Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை.

எஸ்.வாசன் - நூல் அறிமுகம்

 

நவீன தமிழ் இலக்கிய மரபானது  புலம்பெயர்  இலக்கியப் படைப்புக்களினால்  இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும்  இதுவரை வெளிவந்த அநேகமான  புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும்  தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது  புலப்பெயர்ந்த ஒரு  நிலத்தில்  அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே  அமைந்திருந்தன.  இவற்றிட்கு மாறாக  இப்புலம்பெயர் மண்ணில்  தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாக கொண்டு அம்மண்ணின் மைய அரசியலையும் சமூக பொருளாதார பின்னணிகளையும்   களமாககொண்டு  ஒரு புதிய படைப்பாக சேனன் அவர்கள் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவலானது புலம் பெயர் இலக்கிய மரபை  இன்னொரு தளத்திற்கு நகர்த்தி சென்றுள்ளதாகவும் அதற்கு இன்னொரு பரிமாணத்தை வழங்கியுள்ளதாகவும்  இலக்கிய விமர்சகர்களினாலும் ஆய்வாளர்களினாலும் மிக அண்மைக்காலமாக  மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. 

சேனன் புகலிட அரசியல் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவர், இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத் தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக்கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும்  ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு  மக்களாக நின்று உழைப்பவர், ஊடகவியலாளர், விமர்சகர், கொஞ்சம் உன்மத்தம் பிடித்தவர்( உபயம்- யமுனா ராஜேந்திரன்) என பல்வேறு பரிமானங்களைக் கொண்டவர். ஆங்கிலத்திலும் உலக இலக்கியங்களிலும் வியக்கத்தகு ஆற்றல் பெற்ற இவர் இப்போது முதன் முறையாக ஒரு நாவல் மூலம் படைப்பிலக்கிய வாதியாக எமக்கு அறிமுகமாகின்றார். ஆனால் இவர் பல சகாப்தங்களுக்கு முன்பே பல இலக்கியப் படைப்புக்களைப் படைத்திருக்கிறார் என்பதும் அன்று ஷோபா சக்தியின் நண்பராக விளங்கிய இவரே ஷோபா சக்திக்கு உலக இலக்கியங்கள் மீதான பரிச்சயங்க்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதும் நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மை.  ஒரு அகதியின் வாக்குமூலமாக ஆரம்பமாகும் ‘கொரில்லா’ நாவலின் அந்த ஆரம்ப அத்தியாயமும் வடிவமும் தனது உலக இலக்கியங்களின் மீதான பரிச்சயம் உள்ள  இவரது எண்ணத்தில் உதித்த எண்ணக்கரு என்பதும், இப்படி பல வகைகளிலும் ஷோபாசக்திக்கு உறுதுணையாக இருந்த இவர் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்று ஷோபாசக்தியின் மக்கள் விரோத அரசியலை முன்வைத்து ஒரு புத்தகமே வெளியிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதும் வேறு ஒரு சம்பவம்.  

நம் மீது பிரயோகிக்கப்படும் ஒழுங்கு முறைமைகளும் நியதிகளும் நக்கெதிரானவை என்று நாம் அறியும் பட்சத்தில் அவற்றை எவ்வழியிலாவது  உடைத்தெறிய முயல்வது மனித இயல்பு.அத்தகைய உடைத்தெறியும் முயற்சியின் விளைவாக  ஒரு ஒழுங்கு முறைமையற்ற செயற்பாடாக   உருப்பெற்ற லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரத்தினை மையமாக வைத்து  இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய டப்லினியர் என்ற சிருகதைத் தொகுப்பே இந்நாவலிற்கான தனது ஆகர்ஷணம் என்று குறிப்பிடுகிறார்  சேனன். 

பிரித்தானிய ஆட்சி முறைமையினையும் சட்ட முறைமைஇணையும் கேள்விக்குள்ளாக்கிய லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரமானது மார்க் டகன்  என்ற கறுப்பின இளைஞனை பிரிட்டிஷ் பொலிசார் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஆரம்பமாகின்றது. கோபமூட்டப்பட்ட சிறுபான்மை இன இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட   சுமார் ஒரு வார காலம் நீடித்த இக்கலவரத்தில் சிறிய வியாபார நிலையங்களில்லிருந்து பல்பொருள் அங்காடிகள் பொது ஸ்தாபனங்கள் அரச நிறுவங்கள் என அனைத்துமே சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. இக்கலவரங்களும் வன்முறைகளும் அன்று BMM புரட்சி அல்லது கலகம் என்று சமூகவலைத்தளங்களில் வர்ணிக்கப்பட்டிருந்தது. காரணம் - மிகத் தெளிவாகவும்  திட்டமிடப்பட்டும் ஒரே நேரத்தில் பல்வேறு பட்ட இடங்களில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எந்தவித தடயங்களையும் விட்டு வைக்காமல் மேற்கொண்டு இத்தாக்குதலானது எப்படி சாத்தியமானது என்று பலரையும் வியப்பில் ஆழ்த்தி, பாதுகாப்பு புலனாய்வு பிரிவினரையும் திகைப்பில் ஆழ்த்திய போது.  இதன் பின்னால் BMM எனப்படும் பிளாக்பெரி மேசன்ஜ்சர் சேவை இருந்தது  அறிந்து கொள்ளப்பட்டது. (பிரித்தானிய இளைஞர்களில் 37% ஆனோர் பிளாக்பெரி செல்லிடத் தொலைபேசிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.  அதிலும் இவ் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களில் 70% இற்கு மேலானோர் பிளாக்பெரி பாவனையாளர்களாக இருந்துள்ளனர். இந்த செல்லிடத்  தொலைபேசிகளுக்கான பிரத்தியேக தகவல் பரிமாற்ற சேவையே பிளக்பெரி மெசஞ்சர்(BMM) ஆகும்.  இதன் மூலம் பலருக்கு ஒரே நேரத்தில் வேகமாகவும், துரிதமாகவும், இலவசமாகவும் தகவல்களை அனுப்பமுடியும்.  மேலும் இதன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்பு.  பொதுவாக பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அனுப்பும் போது அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை  பரிசீலிக்க முடியாது. இது அவர்களின் தகவல் பரிமாற்றத்தை இரகசியமாக வைத்திருக்க உதவுகின்றது. இந்தியா உட்பட பலநாடுகளில் பிளாக்பெரி கையடக்கத் தொலைபேசி பாவனையில் உள்ளபோதும் பிளாக்பெரி மேசென்ஜர் சேவை பாதுகாப்பு காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.)

சமூக வலைத்தளங்களின் உதவியோடு ஆரம்பிக்கப் பட்டு பின் பிசுபிசுத்துப் போன அரபு வசந்தப் புரட்சிகளைப் போல பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் உதவி மூலம் தொடரபட்ட இக்கலவரமும் வன்முறையும் BMM புரட்சி அல்லது கலகம் என்று  சமூகவளைத்தலங்களில் வர்ணிக்கப்பட்டிருந்தது. இந்த BMM  கலகங்கள் மீதும் வன்முறை மீதும் சேனன் வைத்துள்ள அதீத ஆர்வமும் மிகை  நம்பிக்கையும்   அவரது இந்நூலிலும் இந்நூல் குறித்த அவரது உரைகளிலும் வெளிப்படையாக தெரிகின்றது. இது குறித்து எமக்கு உடன்பாடில்லையாயினும் இதனை மையப்  பொருளாக வைத்து ஒரு நாவலை அவர் பின்னியிருக்கும் துணிகரம் பாராட்டுக்குரியதே.

இநாவலானது  98 பக்கங்கள் மட்டுமே அடங்கிய மிகச்சிறிய நூலாக வந்திருப்பது மிகுந்த எமாற்றத்தையளித்தாலும் லண்டன் எனும் பெருநகரம் குறித்த மாயையை இது தலை கீழாகப் புரட்டிப் போடுகின்றது. லண்டனில் வாழ்கின்ற விளிம்பு நிலை மக்களைக் கதை மாந்தர்களாக கொண்டு இந்நாவல் நகர்கின்றது. ஐயர் என்னும் ஒரு யாழ்ப்பாணத்து இளைஞன், அவனது காதலியான கறுப்பினப்பெண் சாந்தேலா, சுரேஷ் என்ற தமிழக இளைஞன், அவனது சமபாலுறவுக்காரனான டியாகோ என்ற போர்த்துக்கீய இளைஞன் என்பவர்களை  முக்கிய பாத்திரங்களாக கொண்டு நகரும் கதை ஆனது இவர்களது உறவுகளையும் உறவுச்சிக்கல்களையும் விபரிப்பதோடு, சாமான்ய மனிதர்களான இவர்கள் அதிகாரங்களினால் எதிகொள்ளும் நெருக்கடிகளையும் அந்த அதிகாரங்கள் இவர்கள் மீது பிரயோகிக்கும் வன்முறைகளையும் அதிகாரத்துஷ்பிரயோகங்களையும் முக்கியமான பேசு பொருளாகக் கொண்டு நகர்கின்றது. அத்துடன் சம்பவங்களின் தொடர்பாக ஊடகங்களில் வெளிவரும்  தகவல்கள் அனைத்தும் எப்படி அதிகார வர்க்கங்களின் ஊதுகுழலாக மாற்றியமைக்கப்பட்டு எம்மை வந்தடைகின்றது என்பதையும் அதிர்ச்சி தரும் வகையில் வெளிப்படுத்துகின்றது.
புறநிலைக் காரணிகளான அரசியல்,சமூக ,பொருளாதார பின்னணிகளோடு இந்நாவலானது ஒரு நேர்கோட்டில் பயணம் செய்தாலும், அகநிலைக் காரணிகளான அன்பு, பாசம்,காதல், காமம், போன்ற உள் மன உணர்வுகளையும் சித்தரிக்க இந்நாவல் தவறவில்லை. முக்கியமாக ஓரினசேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கு அங்கீகாரம் கோருவது போன்று ரமேஷ், டியாகோ இருவரினதும் உறவுகள் வெளிப்படுத்துகின்றன. நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரினப்புணர்ச்சியையும் கட்டற்ற காம வேட்கைகளையும் வெளிப்படுத்திய முதல் நாவல் கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானிடம்’. இன்றைக்கு சுமார் ஒரு அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் ஒரு நாவல் ஓரினப்புணர்ச்சியை வெளிப்படுத்தி  வெளிவருகின்றது. ஆனால் பசித்த மானிடத்தில் ஆசைகளும் அபிலாசைகளும்  அதிகாரத்தினாலும் பணபலத்தினாலும்  பூர்த்தி செய்யப்படுகின்றன. அதற்கு அங்கு அங்கீகாரம் இல்லை. ஆனால்  இங்கு புனிதமான உறவுகளின் உடன்பாட்டில் வேட்கைகள் தனிக்கப்படுகின்றன. இது இங்கு ஒரு வெளிப்படையான ஒரு அங்கீகாரத்தைக் கோரி நிற்கின்றது.   

மேலும் இவ்விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையையும் வாழ்வு முறைகளையும் எந்தவித ஒப்பனைக்களுமின்றி அலங்காரமான வார்த்தைகள் எதுவுமின்றி தனது சாதாரண படைப்பு மொழி மூலம் சேனன் வெளிப்படுத்துகின்றார்.   வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருகின்ற உலகின் மிக முக்கிய சுற்றுலா தல மையமாக இருக்கின்ற லண்டன் நகரினை,  மூத்திர வாடை எடுக்கும் தொடர்மாடிக் குடியிருப்புக்களையும் அதன் சுற்று சூழல்களையும் தனது காட்சிப்புலத்தில் உருவாக்கி  இந்நகரின்  இன்னொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை உலகிற்கு வெளிப்படுத்துகிறார். இப்பெரு நகரம்  குறித்து உலகின் பல மூலைகளிலும் பல கோடி மக்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் காலகட்டத்தில் இங்கு ஏற்கனவே வாழ்கின்ற மக்களின் அவலங்களையும் அருவருப்பான வாழ்க்கை முறைகளையும் நிர்வாணமாக்குகின்றார். 

இது வெறுமனே எமது வாசிப்பு அனுபவங்களின் எல்லைகளை விஸ்தரிப்பதற்காக எழுதப்பட்ட நாவல் அல்ல. எப்போதும் அதிகாரங்களினாலும் ஊடகங்களினாலும்  வெளிப்படுத்தப்படும் பொய்யான தகவல்களையே கிரகிக்கும் எமக்கு இந்நாவல் வெளிப்படுத்தும் உண்மைகள் எம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. எம்மை நாமே கேள்வி கேட்கவும் எம்மை நாமே பரிசீலித்துப் பார்க்கவும்  வேண்டிய தேவையையும் இச்சிறிய நூல் வலியுறுத்துகின்றது. இவ் உண்மைகளை  வெளிப்படுத்த அவர் திரட்டிய தகவல்களும் அதன் பின்னாலான உழைப்பும் எம்மை வியக்க வைக்கின்றது. ஆயினும் இந்நாவல் எழுதி முடிக்க தனக்கு நான்கு வருடங்கள் பிடித்தது என்ற இவரது கூற்றிலிருந்து இவரது அசிரத்தையும் சோம்பேறித்தனமும் அக்கறையின்மையும் தெளிவாகப் புலப்படுகின்றது. இந்த அக்கறையின்மையும் அசிரத்தையும் சோம்பலும்  இந்நாவலிலும் பக்கத்திற்குப் பக்கம் வெளிப்படுத்தப்படுகின்றது.  பல்வேறு மொழிகளிலும் பல்வேறு இலக்கியங்களுடன் பரிச்சயமான சேனன் ஒரு மோசமான படைப்பு மொழியுடன் அழகியல் தன்மையில் எவ்வித நிறைவும்ற ஒரு படைப்பினை வழங்கியிருப்பது   பலத்த ஏமாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.  அழகியல் என்ற கருத்தில்  நாம் இவரிடமிருந்து  அசோகமித்திரன்  அல்லது அழகிரிசாமி போன்றவர்கள் போல் எழுத வேண்டும் என்னும் கோரிக்கையை விடுக்கவ்வில்லை. ஆனால் புலம்பெயர் இலக்கியத்தை இன்னொரு தளத்திற்கு நகர்த்தியிருக்கும் நாவல் என்று பெயரெடுத்த ஒரு படைப்பு கொண்டிருக்க வேண்டிய அடிப்படையான அழகியல்  இந்நூலில் இல்லை என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.  அத்துடன் பிரித்தானிய மைய அரசியலில் பயணிக்கும் இவர் கருத்தில் எடுக்க வேண்டிய பேசுபொருட்கள் இங்கு இன்னும் அதிகம் இருக்கின்றது. நரிகளும் எலிகளும் கூடவே வாழும் ஒரு பெருநகரில் புறாக்கூடுகள் போன்ற குடியிருப்புக்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் எம்மக்கள்  ஒவ்வொருவரினதும் வாழ்க்கை முறைகளும் மிகவும் மோசமானவை, கொடுமையானவை. இவையனைத்தும் பேசப்பட வேண்டுமாயின் மக்களோடு மக்களாக நின்று போராடும் சேனன் போன்றவர்கள் BMM புரட்சிகளுடன் மட்டும் தமது குரலை மட்டுப்படுத்தாமல்  இன்னும் அதிகம் பேச வேண்டும். இவரது உரத்த குரலானது  இன்னுமொரு படைப்பின்  ஊடாக ஆனால் கொஞ்சம் அதிக பக்கங்கள் அடங்கிய படைப்பொன்றின் ஊடாக வெளிவரும் என்பது எமது எதிபார்ப்பு. சேனன் அதனை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3023:-bmm-&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.