Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகை

Featured Replies

பகை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம்

 

யானம் ஸ்தம்பித்தது. எல்லோருடைய பார்வையும் செல்வத்தின் மீது குவிந்திருந்தது. குமாரசாமி அய்யா, செல்வத்தைப் பார்த்துக் கத்தியதால்தான் இந்த அமைதி. மயானத்தில் ஒரு நொடி மயான அமைதி. `எங்கே... செல்வம் பதிலுக்கு ஏதாவது சொல்லி, மீண்டும் பெரிய சண்டை மூண்டுவிடப்போகிறதோ' என்ற அச்ச முடிச்சு, ஒவ்வொருவரின் பார்வையிலும் விழுந்திருந்தது.
மீண்டும் கத்தினார் குமாரசாமி.

“ஏன்டா, இங்கன என்ன கொமரியா கொள்ளையில போயிட்டா?  `போறேன் போறேன்'னு இழுத்துக்கிட்டுக்கெடந்த கெழவி, கல்யாணச்சாவாப் போயிருக்கா. ஒம் பொண்டாட்டி நெற மாசமா இருக்காளாம்ல... அப்ப நீ காட்டுப் பக்கம் வரலாமா, ஆகுமா, என்னா இதுக்கு இங்க வந்த?”

செல்வம் தலை குனிந்தான். எல்லோரையும் பார்த்துக்கொண்டு அப்படியே பின்னோக்கிப் போனவன் சட்டெனத் திரும்பி வேகுவேகுவென நடந்து கண்பார்வையில் இருந்து மறைந்தான்.
கூட்டம் நிம்மதியானது. காரணம், குமாரசாமிக்கும் செல்வத்தின் தந்தை அய்யாத்துரைக்கும் இடையேயான பெரும் பகை.

குமாரசாமி, தம் வெள்ளை மீசையை தளர்ந்த கைகளால் நீவிக்கொண்டே, ``ஆகட்டுமப்பா, உச்சிக்குள்ள சோலிய முடிங்க” என்று சொல்லிக்கொண்டே அங்கு இருந்த மர நிழலுக்கு நடந்தார். ஒருவன் எங்கு இருந்தோ ஒரு ஸ்டூலை எடுத்துக்கொண்டு வந்து போட்டதும், அதில் அமர்ந்து ஒரு பெரிய ஏப்பத்தை கடினமாக வரவழைத்துக்கொண்டார்.

வெட்டியான், மணலைச் சாந்துபோல் குழைத்து சிதையில் அப்பிக்கொண்டிருந்தான். தலை, மார்பு, இடுப்பு, கால் பகுதிகளில் குழிபறித்து, மற்ற இடங்களில் எருவாட்டி வைத்து சாங்கியத்துக்கான ஏற்பாடுகள் முடிவுக்கு வர, வைத்த கொள்ளியில் லேசாக எரியத் தொடங்கிய உடல், சற்றைக்கெல்லாம் திகுதிகுவெனப் பிடித்து எரியத் தொடங்கியது.

கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து போய்க் கொண்டிருந்தது.

p88a.jpg

மரநிழலில், ஸ்டூலில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந் தார் குமாரசாமி அய்யா. கானல்போல் தீ அலையடித்துக் கொண்டிருந்தது. துவாரங்களில் இருந்து புகையும் வாடையும் கசியத் தொடங்கின.
அவர் வயதுக்கு எத்தனை எத்தனை பிணங்களைப் பார்த்திருப்பார். ஆனாலும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். தாசில்தாரிடம் பேசிய வார்த்தைகள் மனதைக் குடைந்துகொண்டே இருந்தன. அவருக்கு அருகில் வந்த தெருக்காரர்கள், அவர் எழும் வரை காத்திருந்தார்கள்.

“ஏன்டா... அவன்தான் கூறுகெட்டு வர்றான்னா, நீங்களாவது அமட்டி வர வேணாம்னு சொல்லக் கூடாதா?”

முருகேசன் வார்த்தைகளை மென்று விழுங்கியபடி ஆரம்பித்தார், “சொன்னா எங்கய்யா கேட்குறான்? `புள்ளத்தாச்சிய வீட்ல வெச்சுக்கிட்டு மயானத்துப் பக்கம் வரக் கூடாதுடா'னு தலபாடா அடிச்சிக்கிட்டாலும் கேட்குறானில்ல. ஆனா...”

அவனின் `ஆனா'வில் இருந்த ரீங்காரம் குமாரசாமியை நிமிரச்செய்தது.

“ஆனா... நீங்க பொசுக்குனு வெஞ்சுப்புட்டீங்க. அவன் போயி அந்தாள்கிட்ட சொல்லி, அவரு வானத்தும் பூமிக்கும் குதிக்கப்போறாரு!”

“குதிப்பான் குதிப்பான். எம் பேரைச் சொன்னா ஒண்ணுக்கு இருந்துருவான், கெழட்டுப் பய” - சொல்லிக்கொண்டே இடுப்பைப் பிடித்தபடி ஸ்டூலில் இருந்து எழுந்து, பிணம் எரிவதை ஒருமுறை பார்த்தவர், துண்டை உதறி, தோளில் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கினார். கொஞ்சம் இடைவெளிவிட்டு நாலைந்து பேர் அவரைத் தொடர்ந்தார்கள்.

இரண்டு ஆண்கள், பிறந்ததில் இருந்து நாற்பது வருடங்கள் நகமும் சதையுமான இணைபிரியா நட்பு கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு வந்த முப்பது வருட ஆகப்பெரும் பகையை மனதில் வைத்துக் கொண்டு வாழ்வது என்பதை ஊரும் தெருவும், தெருவில் இருக்கும் ஒவ்வொரு கல்லும் மௌன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன, எழுபது வருடங்களாக.

குமாரசாமி, அய்யாத்துரையைவிட மூன்று நான்கு மாதங்கள் மூத்தவர். அய்யாத்துரை வயிற்றில் இருக்கும்போதே அவருடைய அப்பா காலமாகிவிட்டதால், மீண்டும் பிறந்த ஊருக்கே வந்துவிட்டவள் பூரணியாத்தா. வந்தவள் தன் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்பதற்காக செல்லம்மா வீட்டில் ஒத்தாசைக் காக வேலைக்குச் சேர்ந்தவள், பின்னர் செல்லம்மாளுக்கு நெருக்கமாகிவிட்டாள். செல்லம்மா, குமாரசாமியைப் பெற்றெடுக்க, கூடவே பூரணியாத்தாளும் அய்யாத்துரையைப் புறந்தள்ளினாள். அப்பா இல்லாத பிள்ளை என்பதால், அந்த வீட்டில் அய்யாத்துரைக்கு அதிகச் செல்லம். குமாரசாமிக்கு என எதுவும் தனியாக வாங்கப்படாமல், எல்லாமே இரண்டு இரண்டாகத்தான் வாங்கினார்கள். இருவரும் ஒன்றாகவே வளர்ந்தார்கள்.

இருவருமே படு சூட்டிகை. உருவிவிட்டாற் போல் தேகம். இருவரும் சேர்ந்தேதான் இருப்பார்கள் 24 மணி நேரமும். வாமடை திறந்துவிடுவது, வரப்பு வெட்டுவது, வைக்கோல் படப்பு மேய்வது, நாற்று நடுகை, மாட்டைக் குளிப்பாட்டுவது என எந்த வேலையாயினும் இருவரும் சேர்ந்துதான் செய்வார்கள்.

ஒருமுறை பூபதியின் வீட்டு மாடு ஈத்துக்கு முடியாமல் அரற்றி அலற, ஊரே அவன் வீட்டுக்கொட்டத்தில் கூடிவிட்டது.

“என்ன  ஆச்சுண்டு தெரியலையே... எம் மாடு கெடந்து தவிக்கிதேய்யா!”

பூபதியின் புலம்பல் பாவமாக இருந்தது.

“வவுத்த நீவிவிடப்பா, முக்கட்டும்.”

“அட, நீ ஒரு பக்கம். அதெல்லாம் குந்தாங்கூறாப் போயிரும். உள்ளுக்குள்ள ஏதோ ஏடாகூடமப்பா, தலையவே காணமே!”

வாலைத் தூக்கிக் கையை உள்ளேவிட முயன்ற கண்ணனை, மாடு சுழன்று முட்டப்பார்த்தது. அதன் மூக்கில் இருந்து வந்த சத்தம், ஆக்ரோஷத் தையும் தாண்டி பரிதாபத்தை ஏற்படுத்தியது.
“மொதோ ஈத்து... அதான் முக்கத் தெரியலை மாட்டுக்கு. நம்ம கொமாரசாமிய கூட்டியாங்கய்யா.”

சற்று நேரத்தில் அங்கு நுழைந்தனர் இருவரும்.

“இந்தா வந்துட்டானுங்கள்ல, ரெட்டக்குழல் துப்பாக்கிகணக்கா. இனி மாடு வேற கன்னுக்குட்டி வேறனு பிரசவம் பார்த்துருவானுங்க” - ஒரு பெருசு சொல்லிவிட்டு, மெள்ள நகர்ந்தது.

மாட்டின் வயிற்றில் தடவிப்பார்த்த அய்யாத்துரை திடுக்கிட்டு குமாரசாமி காதில் ஏதோ சொல்ல, குமாரசாமியும் தடவிப்பார்த்துவிட்டு ஆமோதித்தபடி தலையாட்டினான்.

பூபதி ஒன்றும் புரியாமல் கதறிக்கொண்டே, “என்னாச்சுடா மண்டைய மண்டைய ஆட்டுறீங்க! ஏதாச்சும் செஞ்சு என் குலதெய்வத்தைக் காப்பாத்துங்கடா.”

“எது உன் குலதெய்வம்... மாடா, உள்ளே இருக்குற கன்னுக்குட்டியா?” - குமாரசாமி தன் கையில் துணியைச் சுற்றிக்கொண்டே கேட்க, “வெளங்கலயே...”

“உள்ளே கன்னு செத்துப்போயிருச்சுண்டு நெனைக்கிறேன். ஆட்டத்தைக் காணம். மாட்டை மட்டுமாவது கரை சேப்பம். செத்தவடம் பேசாமப் போயி ஒக்காரு!”

சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து அடுத்து என்ன என்பதுபோல் பார்க்க, பூபதி தன் தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்தான்.

 “என்ன குமரா, கொல்லங்கட்டப்போறியா?” என்றான் அய்யாத்துரை.

`ஆம்' என்பதுபோல் தலையாட்டினான் குமாரசாமி. உடனே அய்யாத்துரை அதற்குத் தேவையானவற்றை எடுக்கத் தொடங்கினான்.

`கொல்லங்கட்டுதல்’ என்பது, இறந்து பிறக்கும் கன்றை, பசுவின் கண்களில் இருந்தும் மூளையில் இருந்தும் மறக்கச்செய்யும் செயல்.

நாட்டுமருந்து, பொடி ஆகியவற்றைக் கனிந்த வாழைப்பழத்தில் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டான் அய்யாத்துரை. பக்கத்து வீட்டில் இருந்த சற்று பெரிய கன்றை ஓட்டிவரச் சொன்னான்.
குமாரசாமி, மாட்டின் வாலைத் தூக்கி, கையை உள்ளே விட்டுத் துழாவி கன்றின் தலையை லேசாக அசைத்துக்கொடுக்க, மாடு பெருங்குரலெடுத்துக் கத்த, அந்த முக்கலும் குமாரசாமியின் ஆட்டலுக்கும் அசைந்துகொடுத்த கன்று, மெள்ள மெள்ள வெளியேறத் தொடங்கியது.

தலை வெளியே தட்டுப்பட்டதும் ஒரே இழுப்பாக இழுத்துப்போட்டான். அக்கி, ரத்தம் என எல்லாமும் வந்தது. சதை சவ்வோடு நஞ்சுக்கொடி தொங்கியது. சிற்றுயிர் தன்னிடம் இருந்து பிரிந்ததும், வேதனையும் வயிற்றின் வெறுமையும் உணர்ந்த பசு `ம்ம்ம்மா...' என அறற்ற, குமாரசாமி கண்ணைக்காட்டியதும், அய்யாத்துரை தன் கையில் வைத்திருந்த வாழைப்பழப் பசையை வாலைத் தூக்கி உள்ளே கையை ஆழமாகத் துழாவிப் பூசி, கையை விருட்டென இழுக்க, ஊரே உடைந்து விழும்படியாகக் கத்தியது பசு.

அய்யாத்துரை இதைச் செய்துகொண்டிருக்கும் போதே, இறந்த கன்றின் மீது படர்ந்திருந்த அக்கியை எடுத்து பக்கத்து வீட்டுக்கன்றின் மீது தேய்த்தான் குமாரசாமி.
உள்ளே கலந்த மருந்தால் நிலைகொள்ளாமல் தவித்த மாடு கொட்டத்தைச் சுற்ற, கட்டுச்சங்கிலியை அறுக்க முற்பட என ஆக்ரோஷம் காட்டியது. அதன் மூளையைக் குழப்பி, பக்கத்து வீட்டுக் கன்றில் அதன் அக்கியைத் தடவியபடியே அருகில் பயந்து பயந்து அனுப்பினான் குமாரசாமி.

வாசம் பிடித்து அக்கியை நக்கத் தொடங்கியது பசு. அதன் ஆக்ரோஷம் போய், சொரசொரப்பான நாவினால், உடல் முழுக்க நக்கிக்கொடுத்தது. பால் சுரந்தது. கன்று ஆசை தீரக் குடிக்கத் தொடங்கியது.
பூபதி, இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டான்.

கூட்டத்தில் எவனோ, “ஏனப்பா... இதெல்லாம் பாவம் இல்லையா?” எனக் கேட்டான்.

“எதுடா பாவம்? இந்நேரம் மாடும் மண்டையப் பொளந்திருக்கும். கன்னு போன துக்கத்துல, அது கண்ணைக்கட்டி, இந்தா உம் பிள்ளைனு குடுத்தமா இல்லியா?”

அய்யாத்துரை சவுண்டுவிட, குமாரசாமி “விட்றா, இவனுக எது செஞ்சாலும் நொரநாட்டியம் பேசுவானுக. `சரி, நீ செய்!'னு நின்னா, அப்பிடியே ஓரமா ஒண்ணுக்கு இருந்துட்டு ஓடியே போயிருவானுக” என்றான்.

“சரி இந்தா” என, தன் கைலியில் முடிந்துவைத்திருந்த கடலை உருண்டையை எடுத்துக் கொடுத்தான். குமாரசாமியிடம் கடலை உருண்டை இரண்டைக் கொடுத்து, அவன் சொத்தை எழுதிக்கேட்டாலும் கொடுத்துவிடுவான். உருண்டையை வாயின் ஓரத்தில் அதக்கி, அதன் பாகை உறிந்துகொண்டே இருப்பான். சர்... புர்... எனச் சத்தம் வரவர, உறிவதில் அலாதி சுகம் அவனுக்கு.

குமாரசாமிக்குத்தான் முதலில் திருமணம் என்ற பேச்சு ஆரம்பித்தது. பெண் பார்க்க, நிலையூருக்குப் போனார்கள். பெண்ணை என்ன காரணத்தினாலோ குமாரசாமிக்குப் பிடிக்கவில்லை. வேண்டாம் என்ற முடிவையும் சொல்லிவிட்டான். ஆனால், அங்கு இருந்த அவளின் தோழியை அய்யாத்துரைக்குப் பிடித்துப்போனதாகச் சொல்ல, உடனே குமாரசாமியும் தனக்குப் பார்த்த பெண்ணை சரியெனச் சொல்லி, இருவரும் தோழிகளை மணந்துகொண்டார்கள்.

ஆளுக்கு ஓர் ஆண், இரண்டு பெண் என கனக்கச்சிதமான குழந்தைகள். கிய்யா... மிய்யாவென ஒரே சத்தமும் சந்தோஷமுமாகவும் ஆறு குழந்தைகளும் அருகருகிலேயே வளர்ந்தார்கள்.

குமாரசாமியின் மகள் சடங்குக்கு, அய்யாத்துரை ஊரையே அடைத்து பந்தல் போட்டு, கிடா வெட்டி என தடபுடலாக்கிவிட்டார்.

அய்யாத்துரை மகன் செல்வமும் குமாரசாமியின் மகன் முத்துவும் ஒன்றுபோல வளரத் தொடங்கினார்கள்.

ஒரு மதியம். வெயில், நின்று காய்ந்துகொண்டிருந்தது.

குமாரசாமி, திண்ணையில் கண்ணாடி முன் அமர்ந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூத்திருந்த தன் வெள்ளை முடிகளை மும்முரமாகப் பிடுங்கிக்கொண்டிருந்தார்.
“எல்லா மசுத்தையும் பிடிங்கிட்ட, இப்ப இதைப் பிடுங்குறியா?”- எனக் கூறிக்கொண்டே எதிரில் அமர்ந்தார் அய்யாத்துரை.

கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே தலையாட்டிய குமாரசாமியைப் பார்த்து, “ஏம்ப்பா குமரா, எதுண்டாலும் எங்கிட்டயே நேரடியாச் சொல்லிட்டுச் செஞ்சிருக்கலாமா இல்லையா?” என்றார்.
புரியாமல் திரும்பிப் பார்த்தார் குமாரசாமி.

``பம்புசெட்டுல குளிச்சிக்கிட்டு இருந்தேன். கூலு வந்தான்... சொன்னான். செல்வத்துக்குனு பேசிவெச்சிருந்த இடத்தை உன் சொந்தக்காரப்பய மவனுக்குக் கிரயம் பண்ணிட்டானாம். நீயும் கூட இருந்து முடிச்சியாம்ல. ஏதேது... நாங்கள்லாம் ஒண்டவந்தவிங்கதானே? உன் சாதி, இனம்னு வந்தா, காதும் காதும் வெச்சமானிக்க முடிச்சுட்டபோல.”

குமாரசாமி எழுந்து, தான் அதுவரை தரையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணாடியை எடுத்து அருகில் இருந்த கல்தூணில் ஓங்கி அடித்தார். சில்லுச்சில்லாகச் சிதறியது. ஒரு சில்லு அய்யாத்துரையின் கையில் பட, சுதாரிக்காமல் இன்னொரு கையைக்கொண்டு தடவியதும், ரத்தம் கொட்டியது.

p88b.jpg

“போயிரு!”

“நீ அந்த இடத்துல அவங்ககூட இருந்திருக்க மாட்ட, எவனோ திரிக்கிறான்னு நெனச்சுத்தான் வந்தேன். ஒனக்கு எம் மேல லேசுல கோவம் வராது. என் கையில ரத்தம் பார்த்தும் பதறாம, `போயிரு'னு சொல்ற. அப்பன்னா குத்தம் செஞ்ச மனசு குறுகுறுனு இருக்கு. என்னையை இனி நீ பாக்க முடியாது குமரா. என் கண்ணை உன்னால பாக்க முடியாது. அந்தச் சிரமத்தை நான் தரல உனக்கு.”
சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து போய்க்கொண்டிருந்தார் அய்யாத்துரை.

அன்று இரவே செல்வம் நிறை போதையில் குமாரசாமி வீட்டின் முன்பு வந்து நின்று கத்தினான். அவர் வெளியே வந்து நிற்கவும் தெரு முழுவதும் வேடிக்கை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் அவரைப் பார்த்துக் கத்தினான்.

“நல்லா கூட இருந்தே கழுத்தை அறுப்ப. `ஏன்?'னு கேட்டா, எங்க அப்பன் கையை வெட்டுவ. நல்லா இருக்குய்யா உன் நியாய மசுரு!”

குமாரசாமி ஒன்றுமே சொல்லாமல் அவனைப் பார்த்தார். தெருக்காரர்கள் அவனைச் சத்தம்போட, அப்படி இருந்தும் அவன் நகர மறுக்க, குமாரசாமியின் மகன் உள்ளே இருந்து ஒரு கடப்பாரையோடு ஓடிவந்து செல்வத்தைக் குத்தப் போய்விட்டான். தெருவே திமிலோகப்பட்டது. ஒருவழியாகப் பிரித்து அனுப்பினார்கள்.

அவ்வளவுதான்.

அய்யாத்துரை தான் சொன்னதுபோலவே குமாரசாமியைப் பார்க்க முன்வரவே இல்லை. தன் அரும்பெரும் நண்பனின் குற்றவுணர்வுக் கண்களை தன்னிடம் இருந்து தப்பக் குடுத்த திமிர் அவரிடம் இருந்தது.

நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுகாலம் கூடவே இருந்தவர்கள், அதன் பிறகு வந்த இருபத்தைந்து ஆண்டுகள் பார்த்துக்கொள்ளாமலே காலம் தள்ளிவிட்டார்கள்.

செல்வம் திருமணம், முத்துவின் கல்யாணம், பெண்களின் நல்ல நாள்... என ஒவ்வொரு வைபவமாக வர வர, இருவரும் இந்த நல்ல நாளில் இணைந்துவிடுவார்கள், அந்த நல்ல நாளில் இணைந்துவிடுவார்கள் என ஊரே காத்திருக்க, ம்ஹூம், எதற்கும் இருவரும் மசிந்துகொடுக்கவில்லை.

பகை.

``இம்புட்டுப் பகையா வெச்சிருப்பீங்க?”

p88c.jpgஏதோ விவரம் கேட்க வந்த தாசில்தார் குமாரசாமியிடம் கேட்க, அத்தனை ஆண்டுகள் யாரிடமும் காட்டாத ஆற்றாமையைக் காட்டினார்.

“எவனோ சொன்னா... அவனுக்கு எங்க போச்சு புத்தி, கேக்கலாமா எங்கிட்ட?”

தாசில்தாரும் விடவில்லை. “சரிங்கய்யா... இம்புட்டுப் பேசுறீங்க, நீங்க கூட இருந்து கிரயம் முடிச்சதா?”

தாசில்தாரை முடிக்கவிடாமல் இடைமறித்த குமாரசாமியின் உதடுகள் துடித்தன. “நான் அதை நின்னு செஞ்சிருந்தா, எனக்குக் கொள்ளி போட எம் புள்ள இருக்க மாட்டான். செய்யலைன்றது உண்மைன்னா அவனுக்கும் அதான்.”

ஏதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டார் குமாரசாமி. சற்று நேரம் கழித்துத்தான் வார்த்தை களின் அர்த்தம் பூதாகரமாகத் தெரிந்தது. அவரை ஏதோ ஓர் உணர்வு துரத்த ஆரம்பித்தது. பாதி டம்ளர் மோரை அப்படியே வைத்துவிட்டுப் போயிருந்தார் தாசில்தார்.

குமாரசாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை.

தன் மகன் முத்து எங்கே எனத் தேடினார்.

“யார்ரா அங்க... முத்து எங்கன?”

பதில் இல்லாததால், எழுந்து உள்ளே போய்ப் பார்த்தார்.

அப்போதுதான் வாசலில் அந்தச் சத்தம் கேட்டது. “அய்யா... நம்ம கடேசி வீட்டுக் கெழவி மண்டையப் போட்ருச்சுய்யா.”

இழுத்துக்கொண்டே இருந்த கிழவி, குமாரசாமியைவிட நான்கைந்து வயது மூத்த பெண். இறந்துபோய்விட்ட தகவல் அறிந்து மெள்ள நடந்து, சுடுகாட்டுக்குப் போன இடத்தில் செல்வம் இருந்ததைப் பார்த்துதான் அப்படிக் கத்தினார். எப்போதும் எந்தச் சண்டைக்கும் மல்லுக்கு நிற்கும் செல்வம், அவரைப் பார்த்ததும் அன்று அமைதியாகப் போனதும் ஊராருக்குப் பெரும் ஆச்சர்யம்.
வீட்டுக்கு வந்து குளித்து முடித்தும், குமாரசாமிக்கு காலையில் தாசில்தாரிடம் சொன்ன வார்த்தைகள் குடைந்துகொண்டே இருந்தன.

“முத்து... சாப்பிட்டியாப்பா?”

குமாரசாமியின் குரல் நெகிழ்வை உணர்ந்த அவரது மகன் முத்து, “மேலுக்கு எதுவும் சுகம் இல்லையாப்பா?” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லடா, நீ திடமா இரு.”

புரியாமல் அப்பாவைப் பார்த்தான் முத்து.

சத்தமான சத்தம், குமாரசாமியை உலுக்கிப்போட்டது. எழுந்து வெளியே நடக்க முடியாமல் நடந்து ஓடினார். தெருவெங்கும் மரண ஓலம்.

``செல்வத்த பஸ் ஏத்திப்புடுச்சாம்யா, ஸ்பாட் அவுட்!''

``சனிப் பிணம் தனியாப் போகாது, கிழவி செத்து, செல்வத்தைத் தூக்கிருச்சேய்யா!”

குமாரசாமி அப்படியே ரோட்டில் அமர்ந்தார்.

எங்கோ அழுதுகொண்டிருந்த   அய்யாத்துரையின் குரல் சன்னமாகக் கேட்டது.

ஏதேதோ சொன்னார்கள், நடந்தார்கள், ஓடினார்கள்.
 
எல்லாமே மங்கலாகத்தான் புலப்பட்டது குமாரசாமிக்கு.

செல்வத்தின் நிறைமாதக் கர்ப்பிணி மனைவியை, யாரோ கூட்டிக்கொண்டு போனார்கள்.

மயானத்தின் வேப்பமர நிழலில் அய்யாத்துரை அமர்ந்திருந்தார்.

சற்றுத் தள்ளி வெயிலில் குமாரசாமி நின்றிருந்தார்.

செல்வம் திகுதிகுவென எரிந்துகொண்டிருந்தான்.

இருவரும் கட்டிப்பிடித்து அழுதுகொள்வார்கள் என ஊர் எதிர்நோக்கி இருந்தது. அய்யாத்துரை அழுதவண்ணம் குமாரசாமியைப் பார்ப்பதைத் தவிர்த்து எழுந்துபோனார்.
“ஆனாலும் இந்தப் பகையா இவகளுக்கு... கல் நெஞ்சமய்யா. இது அடுக்குமா? கூட்டம் பேசிக் கலைந்தது.

தளர்ந்துபோன குமாரசாமி, அய்யாத்துரை அமர்ந்து இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தார். மாலை வரை அங்கேயே அமர்ந்திருந்தார். மயானம் முழுக்க மலர், பிணம் எனக் கலந்த வாடை... மயான வாடை.
மாலையில் தெருவுக்குள் நடக்க முடியாமல் நடந்து, வீடு நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.

அய்யாத்துரையிடம் துக்கம் விசாரித்துத் திரும்பிக்கொண்டிருந்த தாசில்தார், குமாரசாமியைக் கும்பிட்டார். குமாரசாமி, தாசில்தாரைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு நடந்தார்.
பூபதியின் மகன், சினைப்பிடித்திருந்த செவலைமாட்டை மேய்ச்சல் முடித்து ஓட்டிக்கொண்டுபோனான்.

முத்து, கைத்தாங்கலாக குமாரசாமியை அழைத்துக்கொண்டு போனான்.

அய்யாத்துரையின் மகள் வயிற்றுப் பேத்தி, குமாரசாமியின் திண்ணையில் நின்றிருந்தாள்.

எல்லோரும் சற்று ஆச்சர்யமாகப் பார்க்க, “உங்ககிட்ட குடுக்கச் சொன்னாரு தாத்தா” எனக் கொடுத்துவிட்டு, குடுகுடுவென ஓடினாள்.

காகிதப்பொட்டலத்தை கைகள் நடுங்கியவாறே பிரித்தார் குமாரசாமி.

பிசுபிசுவென ஈரமாக இருந்தது கடலை உருண்டை!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.