வளங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, தமது வாழ்வின் மிக விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பார்த்து சோறு இப்போது முக்கியம் அல்ல, சுதந்திரம்தான் முக்கியம் - அதுவரை காத்திருங்கள் என்று கூறுவது சாத்தியமா? இவ்வாறு கூறுவது நியாயம்தானா? இவ்வாறு கூறுவோமாயின் அதனை அம் மக்கள் ஏற்றுக்கொண்டுதான் விடுவார்களா? நமது மக்கள் மேலும் நலிந்து விடுவார்களாயின் நமது சுதந்திரத்துக்கான போராட்டமும் நலிவடைந்துவிடும் என்ற வாதமும் புறந்தள்ளக்கூடியதொன்றல்ல.

இதனால் நமது சிந்தனை முறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. சோறா? சுதந்திரமா? எனச் சிந்திப்பதற்குப் பதிலாக நாம் சோறும் சுதந்திரமும் எனச் சிந்திக்க வேண்டும். இச் சிந்தனை முறையானது சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை மறுதலிக்காது. அதேவேளை சுதந்திரத்தின் பின் சோறு என்பதற்குப் பதிலாக சுதந்திரத்துக்கும் சோற்றுக்காகவும் ஒரே நேரத்தில் போராட வேண்டும் எனக் கோருகிறது. சுதந்திரத்துக்கான பயணத்தை பாதையினை எவ்வகையிலும் தடைப்படுத்தாது, சோற்றை ஆக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் என இச்சிந்தனை முறை பரிந்துரைக்கிறது. சிங்கள தேசமோ ஈழத் தமிழ் தேசத்தின் தனித்தவத்தை மறுத்து, அதன் தேசம் என்ற தகைமையினை சிதைத்து, ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை இல்லாதொழிக்க முயல்கிறது என்பதனை இச் சிந்தனை முறை கவனத்துக்கு எடுக்கிறது. சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது அனைத்து வகையிலான அடக்குமுறையினையும் தேவையேற்படின் பிரயோகிக்கும் என்பதனையும் மேம்பாடு என்பதனை தனது ஆதிக்கத்தை ஈழத் தமிழர் தேசம்மீது நிலைநிறுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்த முயலும் என்பதனையும் புரிந்து கொள்கிறது. ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திரத்திற்கான விருப்பினை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் எவ்வாறு சோற்றை ஆக்க முடியும் எனச் இச் சிந்தனைமுறை சிந்திக்கிறது. இதற்கு ஏற்ற வகையிலான செயற்திட்டங்களை வடிவமைக்குமாறு தமிழர் அமைப்புக்களையும் ஈழத் தமிழர் தேசத்தையும் கோருகிறது. இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவதுடன் தனது தேவைக்கேற்ற மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்று இச் சிந்தனைமுறை கோருகிறது.

ஈழத் தமிழர் தேசம் தனக்கென முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டம் சிறிலங்கா அரசின் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒரு மாற்றீடாக அமைய வேண்டும். சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் தமிழர் தேசத்தின் தனித்துவத்தை பலவீனப்படுத்தி சிங்கள தேசத்தைப் பலப்படுத்தும் ஓர் அரசியல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் ஈழத் தமிழர் தேசம் முன்னெடுக்கும் மேம்பாட்டுத் திட்டம் ஈழத் தமிழ் தேசத்தைப் பலப்படுத்துவதாக, பாதுகாப்பதாக அமைய வேண்டும்.

ஈழத் தமிழர் தேசம் சிறிலங்கா அரசின் பிடியிலும் இராணுவ ஆக்கிரமிப்பிலும் இருந்து விடுபடாத சூழலில் இதனை எவ்வாறு செய்வது? இதனை சிறிலங்கா அரசு அனுமதிக்குமா? முன்னைய மகிந்த அரசாங்க காலத்தில் இருந்ததை விட ஒப்பீட்டளவில் தற்போது கூடுதலாக இருக்கும் அரசியல் வெளியினைப் புத்திபூர்வமாகப் பயன்படுத்தி இதனைச் சாத்தியப்படுத்தும் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். உலகமயமாக்கல், நாடு கடந்த உறவுமுறை, சந்தைப் பொருளாதாரம் போன்றவை தரக்கூடிய வெளிகளை நாம் இம் முயற்சியில் பயன்படுத்த வேண்டும். மக்கள், மக்களில் தங்கியிருந்து மேம்பாட்டு முயற்சிகளை மேற்கோள்ளும் சமூக பொருளாதார சிந்தனையின் அடிப்படையில் முயற்சிகளில் நாம் ஈடுபடலாம். இம் முயற்சிகள் கீழிருந்து மேற்கிளம்புவையாக அமைய வேண்டும். சிறு கைத்தொழில் முயற்சிகளை உருவாக்கல், இதன் ஊடாகப் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தாயகத்தில் நமது பொருளாதார முயற்சிகளின் அடிப்படையில் உருவாகும் பொருட்களுக்கு புலத்தில் சந்தை வாய்ப்புக்களை உருவாக்கல், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், மக்களின் சுகாதார நலத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் – இவை போன்ற பல விடயங்கள் நமது சோறு ஆக்கும் முயற்சியில் முக்கியம் பெறலாம். இவை அடிப்படையில் மனிதவளத்தை வளப்படுத்தும் நடவடிக்கைகளின் பாற்பட்டவையாக அமையக்கூடியவை.

இவற்றை எவ்வாறு செய்வது குறித்த மூலோபாயம், தந்திரோயாயம் குறித்து ஈழத் தமிழர் தேசம் ஆழமாக தனக்குள் விவாதித்துக் கொள்ள வேண்டும். இவற்றைச் செய்பவர்கள் தெளிந்த அரசியல் உடையவர்களாக இருத்தல் முக்கியமானது. இதேவேளை இவர்கள் வெளிப்படையாக அரசியல் பேச வேண்டிய அவசியம்கூடக் கிடையாது. நோய்த் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டவர்கள் நோயில் இருந்து பாதுகாக்கப்படுவது போல, தெளிந்த அரசியல் என்ற கவசத்தை அணிந்து இம் முயற்சியினை எடுப்பவர்கள் தடம் மாறாமல் பயணிப்பார்கள். இத்தகைய செயல்வீர்களை ஈழத் தமிழர் தேசம் அடையாளம் கண்டு களம் இறக்க வேண்டும்.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=39e176dd-7c9e-4d31-877c-79036a6fe7fe

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.