Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' கடைசி நிமிடத்தில் கண்டெய்னர் கடத்தல் ஏன்?' -எகிறும் 8 ரகசியங்கள்

Featured Replies

' கடைசி நிமிடத்தில் கண்டெய்னர் கடத்தல் ஏன்?' -எகிறும் 8 ரகசியங்கள்

sbi1.jpg

திருப்பூரில் 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட மூன்று கண்டெய்னர்கள் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. 'பிடிபட்ட அன்றே எஸ்.பி.ஐ வங்கியின் மூத்த அதிகாரிகள் வெளியூருக்கு தப்பிச் சென்றது ஏன்?' என அதிர வைக்கிறார்கள் வங்கி ஊழியர்கள் சிலர்.

கோவை, ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து மூன்று கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை, திருப்பூர் வடக்குத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தார். அதிகாரிகள் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள்? என்று தெரிந்ததும் மூன்று லாரிகளும் வேகமாகச் சென்றுள்ளன. அந்த வாகனத்தை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ' ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்பேரில் விஜயவாடாவில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்குப் பணம் கொண்டு செல்லப்படுவதாக' தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், இதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காட்டவில்லை. கண்டெய்னர் லாரியின் எண்ணும், காட்டப்பட்ட ஆவணங்களிலும் பெருமளவு வித்தியாசம் இருந்துள்ளது. அதிலும், ஒரே நேரத்தில் 570 கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டது, பொதுமக்களிடையே கூடுதல் சந்தேகங்களைக் கிளப்பியது. 'இது யாருடைய பணம்? எதற்காக மாநிலம்விட்டு மாநிலம் கடத்தப்பட்டது? அதிலும், தேர்தலுக்கு ஒருநாள் முன்பு இப்படி அவசரம் அவசரமாகக் கொண்டு செல்லப்படுவதன் மர்மம் என்ன? அதிகாரிகளைப் பார்த்ததும் கண்டெய்னரில் வந்தவர்கள் தப்பியோட முயற்சித்தது ஏன்?' என பல கேள்விகளை அரசியல் கட்சிகள் எழுப்பின.

karuna200.jpgநேற்று இதுதொடர்பாக தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ' இவ்வளவு பெரும் தொகை எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது? 570 கோடி ரூபாயை, மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு உள்ள மிகப் பெருந்தொகையை எந்த ஒரு வங்கியிலாவது வைத்திருக்க முடியுமா? 570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவைப்படுமா? மூன்று கன்டெய்னர்களிலும் இருந்த பணம் முறையாக, அதிகாரம் பெற்ற அலுவலரால் எண்ணப்பட்டதா? ஒரு வங்கியிலே எவ்வளவு பணத்தை ஒரு நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று உச்ச வரம்பு விதி இருக்கிறதா இல்லையா? ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு இவ்வளவு பெரும் தொகையை எடுத்துச் செல்ல என்ன காரணம்? அந்த வண்டியிலே எந்த உரிய ஆவணங்களும் இல்லையே?

ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் என்றால், பறக்கும் படையினர் வண்டியை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றதற்கு என்ன காரணம்? தவறான வழிகளில் சேர்ந்த பணம் என்பதால் தானே கன்டெய்னர்களை நிறுத்தாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள். வண்டியில் ஏதோ ஜெராக்ஸ் நகல்களை மட்டும் காட்டினார்களாம். அந்த நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் உள்ளனவே. உண்மை நகல்கள் எங்கே? இவ்வளவு பணம் எடுத்துச் சென்றால் அது உண்மையான நேர்மையான நோக்கத்திற்கான பணமாக இருந்தால், இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும்.

அப்படி எந்த இன்சூரன்ஸ் ஆவணங்களும் இல்லையாம். ரிசர்வ் வங்கி விதி முறைப்படி ஒரு கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்போடு செல்ல வேண்டுமென்றும், 5 கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. இந்தப் பணத்தை பகலில் அல்லாமல் இரவில் எடுத்துச் செல்ல என்ன காரணம்?" எனக் கேள்வி எழுப்பிருந்தார்.

sbi2.jpg'கண்டெய்னர் மர்மம்' குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் பேசினோம். வெளியில் வராத பல விஷயங்களை நம்மிடம் பேசினார் அவர். " இந்த விவகாரத்தில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பலரின் தலை உருளப் போகிறது. ரிசர்வ் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி தவறு செய்திருக்கிறார்கள். கண்டெய்னரில் பணத்தை அனுப்பிய கையோடு, ஸ்டேட் வங்கி கிளையின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள். ' வருமான வரித்துறை வங்கியில் தீவிர விசாரணை நடத்த முயற்சிக்கிறது' எனக் கிடைத்த தகவலின்பேரில், கண்டெய்னர் மூலம் ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

இதற்கு ஆந்திராவைச் சேர்ந்தவரும், தமிழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நபர் ஒருவர்தான் உதவியிருக்கிறார். 'பதவியைத் தக்க வைத்ததற்கான கைமாறு' என ஒரே வரியில் சொல்லிவிடலாம். கண்டெய்னர் பணத்தோடு சூரி ரெட்டி என்பவர் சென்றதாகச் சொல்கிறார்கள். அவர் ஒரு சாதாரண ஊழியர். இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாளி. இதைவிட, இந்தப் பணம் வங்கிக்குச் சொந்தமானது அல்ல என்பதற்கு வேறு காரணம் தேவையில்லை. தேர்தல் முடிந்த பிறகு பணத்தைக் கொண்டு போயிருக்கலாம். வருமான வரித்துறை இந்தப் பணத்தை மோப்பம் பிடித்துவிட்டதுதான், அவசரமாகக் கடத்தி செல்லப்படுவதற்குக் காரணம்" என்றார் விரிவாக.

சில சந்தேகங்கள்:

1. கோவை வங்கிகளின் வரலாற்றிலேயே இவ்வளவு பணத்தை இதுவரையில் கொண்டு சென்றதில்லை. 570 கோடியை சேமித்து வைக்கும் அளவுக்கான வசதிகள் ஸ்டேட் வங்கியில் இல்லை என்பது உண்மையா? இல்லையா?

2. பணம் அனைத்தும் மரப் பெட்டிகளில் ஏதோ பிஸ்கட் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்வதுபோல், அடுக்கியிருந்தது சரியா?

3. வங்கிகளின் அதிகாரப்பூர்வ ஆவணம் இல்லாமல், லுங்கி உடையில் காவல்துறையினர் சென்றது ஏன்?

4. பணம் பிடிபட்டு 18 மணிநேரம் கழித்து வங்கி அதிகாரிகள் உரிமை கொண்டாடியது ஏன்?

5. கண்டெய்னர் வண்டிகளுக்கு சாதாரண பூட்டைப் போட்டு பூட்டியது சரியா?

6. கண்டெய்னர்களுக்கு ஏன் சீல் வைக்கப்படவில்லை?  பணம் பறிமுதலான அன்றே எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் வெளியூருக்குத் தப்பிச் சென்றது ஏன்?

7. முக்கிய அரசியல் புள்ளியின் பணத்தை ஐதராபாத்துக்கு கொண்டு செல்ல முயற்சி நடந்ததா?

8. தமிழகத்தைச் சேர்ந்த மூத்த முக்கியப் புள்ளியின் அழுத்தத்தைத் தொடர்ந்தே, வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோரினார்கள் என்ற தகவல் உண்மையா?

-என அணிவகுக்கும் சந்தேகங்களை நம்மிடம் பட்டியலிட்டார் இந்தியன் வங்கி அதிகாரி ஒருவர். மேலும் அவர், " கோவை வங்கிகளின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகையை நாங்கள் அனுப்பியதில்லை. மூன்று கண்டெய்னர் பணத்தையும் சேர்த்து 570 கோடி ரூபாய் என்பதை நம்ப முடியவில்லை. பணத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஏற்கெனவே, ஐந்து கண்டெய்னர்கள் ஆந்திர போலீஸ் பாதுகாப்புடன் சென்று சேர வேண்டிய இடத்திற்குப் போய்விட்டது என்கிறார்கள். கடைசி நிமிடத்தில் இருக்கும் மீதிப் பணத்தையும் கடத்த முயற்சித்து மாட்டிக் கொண்டார்கள். ரிசர்வ் வங்கி ஆளுநர் நேரடியாக விசாரணை நடத்தினால், யாருடைய ஊழல் பணம்? எதற்காக ஆந்திரா சென்றது? கடைசி நிமிடத்தில் மாநிலம் விட்டு மாநிலம் கடத்த முயற்சித்தது ஏன்? என்பதற்கான முழு ரகசியங்களும் அம்பலமாகும்" என்கிறார்.

அரசின் பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வரும், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுவாரா? எனக் கேள்வி எழுப்புகின்றன அரசியல் கட்சிகள். தேர்தல் தொடங்கிய நாளில் இருந்தே கொங்கு மண்டலத்தை குறிவைத்தே வருமான வரித்துறையினர் படையெடுத்தனர். 'பெரும் பணம் சிக்கிவிடக் கூடாது' என்ற அச்சத்தில் கடைசி நிமிடத்தில் கண்டெய்னரில் கடத்த உத்தரவிட்டது யார்? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான முடிச்சை ரிசர்வ் வங்கி அவிழ்க்குமா?

http://www.vikatan.com/news/tamilnadu/64208-reason-behind-seized-container-list-of-secrets.art

  • தொடங்கியவர்
ரூ.570 கோடி ஜெ.,வுடையது: வைகோ
 

கலிங்கப்பட்டி: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ ஓட்டு போட்ட பின்னர் அளித்த பேட்டி: தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட்டால் மக்கள் அவதிப்படுவார்கள். திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி பணம் ஜெ.,வுடையது. தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற போது பிடிபட்டது எனக்கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1523398

  • தொடங்கியவர்

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்.. விசாரிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு

Rs 570 crore cash seize: Supreme Court asks petitioner to approach the Madras HC

 

 டெல்லி: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பணம் பிடிபட்டது தொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம்கோர்ட் மறுத்துவிட்டது. கோவையிலிருந்து, ரூ.570 கோடி பணத்தோடு, விசாகபட்டிணம் நோக்கி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள், திருப்பூர் அருகே கடந்த சனிக்கிழமை மடக்கிப் பிடிக்கப்பட்டன. தக்க ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட இந்த பணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.

இந்நிலையில், சுமார் 18 மணி நேரம் கழித்து, எஸ்.பி.ஐ வங்கி அப்பணம் தங்களுக்கு உரியது என்று கூறியது. இதில் சந்தேகம் நிலவுவதால், சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து, விசாரிக்க உத்தரவிடக்கோரி, பொதுநல மனு ஒன்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சுப்ரீம்கோர்ட், தேர்தல் ஆணையம் பணத்தை கைப்பற்றியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக ஹைகோர்ட்டில்தான் மனு தாக்கல் செய்ய முடியும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/rs-570-crore-cash-seize-supreme-court-asks-petitioner-approach-the-madras-hc-253800.html

  • தொடங்கியவர்

ரூ.570 கோடி கோடநாட்டில் இருந்து அனுப்பப்பட்டது..! பகீர் கிளப்பும் வைகோ

 

vote4.jpg

சென்னை: திருப்பூரில் கன்டெய்னர் லாரியில் பிடிபட்ட ரூ.570 கோடி கோடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட பணம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மே 13 ம் தேதி நள்ளிரவில் திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பாதையில் பறக்கும் படையினர் மூன்று கன்டெய்னர்களைத் தடுத்து சோதனையிட்டதில், 570 கோடி ரூபாய் அதில் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்டது. இந்தக் கன்டெய்னர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று இன்னொவா கார்கள் மாயமாய் மறைந்துவிட்டன. இவ்வளவு பெருந்தொகையான பணம் எங்கிருந்து, எங்கு, யாரால், யாருக்காகக் கொண்டுசெல்லப்பட்டது? என்பது மர்மமாகவே இருந்தது. 18 மணி நேரம் கழித்து இந்தப் பணம் கோயம்புத்தூர் ஸ்டேட் வங்கியிலிருந்து விசாகப்பட்டினத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஒரு கோயபல்ஸ் பொய் அவிழ்த்துவிடப்பட்டது.

இதில் எழும் கேள்விகள்...

1. கோயம்புத்தூரில் இருந்து இவ்வளவு பெருந்தொகையான பணத்தை நள்ளிரவில் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

2. மூன்று கன்டெய்னர்களில் ஏன் அனுப்ப வேண்டும்? ஒரே பெரிய கன்டெய்னரில் இவ்வளவு பணத்தையும் சீருடை அணிந்த காவல்துறையின் பாதுகாப்புடன் அனுப்பியிருக்கலாமே?

3. இந்த மூன்று கன்டெய்னர்களுடன் வந்ததாகச் சொல்லப்படும் காவல்துறையினர் சீருடை அணியாமல் கைலி-லுங்கிகளில் வரவேண்டிய அவசியம் என்ன?

4. இவ்வளவு பெரும் தொகையை முதலில் விசாகப்பட்டினத்துக்கு அனுபியதாகச் சொன்ன ஸ்டேட் வங்கி அதிகாரிகள், பின்னர் விஜயவாடா என்று மாற்றிச் சொல்வது ஏன்?

5. ரூபாய் 570 கோடி எனும் இவ்வளவு பெரும் பணத்தை ஐதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கியிலிருந்தோ, அல்லது பெங்களூருவில் உள்ள ஸ்டேட் வங்கியிலிருந்தோ அனுப்பி இருக்கலாமே? மிக அருகாமையில் உள்ள இடங்கள்தானே இவைகள்?

6. இவ்வளவு பெருந்தொகை கோவை வங்கியில் எப்படி இருந்திருக்க முடியும்? பல கிளைகளில் இருந்துதானே கோவை வங்கிக்கு கொண்டுவந்து சேர்த்திருக்க முடியும்?

7. இப்பொழுது தான் மிக முக்கியமான கேள்வி எழுகிறது. ஒரே பெரிய கன்டெய்னரில் கொடநாட்டிலிருந்து கொண்டு செல்வது சிரமம் என்பதால், மூன்று கன்டெய்னர்களில் அனுப்பி தப்பித்துவிடலாம் என்று நினைத்திருப்பார்களோ?

8. கோயம்புத்தூரில் இருந்து சென்றிருந்தால், கணியூர் சோதனைச் சாவடியில் இந்த வண்டிகள் பதிவு செய்யப்பட்டனவா? அல்லது கொடநாட்டிலிருந்து மேட்டுப்பாளையம் -அன்னூர் -அவிநாசி வழியாகச் சென்றனவா?

9. நான்கு வழி புறவழிச் சாலையைவிட்டு, செங்கப்பள்ளியில் கீழே இறங்கி, குன்னத்தூர் சாலையில் சென்றதிலிருந்தே இது கொடநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஊழல் பணம் என்பது தெளிவாகிறது.

10 குன்னத்தூரிலிருந்து, கோபி-அந்தியூர்-அம்மாபேட்டை-மேச்சேரி தாண்டி, கிருஷ்ணகிரியிலிருந்து குப்பம் வழியாக ஆந்திராவுக்குள் சென்றுவிடலாம். கிருஷ்ணகிரியிலிருந்து குப்பம் வரை எங்கும் சோதனைச் சாவடி கிடையாது

11. கன்டெய்னர்களுடன் பாதுகாப்பாகச் செல்வதற்கு தமிழ்நாட்டுக் காவல்துறையைப் பயன்படுத்தாமல், ஆந்திர மாநில காவல்துறையை வரவழைத்தது ஏன்?

12. கோயம்புத்தூரில் இருக்கும் கன்டெய்னர்களைப் பயன்படுத்தாமல், வேறு இடத்திலிருந்து இந்தக் கன்டெய்னர்களைக் கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன?

13. மே 16 ம் நாள் வாக்குப் பதிவு முடிந்து, மே 19 ம் தேதி முடிவுகள் வெளியாகும்போது, அ.தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்று உறுதியாகத் தெரிந்ததால்தான்,  முதலமைச்சர் ஜெயலலிதா ஊழலில் சேர்த்து வைத்த கொள்ளைப் பணம் இந்தக் கன்டெய்னர்கள் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதுதான் நேர்மையான சில உயர் அதிகாரிகளின் ஆணித்தரமான கருத்தாகும்.

14. இதே போன்றுதான் சிறுதாவூர் பங்களாவுக்கு நான்கு வழி புறவழிச் சாலையில் செல்லாமல், நடு இரவில் கிராமங்கள் ஊடான சாலை வழியாக இரண்டு கன்டெய்னர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்குகிற சிறுதாவூர் பங்களாவுக்குள் அனுப்பப்பட்டன. அதில் இரண்டாவது கன்டெய்னர் விடியற்காலை இரண்டரை மணிக்கு சிறுதாவூர் பங்களாவின் சுற்றுச் சுவரில், பின்பக்கச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது. காலை 6 மணிக்கு பதினோறு லாரிகள் சிறுதாவூர் பங்களா வளாகத்துக்குள் வந்தன.

இன்றைய முதலமைச்சரின் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் பணத்தை இந்தக் கன்டெய்னர்களில் கொண்டுபோய் இருக்கிறார்கள் என்பதால், உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளுடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் சோதனையிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துப் பிரசார மேடைகளிலும் நான் முன் வைத்தேன். மூன்று நாட்கள் கழித்து, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதுபற்றி விசாரித்ததாகவும், சிறுதாவூர் பங்களாவுக்குள் அப்படி எதுவும் பணம் கொண்டுசெல்லப்பட வில்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் கூறியதாகச் சொன்னார்.

தேர்தல் பிரசார அலங்கார வரவேற்பு ஏற்பாடுகளுக்காக கன்டெய்னர்களும், லாரிகளும் கொண்டுசெல்லப்பட்டதாக அ.தி.மு.க. தரப்பினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் தமிழக மக்களை முட்டாளாக்கிவிடலாம் என்ற மமதையில் விளக்கம் அளித்தனர். கன்டெய்னர் பிரச்னை வந்தவுடன், ஏராளமான அ.தி.மு.க.வினர் கார்களிலும், ஆயிரக்கணக்கான தமிழ்நாடு காவல்துறையினரும் சிறுதாவூர் பங்களாவுக்கு எதிரே செல்லும் நெடுஞ்சாலையில் காவல் காத்து, ஊழல் கொள்ளைப் பணத்தை ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பிவிட்டதாக தங்கள் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறினர்.

இந்த உலக மகா மோசடியில், தமிழக காவல்துறை தலைமை ஆணையர் டி.ஜி.பி. அசோக்குமாருக்கும், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்பதும் அதிகார வட்டாரத்தில் நடமாடும் உண்மையாகும். காவல்துறை டி.ஜி.பி. அசோக்குமார் பணிக் காலம் முடிந்து, நீட்டிப்பில் இருக்கிறார். தேர்தல் பொறுப்புகளுக்கு டி.ஜி.பி. மகேந்திரன் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவரது கைகளை அசோக்குமார் கட்டிப்போட்டுவிட்டார். உளவுத்துறை தலைமை காவல்துறை அதிகாரி எந்த ரகசிய அறிக்கையையும் நேரடியாக முதலமைச்சருக்கு அனுப்பாமல், தனக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார். டி.ஜி.பி. அசோக்குமார் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று இரண்டு முறை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு 14-ம் தேதி காலையில், எட்டரை மணி அளவில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “டிஜிபி அசோக்குமார் பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன், முயலோடும் ஓடுவது; வேட்டை நாயுடனும் சேர்ந்து கொள்வது என்ற விதத்தில் தான் சி.பி.ஐ. துறையில் உயர் அதிகாரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குடும்பத்தினருக்கு உதவியதாக ஒரு செய்தி உலவுவதால், தற்போதும் உளவுத்துறை அறிக்கைகளை தி.மு.க. தலைமைக்கும் அனுப்பி வருகிறார் என்று கூறியதோடு, தமிழ்நாட்டில் நியாயமான நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என்றால் டி.ஜி.பி. அசோக்குமார் உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விலக்கப்பட வேண்டும். நீங்கள் மத்திய அரசின் உளவுத்துறை மூலமாக நான் கூறியதை விசாரித்து நடவடிக்கை எடுங்கள்” என்றேன்.

மிக முக்கியமான கேள்வி, திருப்பூர் மாவட்டத்தில் பிடிபட்ட, அவர்கள் கணக்குப்படி 570 கோடி ரூபாய் (எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்ற உண்மை நமக்குத் தெரியாது) குறித்த மிகக் கடுமையான ஊழலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுடன், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வகைகளில் முயன்று அரசியல் பேரம் பேசுகிறார் என்பது மிக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது. மத்திய அரசு இந்த மோசடிக்குத் துணை போனால், உண்மை விசுவரூபம் எடுத்து வெளியே வரும். எனவே, இன்னும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கன்டெய்னர்களில் இருக்கும் பணத்தை எண்ணும்போது, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்தான் பணம் எண்ணப்பட வேண்டும்.

அ.தி.மு.க. ஊழல் அம்பலத்துக்கு வந்துவிட்டதால், தி.மு.க. ஊழல் பிரச்னையில் தப்பிவிட்டதாக எவரும் எண்ண வேண்டாம். ஒரு லட்சத்து எழுபத்து ஆறு ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டுமின்றி, கிரானைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையிலும் தி.மு.க. கற்பனை செய்ய முடியாத கோடிகள் ஊழலில் கொள்ளையடித்ததை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள். அதற்கு சரியான உதாரணம்தான் அரவாக்குறிச்சி தொகுதி. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 14-ம் தேதி மாலை முதல் இன்று காலை வரை பணம் கொடுக்கப்பட்டது. ஒப்புக்காக சில இடங்களில் பறக்கும் படை சோதனையிட்டபோது, கண்டுபிடிக்கப்பட்ட பணத்தைத் தவிர, ராஜேஷ் லக்கானி ஒட்டுமொத்தமாக பணம் கொடுப்பதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தகைய ராட்சச பணநாயகத்தால், உண்மையான ஜனநாயகம் வெல்லுமா? என்பது மே 19 ஆம் தேதிதான் தெரிய வரும். பண வெள்ளத்தை எதிர்த்து தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. இணைந்து அமைத்த மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி ஜனநாயகத்தைக் காத்து வெற்றி பெரும் என நம்புகிறேன். அத்தகைய வெற்றி கிட்டுமானால், புதிய வாக்காளர்களும், குறிப்பாக அலைபேசி, குறுஞ்செய்தி, முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு கருத்துகளைப் பரப்பிய கட்சிகளைச் சாராத அலைபேசி சிங்கங்கள் என்று நான் அழைக்கின்ற அலைபேசிப் புரட்சியாளர்கள்தான் அதற்கு முக்கியமான காரணமாவார்கள்.

மூன்று கண்டெய்னர்களில் கோடானு கோடி பணத்தை கள்ளத்தனமாகக் கொண்டு செல்ல முயன்ற அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், இன்றைய முதலமைச்சருமான ஜெயலலிதாவை ஊழலில் இம்முறை தப்பிக்கவிடாமல் மத்திய அரசு செயல்படப்போகிறதா? அல்லது உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக ஊழல் குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தப்போகிறோமா என்பதை அடுத்தடுத்த நடைபெறப் போகும் நிகழ்வுகள்தான் நிருபிக்கும்" என்று கூறி உள்ளார்.

http://www.vikatan.com/news/politics/64220-570-crore-seized-in-tirupur-was-sent-from-kodanad.art

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கன்டெய்னர் ரகசியத்தைக் காக்கும் ரிசர்வ் வங்கி! -மவுனம் கலைப்பாரா ரகுராம்ராஜன்?

 

RBI.JPG

திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னர் பணம் குறித்து நாள்தோறும் வெளியாகும் தகவல்கள், உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 'எங்களிடம் ஆவணம் இருக்கிறது'  என ஸ்டேட் வங்கி சொன்னாலும், 'உரியமுறையில் பணம் கையாளப்படவில்லை. இது தனிநபரின் பணமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்' என அதிர வைக்கிறது வங்கி ஊழியர்கள் சங்கம்.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை, இடம் பொருள் பார்க்காமல் விமர்சிப்பதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தயங்கியதே இல்லை. ' அவரை மாற்றிவிட்டாலே போதும்' என பா.ஜ.கவின் தலைவர்கள் பகிரங்கமாக பேட்டியளித்து வந்தனர்.

"திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னர் பற்றி  ரகுராம் எந்த தகவலும் சொல்லாமல் இருப்பதன் பின்னணியில் சில விஷயங்கள் நடந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. வருகிற செப்டம்பர் 4-ம் தேதியோடு ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிகிறது. 'மீண்டும் பதவியில் தொடர விரும்புகிறேன்' எனப் பேட்டியளித்தார் அவர். எனவே, கன்டெய்னரை வைத்து மத்திய அரசு நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இந்த விவகாரத்தை அவர் நினைத்தால் எளிதில் முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம்" என்றார் வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி ஒருவர்.

மேலும் அவர்,  " கன்டெய்னர் பிடிபட்டு 96 மணிநேரங்கள் கடந்துவிட்டன. பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தைப் பறிமுதல் செய்த உடனே தகவல் வெளியாகவில்லை. 24 மணிநேரம் கழித்துதான் தகவல்கள் வெளியில் கசிந்தன. வழக்கமாக, பணத்தைக் கொண்டு செல்லும்போது டி.ஜி.எம் நிலையில் இருக்கும் ஒரு அதிகாரி, அனைத்து ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். எங்காவது போலீஸார் வழிமறித்தால், அடுத்த 15 நிமிடங்களில் அனைத்து ஆவணங்களையும் காட்டிவிட்டு, வாகனத்தை எடுத்துச் சென்றுவிட வேண்டும். அந்த இடத்தில் எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், சி.ஜி.எம் ரேங்கில் இருக்கும் அதிகாரியைத் தொடர்பு கொண்டு விளக்க வேண்டும்.

money1.jpg

எந்த இடத்திலும் வாகனம் நின்றுவிடக் கூடாது எனக் கடுமையான விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னரில்,  சூரிரெட்டி என்ற ஒரு சாதாரண ஊழியரை பாதுகாப்புக்கு அனுப்பி இருக்கிறார்கள். பறக்கும் படை அதிகாரிகள் சுற்றி வளைத்ததும், அவர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவர் தப்பி ஓடியது ஏன்? உள்ளே இருப்பது 570 கோடி ரூபாய்தான் என எப்படி முடிவு செய்தார்கள்? யார் எண்ணி பார்த்தது? தொகையைச் சொன்னதும் அதை வைத்தே ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழும்புகிறது. வாகனத்தின் உயரத்தையும், கன்டெய்னரின் கியூபிக் மீட்டர் கொள்ளளவையும் பார்த்தால், தொகையின் அளவு அதிகமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். 

வங்கியின் ஆவணம் என்று சொல்லும் பேப்பர்களில், 6-ம் தேதி 11-ம் தேதி என இரண்டு தேதிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதைக் காட்டுவதற்குக்கூட 26 மணி நேரத்தை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் எடுத்துக் கொண்டுள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை மிக அலட்சியமாகக் கையாண்டுள்ளனர். தொடக்கத்தில், விசாகப்பட்டினம் கொண்டு செல்லப்படுவதாகச் சொன்னவர்கள், இப்போது விஜயவாடா வங்கி என மாற்றிச் சொல்கின்றனர். தமிழ்நாடு போலீஸின் உதவியை வங்கி அதிகாரிகள் கோராமல் இருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

வாகனத்திற்கு பாதுகாப்பாக வந்த ஆந்திர போலீஸார், வாகனம் கிளம்பிய இரண்டு மணி நேரத்தில் லுங்கி உடைக்கு மாறியது ஏன்? தமிழ்நாடு காவல்துறையின் கவனத்திற்கு கன்டெய்னர் செல்லும் விஷயத்தைக் கொண்டு போகாதது ஏன்? ஒருவேளை இங்கிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள், எதிர்க்கட்சிகளின் கவனத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு போய்விட்டால் விபரீதமாகிவிடும் என்ற அச்சம் காரணமாக தகவல் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். 'நாங்கள்தான் பணத்தை ரிலீஸ் செய்தோம்' என ஸ்டேட் வங்கி அதிகாரிகள் எங்களிடம் சொல்கின்றனர். அதற்குரிய ஆவணங்களைக் காட்டுவதில் இவ்வளவு காலதாமதம் ஏன்?

Raghuram-Rajan.jpgமுக்கியமான இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பு விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளில் மிக முக்கியமானது, வங்கிகளில் பதுக்கப்படும் கறுப்பு பணம் தொடர்பானது. 200 எபிசோடுகள் நிரம்பிய அந்த ஆப்ரேஷனில், 180 வீடியோக்கள் தனியார் வங்கி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்படும் கறுப்புப் பணம் தொடர்பாக எடுக்கப்பட்டவை. மற்றவை, அரசு வங்கிகளில் பதுக்கப்படும் கள்ளப் பணம் தொடர்பானது. பொதுத்துறை வங்கி அதிகாரிகள், ' வேலை போனாலும் பரவாயில்லை' என்ற மனநிலையோடு, தனிநபர்களின் பணத்தைப் பதுக்கும் வேலையில் ஈடுபட்டார்களா என்பதும் மிக முக்கியமான கேள்வி.

ரிசர்வ் வங்கி நேர்மையான முறையில் விசாரணை நடத்தினால், இந்தப் பணம் எதற்காக ஆந்திரா கொண்டு செல்லப்பட்டது? ஆந்திராவோடு தொடர்புடைய தமிழக அரசியல் புள்ளி யார்? எதற்காக இந்தப் பணத்தைக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கினார் என்ற கேள்விக்கெல்லாம் விடை தெரியும். மத்திய அரசின் முழு ஒத்துழைப்பும் இல்லாவிட்டால், கன்டெய்னர் மர்மத்தை இந்தளவுக்குக் கட்டிக் காப்பாற்ற மாட்டார்கள். 'மத்திய அமைச்சர் ஒருவர் தலையிட்டார்' என தி.மு.க தலைவர் கருணாநிதி சொல்கிறார். அந்த அமைச்சர் யார்? என்பதற்கு மோடிதான் விளக்கமளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சந்தேகம் வலுப்பெறவே செய்யும்" என விரிவாகப் பேசி முடித்தார் அவர்.    

கன்டெய்னரில் இருக்கும் பணத்தை அரசியல் கட்சிகள், வங்கி அதிகாரிகள் முன்னிலையில் எண்ண வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை, தனது அதிரடி பேச்சின் மூலம் அம்பலப்படுத்தும் ரிசர்வ் வங்கி ஆளுநர், ' கன்டெய்னர் விவகாரத்தில் மவுனம் கலைவாரா?' என்பதே வங்கி ஊழியர்களின் கேள்வியாக இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/64284-will-rbi-governor-break-silence-container-secret.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.