Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுரை: 'முஸ்லிம் அகதிகள்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை: 'முஸ்லிம் அகதிகள்' | காலச்சுவடு |

புலம்பெயர் மக்கள் மத்தியில் தங்கள் தாய்மொழி, சடங்குகள், கொண்டாட்டங்கள் போன்ற பண்பாட்டு அடையாளங்களைப் பேணவேண்டியது முக்கியமான சவாலாகவே உள்ளது. இதற்காக அவர்கள் தாய்மொழிவழிப் பள்ளிகள், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் புலம்பெயர்ந்து அந்நாட்டுக் குடி மக்களாகிவிட்ட இளைய தலைமுறையினரின் புழங்கு தளம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற எல்லாமே பெரும்பான்மைச் சமூகத்துடனான தொடர்பால் தங்களின் தாய்மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதைப் பெரும் சுமையாக உணர்கிறார்கள். என்னதான் தமிழ் வழிப் பள்ளி நடத்தினாலும், வீட்டு உரையாடலுக்கு மட்டுமே அக்கல்வி உதவுகிறது. ஆனால், இந்தத் தலைமுறையினரும் கடந்த பின்பு இனிவரும் தலைமுறை பண்பாட்டு அம்சங்களைக் ‘காக்குமா? காவு கொடுக்குமா’ என்ற கேள்வியே முன்னெழுகிறது. 

சிறு குழு, பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் புலம்பெயர்ந்து வாழும்போது பெரும்பான்மைச் சமூகத்தின் அனைத்து வாழ்வியல் கூறுகளையும் உள்வாங்கிக்கொள்கிறது. இது தமிழ்நாட்டிலுள்ள அகதிகளுக்கும் பொருந்தக் கூடியதே. 

தமிழ்நாட்டுத் தமிழ்ச் சமூகம் எத்தகைய அசைவியக்கத்தில் நகர்கிறதோ அத்திசையில் தான் அகதி முகாம்களில் வாழும் அகதிகளும் வாழ முற்படுகிறார்கள். என்னதான் இழுத்துஇழுத்துப் பிடித்தாலும் மாற்றம் பெரும்பான்மைச் சமூகத்தை நோக்கியே நகர்கிறது என்பதுதான் நிதர்சனம்.

1983ஆம் ஆண்டு இலங்கை இனக்கல வரத்தை ஒட்டி அகதிகளின் தமிழகப் புலப் பெயர்வு ஆரம்பமாகிறது; 1990களில் பெரும் எண்ணிக்கையில் அகதிகள் தமிழகம் வந்தார்கள்; அதன் தொடர்ச்சியாக, 107 முகாம்களில் கால்நூற்றாண்டைக் கடந்து அறுபதாயிரத்துச் சொச்சம் அகதிகள் நெருக்குதலுக்கும் கண் காணிப்பிற்கும் உட்பட்டு அவலமாக வாழ்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்; மௌனமாகக் கடந்துசெல்வதும் பழைய கதைதான். ஆனால் இந்த அகதிகளுடன் இலங்கை வடக்குப் பகுதியிலிருந்து முஸ்லிம்களும் அகதிகளாக வந்திருக்கிறார்கள், இன்றும் அகதிகளாக வாழ்கிறார்கள் என்பதும் இத்தனை ஆண்டுகள் கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் அறியப்படாத செய்தி. 

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் முஸ்லிம் பொடியன்கள் இயக்கங்களில் இணைந்தார்கள். போர்க்களத்தில் மாண்டும் போனார்கள். பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திற்குள் வாழ்ந்த சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மையுடன் இசைந்து போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அகதிகளின் தொடர்ச்சியான இடப்பெயர்வுடன் முஸ்லிம் மக்களும் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு முன்பாக இந்த இடப்பெயர்வு நிகழ்ந்திருக்கிறது. 

தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு குடும்பமும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள முகாமில் ஒரு குடும்பமும் புதுக்கோட்டை மாவட்ட தோப்புக்கொல்லை முகாமில் ஒரு குடும்பமும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெம்பக்கோட்டையில் 11 குடும்பங்களும், அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி அகதிகள் முகாமில் 20 குடும்பங்களும் வாழ்கின்றன. அதேபோல், மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாமில் ஒரு குடும்பத்தார் இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் ஊர் திரும்பிவிட்டார்கள். இதுபோல் வேறு முகாம்களில் ஒன்று இரண்டாக இருந்த முஸ்லிம் குடும்பங்கள் ஊர் திரும்பியிருப்பதாகவும் தகவல் கிடைக் கிறது. தற்போது கிடைத்த தகவல்களின்படி, இன்று சுமார் முப்பது குடும்பங்களுக்கு மேல் வெவ்வேறு மாவட்ட முகாம்களில் அகதிகளாக வாழ்கிறார்கள். அதேபோல் இந்தியத் தடுப்பு அகதிகள் முகாம்களில் வசிக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள் மன்னார் மாவட்டம் பேசாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அறிய முடிகிறது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக முறையில் இங்கு எல்லாவற்றையும் விவாதிக்க முடியாத சுதந்திரம் அற்ற நிலை இன்றும் தொடர்கிறது. அகதிகள் பற்றி எந்தத் தரவுகளையும் புள்ளி விபரங்களையும் எவருமே அரசிடம் இருந்து பெறமுடியாத நிலையும் இருக்கிறது. மூடுமந்திரமாக மறைத்துவைக்க அகதிகளிடம் என்ன இருக்கிறது என்பதும் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த ஈழ ஆதரவு எழுத்தாளரிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி முகாம் குறித்துச்சில தரவுகளை வாங்கும்படி கூறியிருந்தேன். அவர் ஐரோப்பா வாழ் பெரும்பான்மைத் தமிழ்த்தேசிய அரசியல் சூழலோடு இணங்கிச் செல்வதால் இது முக்கியமற்றது என்று கருதியிருக்கலாம். அரசிடம் எந்த விபரமும் பெற முடியாது என்பதுபோல் அகதிமுகாமிற்குள் சென்று விவரம் பெறுவது மிகச் சிரமம் கூடியதும் ஆபத்தானதுமாகும். வெளியாட்களுக்கு அனுமதியில்லை; அதையும் தாண்டிச் சென்றாலும் அம்மக்கள் பேசமாட்டார்கள். அகதிகளின் மௌனம், அரசின் மௌனம்.

தமிழக அகதி முகாம்களில் வாழும் முஸ்லிம் அகதிகள் குறித்து முகாம் அகதி நண்பர்களிடம் விசாரித்தபோது தாப்பாத்தி முகாமில் பள்ளிவாசலும் சில குடும்பங்களும் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. எட்டையபுரத்திலிருந்து அருப்புக்கோட்டை போகும் நாலுவழிச்சாலையில் உத்திலாபுரம் தாண்டி ஆத்துப்பாலத்தைக் கடந்தால் அகதிகள் முகாம் என்ற அறிவிப்புப் பலகை கண்ணில்படும். 1992 - 93ஆம் ஆண்டுகளில் பலதடவை அந்த முகாமிற்குச் சென்றிருக்கிறேன். அப்போது முகாமுக்குத் தனியாகப் பாதை கிடையாது. இப்போது, தார்ச்சாலை போடப்பட்டிருக்கிறது. சுற்றிலும் கருவேலங்காடு, நடுவில் முகாம். அப்போது தார்சீட்டில் வீடுகள் வரிசைவரிசையாக கட்டப்பட்டிருந்தன. தற்போது அவரவர் வசதிக்கேற்ப சிமென்ட் சீட், தகர சீட் போன்றவற்றால் வீடு கட்டியிருக் கிறார்கள். நிறைய வேப்பமரங்கள் இருக்கின்றன. 

நானும் நண்பனும் பிரதான நாலுவழிச் சாலையிலிருந்து முகாம்நோக்கி நடக்கும்போதே ஓர் அபத்த நாடகமொன்றின் காட்சிகளை உருவாக்குவதுபோல, க்யூபிராஞ்சுக்காரனிடம் மாட்டிக்கொண்டால் என்ன கதைசொல்லித் தப்பிப்பது என்று ஒத்திகை ஒன்றைத் தயாரித்துக்கொண்டோம். என்னதான் முன் தயாரிப்பு இருந்தாலும் மாட்டிக்கொண்டால் எல்லாம் மறந்துபோய்விடும் என்பது அப்போது எங்களின் ஞாபகத்தில் இல்லை.

எனக்கு எந்த முகாமிற்கும் நேர்வழியாகப் போய்ப் பழக்கமில்லை. தார்ச்சாலையிலிருந்து விலகிக் குறுக்கு வழியாக உள்ளே சென்றோம். எங்கள் இருவரையும் பன்றிக்குட்டி ஒன்று எதிர்கொண்டது. நல்ல சகுனம். பன்றி நிறைய குட்டி போடும். ஒன்றுதான் கண்ணில் பட்டதென்றால் இன்னும் நிறையக் குட்டிகள் இருக்கும். அவற்றுக்குத் தாய் தகப்பன் எல்லாம் இருக்கும். பன்றிக் குட்டி பதற்றமின்றி எங்களைக் கடந்து போனது. எங்களுக்கு உள்ளுக்குள் ஒருவிதப் படபடப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. பன்றிக் குட்டியைப் பார்த்து அல்ல, க்யூ பிராஞ்சை நினைத்து. 

குறுக்குவழியாக முகாமிற்குள் சென்றதும் அந்தோணி யார் கோயில் கண்ணில்பட்டது. தாப்பாத்தி முகாம் கிட்டத்தட்ட நானூறு குடும்பங்கள் வசிக்கும் அகதிகள் முகாம்; பள்ளிவாசல், அந்தோணியார் கோயில், ஐயப்பன் கோயில், பெந்தகோஸ்தே சபை என மும்மதங்களும் சங்கமிக்கும் ஒரே அகதிகள் முகாம் என்ற சிறப்புக்கும் உரியது அது. அவர்களுக்குரிய மத வழிபாட்டு முறைப்படி அவரவர் இடத்தில் சுதந்திரமாக வழிபடுகிறார்கள் என்பது சிறப்பானது. பெரும்பாலான முகாம்களில் சைவக்கோயில், கிறிஸ்தவக்கோயில்கள் இருக்கின்றன. 

அகதிகளோடு அகதிகளாக வாழும் 20 முஸ்லிம் குடும்பங்களில் கல்யாணச் சடங்கும், வெள்ளிக்கிழமைத் தொழுகையும் தவிர வேறு எந்த மத இன அடையாளமும் பேணப்படுவதில்லை என்கிறார்கள் முகாம்காரர்கள். பூ வைக்கிறார்கள், பொட்டு வைக்கிறார்கள் பெண்கள். புர்கா அணிவதில்லை. ஐந்து வேளைத் தொழுகை இல்லை. நல்லது கெட்டதுகளை எல்லா மக்களும் சேர்ந்தே செய்கிறார்கள். திருவிழா போன்ற கொண்டாட்டங்களில்,இவர்கள் வீட்டுக்கு அவர்களும் அவர்கள் வீட்டுக்கு இவர்களும் அன்பையும் பலகாரங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு முஸ்லிம் பெண் இந்து ஆணைக் கல்யாணம் செய்திருக்கிறார், இன்னொரு முஸ்லிம் பெண் பக்கத்து ஊர்க்காரப் பையனைத் திருமணம் செய்திருக்கிறார்.

தொழில் என்று பார்த்தால் மற்ற அகதிகள்போல் பெயின்ட் அடித்தல், கடல் தொழில், கடை வைத்தல் போன்ற அந்தப் பகுதி சார்ந்த வேலைகளைச் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் ஆண்கள் மத அடையாளங்களுடன் எட்டயபுரம் பள்ளிவாசலுக்குச் செல்கிறார்கள். ஊர்க்காரர்களின் உதவியுடன்தான் முகாமிலுள்ள பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது. ஊர்க்காரர்களும் முகாம் பள்ளிவாசலுக்கு வந்து செல்கிறார்கள். விசேசமான நேரங்களில் மட்டும் வெளியாட்கள் முகாமுக்குள் நுழைந்தால் க்யூ பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்படவேண்டும். 

வெம்பக்கோட்டை அகதிகள் முகாமில் இருக்கும் 

11 குடும்பங்களும் தாப்பாத்தி அகதிகள் முகாமிலிருக்கும் முஸ்லிம் குடும்பங்களும் உறவினர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய பூர்வீகங்கள் விளாத்திக்குளத்திலுள்ள வாலிநோக்கம், வேம்பார் கிராமங்கள் என்ற தகவல் கிடைக்கிறது. இவர்கள் எப்படி இலங்கை சென்றார்கள், அங்குள்ள மன்னார் மாவட்ட பேசாலைப்பகுதியில் எப்படிக் குடியேறினார்கள். எப்படி அகதிகளாகத் தமிழகம் வந்து ஊரிலுள்ள உறவினர்களுடன் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டார்கள் என்பதை அறிய தவ்லத்கான் என்பவரைத் தொடர்புகொள்ள முயன்றேன்; முடியவில்லை. தவ்லத்கான் முகாம் தலைவராகப் பலவருடங்கள் இருந்திருக்கிறார். இவர்பற்றி முகாமில் பொதுவாக எல்லாமத மக்கள் மத்தியிலும் நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. உள்முரண் காரணமாக இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுத் தற்போது வேறு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தவ்லத்கானுக்குத் தமிழ்நாட்டில் உறவுகள் இருக்கிறார்கள். அதேபோல் முகாமில் தவ்லத்கான் தலைவராக இருந்த காலத்தில் மதரீதியிலான பிளவுகளை உருவாக்கச் சிலர் முயன்றிருக்கின்றனர். ஆனால் தவ்லத்கானின் பொறுப்புடைய செயற்பாடுகளால் பல சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாக அங்கிருந்தவர்களிடம் பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அகதிகளில் கணிசமானவர்கள் இப்போதும் எவ்விதத் துவேசமுமின்றி தவ்லத்கானை ஆதரிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதிகள் முகாமில் வசிக்கும் புகாரி என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர், இங்கு வசிக்கும் பதினொரு குடும்பங்களும் மன்னார்த் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தன் அம்மா இராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர், அப்பா இலங்கையைச் சேர்ந்தவர் என்றும், 1990களிலேயே மன்னாரிலிருந்து அகதியாக வந்ததாகவும் தெரிவித்தார். தன் சகோதரி, முகாமில் பதிவு நீக்கப்பட்டு இராமநாதபுரத்தில் திருமணம்செய்து வாழ்வதாகக் குறிப்பிட்டார். 

மேலும் புகாரி, ‘‘நாங்க முஸ்லிம் என்பதால் முகாம் மக்களாலோ வெளியில் இருந்தோ எந்தப் பிரச்சனையான சூழலும் உருவானதில்லை. நாங்க முகாம் மக்களுடன் நெருக்கமான உறவுடனே வாழ்கிறோம். முகாம் வாழ் முஸ்லிம் அல்லாதவர்களே முஸ்லிம் பெண்கள் - ஆண்களைத் திருமணம் செய்திருக்கிறார்கள். எந்த முரணும் இல்லாமல் சந்தோசமாக வாழ்கிறோம். “நாங்க தொழுகைக்கு இருவது கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவகாசிக்குப் போக வேண்டியிருப்பதால் எங்கள் மதம் தொடர்பான வழிபாடு தடைப்பட்டிருப்பது ஒன்றுதான் வருத்தமாக இருக்கிறது. அகதிகளை திருப்பி அனுப்பினால் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானோர் இலங்கைக்குச் செல்ல விருப்பமாகவே இருக்கிறோம்’’ என்றார்.

நகரத்திலிருந்து நாற்பது ஐம்பது கிலோமீட்டருக்கு வெளியே அகதிமுகாம்கள் அமைக்கப்பட்டு, அகதிகள் வாழ்கிறார்கள். இந்துக்களோ கிறிஸ்தவர்களோ கணிசமான தொகையில் இருப்பதால் அவர்களால் கோயில் கட்டி வழிபாடு நடத்த முடிகிறது. 

ஆனால் முஸ்லிம்களின் பத்து இருபது குடும்பங்களால் அது சாத்தியமில்லாததாலேயே இவர்கள் மத அடையாளம், வழிபாடு போன்ற பண்பாட்டு அம்சங்கள் மங்கிப் போயிருக்கின்றன. சமீபத்தில் ஊரின் ஒத்துழைப்போடு தாப்பாத்தியில் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தாலும் அவர்களின் மதம்சார்ந்த ஈடுபாடு குறைந்தேதான் காணப்படுகிறது. கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் மதரீதியான அடையாளங்கள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால், முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணிவது, பெண்கள் புர்கா அணிவது போன்றவை மத அடையாளமாகவே வெளித்தெரிகின்றன. தாப்பாத்தி முகாமில் மத அடையாளம் ஆரம்பம் முதலே இல்லாததும் இம்மக்கள் சக அகதிகளுடன் இடைவெளியில்லாமல் கலந்து பழகுவதும் நட்புறவு தழைத்தோங்கும் காரணங்களாக இருக்கலாம்.

மதரீதியான எந்த முரணும் இல்லை; முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மற்ற மதத்தினர் மத அடையாளங்களின்றி ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்கிறார் முகாமில் பணிசெய்யும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர். 

தாப்பாத்தி முகாமில் ஏழு மாதங்களாகப் பலருக்கு உதவித்தொகை கொடுக்கப்படவில்லை. ‘‘தம்பி நீங்க இத முக்கியமா எழுதுங்க. உதவித்தொகை இல்லண்டா சனங்க எப்படிங்க வாழ்வாங்க.’’

‘‘நீங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டியதுதானே,?’’

‘‘எங்களுக்குள்ள ஒற்றுமையில்லை. இப்புடிப் பேசினாலே க்யூ பிராஞ்சுக்காரன்கிட்ட சொல்லிப்போடுவாங்க.’’ 

இப்படி மக்கள் ஆதங்கத்தைக் கேட்டுக்கொண்டு நீண்டநேரம் முகாமிற்குள் நிற்க முடியாது; முகாமைவிட்டு இருவருமாக வெளியேறினோம். சரியாக முகாம் வாசலில் இறங்கி நடக்க ஆரம்பித்தபோது, எதிரில் சிவப்பாகக் கொட்டை எழுத்தில் ‘காவல்’ என்று எழுதப்பட்ட வண்டி வேகமாக எங்களை நோக்கி வருகிறது. 

அது எங்களின் பாதையில்தான் வருகிறது.

http://www.kalachuvadu.com/issue-195/page60.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.