Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கம்சாமி டாக்குத்தர்

Featured Replies

பலாலி ரோட்டு ஆலடிச்சந்தி வைரவர் கோயிலுக்குப்பக்கத்தில் கம்சாமி டாக்குத்தர் என்று ஒருவர் இருந்தவர். அப்புரோகரி. சின்னதா வெத்திலைக்கடைமாதிரியான இடத்தை நீலக்கலர் சுண்ணாம்புப்பூச்சு அடித்து "கந்தசாமி கிளினிக்" என்று போர்ட் போட்டு வைத்திருந்தார். பொம்பர் அடிக்கக்கூட்டாது என்று கூரையில் செஞ்சிலுவைக்குறி வேறு போட்டிருந்தார். வெட்டுக்காயங்கள், காய்ச்சல், தடிமன், இருமல், சீழ்பட்ட புண் என்று எதுவென்றாலும் கம்சாமியர்தான் அந்த ஏரியாவுக்கே வைத்தியம் பார்ப்பார். கூப்பிட்டனுப்பினால் ஒரு பெரிய கறுத்த தோல்பெட்டியோடு சைக்கிளில் வந்திறங்குவார். காலில் புண் என்றால் "கண்ணை முடு" என்றுவிட்டுக் கதறக்கதற கிளீன் பண்ணியபின்னர் லைப்போய் சவுக்காரத்தால் கை கழுவுவார். என் அழுகை நிக்காது. "என்னடா, இன்னும் பெண்டர் போடத்தோடங்கேல்லையா? பெட்டையள் சிரிக்கப்போகுதுகள், அழுறத நிப்பாட்டு" என்பார். இரண்டு வீடு தள்ளி சுமித்திரா இருந்தவள். அவளையும் டொக்டர் என்றே நாங்கள் அப்போது கூப்பிடுவோம். அழுகையை கட்டுப்படுத்தினாலும் வலி உயிர்போகும். முட்டு என்று போனால் எதிர்பார்க்காத தருணத்தில் பக்கென்று ஒரு டப்பாவைத்திறந்து மூக்கில் வைப்பார். சும்மா நாசியை அடிக்கும். முட்டு இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். பிரபஞ்சத்தின் எல்லா வகை காய்ச்சல், தடிமன், இருமலுக்கும் கம்சாமியர் ஒரே குளிசைகளையே தருவார். ஒரே இருபது ரூபாயைத்தான் வாங்குவார். இரண்டாயிரமாம் ஆண்டளவில் கம்சாமியர் இறந்துவிட்டதாகக்கேள்வி. பின்னர் "கந்தசாமி கிளினிக்" போட்டோ பிரேம் போடும் கடையாக மாறிவிட்டது. இப்போது அங்கு என்ன விக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

சென்றவாரம் மனைவியின் வலதுகை சுட்டிவிரல் கதவுப்பிணைச்சலினுள் மாட்டுப்பட்டத்தில் சின்னதாகக் காயம். வீங்கிவிட்டது. அக்காவின் மகனுக்கும் இரண்டு நாட்களாகக் காய்ச்சல். சரி எதுக்கு ரிஸ்க், ஆஸ்பத்திரிக்குப்போவோம் என்று "வடக்கு ஆஸ்பத்திரி"க்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். சின்னக் காயத்துக்கு பிளட் டெஸ்ட், டயபடிஸ் டெஸ்ட் எடுக்கச்சொல்லியிருக்கிறார்கள். மூன்று ஊசிகள் போடவேண்டும் என்று அடுத்தடுத்த அப்பொயிண்ட்மெண்டும் குறித்திருக்கிறார்கள். தான் ஊரில் இருக்கமாட்டேன் என்று சொன்னதும் ஒரே ஊசியே போதும் என்று மாற்றியிருக்கிறார்கள். "முதலில் மூன்று ஊசிகள் என்றீர்களே" என்றதற்கு இளித்திருக்கிறார்கள். அக்காவின் மகனின் காய்ச்சலுக்கும் பிளட் டெஸ்ட், எடுத்தவுடனேயே அண்டிபயடிக்ஸ் என்று அவர்கள் ஆரம்பிக்கவும் "வேண்டாமடா சாமி, தப்பினோம் பிழைத்தோம்" என்று இருவரும் ஓடிவந்துவிட்டார்கள்.

மனைவி இதனை சொல்லுகையில் ரமணா திரைப்படக்காட்சிகள்போல எல்லாமே விரிந்தன. இது முதல் சம்பவம் அல்ல. என் நண்பன் ஒருவன், இங்கு நிரந்தரக்குடிமை எடுத்து நன்றாக வேலை பார்த்து வந்தவன். "மச்சான் இது என்ர நாடு இல்ல, நான் திரும்பிப்போறன்" என்று ஒருநாள் வெளிக்கிட்டுப்போய்விட்டான். யாழ்ப்பாணம் டயலோக் அனுசரணையுடன் அவனை அன்போடு வரவேற்றது. ஒரே வருடத்தில் தல காதல் பரத்தாகிவிட்டான். சொம்பு ரொம்ப அடிவாங்கிவிட்டது. பந்தம் பிடிக்கமாட்டேன் என்ற அவனுடைய இந்தியன் தாத்தா கொள்கையால் லுங்கிகூட வாங்கமுடியாத நிலைமை. வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு என்று பெயர்தான். ஆனால் ஒருவருடமாக அவனுக்கு நியமனமே கொடுக்கவில்லை. தனியார் வைத்தியசாலைக்குப்போனால் "தம்பி நீங்கள் அண்டி பயோடிக்ஸ் குடுக்கிறது போதாது. பார்த்துக்குடுங்கோ" என்றிருக்கிறான் ஒரு .... (கீறிட்ட இடத்தை தெரிந்த தூஷணத்தால் நிரப்பவும்). "ஓஎல்" கூட படித்துப்பாஸ் பண்ணமுடியாதவன் எல்லாம் டொக்டராகி எம்.ஓ.எச்சாக இருந்தால் அண்டிபயடிக்ஸ் என்ன பொலிடோல்கூட கொடுக்கச்சொல்வான்.

வைத்தியத்தொழில் உயரிய சேவை, தெய்வீக சேவை, வைத்தியன் கடவுள் அது இது என்று தூக்கிக் கொப்பிலே வைக்கத்தேவையில்லை. Just be professional. ஒரு தச்சுவேலை செய்பவராக இருந்தாலென்ன, ஒரு மென்பொருள் வேலை செய்பவராக இருந்தாலென்ன, ஒரு ஆசிரியராக இருந்தாலென்ன, வைத்தியராக இருந்தாலென்ன, கோயில் பூசாரி, அரசியல்வாதி என்று யாராக இருந்தாலென்ன, எதிலுமே Professionalism போய் Romanticism வரும்போதுதான் துஷ்பிரயோகமும் சேர்ந்துவருகிறது. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பலரும் அதே யாழ்ப்பாணத்திலேயே வைத்தியத்தொழில் பார்க்கிறார்கள். புற்றுநோய்ப்பிரிவில் உள்ள வளங்களைப்பயன்படுத்தி வினைத்திறனுடன் வைத்தியம்பார்த்த கதைகளைப்பற்றி அங்கு வைத்தியராகப் பணிபுரியும் நண்பன் இரண்டு மணிநேரமாக விவரிக்கப் பெருமையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருநாள் கூட்டிக்கொண்டுபோய்க்காட்டு என்றுகூட கேட்டிருந்தேன். இவர்களுடைய நல்ல பணிகள் சிலபல வங்குரோத்துக்கேசுகளால் கழுவி ஊற்றப்படுகிறது. இதனை அங்கிருக்கும் நல்ல வைத்தியர்கள் கணக்கில் எடுப்பது அவசியம்.

திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதுபோல வைத்தியசாலைகளுக்கும் இனி எழுதவேண்டும்போலத் தோன்றுகிறது. வைத்தியசாலை, ஒட்டோக்காரர்கள், சில்லறைக்கடைகள், தங்குவிடுதிகள் என்று எல்லாவற்றுக்கும் Rotten Tomatoes, Lonely Planet மாதிரி ஒரு centralized ரிவியூ வெப்சைட்டை யாராவது டெவலப் பண்ணினால் பிச்சுக்கொண்டுபோகும். இந்தியாவில்கூட பயன்படுத்தப்படலாம்.

அத்துமீறல்களும் துஷ்பிரயோகங்களும் எல்லா நாடுகளிலும் இடம்பெறும் சாத்தியங்கள் உண்டு. ஆனால் வளர்ச்சிகண்ட நாடுகளில் முறையான கண்காணிப்பு அமைப்புகள் உண்டு. சுயாதீன ஒம்பூட்ஸ்மன் உண்டு. ஒம்பூட்ஸ்மனுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தால் மறுமுனையில் யாராவது பேசுவார்கள். குறிப்பட்ட கால இடைவெளியில் அவர்களே எமக்கு மறுபடி அழைப்பு எடுத்து நடவடிக்கைகளை விவரிப்பார்கள். தேவையில்லாமல் அன்டிபயடிக்ஸ் கொடுத்தால் கதை கந்தல். இந்த நிலைமை இலங்கை போன்ற நாடுகளுக்கு வந்துசேர இன்னமும் பல வருடங்கள் எடுக்கலாம்.

எனக்கென்னவோ அரசியல், மதம், சினிமா, இலக்கியம் தொடங்கி தொழிற்றுறைவரை எல்லாவற்றிலும் இந்தியாவில் பின்பற்றப்படுகின்ற அத்தனை கெட்ட பழக்கங்களையும் துஷ்பிரயோகங்களையும் நாமும் பழகிக்கொண்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது.

 
நன்றி
Jeyakumaran Chandrasegaram
முகநூலிலிருந்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.