Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமல் என்றொரு பித்தர்!

Featured Replies

கமல் என்றொரு பித்தர்!

 

15003268_1177829492265743_49406389619505

 
 
 
kamal1_3072075f.jpg
 

கமல்ஹாசனின் 62-வது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

எந்த ஒரு கலைக்கும் ஆதாரமாக ஒரு பித்து நிலை இருக்கும். அது கலை மீது கொண்ட பித்து மட்டுமல்ல; அந்தக் கலைஞருக்கு இயல்பாகவே இருக்கும் ஒரு பித்தும் கூட. அதுதான் கலையில் வெளிப்படுகிறது. வெறி, உத்வேகம், உன்மத்தம், கலை போதை, கலகக் கூறுகள், மரபை மீறுதல், வழக்கத்துக்கு மாறாகச் சிந்தித்தல், தாகம், நிராசை எல்லாம் கலந்ததுதான் இந்தப் பித்து நிலை.

சார்லி சாப்ளினை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது 'சிட்டி லைட்ஸ்' படத்தின் தொடக்கத்தில் ஒரு முக்கியமான காட்சி வரும். கண் தெரியாத கதாநாயகி போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் ஓரத்தில் பூ விற்றுக்கொண்டிருப்பார். சாலையின் ஏழை நாடோடியான சாப்ளின் வாகனங்களையெல்லாம் தாண்டி சாலையைக் கடக்க வேண்டும். இந்தக் காட்சியின் மூலம் சாப்ளின் ஒரு பணக்காரர் என்ற உணர்வு அந்தக் கதாநாயகிக்கு ஏற்பட வேண்டும். சாப்ளின் ஏதேதோ செய்துபார்த்தார். இரண்டே நிமிடங்கள் வரும் அந்தக் காட்சிக்காக 342 ஷாட்டுகள் எடுத்தார் சாப்ளின். பல நாட்களுக்குப் பிறகு அமைந்ததுதான் படத்தில் இருக்கும் அந்த ஷாட். சாலையைக் கடக்க முடியாமல் கார் ஒன்றுக்குள் நுழைந்து வெளிவந்து காரின் கதவைச் சாத்தும்போது அந்த சத்தத்தை வைத்து யாரோ ஒரு பணக்காரர் காரிலிருந்து இறங்குகிறார் என்று நினைத்துக்கொண்டு அந்தப் பெண் அவரிடம் பூ வாங்கச் சொல்வாள். பிழைக்கத் தெரிந்தவர்கள், சாதுர்யமானவர்கள் இந்தக் காட்சிக்காக அவ்வளவு நாட்களையும் படச்சுருள்களையும் அவற்றுக்கான பணத்தையும் இப்படி இறைப்பார்களா? அதுதான் சாப்ளினின் பித்து. பித்து நிலை சுழன்றாடி உச்சத்தில் பிறக்கும் கலைதான் எப்போதும் உன்னதமாக இருக்கும். சாப்ளினுடன் யாரையுமே ஒப்பிட முடியாதென்றாலும் கமலும் அந்த வரிசையில் ஒரு பித்துநிலைக் கலைஞன்தான்.

இத்தனை ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளவும் வணிக ரீதியில் வெற்றிகரமாக இருப்பதற்கும் எப்படியெல்லாம் இருந்திருக்கலாம்? ஆனால், கமல் அப்படி இருக்கவில்லை. அதனால்தான் ஒரு 'ராஜபார்வை' எடுத்தார்; சாகசத்துக்காக 'விக்ரம்' எடுத்தார்; ஓடவே வாய்ப்பில்லாத ஒரு படமான 'ஹேராம்' எடுத்தார்; இன்னும் 'குணா', 'மகாநதி', 'அன்பே சிவம்', 'ஆளவந்தான்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். அவரது உருவாக்கத்தில் வெளியான பெரும்பாலான நல்ல படங்கள் வெற்றியடையாதவை என்பதைக் கவனிக்க வேண்டும். இதற்காக கமல் சமரசம் இல்லாத கலைஞர் என்று சொல்லிவிட முடியாதுதான். நல்ல படைப்புகளை உருவாக்குவதற்கான அடிப்படைக்காக வணிகப் படங்களில் தொடர்ந்தும் அதிகமாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் மாட்டிக்கொண்ட வணிக சினிமாவின் சூத்திரம் அவரது நல்ல கலைப் படைப்புகளையும் பாதிக்க, அவை வணிகரீதியிலான வெற்றியையும் கலைரீதியிலான முழுமையையும் அடையாமல் போனது பெரும் துரதிர்ஷ்டம். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் அவரது வணிகப் படங்களிலும் கலைப் படைப்புகளின் தாக்கங்கள் இருப்பதால் வெகுஜன ரசனையின் தரம் மேம்பட அவரும் ஒரு காரணமாய் இருப்பதுதான்.

கமலின் பித்து நிலைக்கு வருவோம். கமலின் கலைப் பயணத்தில் தொடக்கம் முதலே அவரிடம் ஒரு பித்து நிலை வெளிப்பட்டது. இயல்பாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட இயல்புகள், மரபுகளை மீறுவது (கலைப்)பித்தர்களின் இயல்பு.

kamal_hasan_3072076a.jpg

'அபூர்வ ராகங்கள்' கதாநாயகன் அப்படிப்பட்ட பித்தன்தான். 70-களின் இடைப் பகுதியிலேயே தீவிர இடதுசாரியாக அந்தப் படத்தில் கமல் நடித்திருப்பார். தன்னைவிட இருபது வயது அதிகமான பெண்ணைக் காதலிக்கும் கதாபாத்திரம். அவரது பித்து நிலையைக் கூட இருந்து ரசித்து, அதன் தீவிரத்தைத் தணிக்கும் ஒரு பாத்திரம் ஸ்ரீவித்யாவுடையது. ஆனால், கமல் என்றொரு கலைஞனிடம் அங்கு ஆரம்பித்த தீவிரம் இப்போதுவரை குறையவில்லை என்பது அவரது கலைத் தொடர்ச்சியின் ஆதாரசுருதியை நமக்குக் காட்டுகிறது. வெளிர் நிறக் கதாநாயகனுக்கென்று தமிழ் சினிமா வகுத்துவைத்திருந்த பாத்திரங்களை மட்டும் நடித்துக்கொண்டு கமல் இருந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. கிராமத்துக் கதாபாத்திரம், சற்றே உந்தி உந்தி நடப்பவன், கோவணம் கட்ட வேண்டும், போய்க் கட்டிக்கொண்டு வா என்று பாரதிராஜா சொன்னவுடன் எந்த நம்பிக்கையில் கமல் கோமணம் கட்டிக்கொண்டு நடிக்க ஆயத்தமானார்?! 'மனிதரில் இத்தனை நிறங்களா?' படத்தில் கமல் செய்த கதாபாத்திரமும் இதுவரை அதிகம் பேசப்படாதது.

சினிமாவில் கிட்டத்தட்ட பெரும்பாலான துறைகளில் கால்வைத்தவர் கமல். இயக்குநர் ஆசையில் இருந்தாலும் முதலில் நடிகராகவே வெளிப்பட்டார். வெறும் நடிகராக இல்லாமல் நடிகர்-படைப்பாளியாகத்தான் அப்போது அவர் வெளிப்பட்டார் என்பதற்கு அப்போது வெளியான பெரும்பாலான முன்னோடிப் படங்களில் இருந்த அவரது பங்களிப்பே சாட்சி. பாரதிராஜாவின் முதல் படம், பாலு மகேந்திராவின் முதல் படம் (கோகிலா), ஆர்.சி. சக்தியின் படங்கள், மறைமுகமாக மகேந்திரனின் படத்தில் பங்களிப்பு என்று கமல் ஒரு சூறைக்காற்றாகச் சுழன்றடித்துக்கொண்டிருந்தார். அறுபதுகளின் பாணியை விடுத்து எழுபதுகளில் பாலச்சந்தர் எடுத்த சற்றே வித்தியாசமான முயற்சிகள் அனைத்திலும் கமலின் பங்களிப்பு இருந்தது.

அதுவரை கிராமத்துப் படங்கள் எடுத்த பாரதிராஜாவை 'சிவப்பு ரோஜாக்கள்' எடுக்க எந்தத் துணிச்சல் தூண்டியிருக்குமோ அந்தத் துணிச்சலில் ஏறி கமலும் அந்தப் படத்தில் அருமையான சவாரி செய்திருப்பார். இன்று அந்தப் படத்தின் நிறைகள்-குறைகள் எல்லாம் பேசப்பட்டுவிட்டன. உலகத் திரைப்படங்கள், உள்ளூர்த் திரைப்படங்களின் உச்சங்களில் அதற்கு இடம் இல்லாமல் போகலாம். ஆனால், படத்தின் இறுதிக் காட்சியில் குளோஸப் காட்சியில் நீண்ட நேரம் காட்டப்படும் கமல் முகம் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு தமிழ் சினிமாவின் உச்ச நடிப்புகளில் ஒன்று. உலக சினிமாவில், 'சிட்டி லைட்ஸ்' படத்தின் இறுதிக் காட்சியிலும் சாப்ளின் முகம் வியப்பிலும் துயரத்திலும் இயலாமையிலும் விரிந்து மலர்வதுபோல் நடித்திருக்கும் காட்சி அதுவரையிலான திரைப்படங்களின் உச்ச நடிப்பு என்று புகழப்பட்டது. தமிழ் சினிமாவின் உச்ச நடிப்புகளுள் ஒன்றாக 'சிவப்பு ரோஜாக்கள்' இறுதிக் காட்சியை நாம் அப்படிக் குறிப்பிடலாம். கமல் என்றொரு பித்துநிலைக் கலைஞனால்தான் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்த முடியும்.

'மூன்றாம் பிறை' படம் ஒரு காவியம் என்றும் கேலிக்கூத்து என்றும் இருவகையிலும் திரைப்பட ரசனையாளர்களால் இன்று மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக, அதன் இறுதிக் காட்சியில் கமலின் நடிப்பு. எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அதுவரையிலான நடிப்பை விட, ரயில் புறப்பட்டுப்போனதும் நிராதரவாக, துயரம் ததும்ப, உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கமல் நடந்துவரும் காட்சியின் வலியை அதே போன்று நிராதரவாக விடப்பட்டவர்களால்தான் உணர முடியும். அதுவரை ஹீரோவாக ஒரு மாணவன் கண்டிருக்கும் ஆசிரியர், கோமாளி போன்று நடந்துவரும்போது அந்த மாணவன் பார்க்கும் காட்சி, நடந்துவந்து சிமெண்ட் பெஞ்சில் கமல் உட்கார்ந்திருப்பது, பின்னணியில் 'உனக்கே உயிரானேன் இந்நாளில் எனை நீ மறந்தாயே' என்று ஒலிக்கும் கண்ணதாசன் வரிகள் எல்லாம் சேர்ந்து நம்மைக் குமுற வைக்கின்றன. இதெல்லாம் யதார்த்த வாழ்க்கையா இல்லையா என்பதைச் சொல்வது கடினம். ஒரு திரைப்பட யதார்த்தமாக அந்த அனுபவம் நம் நெஞ்சைப் பிசையத்தான் செய்கிறது. பாலு மகேந்திரா, கமல், கண்ணதாசன், இளையராஜா என்று நான்கு கலைப் பித்தர்களின் பித்து நிலை ஒன்றுகூடிய காட்சி என்று அதைச் சொல்லலாம்.

எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் வெளிவந்த கலையம்சம் கொண்ட ரொமாண்டிசப் படங்களைப் பார்க்கும்போது ஓடுவதற்கான எல்லா அம்சங்களும் கொண்ட ஒரு படமாகவே 'ராஜபார்வை' தோன்றுகிறது. அப்படி இருந்தும் அந்தப் படம் ஏன் வெற்றி பெறவில்லை என்பது ஆச்சர்யம்தான். 'ராஜபார்வை' வெற்றி பெற்றிருந்தால் கமலின் கலைப் பயணத்தில் அப்போதே மேலும் பல முயற்சிகள் வெளிவந்திருக்கும். 'ராஜபார்வை' என்ற பெயருக்கு ஏற்பவே பார்வையை அழகு செய்யும் கவிதைகள் போன்ற காட்சிகள் நிரம்பிய படம் அது. இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் என்ற போதிலும் கமலும் ஒரு தோன்றா-இயக்குநரே (invisible director) என்று நமக்குத் தெரியும். 'அந்திமழை பொழிகிறது' என்ற பாடல் கவிதையாய் வாழும் மனதால் மட்டுமே சாத்தியப்படும். கமல், தோட்டாதரணி, இளையராஜா, சிங்கிதம் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் பரூண் முகர்ஜி என்று எல்லோரும் சேர்ந்து நிகழ்த்திய மாயாஜாலக் காட்சி விருந்து அது. சீன ஓவியம் போல் மிகக் குறைவான தீற்றல்கள் தோன்றத் தொடங்கும் ஓவியத் திரையில் ஒன்றொன்றாகச் சேர்ந்துகொண்டுவர, ஓய்வெடுக்கும் குதிரையற்ற குதிரை வண்டியின் பின்னணியில், மரத்தில் சற்றே சாய்ந்தபடி குடை பிடித்திருக்கும் கமல், ஓவியத்திலிருந்து உருப்பெற்று வெளிவரும் காட்சி தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு. இதுபோன்ற புதுமைகளை அப்போது தமிழ் சினிமாவுக்கு ஜீரணிக்கும் சக்தி இல்லையே என்னவோ, தெரியவில்லை!

தமிழில் ஒரு சாகசப் படம் இல்லை என்ற பழியைத் துடைக்கும் வண்ணம் கமல் எடுத்த 'விக்ரம்' இன்று பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருந்தாலும் வெளிவந்தபோது பெரிதாக ஓடவில்லை. அதுபோன்ற மற்றுமொரு சாகசப் படமான 'அபூர்வ சகோதரர்கள்' நல்லவேளையாகப் பெருவெற்றி பெற கமலின் ஓட்டத்துக்கு மேலும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. அதில் வரும் அப்பு தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக மாறிப்போனாலும் அவன் வரும் பகுதி பெரும்பாலும் 'சர்க்கஸ்' படத்தின் நகலாக அமைந்தது துரதிர்ஷ்டம். தமிழ் சினிமாவுக்கு இதையெல்லாம் கமல் அறிமுகப்படுத்தினார் என்று நாம் சமாதானம் சொன்னாலும் திரைவிமர்சகர்கள் இன்று அவரை விட்டுவைப்பதில்லை.

'அபூர்வ சகோதரர்கள்' படத்துக்கு முந்தைய படங்களில் முக்கியமானவை 'பேசும்படம்', 'நாயகன்', 'சத்யா' ஆகியவை. முதலிரண்டும் கமலின் படைப்புகள் இல்லை, மூன்றாவது ரீமேக் என்றாலும் இவற்றின் உருவாக்கத்தில் கமலின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்த அளவில் இருந்திருக்கவே செய்கிறது. வாழ்க்கை, பணம் போன்றவற்றின் நிலையாமையை அழகாகக் காட்டிய 'பேசும் படம்' பேசாத படம் என்பது கமலின் சாகசங்களில் ஒன்று. 'காட்ஃபாதர்' படத்தின் பாதிப்பாக இருந்தாலும் 'நாயகன்' படம் தமிழ் சினிமாவின் தரத்திலும் ரசனையிலும் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம்.

'குணா'வைப் பற்றி நிறையவே பேசியாயிற்று. அந்தப் படம் வெளியானபோது இப்படியெல்லாம் பேசியிருந்தால் வெற்றிப் படமாக ஆகியிருந்திருக்கும். கமலின் பித்து நிலையின் உச்சம் என்று 'குணா'வைச் சொல்லலாம். அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பதால் அப்படிச் சொல்லவில்லை; படத்தின் ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் அவரது கலையின் பித்து நிலை கொந்தளித்து வெளிப்பட்டிருக்கும். 'குணா'வுக்கு படப்பிடிப்பு லொக்கேஷன்கள் பார்க்கச் செல்லும் வழியில் 'மதி கெட்டான் சோலை' என்ற ஊரைப் பார்த்ததும் 'என் படத்தின் பெயர் இதுதான்' என்று கூவியிருக்கிறார். அது அவருக்குள் இருக்கும் பித்தின் அடையாளம். 'குணா'வில் அவரது நடிப்பு 'மிகை நடிப்போ' என்று தோன்றலாம். குலைவுற்ற, சிதிலமான, ஆனால் அற்புதமாக மிளிரும் அசாதாரண மனம் கொண்ட ஒருவரின் இயல்பு நம் இயல்புடன் பொருந்திவராததால்தான் அது மிகை நடிப்பு என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. 'உன்னை நானறிவேன்' பாடலை எடுத்திருக்கும் விதம், 'கல்யாணம், கல்யாணம்' என்று சந்திரபாபுவின் பாடல் பின்னணியில் ஒலிக்க சவரம் செய்துகொண்டு, தொப்பி, கண்ணாடி வாங்கிக்கொண்டு கமல் நடக்கும் காட்சி போன்றவையெல்லாம் கமலின் பித்து நிலைக் கலைக்கு உதாரணங்கள். 'ஹேராம்', 'ஆளவந்தான்' ஆகிய படங்களிலும் 'உத்தம வில்லன்' படத்தில் மிகச் சில தருணங்களிலும் அவரின் பித்து நிலை வெளிப்பட்டிருக்கும். 'ஆளவந்தான்' படத்தில் போதை மருந்தின் ஆதிக்கத்தில் சிறையிலிருந்து வெளிவரும் காட்சிகள் மிகவும் அசாதாரணமானவை. மயில்சாமி வயிற்றில் ஓடும் டி.வி., சாப்ளின் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அதில் வரும் காட்சி போலவே ஒரு குழந்தையிடம் ஐஸ்கிரிமை கமல் தின்னப் பார்ப்பது போன்ற காட்சிகள் கனவின் தன்மையுடன் எடுக்கப்பட்டிருக்கும். அவரின் கலை போதை நிலை கொண்டது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தக் காட்சி.

'ஹேராம்' படத்திலும் இது போன்ற காட்சிகள் உண்டு. 'இசையில் தொடங்குதம்மா…' பாடலின் இடையில் ஆரம்பித்து நாயகிக்கும் அவருக்குமான படுக்கையறைக் காட்சிகளைத் தொடர்ந்து வெறியேறி அவர் புறப்படுவதுவரையிலான காட்சிகள் அப்படிப்பட்டவையே. 'தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்' என்று பாரதியார் எழுதியதை நாம் இன்றுவரை ரசிக்கிறோம், அதில் அர்த்தம் என்ன என்றே யோசித்துப் பார்க்காமல். அந்த ஓசையே ஒரு உன்மத்த நிலையை நமக்குக் கொடுக்கிறது. தமிழ்த் திரையிலும் உன்மத்த நிலை வெகு அபூர்வமாக வெளிப்பட்ட தருணங்கள் அநேகமாக கமலுடையவையே.

கமலின் திரைப்பயணத்தில் மிக மிக முக்கியமான படம் என்று 'மகாநதி'யைச் சொல்ல வேண்டும். மிகையுணர்ச்சிக்கு (Sentiment) அதிக வாய்ப்புள்ள ஒரு கதை, காட்சிகள். இந்தக் கதையை வைத்துக்கொண்டு பெரு வெற்றி பெறக்கூடிய ஒரு படத்தை எளிதில் கமல் எடுத்திருக்கலாம். ஆனால், மிகையுணர்ச்சியைத் தவிர்த்துவிட்டு அமுங்கிய நடிப்பை (underplay) கமல் வழங்கியிருப்பார். இத்தனைக்கும் கமல் படங்களிலேயே குடும்ப சென்டிமென்ட்டுக்கு அதிக வாய்ப்புள்ள ஒரு படம் அது. ஆனாலும், நேர்க்கோட்டில் செல்லாத கதையமைப்பையும் தத்துவார்த்தப் பார்வையையும் அந்தப் படத்துக்கு வழங்கி, அதை கிட்டத்தட்ட ஒரு கலைப் படைப்பாக ஆக்கியிருப்பார். அது பெரிதும் ஓடாததற்கும் இதுதான் காரணம். 'கிட்டத்தட்ட' என்று சொல்வதற்குக் காரணம் வழக்கம் போல அதிலும் வெகுஜன மசாலாப் பொடியை கமல் தூவியிருப்பது. அதுவரை யதார்த்தமாய்ப் போய்க்கொண்டிருந்த படம் நாயகன் பழிவாங்கப் புறப்பட்டு சாகசங்கள் செய்யும்போது கீழே இறங்கிவிடுகிறது. இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கமலின் கலைப் பித்தில் ஒரு முக்கியமான படம்.

'மகாநதி' படத்தில் ஒரு காட்சி மிக அழகாக யதார்த்தமும் ரொமாண்டிக் அம்சமும் கலந்து எடுக்கப்பட்டிருக்கும். சிறையில் கமலைப் பார்க்க சுகன்யா நர்ஸ் உடையுடன் வந்திருப்பார். நடுவே தடுப்புக் கம்பி. கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் பேசிக்கொள்வதால் ஏற்படும் சலசலப்புக்கிடையே இருவரும் பேசாமல் கண்களால் மட்டும் உரையாட ஆரம்பிக்கிறார்கள். கமலின் வழக்கமான மிகை நடிப்பு மேனரிஸங்கள் ஏதும் இல்லை. இரு குழந்தைகளின் தகப்பனுக்குக் காதல் வந்தால் எப்படி இருக்குமோ அப்படியே அவரிடமிருந்து அந்த உணர்வு வெளிப்படும். இளையராஜாவின் பின்னணி இசையில் அற்புதமாக பியானோ ஒலிக்க கொஞ்சம் கொஞ்சமாக மற்ற கைதிகள் மறைகிறார்கள். கமலும் சுகன்யாவும் நடுவே கம்பியும். பின்னே கம்பி மறைகிறது. கமலின் கைதி உடை மறைந்து இயல்பான உடை வருகிறது. சுகன்யா நர்ஸ் உடையுடனே இருக்கிறார். இரண்டு பேரும் தட்டாமாலை சுற்றிவிட்டு கனவில் ஓடுவது போல் ஓட ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் மற்றவர்களென்றால் கனவுப் பாட்டு வைத்து வெளிநாடுகள், வேற்று கிரகம் வரை சென்றிருப்பார்கள் (கமலும் பல படங்களில் அப்படிச் சென்றவர்தான்). கமலும் சுகன்யாவும் ஓட அவர்கள் கைகளைக் கோத்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக கமலின் இரண்டு குழந்தைகள், அவர் மாமியார், சுகன்யா அப்பா என்று ஓடுவார்கள். ரொமாண்டிக்காக பியானோ ஒலிக்கும் ரொமாண்டிக்கான சூழலில் இந்தக் காட்சி அபஸ்வரமாக ஆவதற்கான வாய்ப்பே அதிகம். ஆனால், 'மகாநதி'யின் கிருஷ்ணசுவாமி ஒரு குடும்ப மனிதன்; அவனுடைய காதல் காட்சியிலும் குடும்பத்தைத் தவிர்க்க முடியாது. அவ்வளவு அழகாக யதார்த்தத்தையும் ரொமாண்டிக் அம்சத்தையும் கனவாக இழைத்திருப்பார் கமல்.

கடந்த 15 ஆண்டுகளின் கமல் படங்களில் ஒரு 'மகாநதி'யையோ, 'குணா'வையோ, பார்க்க முடியவில்லை என்பது நமக்கெல்லாம் இழப்புதான். அந்தப் படங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் 'அன்பே சிவம்', 'விருமாண்டி' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையே. நகைச்சுவைப் படங்களில் கமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது, 'அலைபாயுதே…, தலைபாயுதே கண்ணா தூண்ல' வகை வசனங்களையே அறிவுஜீவித்தனமான நகைச்சுவையாக எண்ணிக்கொள்வது என்று அவரது பல நகைச்சுவைப் படங்கள் கலைத்தரத்தில் மேலெழாமல் சரிந்துபோய்விடுகின்றன. 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்' போன்ற படங்களில் மேற்கண்ட குறைகள் இருந்தாலும் கமலின் நகைச்சுவைப் படங்களில் அவை முக்கியமானவையே. அதிகம் குறிப்பிடப்படாத ஒரு நகைச்சுவைப் படம் 'மும்பை எக்ஸ்பிரஸ்'. கமல் அதிகம் வாய் திறக்காத அரிதான நகைச்சுவைப் படங்களில் அதுவும் ஒன்று. தமிழ் சினிமாவில் அந்தப் படத்தில்தான் உயர்தர அபத்த நகைச்சுவையை (Absurd comedy) அவர் ஆரம்பித்துவைக்கிறார். முதல் பாதி அபாரமாக இருந்தாலும் இரண்டாம் பாதி கமலின் வழக்கமான நகைச்சுவைப் படம் போலாகிவிட்டது. ஆனால், அந்தப் படம் வெளிவந்தபோது அதன் உயர்தர நகைச்சுவையை உணர்ந்துகொள்ள முடியாதவர்கள் 'ஒன்றுக்கு விட வந்த பள்ளிச் சிறுவனை பிரம்மாண்டமான கிரேன் வைத்துக் கடத்துவது காதில் பூ சுற்றுவது போல் இருக்கிறது' என்றரீதியில் விமர்சனம் எழுதினார்கள். அதுதான் அபத்த நகைச்சுவை என்பதை அப்போது பெரும்பாலானோரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல அந்தத் திரைப்படம் ஒரு 'போலிக் காவியம்' (Mock epic) போன்றது. ஆங்கில இலக்கியத்தில் 18-ம் நூற்றாண்டில் நிறைய 'போலிக் காவியங்கள்' எழுதப்பட்டன. வழக்கமான காவியத்தின் மைய நோக்கமாக மாபெரும் காரியம் ஒன்று இருக்கும். அதற்குப் பிரம்மாண்டமான எடுப்பு, தொடுப்பெல்லாம் கொடுத்து அமர்க்களப்படுத்தி ஒரு பெரிய உச்சத்தை வந்து தொடும். 'போலிக் காவிய'த்தில் இவை எல்லாமே இருக்கும்; ஆனால் மையப் பொருள் மட்டும் ரொம்பவும் அற்பமாக இருக்கும். அலெஸ்சாண்ட போப் எழுதிய 'Rape of the Lock' 'போலிக் காவிய'மும் அப்படித்தான். காவியத்துக்கேயுரிய வர்ணனைகள், சந்த நயம், அலங்காரங்கள், எடுப்பு, தொடுப்பு எல்லாம் இருக்கும். எல்லாம் எதற்காக? ஒரு சீமாட்டியின் கூந்தலை வெட்டுவதற்காக! அதே போன்றுதான் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படமும் தமிழின் முதல், ஆனால் சற்றே குறைபட்ட 'போலிக் காவியம்'. அது போன்ற நகைச்சுவையை ரசிக்கும் பக்குவமோ நமக்கு 'சூது கவ்வும்' காலத்தில்தான் வருகிறது. இப்படியாக, தமிழ் சினிமாவின் தரத்தில் கமல் பல அடிகள் முன்னேயே பயணித்துக்கொண்டிருக்கிறார்.

கமலின் கலை என்பது அவரது நடிப்பு இயக்கம் மட்டுமல்ல, தனது படங்களில் மற்றவர்களிடம் வேலைவாங்குவது வரை இருக்கிறது. 1990-க்குப் பிறகு இளையராஜாவை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டவர்களுள் கமலுக்குத்தான் முதலிடம். 'குணா', 'மகாநதி', 'தேவர் மகன்', 'ஹேராம்', 'விருமாண்டி' ஆகிய படங்களை அப்படிச் சொல்லலாம். 'தேவர் மகன்' படத்தில் கமல் என்ற நடிகரைவிட படைப்பாளிக்கே முதலிடம். நாசர், வடிவேலு, சங்கிலி முருகன், காக்கா ராதாகிருஷ்ணன் முதலானவர்களிடமிருந்து (பரதனின் உதவியுடன்) அவ்வளவு அற்புதமான நடிப்பை கமல் வாங்கியிருப்பார். மணிரத்னம் போன்றவர்கள் எடுக்கும் கிராமத்துப் படங்களுக்கும் கமலின் கிராமத்துப் படங்களுக்கும் பெரிய வித்தியாசத்தை நாம் உணரலாம். கிராமத்துப் பாத்திரங்களுக்குள்ளும் மாதவனையும் அரவிந்தசாமியையும் நாம் உணரும் வகையில்தான் மணிரத்தினம் வசனம், காட்சியமைப்பு போன்றவற்றை அமைத்திருப்பார். கமலின் கிராமத்து மனிதர்களோ மண்வாசம், தங்கள் மண்ணுக்குரிய ரத்த வாடை வீசுபவர்கள். கமலின் கிரகிக்கும் குணத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு இது.

அநேகமாக, தமிழ் சினிமா இசை ரசிகர்கள் போதிய அளவு கொண்டாடாத, கமலாலேயே போதிய அளவு கவனம் பெறாத பாடகர்தான் கமல். 'ஞாயிறு ஒளி மழையில்' சற்றே பிசிர்தட்ட அவரது பாடல் பயணம் ஆரம்பித்தாலும் அந்தக் கரகர பிசிருக்கு ஓர் அழகு வந்து ஒட்டிக்கொண்டது. இளையராஜாவுக்கும் ஜேசுதாஸுக்கும் இடைப்பட்ட ஒரு குரல்; ஏக்கம் தொனிக்கும் குரல் கமலுடையது. 'நினைவோ ஒரு பறவை', 'பன்னீர் புஷ்பங்களே' போன்ற பாடல்களில் இதை நன்றாக உணரலாம். அவர் பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று மோகனுக்காக அவர் பாடிய 'பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே' பாடல். அதே போல், 'தென்பாண்டிச் சீமையிலே' பாடலில் கமல் குரல்தான் அதிக ஏக்கம் தொனிப்பதாக இருக்கும். யூடியூபில் கிடைக்கும் ஒரு ஆடியோவில் (கமல் குரலில் மேகம் கொட்டட்டும் பாடலின் யூடியூப்) ஒரு பாடலைக் குறிப்பிடும் இளையராஜா அதை பாலு கூட அவ்வளவு நன்றாகப் பாடியிருக்க முடியாது என்கிறார். 'சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்' பாடலில் 'தென்பாண்டிச் சீமையிலேயே' பாடலுக்கு நேரெதிரான ஒரு மென்மை; மூக்கால் பாடிய பேரழகு அந்தப் பாடல். 'சிங்காரவேல'னின் 'போட்டுவைத்த காதல் திட்டம்' பாடலை வேறு யாராலும் அவ்வளவு உன்மத்தத்துடன் உச்சஸ்தாயியில் பாடியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. 'மகாநதி'யின் 'தன்மானம் உள்ள நெஞ்சில்' பாடலில் கமலின் குரல் படத்தின் மொத்த வலியையும் நமக்கு ஊட்டிவிடும். கமலின் குரலில் அநேகமாகக் கடைசியாக வெளிவந்த தரமான பாடல் 'தேவர் மகன்' படத்தின் 'இஞ்சி இடுப்பழகா'தான். 'விருமாண்டி'யின் 'உன்னை விட' மிகவும் அழகான பாடல் என்றாலும் கமலின் குரலில் ஒரு வீழ்ச்சியை அதில் உணர முடிந்தது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று கமலின் பல அவதாரங்களிலும் அவரது பித்து நிலையின் ஏதாவது ஒரு வடிவத்தை நாம் காணலாம். கமலின் சமீப காலப் படங்களில் அந்தப் பித்து நிலை அவ்வளவாக வெளிப்படுவதில்லை என்பது கவலையளிக்கும் விஷயம். அவரது ஆதாரமாக நின்று அவரைச் சுழற்றும் அந்தப் பித்து நிலை அவரிடமிருந்து ஒருபோதும் வடிந்துவிடக் கூடாது என்பதே அவரது ரசிகர்களின் ஆசை. அந்த ஆசையை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/கமல்-என்றொரு-பித்தர்/article9314550.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்

கமல் 62: தமிழ் சினிமாவின் ராஜபார்வை

 

 
 
 
 
kamal_hasan1_2190612f.jpg
 

கமல்ஹாசனின் 62-வது பிறந்தநாளை ஒட்டி, 2014-ம் ஆண்டு இதே நாளில்

'தி இந்து' நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரை இங்கே மறு பகிர்வாக...

அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினருக்கு உவப்பானவராக கமல் இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உள்ளிட்ட பலரின் இளமைக் காலமல்லவா கமல்!

தன்னுடைய 6-வது வயதில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி, தற்போதைய ‘பாபநாசம்’ வரையிலான 54 ஆண்டு காலப் பயணம் என்பது குறுகிய காலம் அல்ல. அப்போது சிறுவனாக ‘களத்தூர் கண்ணம்மா’ பார்த்த ஒருவர், இப்போது ‘பாபநாசம்’ படத்தைப் பார்க்க, தன் பேரன், பேத்திகளோடு போகக் கூடும். இந்த நீண்ட காலகட்டத்தில் (சிறுவனாக நடிக்க ஆரம்பித்து, பதின்பருவம் வரையிலான காலம் நீங்கலாக), கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில், தமிழர்களின் வாழ்க்கையில் கமல் தவிர்க்க முடியாத ஒரு பாகமாக இருந்துவந்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகச் சிலர்தான் அந்தத் தலைமுறையின் நினைவுகளின் தொகுதியாக இருப்பார்கள். அந்த வகையில் கமல் இரண்டு தலைமுறைகளின் நினைவு.

புதுமையின் நாயகன்

தமிழ்த் திரைப்படத்தைப் பொறுத்தவரையில் கமலும் புதுமையும் பிரிக்க முடியாத இரண்டு பெயர்கள். நாடக மரபிலிருந்து வந்தவர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் வெகு காலமாக ஆட்சிசெய்துகொண்டிருந்ததால், கமலின் வருகைக்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களெல்லாம் நாடகங்களாகவே இருந்தன. கமலும் நாடகப் பின்னணியிலிருந்து வந்தவர்தான். ஆனாலும், மாறும் காலத்தின் ஒரு பிரதிநிதி அவர். அவர் திரைத் துறையில் நட்சத்திரமாக வலம்வர ஆரம்பித்த காலத்தில் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, இளையராஜா போன்றவர்களும் தங்கள் கணக்கைத் தொடங்கியது பெரும் வியப்பு. இவர்கள் அனைவரும் ஒன்றாகக் களமிறங்கிய காலத்தில்தான் தமிழ் வெகுஜன சினிமாவில் புதுமையின் பொற்காலம் ஆரம்பித்தது. மேற்கண்ட பெயர்களில் மகேந்திரன் தவிர, அனைத்துக் கலைஞர்களின் ஆரம்ப கால முயற்சிகளில் கமலும் இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில், நல்ல திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற தாகத்துடன் வருபவர்கள் இயல்பாகவே கமலை நாடுவார்கள். அவர்களால் கமலும், கமலால் அவர்களும் பலனடைந்தார்கள்.

கமல் தரும் பொறி

நடிப்பு மட்டுமே திரைப்படம் இல்லை என்பதை அறிந்திருந்ததால், திரையுலகின் பெரும்பாலான துறைகளில் கமலுக்குத் தேர்ச்சி இருந்தது. காலம்தோறும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே வந்தார். தான் கற்றுக்கொண்டதைத் திரையிலும் பிரதிபலித்தார். இந்தப் புதுமைகள் வழியாகத் தனது ரசிகர்களின் அறிவையும் ரசனையையும் மேலே மேலே கொண்டுசென்றபடியே இருக்கிறார் கமல். ‘ஓடிவிளையாடு பாப்பா’, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ போன்ற பாடல்களைத் தாண்டி, பாரதியின் பாடல்கள் பரிச்சயமாகாதிருந்த பலருக்கு ‘மகாநதி’யில் கமல் சொன்ன ‘தேடிச் சோறு நிதம் தின்று’ கவிதை பாரதி மீது பைத்தியம் கொள்ள வைத்தது. இப்படியாகப் பல விஷயங்களில் கமல் ஒரு பொறியைத் தருவார். அந்தப் பொறியை ஊதி ஊதிப் பெரும் தீயாகப் பெருக்கும் ஒருவர், ஒரு கட்டத்தில் கமலை விட்டு விலகிப் போய்விடுவார் என்பது நியதி. அதேபோல், கமல் கொடுத்த பொறியையே பெரிதாக நினைத்துக்கொண்டிருப்பவர் கமல்தான் உலகின் உச்சம் என்று கருதுவார்.

கமலின் விருந்து

தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் கமலின் திரைப்படங்களோடு கழித்த ஒருவருக்குச் சந்தேகமில்லாமல் கமல் பெரும் விருந்தே படைத்திருக்கிறார். இதில் வெகுஜன திரைப்படம், கலைத்தரம் மிக்க வெகுஜனத் திரைப்படம், மாற்றுத் திரைப்பட முயற்சிகள் எல்லாமே அடங்கும். இந்த மூன்று வகைகளிலும் கமல் ரசிகர்களுக்கு அதிகமாகத் தீனி போட்டவை என்று இந்த 20 படங்களைக் குறிப்பிடலாம்: 16 வயதினிலே, அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, நினைத்தாலே இனிக்கும், ராஜபார்வை, சகலகலா வல்லவன், சலங்கை ஒலி, நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், இந்தியன், ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி.

கமலால் ஏன் முடியவில்லை?

உலக சினிமா எல்லோருடைய பென் டிரைவுக்குள்ளும் வந்துவிட்டது. எனவே, எல்லோருமே சினிமா விமர்சகராக மாறி, கமலைக் குறைகூறுவது வழக்கமாகிவிட்டது. சராசரி ரசிகர்களுக்கு உலக சினிமா எட்டாமல் இருந்த காலத்தில்சினிமா ரசனையையும் உலக சினிமாவையும் பற்றி, வெகுஜன சினிமாவுக்குள்ளேயிருந்து பேசிக்கொண்டிருந்த ஒருசிலருள் கமலும் ஒருவர் என்பதை மறந்துவிட முடியாது.

‘முழுக்க உலகத் தரத்திலான ஒரு திரைப்படத்தை கமலால் ஏன் எடுக்க முடியவில்லை?’ என்பதுதான் அவருடைய விமர்சகர்கள் பெரும்பாலானோருடைய கேள்வி.

இது போன்ற கேள்வியை அவர்கள் அநேகமாக கமலிடம் மட்டுமே எழுப்பினார்கள் என்பதைக் கொண்டு அதை ஒரு ஆதங்கமாகவும், கமல்மீது உள்ள உரிமையில் எழுந்த கோபம் என்றும் கருத முடியும்.

கலைப் படங்களை எடுக்க விரும்பியவர் அல்ல கமல். கலைப் படங்களை உள்வாங்கிக்கொள்ளும் கலாச்சாரங்களில் ஒன்றோ, கலைப்படங்கள் வெற்றிகரமாக ஓடும் நாடுகளில் ஒன்றோ அல்ல நம்முடையது. சிறுபான்மையினராக இருக்கும் அறிவுஜீவிகள் சினிமாவைத் தூய்மையான கலை வடிவமாகப் பார்க்கிறார்கள். பெரும்பான்மை மக்களுக்கோ சினிமா என்பது கொண்டாட்டம், துயரங்களின் வடிகால், கனவுகளின் பதிலீடு. இங்குதான் கமல் வருகிறார். வெகுமக்களைத் தூக்கியெறிந்து

விடாமல் அவர்களின் உலகத்தில் இருந்துகொண்டு, அவர்கள் பார்க்கும் வெகுஜனத் திரைப்படங்களுக்குக் கலையம்சத்தைக் கூட்டினார் அவர். இதில் வெற்றியும் தோல்வியும் சரிபாதி கிடைத்திருக்கிறது அவருக்கு. தமிழில் ஜனரஞ்சகத் திரைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த சூழலில், கமல் அதன் அடுத்த கட்டமே தவிர, உச்சக்கட்டம் அல்ல. அதைச் செய்ய வேண்டியவர்கள் அடுத்தடுத்து வருபவர்கள்தான்.

- ஆசை,

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/கமல்-62-தமிழ்-சினிமாவின்-ராஜபார்வை/article9314593.ece?widget-art=four-rel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.