Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் மச்சி கெத்து? #TNPL செமிஃபைனல் அலசல்

Featured Replies

யார் மச்சி கெத்து? #TNPL செமிஃபைனல் அலசல்

cheerleaders.jpg

‘நம்ம ஊரு நம்ம கெத்து’ #NammaOoruNammaGethu என்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய, தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL  தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில், சேப்பாக், திண்டுக்கல் அணி தலா 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தூத்துக்குடி, கோவை அணிகள் தலா 4 வெற்றி, 3 தோல்விகளுடன் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்தன. 

முதல் நான்கு இடங்களைப் பிடித்த சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. திருநெல்வேலியில் நாளை நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் திண்டுக்கல் & தூத்துக்குடி அணிகள் மோத உள்ளன. சனிக்கிழமை சென்னை சேப்பாக் மைதானத்தில் நடக்கவுள்ள மற்றொரு அரையிறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் & கோவை கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை ஃபைனல் நடக்கவுள்ளது.

தமிழகத்தில் உள்ள இளம் வீரர்களை அடையாளம் காண்பதற்காக நடத்தப்படும் இந்த டிஎன்பிஎல் தொடரில், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகள் பற்றிய ஓர் அலசல். 

திண்டுக்கல் டிராகன்ஸ் #IdhuNerupuda @DindigulDragons

dindigul%20dragons.jpg

ஓபனர் ஜெகதீசன் திண்டுக்கல் அணியின் சொத்து. இதுவரை நான்கு அரைசதம் உள்பட 338 ரன்கள் (71, 44, 87, 8, 60, 10, 58) விளாசி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். அவருடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜா சில போட்டிகளில் ஒத்துழைத்தார். இவர்கள் தவிர்த்து மிடில் ஆர்டரில் சொல்லிக் கொள்ளும்படி யாரும் கவனம் ஈர்க்கவில்லை. தூத்துக்குடிக்கு எதிராக எம்.அஸ்வின் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய ஆல் ரவுண்டர் ஆர்.அஸ்வின் வருகைக்குப் பின் அணி உளவியல் ரீதியாக உற்சாகம் அடைந்தது. சேப்பாக் அணிக்கு எதிராக ஆர்.அஸ்வின் தனி ஆளாக போராடி 23 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். ஆர்.அஸ்வின், எம்.அஸ்வின் தவிர்த்து குரு கேடர்நாத், சன்னி குமார் சிங், நடராஜன், சேப்பாக் அணிக்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்திய எம்.எஸ்.சஞ்சய் ஆகியோர் பந்துவீச்சில் அசத்தி வருகின்றனர்.


தூத்துக்குடி - டூட்டி பேட்ரியாட்ஸ்  #NammaOoru  #TutiPatriots @TUTI_PATRIOTS

Tuti%20patriots.jpg

தினேஷ் கார்த்திக், கவுசிக் காந்தி, அஸ்வின் கிறிஸ்ட், எல்.பாலாஜி என நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியது டூட்டி பேட்ரியாட்ஸ் என்றழைக்கப்படும் தூத்துக்குடி அணி. சேப்பாக்கம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் அமர்க்களமாக 67 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட, அதில் இருந்து வெற்றி ரகசியத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது தூத்துக்குடி அணி. ஆரம்பத்தில் நிதானமாக செயல்பட்ட கவுசிக் காந்தி கடைசி இரண்டு போட்டிகளில் 80, 86 ரன்கள் விளாசி, எதிரணியை மிரள வைக்கிறார். அதிலும், மதுரைக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட சதம் அடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தேவையான நேரத்தில் அவர் விஸ்வரூபம் எடுத்தது, தினேஷ் கார்த்திக் இல்லாத குறையைப் போக்கி உள்ளது. இவர்களுடன் மாருதி ராகவ், வாஷிங்டன் சுந்தர் இருவரும் அவ்வப்போது கைகொடுக்கின்றனர். பவுலிங்கைப் பொருத்தவரை பாலாஜி, ஆஷிக் சீனிவாஸ், கணேச மூர்த்தி, ஆகாஷ் சும்ரா, அஸ்வின் கிறிஸ்ட், வாஷிங்டன் சுந்தர் என ஒரு பட்டாளமே உள்ளது.


சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  #PattaiyaKelappu @supergillies

chepauk%20super%20gillies.jpg

சேப்பாக்கம் அணியைப் பொருத்தவரை ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கோபிநாத், தலைவன் சற்குணம் இருவரில் ஒருவர் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல ஓபனிங் அமைத்துக் கொடுத்து வருகின்றனர். இருவரும் தலா இரண்டு முறை அரைசதம் அடித்துள்ளனர். மிடில் ஆர்டரில் யோ மகேஷ், சத்யமூர்த்தி சரவணன், கேப்டன் ஆர்.சதிஷ், ஆல் ரவுண்டர் ஆன்டனி தாஸ் ஆகியோரில் ஒருவர் தனி ஆளாக ஆட்டத்தை மாற்றி அமைக்கும் திறமையுடையவர்கள். சேப்பாக்கம் அணி முதலில் பேட் செய்த நான்கு போட்டிகளில் 150க்கும் (154, 195,172, 178) மேல் குவித்துள்ளது. இதுவே அந்த அணியின் வலுவான பேட்டிங் வரிசைக்கு சான்று. பந்துவீச்சைப் பொருத்தவரை ஆர்.சதீஷ், அலெக்ஸாண்டர், ஆன்டனி தாஸ், தமிழ்குமரன், சாய் கிஷோர் தங்கள் பணியை கச்சிதமாக முடித்து வருகின்றனர். 

கோவை கிங்ஸ் #VeraLevelLaVarom @LycaKovaiKings

kovai%20kings.jpg


முதல் ஆட்டத்தில் முரளி விஜய் 24 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் அனிருத் சீதா ராம், சூர்ய பிரகாஷ் ஆரம்பத்தில் சுமாரான ஓபனிங் கொடுத்தனர். கேப்டன் சையத் முகமது இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. மிடில் ஆர்டரும் வலுவாக இல்லை. மதுரைக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே டாப் ஆர்டரில் இருந்து மிடில் ஆர்டர் வரை, எல்லாரும் கணிசமாக ரன் குவித்திருந்தனர். 

முதலில் பேட் செய்த அந்த போட்டியில்தான் கோவை அணி அதிகபட்சமாக 199 ரன்கள்  குவித்திருந்தது. மற்ற எந்த போட்டியிலும் 150 ரன்களைத் தாண்டவில்லை. சேஸிங்கின்போது  159, 170 ரன்களை எட்ட முடியாமல் இரண்டு முறை வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. எனவே, வலுவான பேட்டிங் வரிசையைப் பெற்றுள்ள சேப்பாக் அணி முதலில் பேட் செய்து, 150 ரன்களுக்கு மேல் குவிக்கும் பட்சத்தில் கோவை அணியின் பாடு திண்டாட்டமே. பந்துவீச்சு வரிசையில் ஹரிஷ்குமார், சிவகுமார், விக்னேஷ், முகமது ஆகியோர் சராசரியாக விக்கெட் வீழ்த்தி வருவது ஆறுதல். 

இவங்கதான் ‘டாப்’

ஏழு போட்டிகளின் முடிவில் திண்டுக்கல் அணியின் ஜெகதீசன் 338 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். தூத்துக்குடி அணியின் ஓபனர் கவுசிக் காந்தி 298 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்த தொடரில் முதல் சதம் அடித்த திருவள்ளூர் கேப்டன் பாபா அபராஜித் 293 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பவுலிங் வரிசையில் திண்டுக்கல் வீரர் முருகன் அஸ்வின் (12 விக்கெட்) முதலிடத்திலும், சேப்பாக் அணியின் ஆன்டனி தாஸ் (11), காரைக்குடி காளை அணியின் கணபதி சந்திரசேகர் (11) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/68405-tnpl-semi-final-preview.art

  • தொடங்கியவர்

டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் தூத்துக்குடி

 

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அந்த அணி தனது இறுதிச்சுற்றில் 38 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியைத் தோற்கடித்தது. திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிநவ் முகுந்த் 55 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 91 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 31 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 48 ரன்களும் குவித்தனர். திண்டுக்கல் தரப்பில் சன்னி குமார் சிங் 3 விக்கெட் எடுத்தார். பின்னர் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் 59, வெங்கட்ராமன் 40 ரன்கள் எடுத்தனர். தூத்துக்குடி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சூப்பர் கில்லீஸ்-கோவை மோதல்: சென்னையில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் 2-ஆவது அரையிறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸýம், கோவை கிங்ஸýம் மோதுகின்றன.

http://www.dinamani.com/

டி.என் பி.எல். கிரிக்கெட்: பைனலுக்கு முன்னேறியது சென்னை அணி
 
டி.என்.பி.எல்., பைனல்: தூத்துக்குடி - சென்னை அணிகள் நாளை பலப்பரீட்சை
  • தொடங்கியவர்

Tamil_News_large_1608708_318_219.jpg

டி.என் பி.எல். , கிரிக்கெட்: பைனலுக்கு முன்னேறியது சென்னை அணி

 

 

 

 

சென்னை: டி.என்.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வென்ற சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதி போட்டியில் தூத்துக்குடி அணியும் சென்னை அணியும் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், மற்றம் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

நல்ல துவக்கம்:

 

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் சற்று திணறி விக்கெட்களை இழந்தாலும் கோபிநாத், சத்திய மூர்த்தி சரவணன் ஆகியோரின் நிதானமான ஆட்டம் அணிக்கு ரன்களை குவித்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தியது.

 

மேலும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரும் பின்னடைவு இல்லாமல் அணியின் ரன்ரேட்களை ஓரளவு தக்க வைத்தனர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்திருந்தது. சத்தியமூர்த்தி சரவணன் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்திருந்தார்.

 

 

கோவை சொதப்பல்.

 

162 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கோவை அணி முதலில் நல்ல துவக்கத்துடன் ஆரம்பித்தாலும், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது ரன்களை குறைவு முக்கிய காரணமாக அமைந்தது. இறுதி நேரத்தில் தருண் சீனிவாஸ் மற்றும் அக்ஷய் சீனிவாசன் ஆகியோர் சற்று பேராராடி ரன் குவித்தாலும் வெற்றி பெற அது போதுமானதாக இல்லை, மேலும் இறுதி நேரத்தில் விக்கெட்கள் பறிபோனதும் கோவை அணி வெற்றி பெறும் வாய்ப்பை குறைத்தது. 20 ஓவர் முடிவில் கோவை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

நாளை பலப்பரிட்சை

 

முதல் அரையிறுதி போட்டியில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்று பைனலுக்கு தகுதிபெற்ற நிலையில் இன்றைய அரையிறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நாளை தூத்துக்குடி அணிக்கும் சென்னை அணிக்கு பைனல்ஸ் நடக்கிறது. இரு அணிகளும் வலுவான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் நிலையில் நாளைய போட்டி பலப்பரீட்சையாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1608708

  • தொடங்கியவர்

‘நம்ம பயலுக’ தூத்துக்குடி #TNPL சாம்பியன் 

 

hhhh.jpg


அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் மிரட்ட,  முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து கணேசமூர்த்தி பவுலிங்கில் அசத்த, சேப்பாக்கம் அணியை வீழ்த்தி, #tnpl சாம்பியன் பட்டத்தை வென்றது  தூத்துக்குடி அணி. 

ஒரு மாதமாக நெல்லை, நத்தம் மற்றும் சென்னையில் நடந்த, தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் ஃபைனல் சேப்பாக்கத்தில் 22,000 ரசிகர்கள் முன்னிலையில்  நடந்தது. எட்டு அணிகள் பங்கேற்ற டிஎன்பிஎல் தொடரின் முதல் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஃபைனலில், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் - டூட்டி (தூத்துக்குடி) பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.  தூத்துக்குடி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 
 
 ஆரம்பமே அமர்க்களம்:
கவுசிக் காந்தி, அபினவ் முகுந்த் ஓபனிங் இறங்கினர். சதீஷ் வீசிய முதல் ஓவரில் கவுசிக் காந்தி ஸ்ட்ரெய்ட் டிரைவ் மூலமும், அபினவ் முகுந்த் கவர் டிரைவ் மூலமும் பவுண்டரி அடித்தனர். அலெக்ஸாண்டர் வீசிய மூன்றாவது ஓவரி்ல் முதல் சிக்ஸரை பறக்க விட்டார் கவுசிக்.அஷ்வத் முகுந்தன்  ஓவரில் அபினவ் முகுந்த் 4 பவுண்டரி விரட்டி ‘வச்சு’ செஞ்சார். 

இந்த ஜோடியை பிரிக்க நினைத்து,  யோ மகேஷ் கையில் பந்தைக் கொடுத்தார் கேப்டன் சதீஷ். ஆனால் அந்த ஓவரில் கவுசிக் அட்டகாசமாக தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். அதேபோல ஆன்டனி தாஸ் பந்தில் அபினவ் தன் பங்குக்கு 2 பவுண்டரி விளாசினார். இதற்கிடையே கவுசிக் இந்த தொடரில் தன் மூன்றாவது அரை சதத்தையும்,  அபினவ் தன் இரண்டாவது  அரைசதத்தையும் பதிவு செய்தனர்.

அரைசதம் அடித்த பின் இருவரும் அதிரடிக்கு மாறினர். அலெக்சாண்டர் வீசிய 13வது ஓவரில் லாங் ஆனில் சிக்ஸர் பறக்க விட்ட அபினவ் முகுந்த், சாய் கிஷோர் பந்தில் இரண்டு பவுண்டரி விரட்ட சேப்பாக்கம் வீரர்கள் சோர்வடைந்தனர். ஒரு வழியாக 59 ரன்கள் எடுத்திருந்தபோது  கவுசிக் காந்தி ஆட்டமிழக்க, சேப்பாக்கம் வீரர்கள் ‘அப்பாடா’ என திருப்தி அடைந்தனர். கவுசிக்- அபினவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 132 (84) ரன்கள் எடுத்திருந்தது. 

கிளாசிக்  தினேஷ் கார்த்திக்: 
அடுத்து அபினவ் முகுந்த் உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஆன்டனி தாஸ் பந்தில்  கவர் டிரைவ் பவுண்டரி, அடுத்து ஒரு சிக்ஸர் விளாச அரங்கம் ஆர்ப்பரித்தது. அந்த உற்சாகத்துடன்  தொடர்ந்து தன் பிரத்யேக ஷாட்களால் கவர்ந்தார் தினேஷ் கார்த்திக். அதிலும் அஷ்வத் முகுந்தன் பந்தில் ஸ்ட்ரெய்ட் திசையில் பறக்க விட்ட சிக்ஸர், ஆன்டனி தாஸ் பந்தில் ஃபைன் லெக் திசையில் அடித்த சிக்ஸர் எல்லாம் அடடா ரகம்.

கண்டம் தப்பிய அபினவ்:
நீண்ட இடைவெளிக்குப் பின் பந்துவீச வந்தார் ‘வள்ளல்’ அஷ்வத் முகுந்தன். முதல் பந்தையே அபினவ் தூக்கி அடிக்க, அந்த ஈஸி கேட்ச்சை நழுவ விட்டார் அஷ்வத். அப்போது அபினவ் 76 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல யோ மகேஷ் வீசிய கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் கொடுத்த கேட்ச்சை தலைவன் சற்குணம் நழுவ விட, அடுத்த பந்தை சிக்ஸர் பறக்க விட்டு அரைசதம் கடந்தார் தினேஷ் கார்த்திக்.இருப்பினும் தினேஷ் கார்த்திக் 55 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் தூத்துக்குடி  215/ 2 ரன்கள் எடுத்தது. 

கணேச மூர்த்தி  ஹாட்ரிக்: 
சவாலான இலக்கை நோக்கி களம்புகுந்த சேப்பாக்கம் அணி, கணேசமூர்த்தி வீசிய முதல் ஓவரிலேயே  ஆட்டத்தை முடித்துக் கொண்டது. ஆம். சேப்பாக்கம் ரன் கணக்கை ஆரம்பிக்கும் முன்பே தலைவன் சற்குணம், கேப்டன் சதீஷ், கோபிநாத், சசிதேவ் அடுத்தடுத்து வெளியேறினர். ஹாட்ரிக் விக்கெட் எடுத்து நாயகனாக ஜோலித்தார் கணேசமூர்த்தி. 

அடுத்து வந்த யோ மகேஷ் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஏழு ஓவர் முடிந்தபோது மழை குறுக்கிட்டது. பின் ஆட்டம் தொடங்கியதும் கவ்ஜித் சுபாஷ் 8 ரன்னில் திருப்தி அடைந்தார். வசந்த் சரவணன் மட்டும் 30 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். முடிவில் தூத்துக்குடி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாயகன்களுக்கு பாராட்டு:
1986ல் சென்னையில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி டை ஆனது. வரலாற்று சிறப்புமிக்க் அந்த டெஸ்ட் நடந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை நினைவுபடுத்தும் வகையில் அந்த போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், டீன் ஜோன்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் ஆகியோர் இடைவேளையின்போது கவுரவிக்கப்பட்டனர். 

http://www.vikatan.com/news/sports/68529-tuti-patriots-is-the-first-tnpl-champion.art

  • தொடங்கியவர்

ஹாட்ரிக் சாதனை படைத்த பந்துவீச்சாளர்

ஹாட்ரிக் சாதனை படைத்த பந்துவீச்சாளர்

 
 
தூத்துக்குடி இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி, ஒரே ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் தலைவன் சற்குணம், கோபிநாத், சதீஷ், சசிதேவ் ஆகியோரின் விக்கெட்டுகளை சூறையாடி மிரள வைத்தார்.

இதில் மூன்று விக்கெட்டுகளை தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) வீழ்த்தியதும் அடங்கும். தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்த 2-வது பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி ஆவார். ஏற்கனவே கோவை கிங்ஸ் வீரர் சிவகுமார் தூத்துக்குடிக்கு எதிராக ´ஹாட்ரிக்´ சாதனை படைத்திருந்தார்.

இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் தலைவர் தினேஷ் கார்த்திக்கின் அரைசதத்தின் உதவியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை தோற்கடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிப்போட்டியிலும் இதே போன்று தினேஷ் கார்த்திக்கின் அரைசதத்தின் துணையுடன் வாகை சூடியிருக்கிறது.

நேற்றைய ஆட்டத்தை காண 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்கள் யாரும் கிடையாது. அப்படி இருந்தும் இறுதி சுற்று வரை முன்னேறி வியப்பூட்டியது. 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 60 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

http://tamil.adaderana.lk/news.php?nid=83720

  • தொடங்கியவர்

”டேய் மடோனோடா... மடோனா செபாஸ்டியன்”... சேப்பாக் கில்லீஸின் அலப்பறைகள் #Tnpl

IMG_5519.JPG

‘டேய் மடோனோடா... மடோனா செபாஸ்டியன்’ என அஷ்வத் முகுந்தன் கை விரல் காட்டிய திசையில் நோக்கினால், லிஃப்டில் ஏகாந்தமாக மிதந்து கொண்டிருந்தார் ‘பிரேமம்’ செலின். ச்சை... மிஸ் ஆயிடுச்சே... என்ற ஆதங்கம் அவர்கள் முகத்தில். 

சென்னையின் முக்கிய நட்சத்திர ஹோட்டல் லாபியில் இவர்களை வரிசையாக நிற்க வைத்து,நம் ஃபோட்டோகிராபர் விதவிதமாக கிளிக்கிக் கொண்டிருக்க,அவர்களோ செலின் உடன் செல்ஃபி எடுப்பதற்காக ஏங்கிக் கொண்டிருந்தனர் . 

‘பரவாயில்லை பாஸ் நீங்க ஃபைனல் வரைக்கும் வந்துட்டீங்க. இன்னொரு செலிபிரிட்டி உங்க கூட ஃபோட்டோ எடுக்க போட்டி போடுவாங்க’ என்றதும் ‘அத சொல்லுங்க முன்ன...’ என கட்டை விரலை உயர்த்திப் பிடித்து போஸ் கொடுத்தனர் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் வீரர்கள் எஸ்ஐ வாசுதேவன், பாஸ்கரன் ராகுல், அஷ்வத் முகுந்தன், ஜோயல் ஜோசப், சாய் கிஷோர்.

 ‘சொல்லுங்க பாஸ்.. நாங்க இப்ப என்ன பண்ணனும்’ என்றனர் கோரஷாக. ‘உங்களைப் பத்தி நீங்களே சொல்லுங்க’ என்றதும், முதல்ல அவர்கிட்ட இருந்து ஆரம்பிங்க...’ என எல்லோரும் ஏகமனதாக ஒருவரை கை காட்டினர்.

அவரோ சன்னமான குரலில், ‘‘என் பேரு எஸ்ஐ வாசுதேவன். ஊர் சேலம். ஸ்ட்ரீட் கிரிக்கெட்ல இருந்துதான் ஆரம்பிச்சேன். ஸ்கூல்ல இருந்து டிஸ்ட்ரிக்ட் செலக்ஷன் கூட்டிட்டு போனாங்க. ஃபர்ஸ்ட் டிஸ்ட்ரிக்ட், அப்பறம் ஸ்டேட் ஆடி இப்ப இங்க வந்தாச்சு’ என லீடு கொடுக்க, ஒவ்வொருவரும் கிரிக்கெட்டர் ஆன கதையை சொல்லத் தொடங்கினார். வாசுதேவன் தவிர்த்து மற்ற நால்வருக்கும் சொந்த ஊர் சென்னை. இப்போது அவர்கள் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஒன்று கூடியுள்ளனர். 


முதல்முறையாக இவர்கள் மீது ‘ஃபிளட் லைட்’ வெளிச்சமும், புகழ் வெளிச்சமும் ஒருசேர பாய்ந்துள்ளது. தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ததில் பசங்க ஏக குஷி. ‘வீட்டுல செம ஹேப்பி. எல்லாரும் மேட்ச் பாக்க வந்திருந்தாங்க’ என்றார் ஆல் ரவுண்டர் வாசுதேவன். 

‘எங்க வீட்டுல சொந்தக்காரங்ககிட்ட சொல்லி அமர்க்களம் பண்ணிட்டாங்க. சேப்பாக்கத்துல நடந்த முதல் மேட்ச்சை பாக்க, ஃபிரண்ட்ஸ், ஃபேமிலின்னு மொத்தம் 40 பேர் ஸ்டேடியம் வந்துட்டாங்க. இதுவே எங்களுக்கு பெரிய சப்போர்ட். டிஎன்பிஎல்-க்கு முன்னாடி இந்தளவு புகழ் வெளிச்சம் இல்லை. இப்ப வாய்ப்பு கிடைச்சிருக்கு. இது ரஞ்சி, ஐபிஎல் டீம்ல சேர்றதுக்கு நல்ல சான்ஸா இருக்கும்’ என நெகிழ்ந்தார் மாதவரத்தில் கிரிக்கெட் பால பாடம் பயின்ற ராகுல்.

‘எங்க வீட்லயும் செம ஹேப்பி. செலக்ட் ஆன உடனே பயங்கர ஹைப் கிரியேட் ஆச்சு. பயங்கர பிரஸ்ஸர்ல இருந்தோம். இப்ப என்ஜாய் பண்றோம். ஃபேஸ்புக்ல ரொம்ப ஃபிரெண்ட் ரிக்வஸ்ட் வருது. லைக்ஸ் எகிறுமில்ல” என்றார் முகுந்தன். 

‘இதுக்கு முன்னாடி எவ்வளவு பெர்ஃபார்ம் பண்ணாலும் பேப்பர்ல பேர் மட்டும்தான் வரும். இப்போ வெளி உலகத்துக்கு நம்ம முகம் தெரியும்.. வீட்டுலயும் ஹேப்பி’ என சொல்லும் ஜோயல், ஓட்டேரியைச் சேர்ந்தவர். 

‘‘நேத்து, ஃபோட்டோஷூட் போயிருந்தோம். எல்லாரும் வரிசையா போய், போட்டோ எடுத்துட்டு வாறாங்க. வாசு ஃபர்ஸ்ட் டைம் போனான். பவுலிங் போடுற மாதிரி பந்தை இப்டி சுத்துனான் பாருங்க, டம்முன்னு ஒன்னு வெடிச்சிருச்சு. லைட்டிங்ல நெருப்பு பத்திகிச்சு. அதுல ஒன் ஹவர் கட். அதுக்கு அப்புறம் ரெண்டு மூனு பேர் போனாங்க. அவங்க எல்லாம் கரெக்டா முடிச்சிட்டாங்க. திருப்பியும் வாசு பேட் எடுத்துட்டு போனாரு, அப்பவும் நெருப்பு பத்திகிச்சு.’’ என சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சொன்னார் அஷ்வத் முகுந்தன். உடனே கோரஸாக எல்லோரும் நெருப்புடா என கத்த, வாசு முகத்தில் ஃப்ளட் லைட் வெளிச்சம்.

இரு இரு நான் சொல்றேன்னு தொடர்ந்தார் சாய் கிஷோர். ‘‘ஃபர்ஸ்ட் நான் பேட் பண்ணேன். ‘ஆர்டர்ல என் பேரு வர்ல. நான் ஆல்ரவுண்டர்டா.. நான் போறேன்டான்’னு சொல்லி டயலாக் விட்டு போனார் வாசு. போய் நின்னதும். லெக் ஸ்டம்புக்கு அடுத்து, ரைட் ஆர்ம் ஓவர்ன்றாங்க, கேமரா டாமல்னு வெடிச்சிருச்சு. ஃபோட்டோ ஷூட்டே கேன்சல். திருப்பியும் இன்னிக்கு போறோம்’’ என வாசுவை பார்த்து சிரித்தார் கிஷோர். 

IMG_5539.JPG

 

அப்புறம் இன்னொரு மேட்டர். ‘‘ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல்ல ஆன்த்தம் லாஞ்ச் கிராண்ட்டா நடந்துச்சு. அசார், இர்ஃபான் பதான், ஜாகிர்கான், நெஹ்ரான்னு 25க்கும் மேல செலிபிரிட்டீஸ் வந்திருந்தாங்க. அவங்க பக்கத்துல நின்னு பேசுனது, ஃபோட்டோ எடுத்தது எங்களுக்கு பெரிய விஷயமா தெரிஞ்சது. அதுவும் நடிகைகள் பக்கத்துல நிக்கறப்போ சூப்பரா இருந்துச்சு’ என குஜாலானார் முகுந்தன்.

அப்போது இடைமறித்த சாய் கிஷோர் ‘‘அவங்க எல்லாம் செலிபிரிட்டி. ஆனா, அந்த ஷோவுல நாங்கதான் ஹீரோ. அது ஒரு நல்ல ஃபீல்’ என உருகினார். ‘ஒரு ஆக்ட்ரஸே வந்து உங்க கூட ஃபோட்டோ எடுக்கனும்னு கேட்டப்போ.. ம்ம்ம் ஓகேடா, நம்மளும்... ’ என, மேன் ஆஃப் தி சீரீஸ் வாங்கிய திருப்தி அடைந்தார் ராகுல். யார் அந்த நடிகை என்றதும், ‘வேதிகான்ற ஆக்ட்ரஸ்’ என முகுந்தன் பதில் சொன்னதுதுதான் தாமதம், ‘பார்றா.. வேதிகான்றவங்க... யாரோ அவங்கன்ற.. ரேஞ்சுல பில்டப் பண்றான் பாரு’ என கலாய்த்தார் ராகுல். 

‘இவன் சொல்றது ஜஸ்ட் ஃபிப்டி பெர்சன்ட். ரேம்ப் வாக்னு ஒன்னு வச்சாங்க பாருங்க. 13 ரஷ்யன் மாடல்ஸ்...’ என ஃபேஷன் ஷோ அனுபவத்தை ராகுல் தொடர முயன்றபோது, ‘13 இல்லைடா, 19 மாடல்ஸ்’ என அப்டேட் செய்தார் சாய் கிஷோர். ‘ம்ம்ம்ம் 19 மாடல்ஸ். அவங்க எல்லாருமே இன்டர்நேசனல் புரஃபொசனல் மாடல்ஸ். ஒவ்வொருத்தரும் எங்க கையப் பிடிச்சு வாக் போனதும், ஃபேஷன் ஷோ பத்தி சொல்லிக் கொடுத்ததும் அட அட அட. இதை எல்லாம் என் வாழ்க்கையில பாத்ததே இல்லை’ என முடிக்கும்போது அவர் முகத்தில் அவ்வளவு பிரகாசம். 

IMG_5568.JPG

 

ரேம்ப் வாக், போட்டோஷுட் எல்லாம் ஓகே. ட்ரெய்னிங் எப்படி இருக்கு. உங்க கோச் யாருன்னு கேட்டதும் டெக்னிகல் ரீதியாக பதில் வந்தது. 

‘எங்களுக்கு இந்தியன் கோச்சே போதுங்க. ஹேமங் பதானி. கோச்சுன்னு சொல்றதை விட அவர் எங்க ஃபிரண்ட். செம ஜாலி டைப். ஆஃப் தி ஃபீல்ட் நம்மளோட நம்மளா இருப்பாரு. ஆன் தி ஃபீல்ட் புரஃபொஷனலா இருப்பார். 3 மணி நேரம், பிராக்டீஸ் செஷன் அவரோடது’ என்றார் ஜோயல்.

‘மத்த டோர்னமென்ட்டுக்கு அவ்வளவு கேர் பண்ண மாட்டோம். பிராக்டிஸ் பண்ணாம நேர போயி விளையாடுவோம். இங்க அப்படி கிடையாது. காலையில பிராக்டீஸ், மத்தியானம் ஜிம், ஸ்விம்மிங், ஈவனிங் திருப்பியும் பிராக்டிஸ்னு கொல்றாங்க... தூங்க கூட டைம் இல்லை’ன்னு ஜோயல் சொன்னதை ஆமோதித்தார் வாசுதேவன்.

‘ஆக்சுவலி நிறைய நேரம் பிராக்டிஸ் பண்றோம். ஜிம் செசன்லாம் டெய்லி பண்றோம்.  ஃபிட்னஸ் ரொம்ப இம்ப்ரூவ் ஆயிருக்கு’ என வாசதேவன் சொன்னதும், ‘ஆமா, ஒரு வாரத்துலேய ஒபாமா ஆயிட்டான்’ என கலாய்த்தார் ராகுல் டிராவிட்டை ஆதர்ச நாயகனாக கருதும் முகுந்தன். 

முதல் முறையாக ஃப்ளட் லைட் வெளிச்சத்தில் ஆடுனது எப்படி இருந்துச்சுன்னு கேட்ட உடனே, ‘நான் சொல்றேன், நான் சொல்றேன்னு’ பாய்ந்தார் ராகுல். 

‘‘இதுக்கு முன்ன நாலாவது படிக்கும்போதுதான் நைட், டென்னிஸ் பால் மேட்ச் ஆடியிருக்கேன். அதுக்கப்பறம் இப்பதான் நைட் மேட்ச் ஆடுறேன். தூத்துக்குடிக்கு எதிரா சேப்பாக்கத்துல ஃபர்ஸ்ட் மேட்ச். 5 விக்கெட்டுக்கு 63 ரன்னு அடிச்சிருந்தப்ப நான் இறங்கறேன். கிரவுண்டுக்கு உள்ள போய் பாத்தா எல்லாம் மாயமா இருக்கு. எல்.பாலாஜி பவுலிங். அப்பதான் எங்க கேப்டன் சதீஷ் அவுட்டானாரு. அவரும் ஃபர்ஸ்ட் பால் ஜீரோ. அதுக்கப்புறம் நான் போறேன். சத்தியமா சொல்றேன் அட்மாஸ்பியர் செம்ம்ம்ம்ம டிஃபரன்டா இருந்தது. கிரவுட் ஒரே சத்தம். 

அவர் (பாலாஜி) ஃபீல்ட் செட் பண்ணது, ஓடி வந்தது இப்படி ஒவ்வொரு செகண்டும், நெருக்கடியா இருந்துச்சு. ஒவ்வொரு நொடி கடக்கவும் ரொம்ப நேரம் ஆனது மாதிரி தெரிஞ்சது’ என, ராகுல் விளக்க விளக்க, அதற்கேற்ப ‘டுப்டுப் டுப்டுப்’ என சவுண்ட் எஃபெக்ட் கொடுத்தார் முகுந்தன். 

chepauk.jpg

‘அந்த கிரவுட், கேமரா, ஃபிளட் லைட் வெளிச்சம் இதையெல்லாம் பாத்து கண்டிப்பா என்னால கான்சென்ட்ரேட் பண்ண முடியலை. அவர் ஸ்டெம்ப்ல போட்டாரு. பாலை விட்டு நடந்து வந்துகினே இருக்கேன். சுத்தி நடக்கிறது ஒன்னுமே தெரியலை. கொஞ்சம் விட்டிருந்தா ஆபனன்ட் சைட்ல போய் உக்காந்திருப்பேன்’ என்றார் ராகுல். 

‘தலைவர் அவுட்டாகி வந்தப்ப டிரெஸ்ஸிங் ரூம்ல எந்த மாதிரி சிச்சுவேசன் இருந்துச்சு தெரியுமா... நீங்க யாரு.. இது உங்க வொய்பா... அந்த மாதிரி நிலைமையிலதான் இருந்தாரு’ என முகுந்தன் கலாய்க்க, ஆமாம் என ஆமோதித்தார் ராகுல். 

‘இதுக்கு முன்ன இப்டி அனுபவம் இருந்ததே இல்லை. செம ஃபிரஷ்ஷா இருந்தது? என அவர் முடிக்கும் முன், ‘டேய் ஃபிரஷ்ஷா இருந்துச்சா ஏண்டா...?’ என மற்றவர்கள் சிரிக்க, ‘அதுக்கு முன்னாடி இப்படி இருந்ததே இல்லைன்னு சொல்ல வந்தேன்டா...’ என ராகுல் சமாளித்தார். அடுத்த மேட்ச் எப்படி இருந்தது என கேட்டதும், ‘அடுத்த மேட்ச்தான் ஆடவே இல்லையே’ என்றார் அப்பாவியாக. ‘ஆமா, டக் அவுட் ஆயிட்டா, தொடர்ந்து ஆட விடுவாங்க பாரு’ என நக்கல் அடித்தனர் மற்றவர்கள். 

‘‘ஃபர்ஸ்ட் பால் போடுறப்ப எல்லாம் செம பிரஸ்ஸரா இருந்துச்சு’ என வாசுதேவன் ஆரம்பிக்கும் முன்பே, ‘ஆமா மொத பாலே ஃபோர் வேற குடுத்துட்டாப்ல’ என்றார் ராகுல். நடுவே குறுக்கிட்ட ஜோயல், ‘பால் போடும் போது இல்லை. பஸ்ல போகும்போதே அவனுக்கு பிரஸ்ஸர் ஏறிடுச்சு. கண்ல இருந்து லைட்டா தண்ணி வருது. அதை மறைக்க கண்ணாடி போட்டுகிட்டான். டேய் பயப்படாதடா பாத்து ஆடுறான்னு தேத்தி விட்டோம்’ என்றார். 

‘‘கிரவுட் வேற ஃபுல் சவுண்ட். கான்சன்ட்ரேட்டே பண்ண முடியலை. மத்த மேட்ச்ல எல்லாம், என்கரேஜ் பண்ணி விளையாடுவோம். எப்பவுமே மேட்ச்ல இருப்போம். இப்ப அப்டி இல்லை. நம்ம எங்கயோ இருக்குற மாதிரி இருக்கும், மேட்ச் எங்கயோ நடக்குற மாதிரி இருக்கும். ஃபோகஸ் நிறையா இருந்தாதான் கான்சென்ட்ரேட் பண்ணி ஆட முடியும்’ என்பது தோனியை ரோல் மாடலாக கருதும் வாசுதேவன் வாதம். 

‘நாங்க பொதுவா த்ரி டே மேட்ச்சுக்குத்தான் பிராக்டிஸ் பண்ணி இருப்போம். டி20க்கு தனியா பிராக்டிஸ் பண்ணது கம்மிதான். மைண்ட் செட் மாத்துறதுதான் பெரிய சேலஞ்சா இருக்கு. ஃபர்ஸ்ட் டிவிஷன்ல எல்லாம் பாளையம்பட்டி டிராபி அடிக்கிறதுதான் பெரிய விஷயம். அதுக்கேத்த மாதிரி பிராக்டிஸ் பண்ணிட்டு திடீர்னு டி20க்கு மாறுவது சேலஞ்சிங்கா இருக்கு’ என முடித்தார் சாய் கிஷோர்.

இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. உங்களால முடியாதா? கலக்குங்க பாய்ஸ்!

http://www.vikatan.com/news/sports/68533-a-chat-with-chepauk-super-gillies-players.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.