Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்மந்தன், சுமந்திரன் மேற்கொண்ட நெகழ்ச்சியான அணுகுமுறைகளே …!! மாவீரர் தினம்!! – கருணாகரன்

Featured Replies

.

மாவீரர் தினம்

விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் முதலாவது மாவீரர் நாள் மிக இயல்பாகக் கொண்டாடப்பட்டுள்ளmaveeraraது. குறிப்பாக வன்னியில். இந்த மாவீர்நாள் கொண்டாட்டங்களைப் பற்றி ஏராளமான பதிவுகளும் அபிப்பிராயங்களும் தமிழ், சிங்களப் பொதுவெளியில் பகிரப்படுகின்றன.

அதிகமானவை தமிழில்தான். எல்லாப் பதிவுகளையும் தொகுத்துப் பார்த்தால் இலங்கை அரசியற் போக்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய நிலையும் எப்படி என்பது தெரியும்.

முதலில் இதைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம். ஏனென்றால், இந்த மாவீர்நாள் கொண்டாட்டத்துக்கான சாதகமான சூழல் உருவாகியது கடந்த மே மாதத்தில்.

இந்த நிலையை உருவாக்கியது தற்போதைய அரசாங்கமே தவிர, வேறு யாருமல்ல. இதற்குக் காரண காரியங்கள் உண்டு. தன்னுடைய நலன் மற்றும் நோக்குநிலையிலிருந்தே இதை அது செய்தது. இப்போதும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

இனியும் அதையே செய்யும். அரசு அதையே செய்யும். சோழியன் குடுமி சும்மா ஆடாதல்லவா! ஆகவே இதனுடைய மூல ஊற்று எப்போது, எங்கே ஆரம்பித்தது என்று நாம் பார்க்க வேணும்.

இறுதிப்போரிலே இறந்தோருக்கான அஞ்சலியைச் செலுத்தும் நிகழ்ச்சி மே 19 முள்ளிவாய்க்காலில் நடந்தது. ஆனால், அந்த நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடக்குமா இல்லையா என்று தெரியாத நிலை மே 16, 17, ஆம் திகதி வரை தமிழ் மக்களிடம் இருந்தது

படையினர் என்ன மாதிரி நடந்து கொள்வர்? 

அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படியிருக்கும்? அஞ்சலி செலுத்தச் சென்றால் அங்கே குழப்பங்களோ விபரீதங்களோ நடக்காதா? என்று தெரியாத குழப்பநிலை மே 17 மதியம்வரையிருந்தது.

அதுவரை இறுக்கமான நிலையைக் கடைப்பிடித்த அரசாங்கம், மே 17 மதியமே நல்லெண்ணச் சமிக்ஞைகளைக் கசியவிட்டது. இதுதான் அதனுடைய உத்தி.

இந்த இறுக்கத்தை எப்படித் தளர்த்துவது என்று மிகத்தீவிரமாகச் சிந்திக்க வைத்து விட்டு, மெல்ல அதை நெகிழ்த்துவது. அப்படி நெகிழ்த்தப்படும்போது, அது பெரியதொரு விட்டுக்கொடுப்பாக உணரப்படும். இந்த வகையிலேயே சுமந்திரன், சம்மந்தன் வழியாக நினைவு கூரலுக்குச் சாதகமான பதில் வெளியானது.

இதைத் தொடர்ந்து வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உள்ளிட்ட பெருந்தொகையானோர் முள்ளிவாய்க்காலில் தங்கள் படை பட்டாளங்களோடு திரண்டனர். நினைவு கூரல் வெகு சிறப்பாக நடந்தது.

இப்போது மாவீரர்நாள் பதிவுகளும் அபிப்பிராயங்களும் பொது வெளியை நிறைப்பதைப்போல, மே 19 முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் பொதுவெளியை நிரப்பியது.

sac-580x330  சம்மந்தன், சுமந்திரன் மேற்கொண்ட  நெகழ்ச்சியான  அணுகுமுறைகளே ...!!  மாவீரர் தினம்!!  - கருணாகரன் sac

தமிழ்ப்பரப்பு உணர்ச்சிகரமாக இப்படி இயங்கிக் கொண்டிருக்கும்போது, முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கு இடமளித்ததன் மூலம். ரணில் – மைத்திரி கூட்டரசாங்கம் தன்னுடைய நெகிழ்ச்சிப்போக்கினை வெளியுலகிற்கும் உள் நாட்டிற்கும் வெளிப்படுத்திக் காட்டியது.

இதன் வழியாக தன்னுடைய மதிப்பை அது பல படிகள் உயர்த்திக் கொண்டது. முள்ளிவாய்க்காலில் தங்களுடைய உறவுகளை நினைவு கூர அனுமதித்ததன் மூலம் தமிழ்ச்சனங்களின் மத்தியிலும் அரசாங்கத்தைப் பற்றிய சாதகமான உணர்நிலை உருவானது.

ஒப்பீட்டளவில் முன்னைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்குமிடையில் பெரிய வேறுபாடுகள் உண்டென்று தமிழ் ஆய்வாளர்களே மகிழ்ச்சியோடும் நிறைவோடும் பெருமிதத்தோடும் நன்றிப்பெருக்கோடும் எழுதினர்.

இதனுடைய அடுத்த கட்டமாக, கடந்த ஓகஸ்ற் மற்றும் செப்ரெம்பர் முற்பகுதியில், மாவீரர் துயிலுமில்லங்களில் நிலைகொண்டிருந்த படையினர், அங்கிருந்து வெளியேறினர்.

எல்லாத் துயிலுமில்லங்களில் இருந்த படையினரும் வெளியேறவில்லை என்பது வேறு கதை. இப்படிப் படையினர் வெளியேறியபோதே அடுத்து வரும் மாவீர்நாளில் அந்தத் துயிலுமில்லங்களில் இறந்தவர்களை நினைவு கூரக்கூடிய சாதமான நிலை உண்டாகும் என்று தெரிந்தது.

அரசாங்கம் விரும்பியதும் இதையே. இதன் மூலம் தன்னை அது மெலும் சிறப்பித்துக் கொள்ளலாம், நெருக்கடிகளில் இருந்து விலகிக் கொள்ளலாம் என முயன்றது. கூடவே தமிழ்மக்களின் கொந்தளிக்கும் மனநிலையையும் தணித்துக் கொள்ளலாம் என்பதும்.

அதாவது, தன்னுடைய நெகிழ்ச்சிப்போக்கினை மேலும் விரிவாக்கியிருப்பதாகக் காண்பிப்பதற்காகவும் தான் இன நல்லிணக்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக நிரூபிக்கவும் இவற்றைக் கருவியாக்கியது.

இதற்கு அமையவே அது மெல்ல மெல்ல வெளிப்படையாகவும் இரகசியமாகவும் செயற்பட்டது. இன்னும் அப்படியே செயற்பட்டும் வருகிறது.

இந்த அடிப்படையிலேயே மாவீர்நாள் கொண்டாட்டங்களுக்குச் சாதகமான இரகசியப் பதில்களை அது சம்மந்தனிடமும் சுமந்திரனிடமும் தெரிவித்தது.

இதன் மூலம், அரசாங்கத்துடன் எல்லைகடந்த அளவில் விட்டுக்கொடுப்புகளைச் சம்மந்தனும் சுமந்திரனும் ஏன் செய்கிறார்கள் என்ற தமிழ்த் தீவிர சக்திகளின் கேள்விகளை வலுவிழக்கச் செய்வது ஒன்று.

இரண்டாவது, தமிழ் மக்கள் பேரவையின் பொங்குதமிழ் போன்ற உணர்ச்சிகர எதிர்ப்பு முன்னெடுப்புகளை வலுவிழக்கச் செய்வது. இந்த இண்டுக்கும் ஏற்றவகையில் அது காய்களை நகர்த்தியது.

அதேவேளை இப்படியான ஒரு சிறிய சாதக நிலையை உருவாக்கியதன் மூலமாகக் கூட்டமைப்பையும் சம்மந்தன், சுமந்திரன் அணியையும் மேலும் அரசாங்கம் தன்னுடன் நெருக்கமாக்கியுள்ளது.

மறுவளமாக, சம்மந்தன், சுமந்திரன் ஆகியோருடைய வழியில் பல சாத்தியமான புள்ளிகளும் நன்மைக்கான அடையாளங்களும் தெரிகின்றன.

அவற்றின் வெளிப்பாடுகளே முள்ளிவாய்க்கால் நினைவு கூரல், மாவீர்நாள் கொண்டாட்டம், படையினர் துயிலுமில்லங்களில் இருந்து வெளியேறியமை என்று தமிழ் மக்கள் உணரும் வகையில் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

இதை மறுக்க முடியாத நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஆட்சியைக் கொண்டு வருவதற்கான  ஆதரவை அளிக்கும் தீர்மானத்தை எடுத்ததில் இருந்து மாவீர் நாள் கொண்டாட்டத்தைச் செய்வதற்கான சூழலை உருவாக்கியது வரையில்

 சம்மந்தன் மேற்கொண்ட நெகழ்ச்சியான  அணுகுமுறைகளே 

 இவற்றையெல்லாம்   சாத்தியப்படுத்தியுள்ளன  என்று சுமந்திரன்   இனி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கூறுவார்.

சம்மந்தனுக்கும் சுமந்திரனுக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் இது அவசியமான ஒன்று. “அரசாங்கத்துடன் இணைந்திருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலாக இவை இருக்கின்றன என்பதற்காக.

இப்பொழுது சம்மந்தனும் சுமந்திரனும் காலாட்டிக்கொண்டு, கோப்பி குடிப்பார்கள். சுமந்திரனை நோக்கிய கேள்விகளுக்கெல்லாம் தற்போது ஒரு தடுப்பரண் உண்டாக்கப்பட்டுள்ளது.

”பொறுத்திருங்கள், இதைப்போல நீங்கள் நம்ப முடியாத பல விசயங்களை நாங்கள் நடத்திக் காண்பிப்போம்“ என்று இரண்டு பத்திரிகையாளர்களிடம் சுமந்திரன் அண்மையில் சொன்னது இவற்றையெல்லாம் மனதில் வைத்தாக இருக்கலாம்.

“சிறிதரனோ சிவாஜிலிங்கமோ விளக்கேற்றுவது முக்கியமல்ல, அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்த எங்களுடைய பணிகள்தான் முக்கியமானது“ 

என்று சுமந்திரன் ஆதரவாளர்களிடம் கூறியிருப்பதையும் இங்கே குறிப்பிடலாம். சுமந்திரன் சொல்வதில் நியாயமுண்டு.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு கூரல், மாவீர்நாள் கொண்டாட்டம் போன்றவற்றை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் ஆட்களை வைத்திருக்கிறது.

sds-450x300  சம்மந்தன், சுமந்திரன் மேற்கொண்ட  நெகழ்ச்சியான  அணுகுமுறைகளே ...!!  மாவீரர் தினம்!!  - கருணாகரன் sds
சிவாஜிலிங்கம், சிறிதரன் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சி நிரலுக்குரியவர்கள்.
 

 

அரசியலில் எப்போதும் பல வழிகளும் வகைமைகளும் இருக்கும். தீவிரச் சக்திகளும் மென்சக்திகளும் இடைநிலைச் சக்திகளும் இருப்பர்.

ஆளும் தரப்பும் சரி, எதிர்த்தரப்பும் சரி இவற்றையெல்லாம் தமக்குரிய வகையில் சாதகமாகவே கையாள முயற்சிக்கும். மென்னிலையாளரான சம்மந்தனையும் சுமந்திரனையும் கையாள்வதைப்போல தீவிர நிலையாளர்களாக சிவாஜிலிங்கம், சிறிதரன், அரியநேத்திரன் போன்றோரையும் அரசாங்கம் கையாண்டே வருகிறது.

மாவீரர் நாள் கொண்டாட்டத்தில் சிறிதரனின் தோற்றமும் வெளிப்பாடும் இவ்வாறானதே. அரசாங்கமும் சம்மந்தன் அணியும் சேர்ந்து உருவாக்கிய இடைவெளியில் எழுந்த பிம்பமே அவருடைய மாவீரர்நாள் சுடரேற்றும் காட்சி.

ஆகவே இது அரசாங்கத்தின் மிகத்திட்டமிடப்பட்ட, நேர்த்திமிக்க செயற்பாட்டின் தொடர் விளைவின் வெளிப்பாடே. இதற்குத் தோதான ஆட்களை அது தேர்ந்தெடுக்கிறது. படை மற்றும் அரச தரப்பின் இரகசிய வழிகளில் வழிநடத்தப்படுகிறார் சிறிதரன் என்பது பொதுவெளியின் வலுவான நம்பிக்கை என்பதையும் இங்கே கவனிப்பது பொருத்தம்.

எனவே இதுவரையான நிகழ்ச்சிகளில் அரசாங்கம் தன்னுடைய காய்களைச் சிறப்பாக நகர்த்திக்கொண்டிருக்கிறது. செல்வநாயகம் காலத் தமிழரசுக்கட்சி, விடுதலைப்புலிகள் ஆகிய தரப்புகளின் அரசியலுக்கு அப்பால் புதிய சிந்தனைகளையும் உள்ளடக்களையும் கொள்ளாத அரசியலைத் தமிழர்கள் தொடர்வதற்காக ஏற்பாடுகளையே சிங்களத்தரப்பு செய்கிறது.

இறந்தவர்களுக்கான – காலம் கடந்தவர்களுக்கான இடத்தை அளிக்கும் அரசாங்கம் கைதிகள், மீள்குடியேறுவோர், போரிலே பாதிக்கப்பட்டவர்கள் என இருப்பவர்களுக்கான இடத்தை அளிப்பதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

அத்துடன், தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் உறவோ, ஐக்கியமோ ஏற்படாத வகையில் பார்த்துக்கொண்டு, இனப்பிரச்சினைக்கான தீர்வில் வடக்குக் கிழக்கு இணைப்பைப்பற்றிப் பேச முடியாத ஒரு நிலையைப் பேணிக்கொள்கிறது.

அதேசமயத்தில் தமிழ் மக்களையும் முன்னரைப்போல அரச எதிர்ப்பு நிலைக்குப் போகாதவாறு தன்னோடு சேர்த்துக் கட்டி வைத்திருக்கிறது.

அதற்குரியமாதிரித் தமிழ்ச்சமூகத்தின் உணர்ச்சிரமான இயல்புக்கேற்பச் சிறிய நெகிழ்ச்சிகளை உபாயமாக முன்வைத்துச் செயற்படுகிறது.

இதை இன்னும் செறிவாகச் சொன்னால், தமிழ் பேசும் மக்களுடைய அடிப்படையான பிரச்சினைகளுக்குத் தீர்வோ நியாயமோ வழங்காமல், அதற்குப் பதிலாக விளக்கேற்றுதல், நினைவு கூருதல், எழுக தமிழ் அணிதிரள்தல் போன்ற சிறிய விசயங்களில் தாராளமாக நடந்து கொள்வதாக உணர வைக்கும் ஒரு உத்திமுறையைப் பின்பற்றுகிறது.

இது “ஐம்பது ரூபாய் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். ஐயாயிரத்தை நான் வைத்துக் கொள்கிறேன்” 

என்றமாதிரியான ஒரு உபாயமாகும். அடிப்படைத்தீர்வை வழங்காமல், அதை முன்வைக்காமல், இப்படி உடனடி உணர்நிலை சார்ந்த விசயங்களுக்கு இடமளித்துச் சமாளித்துக் கொள்வது. பிடியைக் கை விடாமல் அலகைக் காட்டும் வித்தை.

அரசியல் தீர்வுக்கு முன்னோட்டமாக எதிர்வரும் பத்தாம் திகதி அரசியலமைப்பு சபைக்கு சமர்பிக்கப்படவுள்ள தீா்வு திட்ட யோசனையில், வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை, சமஸ்டி என்ற வார்த்தையே கிடையாது, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, ஒற்றையாட்சிக்குள் தீா்வு போன்ற விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படித்தான் சில உச்சபட்ட யோசனைகளை அரசாங்கம் முன்வைத்தாலும் அது தமிழ் மக்களோ தமிழ் பேசும் மக்களோ எதிர்பார்த்த அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

இதைப்பற்றி தமிழர்களோ தமிழ் பேசும் மக்களோ அவற்றின் அரசியற் சக்திகளோ கூட்டாக ஆலோசித்திருக்கின்றனவா? என்றால், நிச்சயமாக இல்லை. எதுவோ நடக்கட்டும். அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற அளவில் எல்லோரும் பொறுத்திருக்கிறார்கள்.

அரசியலிலும் அரசியல் அமைப்பிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யாருக்குமே தெரியாது. ஏற்றப்படும் சுடர்கள் இதற்கான வெளிச்சத்தையே உண்டாக்க வேணும்.

இருளை அகற்றுவதற்காகவே சுடர்கள் ஏற்றப்படுவதுண்டு. நினைவு கூரப்படும் சுடர்கள் என்பது உயிர்த்திரியில் ஏற்றப்படும் தீயாகும். அந்தத் தீ இருளை அகற்றவேணும் என்றே உயிரை இழந்தவர்கள், இழந்து போராளிகள் விரும்பியதுண்டு.

ltte-maaveerar-day  சம்மந்தன், சுமந்திரன் மேற்கொண்ட  நெகழ்ச்சியான  அணுகுமுறைகளே ...!!  மாவீரர் தினம்!!  - கருணாகரன் ltte maaveerar day

இப்பொழுது கொண்டாடப்படும் மாவீரர் நாள் கொண்டாட்ட முறைமை விடுலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டது. 

அன்றைய போர்நிலைமையே இதை உருவாக்கியது. போரின்போது ஏற்பட்ட அதிகளவிலான போராளிகளின் உயிரிழப்பு சமூகத்திலும் போராளிகளிடத்திலும் இயக்கத்திற்குள்ளும் உண்டாகக்கூடிய நெருக்கடிகளைக் கணக்கிட்ட புலிகளின் தலைமை இதை உருவாக்கியது.

இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பிறகே (1989 இல்) முதலாவது மாவீரர்நாள் கொண்டாடப்பட்டது.

புலிகளின் முதலாவது போராளி சாவடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. ஏறக்குறைய 2000 க்கு மேற்பட்ட போராளிகள் சாவடைந்த பின்பு. அது ஈழப்போரின் இரண்டாவது காலகட்டம், இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த சூழல்.

அப்போது அதிகளவிலான போராளிகள் சாவடைந்து கொண்டிருந்தனர். இப்படிச் சாவடையும் போராளிகளின் சாவு வெறுமனே உதிர்ந்து போகும் ஒரு நிகழ்வல்ல. அதற்கு ஒரு மதிப்பும் பெறுமானமும் உண்டு.

மகிமை இருக்கிறது. தேசத்துக்காகவும் விடுதலைக்காகவும் மக்களுக்காகவும் உயிரைக் கொடுக்கும் உன்னத நிகழ்ச்சி இது என்று போரிலே நிகழும் மரணத்துக்கு அர்த்தம் கற்பிக்கப்பட்டது.

இவ்வாறு கற்பிக்கப்பட்ட அர்த்தத்தை பொதுத்தளத்திலும் போராளிகளிடத்திலும் உணரவைக்கும்விதமாகவே மாவீர்நாளும் மாவீரர் வணக்கமும் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகின.

மண்ணுக்காகவும் (தேசத்துக்காகவும்) மக்களுக்காகவும் மரணிப்பது மிக மகிமைக்குரியது என்ற உணர்வு ஒவ்வொரு போராளிகளிடத்திலும் ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாகியது. இது வளர்ந்து பெருநிகழ்ச்சியாகியது. இதன் பின்னணி உளரீதியாகச் சமனிலையடைவதே. – உளச்சமநிலையை உண்டாக்குவதே.

“எதனிலும் மேலானது வாழ்தலே”. “இக்கணத்திலேயே வாழ்ந்து விடு” 

என்றெல்லாம் எழுதிய இருத்தலியத்தத்துவதற்குப் பதிலாக “தேசத்துக்காகவும்  அந்தத் தேசத்தை உருவாக்க முனையும் தலைமைக்காகவும் மரணிப்பதே, தன்னை இழப்பதே, தன்னைக் கொடுப்பதே சிறப்பானது” என்ற இலட்சிய எண்ணக் கருவை உருவாக்கியது இந்த வணக்க முறைமை.

இதனால்தான் புலிகள் அமைப்பு தன்னுடைய சக்திக்கு மீறிய அளவில் உயரிழப்புகளைச் சந்தித்தபோதும் அது, இழப்புகளையிட்டு, சாவுகளையிட்டு கலக்கமடையாதிருந்தது. அதற்கான உள உறுதிப்பாட்டை இந்த மாவீரர் வணக்கப்பண்பாட்டுருவாக்கம் வழங்கியது. இதற்கான மூலத்தை புலிகள் தமிழ் வீரமரபுப் பண்பாட்டிலிருந்து – புறநானூறு, கலிங்கத்துப் பரணி ஆகியவற்றிலிருந்து எடுத்திருந்தனர்.

ஆனால், இன்றைய யதார்த்தம் வேறு. புலிகளின் போராட்ட முறைமையும் அவர்கள் கொண்டிருந்த லட்சியவாதமும் அதற்கான செயற்பாடுகளும் இழப்புகளும் இன்றில்லை. இது பிறிதொரு யுகம். பிறிதொரு அரசியற் பண்பாட்டின் விளைகாலம்.

இதில் கடந்த காலத்தின் பிரதிமைகளை அப்படியே எடுத்துப் பொருத்துவது முழுமைப் பொருத்தப்பாடுகளைத் தராது. நீங்கள் மறுபடியும் உங்கள் குழந்தைப்   பருவத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாதோ அப்படித்தான் வரலாற்றிடம் திரும்பிச் செல்ல முடியாது.

குழந்தையாக நீங்கள் வேசம் போட்டாலும் குழந்தையாகவே முடியாது. ஆனால் அந்தப் பருவத்தின், நினைவுகளிருக்கும். அதன் மகத்தான தருணங்கள் இருக்கும்.

அப்படித்தான் புலிகள் உருவாக்கிய அரசியற் பண்பாட்டை இங்கே பிரதியெடுக்க நினைப்பது அபத்தமானது. அது இயலாதது. இதனுடைய அர்த்தம், அப்பொழுது தமது உயிர்களை இழந்தவர்களை நினைவு கூரக்கூடாது என்பதல்ல.

அதை அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களுமாக மக்கள் கொள்வர். அது இயல்பு. பதிலாக அரசியல்வாதிகள் அதற்குள் தங்கள் மூக்கினை அந்தரப்பட்டு நுழைப்பது மிகத் தவறானது.

இந்தக் கட்டுரையில் மேலே குறிப்பிட்டிருப்பதைப்போல, மாவீரர் நிகழ்வைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் மறைமுகமாக ஆதரவை வழங்கியிருக்கிறது. வெளிப்படையாக அதைச் செய்ய முடியாது.

அப்படிச் செய்தால், சிங்களத் தீவிரத் தேசியவாதிகள் கொதிப்படைந்தெழுவர். ஆகவே மறைமுக ஆதரவை அது வழங்கியிருக்கிறது. தமிழ் அரசியல்வாதிகள் அதை வெளிப்படையாகக் கொண்டாடுகிறார்கள். ஆகவே இங்கே என்ன நடக்கிறது.

தமிழ் – சிங்களம் என்ற இரண்டு தரப்பும் தத்தமது நலன்களின் அடிப்படையில் இறந்தவர்களின் நினைவை வைத்து விளையாடுகின்றன. இது அரசியலன்றி வேறென்ன?

இலங்கையின் மோசமான ஒடுக்குமுறைக்கு எதிராக எத்தனையோ பேர் போராடி மாண்டிருக்கிறார்கள். நினைவுகூரப்படும் விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டுமல்ல, ஏனைய இயக்கங்களையும் கட்சிகளையும் அமைப்புக்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களும் போராடி மடிந்திருக்கிறார்கள்.

இந்த இழப்புகளையும் மரணங்களையும் நாம் எப்படிப் பார்க்கப்போகிறோம்? இறந்தோரை நினைவுகூருவதை வெறும் சடங்காக மட்டுமே மாற்றிவிடப்போகிறோமா?

சமூகச் செயற்பாட்டாளரான மு. மயுரன் குறிப்பிட்டுள்ளதை இறுதியாக இங்கே நினைவுட்டலாம். “போராட்டமென்பது வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களால் மட்டுமே முன்கொண்டுசெல்லப்பட முடியாதது.

அது தெளிவானதும் பலமானதுமான அரசியற் பின்னணியைக் கொண்டிருக்கவேண்டும். முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற ஒரு ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு முயற்சியில் நாம் இழந்துபோன உயிர்கள் கொஞ்சநஞ்சமானவை அல்ல.

அதன் பக்கவிளைவாகப் புலம்பெயர்த்தலினூடாக மெல்லக் கொல்லப்பட்ட தமிழின அடையாளம் எல்லாம் சாதராணமானதல்ல. பல்லாயிரம் மக்களைக் காவு கொடுத்துப் பின்னடைவுற்ற அதே வழிமுறையைக் கையாளப்போகிறோமா, வரலாற்றுப் படிப்பினைகளூடாக முன்னேற்றமான வழிமுறையொன்றைக் கண்டடையப் போகிறோமா என்பதை முடிவு செய்யவேண்டும்.

பெருந்தொனியுடனான உணர்ச்சிக் கூச்சல்களும் எந்தவொரு விமர்சனத்துக்கும் இடங்கொடாத முரட்டுத்தனமான புனிதப்படுத்தல்களும் விடுதலையைப் பெற்றுத்தரப்போவதில்லை.

மாறாக, விடுதலைக்கான பாதையில் மீண்டும் மீண்டும் ஒரே தவற்றையே நிகழ்த்திக்காட்டும். ஏனைய இன மக்களுடனான எமது உறவினைப் பகையுறவாக்கி, எதிரியைத் தனிமைப்படுத்தாமல் எம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ளும்படியாக இந்தப்போராட்டம் எவ்வாறு தள்ளப்பட்டது என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படியெல்லாம் சிந்திக்கவேண்டிய தேவை எமக்கில்லை, எமது போராட்டப்பாதையை நாம் விமர்சிக்கவோ மீளாய்வு செய்யவோ எந்தத்தேவையுமில்லை, மாற்று வழிமுறைகளைப் பேசுவோரைப் போட்டுத்தள்ளிவிட்டுத்தான் போகப்போகிறோம், உணர்ச்சிக் கூச்சல்களே உண்மையான போராட்டம், புனிதப்படுத்தலே எமது அரசியல் என்று நாம் முடிவு செய்வோமானால், மாண்டுபோன அத்தனை போராளிகளதும் தியாகத்தினூடாக எம் போராட்ட வரலாற்றை இம்மியளவும் நாம் முன்னோக்கி நகர்த்தாமல் பின்னுக்கே இழுக்க முயல்கிறோம் என்று தான் பொருளாகும்”.

- கருணாகரன்-

http://ilakkiyainfo.com/சம்மந்தன்-சுமந்திரன்-மே/

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.