சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 1 ஹீத்ரோ விமான நிலையத்தின் பெரிய கண்ணாடி சுவர்களுக்கு வெளியே, மழை மெதுவாக வழிந்துகொண்டிருந்தது. உலகத்தின் பல மொழிகள் கலந்து ஒலித்த அந்த பரபரப்பில், சிலர் பிரிவை அணைத்துக் கொண்டிருந்தார்கள்; சிலர் புதிய வாழ்க்கையை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்தில் அவளும் இருந்தாள். அவள் கையில் ஒரு சிறிய பையைத் தவிர அதிகச் சுமை இல்லை. ஆனால் அவள் கண்களில் இருந்த சுமை பல ஆண்டுகளின் நினைவுகளால் நிரம்பியிருந்தது. விமானத்தில் ஏறி, ஜன்னல் பக்க இருக்கையில் அவள் அமர்ந்தபோது, மேகங்களுக்கு மேலே போவது மட்டும் அல்ல — கடந்த நாட்களிலிருந்து சிறிது தூரம் செல்லும் முயற்சியும் அதுவாக இருந்தது. ஹீத்ரோவிலிருந்து ஒட்டாவாவுக்குப் புறப்படும் விமானம் நீண்ட பயணத்துக்குத் தயாராக அப்பொழுது இருந்தது. அந்தப் பயணம் பிரயாணிகளை தாங்கள் தாங்கள் வந்த உலகத்தை, சிறிது நேரம் மறக்கச் செய்யும் அளவுக்கு நீளமானது. சிறிது நரைத்த தலையோடும், மெல்லிய அசைவுகளோடும், வாழ்க்கையை அதிகம் பேசாமல் அதிகம் தாங்கி வந்த நடுத்தர வயதைச் சற்றுத் தாண்டிய ஒருவர் அவளருகே அமர்ந்திருந்தார். முதலில் அங்கு மௌனம் மட்டுமே நிலவியது. இருவரும் தங்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, இருக்கை வாரை [பெல்ட்டை] ஒழுங்காக ஓரளவு இறுக்கமாக மாட்டி, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கவனமாக இருந்தனர். அட்லாண்டிக் கடலின் மேலே, காற்று அடுக்குகள் (Air Layers) வெவ்வேறு வேகத்தில் நகரும்போது அல்லது சூடான காற்று மேலே எழும்பும்போது, வழமையாக ஏற்படும் சிறிய குலுக்கல் விமானத்தில் வந்தது. அந்த குலுக்கள் மௌனத்தை சிதறியது. இவ்வளவு நேரமும், ஆழந்த சிந்தனையில் இருந்த அவள், சொல்ல முடியாத பயணங்களை கண்கள் சுமந்தபடியே அமைதியாக அவரை நோக்கித் திரும்பியது. வலிமை விளம்பரம் செய்ய வேண்டியதில்லை என்பதையும், புயலுக்குப் பிறகும் அழகு உயிரோடு இருப்பதையும், அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்த பொழுது அவர் உணர்ந்தார். சில ஆன்மாக்கள் ஒளியைத் தேடுவதில்லை; அவை அமைதியாக ஒளியாகவே மாறுகின்றன. அப்படித்தான் அவள் இருந்தாள். முதலில் அவள் சிரித்தாள். அவரும் ஒரு மரியாதைக்குச் சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பில் ஒரு அந்நியத் தனிமை கரைந்தது. “நீங்கள் அடிக்கடி பயணம் செய்வீர்களா?” என்று அவள் முதலில் கேட்டாள். “இல்லை,” என்றார் அவர். “ஆனால் வாழ்க்கை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது.” அந்த பதில் ஒரு வரலாற்றின் கதவுபோல் இருந்தது. அவள் சிறிது ஆர்வத்துடன் கேட்டாள்: “வேலைக்காகவா?” அவர் மெதுவாக சிரித்தார். “சில பயணங்கள் வேலைக்காக. சில பயணங்கள் உயிர் தப்பிக்க.” அவள் எதுவும் பேசவில்லை. அந்த ஒரு வாக்கியமே போதுமான விளக்கமாக இருந்தது. சிறிது நேரம் அமைதி நிலவியது. பின்னர் அவள் கேட்டாள்: “நீங்கள் தமிழரா?” “ஆம்,” என்றார் அவர். “வட இலங்கையில் பிறந்தவன்.” அவள் உடனே அவரை கவனமாகப் பார்த்தாள். “நானும் தமிழ் தான்… ஆனால் லண்டனில்தான் வளர்ந்தேன்,” என்றாள். அவர் தலையசைத்தார். “அதனால் தான் உங்க தமிழ் சற்றுக் கலந்த ஒலியில் இருக்கிறது,” என்றார் மென்மையாக. அவள் சிரித்தாள். “நீங்கள் கவனித்துட்டீங்களே!” அவர் சாளரத்தை நோக்கிப் பார்த்தார். “ஒரு தலைமுறை தாய்மொழியை உயிருடன் காப்பாற்ற முயற்சிக்கிறது. அடுத்த தலைமுறை அதை நினைவாக வைத்திருக்க முயற்சிக்கிறது. அது இயல்பான மாற்றம்.” அவள் அந்த வார்த்தைகளை அமைதியாகக் கேட்டாள். சில நொடிகள் கழித்து அவள் கேட்டாள்: “நீங்கள் காதலை நம்புகிறீர்களா?” அவர் உடனே பதில் சொல்லவில்லை. விமானத்தின் சீரான ஒலி நடுவே சிறிது நேரம் யோசித்து, பின்னர் சொன்னார்: “காதலை நம்பாமல் மனிதன் வாழ முடியாது. ஆனால் சரியான மனிதரைத் தேர்ந்தெடுப்பது — அதுதான் பெரும்பாலானவர்களுக்கு கடினம்.” அந்த பதில் அவளின் முகத்தில் ஒரு மென்மையான சோகத்தை உருவாக்கியது. “நான் ஒருவரை நேசித்தேன்,” என்றாள் அவள். “ஆனால் வாழ்க்கை வேறு வழி தேர்ந்தெடுத்தது.” அவர் அவளை நோக்கி பார்த்தார். “சில நேரங்களில் வாழ்க்கை தேர்ந்தெடுக்கிறது என்று நாம் நினைப்பது — மற்றவர்கள் எடுக்கிற முடிவுகள்தான்,” என்றார் அமைதியாக. அவள் கண்களில் சிறிது கண்ணீர் தோன்றியது; ஆனால் அவள் சிரித்தாள். “நீங்கள் கவிஞராக இருந்திருக்கலாம்,” என்றாள். அவர் மெதுவாகச் சொன்னார்: “இல்லை. வாழ்க்கை தான் கவிதை. நாம்தான் அதை புரிந்துகொள்ள தாமதமாகிறோம்.” விமானம் மேகங்களுக்கு மேலே பறந்துகொண்டிருந்தது. கீழே உலகம் மறைந்தது. மேல் வானம் மட்டும் இருந்தது. அந்த இருவருக்கும் இடையில் இன்னும் பல கேள்விகள் இருந்தன. இன்னும் சொல்லப்படாத பல கதைகள் இருந்தன. ஆனால் அந்த நேரத்தில், ஒரே உண்மை மட்டும் அமைதியாக உருவாகிக் கொண்டிருந்தது — அந்நியர்களாகத் தொடங்கிய இரண்டு மனிதர்கள், ஒரே பயணத்தின் நினைவாக மாறிக் கொண்டிருந்தனர் விமானத்தின் விளக்குகள் மங்கியபோது, பலர் தூங்கத் தொடங்கினர். ஆனால் அவர்களில் இருவருக்கும் தூக்கம் வரவில்லை. அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே எதுவும் இல்லை — மேகங்கள் மட்டும். அவர் முன் இருக்கை திரையில் ஓடிக்கொண்டிருந்த வரைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தார். ஹீத்ரோ — அட்லாண்டிக் — ஒட்டாவா [Heathrow — Atlantic — Ottawa.] ஒரு நேர்கோடு போல தெரிந்த அந்த பாதை, வாழ்க்கையில் ஒருபோதும் நேராக இருக்காது என்று அவர் நினைத்தார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 2 தொடரும் துளி/DROP: 2097 [சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/34347802758201599/? சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 2 விமானம் பறந்து கொஞ்ச நேரம் கழித்து அவள் மெதுவாகக் கேட்டாள்: “நீங்கள் ஒட்டாவாவுக்கு வேலைக்காக போகிறீர்களா?” அவர் சிரித்தார். “வேலை முடிந்து விட்டது. இப்போது வாழ்க்கையின் மீதமுள்ள நாட்களை அமைதியாக கழிக்கப் போகிறேன். என் மகள் அங்கே இருக்கிறாள்.” “நீங்கள் லண்டனில்தான் இருந்தீர்களா?” “இல்லை… பல இடங்களில். ஆரம்பம் — யாழ்ப்பாணம்.” அந்தச் சொல் வந்ததும், அவரது குரலில் தெரியாத ஒரு பாரம் இருந்தது. “அங்கு அன்று போர் காலம்…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள். அவர் தலையசைத்தார். “ஒரு தலைமுறை வாழ்க்கையை கட்டியெழுப்ப கற்றுக்கொண்டது. இன்னொரு தலைமுறை உயிர் தப்பிக்க கற்றுக்கொண்டது. நான் இரண்டையும் கற்றுக்கொண்ட தலைமுறையிலிருந்து வந்தவன்.” அவள் அமைதியாகச் சொன்னாள்: “நாங்கள் அப்பொழுது சிறு வயதில்,” அவர் தொடர்ந்தார், “காதல் என்றால் குடும்பம் பார்த்து திருமணம். பொறுப்பு முதலில்; உணர்வு பின்னால். இப்போது பல இடங்களில் — உணர்வு முதலில்; பொறுப்பு வருமா என்று காத்திருக்கும் நிலை.” அவள் மெதுவாகச் சிரித்தாள். “அது உண்மை.” “அதில் எது சரி?” என்று அவர் கேட்டார். அவள் சில நொடிகள் யோசித்தாள். “எனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் பழைய உலகம் மனிதர்களை கட்டுப்படுத்தியது. இப்போது சுதந்திரம் மனிதர்களை குழப்புகிறது.” அவர் அவளைப் பார்த்தார். “அது மிகவும் சரியான வரி.” சிறிது நேரம் அமைதி நிலவியது. விமானப் பணிப்பெண் தண்ணீர் கொண்டு வந்தார். இருவரும் எடுத்துக் கொண்டனர். அவள் திடீரென்று கேட்டாள்: “நீங்கள் ஒருபோதும் காதலித்து தோற்றிருக்கிறீர்களா?” அவர் உடனே பதில் சொல்லவில்லை. பின்னர் மெதுவாகச் சொன்னார்: “ஒரு மனிதன் காதலில் வெல்ல முடியாது. அவர் நேசித்தால் — ஏற்கனவே தோற்றுவிட்டார். ஏனெனில் அந்த நெஞ்சம் இனி முழுவதும் அவருடையது அல்ல.” அவள் அந்த வார்த்தைகளை நீண்ட நேரம் நினைத்தாள். “அப்படின்னா … நீங்கள் தோற்றவரா?” என்று மெதுவாகக் கேட்டாள். அவர் சிரித்தார். “ஆம். பல ஆண்டுகளுக்கு முன். ஆனால் அதனால் தான் நான் மனிதனாக இருந்தேன்.” அவள் முகத்தில் ஒரு மென்மையான புரிதல் தோன்றியது. “நானும்…” என்று சொல்லி நிறுத்திக் கொண்டாள். “சொல்லலாம்,” என்றார் அவர் மெதுவாக. அவள் ஆழமாக மூச்சை இழுத்து தனது ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு சட்டெனக் கேட்டாள்: "காதலுக்கு பாலினம் உண்டுன்னு நீங்க நம்புறீங்களா?" என்று அவர் உடனே பதில் சொல்லவில்லை. சற்று யோசித்து மெதுவாகச் பதில் சொன்னார். "பண்டைய தமிழ் சங்கக் கவிதைகளில், "காதலின் பாலினம் அரிதாகவே விவாதிக்கப்பட்டது. உடல்கள் மீது எந்த வெறியும் இல்லை. ஆன்மா மட்டுமே அங்கே முக்கியமாக இருந்தது." அவள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள் - பதிலில் அல்ல, ஆனால் அது எவ்வளவு மென்மையாக அவளுக்கு வழங்கப்பட்டது என்பதைப் பார்த்து. அவர் மேலும் ஒரு தொடர்ச்சியாக, சங்க இலக்கியத்தின் பின் தோன்றிய இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை அங்கு காண்கிறோம் என்றார். அன்புக்கு, காதலுக்கு பாலினம் இல்லை என்றாலும், கூடும் வழக்கத்தில் அதைக் காண்கிறோம் என்றார். அவள் அவரை கொஞ்ச நேரம் இமை வெட்டாமல் பார்த்தால், இங்கு 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' என்ற கம்பரின் சிறப்பு வாய்ந்த வரி இல்லை. 'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.' என்ற திருவள்ளுவர் கூற்றும் இல்லை. அவள் வெறுமனே அவர் மேல் ஒரு நம்பிக்கை வைத்தாள். தன் கவலையை, ஏக்கத்தை பகிர்ந்து கொள்ள. அந்த நம்பிக்கையுடன், அவள் தன் கதையைத், அவருக்குச் சொல்ல, பகிரத் தொடங்கினாள். அவள் தொடர்ந்தாள்: “நான் ஒருவரை நேசித்தேன்,” என்று அவள் சொன்னாள். “ஆழமாக. அமைதியாக. அனுமதி இல்லாமல்.” அவர் இடையில் குறுக்கீடு செய்யவில்லை. மிகுதிக்கு காத்திருந்தார். “உலகம் அது ஒரு ஆண் என்று கருதுகிறது,” என்று அவள் தொடர்ந்தாள். “வரலாறு பெரும்பாலும் அதையே செய்கிறது.” அவள் இடைநிறுத்தி, அவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ஆர்வமாக கேட்டுக் கொண்டு இருந்தார். அவள் தொடர்ந்தாள். "சில புராணக் கதைகளில், தெய்வங்கள் ஒப்புதல் இல்லாமல் காதலர்களைத் தேர்ந்தெடுத்தன. அனுமதிக்கு முன்பே ஆசை இருந்தது. அது போகட்டும். அவை தெய்வங்கள். மனித குலத்து மீராபாய் (பொ.ஊ. 1498 – பொ.ஊ. 1547) கிருஷ்ணனை நேசித்தாள் - சமூகத்தின் அர்த்தத்தில் ஒரு மனைவியாக அல்ல, மாறாக வேறொரு ஆன்மாவில் கரையும் ஆன்மாவாக. உலகம் அதை பைத்தியக்காரத்தனம் என்று அழைத்தது. அது ஒரு வழமையான திருமணம் அல்ல. அது பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. ஆனாலும் அது நீடித்தது." அவர் இடைமறித்தார். "புத்தர் அன்பைத் தடை செய்யவில்லை. மனதை அடிமைப்படுத்தும் பற்றுதலை மட்டுமே அவர் எச்சரித்தார் [He warned only against attachment—the kind that enslaves the mind.]. உலகம் பின்னர் இரக்கத்தை கோட்பாடாகவும், கோட்பாட்டை கட்டுப் பாட்டாகவும் மாற்றியது. கிரேக்க வரலாற்றில், இரண்டு வீரர்கள் ஒருவரை யொருவர் நேசித்தார்கள். அவர்கள் நண்பர்களா? அவர்கள் காதலர்களா? வரலாறு அதை முடிவு செய்ய மறுத்தது மட்டும் அல்ல, அவர்களின் பிணைப்பு அவமானத்தின் அடிக்குறிப்பாக இல்லாமல், போர்ப் பாடலாக மாறியது." என்றார். அவள் கவனமாக அவர் சொல்வதைக் கேட்டாள். அப்பொழுது அவர்களுக்கு சாப்பாடும் பானமும் விமானப் பணிப்பெண்கள் கொண்டு வந்தார்கள். அவருக்கு, சிறப்பு உணவாக சைவ உணவும் சீனி இல்லாத காபியும் கொடுத்தார்கள். அவள் அசைவ உணவுடன் சிவப்பு ஒயின் [red wine] எடுத்தாள். சாப்பிட்டு முடியும் மட்டும் இருவரும் கதைக்கவில்லை. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 3 தொடரும் துளி/DROP: 2099 [சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 2 https://www.facebook.com/groups/978753388866632/posts/34364639906517884/?
By
kandiah Thillaivinayagalingam · 36 minutes ago 36 min
Archived
This topic is now archived and is closed to further replies.