Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி எப்படி திரும்பிப் பாராமல் போக முடியும்.......

Featured Replies

 ம

து போதையில்

மாரடைத்துப் போன

பரமேஸ்வரன் நாயருக்கு,

சவரம் செய்து

மூக்குச்சளி குண்டிப்பீ துடைத்து

குளிப்பாட்டி பவுடர் போட்டு

கை கால்

பெருவிரல்கள் சேர்த்துக் கட்டி

உடை மாற்றி

சென்ட் அடித்து

பிரேதத்தை கருநீள பெஞ்சில்

நீளமாக படுக்கவைத்துவிட்டு

கொஞ்சம் அருசியுடன்

வந்தார் அப்பா.

 

 

அன்னைக்கு ராத்திரி

வீட்டில

சோறு. பூரா

பொண நாத்தம்.

 

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள். பெரும் மனச்சிதைவை உருவாக்கிய ஒரு கவிதைத்தொகுதி. முதல் இரண்டு கவிதைகளுடன் வாசிப்பதை நிறுத்திவிட்டு பாரிஸின் புறநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த நீண்ட தொடரூந்தின் யன்னல் ஊடாக பார்வை வெளியே விழுத்தி என்னை ஆற்றுப்படுத்தினேன். அன்றொருநாள் பெரியம்மாவின் இறுதிக் கடமையை முடித்த பின் "திரும்பிப் பாராமல் போங்க " என ஒலித்த குரலை சுமந்த முகம் அந்தக் கணத்தில்  எப்படி இருந்திருக்கும் என்ற நினைவே  வந்து ந்து சென்று கொண்டிருந்தது.

 

முன் எப்போதோ நிகழந்த ஒன்றை கிளர்த்தி நினைவுகளை உறையப் பண்ணும் கவிதைகளையும்  கடந்துவிடலாம். அல்லது இனி நிகழப்போகும் ஒரு சம்பவத்தை எதிர்வு கூறிய கவிதைகளைக் கூட நினைவில் கொள்ளலாம்.  ஆனால் ஒவ்வொரு கணமும் திரும்ப திரும்ப நிகழ்ந்து ொண்டிருக்கும் இந்த கவிதைகளை என்ன செய்வது. எப்படிக் கடந்து செல்வது.

 

 ஒரு கவிதைச் செயல்  வாசகனுக்கு எதை தரவேண்டும் என்ற கேள்வி காலகாலமாக கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. என்னளவில்  ஒரு கவிதைச்செயல் வாசகனை உடைத்து தன்பக்கம் திருப்பவேண்டும் அல்லது பரவசப்படுத்தி தன்னோடு அழைத்துச்செல்லவேண்டும். விமர்சனப்பாங்கோடு வாசகன் கவிதைச்செயற்பாட்டை அணுகுதல் என்பது  அந்த கவிதையின் அனுபவங்களை சிதைத்துவிடும். கவிதைக்கான விமர்சனம் என்பது வேறு. வாசிப்பு அனுபவம் என்பது வேறு.

 

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் என்ற கவிதைப் பிரதியின் இயங்கு தளமும், எழுப்பும் கேள்விகளும் இந்த சமூகத்தின் முகத்தில் காறி உமிழ்கின்றன. சக மனிதனை, அவனின் உணர்வுகளை, அவனின் ஆதங்கங்களை, சராசரி மனிதனாக வாழும் உரிமையை  அடக்கிவிட்டு  ஒரு கட்டுக்கோப்பான பண்பாடு மிக்கதான என போலி வேசங்கொண்டு இயங்கும் இந்த சமூகத்தினை அம்மணமாக்கி சொற்களால் அடிக்கிறது.  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தேர்ந்த சித்த வைத்தியர்களாக, கலைஞர்களாக  இருந்த ஒரு சமூகத்தை வெறுமனே குடிமகன்கள் என்ற நிலைக்கு இறக்கி வைத்திருக்கும் பண்பாட்டினை தன்  கேள்விகளால் சிதைத்து சிதையில் ஏற்றுகிறது. 

 

ஒடுக்கப்பட மக்கள் திரளின் குரலாக, அந்த மக்களின் வட்டாரமொழியில்  எழுந்திருக்கும் கவிதைகள் பல இடங்களில் தன் இனம் சார்ந்த மக்கள் அடையாளங்களை இழந்துபோய் அல்லது மறைத்துக்கொண்டு வாழ முற்படுவதையும் குத்திக் காட்டுகிறது.  எவ்வாறு இழி நிலையையை இந்த சமூக பண்பாடு வழங்கி இருந்தாலும் அதையும் மீறி நின்று இனத்தின்  பெருமையை பேசுகிறது. 

 

குனிந்திருந்து 

கீழ் பார்த்து தொங்கும் 

கொட்டை மயிருகளை 

அரைகுறையாக 

வெட்டி தள்ளுவது போல் 

அல்லாமல் 

கண்ணாடியில் முகம் பார்த்து 

கம்பீரமான முறுக்கு மீசை 

மேல் நோக்கி நிற்பதற்கு 

கத்தரிப்பது போல் 

உங்கள் கவனத்தை 

வேண்டி நிற்கிறது 

இப் பதிவு.

 

என்று கேட்கும் கலைவாணரின் கவிதைகள். இன்னொரு இடத்தில், அடையாளம் இழந்துபோய் உலக மயமாக்கலின் விளைவுகளுக்குள் சிக்கிப்போன தன் சமூகத்தின்  நிகழ்காலத்தை இப்படி அங்கதமாக குறிப்பிடுகிறார். 

 கல்யாணத்துக்கு முத நாளு 

பொண்ணுக்க 

அக்குளும் அடிமுடியும் 

வழிக்க போவா 

எங்க லீலா சித்தி 

அவ போறதும் வாறதும் 

யாருக்கும் தெரியாது 

இப்ப நாசுவத்திய கூட 

காத்துக் கிடக்காளுவ 

கண்டவளுக பியூட்டிபாலர்ல்ல

 

நாவிதர், சவரக்காரர் இன்னும் விளக்கமாக  யாழ்ப்பாண சாதிய மொழியில் சொல்வதென்றால் அம்பட்டர் என்ற அந்த தொழில்சார் சமூக குழுமத்தினரின் பெருமைகளை, அவர்களின் வரலாறுகளை அவர்களால் இந்த சமூகத்துக்கு  வழங்கப்பட அளவற்ற பண்பாட்டியக்கங்களை மறைத்துவிட்டு அல்லது மழுங்கடித்துவிட்டு வெறும் சிகையலங்கரிப்பாளர் என ஒரு சொல்லாடல் மூலம் கௌரவப்படுத்திவிட்டதாக ஏமாற்றிக்கொள்ளும் இன்றைய சமூக இயக்கத்தை எந்த தீயால் சுடுவது.

 

பண்டிதன்

முண்டிதன்

இங்கிதன்

சங்கிதன்

நால்விதன் தெரிந்தவனே

நாவிதன்

வேறு எவனுக்கும் இல்லை இவை.

 (பண்டிதம் -பண்டுவம் ,மருத்துவம் , முண்டிதன் -சவரம் அழகுக்கலை , இங்கிதன் -சடங்குகள் முறைகள் , சங்கிதன் -இசை கலைகள் )

 

குலப்பெருமையை மட்டுமா இந்தக் கவிதை பேசுகிறது. ஒரு மருத்துவனாக, ஒரு சடங்குகள் முறைகள் செய்பவனாக இசைகளை கலைகள் மூலம் ஆற்றுப்படுத்துபவனாக சமூகத்தில் இயக்கத்தை கொண்டுநடத்தியவர்கள்.

இதை ஒரு கவிதையில் அழகாக சொல்லிருக்கிறார். குழந்தை பிறந்தபின் நச்சுக்கொடியை மண்ணில் புதைத்து அதன்மேல் கல்லை  வைத்து குழைந்தை பெற்ற தாயை அதற்கே உரிய பக்குவங்களோடு குளிப்பாட்டி குழந்தைக்கும் தாய்க்கும் பதினைந்து நாட்களுக்கு சிரட்டையில் விளக்கு வைத்து பின் இருபத்தெட்டாம் நாள் நூல்கட்டி சடங்கு செய்து என்று குழந்தை பிறந்ததில் இருந்து ஆரம்பிக்கும் ஒவ்வொரு சடங்கையும் செய்து வளர்ந்து ஆளாகி இறக்கும் வரை நிகழும் ஒவ்வொறு சடங்கிலும் தீட்டுக் கழித்தல் என்ற பண்பாட்டோடு தொடர்புபட்டவர்கள்.

 

இன்று இந்த சமூகம் இவர்களுக்கு வழங்கி இருக்கும் நிலையை, இயலாமையை வறுமையை என ஒவ்வொரு நிகழ்வுகளையும் கவிதையாக்கி இருக்கிறார்.  சலூனின் நிகழ்வுகள் ஒரு தேர்ந்த திரைப்படம் போல கவிதைகளில் பயணிக்கிறது. அங்கு நிகழும்  அரசியலும் பெருமிதங்களும் நிதர்சனமாக முன்னால் நிகழ்கின்றன. 

 

ஊரு  மருத்துவிச்சியாக

அம்மா பிரசவம் பார்த்து

பூச்சு பறக்கி போட்ட

எல்லா குந்திராண்டங்களும்

இப்ப வளர்ந்து

ஆளுகொரு பனை மரத்தில

பூதங்களாக தொங்குது.

என்றும்,

 

சவரம் பண்ணி மீசை செதுக்கி

மூக்கு காது முடி வெட்டி

முகத்தில தண்ணியடிச்சு

சீனாக்காரம் தடவி

குட்டி குரா பவுடரும் போட்டு

ஸ்னோவும் போட்டு

எழுப்பி நிறுத்தி

அக்குளும் வழிச்ச பொறவு

அவரு சுருட்டிக்கொடுத்த

அஞ்சு ரூபாய

அப்பா முதுகு வளைஞ்சு

வாங்கும் போது

 

 

ராஜ ராஜ சோழன் சிலைய செய்தவன்

பிச்சை எடுத்தது போல இருந்தது.

 

என்றும் உள்ளெழும் கோபத்தை ஆதங்கத்தை காட்டுகிறார். கால காலமாக அடிமைப்படுத்தபட்ட வலியை இறக்கிவைக்கிறார்.

 

இந்துதத்துவ பண்பாட்டின்  மூலம் கட்டமைக்கப்பட்ட சாதியம் மிக நுண்மையான வெளிப்பாடுகளை  கொண்டுடிருக்கிறது. தொழில் சடங்கு தீட்டு சம்பிரதாயம் என வேறு வேறு வடிவங்களை கொண்டு இயங்குகிறது. இவற்றையெல்லாம் கவிதைகள் மூலம் கொண்டுவந்து எம் நெற்றியல் ஆணியால் அறைகிறார் கவிஞர்.  அதிகாரம், பணபலம், கல்வியறிவு போன்ற இதர காரணிகள் சாதியத்தை மறைத்துவிட்டாலும் உள்ளிருந்து அது கணன்று கொண்டிருப்பதையும் எழுதுகிறார். லொறியில் கிளினராக வேலை பார்த்த காலத்தில்  குளித்துக்கொண்டிகையில் சாதியை சுட்டிக்காட்டி சவற்கார நுரையுடன் வெளியே  தள்ளி விடுகிறார்கள். அந்தக் கணத்தில் நினைக்கிறார் கௌரவமாக "அப்பாக்க வேலைக்கே போயிருக்கலாமோ" என்று இப்படியாக சமூகத்தின் கொடுமைகளையும் தொழில் பெருமைகளையும் பதிவு செய்கிறார்.

 

கவிதையென்பது ஒரு நெடிய பயணம். தன் சிறகுகளை பலதடவை கழற்றியும், புதிதாக அணிந்தும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கவிஞரும் தங்கள் மொழி இயல்பால் ஒவ்வொரு தளங்களுக்கு கவிதைகளை எடுத்துச்செல்கிறார்கள். சிலருடைய பாதை முன்வந்தோரை தழுவிப் போகிறது, சிலருடைய பாதை தனியே செப்பனிட்டுக்கொண்டு கொண்டுபோகிறது, இன்னும் சிலருடைய பாதை ஒரு பாச்சலை நிகழ்த்தி பயணத்தை மேற்கொள்கிறது.  வாசகர்களும் அந்த கவிதைகளோடு பயணித்து படைப்பாளியின்  நிகழ்வுக்குள் நுழைந்துவிடுகிறார்கள். வியந்து நின்று பார்த்துக்கொண்டுமிருக்கிறார்கள். 

கலைவாணர் தனக்கென ஒரு கவிதை மொழியை கொண்டு இயங்குகிறார். அந்த மொழி மூலம்  ஒடுக்கப்பட்ட தன் இனத்தின் பாடுகளை வெளிக்கொண்டுவருகிறார்.  சமூக மீட்சிக்கு அந்த மொழியை பயன்படுத்துகிறார். ஓடுக்கப்பட்டவனின் குரலாக, தனக்கான உரிமையை கேட்டும் குரலாக, தான் தார்ந்த இனத்தின் பெருமைகளை பாடும் குரலாக கலைவாணரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. 

 

அப்பா 

வெட்டியும் வழித்தும் 

பெருக்கி கூட்டி 

மூலையில் வைத்திருக்கும் 

கறுப்பும் வெள்ளையுமான 

மயிர்களின் வயலில் 

அரிசியும் கிழங்கும் விளைந்தன 

 

 

பிறகு அது 

என் உடலில் 

இரத்தமுன் சதையுமானது. 

இந்த ஒரு கவிதை போதும் கலைவாணரின் கவிதைகளை இனம் காண்பதற்கும் பேசுவதற்கும்.

 

அறம் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த தொகுப்பில் தன்னைப்பற்றி குறிப்பிடுகையில் “என்னைப்பார்க்கனும், என் கூடப்பேசணும் என்று தோணிச்சு என்றால் ரோட்டு சைட்டுல வந்துபாரு நீயும் உன் அப்பனும் தூக்கி சுமந்த ஜாதி பேய்களும் வாழவழி இல்லாம ஆக்கியிருக்க உன் அரசாங்கமும் பாழடைஞ்சு போன குடியும் சேர்ந்துட்டு விரட்டி அடிச்சதில ஓட களியாம ஏதாவது கடையிலோ தின்னையிலயோ குப்போ தொட்டிகிட்டயோ உடுதுணி இல்லாம பெண்டு மொண்டு ஈச்ச மொய்க்க ஒருத்தன் கிடப்பான் அவன் மூஞ்சிய மெதுவா திருப்பிப்பாரு அது நானாட்டு இருப்பேன் இல்லேன்னா அவன் என்னைப்போலவே இருப்பான்”. என்கிறார்.  இந்த கவிதைத்தொகுப்பு தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பிரிவின் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஒவ்வொரு கவிதைகளும் கடந்த நிகழ்வுகளை உயிர்ப்பிக்கின்றன. வலிகளை உருவாக்குகின்றன. ஊரில் வீடு தேடிவந்து மயிர் வெட்டும் சண்முகம் என்ற அந்த மனிதரின் முன் எவ்வளவு திமிருடன் கண்ணாடியைப் பிடித்துக்கொண்டு இருந்திருக்கிறேன். தோட்டத்தில் விளையும் பயிரின் அறுவடையின் குடிமகன்களின் காணிக்கை என்று வழமையைவிட அதிகமாக கொடுத்துவிட்டு அதனை எத்தனை பெருமையாக நினைத்திருந்திருகிறேன்.  மிக அருவருப்பான ஒரு நிலையில் என்னையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது இந்த கவிதை தொகுப்பு. 

 

 

 இனியொருமுறை என் சிகை கொய்யும் பொழுதில் அந்த அகன்ற கண்ணாடியில் என் முகத்தைப்பார்க்க முடியுமோ தெரியவில்லை. அந்த சிகைஅலங்கரிப்பு நிலையத்தில் இருக்கின்ற நிழல்படங்களின் கண்களை தன்னும் நேரில் பார்க்கும் தைரியம் வருமோ தெரியவில்லை

 தொ

குப்பினை வாசித்து முடிந்ததும் ஊரில் இருக்கும் நண்பனுக்கு தொலைபேசி எடுத்து டேய்  மச்சான் சண்முகத்தின் போன் நம்பர வேண்டி  அனுப்படா என்றேன், மறுகரையில் இருந்து அம்பட்டன் சண்முகமோ என்று அவன் கேட்டதுதான் காதில் விழுந்தது என்னை அறியாமலேயே அழைப்பை துண்டித்தேன். அப்போதும் கூட,

எல்லாவனும் தின்னு போட்ட

எச்சி இலையை

கடவத்தில

எடுக்க சொன்னான்

அவியலு மாடசாமி

 

 

நாசுவப் பய வந்து

இலை எடுக்காத கல்யாணம்

அவனுகளுக்கு தரக் குறைவாம்

தின்னுகிட்டு ஏப்பத்தோட

போற தாயோளி

சொல்லிட்டுப்போறான்

என்ற கவிதைதான் நினைவுக்கு வந்தது.

 நன்றி,  பொங்குதமிழ் இணையம். 

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் ஒவ்வொன்றும் " பொட்டில் அறைந்த மாதிரி"  இருக்கு....! ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை...!

  • கருத்துக்கள உறவுகள்

அவரு சுருட்டிக்கொடுத்த
அஞ்சு ரூபாய
அப்பா முதுகு வளைஞ்சு
வாங்கும் போது
ராஜ ராஜ சோழன் சிலைய செய்தவன்
பிச்சை எடுத்தது போல இருந்தது...

ஒவ்வொரு வரியும் 
நம் சமூகத்தில் நாற்றமெடுக்கும் 
சாதி எனும் சாக்கடையை 
முகத்தில் அள்ளி வீசி 
உணர வைக்கிறது !!!

  • தொடங்கியவர்

கவிதைகள் ஒவ்வொன்றும் " பொட்டில் அறைந்த மாதிரி"  இருக்கு....! ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை...!

உண்மைதான். கவிதைகள் தரும் அனுபவம் வலிகளை தருகிறது 

மிக்க அன்பு சுவி ஐயா 

அவரு சுருட்டிக்கொடுத்த
அஞ்சு ரூபாய
அப்பா முதுகு வளைஞ்சு
வாங்கும் போது
ராஜ ராஜ சோழன் சிலைய செய்தவன்
பிச்சை எடுத்தது போல இருந்தது...

ஒவ்வொரு வரியும் 
நம் சமூகத்தில் நாற்றமெடுக்கும் 
சாதி எனும் சாக்கடையை 
முகத்தில் அள்ளி வீசி 
உணர வைக்கிறது !!!

இந்தக் கவிதை விரிக்கும் பொருள் மிக மிக பெரியது. எவ்வளவு அழகாக சாதியை மூடி வைத்திருக்கிறோம். 

மிக்க அன்பு sasi varnam அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்

விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் வாழ்வு உண்டு என்று கவிதைகள் சொல்லுகின்றன. 

சமத்துவம் நிலவவேண்டும் என்று தத்துவம் பேசினாலும், சமத்துவ உலகில் வாழமுடியாது என்பதுதான் யதார்த்தம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.