Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I : பேராசியர் ராஜன் ஹூல்

Featured Replies

 

இலங்கை இனச்சிக்கலின் வரலாறு குறித்து,  இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜன் ஹூல் எழுதும் கட்டுரைத் தொடர் கொழும்பு டெலிகிராஃப் மற்றும் ஐலண்ட் நாளேடுகளில் வெளியாகிறது.  அதன் மொழிபெயர்ப்பை வெளியிட ராஜன் அனுமதித்திருக்கிறார்.

அக் கட்டுரைத் தொடரின் முதல் பாகம் இது:

 

இனப் பிரச்சினைக்கு இன ரீதியான தீர்வு காண்பது ஆபத்தாக முடியும் என்றார் ஹாண்டி பேரின்பநாயகம். (செப்.18,1947)

இன அடையாளத்தைவிட நாமனைவரும் மனிதர்களே என்ற புரிதல் அவசியம் என்கிறார் லக்ஸ்ரீ ஃபெர்னாண்டோ அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில்.

சுயநிர்ணய உரிமை என்பது கருத்தியல் கோணத்தில் எழுப்பப்படக்கூடாது ஆனால் அத்தகைய உரிமை பெறுவதால் சமூகம் முன்னேறமுடியும் என்ற சாத்தியக்கூறு இருக்குமாயின், அவ்வாறு செய்யலாம் எனவும் ஃபெர்னாண்டோ குறிப்பிடுகிறார்.

ஆனால் சுய நிர்ணய உரிமை வழியேதான் இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழமுடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

நாடு விடுதலை பெற்ற 1948லேயே மலையகத் தமிழர்கள் இனத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டார்கள். அந்த சோகம் தொடர்ந்திருக்கிறது. இந்த மோசமான வரலாறு முடிவுக்கு வர சுயநிர்ணய உரிமை அவசியம்.

நம் எல்லோருக்குமே பலவித அடையாளங்கள் உண்டுதான், இன, மொழி, மதம் என்று விரியும் அவை. ஆனால் அத்தகைய அடையாளங்களை எப்படி வரித்துக்கொள்கிறோம் என்பதையும் நோக்கவேண்டும்.

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் விரவியிருந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்டிருந்த அவர்கள் தேசத்திற்குச் செல்லாமல், மாறாக அவரவர் வாழ்ந்த நாடுகளிலேயே, ‘அந்நியர்’ மத்தியிலே தொடர்ந்து வசித்து, வளம் பெற்றனர்.

அதே போலவே 20ஆம் நூற்றாண்டிலும் கிழக்கு ஐரோப்பாவில் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாகிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்டிருந்த, பிரிட்டனின் பாதுகாப்பிலிருந்த காலனியில் குடியேற விரும்பவில்லை, மாறாக சோஷலிச ஐரோப்பாவையே அவர்கள் உருவாக்க முயன்றனர், என சுட்டிக்காட்டுகிறார் கார்ல் காட்ஸ்கி. தங்கள் எதிர்காலம் குறித்து அவர்கள் சுயமாக எடுத்த முடிவு அது. அவ்வாறாக தன்னெழுச்சியாக தீர்மானித்துக்கொள்வதே சுயநிர்ணய உரிமையாகும்.

இலங்கைத் தமிழர்கள்

1920களின் பிற்பகுதிவரையில் இலங்கைத் தமிழர்கள் சாதிகளால் பீடிக்கப்பட்ட ஒரு நிலவுடைமைச் சமுதாயமாகவே இருந்துவந்தனர். 1928 டொனமூர் ஆணையத்தின் சுயாட்சித் திட்ட்த்தின் விளைவாகவே தமிழர்களுக்கு அரசியல் அடையாளமும் உருவானது.

கூட்டுறவு இயக்கமும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும் அத்தகைய அடையாளம் வலுப்பெறக் காரணமாயிருந்தன.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் காம்ப்பெல், வட, கிழக்கு மாகாணங்களுக்குப் பொறுப்பாக ரகுநாதனை நியமித்தார்.

ரகுநாதனின் முயற்சியில் அமெரிக்க பாதிரியார் வார்ட் யாழ்ப்பாண கூட்டுறவு வங்கியின் முதல் தலைவராக 1929ல் பொறுப்பேற்றார்.

வார்ட் தலைமையில் இயங்கிய கிறித்தவ சமய அமைப்பு பள்ளிகள் பலவற்றை கிராமங்களில் நிறுவி, இலங்கையர்கள் ஆங்கிலம் கற்க உதவினர். அடித்தட்டு மக்களுக்கு இலவசக் கல்வி மட்டுமல்ல, இலவச உறைவிடமும் அளிக்கப்பட்டது

1924ல் தோன்றிய மாணவர் காங்கிரஸ் மீதும் அமெரிக்க மிஷனின் தாக்கம் இருந்தது. சமூக, பொருளாதார மேம்பாடு, பாரம்பரியக் கலைகள் மற்றும் இலக்கியத்தை மீட்டெடுத்தல், மற்றும் அரசியல் சுதந்திரம் உள்ளிட்டவையே அவ்வமைப்பின் முக்கிய நோக்கங்களாக பிரகடனம் செய்யப்பட்டது.

காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர் காங்கிரசின் செயல்பாடுளை ஊக்குவித்தனர்.

(யாழ்ப்பாணக் கல்லூரி என்பது வட்டுக்கோட்டையில் ஒரு உயர்நிலைப் பள்ளிதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)

”நான் யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்தபோதுதான் ஹாண்டி மாஸ்டர் (பேரின்பநாயகம்) மாணவர்கள் மனங்களில் புரட்சிகர எண்ணங்களை விதைத்துக்கொண்டிருந்தார். பழமைவாத ஆசிரியர்களுக்கோ ஹாண்டியின் அணுகுமுறை சற்றும் பிடிக்கவில்லை.

”அவர் தனக்கு உணவு பரிமாற தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த ஒருவரை வைத்துக்கொண்டார். பள்ளியில் அச்சமூக மாணவர்களை பிக்நெல் பாதிரியார் சேர்த்தபோது மேல் சாதி ஆசிரியர்கள் கல்லூரியிலிருந்தே விலகினர், ஹாண்டி. மட்டுமே அவருக்கு பக்கபலமாயிருந்தார். அம்மாணவர்களும் மற்றவர்களுடன் இணைந்து உண்ணும் உரிமையினையும் ஹாண்டி மாஸ்டர்தான் போராடி நிறுவினார். இவ்வாறு அவர் சமூக நீதிப் போராட்டத்தின் அடையாளமானார். அப்படித்தான் மாணவர் காங்கிரஸ் உருவானது. பின்னர் மாணவர் காங்கிரஸ் இளைஞர் காங்கிரசாகவும் ஆனது,” என்கிறார். அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சுப்பிரமணியன்.

டொனமூர் சுயாட்சித் திட்டம் அமலானபோது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரும் மற்ற மாணவர்களுக்கு சமமாக அமரலாம் என்ற நிலை உருவானது. இதை எப்படி மேல் சாதியினர் ஏற்றுக்கொள்வார்கள்? மோதல்தான். மாணவர் காங்கிரஸ் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றது.

கிறித்தவர்கள் தூண்டுதலில் செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, விக்டோரியா கல்லூரி முதல்வர், பின்னாளில் சைவப் பெரியார் என அழைக்கப்பட்ட சிவபாதசுந்தரம், மாணவர் காங்கிரசின் ஆறாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். அவரும் ஒத்துக்கொண்டார்.

மாநாட்டைக் குலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை முறியடிக்கப்பட்டன, சாதிரீதியான ஒடுக்குமுறைகளைக் களைவது தங்களது முக்கிய குறிக்கோள், சமூக நீதி இல்லாமல் அரசியல் விடுதலை வெறும் கானல் நீரே என காங்கிரஸ் தெளிவாக அறிவித்தது.

தமிழர்களும் கிறித்தவர்களும் தோளோடு தோள் நின்று செயல்படத்துவங்கினர், மதச் சார்பின்மை ஆழமாக வேரூன்றியது. அதன் பிறகு எவரும் பகிரங்கமாக சமய சார்பு நிலைப்பாடு எடுப்பதில்லை.

ராஜன் ஹூல்

இதே நேரத்தில் இளைஞர் காங்கிரசும், கூட்டுறவு இயக்கமும் இணைந்து அரசியல் விடுதலைக்கு அறைகூவல் விடுத்தன. ஒட்டு மொத்த தீவிற்கும் இவை முன்னோடியாகத் திகழ்ந்தன.

மேலே குறிப்பிட்ட ரகுநாதனின் முன்முயற்சியில் வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள மூலை எனும் சிற்றூரில் கூட்டுறவு மருத்துவமனை உருவானது. ஒரு மருத்துவரும் இரு கம்பண்டர்களும் இலவசமாகப் பணிபுரிந்தனர். அவர்கள் அர்ப்பணிப்பின் காரணமாக மருத்துவமனையின் புகழ் நாடெங்கும் பரவியது. மிகத் தொலைவிலிருந்த பருத்திமுனையிலிருந்து கூட பெண்கள் மகப்பேறுகாலத்தில் மூலைக்கே வந்தனர்.

இத்தகைய அமைப்புக்கள் வெறும் சமூகத் தொண்டோடு நின்றுவிடாமல் அரசியல் கல்வியையும் புகட்டின. சமூகத்தில் நெடுங்காலமாய் இருந்து வந்த அதிகார அமைப்புக்களைப் புறந்தள்ளி, புதிய அமைப்புக்கள்பால் தங்கள் கவனத்தைத் திருப்பவேண்டும், அவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

அரசியல் தீர்வு என்ற பெயரில் இணைந்து வாழ்ந்து வரும் இனங்கள் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கக்கூடாது, இன அடிப்படையில் தீர்வையும் கோரக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

எந்த ஒரு சமூகமும் ஒரு கூட்டமைப்பாக இயங்கவேண்டும். அரசு எந்த முடிவையும் சமூகத்தின் மீது திணிக்கக்கூடாது, பரந்து பட்ட மக்களைக் கலந்தாலோசித்த பின்னரே எந்த சட்டமும் இயற்றப்படவேண்டும் என்பார் ஹெரால்ட் லாஸ்கி. இந்தப் பின்னணியில் இலங்கை இனச்சிக்கலின் வரலாற்றை நாம் ஆராயலாம்.

 

 

https://www.patrikai.com/இலங்கைத்-தமிழர்களின்-சுய/

G.-G.-Ponnambalam

சுயாட்சிக்கு வழி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட டொனமூர் ஆணைய ஆலோசனைகளின் பின்னணியில் இளைஞர் காங்கிரசின் தோற்றம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், சமூக நீதிக்கான முன்முயற்சிகள் இவை குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம்.

இந்தப் பின்னணியில்தான் இடதுசாரி அரசியலும் தமிழர் மத்தியில் செல்வாக்கு பெற்றது. ஆனால் அத்தகைய அரசியல் தீவிர இனவாதத்தின் விளைவாய் இன்று முற்றிலுமாக உருக்குலைந்து போயிருக்கிறது.

1927 ஆம் ஆண்டில் ஆணையத்தை நியமித்தது பிரிட்டனின் குறிப்பிடத் தகுந்த சோஷலிஸ்ட் தலைவர் சிட்னி வெப். அப்போது அவர் காலனி நாடுகளுக்கான அமைச்சராயிருந்தார்.

அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் சம வாய்ப்புக்கள் என்பதே ஆணைய அறிக்கையின் தாரக மந்திரமாக இருந்தது. இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் ஒழிக்கப்படவேண்டும் எனவும் அது பரிந்துரைத்தது.

அன்றைய பிரபல தமிழர் தலைவர் பொன்னம்பலம் ராமநாதன் அப்போது 80 வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் அந்த தள்ளாத வயதிலும் ஆணையத்தின் முன் வந்து சாட்சியமளித்தார். என்னவென்று? இந்து வாழ்வியலுக்கு முரணானது அனைவர்க்கும் வாக்குரிமை எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

அவர் மட்டுமல்ல ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தமிழர் தலைவர்களுமே பெண்களுக்கும், வேளாளர் அல்லாதோருக்கும் வாக்குரிமை அளிப்பது அராஜகத்திற்கு இட்டுச் செல்லும் என வாதிட்டனர்.

செப்டம்பர் 27, 1928ல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்படுகிறது. அப்போதும் சில சட்ட மேலவை உறுப்பினர்கள் இது ஒருவகையில் சோஷலிசம், இதனால் நிதி நெருக்கடி உருவாகும் என்றனர்.

எழுத்தறிவு இருந்தால்தான் வாக்குரிமை கொடுக்கலாம் என ஆலோசன கூறினார் ராமநாதன்.

Donoughmore means Tamils no more – அதாவது டொனமூரின் பரிந்துரைகள் அமலானால் தமிழர்களே அத் தீவில் வாழமுடியாது என்றும், வாக்குக்களின் அடிப்படையிலான அரசு சிறுபான்மையினர் நலன்களை கடுமையாக பாதிக்கும், அவர்கள் இல்லாமலே போய்விடுவர் எனவும் ராமநாதன் எச்சரித்தார்.

சட்ட மேலவை விவாதங்கள் குறித்து லண்டனுக்கு அறிக்கை அனுப்பிய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஸ்டான்லி வாக்குரிமை பெற எழுத்தறிவு அவசியம் என்றானால் கண்டித் தமிழர்கள் தகுதி பெற மாட்டார்கள் என்பதாலேயே அப்படி ஒரு யோசனையினை இராமநாதன் முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் இறுதியில் அனைவர்க்கும் வாக்குரிமை அளிக்கப்படலாம் என ஒத்துக்கொண்டார் அவர்,

சிங்களரைப் பொறுத்தவரை அவர்கள் அனைவர்க்கும் வாக்குரிமை என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டனர், ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்தகைய உரிமை அளிக்கும்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கவேண்டும் எனக் கோரியதாகவும் ஹெர்பர்ட் தெரிவிக்கிறார்.

இதனிடையே இலங்கை இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகள் 1928ல் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றனர். சைமன் ஆணையப் புறக்கணிப்பு, சுயராஜ்ஜியம் கோரும் தீர்மானம்,  இவ்வாறு இந்திய சுதந்திரப் போர் நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர, சுதந்திர வேட்கை இலங்கைத் தமிழ் இளைஞர்களையும் ஆட்கொண்டது.

யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பெரேரா, குலரத்னே, ஜயதிலகே, குணசிங்கே போன்ற சிங்கள அறிஞர்கள் பங்கேற்றனர். இன ரீதியில் தமிழ் இளைஞர்கள் அக்கட்டத்தில் சிந்திக்கவே இல்லை.

அனைவர்க்கும் வாக்குரிமை அளிக்கலாம், மற்றும் இன ரீதியான பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என 1928 ஜூலையில் வெளியான டொனமூர் கமிஷன் அறிக்கை பரிந்துரை செய்தது. அத்தகைய அம்சங்களை இளைஞர் காங்கிரஸ் வரவேற்றது, ஆனால் சுயாட்சி எதுவும் கூறப்படவில்லை எனவும் அது சுட்டிக்காட்டியது.

அறிக்கையின் விளைவாய் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையக்கூடும், பரவாயில்லை, இனங்களுக்கிடையே ஒற்றுமை அவசியம் என காங்கிரஸ் கருதியது.

வாரமிருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இந்து என்ற ஆங்கில-தமிழ் ஏடு, இளைஞர் காங்கிரஸ் நிலையினை ஆதரித்து எழுதும்போது, சிங்கள ஆதிக்கம் என்று பூச்சாண்டி காட்டுவது சில தமிழர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது எனக் குறை கூறியது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய வீரப் பெண்மணி கமலாதேவி சட்டோபாத்யாய் இளைஞர் காங்கிரஸ் அமர்வொன்றில் எழுச்சிமிகு உரையாற்ற, சுதந்திரக் கனல் இலங்கையிலும் பரவியது.

டொனமூர் கமிஷன் பரிந்துரைகள் சுயாட்சியை உறுதிசெய்யாத நிலையில், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1931 ஆம் ஆண்டு தேர்தல்களை இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்தது.

ஃபிலிப் குணவர்த்தனே, இ.டபிள்யூ.பெரேரா, ஃபிரான்சிஸ் டி சொய்சா போன்ற சிங்கள அறிவுஜீவிகள் இளைஞர் காங்கிரசை ஊக்குவித்தனர்,.

மேல்தட்டு தமிழர்கள் அனைவர்க்கும் வாக்குரிமை அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்று அஞ்சினர் என்றால் சிங்களர் தரப்பிலோ தேர்தல்களை புறக்கணித்தால், ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படையில் பெரும்பான்மை சமூகத்திற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை இழக்கவேண்டி வருமே எனக் கவலை எழுந்தது.

இளைஞர் காங்கிரசார் மத்தியில் தங்கள் புறக்கணிப்பு தவறான செய்திகளை மக்களுக்கு சொல்லக்கூடும் என்ற அச்சம் இருக்கத்தான் செய்தது. அனைவர்க்கும் வாக்குரிமை என்பதை தாங்கள் மனதார வரவேற்றாலும் சுயாட்சி பற்றி பரிந்துரைகளில் ஏதுமில்லை என்பதாலேயே புறக்கணிப்பு என்பதை சரியாக மக்கள் புரிந்துகொள்வார்களா?

அந்த நேரத்தில் இலங்கைக்கு வந்திருந்த ஜவஹர்லால் நேரு கூட புறக்கணிப்பு சரியா என்ற கேள்வியை எழுப்பினார்.

ஆனால் தேர்தல் பக்கம் செல்வதில்லை என்றே முடிவானது. மகாத்மா காந்தி கூடத்தான் இமாலயத்தவறுகளை தான் செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறார், ஆனாலும் எல்லாம் நன்மைக்கே என்றானது, அதைப்போலத்தான் இந்த புறக்கணிப்பு முடிவும் என்கிறது இளைஞர் காங்கிரஸ் வெளியீடான ’மதவாதமா இனவாதமா.’

அப்பிரசுரத்தின் முன்னுரையில் ஹாண்டி பேரின்பநாயகம் குறிப்பிடுகிறார்: ”சர் பொன்னம்பலம் ராமநாதனை தமிழர்கள் நேசித்தனர், அதில் ஒன்றும் தவறில்லை, முதலில் இனவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தாலும் பின்னார் அவர் தன் நிலையை மாற்றிக்கொண்டார், சுயாட்சி வேண்டுமெனக் கோரினார், ஆனால் அவரை ஜி ஜி பொன்னம்பலம் அவரைத் தன் பக்கம் இழுத்து மீண்டும் இனரீதியான பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவைத்தார்.”

ஜிஜி பொன்னம்பலம் தடாலடியாக தமிழர்களுக்கு 50 சத இட ஒதுக்கீடு வேண்டுமென்றார். அவருக்கு பதிலடியாகவே இளைஞர் காங்கிரஸ் இனவாதம் குறித்த பிரசுரத்தை வெளியிட்டு, அவர் நாஜிகள் போலப் பேசுகிறார், மொஹஞ்சதாரோவையில்லாம் மேற்கோள் காட்டி கல்தோன்றி மண் தோன்றா என்ற பாணியில் முழங்கி, சிங்களர்களை ஏளனம் செய்கிறார், சிறுமைப்படுத்துகிறார் எனக் குற்றஞ்சாட்டியது.

சிங்களர்களின் நம்பிக்கையைப் பெறுவதே சரியான அணுகுமுறை. இனத் துவேஷத்தை கிளப்பிவிட்டுவிட்டால் அப்பிசாசை அப்புறம் அடக்கவே முடியாது என இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

பின்னர் இலங்கையில் இன மோதல் தீவிரமான நிலையில் எழுதப்பட்ட நூல்கள் உண்மைகளைத் திரித்து, ராமநாதன் அனைவர்க்கும் வாக்குரிமையை ஆதரித்ததை மறைத்துவிட்டனர்

ராமநாதனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வைத்திலிங்கம், இளைஞர் காங்கிரஸ் தேவையில்லாமல் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கொடிபிடித்து அவர்கள் அதிருப்தியை சம்பாதித்தது, அவர்களை காந்திய நோய் பற்றிக்கொண்டதன் விளைவே அது, ஜின்னா போல் காலனீய அரசுக்கு அனுசரணையாக நடந்துகொண்டிருந்தால், அங்கே பாகிஸ்தான் போல் இங்கே ஈழமும் கிடைத்திருக்கக்கூடும் என்கிறார்.

சரி தாசானு தாசனாக நடந்துகொண்ட ஜி ஜி பொன்னம்பலம் கதி என்ன? தீவை விட்டு வெளியேறியபோது அவரைக் கண்டுகொண்டார்களா என்ன பிரிட்டிஷார்?  துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினர். இலங்கை சுதந்திர நாடானது, இனி தமிழர்கள் கதி என்னாகுமோ என மிரண்டுபோய் டி.எஸ் சேனநாயகாவின் காலில் அல்லவா விழுந்தார் ஜிஜி!

விடுதலைப் புலிகள் என்ன செய்தனர்? இந்தியாவிற்குப் போய் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொண்ட பின், மேற்குலகத்தைக் காக்காய் பிடித்து ஈழம் பெற முயன்றது.

இறுதியில் எல்லாமே பஸ்பமானது. சரியான பாடங்களை நாம் கற்கவே இல்லை. இப்போது அனுபவிக்கிறோம்.

ஆனாலும் நம்மவர்கள் உணரவில்லையே கசப்பான உண்மைகளை. இன்னமும் வெளிநாட்டவர் எவரேனும் நம் உதவிக்கு வரமாட்டார்களா என்றல்லவா நாம் ஏங்குகிறோம்.

மொழியாக்கம் – கானகன்

ஜி.ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் , எம். திருச்செல்வம்

சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929ல் நிறைவேறியது.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமலில் இருந்த பிரநிதித்துவ முறையை படிப்படியாகக் மாற்றியிருக்கலாம், பல பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம். ஆனாலும், சட்ட மேலவையில் தங்களுக்கான இடங்கள் கணிசமாகக் குறையவிருந்ததென்றாலும்,  தமிழர்கள் அமைதியாகவே புதிய சட்டத்தினை ஏற்றுக்கொண்டார்கள்.

வைத்தியலிங்கம் துரைசாமி எனும் சட்ட அவை உறுப்பினர் குறிப்பிட்டார்: “இப்படிப்பட்ட பிரதிநிதித்துவத்தை உருவாக்கியது காலனீய ஆட்சியாளர்கள்தான். இப்போது அவர்களாகவே அதற்கு முடிவுகட்டுகின்றனர்…இதற்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பேதும் இல்லை……”

அந்த நேரத்தில் அவர் தமிழ்ச் சமூகத்தின் பொதுவான மன நிலையினை சரியாகவே கணித்திருந்தார் எனலாம்.

டொனமூர் அறிக்கையின்படி அமையவிருந்த புதிய சட்ட அவைக்கு 1931ல் தேர்தல்கள் நடைபெற்றன.

சுயாட்சி பற்றி பேசாத அவ்வறிக்கையின் ஆலோசனைகள் பேரில் நடைபெறும் தேர்தல்கள் புறக்கணிக்கப்படவேண்டும் என்ற இடையறா இளைஞர் காங்கிரஸ் பிரச்சாரத்தின் விளைவாய், யாழ்ப்பாணம், காங்கேசன் துறை, கைட்ஸ் மற்றும் பருத்திமுனை தொகுதிகளுக்கு எவரும் மனுச் செய்யவில்லை.

இன்னும் வேறு ஒன்பது தொகுதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க, அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்படி தமிழர் மத்தியில் சுயாட்சிக்கான எழுச்சியையும், இனரீதியான பார்வையினை நிராகரிக்கும் போக்கினையும் நாம் காணமுடிகிறது. ஆனால் அந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றபோது, தமிழர், சிங்களர் இரு தரப்பாரிலுமே இன வெறிக்கூச்சல்கள் எழுந்தன.

இனவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் தமிழர்கள் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட, தமிழர்கள் இன ரீதியாக நம்முடன் மோதுகின்றனர் என சிங்களர் சிலர் முழங்க, பதிலுக்கு இதுதான் சிங்கள ஆதிக்கம் என தமிழ்த் தரப்பில் ஆத்திரப்பட, இன உறவுகள் மோசமடைந்தன.

மேலே குறிப்பிட்ட துரைசாமியைத் தவிர மற்ற அனைத்து தமிழ் சட்ட அவை உறுப்பினர்களும் துவேஷப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

ஜி ஜி பொன்னம்பலத்தார் அதி தீவிர நிலைப்பாடு எடுத்து நீண்ட நேரம் ஆணைய அறிக்கையினை தாக்கிப்பேச மக்கள் இரையானார்கள்.

இளைஞர் காங்கிரஸ் அத்தகைய சிங்கள விரோதப் போக்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்தது.

“சிங்கள விவசாயிகள் நிலப்பற்றாக்குறையின் காரணமாக கடும் வறுமையில் வாடுகின்றனர். இந்நாட்டின் தொழில் துறையோ ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்கள் கட்டுப்பாட்டில். தேங்காய் தொழில் ஒன்றுதான் சிங்களர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் தென்னந்தோப்புக்களில் 75 சதம் இந்திய முதலாளிகளிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களிலும் சரி மற்ற பல அறிவுசார் துறைகளிலும் சரி சிங்களர்கள் அடித்தட்டிலேயே இருக்கின்றனர்.

தங்கள் பின் தங்கிய நிலையினை அவர்கள் உணரத்துவங்கிவிட்டனர், தங்களுக்கு உரிய அந்தஸ்துவேண்டுமெனவும் கோருகின்றனர், சற்று காரமாகவே, ஆவேசமாகவே.

“இத்தகைய சூழலில் தமிழர்கள் சரி சம பிரதிநிதித்துவம் என்று வலியுறுத்தினால் சிங்களர் தரப்பில் தீவிர இனவாதம் தலையெடுக்கும்.

“யதார்த்தம் என்னவெனில் 50:50 என விகிதாச்சாரம் அமலில் இல்லையெனில் என்னாகுமோ என தமிழர்கள் மத்தியில் சில நியாயமான அச்சங்கள் ஏற்படலாம். ஆனால் அத்தகைய பிரதிநிதித்துவத்திற்கு முடிவு கட்டியிருப்பதால் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது.

ஈ.டபிள்யூ. பெரேரா

”அதே நேரம் அவர்கள் பெரும்பான்மையினராய் இருந்தும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும்போது, அரசியல் பிரதிநிதித்துவத்தையும் சமமாக பங்கிட்டுக்கொள்ளச் சொல்வது, சிங்களர்களுக்கு மேலும் ஆத்திரமூட்டும்.  சிங்கள மஹா சபா போன்ற இன வெறி அமைப்புக்கள் அம்மக்களின் தலைமையைக் கைப்பற்றும். அது நாட்டுக்கு நல்லதல்ல….பாலஸ்தீனத்தில் கொண்டுபோய் யூதர்கள் காலனி ஒன்றை நிறுவியதன் விளைவாய், எப்படி அங்கே காலனீய ஆதிக்கத்திற்கெதிரான உணர்வுகள் சிறுபான்மை யூதர்களுக்கெதிரானதாகவும் உருப்பெற்றதோ, அதே போன்ற மோசமான நிலை இங்கும் ஏற்படலாம்” என இளைஞர் காங்கிரசின் ’மதவாதமா, இனவாதமா,’ என்ற பிரசுரம் தெளிவாகவே எச்சரித்தது.

ஆனால் நல்லதை யார் எப்போது கேட்டார்கள்? தோள் தட்டுவது இனப் பெருமை பேசுவது தமிழர் மத்தியில் தொடர்ந்து அதிகரித்தது.

ஜி ஜி பொன்னம்பலம் 1939 மே மாதம் கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியாவில் பேசும்போது, சிங்களர்களை பல இனக்கலப்பில் உருவானவர்கள் என ஏசினார்.

விளைவு அங்கே அடுத்த மாதமே எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயகா சிங்கள மஹாசபையின் கிளை ஒன்றைத் துவக்கினார்.

அப்போது அவர் பொன்னம்பலம் போன்றோர் நமக்கு எதிரிகளாவதால் நமக்கு நன்மையே என்றார் பூடகமாக.

பொன்னம்பலனார் எதிர்பார்த்திருக்கமுடியாத இன்னொரு திருப்பம், பிரிட்டிஷார் இலங்கையை விட்டு வெளியேறும்போது, இ டபிள்யூ பெரேரா போன்ற இடதுசாரிகள்,  முற்போக்காளர்கள், ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை.

ஜூன் 1915ல் சிங்களர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே மோதல்களை கட்டுக்குள் கொண்டுவருவதாகச் சொல்லி, ஆட்சியாளர்கள் கடும் அடக்குமுறையில் இறங்கினர், மனித உரிமைகள் மீறப்பட்டன, இது நிற்கவேண்டும் என பிரித்தானிய அரசுக்கு மனுச் செய்து வெற்றியும் கண்டவர் பெரேரா.

அதுவோ முதலாம் உலகப்போர் துவங்கியிருந்த நேரம். அப்போது இலங்கையை நிர்வகித்து வந்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக மனுச் செய்வது ஆபத்தான செயல். பெரேராவுக்கு எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

அத்தகைய சூழலில் மக்கள் சார்பாக பிரிட்டிஷ் அரசரை அணுக அசாத்தியத் துணிச்சல் பெரேராவுக்கு இருந்திருக்கவேண்டும். இருந்தது, இறுதியில் நீதியையும் நிலை நாட்டினார். அது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பெரும் மூக்குடைப்பு.

மேலும் அவர் டொனமூர் அறிக்கையினை நிராகரித்து சுயாட்சி கோரினார். அப்படிப்பட்டவரை எப்படி ஆட்சியாளர்கள் சகித்துக்கொள்வார்கள்?

அவர்கள் விரும்பியதைப் போலவே சிங்களர் மத்தியில் பிற்போக்குவாதிகள் வலுப்பெற்றனர். 1943ல் கெலனீயா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது பெரேராவை எதிர்த்து போட்டியிட்டவர் பின்னாளில் அதிபராகி, பெரும் கலவரத்தை மூட்டி, தமிழர் வாழ்வை நாசம் செய்த ஜே ஆர் ஜெயவர்த்தனாதான். பெரேரா கிறித்தவர், அந்நியர் என சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, ஜே ஆர் வெற்றி பெற்றார்.

ஜிஜி பிரிட்டிஷாரிடம் அநியாயத்திற்கு குழைந்து பார்த்தார். ஆண்டனி பிரேஸ்கர்டில் எனும் தொழிற்சங்கவாதி நாடுகடத்தப்பதை சட்டமன்றமே கண்டித்து தீர்மானம் இயற்றியபோது, நம்மவர், ஆஹா இப்படித்தான் அரசு நடந்துகொள்ளவேண்டும் கலகம் செய்பவர்கள் வெளியேற்றப்படத்தான்வேண்டும்  என்று வாழ்த்தினார். ஆனால் எதுவும் பலிக்கவில்லை.

50-50 கோரிக்கை நிறைவேறவில்லை. அந்தப் பக்கம் சிங்கள இனவாதம் வலுப்பெற்றது. பிரிட்டிஷார் எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழர் நிர்கதிதான்.

ஒரு கட்டத்தில் கால் (Galle) பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழர்களுக்கு 40 சதம் ஒதுக்கலாம் என்ற அளவுக்கு இறங்கிவந்ததாகவும், ஆனால் 50:50 தான் வேண்டும் என்று தான் பிடிவாதமாக இருந்ததாகவும் பொன்னம்பலம் கூறினார். பேசாமல் அந்த 40ஐயாவது ஏற்றுக்கொண்டிருக்கலாம். பிரச்சினைக்கு தீர்வு வந்திருக்கும். அவர்  ரொம்ப முறுக்கிக் கொண்டது தமிழர்களுக்குத்தான் பின்னடவானது.

நாட்டு விடுதலைக்குப்பின் நடைபெற்ற முதல் பாரளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், மிக அதிக இடங்களில் வென்றதால், தமிழர்கள் உட்பட வேறு தரப்பினரின் ஆதரவு பெற்று, ஆட்சி அமைக்க முடிந்தது.

அவ்வரசின் முதல்வேலையே மலையகத் தொழிலாளர்களின் குடி உரிமையினைப் பறித்ததுதான்

வேறொன்றுமில்லை. மலையகப்பகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்திற்கு எழுவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களும் தொழிற்சங்கவாதிகள். அங்கே மேலும் கம்யூனிசம் ஊடுருவக்கூடும் என்ற அச்சம்.

பிரிட்டிஷார் விட்டுச்சென்ற சோல்பரி சட்டமோ தோட்டத் தொழிலாளர் நிலை குறித்து கறாராக ஏதும் சொல்லவில்லை. அவர்கள் அந்நியர்கள், அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுத்தால் எங்கள் நிலை என்னாவது என்ற சிங்களரின் கவலைகள் புரிந்துகொள்ளக்கூடியதே என்று சோல்பரி ஆணையம் கூறியது.

இந்நிலையில்தான் தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வந்த   மலையகத்தினர் குடி உரிமை பெற சில கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன, குறிப்பாக இரு தலைமுறையாக அங்கே வாழ்ந்ததாக நிரூபிக்கவேண்டியிருந்தது. ஆனால் பிறப்புப் பதிவேடெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்படாத அக்கால கட்டத்தில் தானும் தன் தந்தையும் அங்கேயேதான் பிறந்தவர்கள் என்று  நிரூபிக்கமுடியாமல் போய் 1948 சட்டத்தின் கீழ் ஒரே நாளில் லட்சக்கணக்கான மலையகத் தமிழர் நாடற்றோராயினர்.

ஜெயவர்த்தனே

பொன்னம்பலனார் இந்தக் கொடுமையான சட்டத்தைஆதரித்தார். அமைச்சராகவும் ஆனார்.

சிங்கள இடதுசாரிகள் மலையகத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர். அவர்களும் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியிடம் விலைபோனார்கள்.

சரி இளைஞர் காங்கிரசாவது அனைவர்க்கும் வாக்குரிமையை உறுதிசெய்த டொனமூர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டு, 1931 தேர்தல்களிலும் பங்கேற்றிருந்தால் இரு இனங்களுக்கிடையேயான ஒற்றுமை வலுப்பெற்றிருக்குமே?

ஆனால் அவர்களோ காலனீய அரசின் மேற்பார்வையில், பரந்துபட்ட  மக்கள் நலனைப் பேணாமல், வரி வசூலித்து, சட்டம் ஒழுங்கின் பெயரால், அடித்தட்டு மக்களை ஒடுக்கும் அரசு ஒன்று உருவாக, ஒத்துழைக்கப்போவதில்லை என்றனர்.

ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில் பிரிட்டிஷாரின் தலையீடு மட்டும் இல்லையென்றால், இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான முரண்பாடுகளை எளிதில் தீர்க்கமுடியும் என்று கூறியிருப்பதையும் மதவாதமா, இனவாதமா என்ற வெளியீடு மேற்கோள் காட்டுகிறது.

உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அந்நியரின் உதவியை நாடினால் என்னாகும் என்பதை நாளடைவில் இலங்கை நன்றாகவே உணர்ந்தது.

(மொழிபெயர்ப்பு: கானகன்)

 

https://www.patrikai.com/ethnic-problem-in-sri-lanka-3-the-origin-of-friction-rajan-hul/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.