Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கிந்தியத் தீவுகள் எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

பொறுமையை சோதித்த மே.இ.தீவுகள் பந்துவீச்சு: விட்டுக் கொடுக்காத இந்திய பேட்டிங்!

 

 
படம்: ஏபி
படம்: ஏபி

ஜமைக்கா டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது.

162 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் ரஹானே 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்தும், விருத்திமான் சஹா 17 ரன்கள் எடுத்தும் ஆடிவருகின்றனர். நேற்று 88 ஓவர்களில் 232 ரன்களையே எடுக்க முடிந்தது, காரணம் பிட்சின் கடினமான தன்மையோ இந்திய பேட்ஸ்மென்கள் மட்டைபோட்டனர் என்பதோ அல்ல, மே.இ.தீவுகள் அணி தப்பித்தவறியும் கூட நெருக்குதல் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி விடக் கூடாது என்ற அணுகுமுறையைக் கடைபிடித்ததே.

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, அதாவது 4-வது ஸ்டம்ப் கூட அல்ல 5-வது ஸ்டம்புக்கு வீசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர், ஆனால் முதல் நாளை விட கட்டுக்கோப்புடன் வீசினர். பிட்சில் இன்னமும் பவுன்ஸ் உள்ளது, ஸ்விங் எடுத்தது. ஷனன் கேப்ரியல், கமின்ஸ், ஹோல்டர் ஆகியோர் நேற்று காலை 14 ஓவர்களை அதாவது 84 பந்துகளை வீசியதில் ராஹுல் மற்றும் புஜாரா 38 பந்துகளை ஆடாமல் விட்டதாகவும் 29 பந்துகளை தடுத்தாடியதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கே.எல்.ராகுல், ராஸ்டன் சேஸ் பந்தை சிக்ஸ் அடித்து 96-லிருந்து 102 சென்றார். புஜாரா முதல் நாளில் 18 நாட் அவுட், மறுநாளில் தன் முதல் ரன்னை எடுக்க ஒரு மணி நேரம் ஆனது. அதாவது முதல் பந்து வீச்சு மாற்றம் சேஸ் வந்த பிறகே புஜாரா தன் முதல் ரன்னை எடுத்தார். அதாவது 57 பந்துகளில் 18 இருந்த புஜாரா 92 பந்துகளிலும் 18 ரன்களிலேயே இருந்தார், இந்த அளவுக்கு அறுவை போடும் அளவுக்கு பந்து வீச்சில் ஒன்றுமில்லை என்பதையும் கூறுவது அவசியம். சேவாக் போன்றவர்களுக்கு இத்தகைய பந்துகளை வீசியிருந்தால் 60 பந்துகளில் சதம் கண்டிருப்பார் என்பதே எதார்த்தம்.

126/1 என்ற நிலையிலிருந்து உணவு இடைவேளையின் போது ஸ்கோர் 185/1 என்பதாகவே இருந்தது. ராகுல் 107, புஜாரா 37 நாட் அவுட். புஜாரா கமின்ஸ் மற்றும் கேப்ரியலை நேர் பவுண்டரிகள் அடித்தார், இடையே கமின்ஸை கவர் பாயிண்டில் பவுண்டரி அடித்தார். 159 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 46 ரன்கள் எடுத்த புஜாரா, இடுப்புக்கு வந்த ஷார்ட் பிட்ச் பந்தை லெக் திசையில் தட்டி விட்டார். பந்து உண்மையில் ஃபைன் லெக், ஸ்கொயர் லெக் இடையே சென்றிருந்தால் ஒரு ரன் ஓடுவதற்கு நேரம் இருந்திருக்கும், ஆனால் பந்து ஸ்கொயர் லெக்கிற்குச் சென்றதால் சேஸ் அதனை அருமையாக எடுத்து ரன்னர் முனையில் ஸ்டம்பில் அடிக்க புஜாரா ரன் அவுட் ஆனார்.

இப்படி அறுவை போட்டு விட்டு கடைசியில் இப்படி அவுட் ஆவது கடும் விமர்சனங்களுக்காளாகும் ஒரு விஷயமாகி விடும். இவ்வளவு நேரம் மே.இ.தீவுகள் பவுலரின் பொறுமையையும் நம் பொறுமையையும் சேர்த்து சோதித்த புஜாரா கடைசியில் அவையெல்லாம் வீணாக ரன் அவுட் ஆவது அபத்தமானதே. அதாவது சமகால வீரர்களின் பிரச்சினை என்னவெனில் டி20 கிரிக்கெட் என்றால் இயல்பை மீறிய அடிதடி ஆட்டம், டெஸ்ட் கிரிக்கெட் என்றால் இயல்பற்ற ஒரு தடுப்பாட்டம் என்று ஆடிவருகின்றனர். இயல்பூக்கமான ஆட்டம் டெஸ்ட் போட்டியிலிருந்து சென்று கொண்டிருப்பதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆபத்தாகும். சச்சின், சேவாக், லஷ்மண் என்று யாராக இருந்தாலும் பவுண்டரி பந்து என்றால் அது பவுண்டரிதான், அதில் சமரசம் கிடையாது, ஆனால் Post-Dhoni இந்திய அணியில் ஒரு தேவையில்லாத எச்சரிக்கையும், அசட்டுத்தனமான தடுப்பாட்டமுமே எஞ்சி நிற்கிறது.

ஆனால் ராகுலை நாம் அப்படி கூற முடியாது. அருமையாக டிரைவ் செய்கிறார், சில வேளைகளில் ஐபிஎல் ரக தூக்கி அடித்தல்களும் உண்டு.

விராட் கோலியும் ராகுலும் இணைந்தனர், ஆனால் மே.இ.தீவுகள் அணியில் எந்தவித பரபரப்பும் இல்லை புதிய பந்து எடுக்க முடியும் என்ற போதும் எடுக்கவில்லை. புஜாரா அவுட் ஆனது ஒரு நிகழ்வு போலவேயல்லாமல் மீண்டும் அதே பந்துவீச்சு, அதே பீல்டிங் என்று சென்று கொண்டிருந்தனர், கேப்ரியல் உண்மையில் முயற்சி செய்தார், கோலியை இருமுறை அவர் பீட் செய்தார், ஒருமுறை கோலி கேப்ரியல் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆனார். வெளியே வீசிக் கொண்டேயிருந்தவர் திடீரென ஒரு பந்தை உள்ளே கொண்டு வர கோலி கால்காப்பில் வாங்கினார், அந்த பந்து லெக்ஸ்டம்பைத் தாக்கும் பந்து ஆனால் நடுவர் அலீம் தார் நாட் அவுட் என்றார், கேப்ரியல் கடும் ஏமாற்றமடைந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஸ்விங் ஆன பந்துகள் கோலியை படுத்தின.

ராகுல் 303 பந்துகளில் 15 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 158 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் வீசிய லெக் திசை பந்தைத் தொட்டு கேட்ச் கொடுத்தார். அது தரையில் பட்டு கேட்ச் ஆனதா என்று முதலில் ரீப்ளே பார்த்தனர், பிறகு எட்ஜா என்று பார்த்தனர், இது தவறானது, தரையில் பட்டு கேட்ச் என்று சரிபார்த்தால் அதை மட்டும்தான் பார்க்க வேண்டும், எட்ஜா என்பதை சரிபார்க்க ஸ்னிக்கோ மீட்டர் போன்ற வசதிகள் இல்லாத போது அதைச் சரிபார்ப்பது முறையல்ல.

ஆனால் ராகுல் அவுட் என்று தீர்ப்பானது. கோலி கடைசியில் பிஷூ பந்து வீச வந்தவுடன் மட்டமான இரண்டு ஷார்ட் பிட்ச் பந்துகளை லாங் ஆனில் ஒரு சிக்ஸ் மிட் விக்கெட் பவுண்டரி விளாசினார், பிறகு அதே ஓவரில் ஒரு அருமையான ஆன் டிரைவ் பவுண்டரி என்று நன்றாக தனது அனாயாச ஆட்டத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் சேஸ் வீசிய ஆஃப் ஸ்பின் பந்தை சற்றும் எதிர்பாராமல் ஷார்ட் லெக் கையில் நேராக கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பிஷூ பிறகு 3 ரன்களில் அஸ்வினை புல் லெந்த் பந்தில் எல்.பி.செய்தார். ஆனால் ஒன்றைக் கூறியாக வேண்டும் எந்த ஒரு கவலையுமில்லாமல் ரஹானே ஆடினார், குறிப்பாக ஹோல்டரை அடித்த புல் ஷாட், பிறகு சேஸ் பந்தை மேலேறி வந்து நேராக தூக்கி அடித்த சிக்ஸ் அழகு. மேலும் கேப்ரியலை அடித்த அப்பர் கட், என்று ரஹானே அருமையாக ஆடி வருகிறார். அவர் 42 ரன்களிலும் சஹா 17 ரன்களிலும் உள்ளனர்.

இந்தியா 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/பொறுமையை-சோதித்த-மேஇதீவுகள்-பந்துவீச்சு-விட்டுக்-கொடுக்காத-இந்திய-பேட்டிங்/article8927980.ece

  • தொடங்கியவர்

நாள் 3-ல் மழையும் ரஹானேவும் ஆதிக்கம்: இந்தியா 500/9-க்கு டிக்ளேர்!

 

 
படம்: ஏபி
படம்: ஏபி

ஜமைக்கா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டும், ரஹானேயின் சதத்துடனும், இந்திய அணியின் டிக்ளேருடனும் முடிந்தது.

இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 500 ரன்கள் எடுத்து இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. ரஹானே தனது 7-வது டெஸ்ட் சதத்தை எடுத்து 108 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதில் அவர் 13 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் விளாசினார். விருத்திமான் சஹா 47 ரன்கள் எடுத்தார்.

சஹா, ரஹானே இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 98 ரன்களைச் சேர்த்தனர். அமித் மிஸ்ரா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்கள் பங்களிப்பு செய்தார்; உமேஷ் யாதவ் 4 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். உதிரிகள் வகையில் 27 ரன்கள் கூடுதல் சாதகமாக அமைந்தது.

மே.இ.தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் கடினமாக உழைத்தாலும் கேப்டன்சி அவர்களுக்கு பக்கபலமாக இல்லை, ஆஃப் ஸ்பின்னர் ராஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டரை முதலில் கேப்டன்சியிலிருந்து தூக்கி விட்டு நல்ல உத்வேகமான, ஆக்ரோஷமான ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும்.

டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரசல், கிறிஸ் கெய்ல், பொலார்ட், சுனில் நரைன் ஆகியோரை அணியில் கொண்டு வர வேண்டும். இந்த அணிக்கு வெளியேதான் நல்ல அணி உள்ளது. ஏனெனில் ஹோல்டர் போன்ற செயலற்ற கேப்டனின் கீழ் நல்ல வீரர்களின் எதிர்காலமும் பாழாகிவிடும்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவண், விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர், இங்கு, ராகுல், ரஹானே. உணவு இடைவேளைக்கு பிறகு 10 ஓவர்கள் வீசியதும் மழை வந்தது. 50 நிமிடங்களை அது பறித்துக் கொண்டது.

மே.இ.தீவுகள் அணி இந்திய டிக்ளேர் முடிவை தாமதப்படுத்தியதில் வெற்றி பெற்றது, இதைத்தானே ஹோல்டர் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து செய்து வருகிறார்! 46.1 ஓவர்களில் 142 ரன்களையே எடுக்க முடிந்தது. 304 ரன்கள் என்ற ஓரளவுக்கு நல்ல முன்னிலையைப் பெற காலதாமதத்தை ஏற்படுத்தியது மே.இ.தீவுகள் பந்து வீச்சு.

170-வது ஓவரில் ரஹானே எட்ஜில் தனது 7-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். அமித் மிஸ்ரா, சேஸ் வீசிய ஒரு பந்தில் அது பிட்ச் ஆகும் இடத்துக்கு காலை கொண்டு செல்ல முடியாமல் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மொகமது ஷமி அடுத்த பந்தே பந்து வரும் திசையை தவறாகக் கணித்து பவுல்டு ஆனார். உமேஷ் யாதவ் டாப் எட்ஜில் சேஸ் பந்தில் அவுட் ஆக சேஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியை வழி நடத்தினார்.

இன்றும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. மே.இ.தீவுகள் 304 ரன்கள் முன்னிலையை இன்னிங்ஸ் தோல்வியில்லாமல் செய்தாலே பெரிய விஷயம் என்றுதான் தெரிகிறது.

ஆட்டம் மழையால் பாதிக்கப்படாமல் நடைபெற்றால் நிச்சயம் விராட் கோலி வெற்றி பெறாமல் விடமாட்டார். மே.இ.தீவுகளின் ஒரே நம்பிக்கை மழைதான்!

http://tamil.thehindu.com/sports/நாள்-3ல்-மழையும்-ரஹானேவும்-ஆதிக்கம்-இந்தியா-5009க்கு-டிக்ளேர்/article8931867.ece?homepage=true

  • தொடங்கியவர்

சொந்த மண்ணில் சவாலை சந்திக்கும் மேற்கிந்திய தீவுகள் ; அசத்தும் இந்தியா (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-08-02 10:47:17

 

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி  ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

248761.3.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வினின் சுழலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 196 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

248755.5.jpg

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பிளக்வுட் 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் அஸ்வின் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

248759.3.jpg

முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 500 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டுள்ளது.

இந்தியா அணி சார்பில் கே.எல் ராகுல் 158 ஓட்டங்களையும், ரஹானே 108 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் சேஸ் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

248697.3.jpg

இதேவேளை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 304 ஒட்டங்கள் பின்னடைவில் இருந்து துடுப்பெடுத்தாட வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது.

248695.3.jpg

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க குறைந்தது 305 ஓட்டங்களை பெறவேண்டும்.

http://www.virakesari.lk/article/9677

  • தொடங்கியவர்

ரஹானே சதமும் 3-ம் நாள் ஆட்ட சாதனைத் துளிகளும்

 

 
237 பந்துகளில் ரஹானே 108*. | படம்: ஏ.பி.
237 பந்துகளில் ரஹானே 108*. | படம்: ஏ.பி.

ஜமைக்கா டெஸ்ட் போட்டியில் அஜிங்கிய ரஹானே தனது 7-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். இந்தியா இந்த மைதானத்தில் முதல் முறையாக 500 ரன்களை எட்டியுள்ளது.

3-ம் நாள் ஆட்ட புள்ளிவிவரங்கள் சில:

மே.இ.தீவுகளில் இந்தியா முதன் முதலாக 2-வதாக பேட் செய்து 300 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமாக 2-வதாக பேட் செய்ததில் 200 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றது இது 3-வது முறையாகும்.

தொடர்ச்சியாக 2வது முறை 300 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது, முதல் டெஸ்ட் போட்டியில் 323 ரன்கள் முன்னிலை பெற்றது, தற்போது 304 ரன்கள் முன்னிலை பெற்றது.

மே.இ.தீவுகளில் அந்த அணிக்கு எதிராக 5-வது முறையாக 500 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.

மொத்தமாக வெளிநாடுகளில் 500 மற்றும் அதற்கு மேலான ஸ்கோர்களை அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் எடுப்பது இது 3-வது முறையாகும்.

நம்பர் 5 பேட்ஸ்மெனாக கிங்ஸ்டன் ஜமைக்காவில் அஜிங்கிய ரஹானே எடுத்த 108 ரன்கள் மே.இ.தீவுகளுக்கு எதிராக பாலி உம்ரிகர் இதே டவுனில் எடுத்த 117 ரன்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இதே டவுனில் பாலி உம்ரிகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் 1953-ம் ஆண்டு 130 ரன்களை எடுத்துள்ளார், ஏப்ரல் 2002-ல் ராகுல் திராவிட் இதே டவுனில் இறங்கி 144 நாட் அவுட்டாக இருந்துள்ளார்.

நம்பர் 5-இல் களமிறங்கி துணைக்கண்டத்திற்கு வெளியே 3 சதங்களை எடுத்த பாலி உம்ரிகர், அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகியோருக்கு அடுத்த இடத்திற்கு ரஹானே தற்போது இந்தச் சதத்தின் மூலம் வந்துள்ளார்.

1976-ம் ஆண்டு டேவிட் ஹால்ஃபோர்ட் என்ற ஸ்பின்னர் 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்தியாவுக்கு எதிராக கைப்பற்றிய பிறகு தற்போது ராஸ்டன் சேஸ் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்பின்னரானார்.

http://tamil.thehindu.com/sports/ரஹானே-சதமும்-3ம்-நாள்-ஆட்ட-சாதனைத்-துளிகளும்/article8933088.ece

  • தொடங்கியவர்

இந்திய வெற்றிக்கு இடையூறு செய்யும் மழை: மே.இ.தீவுகள் 48/4

நோபாலன்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
 
 
  • ஷமியின் அட்டகாசமான ஓவரில் கடைசியில் பவுல்டு ஆன சாமுவேல்ஸ். | படம்: ஏ.பி.
    ஷமியின் அட்டகாசமான ஓவரில் கடைசியில் பவுல்டு ஆன சாமுவேல்ஸ். | படம்: ஏ.பி.
  • மொகமது ஷமியைப் பாராட்டும் வீரர்கள். | படம்: ஏ.பி.
    மொகமது ஷமியைப் பாராட்டும் வீரர்கள். | படம்: ஏ.பி.

எர்ல் என்ற புயற்காற்று ஜமைக்காவை அச்சுறுத்திய நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் 15.5 ஓவர்களே சாத்தியமானது. இதில் மே.இ.தீவுகள் 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

5-ம் நாளான இன்று வானிலை அறிக்கை ஆட்டம் நடைபெற சாதகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே.இ.தீவுகள் 256 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்று 98 ஓவர்கள் வரை வீச வேண்டும், எனவே இந்த ஓவர்களை மே.இ.தீவுகள் தாக்குப்பிடிப்பது கடினம் என்றே தெரிகிறது.

நேற்று காலை உள்ளூர் நேரம் 9.30 மணிப்படி தொடங்க வேண்டிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட களத்தினால் 10.45-க்குத்தான் தொடங்கியது. 3 ஓவர்கள் வீசியிருப்பார்கள் மீண்டும் சடசடவென ஒரு மழை.

மே.இ.தீவுகள் பேட்ஸ்மென் கடும் நெருக்கடியில் இத்தகைய மழையால் கவனச்சிதறலை தடுக்க முடியவில்லை. மேகமூட்டமான வானிலையினால் காற்றும் நன்றாக அடிக்க பந்துகள் கொஞ்சம் கூடுதலாக ஸ்விங் ஆகின. மொகமது ஷமி இதனை அருமையாக பயன்படுத்திக் கொண்டார்.

மே.இ.தீவுகள் தொடக்க வீரர் சந்திரிகா 1 ரன் எடுத்து இசாந்த் சர்மாவின் ஷார்ட் ஆஃப் லெந்த், உள்ளே வந்த பந்தை, விலாவுக்கு எழும்பிய பந்தை, ஆடாமல் விட்ட போது அவரது முழங்கையில் பட்டு பந்து ஸ்டம்பின் மேல் விழுந்தது. மே.இ.தீவுகள் 5/1.

கே.சி.பிராத்வெய்ட் கடுமையான ஸ்விங்கில் குட் லெந்த், ஷார்ட் பிட்ச் பந்துகள் மாறி மாறி வர குழப்பத்தில் ஆடி எட்ஜ் பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு செட்டில் ஆன நிலையில், அமித் மிஸ்ராவின் விக்கெட் எடுக்க லாயக்கற்ற பந்தில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார்.

அதாவது அவ்வளவு நேரம் கூண்டில் அடைக்கப்பட்ட பறவை கூண்டைத் திறந்தவுடன் சிறகுகளை படபடவென அடித்துப் பறப்பது போல், மிஸ்ராவின் அதி ஷார்ட் பிட்ச் பந்தைப் பார்த்தவுடன் பிராத்வெய்ட் மட்டைக்கு சிறகுகள் முளைத்தது, இதனால் புல்ஷாட்டுக்கான அடிப்படையான ‘பேக் அண்ட் அக்ராஸ்’உத்தி கைகூடாமல் ஷாட்டில் துல்லியம் போய் டாப் எட்ஜ் எடுத்து ராகுலிடம் லெக் திசையில் கேட்ச் ஆனது. உண்மையில் மிஸ்ராவுக்கு அதிர்ஷ்டமே இது. ராகுலும் நன்றாக பின்னால் ஓடி பிடித்தார்.

உண்மையில் மர்லன் சாமுவேல்ஸ் இறங்கிய போது அஸ்வினிடம்தான் பந்து அளிக்கப்பட்டது, ஆனால் திடீரென கடைசி நேர மாற்றமாக மொகமது ஷமி அழைக்கப்பட்டார். இது கை கொடுக்கும் என்று ஒருவரும் அப்போது எதிர்பார்க்கவில்லை.

அந்த ஓவர் ஷமி, சாமுவேல்ஸை படுத்தி எடுத்தார். முதல் பந்தே ‘விழித்துக் கொள்’ என்பது போல் ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை வீசினார், புல் ஷாட் முயற்சியும் இல்லை விலகும் முயற்சியும் இல்லை பந்து தானாகவே கிளவ்வில் பட்டு மார்பில் பட்டு விழுந்தது. அடுத்த பந்து இதுவும் ஷார்ட் ஆஃப் லெந்த் பந்து ஆடாமல் விட்டார். 3-வது பந்தும் அதே போல் ஆடாமல் விட்டார். 4-வது பந்து இன்ஸ்விங் ஆடாமல் விட்டார் ஆஃப் ஸ்டம்புக்கு மேல் சென்றது. அடுத்த பந்து மிடில் அண்ட் ஆஃப் பந்து ஷார்ட் ஆஃப் லெந்த் பந்து உள்ளே வருமா வெளியே செல்லுமா என்ற ஐயப்பாட்டில் முன்னாலும் செல்லாமல் பின்னாலும் செல்லாமல் ‘ஸ்கொயர்’ ஆனார் சாமுவேல்ஸ் பந்து ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது, உண்மையில் ‘வொர்க் அவுட்’ செய்வது என்பது இதுதான் சாமுவேல்ஸ் ரன் எடுக்காமல் ‘வொர்க் அவுட்’ செய்யப்பட்டார்.

டிவைன் பிராவோ கடுமையான ஷார்ட் பிட்ச் பந்து சோதனைகளுக்கு ஆளானார். அவரது மூக்கை நோக்கி வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்துகள் அவை. அவர் அதனை ரன் எடுக்கும் வாய்ப்பாகப் பார்க்கவில்லை, தடுப்பாட்டத்திலும் சிறந்த உத்தி அவருக்குக் கைகூடவில்லை. இதனால் திணறினார்.அதில் ஒரு பந்தை புல் ஆடிய போது அது லாங் லெக்கில் பீல்டர் கைக்குச் செல்லாமல் தள்ளி பவுண்டரி சென்றது, இன்னொரு ஸ்கொயார் டிரைவ் அருமையானது. பிறகு மிஸ்ரா ஷார்ட் பிட்ச் பந்தை கவர் திசையில் பவுண்டரி அடித்து 20 ரன்கள் எடுத்த பிராவோ, அடுத்த ஷமி ஓவரில் தொண்டைக்கு வந்த ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அத்துடன் உணவு இடைவேளை, 48/4 என்ற நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் நடைபெறவில்லை.

http://tamil.thehindu.com/sports/இந்திய-வெற்றிக்கு-இடையூறு-செய்யும்-மழை-மேஇதீவுகள்-484/article8937800.ece

  • தொடங்கியவர்

ஆண்டுகால கரி சோபர்ஸ் சாதனையை சமன் செய்த மேற்கிந்திய தீவுகளின் புதுமுகம். 

Posted: 1:49 PM, 2016-08-04 செய்தி: Editor

 

24890550ஆண்டுகால கரி சோபர்ஸ் சாதனையை சமன் செய்த மேற்கிந்திய தீவுகளின் புதுமுகம்.
 
 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடுவதற்காக மேற்கு இந்திய தீவுகளுக்கு, இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் சென்றுள்ளது. முதல் டெஸ்டை இந்தியா இலகுவாக வென்ற நிலையில், ஜமைக்காவில் 2 வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியுற்ற நிலையில் நிறைவுக்கு வந்துள்ளது.
 
 
 
நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் 137 ஓட்ட்ங்களைக் குவித்த மேற்கு இந்திய தீவுகள் அணியின் புதுமுக வீரர் ரோஸ்டன் சேஸ் முன்னதாக முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இது ஒரு சாதனையாகும்.
 
 
 
2வது இன்னிங்சில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 388 ஓட்ட்ங்கள் எடுத்திருந்த நிலையில் நேற்றைய இறுதிநாள்   முடிந்ததால் போட்டி வெற்றி தோல்வியுற்ற நிலையில் நிறைவுக்கு வந்தது .
 
 
இந்தியாவின் முதல் இன்னிங்சில் ரோஸ்டன் சேஸ் 121 ஓட்ட்ங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2வது இன்னிங்சில் சதம் அடித்தார். அந்த அணியை சேர்ந்த வீரர் ஒருவர் 5 விக்கெட்டைகளை வீழ்த்தி, அதே போட்டியில் சதமும் அடித்தது இது 3வது முறையாகும் .
 
 
 
1996ல் மேற்கிந்திய தீவுகள் வீரர் கேரி சோபர்ஸ், இங்கிலாந்துக்கு எதிராக ஹெட்டிங்லியில் நடந்த போட்டியில் 174 ஓட்ட்ங்கள் குவித்ததோடு, 41 ஓட்ட்ங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது ஒரு சாதனையாக இருந்து வந்தது.
 
 
 
அந்த போட்டி சரியாக 50 வருடங்கள் முன்பு, அதாவது ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்றது. 50 வருடங்கள் பிறகு அந்த சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.
 
 
 
தனது 2 வைத்து போட்டியில் சகலத்துறைகளிலும் ஜொலித்த புதுமுகம் சேஸ்க்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. 

http://vilaiyattu.com/ஆண்டுகால-கரி-சோபர்ஸ்-சாத/

  • தொடங்கியவர்

விஜய் இல்லை; புஜாரா, உமேஷ், மிஸ்ரா நீக்கம்: இந்தியா முதலில் பேட்டிங்

 

 
அணியில் ரோஹித் சர்மா. | படம்: பிடிஐ.
அணியில் ரோஹித் சர்மா. | படம்: பிடிஐ.

செயிண்ட் லூசியா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸில் தோற்றது, ஆனால் மே.இ.தீவுகளால் இந்திய அணி முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தொடர்ந்து தவண், ராகுல் தொடக்கத்தையே தக்க வைத்துள்ளது, புஜாரா நீக்கப்பட்டு ரோஹித் சர்மா வந்துள்ளார், அதே போல் மிஸ்ராவுக்குப் பதில் ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ்வுக்குப் பதில் புவனேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி வருமாறு: தவண், ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே, அஸ்வின், சஹா, ஜடேஜா, இசாந்த் சர்மா, மொகமது ஷமி, புவனேஷ் குமார்.

மே.இ.தீவுகள்: கே.சி.பிராத்வெய்ட், ஜான்சன், டேரன் பிராவோ, மர்லன் சாமுவேல்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ராஸ்டன் சேஸ், டவ்ரிச், ஹோல்டர், கமின்ஸ், ஜோசப், கேப்ரியல்.

பிட்சில் முதல் நாள் ஓரளவுக்கு பவுன்ஸ் இருக்கும் என்று தெரிகிறது, அதனை முதலில் பயன்படுத்த ஹோல்டர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், கோலி வழக்கமான ஆக்ரோஷ மனோபாவத்துடன், தான் டாஸ் வென்றிருந்தால் எப்படியும் முதலில் பேட்தான் செய்திருப்பேன் என்றார்.

http://tamil.thehindu.com/sports/விஜய்-இல்லை-புஜாரா-உமேஷ்-மிஸ்ரா-நீக்கம்-இந்தியா-முதலில்-பேட்டிங்/article8964734.ece

  • தொடங்கியவர்

ச‌தத்தை நோக்கி அஸ்வின், இந்தியா நிதான ஆட்டம்!

249491.jpg

இந்தியா - மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய தரப்பில் புஜாரா, மிஸ்ரா, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு ரோகித் ஷர்மா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டனர். மே.இ.தீவுகள் தரப்பில் ஜோசப் புதுமுக வீரரராக சேர்க்கப்பட்டார்.

துவக்க வீரர் தவான்  1 ரன்னிலும், கேப்டன் கோலி 3 ரன்களிலும் வெளியேறினர், ராகுல் அரைசதம் அடித்தும், ரஹானே 35 ரன்களிலும் வெளியேற இந்தியா 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஜோடி சேர்ந்த அஸ்வின் - சஹா இணை விக்கெட்டுகளை வழங்காமல் நிதான ஆட்டத்தை கடைபிடித்தது. 6வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்துள்ளனர். இந்தியா ஆட்ட நேர முடிவில் 234 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் உள்ளது.

அஸ்வின் 75 ரன்களுடனும், சஹா 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அஸ்வின் இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/sports/66999-ashwin-saha-save-india-on-third-test.art

  • தொடங்கியவர்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின், சாஹா சதம்

Date: 2016-08-10 22:43:09

கிராஸ் ஐலெட்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின், சாஹா அபாரமாக சதம் அடித்தனர். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் அடிக்கும் 4-வது சதமாகும். அதேபோல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சாஹா அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=237935

3-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்திய அணி 352 ரன்கள் குவிப்பு

Date: 2016-08-10 23:35:36

கிராஸ் ஐலெட்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அபாரமாக ஆடிய அஸ்வின், சாஹா அபாரமாக சதம் அடித்தனர். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் அடிக்கும் 4-வது சதமாகும். அதேபோல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சாஹா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அதிகபட்சமாக அஸ்வின் 118, சாஹா 104 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளனர்.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=237936

  • தொடங்கியவர்

சம பலத்துடன் 2-வது டெஸ்ட்: அஸ்வின், சாஹா சதமும் மே.இ.தீவுகள் கச்சித ஆட்டமும்

 

 
சதமடித்த அஸ்வின் - சாஹா | படம்: ஏ.எஃப்.பி
சதமடித்த அஸ்வின் - சாஹா | படம்: ஏ.எஃப்.பி

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் மே.இ தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், விருத்தமான் சாஹா இருவரும் சதம் அடித்தனர்.

மதிய தேநீர் இடைவேளைக்கு முன்பு தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை துவக்கிய மே.இ.தீவுகள் அணிக்கு ப்ராத்வெயிட், ஜான்சன் இருவரும் சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். சீரான வேகத்தில் ரன்கள் சேர 19-வது ஓவரில் 50 ரன்களை மே.இ.எட்டியது. 23 ரன்கள் எடுத்திருந்த போது, ஜான்சன் ராகுல் அடித்த டைரக்ட் ஹிட்டால் ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து இணை சேர்ந்த டேரன் பிராவோ, பிராத்வெயிட்டுடன் இணைந்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். பிராத்வெயிட் 141 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து விக்கெட் இழப்பின்றி ஆடிய மே.இ.தீவுகள் அணி 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 107 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. பிராத்வெயிட் 53 ரன்களுடன், பிராவோ 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சிக்ஸருடன் சதம் கடந்த அஸ்வின்

234 ரன்களில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 2-ஆம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி, தொடர்ந்த அஸ்வின் - சாஹா பார்ட்னர்ஷிப்பால் மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி 300 ரன்களை தொட்டது. 99 ரன்கள் எடுத்திருந்த அஸ்வின் உணவு இடைவேளைக்குப் பிறகு 2-வது ஓவரில் க்ரீஸிலிருந்து இறங்கி வந்து பந்தை சிக்ஸருக்கு விரட்டி சதத்தைக் கடந்தார். அடுத்த சில ஓவர்களில் சாஹாவும் சதத்தை எட்ட இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைக் கடந்தது.

சதம் அடித்த அடுத்த ஓவரிலேயே 104 ரன்களுக்கு சாஹா ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜடேஜா (6), புவனேஸ்வர் குமார் (0), அஸ்வின் (118), இஷாந்த சர்மா (0) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆட்டமிழக்க இந்தியா 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கடைசி 5 விக்கெட்டுகளை இந்தியா 14 ரன்களில் இழந்தது குறிப்பிடத்தக்கது. மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ் மற்றும் ஜோசப் இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

http://tamil.thehindu.com/sports/சம-பலத்துடன்-2வது-டெஸ்ட்-அஸ்வின்-சாஹா-சதமும்-மேஇதீவுகள்-கச்சித-ஆட்டமும்/article8973146.ece?homepage=true

  • தொடங்கியவர்

சதமடிக்க ஒரு ரன்னுக்கு ஒரு மணி நேரம் மேலாக காத்திருந்த அஸ்வின்

 

 
 
சாஹா - அஸ்வின் | படம்: ஏபி
சாஹா - அஸ்வின் | படம்: ஏபி

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று அஸ்வினின் சதம் ஆட்டத்தில் சுவாரசியத்தைக் கூட்டினாலும் அந்த சத்தத்தை எட்ட அவர் ஒரு மணி நேரம் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.

111-வது ஓவரில் இந்தியா 288 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்திருந்த போது, அஸ்வின் அந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 250 பந்துகளில் 99 ரன்களை எட்டினார். பிறகு அந்த ஓவரில் ரன் ஏதும் எடுக்காததால், அடுத்த ஓவரை சாஹா சந்தித்தார். அந்த ஓவரில் சாஹா 1 ரன் எடுத்து அஸ்வின் ஆட வந்தாலும், மீதமிருந்த 2 பந்துகளில் அஸ்வின் ரன் எடுக்கவில்லை. 256 பந்துகளில் 99 ரன்கள்.

மீண்டும் அடுத்த ஓவரின் கடைசி பந்தை அஸ்வின் சந்தித்தாலும் அதிலும் ரன் எடுக்க முடியாமல் போனது. 257 பந்துகளில் 99 ரன்கள்

தொடர்ந்து, 114, 115 என அடுத்த 2 ஓவர்களையும் சாஹாவே சந்திக்க உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. சாஹா 93 ரன்களுடன், அஸ்வின் அதே 99 ரன்களுடனும் (257 பந்துகள்) உணவு இடைவேளைக்குச் சென்றனர்.

அடுத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்தே ஆட்டம் தொடர்ந்தது. உணவு இடைவேளைக்குப் பின் முதல் ஓவரை அஸ்வின் ஆடவிருப்பதால் அவர் சதம் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் அஸ்வின் ரன் எடுக்காமல் ஏமாற்றம் தந்தார். அடுத்த ஓவரின் 2-வது பந்தில் சாஹா 1 ரன் எடுத்தார். சுழற்பந்துவீச்சாளர் சேஸ் வீசிய 3 பந்தை மடக்கி ஆடிய அஸ்வின், யாரும் எதிர்பாராவிதமாக அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி சதத்தை எட்டினார்.

இப்படி, 99 ரன்களிலிருந்து சதத்தை எட்ட 1 மணி நேரம் மேல் அஸ்வினும், இந்திய ரசிகர்களும் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. இந்தத் தொடரில் அஸ்வின் எடுக்கும் 2-வது சதம் இது. மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக அவர் எடுக்கும் 4-வது சதம் இது.

முடிவில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாஹாவும் சதத்தைக் கடந்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

http://tamil.thehindu.com/sports/சதமடிக்க-ஒரு-ரன்னுக்கு-ஒரு-மணி-நேரம்-மேலாக-காத்திருந்த-அஸ்வின்/article8973149.ece?homepage=true

  • தொடங்கியவர்
மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் 237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியது. இதன் மூலம் கேப்டன் விராட் கோலி சாதனை படைத்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் கிராஸ் ஐஸ்லெட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 353 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அஸ்வின் 118 ரன்களும், விருத்திமான் சாஹா 104 ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடி மேற்கிந்தியத் தீவுகள் அணி 103.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு சுருண்டது. பிராத்வெயிட் 64 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 128 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா கடைசி நாள் ஆட்டத்தில் 48 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரஹானே 78 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

346 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டேரன் பிராவோ 59 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் முகமது ஷமி 3, இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் அந்த அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி இரு ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றுவது இதுவே முதன்முறை.

இதற்கு முன்னர் கங்குலி, டிராவிட், தோனி தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஆனால் தற்போது கோலி தலைமையிலான இளம் இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றி சாதித்துள்ளது. கடைசி டெஸ்ட் வரும் 18-ம் தேதி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் தொடங்குகிறது

Tamil.thehindu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.