Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்...!

Featured Replies

’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்...!

mgr%20karu%20leftt_14346.jpg1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் “ விரைவில் திமுக பிளவுறும். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுவெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். எழுதும்போது அவருக்கே  சிரிப்பு வந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள். ஏன் அண்ணா, எம்.ஜி.ஆர் கருணாநிதியே கூட அதைப்படித்து சிரித்திருக்கலாம்.  ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது.

44 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது. தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த கருணாநிதி எம்.ஜி.ஆர் என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழுந்த ஈகோ யுத்தம் திராவிட இயக்கத்தில் அதிமுக என்ற இன்னொரு புதிய பங்காளி உதயமாக காரணமானது. அதிமுக 72-ல் உதயமானது என்றாலும் கருணாநிதி எம்.ஜி.ஆர் என்ற இரு அத்யந்த நண்பர்களிடையே அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனஸ்தாபம் உருவாகிவிட்டது எனலாம். இந்த மோதல் முற்றி திமுக -எம்.ஜி.ஆர் பிரிவு ஏற்பட்டது. மத்திய அரசு விரித்த வலையில் விழுந்துவிட்டார் எம்.ஜி.ஆர் என திமுக பிளவுக்கு காரணம் சொன்னார் கருணாநிதி. தன் பிரமாண்ட வளர்ச்சியை விரும்பாமல் கருணாநிதி என்னை துாக்கியெறிந்துவிட்டார் என எம்.ஜி.ஆரும் அதற்கு காரணம் சொல்லிவைத்தார்.


உண்மையில் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்கிற அறிவியல்தான் அந்த நேரத்து அரசியலை நிர்ணயித்தது. அண்ணாவின் மறைவுக்குப்பின் கருணாநிதி என்ற சாணக்கியனை மீறி எம்.ஜி.ஆர் என்ற பிரம்மாண்டம் திமுகவில் வளர்ந்துவந்தது. தலைவன் ஆவதற்கு எம்.ஜி. ஆர் விரும்பவில்லையென்றாலும் திமுகவின் தலைவர்களில் ஒருவராகவே அண்ணா காலத்திலிருந்து கருதப்பட்டார் எம்.ஜி.ஆர். அண்ணாவின் மறைவுக்குப்பின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த எதிர்ப்புகளை மீறி கருணாநிதி திமுக தலைவராகவும், முதல்வர் ஆனதற்கும் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு, தமிழக அரசியல் அறிந்த யாரும் அறிந்தது. முந்தைய சட்டமன்றத் தேர்தல்களின்போது வேட்பாளர்களின் வெற்றிக்கு 'உதவிய' எம்.ஜி.ஆரால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது.

கருணாநிதியின் கைக்கு திமுக முழுமையாக வந்தபின் எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையை கட்சிக்குள் அடக்கும் அங்குசம் கருணாநிதியிடம் இல்லை. கட்சியில் அத்தனை ஸ்திரமான இடத்தை பெற்றிருந்தாலும் அதை உறுதிசெய்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எம்.ஜி.ஆர் என்ற இன்னொரு நபர் தேவைப்பட்டதை கருணாநிதியின் மனம் ஏற்கமறுத்திருக்கலாம். அல்லது கருணாநிதிக்கான ஸ்தானத்தை தான்தான் உறுதிசெய்தோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் யாரோலோ விதைக்கப்பட்டிருக்கலாம். முடிவு திமுக எம்.ஜி.ஆர் பிளவு ஏற்பட்டது.

கட்சிக்குள் எம்.ஜி.ஆர் கருணாநிதி மனஸ்தாபம் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தநிலையில் அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டம் முதன்முறையாக எம்.ஜி.ஆர் கருணாநிதி இடையிலான பனிப்போரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. 1972 அக்டோபர் 8-ம் தேதி நடந்த கூட்டத்தில் திமுக தலைவர்கள் ஊழல் புரிந்துவிட்டார்கள் என குற்றஞ்சாட்டினார் எம்.ஜி.ஆர்.

 

mgr%20karu%20550%204_14478.jpg

“அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கட்சியின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்துவிட்டனர். திமுக மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நடந்துபோய்க்கொண்டிருந்தவர்கள் சொகுசு கார்களில் செல்வதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர். அமைச்சர்களின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துவிபரங்களை மக்கள் அறிய விரும்புகின்றனர். இதுபற்றி நான் செயற்குழுவில் பேசுவேன்'' என கொதிப்பாக பேசினார். இது திமுக தலைவர்களிடையே பரபரப்பு பொருளானது. மதுரையில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த கருணாநிதிக்கு தகவல்போனது. அன்றிரவு சென்னை லாயிட்ஸ் சாலையில் பாரத் பட்டம் பெற்றதற்காக தனக்கு நடந்தபாராட்டு விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் இதே பிரச்னையை மீண்டும் கிளப்பினார்.

கருணாநிதியின் பெயரை குறிப்பிடாமல் அவர் காரசாரமானதொரு உரையை நிகழ்த்தினார், இந்தக்கூட்டத்தில். ''எம்.ஜி.ஆர் என்றால் திமுக... திமுக என்றால் எம்.ஜி.ஆர் என்றேன்.  உடனே ஒருவர் நாங்கள் எல்லாம் திமுக இல்லையா என்கிறார். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கு உரிமை இருக்கிறது. உனக்கு துணிவிருந்தால் நீயும் சொல். உனக்கு துணிவில்லாததால் என்னை கோழையாக்காதே'' என்று பேசிய எம்.ஜி.ஆர் தொடர்ந்து 45 நிமிடங்கள் திமுகவையும் கருணாநிதியையும் வறுத்தெடுத்தார்.

மதுரையிலிருந்து கருணாநிதிக்கு உளவுத்துறை மூலம் இந்த தகவல் கொண்டு சேர்க்கப்பட்டது. அவசர அவசரமாக செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு போனது. முதல்நாள் இரவே சென்னைக்கு செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு சில விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.  மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் எம்.ஜி.ஆர்., மதியழகன், நெடுஞ்செழியன் இன்னும் இருவர் தவிர்த்து 26 பேர், 'கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளியிடங்களில் பேசிவரும் எம்.ஜி.ஆர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி' அவர்களால் கையெழுத்திடப்பட்ட வேண்டுகோள் கடிதம் முதல்வர் கருணாநிதி கையில் வந்தது. எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருப்பதாக பத்திரிகைகளுக்கு திமுக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் மூலம் செய்தி சொல்லப்பட்டது. நேற்று இன்று நாளை படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இந்த தகவல் சென்றது.

mgr%20av%2018_14496.jpg

சட்டமுறைப்படி விளக்கம் கேட்கும் நோட்டீசு அனுப்பப்படாமல் திமுகவின் தன்னிச்சையான இந்த முடிவு எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியளித்தது. கொஞ்சநேரத்தில் எம்.ஜி.ஆர் இருந்த படப்பிடிப்புத் தளம் பத்திரிகையாளர்களால் சூழப்பட, படப்பிடிப்பு முடிந்ததும் அவர்களை சந்தித்தார் எம்.ஜி.ஆர். 'அண்ணா வளர்த்த கட்சியை சர்வாதிகாரம் சூழ்ந்துவிட்டது. அதன்பிடியிலிருந்து கட்சியை திமுகவினர்தான் காக்கவேண்டும்' என ரத்தின சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிருப்தி அலைகளை கருணாநிதிக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தது.

வெறும் வாதப்பிரதிவாதங்களாக பேசப்பட்டு வந்த எம்.ஜி.ஆர் விவகாரம் உடுமலைப்பேட்டையில் இசுலாமிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்குப்பின் விபரீதமாகிப்போனது. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் திமுகவினரும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது. தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகளும் அதைதொடர்ந்து கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. திமுகவில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பை உணர்ந்த சில முக்கியத் தலைவர்கள் எம்.ஜி.ஆர் கருணாநிதி இடையே எழுந்த பிளவை சரிசெய்ய முயன்றனர். எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் சந்தித்துப் பேசினால் நிலைமை சரியாகிவிடும் என்று கூறிய அவர்கள் அதற்கான முயற்சிகளிலும் இறங்கினர்.

ஆனால் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்களான திமுகவினர், மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இவர்களுக்கிடையே நடந்த மோதல்கள் இதற்கு முட்டுக்கட்டைப் போட்டது. சட்ட நெறிமுறைகளுக்கு மாறாக தன் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் தன்னால் வருத்தம் தெரிவிக்கமுடியாது என உறுதியாக நின்றார் எம்.ஜி.ஆர். ஏதோ ஒரு முடிவை நோக்கி கருணாநிதி எம்.ஜி.ஆர் இருவரும் தள்ளப்பட்டனர்.

anna%20mgr%20600%202_14316.jpg

திட்டமிட்டபடி திமுக செயற்குழு கூடியது. “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் அவர் பயன்படுத்திக்கொள்ளாததால் கழக சட்டவிதி 31-ன்படி பொதுச் செயலாளர் அவர்மீது எடுத்த நடவடிக்கையை செயற்குழு ஏற்றுக்கொண்டு பொதுக்குழுவின் முடிவுக்கு இதை பரிந்துரைப்பதாக” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிலைமை இன்னும் தீவிரமானது. செயற்குழுவில் இருந்த பெண் உறுப்பினர் ஒருவர் எம்.ஜி.ஆர் கடந்த காலத்தில் திமுகவுக்கு பயன்பட்ட விதத்தை சுட்டிக்காட்டி எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுப்பது ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் கைவைப்பதற்கு சமம் என கண்ணீர்விட்டபடி கூறினார். ஆனால் எம்.ஜி.ஆர் கருணாநிதி இருதரப்பிலும் எந்தவித நெகிழ்வு தன்மையும் உருவாகாததால்  நிலைமை கைமீறிப்போயிருந்தது.

அண்ணாவுக்குப்பின் திமுகவுடன் அனுசரனையை கடைபிடித்துவந்த பெரியார் மற்றும் மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இரண்டு தலைவர்களிடமும் தனக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளையும் துயரங்களையும் பட்டியலிட்டு தன் நிலையை எடுத்துச்சொன்னார் எம்.ஜி.ஆர். இதற்கிடையே திமுகவினர் எம்.ஜி.ஆர் மன்ற உறுப்பினர்களுக்கிடையே தமிழகம் முழுக்க மோதல் ஏற்பட்டு ரத்தக்களறியாகிக்கொண்டிருந்தது. இந்த பரபரப்புக்கிடையில் பொதுக்குழு கூடியது. 277 பேர் எம்.ஜி.ஆர் நீக்கப்படுவதை ஆதரித்து வாக்களித்ததன் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என அறிவித்தது திமுக தலைமை.

mgr%2011%205_14591.jpgதமிழகம் முழுவதும் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள். பால்ய வயதில் நண்பர்களாகி தொழிற்முறையில் சகோதரர்களாக பழகி ஒருவருக்கொருவர் தொழில்ரீதியாக வளர்ச்சிபெற உதவிக்கொண்ட இரு ஆளுமைகள் எதிர்எதிர்அணியாக அரசியல் களத்தில் நின்றது அரசியல் களத்தில் ஆச்சர்யமும் அதிர்ச்சியாகவும் பேசப்பட்டது.  

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர் இதயவீணை படப்பிடிப்பில் இருந்தார். கட்சியின் கொடியை தன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்க்கு வைத்த, திரைப்படங்களில் திமுகவையும் அதன் தலைவரையும் எப்படியாவது சென்சாரின் கழுகுக்கண்களை மறைத்து மக்களிடம் கொண்டுசேர்த்த எம்.ஜி.ஆர் கருவேப்பிலைபோல் தான் துாக்கியெறியப்பட்டதை தாங்கிக்கொண்டார். ஆனால் அவரது ஆதரவாளர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. ஆளும்கட்சியாக இருந்தும் திமுகவினர் வெளிப்படையாக தங்கள் கார்களில் கட்சிக்கொடியை ஏற்றிச்செல்லமுடியாத நிலையை உருவாக்கினார்கள் அவர்கள்.

“எம்.ஜி.ஆர் என் மடியில் விழுந்த கனி...அதை எடுத்து என் இதயத்தில் பத்திரப்படுத்திக்கொண்டேன்” என பத்தாயிரம் பேர் சூழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார் அண்ணா. எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதையே சற்று மாற்றிப்போட்டு “கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதுதான் துாக்கி தூர எறியவேண்டியதானது” என தன் வார்த்தை ஜாலத்தோடு பதில்சொன்னார், கருணாநிதி.

இறுதிக்காலம் வரை திரைத்துறையில் ராஜாவாக கோலோச்சியபடி அண்ணாவின் கட்சிக்கு ஆதரவாளராக தன் இறுதிவாழ்க்கையை கழிக்க நினைத்த எம்.ஜி.ஆர் அதற்கு நேர்மாறாக அடுத்த பல ஆண்டுகளுக்கு பரபரப்பு அரசியல்வாதியாக மாற அடித்தளம் போட்டது கருணாநிதியின் நடவடிக்கைகள்.

“நான் இறக்கும்வரை அண்ணாவின் கழகத்தில்தான் இருப்பேன். நான் இறக்கும்போது என் உடலில் கழகத்தின் கொடிதான் போர்த்தப்படவேண்டும்” என்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு பெருமிதத்துடன் பேட்டியளித்த எம்.ஜி.ஆர், பேட்டி வெளியான சில மாதங்களில் திமுகவை எதிர்த்து ஒரு கட்சியையே உருவாக்கும் கட்டாயத்துக்கு உள்ளானதுதான் வரலாற்றின் விளையாட்டு. கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் சாரிசாரியாக தன்னை வந்து சந்தித்த ரசிகர்களும், திமுகவின் அதிருப்திக் கூட்டமும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகக் காரணமானார்கள்.

கழகத்தில் ஆரம்பகட்டப் பிளவை இருபெரும் ஆளுமைகளும் பேசித்தீர்த்துக்கொள்ளாதபடி பார்த்துக்கொண்ட நந்திகளும் இதற்கு முக்கிய காரணமானார்கள். காலத்தின் தேவையும் கழகத்தில் சிலருடைய உள்நோக்கமும் எம்.ஜி.ஆருக்கு நிஜத்தில் இன்னொரு பாத்திரத்தை வழங்கியது.

mgr%20anniversary%20600%20admk%20board_1

எதிலும் அண்ணாவை முன்னிறுத்தி செயல்படும் எம்.ஜி.ஆர் கட்சிப்பெயரிலும் அண்ணாவின் பெயரை சேர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை 1972-ம் ஆண்டு இதே நாளில் துவங்கினார். திண்டுக்கல்லில் இடைத்தேர்தலில் பெற்ற முதல் வெற்றியை தன் ஆயுட்காலம் வரை மக்களின் துணையால் தக்கவைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகாமல் இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் எதிரொலியாக உருவான ஒரு கட்சி கிட்டதட்ட 44 ஆண்டுகள் தமிழகத்தில் வெற்றிகரமாக கோலோச்சிவருவது பெரும் சாதனை. அந்த சாதனைக்கு எம்.ஜி.ஆர் என்ற தனிநபரே காரணம்.

 எம்.ஜி.ஆரால் பகிரங்கமாக முடிசூட்டப்படாத நிலையில் தன் உழைப்பால் மட்டுமே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு கட்சியை பொன்விழா ஆண்டை நோக்கி நகர்த்திவந்திருப்பவர் அவர்.

ஆனால் கட்சியின் 45 வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தினை முன்னெடுக்கும் இந்த வேளையில் அவர் மருத்துவமனையில் படுத்துக்கிடப்பதுதான் அந்த கட்சியின் துரதிர்ஷ்டம்.

http://www.vikatan.com/news/tamilnadu/69826-45th-anniversary-of-aiadmk.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.