Jump to content

30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி


Recommended Posts

30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி

 

 

 

 

101a.jpgவீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீஸன் இது. வித்தியாசமான, சுவையான உணவை எதிர்பார்த்து, ‘’இன்றைய ஸ்பெஷல் என்னம்மா..?’’ என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கிண்டர் கார்டன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் `30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி’க்களை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அனுப்ரியா ஆனந்த். இவர் இணையத்திலும் சமையல்கலையில் அசத்தி வருபவர்.


நூடுல்ஸ் சூப்

தேவையானவை: நூடுல்ஸ் - கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

101c.jpg

செய்முறை: கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாயை முக்கால் வேக்காடு பதத்தில் வதக்கவும். தண்ணீர் 2 கப் சேர்த்து, கொதிக்கும்போது நூடுல்ஸை சேர்க்கவும். வெந்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். சூப் சிறிது கெட்டியாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு, வெங்காயத்தாள் சேர்த்து... உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.


இத்தாலியன் சாலட்

தேவையானவை: நறுக்கிய லெட்யூஸ் கீரை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட் - தலா ஒரு கப், நறுக்கிய கலர் குடமிளகாய், வேகவைத்த வேர்க்கடலை, வேகவைத்த கார்ன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா கால் கப், வால்நட் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்.

101d.jpg

சாலட் அலங்கரிக்க: ஆலிவ் எண்ணெய் - கால் கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டீஸ்பூன், ஆரிகனோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (பொடித்தது), மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: ‘சாலட் அலங்கரிக்க’ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். வேர்க்கடலை, கார்ன் உடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். இதனுடன் லெட்யூஸ் கீரை, வெள்ளரிக்காய், கேரட், குடமிளகாய், கொத்தமல்லித்தழை, வால்நட், எலுமிச்சைச் சாறு  சேர்த்து... சாலட் அலங்கரிப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.


டோர்ட்டில்லா சூப்

தேவையானவை: டோர்ட்டில்லா - 2 (செய்யும் விதம்: அடுத்த பக்கத்தில்), நறுக்கிய கலர் குடமிளகாய் - ஒரு கப், ஸ்வீட் கார்ன் - கால் கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 5 பற்கள், தக்காளி - 3, நறுக்கிய ஜுக்கினி (வெள்ளரி போன்றிருக்கும்) - கால் கப், ராஜ்மா - கால் கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஆரிகனோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில், உப்பு - தேவைக்கேற்ப.

101e.jpg

செய்முறை: டோர்ட்டில்லாக்களை இறுக்கமாக சுற்றி நூடுல்ஸ் போல வெட்டி... ஒரு கடாயில் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும். ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். அதில் ஒரு பாதியை எடுத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நறுக்கிய குடமிளகாய், ஜுக்கினோ, ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி வைக்கவும். தக்காளியை வேகவைத்து, தோல் உரித்து மசித்து, வடிகட்டவும்.

வேறு ஒரு கடாயில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளிச் சாறு சேர்க்கவும். அத னுடன் உப்பு, சீரகத்தூள், ஆரிகனோ, மிளகாய்த்தூள், மசித்த ராஜ்மா சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக, வதக்கி வைத்த குடமிளகாய், ஜுக்கினோ, ஸ்வீட் கார்ன் சேர்த்து... ராஜ்மா, டோர்ட்டில்லா, தேவைக் கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கிப் பரிமாறவும்.


டோர்ட்டில்லா

தேவையானவை: மைதா மாவு - முக்கால் கப், கோதுமை மாவு - கால் கப், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

101f.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். இதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளக் கட்டையால் மெலிதாக தேய்த்து... சூடான தோசைக்கல்லில் போட்டு (எண்ணெய் விடாமல்) இருபுறமும் சுட்டு எடுக்கவும்.


ஓட்ஸ் - கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸ்

தேவையானவை: ஓட்ஸ் - 2 கப், கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், பாதாம், வால்நட், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழத் துண்டுகள், சர்க்கரை - தலா கால் கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பால் - தேவையான அளவு.

101g.jpg

செய்முறை: வெறும் வாணலியில் ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸை சூடு செய்யவும். இதனுடன் பாதாம், வால்நட், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழத் துண்டுகளைக் கலந்துகொள்ளவும். சிறிய பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, தேன் சேர்த்து நுரை வரும் வரை கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். இதனுடன் உப்பு, வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். இதனை ஓட்ஸ் கலவையில் நன்றாகக் கலந்து `மைக்ரோவேவ் அவன்’-ல் 300 டிகிரி ஃபாரன்ஹீட்டில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். பரிமாறும் முன் பால் சேர்க்கவும். விருப்பப்பட்டால் நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம்.


ஓட்ஸ் - பனானா ஸ்மூத்தி

தேவையானவை: ஓட்ஸ் - கால் கப், வாழைப்பழம் - ஒன்று, கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்,  தேன் - 2 டீஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்.

101h.jpg

செய்முறை: வாழைப் பழத்தை தோல் உரித்து துண்டு களாக வெட்டி முதல் நாள் இரவு ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸர் பகுதியில் வைக்கவும். ஓட்ஸ், தேன், கோகோ பவுடர், பட்டைதூள், பால் எல்லாம் கலந்து முதல் நாள் இரவே ஃப்ரிட்ஜில் வைக்கவும். காலையில் ஓட்ஸ் கலவை, வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பருகவும்.


சீஸ் ரோல்ஸ்

தேவையானவை: பிரெட் - 4 ஸ்லைஸ், சீஸ் துண்டுகள் - 4, மிளகுத்தூள், வெண்ணெய் - தேவைக்கேற்ப.

101i.jpg

செய்முறை: பிரெட்டின் ஓரங்களை வெட்டி, அப்பளக் குழவியால் மெலிதாக தேய்த்து, சீஸ் துண்டுகளை மேல் வைத்து மிளகுத்தூள் தூவவும். பிறகு, இறுக்கமாக ரோல் செய்யவும். தோசைக்கல்லில் வெண்ணெய் ஊற்றி, ரோல்களைப் போட்டு எல்லா பக்கமும் பொன் நிறமாக ஆனதும் எடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்.


பாஸ்தா சாஸ்

தேவையானவை: தக்காளி - 5, வெங்காயம் - ஒன்று, நறுக்கிய கலர் குடமிளகாய் - ஒரு கப், பூண்டு - 5 பற்கள், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் டீஸ்பூன், இத்தாலிய சீஸனிங் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

101j.jpg

செய்முறை: தக்காளியை வேகவைத்து தோல் உரித்து ஆறியவுடன் மசித்து, வடிகட்டி வைக்கவும். வெங்காயம், பூண்டு, கலர் குடமிளகாய் எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, இத்தாலிய சீஸனிங் சேர்த்து... உடனே வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து சாஸ் பதம் வரும் வரை கொதிக்கவிடவும். ஆறியபின் டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கவும்.

இதை வெஜ் பாஸ்தா தயாரிக்கப் பயன்படுத்தலாம். பீட்ஸா செய்யும்போது, `பீட்ஸா பேஸ்’ மேல் தடவலாம்.


வெஜ் பாஸ்தா

தேவையானவை: பாஸ்தா - ஒரு பாக்கெட், கேரட் - 2, குடமிளகாய், வெள்ளரிக்காய் - தலா ஒன்று, சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், பாஸ்தா சாஸ் - 2 கப் (செய்யும் விதம்: முன்பக்கத்தில்), ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பற்கள், துருவிய சீஸ் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

101k.jpg

செய்முறை: பாஸ்தாவை வேகவைத்து வடித்துக்கொள்ளவும். வேகவைத்த தண்ணீரை சேமிக்கவும். கேரட், குடமிளகாய், வெள்ளரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்துக் கிளறி... கேரட், குடமிளகாய், வெள்ளரிக்காய், கீரையைப் போட்டு வதக்கவும். வெந்தவுடன் வேகவைத்த பாஸ்தா, பாஸ்தா சாஸ், உப்பு சேர்த்து, பாஸ்தா வேகவைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி, துருவிய சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.


சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - ஒரு கப், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பற்கள், வெங்காயத்தாள் - ஒரு கட்டு (நறுக்கவும்), சோயா சாஸ் - 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

101l.jpg

செய்முறை: கோஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சிறிதளவு வெங்காயத்தாளை தனியே எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான நீர்விட்டு மலர வேகவைத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் மீதமுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். தீயைக் குறைத்து, பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்த வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.


கஸீடியா

தேவையானவை: டோர்ட் டில்லா - 2 (செய்யும் விதம்: 107-ம் பக்கத்தில்), சீஸ் - தேவையான அளவு, வெண்ணெய் - சிறிதளவு.

101m.jpg

செய்முறை: தோசைக்கல்லை சூடு செய்து, வெண்ணெயை சேர்த்து டோர்ட்டில்லாவை போட்டு இருபக்கமும் லேசாக சூடுபடுத்தவும். ஒரு பாதியில் துருவிய சீஸ்
வைத்து அரை நிலா போல் மடிக்கவும். இருபக்கமும் நன்றாக அழுத்தி சூடு செய்யவும். அதை இரண்டாக வெட்டி, சல்சாவுடன் பரிமாறவும்.


ஃபலாஃபெல்

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கலர் குடமிளகாய் - கால் கப், துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,  பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கவும்), எள் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பிரெட் - ஒரு ஸ்லைஸ், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

101n.jpg

செய்முறை: கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும். அதை தண்ணீர் இல்லாமல் வடித்து, தனியா சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிரெட்டை எலுமிச்சைச் சாற்றில் நனைத்துப் பிழிந்து, உதிர்த்துக்கொள்ளவும். இவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற எல்லாவற்றையும்  (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துப் பிசைந்து, 10 நிமிடம் ஊறவைக்கவும். இந்தக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக்கி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.


பர்கர்

தேவையானவை: பன் - ஒன்று, வெஜ் கட்லெட் - ஒன்று, வட்டமாக நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய்,  தக்காளி துண்டுகள் - தலா 2, தக்காளி கெச்சப் - சிறிதளவு, சீஸ் ஸ்ப்ரெட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்), ஆலிவ் துண்டுகள் - தேவைக்கேற்ப.

101o.jpg

செய்முறை: பன்னை இருபுறமும் சூடு செய்து, இரண்டு துண்டுகளாக்க வும். ஒரு பாதியில் சீஸ் ஸ்ப்ரெட் தடவவும், இன்னொரு பாதியில் கெச்சப் தடவவும். அதற்கு மேல் கட்லெட், வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, ஆலிவ் துண்டுகள் வைத்து சீஸ் தடவிய பக்கம் கொண்டு மூடவும். சுவை. சத்துமிக்க பர்கர் தயார்.

குறிப்பு: கட்லெட்டுக்குப் பதில் `ஃபலாஃபெல்’ உபயோகித்தும் பர்கர் தயாரிக்கலாம்.


அவகாடோ டிப்

தேவையானவை: அவகாடோ (பட்டர் ஃப்ரூட்), வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

101p.jpg

செய்முறை: அவகாடோவை நன்றாக மசித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

இது பிரெட் உடன் சாப்பிட உகந்தது.


லெமன் சோடா

தேவையானவை: எலுமிச்சை காய் - ஒன்று, எலுமிச்சை பழம் - 2, சர்க்கரை - ஒரு கப், தண்ணீர் - ஒரு கப், எலுமிச்சை தோல் துருவல் - ஒரு டீஸ்பூன், சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.

101q.jpg

செய்முறை: சர்க்கரை, எலுமிச்சை தோல் துருவல், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் (சர்க்கரை கரைந்தும், ஒரு நிமிடம் வரை கொதிக்கவிடவும்). பிறகு ஆறவைக்கவும். எலுமிச்சை பழம், காய் ஆகியவற்றில் சாறு எடுத்து, கொட்டை இல்லாமல், ஆறிய பாகுடன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டிகளைப் போட்டு, ஒரு பங்கு எலுமிச்சைச் சாறும் இரண்டு பங்கு சோடாவும் ஊற்றிப் பருகவும்.


பிரெஞ்சு டோஸ்ட்

தேவையானவை: பிரெட் - 6 ஸ்லைஸ், கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், வெண்ணெய்  (அ) நெய்  - தேவைக்கேற்ப.

101r.jpg

செய்முறை: காய்ச்சி ஆற வைத்த பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து, சர்க்கரையும் சேர்த்து, கட்டியில்லாமல்  நன்றாக கலக்கவும். நான் ஸ்டிக் பேனில் வெண்ணெய் (அ) நெய்யை சூடாக்கி... பிரெட்டை பால் கலவையில் தோய்த்து உடனடியான `பேனில்’ போடவும். இருபுறமும் சிவக்க ரோஸ்ட் செய்யவும்.

குறிப்பு: கஸ்டர்ட் பவுடருக்குப் பதிலாக சோள  மாவும், வெனிலா எசன்ஸும் சேர்க்கலாம்.


லெமன் - கோரியண்டர் ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், தண்ணீர் - ஒன்றரை கப், பச்சை மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

101s.jpg

செய்முறை: அரிசியை அரை மணி நேரம்  ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடு செய்து... பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்க்கவும். தண்ணீரை வடிகட்டி அரிசியை சேர்க்கவும். 2 நிமிடம் அதிக தீயில் அடிபிடிக்காமல் கிளறவும். பிறகு, தீயைக் குறைத்து எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். இடையில் கிளறவும். அரிசியை மலர வேகவைத்து எடுக்கவும்.


ஃபெட்டுஷினே பாஸ்தா

தேவையானவை: ஃபெட்டுஷினே பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு பாக்கெட், தக்காளி - 6, பூண்டு - 3 பல், பாலக்கீரை - ஒரு கட்டு, தயிர் - ஒன்றரை கப், க்ரீம் - ஒரு கப், தக்காளி சாஸ், சர்க்கரை, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.  

101t.jpg

செய்முறை: பாஸ்தாவை வேகவைத்து வடித்துக்கொள்ளவும் (வேகவைத்த தண்ணீரை சேமிக்கவும்). தயிரை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து, க்ரீமுடன் கலந்து தனியாக வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய பூண்டு, தக்காளியை சேர்க்கவும். தக்காளி வதங்கியதும்... தக்காளி சாஸ், சர்க்கரை, மிளகாய்த்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு தயிர் கலவையை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நறுக்கிய பாலக்கீரையை சேர்க்கவும் (தேவைப்பட்டால் பாஸ்தா வேகவைத்த தண்ணீரை சேர்க்கவும்). கீரை சற்று வெந்ததும், பாஸ்தா சேர்த்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு: இதை எல்லா வகை பாஸ்தா பயன்படுத்தியும் செய்யலாம். பாஸ்தாவுக்குப் பதில் ஸ்பெகட்டி பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.


புருஷெட்டா

தேவையானவை: ரஸ்க் - தேவையான அளவு, தக் காளி - ஒன்று, பூண்டு - 2 பற்கள், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன், சீஸ் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக் கேற்ப.

101u.jpg

செய்முறை: தக்காளியை விதை நீக்கி நறுக்கவும். பூண்டு, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கவும். கொடுக் கப்பட்டுள்ள எல்லாவற்றையும் (ரஸ்க் நீங்கலாக) ஒன்றாக கலந்து, சிறிது நேரம் ஊற விடவும். பரிமாறும்போது இந்தக் கலவையை ரஸ்க் மேல் சிறிதளவு வைத்துப் பரிமாறவும்.


மொகிடோ

தேவையானவை: புதினா இலைகள் - கால் கப், பச்சை மிளகாய் (சிறியது) - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன், தண்ணீர், சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.

101v.jpg

செய்முறை: புதினா, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் இதனுடன் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, வடிகட்டவும். பரி மாறும்போது சோடா, ஐஸ் சேர்த்துப் பரிமாறவும்.


சல்சா

தேவையானவை: தக்காளி - 4, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, குடமிளகாய் - பாதி அளவு, எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.

101w.jpg

செய்முறை: தக்காளியின் உள்பகுதியை விதையுடன் எடுத்து மிக்ஸியில் போடவும். சதைப் பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். விதைப்பகுதியை அரைத்து வடிகட்டி தக்காளியுடன் சேர்க்கவும். பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து, குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். பிறகு, சிப்ஸ் உடன் பரிமாறவும்.


வாட்டர் மெலன் ஸ்லஷ்

தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - 2 கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

101x.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களை யும் ஒன்றாக சேர்த்து அடித்து, `திக்’காக பரிமாறவும்.


ஆரஞ்சு டீ

தேவையானவை: டீ பை (டீ பேக்) - ஒன்று, ஆரஞ்சு சாறு - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஐஸ்கட்டிகள் - அரை கப், புதினா இலை - 3, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

102a.jpg

செய்முறை: தண் ணீரைக் கொதிக்க வைத்து... சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆறவைக்கவும். ஒரு கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு... டீ, ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.


ஸ்ட்ராபெர்ரி யோகர்ட்

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 10, தயிர் - 3 கப், சர்க்கரை - முக்கால் கப், தண்ணீர் - முக்கால் கப்.

102b.jpg

செய்முறை: தயிரை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு மூடி, வடிகட்டியின் மேல் வைத்து, கீழே பாத்திரம் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீர் வடிந்து தயிர் நன்கு கெட்டியாக இருக்கும். சர்க்கரையுடன் தண்ணீரைக் கலந்து காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும் நறுக்கிய ஸ்ட்ரா பெரியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். ஆறிய பின் வடிகட்டி, தயிருடன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்து சாப்பிடவும்.


வாட்டர்மெலன் கிரானிட்டா

தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - 7 கப், சர்க்கரை - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - ஒன்று.

102c.jpg

செய்முறை: தர்பூசணியை விதை நீக்கி, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிக்கவும். பிறகு ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு கழித்து அதை போர்க்கால் கீறவும். மீண்டும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும்போது, அதை போர்க்கால் பொடிப் பொடியாக கீறி, கண்ணாடி கப்பில் போட்டுக் கொடுக்கவும்.


பட்டர்ஸ்காட்ச் புட்டிங்

தேவையானவை: சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், பழுப்பு சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், வெண்ணெய் - அரை டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - அரை டேபிள் ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

102d.jpg

செய்முறை: ஒரு கிண்ணத்தில் சோள மாவு பாதி பால் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில் மீதியுள்ள பால், பழுப்பு சர்க்கரை, வெண்ணெய், உப்பு மற்றும் வெனிலா எசன்ஸை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் சோள மாவு - பால் கலவையை சேர்க்கவும். நன்கு கெட்டியாகி, பளபளப்பாக வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு அடுப்பை அணைத்து, கலவையை ஆறவிட்டு, வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி வைத்து எடுத்துப் பரிமாறவும்.


ஃப்ரூட் ஸ்கீவர்ஸ்

தேவையானவை: மாம்பழம் - ஒன்று (க்யூப்களாக நறுக்கவும்), கறுப்பு - பச்சை திராட்சை (சேர்த்து) - ஒரு கப், சீஸ் (அ) பனீர் துண்டுகள் - சிறிதளவு, தேன் - 2 டேபிள்ஸ்பூன், புதினா இலை - 3, உப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு

102e.jpg

செய்முறை: புதினாவை மிகவும் பொடியாக நறுக்கி தேன், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். அதில் பழங்களை சேர்த்து, 10 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு பெரிய குச்சியில் (ஸ்கீவர்) அல்லது பல் குத்தும் குச்சியில் பழம், சீஸ் துண்டு (அல்லது பனீர் துண்டு) என மாற்றி மாற்றி குத்தி சாப்பிடக் கொடுக்கவும்.


பான் கேக்

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பால் - ஒரு கப், பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - தேவையான அளவு.

102f.jpg

செய்முறை: வெண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும். தோசைக்கல்லை சூடுசெய்து, வெண்ணெய் தடவி மாவை ஒரு பெரிய கரண்டி அளவு மாவை ஊற்றவும் (தேய்க்க வேண்டாம்). சுற்றிலும் வெண்ணெய் சேர்த்து, இரு பக்கமும் பொன் நிறமானதும் எடுக்கவும்.

இதை தேன் அல்லது `மேபல் சிரப்’புடன் பரிமாறவும்.


இலங்கை ரொட்டி

தேவையானவை: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

102g.jpg

செய்முறை: பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், மைதா மாவு, பச்சை மிளகாய். உப்பு ஆகிய வற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கனமாக தட்டி, சூடான தோசைக்கல்லில் போடவும். இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து, சைட் டிஷ் உடன் பரிமாறவும்.


ஹாட் சாக்லேட்

தேவையானவை: பால் - ஒரு கப், கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டைத் தூள் - ஒரு சிட்டிகை, சர்க் கரைத் தூள் - சிறிதளவு.

102h.jpg

செய்முறை: கால் கப் காய்ச்சிய பாலில் கோகோ பவுடரை நன்றாக கரைக்கவும். மீதி பாலை சூடு செய்து, கோகோ - பால் கரைசலை சேர்க்கவும். இதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சூடான சாக்லேட் பாலை பரிமாறும் கிளாஸில் மாற்றி, மேலே பட்டைத் தூள், சர்க்கரைத் தூள் தூவி அலங்கரிக்கவும்.


கோதுமை - எள் ஸ்நாக்ஸ்

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஆச்சி இட்லி மிளகாய் பொடி - தேவையான அளவு, எள்  - 2 டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி (பொடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

102i.jpg

102j.jpgசெய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு, சிறிதளவு உப்பு ஆகியவற்றைக் கலந்து, தேவையான நீர் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். அரிசி மாவு, நெய்யைக் குழைத்துத் தனியே வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இடவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மேல் பாகத்தில் குழைத்த மாவைத் தடவவும். அதன் மேல் ஆச்சி இட்லி மிளகாய் பொடி தூவவும். ஒன்றின்மேல் ஒன்றாக சப்பாத்தியை அடுக்கி ரோல் செய்யவும். ரோலை துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடு செய்து, வெட்டிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும். பொரித்தவற்றைத் தட்டில் வைத்து, எள், கொப்பரைத் துருவல், முந்திரிப்பொடி தூவி சூடாகப் பரிமாறவும்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=106486

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பதையும் செய்து பார்க்க ஒரு வருடம் போயிடும்.... ஆயினும் நல்ல அயிட்டங்கள் , பகிர்வுக்கு நன்றி நவீன்...!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.