Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்தார் ஜெயலலிதா?

Featured Replies

மந்திரி தந்திரி! - 30
 
கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி

 

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரபரப்பு கூடியிருந்த நேரம். தே.மு.தி.க., இடதுசாரிகள் எல்லாம் சேர்ந்து அ.தி.மு.க தலைமையில் 'மெகா கூட்டணி’ உருவாகியிருந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகி, கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகள் அரண்டுபோயின. தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இப்படி நடந்தது இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்த...  'ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது’ என அறிவித்தார்கள். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் அ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அந்த அப்பாடக்கர் யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

வேட்பாளர் பட்டியல் மட்டுமா தெரியாமல் ரிலீஸ் ஆனது? 'எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடப் போனார்கள்’ என அறிக்கைவிட்டு மீடியாவை மிரளவைத்தார். 'ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை’ எனச் சொல்லி, நீதிமன்றத்தையே கிடுகிடுக்கவைத்தார். 'சசிகலாவோடு இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை’ என அதிரடி செய்வார். ஆனால், அடுத்த சில மாதங்களில் மொத்த மன்னார்குடி குழுவினரும் கார்டனில் கோலோச்சுவார்கள். மந்திரிகளைப் பந்தாடுவார்; அமைச்சரவையைக் கலைத்துப்போட்டு ரம்மி ஆடுவார்; கார்டனில் அமர்ந்துகொண்டு கோட்டையை இயக்குவார்; கொடநாட்டில் இருந்தபடி தமிழ்நாட்டைத் தெறிக்கவிடுவார்; கட்சிக்காரர்களை 'எப்போது பதவி பறிபோகுமோ?’ என்ற பதற்றத்திலேயே வைத்திருப்பார்... இதுதான் ஜெயலலிதா; இவர்தான் ஜெயலலிதா!  

'நடிகை நாடாள முடியுமா?’ என எதிரணியினர் முழங்கிக்கொண்டிருந்தபோது, அதை மெய்ப்பித்துக்காட்டியவர். நடிகை, கொள்கைபரப்புச் செயலாளர், எம்.பி., சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கட்சியின் பொதுச் செயலாளர், முதலமைச்சர்... என ஜெயலலிதாவின் பயணம் நீண்ட நெடியது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதற்கு ஒரே காரணம் ஜெயலலிதா மட்டும்தான்.

p44a.jpg

1991, 2001, 2002, 2011, 2015 என... ஜெயலலிதா முதல்வர் அரியணையில் அமர்ந்திருப்பது இது ஐந்தாவது முறை. இடையில் சொத்துக்குவிப்பு வழக்கினால் சுமார் எட்டு மாத காலம் ஓ.பி.எஸ். தமிழக முதல்வராக இருந்தார். அப்போதும் 'மக்கள்’ முதல்வராக ஜெயலலிதாதான் இருந்தார். இந்த நான்கு ஆண்டு காலத்தில் முதல்வராக ஜெயலலிதா சாதித்தது என்ன? காவல் துறைக்கு அமைச்சராக, ஒட்டுமொத்தத் துறைகளுக்கும் தலைமை நிர்வாகியாக ஜெயலலிதா சாதித்தாரா... சறுக்கினாரா?

முந்தைய கருணாநிதி ஆட்சியின் முழு ஸ்கேன் இங்கே... க்ளிக் செய்க...

விதி 110... அறிவிப்புகள் 181

'பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர், சபாநாயகரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம். அந்த அறிக்கையின் மீது அப்போது எந்தவித விவாதமும் இருத்தல் கூடாது’ - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 இப்படித்தான் விவரிக்கிறது. ஆனால், எந்தப் பொது முக்கியத்துவமும் இல்லாத, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் மட்டுமே 110-ன் கீழ் வெளியிடப்படு கின்றன. இந்த நான்கு ஆண்டு காலத்தில்

181 அறிவிப்புகளை 110-ன் கீழ் வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா. 110 என்ற விதியை கடைக்கோடி தமிழன் வரை பிரபலப்படுத்தியதில் ஜெயலலிதாவின் பங்கு மகத்தானது. ஆனால், அந்த அறிவிப்புகள் ஏதாவது செயல்வடிவம் பெறுகின்றனவா?

p44b.jpg

'வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 2,160 கோடி ரூபாய் செலவில் 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என 2011-ம் ஆண்டில் அறிவித்தார். இதுவரை எந்தத் துணைக்கோள் நகரத்தையும் காணவில்லை. இந்தத் திட்டத்துக்கு வரைபடம் தயாரிக்கும் பணியே இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் 'கேளம்பாக்கம் அருகில் துணை நகரம் அமைக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்தார். உடனே ஜெயலலிதா காட்டமாக அறிக்கைவிட்டார். 'கருணாநிதி வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழி வந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள் ஆகியோர் முதலில் கோபாலபுரத்தைவிட்டும், சி.ஐ.டி காலனியைவிட்டும் வெளியேறி ஜனநெருக்கத்தைக் குறைத்தாலே, துணை நகரத்துக்கு அவசியம் இல்லாமல்போய்விடும்’ என்றார். பிறகு அவரே திருமழிசை துணை நகரத் திட்டத்தை அறிவித்து, அதுவும் தூங்கிக்கொண்டிருக்கிறது.

'மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586 ஏக்கரில் அனைத்து வசதிகளுடனும்கூடிய ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என்பது 110-ன் கீழான இன்னோர் அறிவிப்பு. இதுவரை வரைபடம் தயாரிக்கும் பணிகூட முடியவில்லை.  'தமிழகத்தின் தென்பகுதி நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும்’ என்றார். நிலம் கையகப்படுத்துவதற்கான வழிகளைக்கூட இப்போதுதான் ஆராயத் தொடங்கியிருக்கிறது சி.எம்.டி.ஏ.

ஓடாத மோனோ ரயில்!

கருணாநிதி மெட்ரோ ரயிலுக்கு அடிக்கல் நாட்டியபோது, 'மெட்ரோ ரயிலைவிட மோனோ ரயில்தான் பெஸ்ட்’ என பக்கம் பக்கமாக அறிக்கைவிட்டு மட்டம் தட்டினார் ஜெயலலிதா. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சொந்தம் கொண்டாடினார். 'சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். கிழக்கு தாம்பரம் வழியாக வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரையிலும், போரூர் வழியாக பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா வரையிலும், வளசரவாக்கம் வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலும் செல்லக்கூடிய மூன்று வழித்தடங்கள் கொண்டதாக மோனோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது’ என 2011-ம் ஆண்டில் அறிவித்தார் ஜெயலலிதா. அத்துடன் 'மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்’ என ஜிகினாக்களைத் தொங்கவிட்டார். எல்லாமே பஞ்சர்தான்.

p44c.jpg

நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஆறு பணிகள்தான் முடிக்கப்பட்டிருக்கின்றன. 'மாமல்லபுரத்தில் 10 கோடி ரூபாய் செலவில் பல ஏக்கர் பரப்பில் நீர்மூழ்கிக் கப்பலுடன்கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என 2012-ம் ஆண்டில் அறிவித்தார். அதுவும் அப்படியே இருக்கிறது. 'திட்டம் சாத்தியமா?’ என்கிற சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்துவிட்டு திட்டத்தை அறிவிப்பதுதான் நடைமுறை. ஆனால், இவர்கள் ரிவர்ஸில் பயணிக்கிறார்கள். இந்த உண்மை இப்படி இருக்க... 110 விதி அறிவிப்புகளை எல்லாம் சேர்த்து 'விதியை மாற்றிய விதி’ என்ற தலைப்பில் புத்தகமாகப் போட்டிருக்கிறது அரசு.

மின்சார வெட்டு வாரியம்?

தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மக்கள், அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்த மின்வெட்டு ஒரு முக்கியக் காரணி.  ஆட்சிக்கு வந்த பிறகு 2011-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தொழில் கூட்டமைப்பினரின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15,140 மெகாவாட் அனல் மின்சாரம், 5,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் என மொத்த மின் உற்பத்தித்திறன் 23,140 மெகாவாட் அளவுக்கு உயரும்’ என பந்தக்கால் போட்டார். 'தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம்’ என்றார். எதுவும் நடக்கவில்லை.

'2013-14ம் ஆண்டில் வெளி மார்க்கெட்டில் மின்சாரம் வாங்க செலவழிக்கப்பட்ட தொகை 30,529 கோடி ரூபாய். இரண்டு ஆண்டுகள் இப்படி வெளிச்சந்தையில் வாங்கும் தொகையை மின் திட்டங்களில் முதலீடு செய்திருந்தாலே 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும்’ என்கிறார்கள் எதிர்க் கட்சியினர். இப்போது கிடைத்திருப்பதோ, கடன் சுமை மட்டும்தான். தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

'தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும்’ என எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டும் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை அரசு. 'அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புதிய மின் திட்டம்கூட உருவாக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள திட்டங்கள்கூட தாமதப்படுத்தப்படுகின்றன’ எனக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. டெண்டர் கேட்பதில் தாமதம், அதைத் திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், டெண்டர் மீது முடிவெடுப்பதில் தாமதம் என அனைத்துக் கட்டங்களிலும் மெத்தனம்.

உடன்குடி மின்திட்டம் நிறைவேற்றுவதில் நடந்த குளறுபடிகள் ஊர் அறிந்தவை. 2007-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் 2012-ம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும். ஆனால் எட்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, தொடங்கிய புள்ளிக்கே வந்து நிற்கிறது. இதற்காக மக்களின் வரிப்பணம் 80 கோடி ரூபாய் வீணானதுதான் மிச்சம்.

கேபினெட் கலைப்புகள்!

இந்தியாவிலேயே முன்னாள் அமைச்சர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். அதன் முழுப் பெருமிதமும் ஜெயலலிதாவையே சேரும். நான்கரை ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் 'முன்னாள்’கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24 முறை அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது. நிர்வாக வசதிக்காக அமைச்சர்களை முதலமைச்சர் மாற்றலாம். அது அவரது அதிகாரம். ஆனால், அந்த அதிகாரத்தை சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார் ஜெயலலிதா. அமைச்சரவையைப் பந்தாடுவது ஜெயலலிதாவின் விளையாட்டுக்களில் ஒன்று.  2011-ம் ஆண்டில் ஜெயலலிதாவோடு 34 பேர் பதவி ஏற்றனர். அவர்களில் 11 பேர் மட்டுமே இதுவரை முழுமையாக அமைச்சர் பதவியில் நீடிக்கின்றனர். ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகிய காரணங்களால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்களில் சிலருக்கு மீண்டும் பதவி கொடுப்பதற்கு என்ன பெயர்? ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, பி.வி.ரமணா, ஆனந்தன் என நீக்கப்பட்டு, மீண்டும் அமைச்சர் ஆனவர்கள் பலர். பள்ளி கல்வித் துறைக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி, வைகைச் செல்வன், பழனியப்பன், கே.சி.வீரமணி என ஆறு பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். பெண் புகாரில் சிக்கி பதவி இழந்த ஆனந்தன், மூன்றே மாதங்களில் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கேபினெட்டை வைத்து இப்படி பல்லாங்குழி ஆடுவது இல்லை.

p44d.jpg

ஆலோசகர்களா... அதிகார மையங்களா?

முக்கியப் பதவியில் இருப்பவர்களை டம்மியாக்கிவிட்டு 'ஆலோசகர்கள்’ என்ற பெயரில் இன்னோர் அதிகார மையத்தை உருவாக்கினார். தலைமைச் செயலாளர், காவல் துறை டி.ஜி.பி என உயர் பதவிகளுக்கும் 'ஆலோசகர்கள்’ நியமிக்கப்பட்டனர். தலைமைச் செயலாளராக இருந்த தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெற்ற அடுத்த நாளே 'ஆலோசகர்’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற ஷீலா பாலகிருஷ்ணனும் ஓய்வுக்குப் பிறகு ஆலோசகர் ஆக்கப்பட்டார். காவல் துறை தலைமை இயக்குநராகப் பணி நீட்டிப்பில் இருந்து ஓய்வுபெற்ற ராமானுஜம், அரசின் ஆலோசகராக அமர்த்தப் பட்டார். வெங்கடரமணன், ஷீலா ப்ரியா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகும் முதலமைச்சரின் செயலாளர்கள் ஆக்கப்பட்டனர்.

இந்த ஆலோசகர்கள் பதவியும் பதவி நீட்டிப்புகளும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை டம்மி ஆக்கியதோடு, சீனியாரிட்டியைக் குலைத்து பதவி உயர்வுகளையும் தடுத்து நிறுத்தியது. தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்குத் திறமை இல்லை என்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்குப் பதவி கொடுத்து அனைத்து அரசு சலுகைகளையும் அதிகாரத்தையும் தொடர்ந்து அனுபவிக்க வகைசெய்து கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

p44e.jpg

ஏட்டிக்குப் போட்டி!

சென்னைத் துறைமுகத்தில் இருந்து, மதுரவாயல் வரையில் பறக்கும் சாலைத் திட்டம் கடந்த தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. 30 சதவிகிதப் பணிகள் முடிந்திருந்த நிலையில், 'கூவம் ஆற்றில் நீர் தடைபடும்’ எனச் சொல்லி திட்டத்தை நிறுத்தினார் ஜெயலலிதா. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சென்னையின் புறவழிச் சாலையில் இருந்து துறைமுகத்துக்கு எளிதாக சரக்குகளைக் கொண்டுபோயிருக்க முடியும். கார் தொழிற்சாலைகளில் இருந்து துறைமுகத்துக்கு கார்களை அனுப்புவதில் பிரச்னை தீர்ந்திருக்கும். இப்படி முதலீட்டுக்கான எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதுதான் கொடுமை.

ஜெயலலிதாவின் ஏட்டிக்குப் போட்டி அரசியலின் இன்னொரு முகம், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் முறைகேடு எனச் சொல்லி நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார் ஜெயலலிதா. நான்கரை ஆண்டுகள் முடியப்போகிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. ரகுபதி கமிஷனுக்காக 1.53 கோடி ரூபாய் செலவானதுதான் மிச்சம். 'கருணாநிதி கட்டிய அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போகிறேன்’ என ஜெயலலிதா சொன்னதும் நீதிமன்றம் குட்டு வைத்தது. அதனால் நூலகம் காப்பாற்றப்பட்டபோதும், அந்த நூலகத்தை முடக்குவதுபோல புதிய புத்தகங்கள் வாங்காமலும், அடிப்படை வசதிகளைச் செய்யாமலும் அரங்கத்தைப் பூட்டிவைத்தும் பழிதீர்த்தார் ஜெயலலிதா.

p44f.jpg

காவல் துறையா... ஏவல் துறையா?

காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா, அதைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்பதற்கு சந்திசிரிக்கும் சட்டம் - ஒழுங்கே சாட்சி. 'பார்வையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்’ எனப் போராடிய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை காக்கிகள் நடத்திய விதம் மனசாட்சியுள்ள அத்தனை பேரையும் முகம் சுளிக்கவைத்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யுவராஜ், போலீஸுக்கு தண்ணிகாட்டியதை மறக்க முடியுமா? இந்திய வரலாற்றிலேயே தேதியும் இடமும் குறித்து போலீஸில் சரண்டர் ஆனது யுவராஜ் மட்டும்தான்.  

'ஸ்காட்லாந்து யார்டு’ என மார்தட்டிக்கொண்டிருந்த தமிழ்நாடு காவல் துறை 'டாஸ்மாக் கார்டாக’ மாறி ஒயின் ஷாப்களை காவல் காத்தது காக்கிகள் வரலாற்றில் கரும்புள்ளி. முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விசாரித்து ஒரு துரும்பையும் கண்டுபிடிக்கவில்லை. சி.பி.ஐ விசாரணை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் கால அவகாசம் கேட்பதற்குத்தான் காக்கிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது.  

'உ.பி., மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். சிவகங்கையில் ஒரு சிறுமி மீது காவல் துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை மறக்க முடியுமா? தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் இன்னொரு முகம் கௌரவக் கொலைகள். சிவகங்கை, உசிலம்பட்டி, சாத்தூர், சீவலப்பேரி... என வரிசையாக கௌரவக் கொலைகள் அரங்கேறின. இந்தக் குற்றங்களைத் தடுப்பதைவிட மறைப்பதில்தான் அதிக அக்கறை காட்டியது காவல் துறை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது. அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அரசுப் பேருந்தை காஞ்சிபுரத்தில் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க-வினர், தீயிட்டு எரித்தனர். விளாத்திகுளத்திலும் விருதுநகர் காரியாப்பட்டியிலும் பஸ்கள் எரிக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களும் அலுவலகங்களும் தப்பவில்லை. இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்தது போலீஸ். 'மரக்காணம் வன்முறையில் சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க 100 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்’ எனக் கூறி, அதை வசூலித்துத் தருவதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் தனி அமைப்பை ஜெயலலிதா ஏற்படுத்தினார். ஆனால், அ.தி.மு.க நடத்திய வன்முறைகளுக்கு எந்த நடவடிக்கையும் பாயவில்லை. 'அ.தி.மு.க-வின் நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 9,000 கொலைகளும் 88,500 கொள்ளைகளும் நடந்திருக்கின்றன’ என்கிறார் ராமதாஸ். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் குற்றங்கள் மற்றும் பதிவுசெய்யப்படும் வழக்கு விவரங்களை காவல் துறை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்தத் தகவல்கள் வெளியாவதை நிறுத்திவிட்டார்கள்.

தமிழ்நாடு போலீஸ் சம்பாதித்துவைத்திருக்கும் இன்னொரு பெயர் 'வேடிக்கை போலீஸ்’. சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஆரம்பித்த இந்த வேடிக்கை, இப்போது வரை தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயலலிதாவை விமர்சித்தபோது தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க-வினர் இளங்கோவன் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ், அ.தி.மு.க-வினர் சத்தியமூர்த்தி பவனை ஷிஃப்ட் போட்டு அடித்து நொறுக்கியபோது, கைகட்டி வேடிக்கை பார்த்தது. வேறு எதையும் உருப்படியாகச் செய்யவே இல்லையா? ஏன் இல்லை... சேலம் மேற்குச் சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கணேசன், காலில் அடிபட்டதாகக் கூறி10 நாட்கள் லீவு போட்டுவிட்டு, ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் கரைவேட்டி கட்டிக்கொண்டு களத்தில் நின்றார். அவர் கரை வேட்டி கட்டி செய்த வேலையை மற்றவர்கள் காக்கியை அணிந்துகொண்டு செய்கிறார்கள், அவ்வளவுதான்!

p44g.jpg

ஒளிரும் டாஸ்மாக்... மிளிரும் மிடாஸ்!

படிக்கவைக்கவேண்டிய அரசு, குடிக்கவைக்கும் அவலத்தைக் கண்டித்து போராடிய சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறி, தன் உயிரையே இழக்க நேர்ந்தது. 'மூடு... டாஸ்மாக்கை மூடு...’, 'ஊருக்கு ஊரு சாராயம், தள்ளாடுது தமிழகம்...’ என பாடல்கள் பாடிய கோவன், தேசத் துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.  

'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலத்துக்கு ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராயப் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கை’ எனச் சொல்லி டாஸ்மாக் கடைபரப்பி மக்களின் சமூகப் பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் ஆட்சியை இந்தியாவில் வேறு எங்குமே பார்க்க முடியாது. 'மதுவை விற்று மக்களைக் கொல்லும் அதிகாரம் சமூக விரோதிகளுக்கு இல்லை. எங்களுக்கு மட்டுமே உண்டு’ என்பதை உரக்கச் சொன்னது ஜெயலலிதாவின் ஆட்சிதான்.

சரக்கு விற்றே ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் 'கல்லா’ கட்டும் அளவுக்கு கரன்சி இங்கே புரள்கிறது. 'சமூக விரோதிகளிடம் பணம் குவிந்துவிடக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு மிடாஸும் எலைட்டும் எஸ்.என்.ஜெ-வும்தான் மஞ்சள் குளிக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் நான்கு புதிய மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. முந்தைய தி.மு.க ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் டாஸ்மாக் வருவாய் உயர்ந்தது. ஜெயலலிதா ஆட்சியின் கடின உழைப்பால், ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உயர்ந்துகொண்டிருக்கிறது.

மொத்தம் 19 நிறுவனங்கள் டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்கின்றன. டாஸ்மாக் கொள்முதலில் மிடாஸுக்குத்தான் முதல் இடம். இது யாருடைய நிறுவனம் என்பது ஊரறிந்த செய்தி. மது வருவாய் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, போலி மதுபானம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க 10581 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகளைச் சொல்வதற்கு எந்த ஓர் இலவச டோல்ஃப்ரீ நம்பரையும் காணோம்.

p44h.jpg

'அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் 2011-ம் ஆண்டு முதல் கள்ளச்சாராய சாவுகளே இல்லை’ எனப் பெருமைப்பட்டுக்கொள்கிறது அரசு. சாலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள், குடும்பத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுதல், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு... இவற்றை எந்தக் கணக்கில் சேர்ப்பது? உங்களின் டாஸ்மாக் சரக்கை அருந்திவிட்டுதானே திருவள்ளூர் சோழவரம் அம்பேத்கர் நகர், கிருஷ்ணகிரி தொட்டமஞ்சி ஊராட்சி தொடகரை கிராமம்... என சிறுமிகள் சீரழிக்கப்பட்டனர்? டாஸ்மாக் மதுவால்தானே கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி கூட்டாக வன்புணர்ச்சி செய்யப்பட்டார்?

முறைகேடுகள், ஊழல் புகார்கள்!

முட்டையில் தொடங்கி தியேட்டர் வரை முறைகேடு புகார்கள் வகைதொகை இல்லாமல் அணிவகுக்கின்றன. 'டாப் 10 ஊழல் பெருச்சாளிகள்’ என பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள் சினிமா போல டிரெய்லர்  வெளியிடுகிறார்கள். ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கரன்சி வெறிக்கு உயிரையே விலையாகக் கொடுத்தார் முத்துக்குமாரசாமி. டிரைவர் வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதில் பணம் வாங்கித் தரச் சொல்லி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் அவரது ஆட்களும் காட்டிய அடாவடியில்தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக பலரும் பேசினார்கள். அடிமட்டத்தில் அல்ல, அமைச்சரவைக்குள்ளேயே புகார்கள் புரையோடிப்போனபோதும் ஜெயலலிதா பக்கத்து மாநிலத்தில் நடந்த விவகாரம்போல கண்டும்காணாமலும் இருந்தார். எதிர்க்கட்சிகளும் மீடியாவும் விவகாரத்தை வெளிச்சம் ஆக்கியபோதுதான் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீக்கினார்.

முட்டையில் பூஜ்ஜியம்!

தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவாக 68 லட்சம் பேர் பயன்பெறும் பெரிய திட்டமான சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதில் ஏகப்பட்ட கோல்மால்கள். வாரத்துக்கு மூன்றரைக் கோடி முட்டைகளை கொள்முதல் செய்கிறது அரசு. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக டெண்டர்கள் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட வரையில் பிரச்னை இல்லை. திடீரென்று இந்தக் கொள்முதல் முறை மாற்றப்பட்டது. தமிழ்நாடு முழுக்க ஒட்டு மொத்தமாக டெண்டர் விடும் முறையைக் கொண்டுவந்தனர். 'ஏழு வருடங்கள் முட்டை அல்லது இதர உணவுப்பொருள் வழங்குவதில் அனுபவம் இருக்கவேண்டும். அரசிடம் 90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும்’ என விதிமுறைகள் மாற்றப்பட்டன. 'இவை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு’ என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பினாலும் அரசுத் தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.

p44j.jpg

சில்லறை விற்பனையில் குறைந்த விலைக்குக்  கிடைக்கும் முட்டைகளை, அதைவிட அதிக விலை கொடுத்து வாங்கும் கொடுமையும் நடந்தது. ' 'கிறிஸ்டி ஃபிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’ என்ற நிறுவனம் கர்நாடகத்தில் குழந்தைகள், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று தரமற்ற, பூச்சிகள் நெளியும் உணவுப்பொருளை வழங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனம். அந்த நிறுவனம்தான் தமிழக அரசுக்கு முட்டை சப்ளை செய்கிறது’ என விலாவாரியாக எடுத்துவைத்தும் ஜெயலலிதா அசரவில்லை.

ஆவின் கபளீகரம்!

ஆவின் நிர்வாகத்தில் நடந்த மிகப் பெரிய முறைகேடு, பால் கலப்பட விவகாரம். தென் சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன்தான் இந்த முறைகேட்டின் சூத்திரதாரி. ஆவின் பாலை டேங்கர் லாரிகளில் கொண்டுவரும்போது, வழியில் நிறுத்தி பாலைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்யப்பட்டுவந்தது. இப்படிப் பல ஆயிரம் லிட்டர் பால் தினம்தோறும் கொள்ளைபோனது. அதிக அளவில் தண்ணீர் கலந்ததை மறைக்க பல்வேறு ரசாயனப் பொருட்களைக் கலந்து, தரமற்றப் பாலை பொது மக்களுக்கு விநியோகித்தார்கள்.

ஆவின் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்த வைத்தியநாதன், டேங்கர் லாரி கான்ட்ராக்ட் எடுத்து  பல வாகனங்களுக்கு அதிபராகி பெரும் செல்வந்தராக மாறினார். விவகாரம் வெடித்து வேறு வழி இல்லாமல் வைத்தியநாதனை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார் ஜெயலலிதா. 'ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருக்கும்’ என சென்னை உயர் நீதிமன்றமே எச்சரிக்கும் அளவுக்குப்போனது நிலைமை.

கோகோ கோலா கோல்மால்!

'எங்கோ ஓர் ஆலையின் சங்கு ஒலிக்கும்போது ஒரு கிராமத்தின் அழிவு ஆரம்பமாகிறது’ என்பார்கள். 'ஓர் ஆலை உருவாகிறது என்றால், பலருடைய பாக்கெட் நிரம்பப்போகிறது’ எனப் புரியவைத்துவிட்டது கோகோ கோலா விவகாரம். அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் அடாவடி அத்துமீறலுக்கு நேரடி சாட்சி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை கோகோ கோலா ஆலை விவகாரம். சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா ஆலை அமைக்க, பல சலுகைகளை வழங்கி ஒப்பந்தம் போட்டது அரசு. கடையடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம்... என ஆலைக்கு எதிராக பெரிய கொந்தளிப்புகள் நடந்தன. 'கோகோ கோலா நிறுவனத்துக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை’ என சட்டமன்றத்தில் சொன்னார் வெங்கடாசலம். ஆதாரத்தை

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அள்ளிப்போட்டதும் அமைச்சரின் பொய் அம்பலம் ஏறியது. 'இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சரா... இல்லை கோகோ கோலா நிறுவனத்துக்கு முகவரா?’ என போர்க்கொடி தூக்கினார் இளங்கோவன். வேறு வழி இல்லாமல் கோகோ கோலா தொழிற்சாலைக்குத் தடை விதித்தது தமிழ்நாடு அரசு.

p44k.jpg

பகாசுர கிரானைட் கொள்ளை!

16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளையைக் கண்டுபிடித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பினார் மதுரை கலெக்டராக இருந்த சகாயம். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக சகாயத்தைப் பந்தாடினார் ஜெயலலிதா. சகாயம் அறிக்கை மீடியாவில் வெளியானபோதுதான் கிரானைட் கொள்ளையின் முகம் ஊருக்குத் தெரிந்தது. கிரானைட் முறைகேட்டை விசாரிக்க சகாயத்தை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால் ஜெயலலிதா அரசு, நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தவில்லை. அரசை எச்சரித்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பிறகுதான், விசாரணைக்கு ஒப்புக்கொண்டது அரசு. ஒப்புக்கொண்டார்களே தவிர, இப்போது வரை ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் 'எலும்புக்கூடுகளைக் களவாடிவிடுவார்கள்’ என தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இழந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் சுடுகாட்டில் படுத்துக் கிடந்தார்.  

கிரானைட் கொள்ளை யால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மோசடிக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே குறியாக இருக்கிறது அரசு. கிரானைட் விவகாரத்தில் அரசு காட்டும் சண்டித்தனம் சந்தேக அதிர்வலைகளை உண்டாக்குகிறது.  

பருப்பு கொள்முதல் ஊழல்

பருப்பு கொள்முதல் முறைகேடு, உணவுத் துறையில் நடக்கும் ஊழலுக்கு ஒரு சாம்பிள். ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட பருப்பில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. 'வெளிச்சந்தையில் குறைந்த விலையில் பருப்பு வகைகள் கிடைக்கும் நிலையில், உளுத்தம் பருப்பும் துவரம் பருப்பும் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டால், அரசுக்கு  730 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டுக்கான பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்வதால், சந்தையில் பருப்பு விலை குறையும்போது அரசுக்குக் கூடுதல் இழப்பு ஏற்படும். பருப்பு கொள்முதலில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசுக்கு 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். ஏதோ ஒரு நன்றிக் கடனுக்காக குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் ஆர்டர் வழங்கப்படுவது ஏன்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் டாக்டர் ராமதாஸ்.

தாது மணல் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்காக வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மணல் வெட்டி எடுக்கப்பட்டு, கடத்தப்படுவதாக புகார் எழ... 'சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்’ என அப்போதைய தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், அரசுக்குப் பரிந்துரை செய்தார். இதனால் தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த அப்போதைய வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. 'அந்த ஆய்வு அறிக்கையை ஏன் இதுவரை வெளியிடவில்லை?’ என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியும் கண்டுகொள்ளப்படவில்லை. 71 தனியார் குவாரிகளிலும் தாது மணல் வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை நீடிக்கும் நிலையில் வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ் வேர்ல்ட் கார்னெட் ஆகிய இரு நிறுவனங்களுக்குச் சொந்தமான குவாரிகளில் மட்டும் தாது மணல் வெட்டி எடுக்க நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டிருக்கிறது.

ரேஷன் அரிசி கடத்தல்

'தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது’ என அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை. 2011-12ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில் 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டதாகச் சொன்னது அந்த அறிக்கை. இதன் மதிப்பு 610 கோடி ரூபாய்.

p44m.jpg

கர்நாடகாவுக்காகக் கள்ள மௌனம்!

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு... என தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளில் துணிவான சட்டப் போராட்டம் நடத்துவதில் ஜெயலலிதா முன் நின்றார். காவிரியின் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவைத்தார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என சுற்றியிருக்கும் மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கும்போது எல்லாம் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் அனல் பறக்கும். இவை எல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான 2014-ம் ஆண்டு செப்டம்பர் வரையில்தான். நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு, ஜெயலலிதாவின் குணம் மாறிப்போனது.

கர்நாடகா மேக்கேதாட்டூவில் அணை கட்டும் விவகாரம் பற்றி எரிந்தபோது, ஜெயலலிதாவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. விவசாயிகள் ஒன்று திரண்டு பந்த் நடத்தியபோது அதற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் கர்நாடகாவைக் கண்டிக்கும் வாசகங்கள் இல்லை. இலங்கையைக் கண்டித்து தீர்மானங்கள் போட முடிந்தவர்களால் கர்நாடகாவைக் கண்டிக்க முடியாமல்போனதற்குக் காரணம், கர்நாடகாவில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கு அல்லாமல் வேறு என்ன?

பரணில் தூங்கும் விருதுகள்!

சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்... என தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த விருதுகளை 2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையில் ஆறு ஆண்டுகளாக வழங்காமல் வைத்திருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருது, திரைப்படங்களுக்கு அரசு மானியம், சின்னத்திரை விருதுகளும்கூட நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

சினிமா விருதுகளுடன் வழங்கப்படும் அறிஞர் அண்ணா, கலைவாணர், ராஜா சாண்டோ, எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன், சிவாஜி கணேசன், தியாகராஜ பாகவதர் பெயர்களிலான விருதுகளையும் பரணில் கட்டிவைத்துவிட்டார்கள்.  

விரயமாகும் மக்கள் பணம்!

விளம்பரத்தால் திரைப்படங்களை ஓட்டலாம்... அரசாங்கத்தை ஓட்ட முடியுமா? முடியும் என்பதற்கு ஜெயலலிதா ஆட்சிதான் முன்னுதாரணம். 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் சாதனை விளம்பரங்களுக்கு கோடிகளில் கரன்சிகள் கொட்டப்பட்டன. முதல் ஆண்டு சாதனைக்கு 29 கோடி ரூபாய் தொடங்கி, இப்போது நான்கு ஆண்டு சாதனைக்கு 20 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டிருக்கிறது.

p44n.jpg

கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதால் 76.04 கோடி ரூபாய் கூடுதல் செலவு. இப்படி மாற்றப்பட்ட மருத்துவமனையை நேரில் போய் திறக்காமல் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்தான் ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்தத் திறப்பு விழா விளம்பரச் செலவு மட்டும் 1.74 கோடி ரூபாய்!

100 நாள் சாதனை மலர், ஓராண்டு சாதனை, ஈராண்டு சாதனை என ஆண்டுக்கு ஒரு மலர், 'அம்மாவின் எழுச்சிமிகு உரைகள்’, 'அம்மாவின் அமுத மொழிகள்’, 'அம்மாவின் முத்தான கதைகள்’ போன்ற தலைப்புகளில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் புகழ் பாடின. அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பில் வெளியிடப்படவேண்டிய இந்தப் புத்தகங்களை எல்லாம் அரசு சார்பில் வெளியிட்டு மக்கள் பணத்தை வீணடித்தார்.

மீடியா தொடர்பு!

2011-ம் ஆண்டு தேர்தலில் வென்ற குஷியில் இருந்த ஜெயலலிதா, பத்திரிகையாளர்களிடம், 'நமக்குள் ஓர் ஒப்பந்தம் வைத்துக்கொள்வோம். போகும்போது வரும்போது எல்லாம் என்னிடம் பேட்டி கேட்காதீர்கள். வாரத்துக்கு ஒரு முறை அதாவது செவ்வாய்க்கிழமை தோறும் உங்களைச் சந்திக்கிறேன்’ எனச் சொன்னார். சொன்னதுபோல அடுத்த செய்வாய்க்கிழமை சந்தித்தார். அதன் பிறகு மீடியாவை டீலில் விட்டார். இந்த நான்கு ஆண்டு காலத்தில் நடந்த அதிகாரபூர்வ பிரஸ்மீட்களின் எண்ணிக்கை ஐந்து மட்டும்தான். 'விஸ்வரூபம்’ படப் பிரச்னைக்காக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு, டெல்லியில் நடந்த பிரஸ்மீட்கள், எம்.பி தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது ஒரு சந்திப்பு... அவ்வளவுதான். திட்டமிடப்படாத மீடியா சந்திப்புகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. மீடியாவோடு தொடர்பு இல்லாமல் ஒரு முதலமைச்சர் இந்தியாவில் இருக்க முடியாது. அந்தச் சாதனையையும் படைத்துவிட்டார் ஜெயலலிதா.

விஷன்... இல்லை மிஷன்!

'தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போகிறேன்’ - ஜெயலலிதா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள் இவை. அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்போவதாகச் சொல்லி 'தொலைநோக்குத் திட்டம் - 2023’-ஐ (விஷன்-2023) 2012-ம் ஆண்டில் வெளியிட்டார். இரண்டு வருடங்கள் கடந்து 2014-ம் ஆண்டில் அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். உடனே அமைச்சர்கள் கனவே நனவாகிவிட்டதுபோல வார்த்தை மாலைகளைக் கட்டித் தொங்கவிட்டார்கள். ஆனால், 15 லட்சம் கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள், செங்கல்பட்டு - தூத்துக்குடி, தூத்துக்குடி -  கோவை, கோவை - செங்கல்பட்டு இடையே 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முக்கோண ஆறு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள், 25 ஆயிரம் கோடி ரூபாயில் விமான நிலைய விரிவாக்கத் திட்டம், 1,60,985 கோடி ரூபாயில் தொழில் துறைத் திட்டங்கள், 25,000 கோடி ரூபாயில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள்... என, காட்டப்பட்ட கலர் மத்தாப்புகள் எப்போது எரியும் என்பது அம்மாவுக்குத்தான் வெளிச்சம்.

'மாணவன் ஒருவன் தேர்வு எழுதிக்கொண்டிருந்தான். கேள்வித்தாளில் 'தென்னை மரத்தைப் பற்றி 30 வரிகளில் கட்டுரை ஒன்று எழுதுக!’ என இருந்தது. அந்த மாணவனோ அரைகுறைப் பேர்வழி. ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதும் இல்லை; நன்றாகப் படிப்பதும் இல்லை. தென்னை மரத்தைப் பற்றி, அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பசுவைப் பற்றி அரைகுறையாகப் படித்துவைத்திருந்தான். ஆகவே அவன் எழுதினான்... 'பசு இருக்கிறதே பசு, அதற்கு நான்கு கால்கள் உண்டு, இரண்டு கொம்புகள் உண்டு, ஒரு வால் உண்டு. அது புல்லைத் தின்னும்...’ இப்படியே 29 வரிகள் பசுவைப் பற்றி எழுதிவிட்டு கடைசியாக 'இந்தப் பசுவை, தென்னை மரத்தில் கட்டுவார்கள்’ என எழுதினான். தலைப்பு 'தென்னை மரம்’, எழுதியது பசுவைப் பற்றி! எப்படி இருக்கிறது கதை?’ ஒருமுறை ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைதான் இதுவும். ஜெயலலிதா சொன்னது ஒன்று, செய்தது வேறு... வேறு என்ன சொல்ல! ஆனால், அவர் நம்மிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறார் மிரட்டலாக... 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’

ஓட்டு போட்டதைப் பற்றி சொல்கிறாரோ?


p44p.jpg

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து நடந்தபோது, 'அரசு அனுமதி கொடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. தனியார் நிறுவனம், விதிகளை மீறி கட்டடம் கட்டியிருக்கிறது’ எனச் சொன்னார் ஜெயலலிதா. விசாரணை கமிஷனும் இதைத்தான் வழிமொழிந்தது. 'ஜெயலலிதாவிடம் பூங்கொத்து கொடுக்கவேண்டும் என்றால், கூடை வடிவப் பூங்கொத்துதான் தர வேண்டும்; இரண்டு அடி தள்ளி நின்று நீட்ட வேண்டும்; முதலமைச்சர் தொட்டுத் தந்து, உதவியாளர் வந்து வாங்கும் வரையில் அந்தப் பூங்கொத்தைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். போட்டோவுக்கு இந்த பொசிஷனில் இருந்துதான் போஸ் தர வேண்டும்...’ என்றெல்லாம் பூங்கொத்துத் தருபவர்களுக்கு விதிகள் போடப்படுகின்றன. 'முதலமைச்சருக்கு அளிக்கப்படும் பூங்கொத்தில் பிசிறுகள் இருக்கிறதா... ஸ்டாப்ளர் பின் எதுவும் உள்ளதா... பூக்களில் முட்கள் இருக்கின்றனவா?’ என எல்லாவற்றையும் பரிசோதிப்பார்கள். முதலமைச்சருக்கு வழங்கப்படும் பூங்கொத்துக்கு இத்தனை ரூல்ஸ் போடுபவர்கள், விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்படும்போது எங்கே சென்றிருந்தனர்? பூங்கொத்தைவிட மனித உயிர்கள் மலிவாகிவிட்டனவா?  

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=112736

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.