Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாவமன்னிப்பா? பரிகாரமா?

Featured Replies

பாவமன்னிப்பா? பரிகாரமா?
 


article_1473656220-aaaaaaaaaaaaaaaaa.jpg-கருணாகரன்

செந்தில் என்று அழைக்கப்படும் முருகுப்பிள்ளை ரவீந்திரராஜா விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு காலம் செயற்பட்ட போராளி. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையிலிருந்து மிக இளைய வயதில் புலிகளோடு இணைந்தவர். இராணுவத்தினருடனான போர்க்களமொன்றில் செந்தில் ஒரு காலை இழந்தார். அதற்குப்பிறகு அவர் கல்முனைக்குச் செல்லவில்லை. பொதுமக்களுக்கான பணிகளையே செய்தார்.

பழகுவதற்கு இனிய செந்தில், அமைதியான சுபாவமுடையவர். அதனால் மக்களின் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருந்தார். இறுதி ஈழப்போரில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, படையினரின் புனர்வாழ்வு முகாமுக்கு (தடுப்புக்கு) சென்று மீண்டார். இப்பொழுது கிளிநொச்சி நகருக்கு அண்மையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். 45 வயதுடைய செந்திலுக்கு ஐந்து பிள்ளைகள். ஐந்துபேரும் படிக்கிறார்கள். குடும்பத்தின் பொருளாதாரம் ஏனைய போராளிகளைப் போல நெருக்கடியானதே. முச்சக்கரவண்டி வைத்து ஓட்டுகிறார். அதிலிருந்து கிடைக்கும் வருமானமே குடும்பத்துக்கான ஜீவாதாரம். ஏற்கெனவே ஒரு கால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரால் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது.

கடந்த வெள்ளிக்கிழமை செந்திலுக்கும் அவரைப்போன்ற இன்னும் ஒரு தொகுதி போராளிகளுக்கும் மாற்றுக்கால்களினைப் படையினர் வழங்கினார்கள். கிளிநொச்சியில் உள்ள ஒத்துழைப்பு மையத்தில் வைத்து இந்த மாற்றுக்கால்கள் வழங்கப்பட்டன. இந்தக் கால்களை இலங்கை இராணுவத்தின் கிளிநொச்சிப் பிராந்தியப் படைகளின் கட்டளைத்தளபதி வழங்கினார். US AID என்ற அமெரிக்க உதவி அமைப்பின் உதவியுடன் இந்த மாற்றுக்கால்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி பல கேள்விகளை எழுப்புகிறது. பல்வேறு வகையான உணர்ச்சிகளையும் உண்டாக்குகிறது.  மெய்யான காலை இழந்ததற்கு பதிலாக அல்லது ஈடாக மாற்றுக்காலை வழங்குவதாகுமா? எந்தத் தரப்பினால் மெய்யான கால் இழக்கப்பட வேண்டியிருந்ததோ, அதே தரப்பு இப்பொழுது மாற்றுக்காலை வழங்குகிறது.

அப்படியானால், இது ஒரு நிவாரண நடவடிக்கையா? அல்லது பகைமையைத் தணிக்க முற்படும் பரஸ்பரப் புரிந்துணர்வுச் செயற்பாடா? அல்லது வென்றவர்கள், தோற்கடிக்கப்பட்டவர்களின் மீது மேற்கொள்ளும் பரிகசிப்பா? அல்லது வெளியுலகத்துக்குக் கண்துடைப்புச் செய்யும் அரசியல் உபாயத்தின் பாற்பட்ட ஒரு செயற்பாடா? அல்லது நடந்தவற்றுக்கான பாவமன்னிப்பா?  

ஏனென்றால், ஒரு காலத்தில் புலிகளும் இராணுவத்தினரும் எதிரெதிர்த்தரப்பிலிருந்து, மிக உக்கிரமாகச் சண்டையிட்டவர்கள். உச்சமான பகையைக் கொண்டிருந்தவை இரண்டு தரப்புகளும். வரலாற்றில் ஒரு போதுமே இணக்கமோ நெருக்கமோ ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதிச் செயற்பட்டவை. அப்படியான தரப்புகள் ஓர் அரங்கில் நின்று கால்களைப் பரிமாறிக்கொள்வது என்பதை எந்த வகையில் விளங்கிக் கொள்வது?

உண்மையில் போரின் முடிவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. எல்லாக் கணிதங்களையும் கணிப்புகளையும் தகர்த்தெறிந்து, தலைகீழாக்கி விட்டது. அது புதியதொரு யதார்த்தத்தை நம் கண்முன்னே விரித்து வைத்துள்ளது. உள்ளே கொந்தளித்துக் கொண்டும், கொதித்துக்கொண்டுமிருக்கும் யதார்த்த உணர்வுகளை மேவி, இன்னொரு யதார்த்தத்தை எதிர்கொள்ளும்படி மிஞ்சிய வாழ்க்கை கேட்கிறதா? அல்லது இன்னொரு காலகட்டத்தின் தவிர்க்க முடியாத யதார்த்தம் இது என்று நமக்கு உணர்த்துகிறதா? இந்தக் கேள்விகள் இன்று முக்கியமானவை.

உண்மையில், நாங்கள் இப்போது எதிர்பார்க்காத நிகழ்ச்சிகளின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியான காலம் எப்போதும் கொந்தளிக்கும் உணர்ச்சிகளையே கொண்டிருப்பதுண்டு. 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பிறகு அரங்கில் எதிர்பாராத நிலைமைகளும் நிகழ்ச்சிகளுமே நடந்து கொண்டிருக்கின்றன.

படையினர் போராளிகளுக்குக் கால்களை மட்டும் வழங்கவில்லை. அவர்களுக்குத் தொழில்வாய்ப்புகளையும் வழங்கியிருக்கிறார்கள். சிவில் பாதுகாப்பு அணி என்ற பேரில் வடக்குக் கிழக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் திட்டத்தின்படி போராளிகள் பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதைவிட, படையினர் வேறு பல நலத்திட்டங்களையும் பல இடங்களிலும் சிறிய அளவில் செய்து வருகிறார்கள். மூக்குக் கண்ணாடி கொடுப்பது வரையில் இது உள்ளது. இரத்ததானம் செய்தல், மருத்துவ முகாம்களுக்கு உதவுவது, நகரங்களைத் துப்பரவாக வைத்திருப்பது எனப் பல பணிகள்.

இதெல்லாம் எதற்காக?

உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்த வேண்டும். அவர்களுக்கான மறுவாழ்வை உண்டாக்க வேண்டும். அழிந்த பிரதேசங்களைக் கட்டியெழுப்பி, அழகாக, எழுச்சியடைய வைக்க வேண்டுமென்றால், அதற்கான பொறுப்பை அரசாங்கமே எடுக்க வேண்டும். அதுவே இவற்றுக்குப் பொருத்தமான முறையில் திட்டமிடல்களைச் செய்து  சிவில்துறையிலுள்ள அவற்றுக்குரிய துறைசார்ந்த அமைப்புகளிடம் அவற்றை ஒப்படைக்க வேணும். அதுவே சரியானது.

ஆனால், அப்படிச்செய்யப்படவில்லை. பதிலாக படைத்தரப்பே இதையெல்லாம் செய்கிறது.
இது ஏன்? இந்தக் கேள்வியே இன்று பலரிடமும் உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுவது மருத்துவரா? அல்லது அங்கே உள்ள மருத்துவரால்லாதவர்களா? பாதிக்கப்பட்ட மக்களுக்கான காயங்ளை அரசாங்கம் மாற்ற முயற்சிக்கும்போது, அதில் நெருடல்களுக்கான சந்தர்ப்பங்கள் குறைவு. மட்டுமல்ல, இராணு அதிகாரத்தின் நிமித்தமாக எதுவும் அணுகப்படவில்லை என்ற ஓருணர்வும் ஏற்படும். ஆனால், இதையெல்லாம் அரசாங்கம் சிந்திப்பதாக இல்லை.

போருக்குப் பின்னர், இதுவரையில் எத்தகைய பெறுமதியான உதவி நிகழ்வுகளிலும் நாட்டின் தலைவர்கள் யாரும் கலந்து கொண்டதில்லை. அப்படியான உதவித்திட்டங்களை அரசாங்கம் உருவாக்கவும் இல்லை.
மறுவளத்தில் படையினர் போராளிகளைக் கையாள்வதற்காகவோ அல்லது அவர்களுக்கு உதவுவதற்காகவோ சில உதவித்திட்டங்களையும் சில வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கின்றனர்.

இப்படி மக்களுக்கும் தங்களுக்குமிடையில் அல்லது போராளிகளுக்கும் மக்களுக்குமிடையில் நெருக்கத்தை அதிகரிக்கப் படையினர் செய்யும் வேலைகள் ஒரு பக்கத்தில் மக்களுக்கும் போராளிகளாக இருந்தவர்களுக்கும் நன்மைகளைத் தந்தாலும் ஏற்புடைய வழிமுறை அல்ல என்பதே பொதுவான கருத்தாகும்.

அரசாங்கம் செய்ய வேண்டிய விடயங்களைப் படையினர் செய்ய முற்படும்போதே இராணுவமயப்பட்ட தன்மையை மக்கள் உணர்கிறார்கள். தவிர, இது சிவில் அணுகுமுறைக்கு எதிரானதும் கூட.
இது வெளியே சொல்லப்படுவதைப்போல ஒன்றும் பரஸ்பர உறவை வளர்ப்பதற்கான ஏற்பாடு என்று சொல்ல முடியாது.

ஆனால், உடனடி வயிற்றுப் பசியைப் போக்கவதற்கான ஒரு வழி என்று வேண்டுமானால் கூறலாம். அவ்வளவே. இதை மறுத்துரைப்போர், படையினர் முன்னரைப்போலல்ல, அவர்கள் இணக்கமான வழிமுறைகளின் மூலமாக தமிழ்மக்களிடம் நெருங்கி வர முற்படுகிறார்கள் என்று வாதிடலாம். அந்த வாதம் பலவீனமானது.

ஏனெனில், இதே படையினர் ஒரு பக்கத்தில் இந்த மாதிரியான நல்லெண்ண உதவிகளைச் செய்து கொண்டே மறுவளத்தில் பொதுமக்களின் காணிகளை வைத்திருப்பதும் மக்களுடைய வழிபாட்டிடங்களிலும் பொது வெளியிலும் பௌத்த விகாரைகளை அமைப்பதும் எதிர்நிலை உணர்வுகளையே ஏற்படுத்துகின்றதே.

இதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை? அல்லது அத்தகைய செயல்களை மறைப்பதற்கான மேல் பூச்சாகத்தான் இந்த மாதிரியான உதவி மற்றும் நலப்பணிகளுமா? ஆகவே இவை ஒரு உள்நோக்கமுடைய அரசியல் உபாயத்தின்பாற்பட்ட நிகழ்ச்சிகளா?

சுருக்கமாகக் கேட்பதனால், ஒரு தோல்வி இப்படி ஒரு நிலைமையை உருவாக்கியதா? என்றால், நிச்சயமாக இல்லை. சமாதானத்திலும் இத்தகைய பரஸ்பர நிலைமைகள் உருவாகுவதுண்டு. ஆனால், சமாதானத்தின்போது நிலவும் பரஸ்பர நிலைக்கும் தற்போது நிலவுகின்ற அல்லது உருவாக்க முயலும் பரஸ்பர நிலைக்கும் வேறுபாடுகள் உள்ளன.

இது சமனிலையற்ற ஒரு நிலையில் மேற்கொள்ளப்படும் பரஸ்பர நடவடிக்கைகள். சரியாகச் சொல்வதாக இருந்தால், இதைப்  பரஸ்பர நடவடிக்கை என்றோ, பரஸ்பர உறவு என்றோ சொல்ல முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, அல்லது நிவாரணம், அல்லது உதவி, அல்லது இரக்கம், அல்லது அவர்களின் மீதான கருணை என்ற வகையில்தான் இது அமைகிறது. இது ஒரு வகையில் குற்றவுணர்ச்சியின் பாற்பட்ட ஒன்றே. மட்டுமல்ல இன்னொரு நிலையில் இது அச்சத்தின் வெளிப்படாகவும் உள்ளது.

படையினரிடம் ஒரு குற்றவுணர்வுண்டு. இதைச் சில படையினர் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாகப் போராளிகளின் புனர்வாழ்வுக்காலத்தில் பல படையினர், மிகவும் உணர்வு புர்வமாக போராளிகளுடன் நடந்திருக்கிறார்கள். 'நாங்களும் களத்தில் செத்து மடிகின்றவர்கள். நீங்களும அப்படித்தான். நாங்கள் வென்றதால் தப்பிக் கொண்டோம். உங்களைச் சிறையிட்டிருக்கிறோம். நீங்கள் வென்றிருந்தால் எங்களுடைய  கதை எப்படியிருந்திருக்கும்?' எனப் பல படையினர் போராளிகளிடம் பேசியிருக்கிறார்கள்.

ஆகவே களத்தில் இருவரும் உயிரை இழக்கும் தரப்பினராகவே உள்ளதால். சிறையில் அவர்களுக்கிடையே ஒரு மெல்லிய புரிந்துணர்வு உண்டாகியிருக்கலாம். அந்த அடிப்படையில் தம்மைப்போன்றவர்கள் இன்று எத்தகைய பலமும் ஆதாரமுமின்றி அல்லற்படுகிறார்கள். அவர்களுக்கு தாம் உதவி வேண்டும்.

அவர்களுக்கான நிவாரணத்தைக் காணவேணும் என்ற குற்றவுணர்வின் பாற்பட்டு இந்த நலத்திட்டங்களையும் உதவிகளையும் படைத்தரப்பு செய்ய முற்பட்டிருக்கலாம். அதேவேளை, இது அச்சத்தின் பாற்பட்டுச் சிந்திக்கும் சிந்தனையின் வழிமுறையின்படியும் நேர்ந்திருக்க முடியும்.

எப்படியென்றால், யுத்தத்தின்போது தோற்கடிக்கப்பட்ட போராளிகள் கவனிப்பாரின்றி, தொடர் அவலங்களில் சிக்கினால், அவர்கள் மீளவும் அரசுக்கும் படையினருக்கும் எதிரான உணர்வுடன் ஒன்றுதிரளக்கூடிய எதிர்ப்பு நிலை ஒன்று உருவாகும். அதைத் தடுப்பதற்கான, புலன் திருப்பும் - கோபம் தணிக்கும் நடவடிக்கையாகவும் இது இருக்கும்.

இந்த அபாயத்தை அரசு எதிர்கொள்வதையும் விட படையினரே நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், அதற்கான முன்னோட்ட எச்சரிக்கை நடவடிக்கையை படைத்தரப்பு மேற்கொண்டிருக்கலாம்.

எப்படியோ இன்று எதிர்பார்த்திருக்காத நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது இந்த உணர்ச்சிகரமான நிலை ஆரம்பித்தது. யாருமே நம்பியிராத ஒரு நிலையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். இதை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பிரதான பாத்திரமொன்றை வகித்திருந்த மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தொடக்கம் அத்தனை படைத்தளபதிகளும் படைத்துறை வல்லுனர்களும் சொல்லியிருக்கின்றனர்.

'புலிகளின் தோல்வியும் அழிவும் முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்' என்று ஆருடம் சொன்னவர்களுடன் இந்தப் பத்தி வாதிடவில்லை. புலிகளின் தோல்வியோடு எதிர்பாராத வகையான புதிய காட்சிகள் ஆரம்பமாகின. 'அரசியலில் எதுவுமே நடக்கும்', 'எதிரியுமில்லை, நண்பனுமில்லை' என்ற வாக்கியங்களை உண்மையாக்கும் வகையில், பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பலவற்றை வடிவமாற்றம், முறைமாற்றம் செய்ய வேண்டும்.

சமாதானத்துக்கான பாதையில் வெள்ளை ஆடைகளுக்கும் சிவில் அடையாளங்களுக்குமே பெறுமதியுண்டு. ஆகவே, இவை இந்த மாதிரியாக அமையாமல் சமனிலையுடன் கூடிய பரஸ்பரத்தன்மையும் சிவில் தன்மையுடனும் அமைவதே நல்லது. அதுவே மகிழ்ச்சியையும் நெருக்கடியற்ற நிலையையும் உண்டாக்கும்.

'பெரும் பகையாளிகளாக இருந்த தரப்புடன் நெருக்கமாக உறவாடுவதென்பது புதியதொரு அனுபவம். அதையே நாங்கள் செய்து வருகிறோம்' என போராளிகளுக்கான கால்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அவருடைய உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. பகையை நிரந்தரமாக வளர்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது உண்மையே. ஆனால், பரஸ்பரத்துக்கான வழிகள் அகலிக்கப்பட வேண்டும். அவை வேறுவழிகளில் சிவில் பெறுமானத்துடன் அமைவதே சிறப்பு. அதற்கான அனுசரணையை ஏனையவர்கள் வழங்கலாம். அப்படி வழங்க வேண்டும்.

- See more at: http://www.tamilmirror.lk/181679/ப-வமன-ன-ப-ப-பர-க-ரம-#sthash.Ns5kYWRP.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.