Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கோணேச்சரம் ஆலையத்தின் வரலாறு

Featured Replies

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஆதவன்...!

  • தொடங்கியவர்

13082653_1385661388125989_54515482188766

  • 4 months later...
  • தொடங்கியவர்

கோணேஸ்வரம் கோவில் வரலாற்றின் ஓர் பக்கத்தை திருப்பிப் பார்த்தால்

FotorCreated-381

கோணேஸ்வரம் கோவில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் வரலாற்றின் ஓர் பக்கத்தை திருப்பிப் பார்த்தால் கி.மு.150 ஆண்டுகளுக்கு முன்னரே எல்லாளன் என்னும் ஈழத்(இலங்கை) தமிழ் மன்னன் கோணேஸ்வரத்துக்கு சென்று வழிபட்டதாக சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோணேஸ்வரம் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

‘கோவில்’என்னும் தமிழ்ச் சொல்லானது பெரும்பாலும் இந்தியாவில் கட்டப்பட்டிருக்கும் வைஷ்ணவக் கோவில்களில் காணப் படாத ஒன்று..!ஆனால் இந்தக் கோவிலில் “கோவில்” என்னும் தூய தமிழ்ச் சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாவிக்கப்பட்டதிலிருந்து இது சைவர்களுக்கும் தமிழர்களுக்கும் உரிய கோவில் மட்டுமல்ல தமிழர் ஒருவரால் கட்டப் பட்ட கோவில் என்றும் தெரியவருகிறது.

கோவில் வளாகத்தின் இடது பக்கத்தில் பிரட்ரிக் கோட்டைக்குள் நுழைந்ததுமே தென்படுவது சிங்கள இராணுவ முகாமும் அதனருகே உள்ள புத்த விகாரையுமாகும். பழம் பெருமை வாய்ந்த “கோணேசர் கோவில் தங்களுடையது” என்று ஒரு காலத்தில் உரிமை கொண்டாடும் சிங்கள நரித்தனத்தின் ஓர் அம்சம்தான் இது!

இலங்கை முழுவதையும் தம் பாட்டன் காலத்துச் சிங்களச் சொத்து என்று கூறும் பருந்துகளின் கொக்கரிப்புகளில் இதுவும் ஒன்று ஆனால் எங்கள் பூமிக்கான ஆதாரங்கள் ஏராளம் ஏராளம்..!

எங்கள் வரலாற்றுப் பொக்கிஷம் அது!கோணேஸ்வரம் கோவிலுக்கு “கோகர்ணம்” என்றும் ஓர் பெயர் வரலாற்றில் புராண காலத்தில் வழங்கப்பட்டதாக பழைய நூல்களின் மூலம் அறிய முடிகிறது!சைவர்களின் பிரதானக் கடவுளாக ஈழத்திலும் சிவனையே தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை முன் நிறுத்தி வணங்கி வருகிறார்கள்.

பழங்கால மன்னனாகிய இராவணன் கூட ஓர் மாபெரும் சிவ பக்தன்தான். பல்லவர்,பாண்டியர்,சோழர்களின் வணக்கத்துக்கு உரிய பிரதான கடவுள் சிவன் ஆகும்.

சிவனின் காலடியில் கங்கை நதி ஊற்றெடுத்து வந்து கலப்பதாக புராணங்கள் கூறுவது போல் தென் இலங்கையில் ஊற்றெடுத்த மகாவலி கங்கையானது இறுதியில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்குள் நுழைந்து கடலில் கலக்கும் இடம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூருக்கு அருகே கங்கை என்னும் சிற்றூரில்தான் உண்டு. இந்தக் கட்டுரையாளரின் பிறந்த மண்ணும் அதன் அருகேதான் உண்டு! ..அங்கிருந்து ஓர் உயரமான இடத்தில் இருந்து பார்த்தால், கோணேசர் கோவிலை..தொலை நோக்கி மூலம் காணலாம்!

கோணேசர் கோவில் தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிசம் என்று சொன்னேன்..அதற்கு ஏதுவாக ..பல அரிய சான்றுகள் உண்டு..!..அதில் ஒன்றுதான் இராவணன் கல்வெட்டு என்று அழைக்கப்படும் ஓர் பகுதியாகும். கோவிலின் மிக அருகில், வலது புறத்தில் உள்ள பெரும் மலையொன்றை இரண்டாகப் பிளந்ததுபோல் செங்குத்தாக சுமார் முன்னூறு அடி ஆழத்துக்குமேல் கடலுக்குள் பிளந்து – புதைந்து கிடக்கும் அந்த இடத்தைத்தான் இராவணன் கல்வெட்டு என்று அழைக்கிறார்கள்..!..அந்தப் பகுதி மிக..மிக ஆழம் கூடிய பகுதி ஆகும்..தோணிகளில் அதனருகே போகும்போது..

காந்தம் போல் அந்த மலை தம் தோணிகளை இழுப்பதாக நமது மீனவர்கள் கூறுவதுண்டு..இது புவியியல் ரீதியாக ஆராயப் படவேண்டிய ஒன்று..! அதற்கு அண்மையில் இராவணனின் வெண்கலச் சிலை ஒன்றும் உள்ளது!..என்பது மட்டுமல்ல..இந்த கோவிலில் இராமருக்கு என ஓர் குடிசையைக்கூட தமிழர்கள் கட்டி வைக்கவில்லை..ஆனால்.. இந்த கோணேஸ்வரம் கோவிலில் இராவணனுக்கும் ஓர் சிறிய கோவில் உண்டு என்பதுதான் கவனிக்கப் படவேண்டிய ஒன்று..!..சிவனை வழிபடும் பக்தர்கள் இராவணனையும் வழி பட்டுச் செல்வார்கள்!

கோவிலுக்கு அண்மையில் உள்ள ஆழக் கடலுக்குள் தான் நன்னீர் நதி ஊற்று இருக்கிறது..இது கதை அல்ல!..பூகோள ரீதியாக உள்ள வரலாறு..இந்த சிறு நதியில் இருந்தே பாபநாச தீர்த்தம் ‘ என்னும் ஊற்று கோணேசர் மலையை சுற்றி சுரக்கிறதாம்!..இந்த கல்வெட்டுக்கும் பாபநாச தீர்த்ததுக்கும் அன்றில் இருந்து இன்று வரை கடலைப்பார்த்தவாரு பூசை நடப்பதுண்டு!
அன்றைய வரலாற்றின்படி, கி.மு.205இல் உள்ள திராவிடக் கட்டிடக் கலை அமைப்பின்படியே சுவாமி மலையில் அமைந்துள்ள கோணேஸ்வரம் கோவில் கட்டப் பட்டுள்ளதாக சொல்வார்கள்..!

ஆனால்… அதற்கும் சில நூற்றாண்டுக்கு முன்னர் வடிக்கப் பட்ட கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கும் கி.மு..இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட வரலாற்று- புராண நூல்களில் கோணேஸ்வரத்தின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கி.மு. 400 க்கும் கி.மு.100க் குமிடையில் எழுதப்பட்ட மகா பாரதத்தில் ‘கோணேஸ்வரம்’ கோவிலை கோகர்ணம்’ என்று குறிப்பிடுகிறார்கள் !… பாரதம்..இராமாயணம் இரண்டிலுமே இடம் பெற்ற கோவில்தான் எங்கள் கோணேஸ்வரம் ஆகும்..ஆனால்..இராவணன் கல்வெட்டு..கி.மு.1580 இல் கட்டப் பட்டதாக கட்டிடக் கலை நிபுணர்கள் கூறுகிறார்கள்!..எனவே..அதற்கும் பல் ஆண்டுகளுக்கு முன்னர்தான் கோணேசர் கோவில் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறதல்லவா..?
ஆனால்.. ‘வாயு புராணம்’ என்னும் வரலாற்று நூலில்Paul E .Peiris ..என்ற வரலாற்று ஆசிரியர்..கோணேசர் கோவில் கி.மு.543-505 கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்..இதையே..மற்றும் ஓர் வரலாற்று ஆசிரியரான..எஸ்.பத்மநாதனும் உறுதிப் படுத்துகிறார்..!

நகுலேஸ்வரம் ..(கீரிமலை)..திருக்கேதீஸ்வரம் ..(மன்னார்)..முனீஸ்வரம் ..(சிலாபம்)..தேனாவரம் (தேவன்துறை) கோணேஸ்வரம் ஆகிய ஐந்து கோவில்களுமே பழங் காலத்தில் சிவனுக்காக தமிழர்களால்.. கட்டப் பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க கோவில்களாகும்!..இந்த கோவில்கள் அனைத்துமே புராணங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. அருணகிரிநாதர், திருஞான சம்பந்தர், சுந்தரர்
போன்றவர்கள் கோணேஸ்வரத்துக்கு வந்து தரிசித்துச் சென்றுள்ளனர். திருஞானசம்பந்தரால் பாடப் பட்ட தேவாரப் பதிகமும் கோணேஸ்வரம் பற்றி குறிப்பிடுகிறது..ஆனால் ..சம்பந்தரின் காலம்..கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்!

இராவணன் சிவனையே முழு முதற் கடவுளாக வழி பட்டவன் என்பது குறிப்பிடத் தக்கது..அதுமட்டுமன்றி..அவன் ஓர் சிறந்த இசை வல்லுனரும் ஆவான்.இராவணன் யாழ் வாசித்துப் பாடினால் சிவன் கூட இமய மலையில் இருந்து இறங்கி வருவார் என்று நான் கூறவில்லை..எந்த இராமாயணம் இராவணனை பெண் பித்தன்..அசுரன்..நரகாசுரன் என்று கூறியதோ ..அந்த இராமாயணம் தான் இதையும் கூட குறிப்பிட்டுள்ளது..!

இவைகளில் பல கர்ண பரம்பரை கதைகள் என்று வைத்துக் கொண்டாலும் கூட..இராவணனின் வீரத்தை இராமனால் கூட வெல்லமுடியாது..அதனால்தான் வாலியைக் கூட யுத்த தர்மத்துக்கு மாறாக சதியால் இராமன் கொன்றான் என்று அறிய முடிகிறது!அப்படிப்பட்ட இராவணன் தன் வாளால் மலையை வெட்டிய இடமே ‘இராவணன் கல்வெட்டு’ என்று வழங்கப்படுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். ஓர் வரலாற்றுப் பின்னணி இன்றி கர்ண பரம்பரைக் கதைகள் தோன்ற முடியாது என்று முக்கிய வரலாற்று ஆசிரியர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.

http://www.ulkuththu.com/32097

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஆதவன்....!

  • 7 months later...
  • தொடங்கியவர்

 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

திருக்கோனேஸ்வர ஆலய மான்மியம் மற்றும் வரலாறு 

சாந்திப்பிரியா 

12.jpg

ஆலய வரலாற்றைப் பற்றி எழுத நிறைய செய்திகளை கண்டறிய வேண்டி உள்ளது.  அந்த இடங்களுக்கு விஜயம் செய்திருந்த சிலரிடம் நேரில் கேட்டும், சிலவற்றை படித்தும் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.  ஒரு காலத்தில் இந்தியாவை விட சிறப்பான இந்துக்களின் புராதான ஆலயங்கள் இலங்கையில் இருந்துள்ளன என்பதைக் கேட்கும்போது ஆச்சர்யமே மேலோங்குகின்றது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சிலர் அதற்குக் காரணம் ஒரு காலத்தில் இலங்கையும் இந்தியாவின் தென் பகுதியும் நடந்து செல்லும் வகையிலும், படகுகளில் செல்லும் அமைப்புடனும் இருந்ததாகக் கூறுகிறார்கள். அதனால்தானோ என்னவோ பல புராதான வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள் அங்கு அமைந்துள்ளன.  மேலும் இராமாயண காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்ப்பும் இருந்துள்ளது. அதன் தாக்கத்தினால் கூட இந்த நிலை எழுந்திருக்கலாம். ஆகவே அதற்கெல்லாம் செல்வது எளிதல்ல என்பதினால் குறைந்தபட்ஷம் அவற்றைப் பற்றிய வரலாற்று சிறப்பையாவது  தெரிந்து கொள்ளலாமே என  நெடுநாட்களாக நான் நினைத்து இருந்த திரிகோண மலையில் உள்ள திருக்கோனேஸ்வர ஆலய மான்மியம் மற்றும் வரலாறு குறித்து சில நாட்களில் எழுத உள்ளேன்.

 

பாகம்-1

இலங்கையின் கிழக்கு திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியும் புனிதமானதுமான மகாவலிகங்கை அவ்விடத்தில் கடலுடன் கலப்பதால் அப்பிரதேசம் இயற்கை வளத்துடன் சிறந்து விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்றின் உச்சியிலே திருக்கோணேஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமானின் ஆலயம்  உள்ளது. இது அண்மைக் காலத்தில் பழைய ஆலயத்தின் மீது எழுப்பப்பட்ட புதிய ஆலயம் ஆகும் .

ஸ்ரீ லங்காவில் திரிகோண மலைப் பகுதியில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு சுமார் 4000 அல்லது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை த்ரிகூடம் என்றும் திரிகூடம் என்றும் கூறுவார்கள். அதாவது  திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெரிய ஆலயங்கள் இருந்துள்ளன என்பதைக் குறிக்கும் வகையில் அப்படி அழைக்கப்பட்டு இருந்திருக்கலாம். அல்லது தென் பகுதியில் சிவபெருமான் ஏற்படுத்திய மூன்று மலைகளின் காரணமாகவும் அமைந்து இருக்கலாம். மூன்று மலைகள் வந்த அந்தக் கதை பின்னர் வரும் . 

இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை எனும் நதி இலங்கையை சுற்றி உள்ள கடலுடன் இந்த ஆலயம் உள்ள பகுதியில்தான் கலக்கின்றது. அந்த மாவல்லி நதியின் மகத்துவமும்  மிகப் பெரியது. அங்குள்ள ஸ்வாமிமலை ( தமிழ்நாட்டில் உள்ள ஸ்வாமி மலை அல்ல) எனப்படும் குன்றின் உச்சியில் எழுந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம்  புதியதாக கட்டப்பட்டு உள்ளது என்றாலும், அதன் வரலாறும் அதிலுள்ள சிலைகளும் புராதானமானவை. ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதியும்  இலங்கையும்  இணைந்து இருந்திருந்ததாகக் கூறுவார்கள்.  இரண்டு நாடுகளுக்கும் இடையே  சிறிது தூரமே இருந்த நதியை படகு மூலம் கடந்து எளிதில் செல்லும் வகையில் போக்குவரத்து இருந்துள்ளது. அந்த நதி தற்போது கடலுடன் இணைந்து மறைந்து விட்டதாகக் கூறுவார்கள். இமய மலையின் மேல் உள்ள உத்தரக் கைலாச மலையில் இருந்த சிவபெருமான் இந்த மலையில் வந்து தங்கி இருந்ததினால் இதை தக்ஷிண கைலாயம் என்றும் அழைத்தார்கள்.

இந்த ஆலயம் தற்போது  திருகோணேஸ்வரர் என்று அழைக்கப்பட்டதின் காரணம் பண்டைய காலத்தில், அநேகமாக பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் என்று கூறலாம், அங்கு ஒரு ஆலயம் கோணேஸ்வரர் என்ற பெயரில் இருந்துள்ளது. ஆனால் அது கடல் கொந்தளித்ததில் அங்குள்ள மலை அடிவாரத்தில் மூழ்கி விட்டதினால் இன்றும் அங்கு அந்த ஆலயத்தின் நினைவாக அந்த மலைக்கே பூஜைகளை செய்வதாக ஐதீகம் உள்ளது. இன்றைக்கும் மலையின் கீழ் பகுதியில், ஆழ் கடலின் உள்ளுக்குள் சில குகைகள்  உள்ளதாகவும், அதுவே அன்றைய ஆலயம் இருந்த இடம் என்றும் வல்லுனர்கள் சிலர் கருத்துக் கூறுகிறார்கள். அன்று இருந்த ஆலயம் முற்றிலுமாக போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டு விட்டாலும், அப்போது இருந்த ஆலயச் சிலைகள் பாதுகாப்பாக ஒழித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த வரலாற்றை பின்னர் கூறுகிறேன். முதலில் இந்த ஆலயம் எழக் காரணமாக இருந்த திருக்கோணமலை எழக் காரணமாக உள்ள  புராணக் கதை ஒன்றைப் படிக்கலாம்.

முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமான் தனது மனைவி உமையுடன் வீற்று இருக்கும்போது அனைத்து தேவர்களும் , கடவுட்களும் அங்கு கூடி இருந்தார்கள். ஒவ்வொருவரும் சிவபெருமானை புகழ்ந்து கூறிக் கொண்டு இருந்தபோது படைக்கும் தொழிலுக்கு பிரும்மாவையும், காக்கும் தொழிலுக்கு விஷ்ணுவையும், படைப்பவை அனைத்தும் பெருகிக் கொண்டே இருந்தால் என்ன ஆவது என்பதற்காக அவ்வபோது அவர்களை அழிக்கும் தொழிலுக்கு ருத்திரன் என்ற பெயருடைய சிவபெருமான் படைக்கப்பட்ட கதையையும் எடுத்துக் கூறி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தவர்களை பார்த்து சிவபெருமான் புன்னகை புரிந்தவாறு கூறினார் அந்த பரப்பிரும்மனாக தான் படைத்த சிருஷ்டியிலே பூலோகத்தில் பூமியை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் வகையில் ஆதிசேஷனை படைத்துள்ளதாகவும் நினைவு கூர்ந்தார். அப்போது அதைக் கேட்ட வாயு பகவானினால் ஆதிசேஷனுக்கு கொடுக்கப்பட்ட புகழைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே வெகுண்தெழுந்தவர் சிவபெருமானின் சபையில் கேட்டார் 'பரப்பிரும்மனே, உம்மை வணங்கி துதிக்கிறேன். நான் இப்படி பேசுவதற்கு மன்னிக்கவும்.  என்னை விட எந்த விதத்தில் ஆதிசேஷன் மேன்மையானவர்? அவர் எனக்கு எந்த விதத்திலாவது  ஈடாவாரா?. அவருக்கு சுய பலம் இல்லை என்பதினால் அவருக்கு கிடைத்த பலம் விஷ்ணு கொடுத்ததல்லாவா' .

அதைக் கேட்ட யாரும் பதில் கூறவில்லை. அப்படி ஒரு நிலை வரும் என எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. வாயடைத்து நின்றவர்கள் மத்தியில் மீண்டும் வாயு பகவான் கூறினார் ' பரப்பிரும்மனே, ஆதிஷேஷனார் சக்தி வாய்ந்தவரா, நான் சக்தி வாய்ந்தவரா என்பதை நிரூபிக்க ஒரு போட்டியை ஆதிசேஷன் ஏற்க வேண்டும் . அந்தப் போட்டியின்படி நாங்கள் இருவரும் யுத்தம் செய்வோம். அதில் யார் வெற்றி அடைவார்களோ, அவர்களை மற்றவரை விட மேன்மையானவர் என்று நீங்கள் ஏற்க வேண்டும்' என்று கூற சற்றும் தாமதிக்காமல் அந்த போட்டியை ஆதிசேஷனும் ஏற்றுக் கொண்டார்.

அடுத்து யுத்தத்தை எங்கே வைத்துக் கொள்வது, எப்படிப்பட்ட யுத்தம் நடத்தப்பட வேண்டும் என அங்கிருந்த அனைவரும் கூடி விவாதித்தப் பின் பிரும்மா கூறினார் ' ஆதிசேஷன் கைலாய மலையை தனது உடலினால் சுற்றிக் கொண்டு மலையின் சிகரங்களை தனது தலைகளினால் மறைத்துக் கொள்ள வேண்டும். வாயு வேகமாக தனது சக்தியை வெளிப்படுத்தி அந்த சிகரத்தின் ஒரு பகுதியையாவது விழ வைக்க வேண்டும். அப்படி செய்தால் அவர் ஆதிசேஷனை விட மேன்மையானவராக கருதப்படுவார். இல்லை எனில் அவர் தான் கூறிய வார்த்தைகளுக்கு ஆதிசேஷனிடம் மனிப்புக் கேட்டுக் கொண்டு அவரை தன்னைவிட மேன்மையானவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் '.

பிரும்மா கூறியதை இருவரும் தயங்காமல் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு நல்ல காலத்தில் தேவர்கள் மற்றும் பிற கடவுட்கள் அனுமதி கொடுக்க இருவரும் யுத்தத்தைத் துவக்கினார்கள். ஆதிஷேஷனார் தன் உடலால் கைலாய மலையை நன்கு சுற்றிக் கொண்டு நின்றவாறு  தனது ஆயிரம் தலைகளினாலும் மேகத்தை முட்டிய இமய மலையின் மீதிருந்த உத்திர கைலாய மலை வரை மறைத்துக் கொள்ள, வாயு பகவான் வேகமாக காற்றை வீசத் துவங்கினார். எத்தனை வேகமாக காற்றை வீசியும் ஆதிசேஷன் மறைத்து நின்ற பர்வதத்தை அசைக்க முடியாமல் வாயு பகவான் தடுமாறினார். பல காலம் தொடர்ந்து கொண்டு இருந்த போரினால் அண்டம் நடுங்கியது, அங்கிருந்த பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என அனைவரும் இடம் பெயர்ந்து விழுந்து மடியத் துவங்க, நகரங்களும் அழியத் துவங்க , அங்காங்கே நதிகள் சீறி எழுந்து மிச்சம் இருந்த நகரங்களை நாசம் செய்யத் துவங்க  தேவர்கள் அஞ்சி ஓடி சிவனை சரணடைந்தார்கள். அவர்களுடன் பிரும்மாவும் சென்றார்.

ஆதிசேஷன் மற்றும் வாயு பகவானின் யுத்தத்தினால் நிகழும் நிலையை எடுத்துக் கூறி அதை தடுத்து நிறுத்த வேண்டும் என சிவபெருமானிடம் அனைவரும் வேண்டிக் கொள்ள, அவர்கள் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கூறினார் ' பிரும்மனே, நீங்கள் யாரும் கவலைப்படத் தேவை இல்லை. இந்த யுத்தத்தை  உருவாக்கியவன் நான்தான். அதற்குக் காரணம் தட்ஷின தேசத்தின் நானும் உமையும் சென்று தங்க அங்கு  ஒரு கைலாய மலையை உருவாக்க எண்ணினேன்.  அதற்காகவே  இந்த நாடகத்தை அரங்கேற்றினேன். ஆகவே கவலை வேண்டாம். நான் உருவாக்கியதை  நானே முடித்து வைக்கிறேன்' எனக் கூறியவர் பிரும்மாவிடம் உடனடியாக உத்தர கைலாய மலையைப் போல இன்னுமொரு மலையை இமய மலைப் பர்வதத்தின் மேல் பகுதியில்  உருவாக்குமாறு கூறினார்.

பிரும்மாவும் சற்றும் தாமதம் செய்யாமல் விஸ்வகர்மாவின் துணைக்கொண்டு உத்தர கைலாயத்தைப் போலவே இன்னுமொரு கைலாய மலையை தயார் செய்து முடித்தார். அடுத்தக் கவலை அதை எப்படி, எந்த தட்ஷிணப் பகுதிக்கு எடுத்துச் செல்வது?   ஜாடை காட்டி ஆதிசேஷனை அழைத்தார் சிவபெருமான்.  அருகில் வந்த ஆதிசேஷனிடம்  'ஆதிசேஷனே நாம் இன்னொரு கைலாய மலையை தென் பகுதியில் அமைக்க எண்ணி உள்ளோம். அதற்கான தருணம் இப்போது வந்து விட்டது. அந்தக் காரணத்தைக் கேட்பாயாக ' என்று கூற, அதை தனது தலைக் குனிந்து ஆதிஷேசம் கேட்ட நேரத்தில் வாயு  வீசிய காற்றில் பிரும்மா படைத்திருந்த கைலாய மலை உத்தரக் கைலாய மலையில் இருந்து பிளந்து வானில் பறக்கத் துவங்கியது. ஆதிசேஷன் அதைத் தடுக்க ஓடினார் . அவ்வளவுதான், அதையே எதிர்பார்த்திருந்த சிவபெருமான் உடனடியாக  வாயு பகவானை அழைத்து   வானிலே பறந்து கொண்டிருந்த பிரும்மன் படைத்திருந்த கைலாய மலையின் மறு உருவை அப்படியே கொண்டு சென்று தற்போது இலங்கை என அழைக்கப்படும் ஈழ நாட்டின் தென் பகுதியில் கொண்டு போய் வைக்குமாறு கூறினார். வாயு பகவானும் அதை தாமதிக்காமல் செய்து முடித்தார். அது செய்யப்பட்டு முடிந்ததும்தான் யார் தோற்றது, யார் வெற்றி பெற்றது என்ற சர்ச்சை மீண்டும் சிவபெருமானின்  முன்னால் வந்தது. சிவ பெருமான் வாயுவையும், ஆதிசேஷனையும் அழைத்து தான் நடத்திய  நாடகத்தை எடுத்துக் கூறி யாரும், யாருக்கும் மென்மையானவரும் அல்ல, கீழானவர்களும் அல்ல. அவரவர் படைக்கப்பட்டதிற்கு  ஏற்ப அவரவர் தத்தம் தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று உண்மையை எடுத்துரைத்து அவர்களை ஆசிர்வதித்து, அவரவர் இருந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தார். 

ஆக சிவபெருமானே பிரும்மாவின் மூலம் இன்னொரு கைலாய மலையை உருவாக்க வைத்து அதை ஈழ நாட்டின் தென் பகுதியில் கொண்டு வைக்க ஏற்பாடு செய்து, அதையும் தனது வாசஸ்தலமாக்கிக் கொண்டார். இப்படியாக உருவானதே திருகோணீ ஸ்வரர் மலை ஆகும். அடுத்து பிரும்மாவை அழைத்த சிவபெருமான் அவரிடம் கூறினார் ' இன்னும் சில காலத்தில் இந்த மலையில் உன்னதமான நிகழ்வுகள் நடைபெறும். நானும் உமையும் அங்கு தங்கி இந்த உலகை ரஷித்தவாறு  இருப்போம். ஒரு காலத்தில் இந்த மலையே ஒரு ஆலயமாகும். அங்குள்ள பல பிராகாரங்களில் தேவ ரிஷி முனிவர்கள், மற்றும் தேவ லோகத்தில் உள்ள நீங்கள் அனைவரும் வந்திருக்க சிறப்பான ஏற்பாடுகள் நடக்கும்'.  சிவபெருமான் கூறியது போலவே பின்னாளில் அங்கொரு அற்புதமான ஆலயம் எழுந்தது.

.....தொடரும்

 

  • கருத்துக்கள உறவுகள்

கோணமாமலையின் ஆரம்பமே கோலாகலமாக இருக்கின்றது....! தொடருங்கள் ஆதவன்....!  tw_blush:

  • தொடங்கியவர்
11.jpg
 
சாந்திப்பிரியா 
பாகம்-2
 

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். அதுவே தென் கயிலையிலும் நடந்தது. 'திருகோணீஸ்வரர் மலை எழுந்து விட்டது. அது தட்ஷினக் கைலாயம் என்றப பெயரையும் பெற்று சிவபெருமான் மற்றும் உமையவள் தங்கும் இடமாகவும் ஆகி விட்டது. ஆனால் அதில் ஒரு குறை உள்ளது. அதை எப்படி கவனிக்காமல் விட்டீர்கள்  ?' என நாரதர் பிரும்மாவிடம் கேட்டார். பிருமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவர் நாரதரிடம், தான் படைத்த கைலாய மலையில் என்னக் குறை உள்ளது என்று கேட்டார். நாரதார் அமைதியாகக் கூறினார் ' என்னைப் படைத்த பிரும்மனே , கைலாயம் என்றாலே கங்கை உற்பத்தி ஆகி ஓடும் இடம் ஆகும். நீங்கள் படைத்த  தென் இமய மலையில்  கங்கை எங்கே உள்ளது? கங்கை இல்லாத இடம் கைலாயம் ஆகுமா? ' என்று கேட்டார். பிரும்மாவுக்கு தான் செய்திருந்த தவறு தெரிந்தது. ஆனால் அதை எப்படி சிவபெருமானிடம் சென்று இப்போது  கூறுவது? இப்போது அதைக் கூறினால் அவர் கோபம் அடைவாரே என்பதினால் இங்கும் கங்கையின் கிளைக் கொண்டு வர  என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்தார்கள். அவர்கள் விஷ்ணுவிடமும் சென்று சென்று அதற்கான யோஜனையைக் கேட்டார்கள். விஷ்ணு அவர்களிடம் 'கவலைப் படாமல் செல்லுங்கள் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்' என்று கூறி அவர்களை அனுப்பியப் பின் , கங்கா தேவியை அழைத்து அவளிடம் ஒரு காரியத்தை செய்யுமாறு கூறினார்.

பகீரதன் தவத்தினால் ஏற்பட்ட கங்கையின் பிரவாகத்தை அடக்க அவளை தனது முடியில் முடித்து வைத்துக் கொண்டார் சிவபெருமான் என்றாலும், அவர் முடியில் அவர் வைத்திருந்தது கங்கை நதியின் பிரவாகத்தை மட்டுமே. ஆனால் சில நேரங்களில் கங்கா தேவியும் அங்கு அவர் முடியில் வந்து தங்குவாள். ஆனால் உமையுடன் அவர் தனிமையில் இருக்கும்போது, கங்கா தேவி அங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது உமையின் கண்டிப்பான கட்டளை. அதற்குக் காரணம் தனிமையில் சிவபெருமானுடன் உமை இருக்கும்போது அவர்களை அந்தக் அந்த கோலத்தில் வேறு எந்தப் பெண்ணுமே பார்க்கக் கூடாது, அவர்களால் அவர்களுக்கு எந்த தொல்லையும் ஏற்படக் கூடாது என்பதே.

விஷ்ணு செய்திருந்த ஏற்பாட்டின்படி திருகோணீஸ்வரர் மலையில் ஒரு நாள் சிவனும் பார்வதியும் தனிமையில் கேளிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது கங்கா தேவியானவள் அவர் முடியில் சென்று அமர்ந்து கொண்டு ஒரு பெண்ணின் குரலில் கலகலவென சிரிப்பது போல சப்தம் செய்தாள். 'இதென்ன உங்கள் முடியில் இருந்து எதோ சப்தம் வருகிறது' எனப் பார்வதி கேட்க, அப்போது தன் முடியில் கங்கை அமர்ந்திருப்பதை உணர்ந்த சிவனார் 'ஒன்றும் இல்லையே, கங்கை நதியல்லவா பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. அதன் சப்தமே இது ' என்று கூறி விட்டு, பார்வதிக்கு தெரியாதபடி தன் தலையில் இருந்த கங்கா தேவியை நீர் திவலைகளாக்கி அதை தலையில் இருந்து துடைத்து ஏறிய அந்த நீர்த் திவலைகள் சிவனாரின் பாதத்தில் சென்று விழ, நீர் திவலைகளாக இருந்த கங்கா தேவி சிவனார் பாதத்தில் இருந்து வெளிக் கிளம்பி  திருகோணீஸ்வரர் மலையில் இருந்து பெரும் பிரவாகமாகப் பாய்ந்து அந்த மலையை சுற்றி ஓடியபடி  கடலுடன் கலந்தாள். அப்படி அவள் மலையை சுற்றி ஓடியபோது, அவள் உடலில் இருந்து வழிந்த நீர் இன்னும் சில இடங்களில் கிளை நதியாகப் பாய்ந்து ஓடியது.

இப்படியாக அந்த தென் கயிலையிலும் சிவபெருமானின் அருளினால் கங்கை நதி பிறந்ததும், அதைக் கண்டு மகிழ்ந்த நாரத முனிவர் பிரும்மாவுடன் ஓடி வந்து  விஷ்ணுவிற்கு நன்றி கூற,  அவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்ற  விஷ்ணுவும், கங்கா தேவியும் சிவபெருமானையும் உமையும் தரிசித்து நடந்ததைக் கூறி அவர்களது ஆசிகளை வேண்டி நின்றார்கள். சிவபெருமானும் புன்னகைப் புரிந்து அவர்களுக்கு ஆசி கூறி அனுப்பியப் பின் தன் பாதத்தில் இருந்து வெளிச்சென்ற அந்த கங்கை நதியில் குளித்தால் ஏற்படும் பலவிதமான புண்ணியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார். இமய மலைப் பர்வதத்தில் தன் முடியில் இருந்து வெளியான கங்கை, தென் பகுதியில், அதாவது இமய மலையின் அடிப்பகுதியில் உள்ள தென் பகுதியில், தனது பாதத்தில் இருந்து வெளியேறியதன் மூலம், தனது தலை முதல் பாதம் வரை தன்னை அபிஷேகம் செய்த பலனுடன் கங்கை அங்கு இருக்கிறாள் என்பதினால் அது விசேஷமான கங்கை நதியாக கருதப்படும் என்றும் அதில் ஸ்நானம் செய்பவர்கள் அடைய உள்ள பெரும் பயன்களையும் விலாவாரியாக எடுத்துரைத்தார். அந்த கிளை நதியில் உற்பத்தி ஆன ஒன்றுதான் கதிர்காமனில் ஓடும் மணிக்கங்கை நதியும் ஆகும். திருகோணீஸ்வரர் மலை உச்சியில் உலக அன்னையான உமைக்கு ஒரு ஷணம் கங்கையின் சிரிப்பு மிக அதிக (மஹா) மன வேதனையை தந்ததினால் திருகோணீஸ்வரர் மலையில் உற்பத்தியான அந்த கங்கையின் பெயர் மஹா வலி தந்த கங்கை என்பதை குறிக்கும் வகையில் மாவலிகங்கை என்ற  பெயரைப் பெற்றுள்ளது  என்று சிலர் கருத்துக் கூறுவார்கள். 
......தொடரும்

http://santhipriyaspages.blogspot.ch/2012/09/

Edited by Athavan CH

  • தொடங்கியவர்
பாகம்-3

இமயமலையின் ஒரு பகுதியே கோணேஸ்வர பர்வதம் என்ற நம்பிககை காரணமாகக் கோணேஸ்வரத்திற்கு தட்சண கைலாயம் என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம் என்ற பெயரும் உருவாகியதாக தட்சணகைலாய புராணம் எனும் நூலில் குறிப்பு உள்ளது. விஷ்ணு பகவான் மீன் உருவம் எடுத்தக் கதைக்கான காரணத்தை பின்னர் கூறுகிறேன்.

தமிழ் மொழிப் புலவர்களான திருஞான சம்மந்தம், திருமூலர் மற்றும் அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடப்பட்ட தலம் திருக்கோணேஸ்வரம் என்பதில் இருந்து இதன் மேன்மை புரியும். கி.மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை ராவணன் பூஜித்து வந்ததாக மட்டக்கிளப்பு மானியத்தில் குறிப்புக்கள் உள்ளன. அதற்கு ஆதாரமாக அனைவரும் குறிப்பிடுவது அங்குள்ள ராவணன் வெட்டு என்ற ஒரு பாறை இடுக்கு ஒன்றைத்தான் .

கோணேஸ்வர மலையில் ஒரு பெரிய பாறைப் பிளவு உள்ளது. அந்த பிளவிற்குக் காரணம் ஒரு விசேஷ லிங்கத்தை அவரது தாயாரின் பூஜைக்காக எடுத்து வருவதற்காக கைலாசத்துக்கே சென்று சிவபெருமானிடம் இருந்து இருமுறை சிவலிங்கத்தை பெற்றுக் கொண்டு  வந்த ராவணன் வரும் வழியில் ஏமார்ந்து போய் தான் எடுத்து வந்த லிங்கத்தை தவற விட்டார். ஆகவே மூன்றாம் முறையாக  திருக்கோணேஸ்வரர் சிவாலயத்தில் இருந்து சக்தி வாய்ந்த  சிவலிங்கத்தை  எடுத்து வரச் சென்ற ராவணன் பூமியில் இருந்த அதை அங்கிருந்து அதை எடுத்து வர முடியாமல் போனதினால்  அந்த இடத்தையே பெயர்த்துக் கொண்டு வந்ததாகவும் அதனால்தான் மலையில் அந்த பிளவு ஏற்பட்டதாகக் கூறுவார்கள். ராவணன் எடுத்துச் செல்ல முயன்ற சிவலிங்கத்தின் கதை என்ன?

ராவணன் பல அறிய வரங்களைப் பெற்று ஆட்சியில் இருந்தான். மிகப் பெரிய சிவ பக்தனாக இருந்தவன், நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தவன் காலம் செல்லச் செல்ல அவனுக்கு கிடைத்திருந்த வரங்களினால், இனி நம்மை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்பு கொண்டு அகங்காரம் பிடித்தவன் ஆயினான். தேவர்களையும் அவ்வபோது துன்புறுத்தி வந்தான். ஆனால் அவன் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்று இருந்ததினால் அவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனதினால் மனம் புழுகிக் கொண்டு இருந்தார்கள்.  சிவ பூஜையை ராவணன் மட்டும் செய்யவில்லை. ராவணனின் குடும்பமே சிவபக்தர்கள்.  அதிலும் அவனது தாயாரான கைகேசி சிவபெருமானின் பெரிய பக்தை. அவள் நாள் தவறாமல் சிவபூஜை செய்து வந்தவள்.

இந்த நிலையில் ஒரு நாள் ராவணன் அவனது  தாயார் கைகேசி  நெல்லைக் குத்தி அரிசியை எடுத்து அதை மாவாக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். தாயாரிடம் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டான். அவள் கூறினாள் ' மகனே, நீ இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உலகையும் ஆண்டவாறு, உன்னை யாராலும்  வெற்றி கொள்ள முடியாதவாறு இருக்கவே நான் தினமும் ஆயிரம் மாவிலான லிங்கங்களை செய்து, அதை  கடற்கரைக்கு கொண்டு சென்று அங்கு அவற்றுக்கு பூஜை செய்து விட்டு   கடலில் கரைத்து விட்டு வருகிறேன். நான் பூஜித்தப் பின் கடலில் கரைக்கும் சிவ லிங்கங்கள் பல்லாயிரக்கணக்கான  சிவ கணங்களாக கடலில் வாழ்ந்திருந்து அரணைப் போல உனது ராஜ்யத்தைக் காத்து வரும்.   இந்த ஆயிரம் மாவு லிங்கங்களுக்கு இணையான  சில சிவலிங்கங்கள்  கைலாயத்தில் சிவபெருமானிடம்  அல்லவா உள்ளது.  அவற்றில் ஒன்று கிடைத்தாலும் நான் செய்யும் பூஜைக்கு இணையாக இருக்கும். ஆனால் அதை யார் கொண்டு வர முடியும் என்பதினால் இப்படி என்னால் முடிந்ததை  உனக்காக செய்கிறேன்' என்று கூறினாள்.

அதைக் கேட்ட ராவணன் வருத்தம் அடைந்தான். தனக்காக தனது தாயார் செய்யும் பூஜைக்கு தன்னால் ஆன உதவியை செய்ய வேண்டும் என நினைத்தவன் தாயாரிடம் கூறினான் ' அம்மா, இத்தனை வாய்மை வாய்ந்த மகன் நான் இருக்க நீ ஏன் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டு மாவிலான சிவலிங்கங்களை செய்து பூஜித்தது வருகிறாய்? நான் கைலாயத்துக்கு சென்று அந்த  சிவலிங்கத்தை  சிவபெருமானிடம் இருந்து வாங்கிக் கொண்டு வருகிறேன்' என சூளுரைத்து விட்டு கைலாயத்துக்கு சென்றான்.

கைலாயத்துக்கு சென்றவன் அதன் வாயிலில் ஆயிரம்  ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தைக்  கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.  அவனும் தனது தாயாரின் ஆசையைக் கூற அதைக் கேட்ட  சிவபெருமானும் வேறு வழி இன்றி அவனுக்கு ஒரு சிவலிங்கத்தை கைலாயத்தில் இருந்து தந்தப் பின் அதை அவன் எடுத்துச் செல்லும் வழியில் பூமியில் எங்குமே வைக்கக்  கூடாது என்றும், ஆயிரம் மாவு லிங்கங்களை செய்து அவன் தாயார் பூஜித்ததை விட, பல்லாயிரக்கணக்கான  வருடங்கள், பல கோடி தேவர்களால் ஐந்து  வேளை பூஜை செய்து சக்தியூட்டப்பட்ட தன்னுடைய ஆத்ம  லிங்கங்களில் அதுவும் ஒன்று  என்றும், எந்த இடத்திலாவது  அவன் பூமியில் அதை வைத்து விட்டால் அதை திரும்ப எடுக்க முடியாது என்றும் அதன் பின் அதன் சக்தி அதனுள் அங்கேயே அடங்கி இருக்கும் என்று கூறி அனுப்பினார். அதை எடுத்துக் கொண்டு நாடு திரும்பத் துவங்கிய  ராவணனை நினைத்து தேவர்கள் அஞ்சினார்கள். அதை எடுத்துக் கொண்டு சென்று அதை பூஜித்தால் பிறகு ராவணனை யாருமே அடக்க முடியாதே என அஞ்சி நாரதரிடம் சென்று அதை தடுத்து நிறுத்த ஒரு உபாயத்தைக் கேட்டார்கள்.

அவரும் அந்த தேவர்களுடன் சென்று விநாயகரை வேண்டி துதிக்க அவரும் அவர்கள் முன்னால் பிரசன்னமாகி அவர்களுக்கு உதவுவதாகக் கூறினார். அதற்கேற்ப  அவர்  ஒரு வயதான பிராமண உருவில் சென்று ராவணனை வழியில் சந்தித்தார். சிவ லிங்கத்தை கையிலே வைத்துக் கொண்டு தன் நாட்டை நோக்கி  சரியான பாதையில் சென்று கொண்டிருந்த ராவணனின் கவனத்தை சற்றே கலைய வைத்தார்.  தன்னையே அறியாமல் புத்தி தடுமாறியவன் தான் சென்று கொண்டு இருந்த பாதையை மறந்து வேறு வழியில் செல்லத் துவங்கினான்.

சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு  வழி தவறி  சென்று கொண்டு இருந்த ராவணனுக்கு வழியில்  ஒரே தாகம் எடுத்தது. ஆனாலும் வைராகியமாக சென்று கொண்டு இருந்தபோது  வழியில் ஒரு கமண்டலத்தில் தண்ணீருடன் சென்ற பிராமண உருவில் இருந்த விநாயகரை பார்த்தான்.  அவர் அருகில் சென்று  தான் வழி தவறி  வந்து விட்டதாகவும், தான் இலங்கைக்கு செல்ல வேண்டிய வழியைக் காட்டுமாறும்  வேண்டிக் கேட்டுக் கொண்டப் பின், தனக்கு தாகமாக  உள்ளதினால்  குடிக்க சிறிது தண்ணீர் தர முடியுமா என்று  கேட்டான். அதையே எதிர்பார்த்து காத்திருந்த  விநாயகர் அவனுக்கு ஒரு கமண்டலம் தண்ணீரைக் கொடுத்தார். தனது மடியில் லிங்கத்தை வைத்துக் கொண்டே நீரைக் குடித்தப் பின் அவரிடம்  பேசிக் கொண்டே செல்லத் துவங்க அவன் வயிற்றிலே சென்ற நீர் பெரும் ஆறு போல வயிற்றில் பெருக்கெடுக்கத்  துவங்க  அவனுக்கு சிறுநீர் உபாதை வந்து விட்டது. ஆகவே தன்னுடன் வந்து கொண்டிருந்த பிராமண உருவில் இருந்த விநாயகரிடம் அந்த சிவ லிங்கத்தை கீழே வைக்காமல் வைத்துக் கொண்டு இருக்குமாறு கூறி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றான். 

அவன் வருவதற்குள் விநாயகர் அந்த சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு மறைந்து விட்டார். அந்த இடம் பாட்னாவின் அருகில் உள்ள பைத்யநாத்  ஆலயம்  உள்ள இடம். அங்குதான் ராவணன் ஏமார்ந்து போய் விநாயகரிடம் தந்து அவர் கீழே வைத்த  ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான வைஜ்யநாத் எனும் லிங்கம் உள்ளது.   சிறுநீர் கழித்து விட்டு வந்தவன்  அந்த சிவ லிங்கத்தை எடுக்க முடியாமல் திணறினான். தான் எமார்ந்து விட்டதை நினைத்து வருந்தினான். எத்தனைக் கஷ்டப்பட்டு வந்து இப்படி ஏமார்ந்து விட்டோமே என எண்ணி வருந்தியவன், மீண்டும் கைலாயத்துக்கு சென்று இன்னொரு சிவலிங்கத்தைப் பெற்றுக் கொண்டு வர தவம் இருக்கலானான்.
...........தொடரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.