Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி எங்கு கிடைத்தது தெரியுமா?? #500testsofIndia

Featured Replies

இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி எங்கு கிடைத்தது தெரியுமா?? #500testsofIndia

BeFunky%20Collage.jpg

வரும் 22 ஆம் தேதி கான்பூரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது இந்திய அணி. இது இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி.  1932 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில்  பங்கேற்க  ஆரம்பித்தது  இந்தியா.  84 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?  படங்கள், தகவலுடன் ஒரு  பிளாஷ்பேக் இங்கே ...

First-Test-Match-19321.jpg

1.  முதல் டெஸ்ட் :-

1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆடியது இந்திய அணி. முதல் டெஸ்ட் நடந்தது இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில். ஆம். அங்கிருந்து தான் இந்திய அணி தனது பயணத்தை துவக்கியது.  இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. ஜூன் மாதம் 25,27,28 ஆகிய தேதிகளில் மூன்று நாள் டெஸ்ட் போட்டியாக நடந்தது. நடுவுல எங்கப்பா 26 ஆம் தேதியை காணோம் என தேடுகிறீர்களா? அப்போதெல்லாம் மேட்ச் ஆரம்பித்து இரண்டாவது நாள் டெஸ்ட்  ஆடும் வீரர்களுக்கு லீவு உண்டு.

 ஜூன் 26 ஆம் தேதி ஞாயிற்று கிழமை வேறு என்பதால் லீவு விட்டு விட்டார்கள். சரி மேட்ச் என்னாச்சு? இந்தியா 158 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த மேட்சில்  இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. இந்தியா தான் விளையாடிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு பவுண்டரி கூட அடிக்க வில்லை. ஆனால் ஒரே ஒரு சிக்ஸர்  அடித்திருந்தது. 

 

 

 

2. தொடர் தோல்விகள்:-

1932-1946  ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியுடன் மட்டும்தான் இந்தியா டெஸ்ட் போட்டி விளையாடிக் கொண்டிருந்தது. இந்த 14 ஆண்டு கால இடைவெளியில் வெறும் பத்து போட்டிகளில் தான் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெற வில்லை. 1947-48 சீஸனில் முதன் முறையாக இந்தியாவும்  ஆஸ்திரேலியாவும் மோதின. இந்திய அணி ஆஸ்திரேலிய  நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இந்தியா நான்கில் தோற்று தொடரை இழந்தது. 1948 - 49 சீஸனில் முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் விளையாட ஆரம்பித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு டெஸ்ட் டிரா ஆனது. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் வெல்ல, அந்த தொடரும் இந்தியாவுக்கு அம்பேல். 

india-s-first-test-victory1.jpg

3.  முதல் வெற்றி :-

டெஸ்ட் விளையாட  ஆரம்பித்து 20 ஆண்டுகள் கழித்து தான் இந்தியா முதல் வெற்றியை சுவைத்தது. 1952  ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக, இந்தியா தனது 25வது டெஸ்ட் போட்டியை ஆடியது.  இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  இந்தியா. 

இந்தியா சார்பில் பங்கஜ் ராய், பாலி உமரிக்கர் இருவரும் சதம் அடித்தார்கள்.  வினூ மங்கட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். மேட்ச் எங்கே நடந்தது தெரியமா ? நம்ம சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தான். கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியின் முதல் வெற்றி அமைந்தது சென்னையில் என்பது வரலாற்றுச் சிறப்பு. 

4. ரோலர் கோஸ்டர் பயணம் : -

இந்தியா முதல் டெஸ்ட் போட்டியை  வென்றதற்கு பிறகு தான் இந்திய மக்கள் இந்திய அணியை கவனிக்க ஆரம்பித்தார்கள். பத்திரிகைகளில் கிரிக்கெட் போட்டி குறித்த அப்டேட்ஸ்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தது. 1952 -1956 வரையிலான காலகட்டத்தில் விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் இரண்டை மட்டும் தோற்றது இந்திய அணி, ஆனால் அதற்கடுத்த மூன்றாண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனை காலகட்டமாக இருந்தது. 16 டெஸ்ட் போட்டியில் 12 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. 1959-1961 வரையிலான காலகட்டத்தில்  விளையாடிய 14 டெஸ்ட் போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றது. ஒன்றில் மட்டுமே தோற்றது. இந்த சீசனில் தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளை இந்திய அணி டிரா செய்தது. இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 

 

 

 

 

5.  வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் : -

டெஸ்ட் உலகில் இந்தியாவை வெல்வது கடினம் என்ற சூழ்நிலை மெல்ல மெல்ல உருவாகிக்கொண்டிருந்த வேலையில், புயலென புறப்பட்டது வெஸ்ட் இண்டீஸ். இந்தியா  வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது விளையாடிய ஐந்து  டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவை நையப்புடைத்தது. பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து இங்கேயும் இந்தியாவை தோற்கடித்தது. அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ்  ராஜ்ஜியம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. 

 

 

 

 

6.  கவாஸ்கர், கபில் தேவ் வரவு : -

1971 ஆம் ஆண்டு  ஃபோர்ட் ஆஃப் ஸ்பெயினில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சுனில் கவாஸ்கர். முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து மிரளவைத்தார். இந்தியா அந்த மேட்சை வென்றது. கவாஸ்கரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மொஹிந்தர் அமர்நாத், கபிலதேவ், ரவி சாஸ்திரி, பி.எஸ்.சந்து, வெங்கர்சர்க்கார்,  கிர்மானி என நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தார்கள். 1983 உலகக்கோப்பையை இந்தியா வெல்லவே, பட்டி தொட்டியெங்கும் கிரிக்கெட் போய்ச் சேர ஆரம்பித்தது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் ரேடியோ வர்ணனை கேட்பதையே பொழுது போக்காக வைத்திருந்தனர் மக்கள். 

7. 'டை' யான  டெஸ்ட் போட்டி :-

சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 18-22 வரை நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 574 ரன்களை குவித்தது. ஆஸி கேப்டன் டீன் ஜோன்ஸ் இரட்டைச் சதமும், ஆலன் பார்டர், டேவிட் பூன்  சதமும் விளாசினர்.  இந்திய அணியில் ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன்  அரை சதம் அடிக்க, கபில்தேவ் அதிரடியாக ஒரு சதம் விளாசினார். கபிலதேவ் புண்ணியத்தால் இந்தியா ஃபாலோ  ஆனை தவிர்த்து மட்டுமில்லாமல் 397  ரன்களையும் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 170   ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது  இந்திய அணி. ஆனால் 347 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து வரலாற்றில் முதன் முறையாக  இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டி டை ஆனது.

 

 

 

8. உலகை கவனிக்க வைத்த உலக நாயகன் :- 

கிரிக்கெட்டின் உலக நாயகன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளுக்கும் கிரிக்கெட்டை கொண்டு சேர்ந்ததில் சச்சினின் பங்கு அளவிடமுடியாதது. 1989 ஆம் ஆண்டு கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார் சச்சின். 16 வயதில் சிங்கமென புறப்பட்ட சச்சின் டெண்டுல்கரை எந்த பவுலராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

 

 

 

இந்திய வீரர்களுக்கு அயல்நாட்டு மண் என்றாலே அலர்ஜி என்றிருந்த காலகட்டத்தில், கிரிக்கெட்டின்  ஆல் டைம் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் நிரம்பியிருந்த (1990 -2000) காலகட்டத்தில், அத்தனை பந்துவீச்சாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார். சச்சின் விக்கெட்டை எடுத்தால் தான் இந்தியாவை ஜெயிக்க முடியும் என்ற நிலையை கொண்டு வந்தார். இந்தியா அயல் மண்ணில் மெல்ல மெல்ல தலைநிமிர ஆரம்பித்து வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தது. 1992 இல் ஆரம்பித்து 1996 ஆம் ஆண்டு வரை சச்சினின் மாயாஜாலத்தால் விளையாடிய  22 டெஸ்ட் போட்டிகளில் இரண்டை மட்டுமே தோற்றது இந்தியா. 12 போட்டிகளை வென்று ஆச்சர்யப்படுத்தியது.

9.  கங்குலி  கேப்டன்சியில் இந்தியாவின் எழுச்சி :- 

 

 

 

கங்குலி இந்திய அணிக்கு கேப்டனான பிறகு இந்திய அணி புலிப்பாய்ச்சலை நிகழ்த்தியது. அதிரடி ஷேவாக், ஆக்ரோஷ கங்குலி, சுவர் டிராவிட், பிளாக்கத்தான் லட்சுமணன், சத மன்னன் சச்சின், சுழல் சிங்கம் ஹர்பஜன், கும்ளே என ஆடும் லெவனில் அத்தனை பேருமே நட்சத்திர வீரர்களாக உருமாறிய காலகட்டம் (2000 -2007). ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  கொல்கத்தா  டெஸ்ட் (2001) இன்றளவும் வரலாற்றின் சிறந்த டெஸ்ட் போட்டியாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஷேவாக் அடுத்தடுத்து அடித்த முச்சதம், அவரை வேற லெவல் பேட்ஸ்மேன் என உலகுக்குக் காட்டியது. 

10  தோனி தலைமையில் இந்தியாவின் பொற்காலம் ;- 

2007 -2011 வரையிலான  காலகட்டம் இந்திய அணிக்கு பொற்காலம். டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியது. உலகின் அத்தனை அணிகளையும் இந்தியா மிரள வைத்த தருணம் இது. இந்த காலகட்டத்தில் ஆடிய 47 டெஸ்ட் போட்டிகளில் 22 டெஸ்ட் போட்டியை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி. கங்குலி தலைமையில் உழைத்த இந்திய அணி வீரர்களுக்கு முழு பலனும் கிடைத்தது இந்த காலகட்டத்தில் தான். 

11.   டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் வீழ்ச்சி.

2011 மத்தியில் இருந்து 2015 மத்தி வரை இந்திய அணி கடும் சரிவை கண்டது. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா  என சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பெரும் அடி விழுந்தது. இந்தியாவின்  ஜாம்பவான் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்த ஓய்வு பெற, தட்டுத்தடுமாறியது இந்திய அணி. கங்குலியின் கேப்டன்சியில் உருவான அணியால் புகழின் உச்சத்தை தொட்ட தோனிக்கு இரண்டாம் பாதி காலகட்டம் மிகுந்த சோதனையாக அமைந்தது. பதினைந்து ஆண்டுகால கட்டமைப்பு திடீரென ஆட்டம் கண்ட சூழ்நிலையில், மீண்டும் மெல்ல மெல்ல இந்திய அணியை கட்டமைத்தார் தோனி. இந்தியாவுக்கும், தோனிக்கும் நேர்ந்த இந்த சோதனை காலகட்டத்தில் கொஞ்சம் சீக்கிரமாகவே மீண்டது இந்திய அணி. 

virat-kohli-victory-colombo.jpg

12.  இளம் வீரர்களின் எழுச்சி : -

1990 களின் இறுதியில் இந்திய அணி எப்படி எழுச்சி பெற்றதோ, அது போன்றதொரு எழுச்சியை மீண்டும் அடைந்திருக்கிறது இந்திய அணி. விராட் கோஹ்லியின் தலைமையில் முற்றிலும் மாறுபட்ட ஃபார்முலாவில் அசரடிக்கும் வெற்றிகளை பெற்று வருகிறது. இலங்கை, தென்னாபிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது கடைசியாக ஆடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி, ஆறு போட்டியில் வெற்றி என பாசிட்டிவாக இருக்கிறது இந்திய அணி. "வெற்றிக்காக ஆடு" என்ற கோஹ்லியின் அக்ரஸிவ் மனப்பான்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில்  இந்தியா இன்னும் உச்சங்களை தொடும் என எதிர்ப்பார்க்கலாம். 

கொசுறு தகவல் : - இந்தியா  தனது 500 வது டெஸ்ட்போட்டியை விளையாடவுள்ளதை தொடர்ந்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்கள் அனைவரையும் அழைத்து போட்டி தொடங்குவதற்கு முன்  கவுரவிக்க முயற்சி செய்து வருகிறது பி.சி.சி.ஐ. குறிப்பு - 500 டெஸ்ட் போட்டிகளில், இந்திய வீரர்கள் படைத்த சாதனைத் தொகுப்பை   திங்களன்று விகடன்.காமில் பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/sports/68477-500th-test-match-for-india.art

  • தொடங்கியவர்

500-வது டெஸ்ட்டில் இந்தியா... 10 பெருமித தருணங்கள்!

crickk.jpg

வரவுள்ள  வியாழக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா ஆடப்போகும் டெஸ்ட், இந்திய அணியை பொருத்தவரை ஐநூறாவது டெஸ்ட் ஆகும். 1932 லிருந்து சுமார் 84 ஆண்டுகாலம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில்  பயணப்பட்டிருக்கிறது. இதில் வெற்றிகள், தோல்விகள் எக்கச்சக்கம். பல காலகட்டங்களில் பல வீரர்கள் இந்திய அணியை தோளில் சுமந்திருக்கிறார்கள். ஒவ்வொரு இந்திய ஜாம்பாவான்களின்  பெருஞ் சாதனைகளின் தொகுப்பே இந்திய அணிக்கு டெஸ்ட் அரங்கில் மகுடம் சூட்டியிருக்கிறது.  பத்து முக்கியமான  சாதனைகள் இங்கே :-

இந்திய அணியின் டெஸ்ட் பயணம் : - 

இதுவரை 499 டெஸ்ட் போட்டி விளையாடியிருக்கிறது இந்திய அணி. இதில் 129 போட்டியில் வெற்றியும், 157 போட்டியில் தோல்வியும், ஒரு போட்டி டையிலும், 212 போட்டிகள் டிராவிலும் முடிந்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 25.95. 

தொடர் சாதனைகள் : -

டெஸ்ட் விளையாடும் அத்தனை நாடுகளுக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றுள்ள  பெருமை இந்தியாவுக்கு உண்டு. பாகிஸ்தான் அணிக்கு எதிராகத்தான் இந்திய அணி முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது. இது நடந்தது 1952 ஆம் ஆண்டு.  அயல் மண்ணை பொறுத்தவரை இதுவரை ஆஸ்திரேலிய மண்ணிலும், தென்னாபிரிக்கா மண்ணிலும் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதே கிடையாது என்பது சோகமான  விஷயம். 

ச்சின் அபாரம் : -

இந்தியா இதுவரை 499 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளது. இந்திய வீரர்கள் தரப்பில் அதிக டெஸ்ட் போட்டி விளையாடியுள்ளது சச்சின் தான். அதிக ஆண்டுகள் இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடிய வீரரும் சச்சின் டெண்டுல்கர் தான்.  84 வருடங்கள் இந்தியா டெஸ்ட் போட்டிகள் ஆடியதில் சுமார் 40% போட்டிகளில் சச்சினும் விளையாடியிருக்கிறார். 

total%20matches.JPG

இந்தியா vs மற்ற அணிகள் : -

இங்கிலாந்து அணியுடன்  தான் இதுவரை அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்கிறது இந்திய அணி. பாகிஸ்தானுடன் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் தான் இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் மிகவும் குறைவு. ஒவ்வொரு அணிக்கும்  எதிராக இந்திய அணி ஆடிய டெஸ்ட் போட்டிகள் மற்றும் அவற்றின் வெற்றி சதவிகித விவரம் இங்கே... 

யார் யார்  எவ்வளவு சதம்

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணிக்குள் நுழைவது சாதாரண விஷயமில்லை. இந்தியாவில் இதுவரை 285 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியிருக்கின்றனர். ஆனால் இதில் வெறும் இருவர் மட்டும் தான் முப்பது சதங்கள் அடித்திருக்கின்றனர். இந்திய அணி சார்பாக விளையாடி சதம் எடுத்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதை கீழ்கண்ட பட்டியல் காட்டுகிறது. ஆனால் இதில் எளிதில் முறியடிக்கவே முடியாத அளவுக்கு ஐம்பது சத்தங்களும் அதிகமாக அடித்து உச்சத்தில் இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். உலகளவில் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையும் சச்சினையே சேரும். 

centuries.JPG

அபார வெற்றிகள் : -

கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக டில்லி டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. மாபெரும் பிளக்கத்தான் இன்னிங்ஸ் விளையாடி ஹாசிம் அம்லாவும், டிவில்லியர்ஸும் பிரம்மிக்க வைத்த போட்டி இது. இந்த போட்டியில் இந்தியா 337 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ரன்கள் வித்தியாசத்தில் வெல்வதில் இது தான் அதிக பட்சம். இன்னிங்ஸ் வெற்றிகளை பொறுத்தவரை வங்கதேச அணியை 2007 ஆம் ஆண்டு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. அது தான் அதிகபட்ச இன்னிங்ஸ் வெற்றி. 

total%20wickets.JPG

கும்ப்ளே சாதனை : -

உலக அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கும்ப்ளே தான் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். முதல் பத்து இடத்துக்குள்  இருப்பவர்களில் இஷாந்த் ஷர்மாவும், ரவிச்சந்திர அஷ்வினும் மட்டுமே தற்போது டெஸ்ட் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

'வீரு' மேஜிக் : - 

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரிய இலக்கணத்தை உடைத்து விளையாடியவர் வீரேந்திர ஷேவாக். இந்திய அணி சார்பாக முச்சதம் அடித்த ஒரே வீரர் ஷேவாக் மட்டுமே. அதே சமயம் இரண்டு முச்சதம் அடித்து ஷேவாக் பிரம்மிக்க வைத்திருக்கிறார். சென்னையில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக  ஷேவாக் எடுத்த 319 ரன்கள் தான் இந்திய வீரர்  ஒருவர்  டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச  ரன்னாகும். 

அதிக  ரன்கள் :- 

இந்த பட்டியலிலும் சச்சின், டிராவிட் தான் முன்னிலை வகிக்கின்றனர். இதுவரை மூன்று வீரர்கள் இந்தியா சார்பாக விளையாடி பத்தாயிரம் ரன்களை கடந்துள்ளனர். வீரேந்திர ஷேவாக் தான் இந்தியா சார்பாக அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இது எல்லோருக்குமே சர்ப்பரைஸ் தான். 

highest%20run.JPG

நான்காவது இன்னிங்ஸ் நாயகர்கள் : -

டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸ் ஆடுவது என்பது மிக மிக கஷ்டமான காரியம். இந்தியாவை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர்  தான்   இதுவரை அதிக முறை நான்காவது இன்னிங்ஸ் விளையாடியிருக்கிறார். நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையும் சச்சினுக்கே உண்டு. கவாஸ்கர் தான் இந்திய அணி சார்பாக விளையாடியவர்களில் நான்காவது இன்னிங்சில் அதிக சராசரியை வைத்திருக்கிறார். கவாஸ்கரை தொடர்ந்து டிராவிட், வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோர் நான்காவது இன்னிங்ஸில் அதிக சராசரி வைத்திருக்கிறார்கள். 

14vvs-rd1.jpg

சிறந்த பந்துவீச்சு : -

1999 ஆம் ஆண்டு டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் கும்ளே. இதுவே இந்திய வீரர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு.  ஒரு இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட் வீழ்த்தியவர்கள் லிஸ்டிலும் முதல் இடத்தில் இருப்பது கும்ளே தான். சுமார் 35 முறை இந்தச் சாதனை செய்திருக்கிறார். கும்ளேவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங், கபில்தேவ், ரவிச்சந்திர அஷ்வின் இருக்கின்றனர்.

http://www.vikatan.com/news/sports/68573-10-best-records-of-indian-cricket-team-in-test-matches-500thtest.art

  • தொடங்கியவர்

500-வது டெஸ்டில் கால்பதிக்கும் இந்திய அணி: சி.கே.நாயுடு முதல் விராட் கோலி வரை ஓர் அலசல்

 

 
1932 -ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பந்து வீசிய சி.கே.நாயுடு.
1932 -ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பந்து வீசிய சி.கே.நாயுடு.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வரும் 22-ம் தேதி கான்பூர் கீரின்பார்க் மைதா னத்தில் டெஸ்ட் போட்டியில் விளை யாட உள்ளது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டி. 1932-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக் கெட்டில் பங்கேற்க ஆரம்பித்த இந்தியா 84 வருட கிரிக்கெட் பயணத் தில் உச்சங்களையும் தொட்டது. அதேவேளையில் அதளபாதாளத் திலும் விழுந்தது. அதுபற்றிய ஒரு சிறிய தொகுப்பு.

அறிமுக போட்டி

1932 -ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக சி.கே.நாயுடு தலைமையில் டெஸ்டில் காலடி எடுத்துவைத்தது இந்திய அணி. கிரிக்கெட்டின் சொர்க்கபுரியாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி 3 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டது.

இந்த ஆட்டத்தில் இந்தியா 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த ஆட்டத்தின் இரு இன்னிங்ஸிலும் இந்திய வீரர்கள் ஒருவர் கூட பவுண்டரி அடிக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு சிக்ஸர் அடித்திருந்தது. இதை 9-வது வீரராக களமிறங்கிய ரிச்சர்டு பிரவுன் அடித்திருந்தார்.

துரத்திய தோல்விகள்

1932-1946-ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியுடன் மட்டும் தான் இந்தியா டெஸ்ட் போட்டி களில் விளையாடிக் கொண்டி ருந்தது. இந்த 14 ஆண்டு கால இடைவெளியில் இரு அணிகள் இடையே 10 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இதில் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை.

1947-48-ம் ஆண்டு முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-0 என இழந்தது. 1948 - 49-ம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு ஆட்டங்கள் டிரா ஆனது. சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற அந்த தொடரிலும் வேதனையே ஏற்பட்டது.

முதல் வெற்றிக் கனி

20 ஆண்டுகள் கழித்து தான் இந்தியா முதல் வெற்றிக் கனியை பறித்தது. 1952-ல் ஹஸாரே தலைமையில் இந்தியா தனது 25-வது டெஸ்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துடன் மோதியது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இந்தியா சார்பில் பங்கஜ் ராய், பாலி உமரிக்கர் இருவரும் சதம் அடித்தார்கள். வினூ மங்கட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் முதல் வெற்றி சென்னையில் அமைந்தது என்பது வரலாற்றுச் சிறப்பு.

ஏற்ற, இறக்கங்கள்

முதல் வெற்றிக்கு பின்னர்தான் இந்திய அணியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது. 1952 -1956 வரையிலான காலக்கட்டத்தில் 20 போட்டிகளில் இரண்டில் மட்டும் தோற்றது இந்திய அணி. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் 16 போட்டிகளில் 12 தோல்விகளை இந்திய அணி சந்தித்தது.

இதையடுத்து 1959-1961 வரை யிலான காலகட்டத்தில் விளை யாடிய 14 டெஸ்ட் போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது. இந்த சீசனில் தொடர்ச் சியாக ஒன்பது போட்டிகளை இந்திய அணி டிரா செய்தது. இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப் படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் ஆதிக்கம்

டெஸ்ட் உலகில் இந்தியாவை வெல்வது கடினம் என்ற சூழ் நிலை உருவாகிய நிலையில் மேற்கிந்தியத் தீவுகளின் வடிவில் ஆபத்து வந்தது. மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடிய இந்திய அணி 5 ஆட்டத்திலும் படுதோல்வி களை சந்தித்தது. இந்த தொடர் முடிந்த வேகத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த மேற்கிந் தியத் தீவுகள் அணி சொந்த மண்ணிலும் இந்திய அணியை அலறவைத்தது. இந்த வெற்றி களுக்கு பின்னர் கால் நூற்றாண்டு களுகு மேற்கிந்தியத் தீவுகளின் ராஜ்ஜியம் தொடர்ந்தது.

சுழல் மாயாவிகள்

1962-1883 காலக்கட்டங்களில் இந்திய அணி சுழற்பந்து வீச்சால் இந்திய துணைக்கண்ட போட்டி களில் எதிரணியை சுழலால் மிரட்டியது. பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர், எரிப்பாலி பிரசன்னா, ஸ்ரீநிவாஸ் வெங்கட் ராகவன் ஆகியோர் சுழலில் மாயாஜாலம் காட்டினர். இவர்கள் நால்வரும் இணைந்து 231 போட்டி களில் மொத்தம் 853 விக்கெட்கள் சாய்த்தனர்.

கவாஸ்கர், கபில் தேவ்

1971-ல் போர்ட் ஆப் ஸ்பெயினில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சுனில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடிக்க இந்தியா வெற்றி பெற்றது. கவாஸ்கரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மொஹிந்தர் அமர்நாத், கபில்தேவ், ரவி சாஸ்திரி, பி.எஸ்.சந்து, வெங்சர்க்கார், கிர்மானி என நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தார்கள்.

1983 உலகக்கோப்பையை இந்தியா வென்றதும், இந்திய ரசிகர் களை கிரிக்கெட் ஆட்கொண்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் ரேடியோ வர்ணனையில் கேட்ட ரசிகனின் காதுகளில் கிரிக்கெட் நாமம் புகுந்தது.

சேப்பாக்கத்தில் ‘டை'

1986-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியா-ஆஸ்தி ரேலியா அணிகள் முதல் டெஸ்டில் மோதின. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 574 ரன்கள் குவித்தது. ஆஸி. கேப்டன் டீன் ஜோன்ஸ் இரட்டைச் சதமும், ஆலன் பார்டர், டேவிட் பூன் சதமும் விளாசினர்.

இந்திய அணியில் காந்த், ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன் அரை சதம் அடிக்க, கபில்தேவ் அதிரடியாக சதம் விளாசினார். இதனால் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது மட்டுமில்லாமல் 397 ரன்களையும் குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 170 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 347 ரன்கள் எடுத்தது. இதனால் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டி டை ஆனது.

உலக நாயகன்

உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை தலை நிமிர வைத்ததில் சச்சின் டெண்டுல்கருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளுக்கும் கிரிக்கெட்டை கொண்டு சேர்த்தார் சச்சின். 1989-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார் சச்சின். 16 வயதிலேயே புயலாக உருவெடுத்த சச்சின் சுழன்றடித்ததில் சாயாத பந்து வீச்சாளர்களே இல்லை.

எழுச்சி நாயகன்

கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணியை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச்சென்றார். 2000-2007 வரை சேவக், டிராவிட், லட்சுமணன், சச்சின், ஹர்பஜன் சிங், கும்ப்ளே என விளையாடும் லெவனில் நட்சத்திர பட்டாளமே இருந்தது. பேட்டிங்கில் சச்சின், கங்குலி, டிராவிட் லட்சுமண் ஆகியோரை கொண்ட நால்வர் கூட்டணி எதிரணிக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்தது.

2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் இன்ற ளவும் வரலாற்றின் சிறந்த டெஸ்ட் போட்டியாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சேவக் அடுத் தடுத்து அடித்த முச்சதம் பிரமிக்க வைத்தது.

பொற்காலம்

2007-2011 வரையிலான காலக் கட்டம் இந்திய அணிக்கு பொற்காலம். கங்குலியால் விதைக்கப்பட்ட இந்திய அணி வெற்றியை அறுவடை செய்தது. டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியது. உலகின் அத்தனை அணிகளையும் இந்தியா மிரள வைத்தது. இந்த காலக்கட்டத்தில் 47 போட்டிகளில் 22-ல் வெற்றி பெற்று வரலாறு படைத்தது இந்திய அணி.

2011-ம் ஆண்டு மத்தியில் இருந்து 2015 வரை இந்திய அணி கடும் சரிவை கண்டது. ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற தோனிக்கு சோதனையாக அமைந்தது. இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பெரும் உதை வாங்கியது. தொடர் தோல்விகளால் 2014-ம் ஆண்டு தோனி திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதுவும் ஆஸ்திரேலிய பயணத்தின் கடைசி கட்டத்தில். நட்டாற்றில் விட்ட கதையாக அணியை கையில் எடுத்தார் விராட் கோலி.

இளம் வீரர்களின் எழுச்சி

விராட் கோலியின் தலை மையில் முற்றிலும் மாறுபட்ட வியூகங்களுடன் வெற்றிகளை வசப்படுத்தி வருகிறது இந்திய அணி. கங்குலி உருவாக்கிய அணி யில் எப்படி ஒரு வெற்றி வேட்கை இருந்ததோ, அதனை தற்போது காணமுடிகிறது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது.

கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி, ஆறு போட்டியில் வெற்றி என நேர்மறையாக இருக்கிறது இந்திய அணி. வெற்றி ஒன்றுதான் இலக்கு, அதுவே பிரதான நோக்கமாக கொண்டு அணியை வழிநடத்தும் விராட் கோலியிடம் இருந்து இன்னும் அதிக வெற்றிகள் கிடைக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/500வது-டெஸ்டில்-கால்பதிக்கும்-இந்திய-அணி-சிகேநாயுடு-முதல்-விராட்-கோலி-வரை-ஓர்-அலசல்/article9127054.ece

  • தொடங்கியவர்

500 டெஸ்ட் போட்டியை விடுங்க பாஸ்.. முத்திரை பதித்த இந்த 3 மேட்டரைப் பார்க்கலாம் வாங்க! #India500

 

 

 சென்னை: இந்தியா 500வது டெஸ்ட் போட்டியில் நாளை காலெடுத்து வைக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விழாக்கோலம் பூண்டுள்ளனர். பழைய நினைவுகள், இந்தியாவின் சாதனைகள் என ஒவ்வொருவரும் ஆட்டோகிராப் புத்தமாக மாறி நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியா டெஸ்ட் விளையாட ஆரம்பித்து இதுவரை 499 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. நாளை நியூசிலாந்துடன் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிதான் இந்தியாவுக்கு 500வது டெஸ்ட் போட்டியாகும்.

 

கான்பூரில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் போட்டிக்காக பிரத்யேக ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. டாஸ் போட வெள்ளி நாணயம், முன்னாள் கேப்டன்களுக்கு கெளரவம் என பிசிசிஐ பிரமாதப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் மறக்க முடியாத 3 டெஸ்ட் நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்...!

21-1474448919-sachin9-600.jpg

சச்சின் டெண்டுல்கர் 200

இந்திய வீரர்களிலேயே 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர்தான். இது ஒரு மிகப் பெரிய சாதனை. இந்தியா விளையாடியுள்ள மொத்த டெஸ்ட்டுகளில் கிட்டத்தட்ட பாதி அளவிலான டெஸ்ட் போட்டிகளில் சச்சின் இடம் பெற்றுள்ளார் என்பது வரலாறாகும்.

21-1474448936-sachin354545-600-jpg.jpg

சச்சின் வசம் பல சாதனைகள்

200 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஒரே இந்திய வீரராக வலம் வந்த சச்சின் வசம்தான், இந்தியாவின் பல டெஸ்ட் சாதனைகளும் அடங்கிக் கிடக்கின்றன. அதிக டெஸ்ட் ரன்கள், அதிக டெஸ்ட் சதம் என பல சாதனைகளை சச்சின் படைத்துள்ளார். இவை உலக சாதனையும் கூட.

21-1474449081-virendra-sehwag45.jpg

 

வீரேந்திர ஷேவாக் 300

இந்திய டெஸ்ட் வீரர்களில் டெஸ்ட் போட்டியில் முச்சதம் போட்ட ஒரே வீரர் வீரேந்திர ஷேவாக்தான். ஒரு முறை இல்லை, 2 முறை முச்சதம் போட்டு அசத்தியுள்ளார் ஷேவாக்.

 

2 முச்சதங்கள்

ஷேவாக் போட்ட முச்சதங்களை பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 309 ரன்களையும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்களையும் ஷேவாக் குவித்துள்ளார்.

21-1474449174-anil-kumble1-600.jpg

அனில் கும்ப்ளே 10

இந்திய டெஸ்ட் பவுலர்களிலேயே ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்திய சாதனை அனில் கும்ப்ளேவிடம் உள்ளது. அவர் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்களைச் சாய்த்து உலக சாதனை படைத்துள்ளார்.

21-1474449202-anil-kumble34.jpg

டெல்லி டெஸ்ட் 1999ம் ஆண்டு டெல்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது அனில் கும்ப்ளே புயலாக மாறி பாகிஸ்தானை புரட்டி எடுத்தார். கும்ப்ளேவை சமாளிக்க முடியாமல் அத்தனை பேரும் அவரிடம் வீழ்ந்தனர். 139 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இது ஒரு சாதனையாகும்.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-set-enter-500-tests-club-tomorrow-263348.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.