Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியம் தழைக்க தேவை - தைக்கூட்டணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016

3-ஆம் பதிவு

நாள்: 27.01.2016

    

                பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் இரண்டாவது மறை நிலவு தோல்வியுற்றது. வளர்பிறையின் முறை முற்றாமல், நாள் முதிர்வு எய்தாமல், நாளும் கிழமையும் ஒரு சேரப் பொருந்தாமல் 14-ஆம் நாளில் முழு நிலவானது முந்திக் கொண்டு வந்து விட்டது.

     23.01.2016 அன்று மாலை 06.15-க்குக் கீழ்வானில் ஒரு பனை உயரத்தில் தோன்றி அன்று இரவு 12.15-க்குத் தலை உச்சியைக் கடந்து விடியும் வரையில் தாக்குப் பிடித்தது. இவை முழுநிலவு நாளுக்கான அறிகுறிகள். ஆனால் அன்றைய நாள் முழுநிலவின் முதல் நாள்.

     முறையாக முழுநிலவு தோன்ற வேண்டிய 15-ஆம் நாளான 24.01.2016 அன்று முன்னிரவு 7.30-க்குத் தோன்றியதுடன் வளர்பிறை விலகல் என்ற ஆடுதலைப் போக்கின் 14-ஆம் நாள் எட்டிய வட எல்லையிலிருந்து மீண்டு தெற்கு நோக்கி விலகித் திரும்பி விட்டது. இவை முழு நிலவின் மறுநாளுக்கான அறிகுறிகள்.

     இவ்வாண்டில் இதுவரையில் இரண்டு முழுநிலவுகள் முறையே ஒவ்வொருநாள் தோற்றுள்ள படியால் ஆண்டு நாள்களின் எண்ணிக்கையில் இரண்டு நாட்கள் குறைந்து விட்டன என்பது கவலையளிக்கிறது.

கேடு வரும்!

      கேடு வரும் பின்னே! மதிகெட்டு வரும் முன்னே!

என்று ஒரு பழமொழி தமிழில் வழங்கி வருகிறது. இது தனியொருவரைக் குறிக்கலாம் என்ற கருத்து இதுவரை இருந்தது. காலம் கெட்டுக் கிடக்கிறது. இது கேடு காலம், என்றூழ் என்ற பார்வையில் மதியுறழ் மரபின் முதியோர் அறிவின்படி அது நிலவைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த மதி கெட்டு வருகிறது இன்று. எந்தக் கேடு எதிர் வருமோ நாளை என்று கலங்க வேண்டிய நிலைமை அறநெஞ்சம் கொண்ட அனைவருக்கும் இருக்கும். இருக்க வேண்டும்.

வளர்பிறையில் சரிவு:

     தக்கார் அவையத்தார் கடந்த நான்கு ஆண்டுகளாக நாளெண்ணிப் பிறை கணக்கிட்ட அளவில் சரிவுகள் அனைத்தும் வளர்பிறையில் மட்டுமே நேர்வது தெரிய வருகிறது. தேய்பிறையின் 15 நாள்களில் சரிவுகள் நேர்வது இல்லை.

     இதனால் ஐயப்பட வேண்டியது யாதெனில் இந்தக் கேடு மாந்த முயற்சியினால் விளைகிறதா என்பது தான். குறிப்பாக யாகங்களும் ஓமங்களும் வளர்பிறையிலேயே செய்யப்படுகின்றன. இவை நிலவைத் தடுமாறச் செய்யும் முயற்சிகளா என்பதனை அக்கறையோடு ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

அந்தணர் வேள்வியா? அவுணர் வேள்வியா?

                முருகனின் ஆறு முகங்களுள் மூன்றாவது முகம் கிழமை வரிசையில் செவ்வாய்க் கிழமையைக் குறிப்பதாகும். செவ்வாயில் நடத்தப் பெற்ற அவுணர் வேள்வியைச் சிதைத்து வெள்ளியில் அந்தணர் வேள்வி நடத்திவிட்டனரோ சமணர் என்ற ஐயம் எழுகிறது. அந்தணர் என்ற சொல் சீவக சிந்தாமணியில் சமணர் தலைவனைக் குறிக்கிறது. அந்தணர் தாதை! மேலும் இன்று தரையில் அமர்ந்து கொண்டு குழிதோண்டித் தீ வளர்த்து தருப்பையைப் பொசுக்கி மந்திர ஒலிப்புகளை முணுமுணுக்கும் அனைத்துக் கிரிசைகளும் சமணக் கிரிசைகள் என்பது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் உண்மை.

     இந்தச் சமணர் வேள்வியை, அந்தணர் வேள்வியைப் பார்க்க முருகன் தனது ஒரு முகத்தை ஒதுக்கி வைத்துள்ளான் என்பதும் நம்ப இயலாதது.

“ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அவுணர் வேள்வி ஓர்க்கும்மே” (திருமுருகாற்றுப்படை – 95,96)

ஓலைச்சுவடிகளில் இந்த அடி அந்தணர் வேள்வி என்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் சரியாக இருக்கிறது:-

     செவ்வாய்க் கிழமையாகிய மறைநிலவு நாள் சரியாக இருக்கிறது. வெள்ளிக் கிழமையில் பொருந்த வேண்டிய முழுநிலவு மட்டும் தடுமாறுகிறது. இது சண்டாளர்களின் செயலா இல்லையா என்று ஏன் ஐயப்படக் கூடாது. சண்டாளக்குச்சி என்பது கருக்கலைப்பு செய்யப் பயன்படுத்தும் எருக்கலைக் குச்சி. அடி சண்டாளப் பாவி என்றால் ஈவு இரக்கம் இல்லாமல் கருக்கலைப்பு செய்கிறவளே என்று புரிந்து கொள்ளப்படுகிறது. முழுநிலவைத் தடுமாறச் செய்து விட்டு மூடி மறைக்கும் சண்டாளர்கள் எங்கே? முழுநிலவை அரவு தீண்டி விடாமல் பொத்திப் பொத்திக் காப்பாற்றிய தமிழ் அரசர்கள் எங்கே? ஆரிய வைதிக வாழ்வியல் தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. நிலவுக்கும் எதிரானது என்று தெரிகிறது.

மண்ணை அள்ளிப் போட்டது பஞ்சாங்கம்:-

     இது சரி அது தவறு என்று சுட்டிக் காட்டத் தவறிய பஞ்சாங்கம் கள்ளம் இல்லாத தமிழர்களின் மரபறிவை, வாழ்வியலை முற்றாகச் சிதைத்து விட்டது.

     அரச மரபின் முன்னோன் முருகனின் மீது தமிழர்கள் கொண்டிருந்த அடங்காப் பற்றின் விளைவாகப் பார்த்துப் பார்த்துக் குமட்டில் வேல் குத்திக் கொள்ளும் எவரும் அந்த நாள் சரியானது தானா என்று பார்ப்பதில்லை. கடந்த பங்குனி உத்தரம் முடிந்த பிறகு மறுநாளில் வந்தது முழுநிலவு. பூசம் வரும் நாளைக் காத்திருந்து எதிர்பார்த்துக் காவடி எடுக்கின்றனர். இவ்வாண்டின் முதல் நாளே முந்தி விட்டது முழுநிலவு. இந்த நிலவே மக நிலவு என்பது வேறு செய்தி. தை முதல் நாளைப் பஞ்சாங்கப்படி எதிர்பார்த்துப் பொங்கலிடுகின்றனர், கதிரவன் என்றோ திரும்பிச் சென்ற பிறகு.

     அப்படியே பொங்கலிடப்பட்டாலும் அதை மொட்டைப் பொங்கலாக வைத்துக் கொள்! புத்தாண்டு என்று சொல்லாதே என்று அலறுகிறது ஆரிய வைதிகம்.

 

 

கடந்து சென்றது தைப்பூசம் அல்ல!

     கடந்த 24.01.2016 அன்று பஞ்சாங்கத்தின் படி தைப்பூசம் கொண்டாடப் பட்டது. உண்மையில் அது தைப்பூசம் அல்ல. மாசிமகம்.

                மழை நீங்கிய மாவிசும்பில்

                மதி சேர்ந்த மக வெண்மீன்

      உருகெழு திறல் உயர் கோட்டத்து

      முருகு அமர் பூமுரண் கிடக்கை (பட்டினப்பாலை – 34-37)

    

     கரிகாலனின் அரண்மனையில் மாசி முழுநிலவு மக வெண் மீனுடன் தோன்றியதாகக் குறிப்பு இருக்கிறது. இன்று மக வெண்மீன் பொருந்தி வரவில்லை. ஆண்டு நாட்களில் சரிவு நீங்கிச் சீரடைந்தால் மட்டுமே தைப்பூசத்தில் அறுமீன் நள்ளிரவில் பொருந்துவதை, மாசியில் மகவெண்மீன் பொருந்துவதை, சித்திரையில் சித்திரை மீன் சேராமல் செல்வதை ஒவ்விப் பார்த்து உறுதி செய்ய இயலும்.

 

அடுத்த மறைநிலவு:-

                கடந்த 23.01.2016-ல் முழுநிலவு தோற்றுக் கடந்து விட்ட நிலையில் அந்த நாளைத் தவிர்த்துச் சரியாக 15-ஆம் நாளில் அதாவது 07.02.2016 அன்று மறைநிலவு நாள் அமையும். அன்றைய நாளைச் செவ்வாய்க்கிழமையாகக் கணக்கிட்டு ஒவ்வொரு நாளையும் உரிய முறையில் கட்டியெழுப்பினால் அடுத்த 15-வது நாளில், அதாவது 22.02.2016 அன்று முழுநிலவை எதிர்பார்க்கலாம். அன்று பங்குனி உத்தரம் ஆகும்.

 

பெருந்தச்சு நிழல் நாள்காட்டி:

     ஆண்டு நாட்களை 360 என வரைவு செய்து, வாரநாட்களை 6 என வரைவு செய்து, சனிக்கிழமைக்குப் பாடைகட்டி, அவிட்ட நட்சத்திரத்தை முற்றாக நீக்கித் தமிழின் 41 செவ்விலக்கிய வியப்புகளைப் பலநூறு முறை பார்த்துச் சில ஆண்டுகள் காத்திருந்து வடிவமைக்கப்பட்ட பெருந்தச்சு நிழல் நாள்காட்டி என்பது எந்தத் தமிழனாலும் புரிந்து கொள்ள இயலும் எளிமையான வாய்ப்பாடு ஆகும்.

 

குப்பையும் நெருப்பும்:-

     பெருந்தச்சு நிழல் நாள்காட்டியானது பஞ்சாங்கத்தைச் சுட்டெரிக்கும் நெருப்பாக எழுமேயன்றி பஞ்சாங்கத்தோடு கூட்டு வைத்துக் கொண்டு ஒரு போதும் புகையாது.

 

தமிழர்கள் செய்ய வேண்டியது:-

     உண்மைத் தமிழர்கள், தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுக்குள் வழிகாட்டும் ஒரு குழுவைக் கட்டமைத்து அதன் வழியே நடக்க வேண்டுமேயன்றிக் கடைத்தெருவில் விற்கப்படும் பஞ்சாங்கத்தைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது. பின்பற்றச் சொல்லி எவர் வற்புறுத்தினாலும் பணியவும் கூடாது.

 

பஞ்சாங்கத்தை உடைப்பதும் திருத்துவதும்:-

     தற்போது கண்டெறியப்படும் பிழைகளுக்கெல்லாம் தீர்வாகப் பஞ்சாங்கத்தில் ஒரு திருத்தம் போட்டு விட்டால் சரியாகிப் போகாதா? என்ற பார்வை எவருக்கும் வராது. வந்து விடக் கூடாது. அது அயன்மை இனப் பார்வை. மாறாகத் தற்போது கண்டெறியப்படும் பிழைகளுக்கெல்லாம் தீர்வாக ஒரு மாற்றுப் பார்வையைத் தமிழர்கள் வளர்தெடுப்பதும், மரபு வழியில் வாழ்வியலைப் புதுப்பித்துக் கொள்வதுமே பொருத்தமான புரிதலைத் தரும். பஞ்சாங்க நம்பிகளையும் அவிட்டப்பாதை அம்பிகளையும் அம்போவெனக் கைவிடுவதே சரியான முடிவாகும். பஞ்சாங்கத்தை உடைப்பது திருத்துவது இவற்றை விடுத்து ஒதுக்கி வைப்பது மட்டுமே அடுத்த தலைமுறையை வாழ வைக்கும்.

 

அரைசு எனப்படுவது தைக் கூட்டணி அரசு:-

     தமிழர்களின் அறம் சார்ந்த அரசு, தமது அறிவுத் துறைகளை வகைப்படுத்தி முழுநிலவைத் தடுமாற விடாமல் அரவணைத்து அரவு தீண்ட விடாமல் அணைத்து, ஆடுகொள் நேமி கொண்டு அரவு அணை அசை இய முன்னோன் கலித்தொகையில் உள்ளான். இருக்கட்டும். இன்று மீண்டும் தைக்கூட்டணி அமைத்து ‘அரைசுதல்’ எனும் மொழிவினையின் மூலமாகக் காப்பாற்றும் கடப்பாடு உடையது.

 

இதில் தமிழர்கள் நேரடியாக ஈடுபட இன்றே, இன்னே, இப்பொழுதே பொருத்தமான நாளும் பொழுதும் ஆகும்.

தமிழர் அல்லாத அரசுகள்:-

      இன்றைய நிலையில் இவ்வுலகில் தமிழர் அல்லாதாரின் அரசுகளே பரவிக் கிடக்கின்றன. இவற்றில் எவையேனும் நிலவை ஒழுங்கு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுவதாக அறிவிப்புச் செய்தால் அந்த அரசுக்குப் பிற அரசுகள் அனைத்தும் கிளை அரசுகள் ஆகும். அதாவது கப்பம் கட்டும் அரசுகள் ஆகும்.

                கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்

      மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்கக் காணாய்

                                (சிலம்பு – காடுகாண் காதை – 144, 45)

 

     தெளி உச்சியை ஒருவன் கவ்வி விட்டால் அல்லது கப்பி விட்டால் அவனது முயற்சியைப் பிறர் வலுப்படுத்துவது என்பதே இதன் வழியே விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மை.

     அப்படி ஏதும் எங்கும் தென்படாத நிலையில், அந்த முயற்சியில் ஈடுபடவும், எடுத்து நிறுத்தவும், துப்பும் துணிச்சலும் உடைய அரசு என்பது தமிழர்களின் அரசுதான். அந்த அறிவைத் தாங்கியுள்ள மொழி தான் தமிழ்மொழி.

     நெடுநீச்சால் எடுத்த அவுணர் மூச்சாக அந்த மொழியின் மூச்சுக் காற்றை ஏந்தி வரும் இனம் தமிழ் இனம். அதற்குக் கொம்பு முளைக்கும்! கோலோச்சும்! கொற்றமும் கொள்ளும்.

 

தேங்கிய இடத்தில் அதிர்வு:-

     தேங்கிய இடத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் என்பது தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலுக்கு இருக்கிறது.

     சித்திரையைக் கட்டிக்கலாம். தையை வைச்சுக்கலாம். அதை அதை அப்படி அப்படியே வைச்சுக்கலாம். அரிப்புக் கண்ட இடங்களில் மட்டும் குரங்குகள் போல் தொட்டுக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

     சித்திரைதான் புத்தாண்டு! அதுவும் தமிழ்ப்புத்தாண்டு! என்று சட்டமியற்றித் தமிழர்களை முட்டாள்களாக்கும் எவரது முயற்சியும் இனி எடுபடாது.

     தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாள் தான். ஆனால் அதைப் பஞ்சாங்கம் தான் சொல்ல வேண்டும். பழந்தமிழ் சொல்லக் கூடாது என்று பசப்புகிறவர்களின் பம்மாத்து வேலைகள் இனி எடுபடாது.

     தமிழ்ப்புத்தாண்டு என்னவோ தை முதல் நாள்தான். ஆனால் ‘பயந்து வருதே’ என்று தொடை நடுங்கிக் கொண்டு பூசத்தைப் பற்றிக் கொள்ளும் பேதைமைக்கு இனி வேலை இல்லை.

     எரிந்து வரும் கதிரவனையும், சரிந்து வரும் ஆண்டு நாட்களையும் புரிந்து கொள்ளும் இளைய தலைமுறை ஊற்றமாய்ப் பாயும். தமிழர் மரபில் பாயும் காளைகளுக்குத் திமிலையும், பாயும் காளையர்க்குத் திமிரையும் தரும் பணியாமரபின் பேராண்மையே தமிழ்த் தேசியத் தமிழ்ப் புத்தாண்டு ஆகும். அது அதன் பண்பு.

 

 

மண்ணைப் போட்டு மூடலாம்:-

     தமிழ்ப் புத்தாண்டுப் புரிதல் என்பது தமிழ்த் தேசியப் புரிதலுக்குப் பயன்படவில்லையென்றால் இன்னும் சில காலத்திற்கு அதன் மீது மண்ணைப் போட்டு மூடலாம். தமிழ்த் தேசியப் பகைவர்களின் இயற்கை மாரணங்கள் நிகழும் வரை.

 

தமிழ் உயர் ஆய்வில் அயன்மை இனப்பார்வை:-

     தமிழ்மொழி ஒன்றும் பொது மொழி இல்லை. ஓர் இனத்தின் மொழி.

    

     தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் (புறநானூறு-51-5)

 

     தமிழர்களின் அறிவு நுட்பத்தின் மீது மதிப்புக்கொண்டு பலரும் ஆய்வுப் பங்களிப்புச் செய்து வருகிறார்கள். அவர்களது பார்வையில் தன்னினப் பார்வையும் அயன்மை இனப் பார்வையும் கலந்தே காணக் கிடக்கிறது. ஆனால் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய உயர் ஆய்வில் மட்டும் அயன்மை இனப் பார்வையை மிக அழுத்தமாக எடுத்து வைக்கிறார்கள். இதனை உண்மைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

தைக் கூட்டணி:-

     தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாக ஏற்பதும், தமிழர்களை மட்டுமே தமிழர்களின் தலைவர்களாக ஏற்பதும் கோட்பாட்டு அடிப்படையில் ஆன தமிழ்த் தேசியப் புரிதல்கள் ஆகும். இரண்டுக்கும் அடி நிழல் என்பது இன வரைவே. அந்த அடி நிழலே அடிப்படையும் ஆகும். எந்தத் தமிழ்ச் சொல்லும் வலுவற்ற ஓர் எழுத்தை முதல் எழுத்தாகக் கொள்ளாது. தமிழர்களும் வலுவற்ற கொச்சையர்களைத் தலைவர்களாக ஏற்றுப் பல்லிளிக்க மாட்டார்கள்.

 

தமிழ்த் தேசிய ஆளுமைகள்:-

     தலைவர் நெடுமாஅறனார் தமிழ்ப்புத்தாண்டு பற்றி என்ன செய்யச் சொல்லுகிறார்? தோழர் தியாகு என்ன சொல்கிறார்? தோழர் மணியரசன் என்ன சொல்லுகிறார்? தமிழறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? தமிழில் உயராய்வு மேற்கொள்ளும் நிறுவனங்கள் தீர்மானமாக என்ன சொல்கின்றன என்ற வினாக்களின் பட்டியல் என்னவோ நீளமாகத் தான் உள்ளது. சற்றொப்ப ஒரு நூறு வினாக்கள் உள்ளன. ஒரு நூறு விடைகளும் இருக்க வேண்டும். ஆனால் அது ஒற்றையாக அரசியல் அரங்கில் ஒலித்தால் அது தைக்கூட்டணியாக ஒலிக்கும் என்று கருதலாம்.

 

 

தோழர் மணியரசன்:-

     தமிழ்த் தேசியக் கருத்தியலை அரசியல் முழக்கமாக முன்வைத்துக் கடந்த பத்தாண்டுகளில் புரியும்படி எடுத்துச் சொன்னவர்களில் தோழர் மணியரசன் முதன்மையானவர். அவர் ஓட்டு அரசியலை மறுக்கிறவர். அவரிடம் ஓட்டு அரசியலைப் பற்றி நோண்டி நோண்டிக் கேட்டால் தப்பாகவும் சொல்லுவார், குழப்பியும் விடுவார். ஓட்டுப் போடும் உரிமையைக் கொடுத்து விட்டு நீ தலைமை ஏற்காதே என்று சொன்னால் அது என்ன நேர்மை என்று கேட்கும் மணியரசன், தமிழர்களைத் தமிழர் அல்லாதாரின் தலைமைக்குப் பணிந்து போகச் சொல்லுகிறார். இந்தச் சூதாட்டத்தில் இது தான் விதி. நீ புறக்கணி என்கிறார்.

     தெலுங்கர்களோடு பல்லைக் காட்டிப் பழகி விடுவது, கொடுக்கல் வாங்கலில் சிக்கிக் கொள்வது நாணயத்திற்குக் கட்டுப்பட்டு இருப்பதையெல்லாம் கொடுத்து விட்டு இழப்பை வெளியில் சொல்லாமல் நொந்து சாவது. இது தானே தமிழர்கள் ஓராயிரம் ஆண்டுகளாகப் பட்டு வரும் பாடு. தமிழர்களை மூளை ஊடறுப்புச் செய்து, இனம் கலைத்து, வயிற்றில் அடித்து, அறிவைச் சிதைத்து முட்டாள்களாக்கி மன்னன் இராசராசன் மீட்டெடுத்த ஆட்டைப் பெரிய திருவிழாவைக் களவாடி இன்றளவும் ரவுடித்தனம் செய்யும் தெலுங்கர்களுக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் என்னையா தொடர்பு இருக்க முடியும்?

     துருவ அரசியல் என்பது கோழைகளின் அரசியல் உத்தி. கருணாநிதியும், செயலலிதாவும் செய்யலாம். ஆனால் தோழர் மணியரசனும், தம்பி சீமானும் செய்யக் கூடாது. இவர்கள் இருவரும் ஒரே மேடையில் பேசினார்கள் என்பதற்காகவே சிறையிடப்பட்டனர் என்பது வரலாறு. இன்று இருவரும் இரு துருவங்களை உருவாக்குகின்றனர் என்றால் அவர்கள் இருவருமே தெலுங்கர்களைப் பின்பற்றுகிறார்கள் என்பது தான் பொருள்.

     ஒரு பயலும் ஓட்டுப் போடாதே! எல்லாரும் என் பின்னாடி ஒளிஞ்சுக்கலாம் என்று சொல்லும் தோழர் மணியரசன் அவர்களும், ஒரு பயலும் ஓட்டுப் போடாமல் இருந்து விடாதே எம் முப்பாட்டன் முருகனுக்கு அடுத்து நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறும் தம்பி சீமானும் தொடைநடுங்கும் இடம் தமிழ்ப்புத்தாண்டாக இருந்தால் அங்கே தான் பிழை என்பதைத் தமிழறிஞர்கள் நன்கு அறிவார்கள்.  அழகாக அமைதி காப்பார்கள். பேயாமலும் இருப்பார்கள்.

     தைக் கூட்டணி என்பது தமிழ்த் தேசிய நுண்ணரசியலை உறுதியுள்ள கருத்தியல் கடைகாலாகக் கட்டமைக்கும். அறிஞர்களையும்,  வல்லுநர்களையும் இன உணர்வாளர்களையும் இனிதே போற்றும்.

 

 

எண்ணெய்ச் சீலை:-

     தமிழர்களை முட்டாள்களாகவும், ஏமாளிகளாகவும், அரசியல் வலிமையற்றவர்களாகவும் கருதித் தப்புக் கணக்குப் போடும் அயன்மை இன அரசியல் தலைவர்கள், எண்ணெய்ச் சீலையை நாய் பிய்த்துக் கொள்வது போலத் தங்களுக்குள் அடித்துக் கொள்ள வேண்டுமானால், தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதும், வெற்றியைத் தட்டி எடுப்பதும் ஒற்றை அதிர்வில் ஏற்பட வேண்டும். அந்தச் செயலைத் தான் தைக்கூட்டணி களப்பணியாகவும், வேலைத்திட்டமாகவும் மேற்கொள்ளும்.

 

பருத்திக்கொட்டை:-

     பச்சைப்புல், பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, வைக்கோல், கடலைக்கொடி, கிட்டிப் பிஞ்சு, வாகை இலை, பனங்குருத்து, குருத்தோலை, ஈச்சங்குருத்து இவற்றை, இவற்றை அன்றாட உணவாக உட்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் இளைஞர்களை, தமிழினப் போராளிகளை, காளைகளைச் செல்லமாக வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

     ஊருக்கு ஊர் காளை மன்றங்கள் அமைத்து, கொல்லேறு திரிதரு மன்றங்களை அமைத்து அவற்றோடு அன்றாடம் உழலை மரங்களைத் தொடுவது போன்ற பயிற்சியில் இளைஞர்கள் ஈடுபட்ட சான்றுகள் உள்ளன. ஏறு கோட்டைத் தொட்டுத் திரும்பும் ‘கபடியே’ ஒரு காலத்தில் தொகுப்பாகக் கட்டப்பட்ட காளைகளோடு இளைஞர்கள் மேற்கொண்ட விளையாட்டாக இருக்கலாம். காளைகளை வரிசையாக நிறுத்தி அவற்றின் கழுத்தோடு கழுத்தைப் பிணைகயிறு கொண்டு பிணைத்து இரு முனைகளையும் இரு மரங்களுக்கு இடையில் வலுவாகப் பிணித்து விட்டு ஒரு நேர்கோடு வரைந்து குறிப்பிட்ட தொலைவில் இருந்து ஒவ்வொருவராக மூச்சைப் பிடித்து ஏறு கோட்டைத் தொட முயல்வதும், ஏப்புக் காட்டுவதும், வெற்றி பெறுவதும், தோற்றுப் போவதும் விளையாட்டு. இடையில் பறையோசை வேறு. பாண்டிய மன்னனின் போர்ப்படையில் எதிரிகளின் வேலிகளையும் மண்சுவர்களையும் தகர்த்தெறியும் பணியைச் செய்திருக்கின்றன ஏறுகள். தமிழர்களின் அகவாழ்வுக் காவலனாக விளங்கி, ஓகியரைப் போல ஊர்சுற்றி, முரசுக்குத் தோல் தந்து, காயடிக்கப்பட்டால் பகடாகப் பாடுபட்டு, ஆண்மைக்கும், அஞ்சாத உழைப்பிற்கும் குறியீடாக விளங்கிய காளைகள் தமிழ் இனத்தின் கிளைப் பிறப்பாகவே போற்றப்பட்டு வந்திருக்கின்றன.

 

மஞ்சு விரட்டு:-

     ஏறு தழுவுதல் என்ற சொல் உரையாசிரியர்களால் கையாளப்பட்ட சொல். ஏறுகளைக் கட்டிப் போட்டுக் கூட எதிரிகளால் தொட்டுப் பார்க்க முடியாது. கலித்தொகையில் மார்புறத் தழீஇ, தார்போல் தழீஇயவன் என இரண்டு செய்திகள் தன் காதலனை அடையாளம் காட்ட ஒரு பெண் பயன்படுத்துகிறாள். மற்றபடி தொழூஉப்புகுத்தல், கொல்லேறு கோடல் என்பது தான் இலக்கியச் சான்று. மஞ்சு விரட்டு, மஞ்சிவெருட்டு இரண்டும் வழக்குச் சொற்கள்.

     மஞ்சு என்ற சொல் வெண் முகிலைக் குறிக்கும். ஓராண்டுக்கான மழையை முற்றாகக் கொட்டித் தீர்த்த பிறகு கொண்மூ ஏறு எனப்படும் தலைமைப்பண்புள்ள கருமுகில் கலைந்து விடும். ஆனால் அதன் எச்சமாகப் பஞ்சுப்பொதி  போன்ற வெண்முகில் மட்டும் இங்கும் அங்கும் அலையும். பரிசில் தேடி அலையும் பாணனைப் போல.

     வெள்ளி மீனோடு கந்தகப் பொடித் தொடர்புடைய அந்த வெண்மஞ்சுக் கூட்டம் தெற்கே சென்று அடையுமே தவிர மீண்டும் கதிரவனோடு சேர்ந்து வடக்கே செல்லாது. சீர்சால் வெள்ளி வறிது வடக்கு இறைஞ்சி ஆடியல் நிற்கும் போது, மண்ணில் இருந்து அந்தப் பஞ்சுக்காற்றை விரட்டும் ஆற்றல் கொண்ட ஒரு போர்ப்படையைத் தமிழர்கள் போற்றினர். அதுவே மஞ்சு விரட்டுக் காளைகள். சில்வர் நைட்ரேட் (Silver Nitrate) வெள்ளி மீன் இவை மழையோடு தொடர்புடையன என்று இன்றைய அறிவியலும் நம்புகிறது. இந்த மஞ்சுக்கூட்டம் மீண்டும் பருவக்காற்றோடு சேர்ந்து அடுத்த ஆண்டின் மழையை அழைத்து வருகின்றன என்று தெரிகிறது.

 

தெண்கண் மாக்கினை:-

     பறைக்கருவியில் ஒரு நுண்கோல் செருகப்பட்ட வடிவமாகத் தெண்கண் மாக்கினை என்ற கருவி இலக்கியங்களில் பேசப்படுகிறது. அக்கருவியை இசைத்தால் காளைகள் ஓடிவரும் என்று சான்றுகள் உள்ளன.

     காளைகளின் கொம்புகளும், கொம்புகளின் இடைவெளியும், திமிலும், கொம்புகளுக்கும் திமிலுக்கும் ஆன இடைத்தொலைவும், சீறிப்பாயும் போது அத்தொலைவின் விரிவும், விரிவும் பெண்ணியல்பான பாவைக் கூறுகளோடும், பெண்களின் உடற் கூறுகளோடும் ஒத்த அளவு உடையன. இவற்றுக்கு வலுவான சான்றுகளைத் தமிழ் மரபின் ஓவிய நூல் காப்பாற்றி வந்திருக்கிறது. இவற்றுக்குத் தமிழ் சொற்களோடும். செய்யுள் கட்டமைப்போடும் தொடர்புகள் உள்ளன. இவை அரச கமுக்கம் சார்ந்த உயர்வகை அறிவு ஆகும்.

 

குடியரசு விழாவில் மஞ்சுவிரட்டுக் காளைகள்:-

     நாய் வருகிறது, ஒட்டகம் வருகிறது, குதிரைகள் வருகின்றன. ஏன் தமிழ்நாட்டுக் கொல்லேறுகள் அணிவகுத்துப் பறையடிக்கு நடந்தால் என்ன தவறு நேர்ந்து விடும்? பார்ப்பனன் குடுமியில் நரைத்த மயிர் உதிர்ந்து விடுமா?

     ஒரு காலத்தில் பாண்டியர்களின் போர்ப்படையில் நெடுநல் யானையும், கடும்பரிப் புரவியும், தேரும் மாவும் அணிவகுத்தபோது நாய்களும் ஒட்டகங்களும் எங்கே இருந்தன?

     தொன்மையும், நுண்ணறிவும், அரசத் தகைமையும் கொண்ட மஞ்சு விரட்டுக் காளைகள் என்றுமே தமிழினம் தான். அவை விலங்குகள் என்றால் தமிழர்களும் விலங்குகளாகவே இருந்து விட்டுப் போகலாம். தமிழர் என்போர் உலக மாந்தரில் ஒரு பிரிவினர் அல்லர். காளைகளையும் தம் இனத்தில் சேர்த்துக் கொண்டவர்கள். ஒரு போதும் ஆண்மைப் பண்பு இல்லாத கோழைகளைத் தன் இனத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

 

கடைசி மாடு அவிழ்ப்பு:-

     மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2016 இவ்வாண்டில் வழக்கம் போல

1.   நிலவைத் தொடரும்

2.   நிலழைத்  தொடரும்

3.   மறைநிலவை உறுதி செய்யும்

4.   வளர்பிறையில் திருத்த முயற்சியில் ஈடுபடும்

5.   திருமுருகாற்றுப் படையில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதனை உயர்த்திப் பிடிக்கும்

6.   வேலின் வடிவத்தை மீட்கும்

7.   தைக்கூட்டணி அமைக்கும்

8.   தமிழ்த் தேசிய நுண்ணரசியலை மரபு வழியில் அச்சமின்றி நகர்த்தும்

9.   மஞ்சு விரட்டை உலக அரங்கில் எடுத்துச் செல்லும்

10. காளை மன்றங்கள் அமைக்கும்.

11. தமிழர் தமிழர் அல்லாதார் என்ற இன வரைவை இறுகப் பற்றும்

12. தமிழில் உயர் ஆய்வைப் புரக்கும்.

 

...::::>>>ஓஓஓ<<<:::...

 

 

 இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இன் வெளியீடு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.