Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேறாத எதிர்பார்ப்புகள்

Featured Replies

showImageInStory?imageid=298794:mr

 

 

மூன்று விட­யங்கள் தமிழ் மக்­களை உறுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றன. நிலைத்து நிற்கக் கூடிய நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வு கிடைக்­குமா......, எப்­போது கிடைக்கும்? 

யுத்த காலத்­திலும், அதற்குப் பின்­னரும் இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கும் மனித உரிமை மீறல்­க­ளுக்கும், கொலை­க­ளுக்கும், ஆட்­களை வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கும், சிறைச்­சா­லை­களில் அநி­யா­ய­மாக வாடு­கின்ற தமிழ் அர­சியல் கைதிகள் அனு­ப­விக்­கின்ற வேத­னை­க­ளுக்கும் உண்­மை­யான நீதி கிடைக்­குமா?

காணி அப­க­ரிப்­புக்கும், பௌத்த மேலா­திக்க ஊடு­ரு­வ­லுக்கும் முடி­வேற்­ப­டுமா......, எந்த வகையில் யார் அந்த முடிவை ஏற்­ப­டுத்­து­வது?.....என்று, இந்த விட­யங்கள் இன்று எரியும் பிரச்­சி­னை­யாக தமிழ் மக்கள் மனங்­களில் குடைந்து கொண்­டி­ருக்­கின்­றன. 

இவற்­றுக்கு ஒட்­டு­மொத்­த­மாக இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தீர்வு எட்­டப்­ப­டுமா என்­பது, கேள்வி அள­வி­லேயே இருக்­கின்­றது. ஆதா­ர­பூர்­வ­மான செயல்­வ­டிவ ரீதியில், இதற்­கென ஒரு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தத்­தக்க நிலை­மைகள் அர­சாங்கத் தரப்­பி­னரால் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

ஆனால், முன்­னைய அர­சாங்­கத்தைப் போலல்ல...., இந்த அர­சாங்கம் வித்­தி­யா­ச­மா­னது. பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டு அவற்றை முடி­வுக்குக் கொண்டு வரத்­தக்க வல்­லமை வாய்ந்­தது என்று அரசா­ங்­கத்­திற்கு, நற்­சான்­றிதழ் வழங்கி வரு­கின்­றதே அல்­லாமல், அத்­த­கைய நிலைப்­பாட்டை நோக்கி அர­சாங்­கத்தை நகர்த்திச் செல்­கின்ற அர­சியல் சக்தி தனக்கு இருக்கிறது என்­பதை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் வெளிப்­ப­டுத்த முடி­யாத நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.  இந்த விட­யத்தில் வெறும் கையில் முழம் போடு­கின்ற கைங்­க­ரி­யத்­தி­லேயே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருக்­கின்­றது என்று, அதனைத் தமது அர­சியல் தலை­மை­யா­கவும், அர­சியல் சக்­தி­யா­கவும் கொண்­டி­ருக்­கின்ற தமிழ் மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் இன்று உணரத் தலைப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.  

யுத்தம் முடி­வுக்கு வந்­த பின்னர் ஒரு சில விட­யங்­களில் நாட்டில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்கள், இயல்­பா­ன­வை­யா­கவும், சாதா­ர­ண­மா­கவே அவை நிகழ்ந்­தி­ருக்­கத்­தானே வேண்டும் என்ற மனப்­பாங்­கி­லேயே பாதிக்­கப்­பட்ட மக்கள் காணப்­ப­டு­கின்­றார்கள். 

ஆனால் யுத்­தத்தின் பின்னர், மஹிந்த ராஜ­பக் ஷ அரி­ய­ணையில் இருந்து அகற்­றப்­பட்டு, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அரி­யா­ச­னத்தில் ஏற்­றி­யதன் பின்னர், பல விட­யங்கள் நிகழ்ந்­தி­ருக்க வேண்டும் என்­பது அவர்­க­ளு­டைய மிகவும் ஆழ­மான எதிர்­பார்ப்­பாகும். 

எதிர்­பார்ப்­புக்கள்

எதிர்­பார்ப்­புக்­க­ளா­கவே இருக்­கின்­றன

அந்த எதிர்­பார்ப்பு, சரி பர­வா­யில்லை என்று ஓர­ள­வுக்­கா­வது திருப்­திப்­ப­டத்­தக்க அள­வுக்கு அர­சாங்கத் தரப்­பினால் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் தங்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு, நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் மிகவும் தந்­தி­ரோ­பாய ரீதியில் உதா­சீனம் செய்­யப்­பட்டு வரு­கின்­றதே என்ற ஆதங்க நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவே உணர்­கின்­றார்கள்.  

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளா­கிய தங்­க­ளுக்­காக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு குரல் கொடுக்­கின்­றது. அவ்­வப்­போது இது­பற்­றியும், இன்னும் என்­னென்­ன­வெல்லாம் பற்­றியும் கூட்­ட­மைப்­பினர் கூடிப் பேசு­கின்­றார்கள் என்­பதை அவர்கள் ஏற்றுக் கொள்­கின்­றார்கள். ஆனால், கூட்­ட­மைப்பு கொடுக்­கின்ற குரலும், கூடிப் பேசு­கின்ற பேச்­சுக்­களும், தங்­க­ளுக்கு சிறிய அள­வி­லா­வது ஆறு­த­ல­ளிக்­கத்­தக்க விட­யங்­களைப் பெற்றுத் தர­வில்­லையே என்­பது அவர்­களின் அர­சியல் ஏக்­க­மாக இருக்­கின்­றது.  

நல்­லாட்சி அர­சாங்­கமும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­­க்கு இத­ம­ளிக்­கத்­தக்க வகையில் அவ்­வப்­போது சில சில கருத்­துக்­க­ளையும் விட­யங்­க­ளையும் நம்­பிக்­கை­யூட்­டு­வ­தற்­காக மட்­டுமே கூறு­கின்­றது என்ற கருத்து தமிழ் மக்கள் மனங்­களில் மேலோங்­கு­கின்ற ஒரு போக்கே காணப்­ப­டு­கின்­றது. எந்­த­வொரு பிரச்­சி­னையும் அர­சாங்­கத்­தினால் ஆழ­மாக நோக்­கப்­பட்டு, தீர்க்­க­மான முறையில் தீர்த்து வைக்­கப்­ப­ட­வில்­லையே என்­பது அவர்­களின் ஆதங்­க­மாகும். வலி­காமம் வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட மக்­களை அவர்கள் வசிக்­கின்ற கொட்­டில்­க­ளுக்குச்  சென்று நேர­டி­யாக அவர்­க­ளு­டைய அவல நிலை­மை­களைக் கண்­ட­றிந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆறு­மாத காலத்தில் அவர்கள் அனை­வரும் அவர்­க­ளு­டைய சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள் என உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். 

ஆனால் அது நடக்­க­வில்லை. அவர் கூறி­ய­தற்கு மாறாக அவ்­வப்­போது கிள்ளித் தரு­வது போன்று, பாவம் என்று இரக்­கப்­பட்டு, ஏதோ தங்­க­ளு­டைய பரம்­பரைச் சொத்­தா­கிய காணி­களை விட்டுக் கொடுப்­பது போன்ற ஒரு தோர­ணை­யி­லேயே இரா­ணு­வத்தின் ஆக்­கி­ர­மிப்பில் உள்ள பொது­மக்­க­ளு­டைய காணிகள் பகுதி பகு­தி­யாக விடப்­பட்டு வரு­கின்­றன. இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­க­ளுக்கு ஜனா­தி­பதி அளித்த வாக்­கு­று­திக்கு ஏற்ப எடுக்­கப்­ப­டு­கின்ற மனப்­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­க­ளாக,  இந்த, காணி விடு­விப்பு நட­வ­டிக்­கைகள் அவர்­க­ளுக்குத் தோன்­ற­வில்லை. 

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி வித்­யாவின் கொலைச் சம்­பவம் தொடர்பில் உட­ன­டி­யாக விசா­ர­ணைகள் நடத்­தப்­படும். குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள். சட்டம் ஒழுங்கு சீரான முறையில் நிலை­நி­றுத்தி பேணப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஆனால் அந்த வழக்கு தொடர்­பான விசா­ர­ணைகள் மந்த கதி­யி­லேயே இடம்­பெற்று வரு­கின்­றன. 

வித்­யாவின் வல்­லு­றவு கொலைக்­காக வீதியில் இறங்கி நீதி கோரி போராட்டம் நடத்­திய பொது­மக்­களின் நியா­ய­மான எதிர்­பார்ப்பு இன்னும் சரி­யான முறையில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்றே கூற வேண்­டி­யி­ருக்­கின்­றது.

அது மட்­டு­மல்­லாமல் சிறுவர், சிறு­மிகள், பெண்கள் மீதான வன்­முறை போக்கும் போதைப் பொருள் கடத்­தல்­களும், போதைப் பொருள் பாவ­னையும் சமூ­கத்தில் முன்­னெப்­போதும் இல்­லாத அள­வுக்கு அதி­க­ரித்துச் செல்­கின்ற ஒரு போக்கே காணப்­ப­டு­கின்­றன. சட்டம் போட்டு தடுக்­கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்­கின்­றது. ஆனால் திட்டம் போட்டு செயற்­ப­டு­கின்ற கூட்டம் இன்னும் செயற்­பட்டுக் கொண்டே இருக்­கின்­றது என்­பதே நிலை­மை­யாக இருக்­கின்­றது. 

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னேற்­ற­க­ர­மாகக் காணப்­ப­டு­கின்­றன. பொறுப்பு கூற­லுக்­கான பொறி முறை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முதற்­ப­டி­யாக காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்டம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காக, பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளு­டைய கருத்­துக்­க­ளையும் உள்­ள­டக்கி, நாட்டு மக்­க­ளு­டைய – விசே­ட­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளு­டைய பங்­க­ளிப்­புடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யிலும்,  அத­னை­யொட்­டிய சர்­வ­தேச அரங்­கிலும் அர­சாங்கம் எடுத்­துக்­கூறி தனது 'முன்­னேற்­ற­க­ர­மான போக்­கிற்கு' அனைத்­து­லக அர­சியல் சக்­தி­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுப்­பதில் முன்­னேற்­றத்தைக் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றது. 

சர்­வ­தேச அரங்கில் நிலைமை என்ன?

இலங்­கையில் போர்க்­குற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. மனித உரி­மை­களும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களும் அப்­பட்­ட­மாக மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. சிறு­பான்­மை­யாக உள்ள மக்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­கின்­றன என்ற நிலைமை சர்­வ­தே­சத்­தினால் நன்கு உண­ரப்­பட்­டி­ருக்­கின்­றது. அனைத்­து­லக அரங்கின் முன்­னணி அர­சியல் சக்­தி­களின் கவ­னத்­திற்கு இவற்றை நாங்கள் கொண்டு சென்­றி­ருக்­கின்றோம். அதன் கார­ண­மா­கவே, ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் பொறுப்புக்கூற­லுக்­கான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு, அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்ற தொனியின் சுருதி பிச­காமல் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையும், அதனைச் சார்ந்­த­வர்­களும் தமிழ் மக்கள் மத்­தியில் அர­சியல் கருத்­துக்­களை பரப்பி வரு­கின்­றார்கள். 

ஒரே இரவில் காரி­யங்­களை நிறை­வேற்ற முடி­யாது. படிப்­ப­டி­யா­கவே நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்ற நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டில் நியாயம் இல்­லா­ம­லில்லை. ஆயினும், அதில் காணப்­ப­டு­கின்ற நியா­யங்­க­ளுக்­காக வக்­கா­லத்து வாங்கும் வகையில் செயற்­பட்டு வரு­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நியாயம் வழங்­கு­வ­திலும், அவர்­க­ளுக்­காக நீதியை நிலை­நி­றுத்­து­வ­திலும் ஏற்­க­னவே ஏற்­பட்­டி­ருக்­கின்ற கால தாமதம் அவர்­க­ளுக்­கு­ரிய நீதி­யையும் நியா­யத்­தையும் மறுக்­கின்ற அள­வுக்குச் சென்­றி­ருப்­பதை எடுத்­து­ரைத்து, அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை வேகப்­ப­டுத்த முடி­யாமல் இருப்­பதே மக்கள் மனங்­களை உறுத்­து­கின்­றது. 

இதனை கூட்­ட­மைப்பு சரி­யான முறையில் உணர்ந்து அதற்­கேற்ற வகையில் - தமிழ் மக்­க­ளு­டைய அபி­லா­ஷைகள், உணர்­வு­களை அரச தரப்­பிலும் சர்­வ­தேச அரங்­கிலும் மேலோங்கச் செய்­தி­ருக்­கின்­றதா என்­பது விடை­யில்­லாத வினா­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

அர­சாங்­கத்தை சங்­க­டத்தில் ஆழ்த்­தி­வி­டக்­கூ­டாது. அர­சாங்­கத்தின் முன்­னேற்­ற­க­ர­மான முயற்­சி­க­ளுக்கு எந்­த­வி­த­மான ஊறும் ஏற்­ப­டுத்­தி­வி­டாத வகையில் பக்­கு­வ­மாக, நிதா­ன­மாக காரி­யங்­களைக் கையாள வேண்டும். இதற்குத் தமிழ் மக்கள் ஒரே அணியில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் கீழ் இறுக்­க­மாக ஒன்று திரண்­டி­ருக்க வேண்டும் என்ற போக்­கி­லேயே கூட்­ட­மைப்பின் தலைமை சென்று கொண்­டி­ருக்­கின்­றது.  சர்வதேச அரங்கில் தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரிக்­கைகள், நீதி சார்ந்த அவர்­களின் நிலைப்­பாட்­டிற்கு இருந்து வந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்ற ஆத­ரவு சரிந்து செல்­வ­தையும், 'எல்லாம் நல்­ல­ப­டி­யா­கவே நடக்­கின்­றன. எங்­க­ளுக்கு இன்னும் கால அவ­காசம் வேண்டும்' என்ற காலம் கடத்­து­கின்ற பேரின மேலாண்மை கொண்ட அர­சாங்கத் தரப்பின் அர­சியல் போக்கு முன்­னோக்­கிய நிலைக்கு உயர்ந்­தி­ருப்­ப­தையும் உணர்ந்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. 

இத்­த­கைய நிலை­மையின் கீழ் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்­கான நீதியை நிலை­நாட்­டு­வதும், அர­சியல் ரீதி­யாகத் தீர்வு காண்­ப­துவும் ஆறிய கஞ்சி பழங்­கஞ்­சி­யாக – ஊசிப்­போன, பழு­தாகிப் போன கஞ்சி என வீசி எறிந்­து­விடக் கூடிய அபா­ய­க­ர­மான நிலை­மையை நோக்­கிய நகர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன என்­பதை, உணர்ந்து, அதற்­கேற்ற வகையில் உரிமை மீறல், அர­சியல் தீர்­வுக்­கான செயற்­பாடு என்ற தளங்­களில் தந்­தி­ரோ­பாய செயற்­பா­டு­களை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு மேற்­கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. 

சர்­வ­தேச அரங்கில், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் அமர்வைச் சார்ந்து, இலங்கை தொடர்­பான முக்­கிய நிகழ்­வுகள், முக்­கி­ய­மான உயர் மட்டச் சந்­திப்­புக்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. முக்­கி­ய­மான தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளத் தக்க கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இவற்றில் முக்­கிய பங்­கா­ளி­யா­கிய பாதிக்­கப்­பட்ட மக்­களின் தரப்பில் களத்­தி­லி­ருந்து எந்­தவோர் அர­சியல் தலைமைத் தரப்பும் பங்­கெ­டுத்­தி­ருப்­பதைக் காண முடி­ய­வில்லை. அந்த அரங்­கு­களில் பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்­பி­லான குரல்கள் சரி­யான முறையில் ஓங்கி ஒலிக்கத் தவ­றி­யி­ருப்­ப­தையே உணர முடி­கின்­றது. இது சர்­வ­தே­சத்தின் ஆத­ரவைத் திரட்­டி­யி­ருக்­கின்றோம். சர்­வ­தே­சத்தின் ஆத­ர­வுடன் எமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்று நம்பிக்கையூட்டி வந்த பிர­சா­ரங்­களை கேள்­விக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது என்றே கூற­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

கள நிலை­மைகள்  

அனைத்­து­லக அரங்கின் நிலைமை இவ்­வா­றி­ருக்க, கள நிலை­மைகள் வேறு திசை நோக்கி – உள்­ளக பார்­வையில் கவனம் குவிக்­கப்­பட்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. அர­சியல் தீர்வு தொடர்பில் மூன்று நிலைப்­பா­டுகள் அண்­மையில் வட­கி­ழக்குப் பிர­தே­சங்­களில் அர­சியல் கருத்­துக்­களின் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. 

அத்­துடன், பாரிய அள­வி­லான ஒரு களச்­செ­யற்­பாடும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த பிர­தமர் ரணில் விக்ர­ம­சிங்க முன்­னைய அர­சாங்கம் 13 ஆவது அர­சியல் திருத்தச் சட்­டத்­திற்கு அமை­வாக அதி­கா­ரங்ளைப் பகிர்ந்­த­ளிக்­கத்­தக்க வகையில் அர­சியல் தீர்வு காணப்­போ­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்­ததை நினை­வூட்­டி­யி­ருந்தார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ 13 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு மேலாக அதி­கா­ரங்­களை உள்­ள­டக்­கிய ஓர் அர­சியல் தீர்வு காணப்­போ­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்­த­தையும் குறிப்­பிட்டு, இருந்த போதிலும் அவர் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண­வில்லை. அந்தப் பொறுப்பில் இருந்து அவர் தவ­றி­விட்டார் என்­பதைச் சுட்­டிக்­காட்டி, புதி­தாக மலர்ந்­துள்ள நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம் அர­சியல், சமூக, இன, மத பேதங்­களைக் கடந்து ஓர் அர­சியல் தீர்வு காண­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை குறிப்­பிட்டு, அதற்­காக அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என்று அழைப்பு விடுத்­தி­ருந்தார். 

13 ஆவது அர­சியல் திருத்தச் சட்­டத்தின் கீழ் அர­சியல் தீர்வு காணப்­படும் என்றோ அல்­லது அத்­த­கைய தீர்­வுக்கு திட்டம் இருக்­கின்­றது என்றோ சுட்­டிக்­காட்டி கருத்து எத­னையும் அவர் வெளி­யி­ட­வில்லை. மொட்­டை­யாக முன்­னைய அர­சங்கம் அர­சியல் தீர்வு காணத் தவ­றி­விட்­டது. நாங்கள் புதிய அர­ச­ிய­ல­மைப்பை உரு­வாக்­க­வுள்ளோம். அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஓர் அர­சியல் தீர்வைக் காண்போம். எல்­லோரும் எழுந்து வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் வகை­யி­லேயே அவர் கருத்­து­ரைத்­தி­ருந்தார். 

அர­சியல் தீர்­வுக்­கான அர­சாங்­கத்தின் ஆலோ­ச­னைகள் என்ன, அதற்­கான அதன் கொள்கை நிலைப்­பாடு என்ன என்­ப­தைக்­கூட அவர் கோடிட்டுக் காட்­ட­வு­மில்லை. அர­சியல் தீர்வு குறித்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை அவர் அங்கு தெளி­வு­ப­டுத்­த­வுமில்லை. அது குறித்த அர­சாங்­கத்தின் நோக்கு என்ன, கொள்கை என்ன, அடிப்­படை என்­ன­வாக இருக்கும் என்­பவை குறித்தும் அவர் தனதுரையில் குறிப்­பி­ட­வில்லை. இதன் மூலம் அர­சாங்கம் ஏதோ ஒரு திட்­டத்தை வைத்­தி­ருக்­கின்­றது.

அது என்ன என்­பதை இப்­போ­தைக்கு வெளி­யிடப் போவ­தில்லை என்ற செய்­தியை அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை அவர் தொனி வெளிப்படுத்தியி­ருந்­த­தையே காணவும், உண­ரவும் முடிந்­தி­ருக்­கின்­றது. இத­னை­ய­டுத்து தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜயம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்தார். சக­வாழ்வு மேம்­பாட்­டுக்­கான ஊட­க­வி­ய­லா­ளர்­களின் செய­ல­மர்வு என்ற மகு­டத்தில் இரண்டு நாட்கள் செய­ல­மர்வு ஒன்றை வட­மா­காண செய்­தி­யா­ளர்­க­ளுக்­காக அவ­ரு­டைய அமைச்சு ஒழுங்கு செய்­தி­ருந்­தது. அந்த அமர்வின் இரண்டாம் நாளன்று அமைச்சர் மனோ கணேசன் முக்­கிய உரை­யாற்­றி­யி­ருந்தார். அந்த செய­ல­மர்­வுக்­கான முக்­கிய உரை­யாக மட்டும் அது அமைந்­தி­ருக்­க­வில்லை. அர­சியல் தீர்­வுக்­கான இன்­றைய அர­சியல் சூழ­லிலும் அந்த உரை முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது என்றே கூற வேண்டும். 

அர­சியல் ரீதி­யான அச்­சமும்

அர­சியல் போக்கும்

அதில் அவர் சிங்­கள மக்­களும் தமிழ் மக்­களும் ஒருவர் மீது ஒருவர் கொண்­டி­ருக்­கின்ற அர­சியல் ரீதி­யான அச்சம் குறித்து குறிப்­பிட்­டி­ருந்தார்.  'இலங்கைத் தமி­ழர்­க­ளுக்­காக இந்­தி­யாவில் தமிழ்­நாட்­டி­லி­ருந்து முற்­போக்கு சக்­திகள் மிகத் தீவி­ர­மாக ஆத­ரவுக்­குரல் எழுப்பி வரு­கின்ற பின்­ன­ணியில், தமிழ் மக்கள் மீண்டும் தங்­க­ளு­டைய தனி­நாட்­டுக்­கான போராட்­டத்தைத் தொடங்­கி­வி­டு­வார்­களோ, மீண்டும் அவர்கள் ஓர் ஆயுதப் போராட்­டத்தில் குதித்­து­வி­டு­வார்­களோ, மீண்டும் புலிகள் வந்­து­வி­டு­வார்­களோ என்ற அச்­சத்தைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இது நியா­ய­மான அச்சம் என்று நான் நினைக்கின்றேன்.  'இந்த அச்­சத்தைப் போக்­கு­கின்ற கடப்­பாடு தமிழ் மக்­க­ளுக்கு இருக்­கின்­றது. தமிழ் அர­சி­யல்­வா­திகள், தமிழ் அர­சியல் தலை­மைகளுக்கு மட்­டு­மல்ல. தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் இருக்­கின்­றது என்றார் அமைச்சர் மனோ கணேசன். அத்­துடன் அவர் நின்­று­வி­ட­வில்லை. தமிழ் மக்கள் மத்­தி­யிலும் அர­சியல் அச்சம் இருக்­கின்­றது என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

'தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில், இந்த நாடு பல இனங்கள் வாழ்­கின்ற நாடு, பல மொழிகள் பேசு­கின்ற நாடு, பல மதங்­களைக் கடைப்­பி­டிக்­கின்ற மக்கள் வசிக்­கின்ற நாடு, இந்த நாடு  என்ற பன்­முகத் தன்­மையை சிங்­கள மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்­களா என்ற அச்சம் நில­வு­கின்­றது. அத்­துடன் சிங்­களம் மட்­டும்தான் இந்த நாட்டின் ஒரே மொழி. சிங்­கள இனம் மட்­டும்தான் இந்த நாட்டின் ஒரே இனம். பௌத்தம் மட்­டும்தான் இந்த நாட்டின் ஒரே மதம் என்ற நிலைப்­பாட்டை எடுத்துக் கொண்டு எங்­களை இரண்டாம் தர, மூன்றாம் தர மக்­க­ளாக நடத்­து­வார்­களோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்­தியில் இருக்­கின்­றது. அது மட்­டு­மல்ல அர­சியல் அதி­காரப் பகிர்­வுக்கு சிங்­கள மக்கள் உடன்­ப­டு­வார்­களா என்ற அச்­சமும் தமிழ் மக்கள் மத்­தியில் இருக்­கின்­றது' என்றார் மனோ கணேசன். இந்த இரண்­டு­வி­த­மான அச்­சங்­க­ளுக்கும் இடையில் இந்த நாட்டு மக்கள் மத்­தியில் சக­வாழ்வை உரு­வாக்கி, அந்தப் புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் அர­சியல் தீர்­வுக்கு அடித்­தளம் இடு­வ­தற்­கான முயற்­சி­களில் தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக அவர் இந்த செய­ல­மர்வில் கலந்து கொண்­டி­ருந்த செய்­தி­யா­ள­ர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்தார். 

சர்­வ­தே­சத்தின் ஆத­ர­வுடன் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சி­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஈடு­பட்­டிருக்­கின்­றது. அதற்கு சமாந்­த­ர­மாக – அதற்கு வலு சேர்க்கும் வகையில் சிங்­களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் என்ற பல்­லின மக்கள் மத்­தியில் சக­வாழ்­வையும் சௌஜன்­யத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களைத் தாங்கள் எடுத்­தி­ருப்­ப­தா­கவும் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

அதே­வேளை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு சரி­யான பாதை­யி­லேயே பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது என்­பதை குறிப்­பிட்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், தமிழ் மக்கள் நிதா­ன­மா­கவும், பொறுப்­போடும் நடந்து கொள்ள வேண்டும். ஓர் அணியில் திரண்டு தமிழ் மக்­க­ளு­டைய ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது அவசியம் என்று திருகோணமலையில் பேசுகையில் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார். 

தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலத்திலும்சரி, யுத்தம் முடிவுக்கு வந்த சூட்டோடு, ஜனநாயக அரசியல் வெளியொன்று ஆயுத முனையில் விரிந்திருந்த சூழலிலும்சரி தமிழ் மக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கொள்கைப் பிடிப்போடும், தளராத அரசியல் உறுதியோடும் ஓர் அணியிலேயே திரண்டிருந்தார்கள். அந்த இணைவு இன்று வரையிலும் தொடர்கின்றது. கூட்டமைப்புக்குள்ளேயே எழுந்துள்ள கட்சி அரசியல் ஆதிக்க போக்கும், அதிகார மோகமும்தான் அவர்களைக் கூறுபோட முனைந்திருக்கின்றது. அவ்வாறு கூறு போடப்பட்டதற்கான அடையாளங்களும் ஏற்கனவே வெளிப்பட்டும் இருக்கின்றன என்பதை கூட்டமைப்பின் ஒற்றுமை குறித்தும், தமிழ் மக்களின் ஒற்றுமை குறித்தும் வலியுறுத்துபவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். அல்லது அதனைக் கண்டும் காணாத வகையில் தங்கள் போக்கிலேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பலரும் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. 

இந்த நிலைமைகளுக்கிடையில்தான், பாதிக்கப்பட்ட மக்களினதும், ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் மனித உரிமை மற்றும் அரசியல் உரிமை தொடர்பிலான மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான மக்கள் பேரணி "எழுக தமிழ்" என்ற கோஷத்துடன் வெளிப்பட்டிருக்கின்றது. 

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றுக்கான பொறுப்புகூறல் ஆகிய விடயங்களில் தமிழ் மக்களின் உணர்வுகள் வெளிப்பட வேண்டிய தேவை அவசியமாகியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் களத்தில் உள்ள மக்களின் உணர்வுகள் அரசாங்கத்தை உலுக்கி, அதனையும் கடந்து சர்வதேச அரங்கில் வலுவான முறையில் ஒலிக்க வேண்டியது அவசியம். அது இன்றைய உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் சரியான சந்தர்ப்பத்தில் சரியான முறையில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றதா என்பது சிந்தனைக்குரியதாகும். இதன் ஊடாக தமிழ் மக்களை உறுத்திக்கொண்டிருக்கின்ற மூன்று முக்கிய விடயங்களுக்கும் தீர்வு காண்பதற்கான போக்கில் சிறிய அளவிலாவது தாக்கத்தைச் செலுத்துமா என்பது தெரியவில்லை. 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=24/09/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.