Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாண்புமிகு முதல்வர் 'அம்மா' வுக்கு ஒரு தமிழனின் பகிரங்க கடிதம்!

Featured Replies

மாண்புமிகு முதல்வர் 'அம்மா' வுக்கு ஒரு தமிழனின் பகிரங்க கடிதம்!

 

jaya%20letter%20lefttt%20final%281%29.jpமாண்புமிகு முதல்வர் 'அம்மா' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்!

இந்தக் கடிதத்தின் வார்த்தைகளை நீங்கள் கருத்தில்கொள்ளாமல், அது எந்த உணர்வில், எந்த மனநிலையில் எழுதப்பட்டதோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் அம்மா.

ஆம்... ’அம்மா’தான். வெறும் உதட்டசைவில் மட்டுமல்ல; மனதின் அடியாழத்திலிருந்தே சொல்கிறேன். நீங்கள் எனக்கு அம்மாதான்... உங்களது மந்திரிகள், கட்சிக்காரர்களைப் போல் உங்களிடமிருந்து எனக்கு எந்த தேவையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் எனக்கு அம்மாதான். முதலில் உங்களுக்கு என் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கள் அம்மா...!!!

ஆனால், இந்தக் கடிதம் நான் உங்களை வாழ்த்த மட்டும் எழுதப்பட்ட வெறும் வாழ்த்து மடல் அல்ல. அதை உங்கள் கட்சிக்காரர்கள் விதம்விதமாக வீதியெங்கும் பேனர்களாக இந்நேரம் நிறைத்திருப்பார்கள். உங்களுடன் நான் கொஞ்சம் உரையாடவே விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை நீங்கள்  படிப்பீர்களா என்பது நிச்சயமில்லை. அது என் நோக்கமும் இல்லை. என் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவே இந்தக் கடிதம். என் விரக்தி, என் கோபம் இந்த வார்த்தைகளில் வழிந்து ஓடி விடாதா என்ற ஏக்கத்தில்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்...
 
அம்மா... உங்களை நான் முதன்முதலாக பார்த்தது என் 7 வயதில். அப்போது நான் இரண்டாம் வகுப்பு மாணவன். தஞ்சையில் நடந்த ‘எட்டாவது உலக தமிழ் மாநாட்டில்’ கலந்து கொள்வதற்காக நீங்கள் வந்திருந்தீர்கள். வீதியெங்கும் மக்கள் கூட்டம், என்னை என் அப்பா தோள் மீது தூக்கி வைத்து உங்களைக் காண்பித்தார். உண்மையைச் சொல்லவேண்டுமானால், அப்போது உங்கள் மீது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. ஆண்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் தனியொரு பெண்ணாக கம்பீரமாக நீங்கள் நின்று கூட்டத்தினரை எதிர்கொண்டது, இன்றும் நினைவில் நிழலாடுகிறது. வீதி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும், உங்களைப் பார்த்ததை மகிழ்வுடன் ஒரு வாரத்திற்கு சொல்லிக் கொண்டே இருந்தேன்...

சில மாதங்கள் சென்றது. எங்கள் வீட்டிலும், எங்கள் கிராமத்திலும், உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம் குறித்துப் பேசத் துவங்கினார்கள். 'பல கோடி செலவழித்து நடந்த திருமணம், ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டார்களாம், மிக டாம்பீகமான ஆடம்பரம்' என்று துவங்கும் அவர்கள் பேச்சு, இறுதியில் கோபமாக முடியும். ஏனெனில் அப்போது எங்கள் கிராமத்தில் நிலவிய வறுமை. உங்களது ஆடம்பரங்கள், அவர்களைக் கிண்டல் செய்வதாக இருந்திருக்கலாம். கோபமூட்டியிருக்கலாம் என நினைக்கிறேன்.

jaya%20letter%20600%20111%281%29.jpg

அதே சமயம் மன்னார்குடி பின்னணி கொண்ட சிலர்,  மிரட்டி இடங்கள் வாங்குவது, சொத்துக் குவிப்பது என வரைமுறை இல்லாமல் செயல்படுவதாகவும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கு இது புரியாவிட்டாலும், உங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்ற ஈர்ப்பே அந்த உரையாடலில் கலந்து கொள்ள காரணமாக அமைந்தது. உங்கள் மீது பலர் அவதூறு பேசினாலும், எங்கள் கிராமத்து பெண்கள் உங்கள் பக்கமே நின்றார்கள்... உங்களை அவர்கள் தங்கள் பிரதிநிதியாக பார்த்தார்கள்...

பின்பு தேர்தல் வந்தது, வீதியெங்கும் ‘ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் சீமாட்டிக்கு, எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்’ என்று போஸ்டர்கள் பளிச்சிட்டன. அதில் நீங்களும், உங்கள் தோழி சசிகலாவும் நகைகள் அணிந்திருக்கும் படங்கள் இருந்தது... எங்கள் வீட்டு சுவற்றிலும் அது ஒட்டப்பட்டு இருந்தது, ஆனால் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் நான் கிழித்தெறிந்தேன். எனக்கு அப்போது எந்த அரசியல் புரிதலும் இல்லாவிட்டாலும், உங்களை எனக்குப் பிடித்திருந்தது, அதற்கு உங்களை நேரில் பார்த்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

jaya%20letter%20600%201%282%29.jpg

அரசியல் களம் சூடு பிடித்தது! வெள்ளித் திரையின் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அரசியல் அரங்கில் உங்களுக்கு எதிராகப் பெரிய அணி திரண்டது. கருணாநிதியின் அரசியல் சாதுர்யம், மூப்பனாரின் அரவணைக்கும் திறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணுவின் பிம்பம் எல்லாம் கரம் கோர்த்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகின. உங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததாக என் சித்தப்பா கூறினார். எங்கள் கிராமத்தில் இருந்த ஆண்கள் எல்லாம் மகிழ்வுடன் கருணாநிதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சிறப்பு பேருந்துகள் அமர்த்திப் புறப்பட்டனர். ஆனால், அப்போதும் எங்கள் ஊர் பெண்கள் உங்கள் தோல்வியை ரசிக்கவில்லை.

அப்போது எங்கள் வீட்டருகே இருக்கும் ஒரு அத்தை சொன்னது நன்றாக நினைவிருக்கிறது, “நான் அந்தம்மாவுக்கு எதிராத்தான் ஓட்டு போட்டேன். ஆனா, அவங்க தோத்துப் போவாங்கனு நினைக்கலை. பயமா இருக்கு. எங்கே திரும்ப கிராமம் முழுக்க சாராயம் பரவிடுமோ..” என்று பதபதைத்தார். ஆம், எனக்கு உறைத்தது, உங்களால்தான் சாராய சாவுகள் குறைந்தது என்று அவர்களது நம்பிக்கை. அதில் அப்போது உண்மையும் இல்லாமல் இல்லை.
   
மீண்டும் தி.மு.க ஆட்சி. வருடங்கள் உருண்டோடின, வழக்கமான அரசியல் சலிப்புகள் வந்தது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க ஒரு வரலாற்று பிழையை செய்தது... ஜாதி கட்சிகளை மட்டும் இணைத்து ஒரு கூட்டணி அமைத்தது. நீங்கள் பலமான கூட்டணி அமைத்தீர்கள்... தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து, மீண்டும் அரியணை ஏறினீர்கள்.

jaya%20letter%20600%2011%281%29.jpg

அந்த ஆட்சிக் காலத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  வேலை நிறுத்தம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு போராட்ட வழிமுறை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் நீங்கள் அதை உணர்ந்தீர்களா என தெரியவில்லை. எஸ்மா சட்டத்தைப் பாய்ச்சினீர்கள். ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்களை கைது செய்தீர்கள். நான் உங்கள் தைரியத்தைக் கண்டு வியந்தேன்.

தவறான முடிவாக இருந்தாலும், ஓட்டு வங்கி அரசியலில் இருப்பவர்கள் அரிதினும், அரிதாக எடுக்கும் முடிவுகள் இவை. குறிப்பாக அத்தியாவசிய தேவைகளை கட்டமைக்கக்கூடிய அரசு இயந்திரம் முடங்கிய அந்த சமயம் வேறு எந்தகட்சியாவது இத்தகைய துணிச்சலான முடிவெடுத்திருக்குமா எனத் தெரியவில்லை. அதனாலேயே ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் உங்களுக்கு எதிராக நின்றார்கள்.

அடுத்தடுத்து மதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு - கோழி பலியிட தடை- பொடாவில் வைகோவை கைது செய்தது என உங்கள் துணிச்சலை நிரூபித்துக்கொண்டே இருந்தீர்கள். இது உங்களுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைய வித்திட்டது. இதுவே பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் படு தோல்வி அடைய காரணமாக அமைந்தது.

jaya%20letter%20600%208.jpg

பின்பு, அனைத்து சட்டங்களையும் ரத்து செய்தீர்கள். இதுதான் நீங்கள் முதன்முறையாக சறுக்கிய இடம் என நினைக்கிறேன். இது மட்டுமல்லாமல் 2004ல், மிகபெரிய பேரிடர் தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், அப்போது உங்கள் அரசு மோசமாகச் செயல்படவில்லை. (சிறப்பாக செயல்பட்டது என்று கூறவில்லை..!).
 
மீண்டும் தேர்தல்... மீண்டும் கூட்டணி... மீண்டும் தி.மு.க ஆட்சி... இரண்டு ரூபாய் அரிசி திட்டம், 2 ஏக்கர் இலவச நிலத் திட்டம் என அவர்கள் ஆட்சியை சிறப்பாகவே தொடங்கினார்கள். ஆனால், நில ஆக்ரமிப்பு, அபகரிப்பு, மதுரையில் ஒரு பவர் சென்டர், தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என அவர்களின் வெற்றி மமதை, நேரடியாக மக்களைப் பாதித்தது. இதில் ஈழப் பிரச்சனையும் சேர்ந்து கருணாநிதி மீதும், அவர் சகாக்களின் மீதும் ஒரு வெறுப்பை உண்டாக்கியது. நீங்கள் அல்ல, மக்கள் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார்கள். சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி வெற்றி பெற்றது. உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், உங்கள் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

jaya%20letter%20right%281%29.jpgதி.மு.க-வால், எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கூடப் பெற முடியவில்லை! ஆனால் ஒன்று அம்மா எப்போதெல்லாம் திமுக எதிர்கட்சியாகிறதோ அப்போதெல்லாம்தான் அதன் செயல்பாடு வீரியமாக இருக்கும் என்பார்கள். ஆனால் உங்கள் கட்சி எதிர்கட்சியாகிறபோது நீங்கள் அந்தளவிற்கு செயல்புரிந்தாக கேள்வியுற்றதில்லை. உங்கள் கட்சிக்காரர்களும் தத்தம் தொழில்களில் முடங்கிப்போய்விடுவார்கள். திமுக மீதும் 'இந்த முறை இந்தம்மாவிற்கு போடுவோம்' என்ற மக்களின் வழமையான எண்ணத்தின் மீதும் உங்களுக்கு அந்தளவிற்கு நம்பிக்கை

எண்பதுகளில் பிறந்த என் தலைமுறையினர் அரசியல் விழிப்புணர்வு பெற்ற காலம் இது. உங்கள் ஆட்சிக் காலத்தை உன்னிப்பாகக் கவனித்தோம். நான் உங்கள் அனைத்து முடிவுகளையும் ஆராயத் தொடங்கினேன். உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதத்துக்கு விட்டேன். எனக்கு இப்போது உங்கள் பலங்கள் எல்லாம் பலவீனமாக தெரிய தொடங்கியது.

தி.மு.க நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது என்றால், பல பவர் சென்டர் இருக்கிறது என்றால், அதற்கான தொடக்கமும் நீங்கள்தான் அம்மா. 1991-96 ல் நீங்கள் என்ன செய்தீர்களோ அதைத்தான் அவர்கள் 2006-11ல் செய்தார்கள். ஈழப் பிரச்னையில் தமிழின தலைவர், தமிழினத்திற்கு எதிராக தன் பெண்டு, தன் பிள்ளை நலனுக்காக மிகப் பெரிய துரோகம் செய்தார் என்றால்.... நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள் அம்மா...? “போர் ஒன்று நடந்தால், மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றீர்கள் சர்வசாதாரணமாக..!

எனக்கு பாவ, புண்ணியங்களில் நம்பிக்கை இல்லை... ஆனால், என் நண்பன் அடிக்கடி கூறுவான், “அதிமுகவும், ஈழ ஆதரவாளர்களும் எப்போதோ செய்த புண்ணியம்தான், ஈழப் போர் நடந்த காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதது. இருந்திருந்தால், கருணாநிதி போல அவரும் அம்பலப்பட்டு இருப்பார். ஈழ ஆதரவாளர்களும் பல துயரங்களை அனுபவித்திருப்பார்கள்...” என்று! கூடங்குள அணு உலை போராட்டத்தில், நீங்கள் எடுத்த முடிவுகளைப் பார்த்த பின், அவன் சொன்னது உண்மை என்று புரிந்தது.

jaya%20karuna%20308.jpgஇன்னொரு நெருங்கிய நண்பர், தீவிர அ.தி.மு.க-காரர். அவர் நீங்கள் தவறான முடிவுகள் எடுக்கும்போதெல்லாம் சொல்வார், “ஏங்க.. அவுங்க நல்லவங்க... ஆனா, பல விஷயம் அவங்க கவனத்துக்கு தெரிவதில்லை.... எல்லாம் சுத்தியிருக்கிறவங்க பண்ற வேலை” என்பார். இது அவரின் கருத்து மட்டுமல்ல, எதிர் முகாமில் இருந்தாலும் உங்கள் மீது அபிமானமுள்ள பெரும்பான்மையானவர்களின் கருத்தும் கூட. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கெல்லாம் அவர்கள்தான் காரணமென்றால், உங்களுக்கு எதற்கு ’காவிரி தாய்’, சமூக நீதி காத்த வீராங்கனை என்றெல்லாம் பட்டங்கள்....? அதையும்கூட அந்த சுற்றியிருக்கிறவர்களுக்கு (சசிகலாவும் திவாகரனும்தான் அவர்கள் என்று நான் சொல்லவில்லை. மற்றவர்கள் சொல்கிறார்கள்) பிரித்துக் கொடுத்துவிடலாமே...?

சொத்துக் குவிப்பு வழக்கில் உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டீர்கள். இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற பெருமையை தமிழகத்திற்கு தேடி தந்தீர்கள். அப்போதும்கூட, தமிழக மக்களுக்கு உங்கள் மீது ஒரு 'Soft Corner' இருந்தது. மன்னித்து விட்டிருக்கலாம் என்று கூட பேசத் துவங்கினர். ஆனால், அப்போது உங்கள் அமைச்சர்கள் செய்த காரியங்கள், உங்கள் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியது.

ஒரு குற்றவாளியாக நீங்கள் சிறையில் இருந்தபோது உங்கள் அமைச்சர்கள் தலைமைச்செயலகத்தில் துருத்தித் தெரிந்த உங்கள் படத்தை மேஜையில் வைத்து கும்பிட்டு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள். அரசியலமைப்பு சட்டத்தை ஆவணமாக முன்மொழிந்து பொறுப்பேற்ற அமைச்சர்கள் அதையே கேலிக்குள்ளாக்கிய விஷயங்கள் அவை. மொத்த இந்தியாவே தமிழகத்தை முகம் சுளிப்போடு பார்த்த தருணங்கள் அவை அம்மா.

கட்சிக்காரர்கள் உங்கள் மேல் உள்ள மரியாதையில் அலகு குத்தினார்கள், உங்கள் மேல் உள்ள பாசத்தில் மண்சோறு சாப்பிட்டார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா....? நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். என் அம்மா நிச்சயம் அவ்வளவு முட்டாள் கிடையாது. சிறையிலிருந்து மீண்டீர்கள். 10 சதவீதத்திற்கும் கீழ் ஊழல் செய்திருந்தால் பிழை இல்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் விடுதலையானீர்கள். மீண்டும் தேர்தலில் நின்றதும், வென்றதும் முதல்வராக பொறுப்பேற்றதும் எங்களுக்கு கனவு போல் இருந்தது. நாட்கள் நகர்ந்தன.

jaya%20letter%20600%2088.jpg

காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் மதுவுக்கு எதிரான தமிழகம் தழுவிய போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழியாக இருந்தது. தமிழகமே உங்களிடமிருந்து மதுவுக்கு எதிரான ஓர் அரசாணையை எதிர்பார்த்தது. நானும் ஆவலாக இருந்தேன். ஆனால், நீங்கள் மெளனமாக இருந்தீர்கள். மதுவுக்கு எதிராகப் போராடியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தீர்கள். எந்தப் பெண்கள் நீங்கள் ஆட்சியில் இருந்தால், சாராய சாவுகள் இருக்காது என்று நம்பினார்களோ, அந்தப் பெண்கள் உங்களுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களில் பலபேர் தாலிக்கு தங்கம் கொடுத்த உங்களால் மன்னிக்கவும் உங்களது அரசு நடத்தும் மதுக்கடைகளால் தாலி இழந்தவர்கள். இன்னமும் போராடுகிறார்கள். நீங்கள் இன்னமும் மெளனமாகத்தான் இருக்கிறீர்கள் அம்மா.

எல்லா எதிர்ப்புகளுக்கு பிறகும், உங்கள் மீது ஒரு பெருங்கூட்டம் நம்பிக்கை வைத்திருந்தது. அது எப்போது சரிந்தது தெரியுமா....? ’அம்மா ஸ்டிக்கர்’களுக்குப் பிறகுதான் .... அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா உணவகம் என்று எல்லா திசைகளிலும் நீங்கள் பாடிய சுயபுராணத்தில் லயித்த உங்கள் தொண்டர் படை, கடைசியில் சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவ லாரி லாரியாக, கொண்டு வந்த நிவாரணப் பொருட்கள் மீதும் உங்கள் முகம் பதித்த ஸ்டிக்கரை ஒட்டியது உங்கள் அரசியல் வரலாற்றில் மாபெரும் அசிங்கம். உங்கள் மீது இருந்த கடைசி நம்பிக்கையும் எங்களுக்கு சரிந்த தருணம் அதுதான்!

jaya%20letter%20300.jpgவரலாறு பல அசாதாரண ஆட்சியாளர்களைச் சந்தித்திருக்கிறது. அவர்களின் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது. அவர்கள் எப்படி வீழ்ந்தார்கள் தெரியுமா அம்மா? மமதை, சுய புராணம் பாடும் ஒரு கூட்டத்தை பக்கத்தில் வைத்திருந்தது, ஜனநாய வழியில் தாங்கள் வெற்றியை தங்களது தனிப்பட்ட வெற்றியாக கருதி செயல்பட்டது இவைதான். துரதிருஷ்டவசமாக அது இங்கேயும் இருக்கிறது. அதை நீங்கள் உணர்கிறீர்களா....? ’மக்களிடையே உள்ள ’ஸ்டிக்கர் வெறுப்பு’ பற்றி எனக்கு தெரியவே தெரியாது’ என்று நீங்கள் சொன்னால், அது கூடத் தெரியாமல் இருக்கும் உங்களை நம்பி நாங்கள் எப்படி எங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பது? ஒருவேளை தெரிந்து நீங்கள் அமைதியாக இருந்தால், அப்போது நீங்களும் அந்த ஸ்டிக்கர்களை ரசிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? 
 
இன்னொரு புறம் அ.தி.மு.கவினர் உங்கள் பெயர், உருவத்தை பச்சை குத்துவதும், மொட்டை அடிப்பதும் உங்கள் மீது உள்ள பிரியத்தாலா...கண்டிப்பாக இல்லை; அதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. இதை எப்போதும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் ’முன்னாள் அமைச்சராக’ ஆவதை விரும்புவதில்லை.

உங்களின் அரசியல் குரு எனப்படும் எம்.ஜி.ஆரும் ஒரு தருணத்தில்,  'கட்சிக்காரர்கள் தங்கள் கைகளில் கட்சியின் சின்னத்தை பச்சை குத்திக்கொள்ளவேண்டும்' என கட்சியினருக்கு வலியுறுத்தினார். அதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் எழுப்பிய அதிருப்தியில், கட்சியே கொஞ்சம் ஆட்டம் கண்ட வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆரே கொஞ்சம் ஆடிப்போனார். அத்துடன் மவுனமானார். அதிமுகவில் சுயமரியாதை உள்ள தலைவர்கள் இருந்த காலம் அது.

ஆனால் அப்படி சுயமரியாதை உள்ளவர்களை இன்று தேடிப்பார்த்துதான் கண்டுபிடிக்கவேண்டும். இப்போதுள்ளவர்கள் பொய்கள் சொல்லியாவது, உங்களைக் குஷிப்படுத்த வேண்டும். ஆனால், எனக்கு அப்படியான நிர்பந்தம் எதுவுமில்லை. உங்கள் மீதுள்ள பாசத்திலும் அபிமானத்திலும் உண்மையைச் சொல்கிறேன்.

jaya%20letter%20600%2010.jpg

தவறுகளிலிருந்து பாடம் கற்க மறுக்கும்போதுதான் ஒரு தலைவனின் தோல்வி தொடங்குகிறது . நீங்கள் அதைத்தான் தொடர்ந்து செய்கிறீர்கள். வரலாறு தொடர்ந்து உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பிளசண்ட் ஸ்டே, டான்சிக்கு பிறகு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. குறிப்பாக, தருமபுரியில் மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பிறகும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால், அதை நீங்கள் மிக மோசமாகக் கையாள்வதாகவே நினைக்கிறேன் அம்மா.

இந்தக் கடிதத்தை நீங்கள் படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அம்மாவைத் தவறாகப் பேசுவதை எந்த மகனும் விரும்பமாட்டான். நானும் விரும்பவில்லை. நீங்கள் முன்னெப்போதையும் விட இப்போதுதான் அதிக விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள். ஆனால், அதிலுள்ள உண்மையை புரிந்து கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் காட்டும் ஆர்வத்தை, தமிழ் நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் காட்டியிருந்தால், தமிழகமே உங்கள் பிறந்த நாளுக்கு மனப்பூர்வமாக வாழ்த்தி இருக்கும்.

இப்போதும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கவில்லை. அதனால் சில முடிவுகளை அதிரடியாக எடுக்கலாம். முதலில் இயற்கை வளக்கொள்ளைக்கு எதிராகச் செயல்படுங்கள். கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுங்கள். நீர் வழிப்பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். ஆக்ரமிப்புகள் என்றால் ஏழைகளின் குடிசைகள் மட்டுமல்ல... பெரு நிறுவனங்களின் கட்டிடங்கள், கட்சிக்காரர்கள் கம்பிவளை போட்டு மடக்கியிருக்கும் அரசு நிலங்கள். மதுக்கடைகளை படிப்படியாக மூட அரசாணையிடுங்கள். இவை எல்லாம் உடனே சாத்தியமாகக் கூடியவையே!

jaya%20letter%20600%206%281%29.jpg

நாம் எப்போதும் அம்மாவிடம் அதிக உரிமை எடுத்து கொள்வோம். நம் கோபங்களை, வெற்றிகளை, தோல்விகளை அம்மாவிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்வோம். நானும், உங்கள் மீது உள்ள கோபங்களை, வருத்தங்களை, உங்களிடமே தெரிவிக்கிறேன், உண்மையான பாசத்துடன். தேர்தலில் வெற்றியோ... தோல்வியோ நான் உங்களை எப்போதும் ’அம்மா’வாகத்தான் பார்ப்பேன். ஆனால், ஒருவேளை தேர்தலில் வெற்றிக் கனி கிட்டாவிட்டால், உங்கள் சுயபுராணம் பாட நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் கூட்டம் கனிகள் உள்ள இன்னொரு மரத்திற்கு பறந்து போய்விடும். நீங்கள் தனி மரமாக ஆகிவிடுவீர்கள்.

என் கடிதத்தின் ஏதேனும் ஒரு எழுத்து உங்களைக் காயப்படுத்தி இருந்தால் கூட மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா, நன்றி!

http://www.vikatan.com/news/tamilnadu/59561-letter-to-jayalalitha.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.