Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நான் தி.மு.க-வை ஆதரிக்கவில்லை... வைகோ அ.தி.மு.க-வை ஆதரிக்கவில்லை!' திருமாவளவன்

Featured Replies

'நான் தி.மு.க-வை ஆதரிக்கவில்லை... வைகோ அ.தி.மு.க-வை ஆதரிக்கவில்லை!' திருமாவளவன்

PKS_2988_13367.JPG

மிழக அரசியலில் தற்போதைய  ‘லைம்லைட்’ அரசியல்வாதி திருமாவளவன்தான். எதிர்க்கட்சிகள் எல்லாம் கனத்த மௌனத்துடன் இருந்தபோது, அப்போலோவுக்கு முதல் ஆளாகப் போய், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரித்தார். அதன் பிறகுதான், ராகுல் காந்தி முதல் வைகோ வரை வந்தனர். அப்போலோ, தமிழகத்தின் அரசியல் களமாக மாறியது. மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் எல்லாம், தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை விமர்சித்துக் கொண்டிருந்தபோது, அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று அறிவித்து ம.ந.கூ-யில் சலசலப்பை ஏற்படுத்தினார். இப்படிப் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் திருமாவளவனை அவருடைய கட்சி அலுவலகத்தில் சந்திதோம்.

காவிரிப் பிரச்னைக்காக தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை,  ம.ந.கூ தலைவர்களில் மற்றவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், நீங்கள் மட்டும் அதில் பங்கேற்க ஆர்வம் காட்டியது ஏன்? 

“காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல... எதிர்கட்சிக்கும் உண்டு” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான் முதலில் எடுத்துரைத்தது. கடந்த ஆகஸ்டு மாதமே, நாங்கள் இதைச் சொன்னோம். அன்றைக்கு தி.மு.க அதை ஏற்கவில்லை. காலம் கடந்து, தற்போது அந்தக் கூட்டத்தை தி.மு.க நடத்தி உள்ளது. ஆனாலும், அதில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஏனென்றால், காவிரி சிக்கலைத் தீர்ப்பதில் கட்சி வேறுபாடு, தேர்தல் கூட்டணிகளைத் தாண்டி, தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அந்த அடிப்படையில்தான், ம.ந.கூ-யில் உள்ள மற்ற கட்சிகள், தி.மு.க ஒருங்கிணைக்கும் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவெடுத்தபோது, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். 

ம.ந.கூ தலைவர்கள் ஏன் அதை ஏற்கவில்லை? 

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், “தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் தி.மு.க நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நாம் கலந்து கொள்வது, தொண்டர்களிடம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று வலியுறுத்தினார்கள். ஒரு கூட்டணியில் உள்ள 4 கட்சிகளில் 3 கட்சித் தலைவர்களின் முடிவு பெரும்பான்மையாக இருந்ததால், கடைசியில் வி.சி.க-வும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டு, தி.மு.க-வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 

IMG_0311_13006.JPG

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரிக்க, அப்போலோ மருத்துவமனைக்கு முதல் ஆளாகப் போனீர்கள். அப்போது, இதேபோல், ம.ந.கூ தலைவர்களோடு ஆலோசித்தீர்களா?

அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிக்கச் சென்றது, மனிதாபிமான அடிப்படையில் நிகழ்ந்தது. அதில் அரசியல் நோக்கம் கிடையாது. அதை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அது தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாது. அதனால், அதற்கு ம.ந.கூ தலைவர்களோடு நான் ஆலோசனை நடத்தவில்லை. 

தமிழக நலனைப் பிரதானமாகக் கொண்டது, தி.மு.க-வின் அனைத்துக் கட்சிக்கூட்டம். இதில்கூட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட முடியவில்லை என்றால், அவரவர் அரசியல் ஆதாயத்தை மட்டும்தான் கணக்குப் போடுகிறார்களா? ம.ந.கூட்டணி இதற்கு விதிவிலக்கு இல்லையா?  

உங்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் காவிரிப் பிரச்னையில் மட்டுமல்ல... ஈழப்பிரச்னை உள்பட அனைத்து விவகாரங்களிலும் தங்கள் கட்சிகளின் நலன்களை முன்னிறுத்தியே முடிவுகளை எடுக்கின்றன. அதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இது ஒரு தர்ம சங்கடமான நிலைதான். விடுதலைச் சிறுத்தைகள் இந்த விஷயத்தில், ம.ந.கூ தலைவர்கள் எடுத்த முடிவை மீறியிருக்கலாம். ஆனால், கடந்த 15 மாதங்களாக, எங்களோடு மாற்று அரசியலை முன்னெடுத்த தோழமைக் கட்சிகளை பகைத்துக் கொள்வதன் மூலம், மறுபடியும் அரசியல் கட்சிகள் பிளவுபட்டே நிற்கும் நிலைக்கு வித்திடும். எனவே, நாங்கள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக்கூட்டணியை நாங்களே உடைத்தோம் என்கிற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சமும் எற்பட்டது. அதனால், வலியோடும் மிகுந்த உளைச்சலோடும் தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டி வந்தது.

PKS_2979_14148.JPG‘‘காவிரிப் பிரச்னைக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழக நலன் சார்ந்தது... இதில் கலந்து கொள்வது 3 தொகுதி இடைத்தேர்தலைப் பாதிக்காது” என்று உங்களால் ம.ந.கூ தலைவர்களுக்குப் புரியவைக்க முடியவில்லையா?

நான் இதைப்பற்றி பேசும்போது, அவர்கள் இதைவிட மிக முக்கியமான ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். நடுவர் மன்ற தீர்ப்பு என்பது 2007-ம் ஆண்டு வெளியானது. அப்போது தி.மு.க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தையோ ஒழுங்காற்றுக் குழுவையோ அமைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தற்போது, அவர்கள் எடுக்கிற முயற்சி என்பது, அவர்களின் அரசியல் ஆதாயத்துக்குத்தான் என்கிற வாதத்தை முன்வைக்கிறார்கள். தி.மு.க-வுக்கு உள்நோக்கம் இருப்பதாக வலுவாக நம்புகிறார்கள். பொருத்தமான காலச்சூழலில் இல்லை என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், எங்களைப் பொறுத்தவரை, காவிரிப் பிரச்சைனையில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை வலியுறுத்த வேண்டும் என்றுதான் பார்க்கிறோம். இதில் தி.மு.க-வுக்கு லாபமா? வி.சி.கவுக்கு நட்டமா? என்பது முக்கியமில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. 

 

2007-ல் நடந்தது பழைய கதை. தி.மு.க தற்போது தன் தவறை உணர்ந்து திருந்தியிருக்கலாம் அல்லவா!. மேலும், இது அரசியல் இலாப-நட்டக் கணக்குகளைத்  தாண்டி, தமிழக நலன் சார்ந்த விவகாரம். இதில், ஒன்றுபட்டு நிற்க வேண்டியது தமிழக அரசியல் கட்சிகளின் பொறுப்பும் கடமையும்தானே? 

நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை, நான் மிகவும் வலியும் மனஉளைச்சலுடனும் தான் எடுத்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால், என் கட்சி நிர்வாகிகளின் முடிவுக்கு எதிராக இந்த நிலைப்பாட்டை நான் எடுத்துள்ளேன். தமிழகச் சூழலில் எப்போதும், தி.மு.க, அ.தி.மு.க என்கிற இரண்டு கட்சிகளில் ஒரு கட்சியின் முடிவை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற இரட்டை நிலைதான் நீடித்து வருகிறது. இதைக் கடந்து, மாநில உரிமைகள் தொடர்பான, மொழி, இனம் தொடர்பான பிரச்னைகளிலும் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும். 

திருமாவளவன் தவிர்த்து, ம.ந.கூ-வில் இடம்பெற்றுள்ள மற்ற தலைவர்கள், தி.மு.க மீது உள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக புரிந்து கொள்ளலாமா? 

காவிரிப் பிரச்னைக்காக தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கலந்து கொள்ளவேண்டும் என்ற எங்களுடைய முயற்சி, தி.மு.க ஆதரவு  நிலைப்பாடு அல்ல; அதேபோல, ம.தி.மு.க-வும் இடதுசாரிகளும் தி.மு.க மீது உள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாகவும் நான் கருதவில்லை. அதேபோல, அவர்கள் அ.தி.மு.க ஆதரவு நிலை எடுத்து விட்டார்கள் என்றும் நான் புரிந்து கொள்ளவில்லை.  தி.மு.க மீது வைகோ மற்றும் இடதுசாரி தலைவர்களுக்கு இன்னும் நம்பகத்தன்மை உருவாகவில்லை என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். தி.மு.க அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது. அதற்கு மக்கள் நலக்கூட்டணி பலியாகி விடக்கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். மாறாக, தி.மு.க மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அவர்கள் எங்களிடம் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. 

IMG_0049_13471.JPG

தி.மு.க ஓருங்கிணைத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததை விளக்கி நீங்கள் கடிதம் எழுதினீர்கள். அதற்கு பதில் எழுதிய மு.க.ஸ்டாலின், உள்ள நிலை-உண்மை நிலையைப் புரிந்து கொண்டேன் என்று பதில் எழுதியிருக்கிறாரே?

மு.க.ஸ்டாலினின் உள்ள நிலை- உண்மை நிலை அந்தக் கடிதத்தில் வெளிப்பட்டுள்ளது. காவிரிப் பிரச்னையை, தேர்தல் அரசியலோடு இணைத்துப் பார்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார். இதைத்தாண்டி, அதில் வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. 

திருமாவளவன் முதல் ஆளாக அப்போலோவுக்குப் போய் நலம் விசாரித்தது... முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார் என்று பேசியது... ம.ந.கூ., அ.தி.மு.க-வின் 'B' டீம் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறதே?

நான் அப்போலோ சென்றதில் எந்த அரசியலும் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், முதலமைச்சர் உடல்நிலை பற்றிய வதந்திகள் தொடர்ந்து வந்த நிலையில், அப்போது தமிழக அரசியலில் ஒரு இறுக்கம் இருந்தது. முதலில் அதை யார் உடைப்பது என்ற மௌனம் இருந்தது. அதை நான் செய்தேன். அந்த அரசியல் இறுக்கத்தை உடைக்கத்தான் நான் முதல் ஆளாகப் போனேன். மறுநாள் வைகோ, முத்தரசன் என்னைப் பாராட்டினார்கள். "ஒரு தயக்கத்தையும் இறுக்கத்தையும் நீங்கள் உடைத்துள்ளீர்கள்" என்று சொன்னார்கள். 

காவிரிப் பிரச்னையில், மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பை, தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை எப்படித்தான் காட்டுவது? 

ஆளும் கட்சியின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படவேண்டும். அதுதான் உண்மையான அனைத்துக் கட்சி கூட்டம். தற்போது, தி.மு.க ஒரு நல்ல முன் முயற்சியை எடுத்திருந்தாலும், இதில் ஆளும் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை. அப்படிப் பார்க்கும்போது, தி.மு.க கூட்டியது அனைத்துக் கட்சி கூட்டமல்ல. மாறாக, இதை ஆளும் கட்சி முன்னெடுக்க வேண்டும். ஆளும் கட்சி அப்படிச் செய்தால், தி.மு.க உள்பட எந்த எதிர்க்கட்சியாலும் அதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள்தான் இதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாகவும் இருக்கிறார்கள். மேலும், தி.மு.க இந்தக் கூட்டத்தை கூட்டுவதே அடிப்படையில் தவறானது என்பதுதான் ம.ந.கூ தலைவர்களின் நிலைப்பாடு. 

தி.மு.கவோடு காட்டும் நெருக்கம், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருநாவுக்கரசரோடு சந்திப்பு என்று ம.ந.கூ தலைவர்களில் நீங்கள்தான் பரப்பாக உள்ளீர்கள். எதிர்காலத்தில் புதிய திட்டம் இருக்கிறதா?

PKS_2976_14475.JPGடெல்லியில் உள்ள அரசியல் கலாசாரத்துக்கும் தமிழக அரசியல் கலாசாரத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. டெல்லியில் எதிரும் புதிருமாக உள்ள அரசியல் கட்சிகள் கூட, பொது நிகழ்ச்சிகளில் சாதரணமாக கலந்து கொள்கிறார்கள். அண்டை மாநிலங்களிலும் இந்த சுமூக நிலை இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் தி.மு.க கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து நிற்கின்றன.  ஒருவருக்கொருவர் சாதரணமாகச் சந்தித்துக் கொள்வதே தவறாக விமர்சிக்கப்படுகிறது. பி.ஜே.பி.யை விமர்சித்தால், பிரதமர் மோடியை சந்திக்கக் கூடாது என்றும் அ.தி.மு.க-வை விமர்சித்தால், அப்போலோவுக்கு போகக்கூடாது என்றும் தி.மு.கவை விமர்சித்தால் தி.மு.கவின் நிலைப்பாட்டை வரவேற்கக் கூடாது என்றும் இங்கே உள்ளவர்களின் பார்வையாக உள்ளது. அதுவே அரசியல் விமர்சகர்களின் பார்வையாகவும் உள்ளது. அது தவறு.  கொள்கைரீதியிலான விமர்சனங்கள் வேறு. தனிப்பட்ட நட்பு உணர்வு என்பது வேறு. எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்ததுபோல், திருநாவுக்கரசர் என்னையும் சந்திக்க வந்தார். அதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. எங்கள் அலுவலகத்தின் அருகில் உள்ள பி.ஜே.பி தொண்டர் ஒருவரின் வீட்டுக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எங்கள் அலுவலகத்துக்கும் வந்தார். அதனால், நாங்கள் கொள்கையில் சமரசம் செய்து கொண்டோம் என்று அர்த்தம் ஆகாது. பொன்.ராதாகிருஷ்ணன் என்னைச் சந்தித்ததால், பொது சிவில் சட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கப்போவது இல்லை. பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை புறக்கணிக்கவும் போவதில்லை. அவர் நிலைப்பாடு அவருக்கு. என் நிலைப்பாடு எனக்கு. 

மக்கள் நலக்கூட்டணிக்குள் சலிப்பு வந்துவிட்டது. அவர்களுக்குள் விரைவில் பிளவு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறதே? 

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. அப்போது, இந்தக் கூட்டணி இனி இருக்காது என்றுதான் பலரும் விமர்சித்தார்கள். ஆனால், உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்று முதலில் அறிவித்தது விடுதலை சிறுத்தைகள்தான். தேர்தலில் தோற்றுப் போனதால்,  நாங்கள் முன்வைத்த மாற்று அரசியல் என்பது பிழை என்று சொல்லிவிட முடியாது.  தேர்தல் களத்தில் கூட்டணியாகவும் போராட்டக் களத்தில் கூட்டு இயக்கமாகவும் இயங்குவோம் என்று நான் அறிவித்தேன். அந்த அடிப்படையில்தான், நாங்கள் உள்ளாட்சித் தேர்தலிலும் இணைந்து செயல்படுவது என்று தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டோம். காவிரிப் பிரச்னையில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைந்து ரயில் மறியல் போராட்டங்களில் பங்கு கொண்டோம். என் பிறந்தநாளில், மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களை மட்டும் அழைத்து, மதச் சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை நடத்தினோம். செப்டம்பர் 21 அன்று நதி நீர் உரிமை பாதுகாப்பு மாநாட்டையும் நடத்தினோம். அதனால், மக்கள் நலக்கூட்டணி தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. அதில் சலிப்பும் இல்லை. பிளவும் இல்லை. 

ம.ந.கூட்டணியின் முடிவுகள் தனிப்பட்ட முறையில்,  விடுதலைச் சிறுத்தைகளின் நோக்கத்துக்கு தடையாக, சங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளதா? நீங்கள் எப்போதாவது அப்படி நினைத்ததுண்டா? 

ஒரு கூட்டணியில் கருத்து மாறுபாடுகள் வருவது, சங்கடங்கள் ஏற்படுவது இயல்பானதுதான். பொது நோக்கங்களுக்காக அவற்றை பின்னுக்குத் தள்ளி முன்னோக்கி இயங்குவதுதான், ஒரு முற்போக்கான அரசியலாக இருக்க முடியும். ஆகவே, சங்கடமான சூழல்கள் வந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை நாங்கள் பொருட்படுத்தியதில்லை. 

IMG_0294_14266.JPG

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை புறக்கணித்த முடிவு ஏன்? 

3 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட்டு இருக்க வேண்டும். அதுதான் சரியானது. ஆனால், இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை, விடுதலைச் சிறுத்தைகள்தான் முதலில் முன்வைத்தோம். இது தோல்வி பயத்தால் எடுக்கப்பட்ட முடிவல்ல. இடைத் தேர்தலில் பொதுவாக ஆளும் கட்சியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். அத்துமீறல் தலைவிரித்தாடும். அதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில், இடைத்தேர்தலை ஒரு புறக்கணிப்பாக அறிவித்து இருக்கிறோம். 

ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, கவர்னர் கூட பார்க்கமுடியாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே?  

கவர்னர் சந்திக்கவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்த முடியாது. அவர் சந்தித்து இருக்கலாம்; சில காரணங்களுக்காக அதை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்; அதற்கான தேவையும் இருக்கலாம்; நிர்பந்தங்களும் இருக்கலாம்; ஆளுநர் முதலமைச்சரை சந்தித்தார் என்பதை நம்மால் எப்படி உறுதிப்படுத்த முடியவில்லையோ... அதுபோல, ஆளுநர் அவரை சந்திக்கவில்லை என்பதையும் நாம் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அமெரிக்கா போன்ற ஏகாத்திபத்திய நாடுகளில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்கூட தங்கள் உடல்நிலை குறித்து வெளிப்படையாக விவாதிக்கிறார்கள். அதை இந்திய அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு இடம்கொடுப்பதும் ஒருவகையான பலவீனமே. அது ஆட்சி நிர்வாகத்தின் பலவீனமே என்றுதான் நான் பார்க்கிறேன். 

213610_14020.jpg

முதலமைச்சரின் இலாக்காக்கள், அமைச்சர் ஓ.பி.எஸ்-க்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், முதல்வர் ஜெயலலிதா அவர்களாலேயே ஏற்கனவே 2 முறை அடையாளப்படுத்தப்பட்டவர். அதனால், இந்த முறையும் அவரே சரியான தேர்வு. அவரைத் தவிர வேறு யாரையாவது நியமித்து இருந்தால்தான், அது மிகப்பெரிய சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கும். மேலும், ஓ.பி.எஸ். முதல்வராக பொறுப்பு வகித்த காலத்தில் எந்தச் சர்ச்சைக்கும் இடம் கொடுத்தவர் அல்ல. அதனால், அவரால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது ஒரு பொதுக்கருத்தாக இருக்கிறது.

முதலமைச்சர் இல்லாத தமிழக அரசாங்கத்தின் நிர்வாகம் தேக்கம் அடைந்துள்ளதாக கருதுகிறீர்களா?

கட்டாயமாக தேக்கநிலை இருக்கிறது. அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. முதல்வர் ஜெயலலிதா செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார் என்ற நிலையில்தான், மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக காவிரிப் பிரச்னையில் முடிவு எடுத்தது. அப்படித்தான்  நம்மால் யூகிக்க முடிகிறது. ஒருவேளை முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருந்திருந்தால், மத்திய அரசு, காவிரி விவகாரத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்காது என்பது ஒரு பொதுவான கருத்தாக இருக்கிறது. இதுவே, தற்போது அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கு ஒரு சான்று. 

தி.மு.க தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை தனது அரசியல் வாரிசு என்று அறிவித்து உள்ளார். ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எனும் பேரியக்கத்தை சிறப்பாக வழிநடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

226257_14089.jpg

தமிழக அரசியலில், நீண்ட நெடிய அனுபவம் உள்ள மூத்த தலைவர் கலைஞர். அவர் வழிநடத்திய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தனது வாரிசை அறிவிக்கிறார் என்றால், அது சிறப்பான தேர்வாகத்தான் இருக்க முடியும். அவருடைய தேர்வை விமர்சிப்பதற்கு எனக்குப் போதிய அனுபவம் இல்லை. 

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி, தற்போது ஆளும் மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சி. இரண்டையும் ஒப்பிட முடியுமா? 

தேசத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவ பலம் என்ற அடிப்படையில் இரண்டு ஆட்சிகளையும் ஒப்பிடுவதை விட, தலித்துகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் மட்டும் நான் ஒப்பிட விரும்புகிறேன். அந்த வகையில், இந்த ஆட்சியில் பிரதமரே வேதனைப்படும் அளவுக்கு தலித்துகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். சிறுபான்மையினரும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின்போது இல்லாத அளவுக்கு பி.ஜே.பி ஆட்சியில் ஜம்மூ - காஷ்மீர் மக்கள் அமைதியற்ற முறையில் வாழும் போக்கு அதிகரித்துள்ளது. எப்போதும் ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கிச்சூடு, வன்முறை என்று அதிகரித்துள்ளது. 

விஜயகாந்த் இணைந்த பிறகுதான் ம.ந.கூ அதிகம் விமர்சிக்கப்பட்டது. அது தோல்விக்கு மிக முக்கியக் காரணம் என்று வைகோ, உங்கள் பிறந்தநாள் விழாவில் பேசினார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

இதை மறுகூறாய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். தோல்விக்கான காரணத்தை ஒரு கட்சியின் மீது திணிக்கத் தேவை இல்லை. அந்தத் தோல்விக்கு விடுதலைச் சிறுத்தைகளும்கூட பொறுப்பு எடுத்துத்தான் ஆக வேண்டும். 

http://www.vikatan.com/news/coverstory/70582-i-dont-support-dmk-vaiko-doesnt-support-admk---thirumavalavan.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.