'டைட்டானிக்' காதலர்கள் போல நிற்கும் ட்ரம்ப் - எப்ஸ்டீன்!; வைரலாகும் வொஷிங்டன் சிலை
11 Mar, 2026 | 05:36 PM
டைட்டானிக் காதலர்களைப் போல, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாலியல் குற்றவாளி என அறியப்படும் ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகிய இருவரும் நிற்கும் நிலையில் வடிக்கப்பட்ட சிலை வொஷிங்டனில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வொஷிங்டனில் உள்ள நெஷனல் மாலில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
தங்க நிறத்தில் ஸ்ப்ரே பெயின்ட் பூசப்பட்டு, இந்த சிலை பளபளப்பாக மிளிர்கிறது.
டொனால்ட் ட்ரம்பை கிண்டல் செய்யும் விதமாக இந்த சிலையை சீக்ரெட் ஹேண்ட்ஷேக் என்கிற கலைக் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
எப்ஸ்டீன் கோப்பு விவகாரத்தின் பின்னர், ட்ரம்ப் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என எதிர்க்கட்சி உட்பட பலதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஆகியோருக்கு இடையிலான தொடர்பை கேலியாக வெளிப்படுத்தும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பின், நியூயோர்க்கில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சிறைத் தண்டனை அனுபவித்து வந்தபோது, ஜெப்ரி எப்ஸ்டீன், மர்மமான முறையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீனின் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் வெளியாகி வருகின்றன. அந்த ஆவணங்களில் ட்ரம்ப்பின் பெயரும் இடம்பெற்றதையடுத்து, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இச்சந்தர்ப்பத்திலேயே டைட்டானிக் படக் காதலர்களான ஜாக் - ரோஸ் இருவரும் கப்பலின் மேல் தளத்தின் முனையில் நிற்பது போல எப்ஸ்டீனின் கைகளை தழுவிக்கொண்டு ட்ரம்ப் நிற்கும் தோற்றத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் கீழே, ஜாக்கும் ரோஸும் தங்கள் காதலை வளர்த்ததைப் போல, ட்ரம்பும் எப்ஸ்டீனும் இணை பிரியாமல் இருந்தனர் என்பதை உணர்த்தும் வாசகமொன்று பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை பலர் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். வேடிக்கையாக சிலைக்கு முன்பாக நின்று பலர் செல்பி எடுக்கின்றனர்.
https://www.virakesari.lk/article/240740
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.