Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்புக்கூறலில் விதிவிலக்கை எதிர்பார்க்கும் இராணுவத் தரப்பு!

Featured Replies

ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது புலனாய்வு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யப்படக் கூடாது என்று கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியிருந்தார்.

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மறுநாளே, நந்திக்கடலுக்கான பாதை என்ற பெயரில் இலங்கையின் இராணுவ வரலாற்றில் இதுவரையில் வெளிவராத பல தகவல்களை உள்ளடக்கிய காத்திரமான நூல் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், ஆங்கில, சிங்கள ஊடகங்களில் அவரது பேட்டிகளும், அவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும் பரபரப்பாக இடம்பிடித்துள்ளன. அவரது பேட்டிகளையும் தகவல்களையும் தமிழ் ஊடகங்களும் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகின்றன.

அண்மைய சில வாரங்களாக பரபரப்பாகப் பேசப்படும் ஒருவராக மாறியிருக்கும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கடந்த வாரம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சிலருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகளையிட்டு அதிருப்தியை வெளியிப்படுத்தியிருக்கிறார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கு, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கு, முன்னாள் பா.உ. நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலை வழக்குகள், கொழும்பில் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கப்பம் கோரிக் கடத்தப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், கடற்படைப் புலனாய்வு அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இராணுவப் புலனாய்வு பிரிவு பற்றாலியன் கட்டளை அதிகாரிகளான இரண்டு லெப்.கேணல்களும் அடங்கியிருந்தனர். இவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மனோதிடத்தைப் பாதித்திருப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டிருக்கிறார்.

இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வீழ்ச்சியைத் தடுக்காவிடின், நாடு கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு மிக முக்கியமான பங்கை வகித்திருந்தது. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட பின்புல இரகசிய நடவடிக்கைகள் புலிகள் இயக்கத்தை சிதைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

எனினும் சில இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதால் மாத்திரம் ஒட்டுமொத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் திறனும் மனோதிடமும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று கூறுவது எந்த வகையில் பொருத்தமுடையது என்ற கேள்வி இருக்கிறது.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சாதாரண சம்பவங்களுக்காக கைது செய்யப்படவில்லை. சட்டத்துக்கு முரணான செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தான் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகள் ஒன்றும் தேசிய பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டவையன்று. முன்னைய அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கு தேசிய பாதுகாப்பு என்ற கவசத்தைப் பயன்படுத்த முனைவது அபத்தம்.

அதைவிட ஆட்சி மாற்றங்கள் நிகழும் போது புலனாய்வு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யக்கூடாது என்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் கருத்தும் சர்ச்சைகளுக்குரியதே.

அரச புலனாய்வு அமைப்புகள், தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானவை. அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அத்தகைய நோக்கங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் எல்லா நடவடிக்கைகளும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டவையாக இருக்கும் என்று கூற முடியாது.

advertisement

விதிவிலக்காக சில சம்பவங்கள் இடம்பெறலாம். தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். தேசிய பாதுகாப்பு என்ற கவசம் புலனாய்வு அமைப்புகளின் தவறுகளுக்கு ஒருபோதும் துணையாகி விட முடியாது.

புலனாய்வு அமைப்புகள் செய்யும் எல்லாச் செயல்களிலும் நியாயம் உள்ளதாக கருத முற்பட்டால் அதன் செயல்களெல்லாமே சரியானவை தான் என்ற முடிவை எடுக்க முனைந்தால் அந்தக் கவசத்துக்குள் இருந்தே ஏராளமான தவறுகளும் இழைக்கப்படும்.

இந்தியாவின் றோ, சி.பி.ஐ போன்ற புலனாய்வு அமைப்புகளும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ போன்ற புலனாய்வு அமைப்புகளும் கூட தவறுகளை இழைத்தமை தொடர்பான விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்றன.

தேசிய பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் அவை தவறான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதற்குப் பொறுப்புக்கூறும் கடப்பாடு என்பது எல்லா புலனாய்வு அமைப்புகளுக்குமே பொதுவானது.

பொறுப்புக்கூறும் கடப்பாட்டைக் கொண்டிராத புலனாய்வு அமைப்பும் எதேச்சாதிகாரத்தையே வெளிப்படுத்தும். அத்தகையதொரு புலனாய்வு அமைப்பாகத் தான் இலங்கை இராணுவப் புலனாய்வு அமைப்பு இருக்க வேண்டும் என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன போன்றவர்கள் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் மற்றும் அது சார்ந்த சட்டங்கள் காலத்துக்கு காலம் வலுப்பெற்று வருகிறது. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரணமாக பார்க்கப்பட்ட மீறல்கள் இப்போது பாரிய மீறல்களாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

இதற்கு சர்வதேச சட்டங்கள் இறுக்கமடைந்து வருவதும் மனித விழுமியங்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு வலுப்பெற்று வருவதுமே முக்கியமான காரணங்கள்.

இப்படியான மாற்றங்களை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் போது புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளை ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீளாய்வு செய்யக்கூடாது என்ற வாதம் ஒரு அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற தவறுகளை இன்னொரு அரசாங்கம் திருத்தக்கூடாது என்ற எதிர்பார்ப்பையே வெளிப்படுத்துகிறது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மனோதிடம் மற்றும் பலம் என்பவற்றைத் தீர்மானிக்கின்ற விடயம் பயிற்சியும் திறனும் ஊக்கமுமே தவிர ஆட்சியில் உள்ள அரசாங்கம் அவர்களை அரவணைக்கின்ற முறையாக மாத்திரம் இருக்காது.

அவ்வாறு ஆட்சியில் உள்ள அரசாங்கங்களின் நலன்களை மாத்திரம் கவனிக்கும் ஒரு புலனாய்வு அமைப்பாக இருந்தால் அது தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாது என்பது நிச்சயம்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் புலனாய்வுப் பிரிவுகள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த பாதுகாப்பு வளங்களும் அரசியல் நலன்களைப் பாதுகாக்கவே பயன்படுத்தப்பட்டன. இப்போது அவ்வாறான நிலை மாறிவிட்டது என்று கூற முடியாது.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தவறுகளை இனிமேலும் நடக்காமல் பார்த்துக் கொள்வதில் தற்போதைய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

தவறுகளை ஊக்குவிக்காமல் தவறுகளை இழைத்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்க முனையும் போது அதனை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பலத்தை உடைக்கும் செயலாக விமர்சனம் செய்ய முனைந்துள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, மகிந்த ராஜபக்ச தரப்பின் தேவைகளையே நிறைவேற்ற முனைந்திருக்கிறார்.

பலவேறு பேட்டிகளில் அவர் தாம் எந்தக் கட்சியையும் சார்ந்தவரில்லை என்றும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருந்தாலும் நந்திக்கடலுக்கான பாதை வெளியீட்டு விழாவுக்கு அவர் அரச தரப்பைச் சேர்ந்த எவரையும் அழைக்கவில்லை என்பதும், மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைத் தான் அழைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் இந்தக் கருத்துக்கும், அண்மையில் மகிந்த அணியைச் சார்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டிருந்த கருத்து ஒன்றுக்கும் இடையில் ஒற்றுமையைக் காண முடிந்தது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அந்தச் சட்டங்களை மீறுகின்ற அதிகாரம் அரச படைகளுக்கு இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.

அதாவது விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் சர்வதேச சட்ட மீறல்கள் ஏதும் நடக்கவில்லை என்று கூறிவந்த பீரிஸ் போன்றவரகள் இப்போது அத்தகைய சட்ட மீறல்களில் ஈடுபடும் அதிகாரம் அரச படைகளுக்கு இருப்பதாக வாதிட முனைகின்றனர்.

அதுபோலத் தான் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் கருத்தும் அமைந்திருக்கிறது. இவர்கள் இருவரும் ஒரே கோட்டில் தான் பயணிக்கின்றனர் என்பதையே இது உணர்த்தி நிற்கிறது.

போரின் போது இராணுவத்தினர் நீதியின் பால் நின்றே செயற்பட்டனர். எங்கேனும் மீறல்கள் நடந்திருந்தாலும் அது சட்ட ரீதியான விசாரணைகளுக்கு அப்பாற்பட்டது என்ற கொள்கையில் இவர்கள் உறுதியைக் கடைப்பிடிக்கின்றனர்.

இப்படிப்பட்டதொரு நிலையில் பொறுப்புக்கூறும் கடப்பாடு என்பது கேள்விக்குள்ளாவதில் ஆச்சரியமில்லை.

http://www.tamilwin.com/articles/01/118739?ref=right_articles

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.