Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையில் இறந்த நேரம் என்ன? - காட்சி -1 - அப்போலோ

Featured Replies

உண்மையில் இறந்த நேரம் என்ன? - காட்சி -1 - அப்போலோ

 

னித்திருந்து பொதுவாழ்க்கை வாழ்ந்த பெண்களின் வாழ்வு பெரும்பாலும் கேள்விக்குறியில் தான் நிறைவுபெறுகிறது. ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவரது  உடல்நிலை சீராகி வருவதாக அப்போலோ நிர்வாகமும், அ.தி.மு.க. பிரமுகர்களும் சொல்லி வந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி மாலை திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். ‘எக்மோ’ உள்ளிட்ட இதய இயக்கவியல் கருவிகள் அவருக்குப் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ அறிக்கை வெளியிட்டது.

2.jpg

அதேசமயம் அப்போலோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ ‘ட்விட்டர்’ வலைதளமும், அப்போலோ மருத்துவமனையின் செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டியின் வலைதளமும் முதல்வருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தன. 4-ம் தேதி இரவு ஏழு மணியளவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புனிதநீரும் அப்போலோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எதற்கும் தயாராக தமிழகம் இருந்த சூழலில், 5-ம் தேதி மதியம் 2:30 மணியளவில் ‘முதல்வரைக் காப்பாற்ற தொடர்ந்து எங்களால் இயன்றதை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அவர் அபாயக்கட்டத்தில்தான் இருக்கிறார்’ என மீண்டும் அப்போலோ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது. தமிழகம் பதைபதைப்புக்கும் பரபரப்புக்கும் ஆயத்தமாக்கிக்கொள்ளத் தொடங்கிய நேரமும் அதுதான். பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, மக்களும் அவரவர் வீடுகளுக்குச் சென்று அடங்கினர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

மாலை 4:00 மணியளவில் கூட்டம் அப்போலோவை முற்றுகையிடத் தொடங்கியது. மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, பிரதமருக்கு தமிழக முதல்வரின் உடல்நிலை பற்றி அப்டேட் செய்துகொண்டிருக்க, எய்ம்ஸில் இருந்து மீண்டும் மருத்துவர்கள் சென்னை அப்போலோவுக்கு விரைவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாக்டர் கில்நானி, டாக்டர் த்ரிகா, டாக்டர் நரங் மற்றும் டாக்டர் தல்வார் கொண்ட குழு அப்போலோ வந்தனர். முதல்வர் உடல்நிலை குறித்தான பரிசோதனைகள் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

சிகிச்சை நடந்துகொண்டிருந்த அதேசமயம், 5:00 மணிக்கு அப்போலோவில் வரிசைகட்டி நின்ற ஆம்புலன்ஸுகள் வழியாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த இதர நோயாளிகள் அப்போலோவிலிருந்து மற்ற அப்போலோ கிளைகளுக்கு மாற்றப்பட்டனர். ‘அபாயக்கட்டம்’ என்று சங்கீதா ரெட்டியே கூறிவிட்ட நிலையில், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதிலிருந்து மற்ற நோயாளிகளைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே அப்போலோ முன் கூடியிருந்த மாவட்டச் செயலாளர்களிடம், ‘‘4:00 மணிக்கு தகவல் வெளியாகும். எதற்கும் தயாராக இருங்கள்’’ என மேலிட ஆணை செய்தியாகப் பரப்பப்பட்டிருக்கிறது.

மாலை 5:30 மணியளவில் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சி தொடங்கி தந்தி, புதிய தலைமுறை என அத்தனை செய்திச் சேனல்களும் ‘முதல்வர் ஜெயலலிதா காலமானார்’ என்னும் செய்தியை வெளியிட்டன. ஒரு சில நிமிடங்களிலேயே ‘காலமானதாக தகவல்’ என்றும், ‘அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை’ என்றும் தொலைக் காட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றின. அப்போலோவும் ‘ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றனர், சில தொலைக்காட்சிகள் முதல்வர் உடல்நிலை பற்றி தவறான செய்திகளை ஒளிபரப்பின’ என்றும் தகவல் வெளியிட்டது.

தகவல் வெளியிட்டுத் திரும்பப் பெற்ற அந்த இடைப்பட்ட நேரத்தில், அப்போலோ வாசலில் கலவரம் தொடங்கியது. மக்கள், தடுப்புகளை உடைக்கத் தொடங்கினார்கள். அப்போலோவின் முகப்பில் இருந்த எமர்ஜென்சி பகுதி என அறிவிப்பு தாங்கிய போர்டுகளை மக்கள் துவம்சம் செய்தனர். நாற்காலி உட்பட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து போலீஸ்காரர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தக் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீஸ்காரர்கள் தடியடி நடத்தினர். பின்னர் பொதுமக்களையும், அ.தி.மு.க தொண்டர்களையும் மருத்துவமனை வாசல் பகுதியை விட்டு சுமார் நூறு மீட்டர் தொலைவில் நிறுத்தி, பாதுகாப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர்.  மறுபக்கம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் வெளியே நின்றுகொண்டிருந்த மக்கள் கதற, அங்கேயே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தற்கொலைக்கு முயன்றார். கட்சிக்கொடியும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ‘முதல்வர் இறந்ததாக வெளியான செய்தி தவறு’ என்ற செய்தி வந்ததும் தொண்டர்கள் மீண்டும் கொடியை முழுக் கம்பத்துக்கு ஏற்றி, ‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க’ என கோஷம் எழுப்பினார்கள். 

அப்போலோவில் பரபரப்பு ஒருவாறு கட்டுக்குள் வந்ததும் போலீஸ் படைப்பிரிவுகள், சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள், என்.எஸ்.ஜி. காமாண்டோக்கள் மற்றும் பவுன்சர்களும் மருத்துவமனையின் முன் குவிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வெளியேற்றப்பட்டனர். எந்த ஒரு தவறான செய்திகளும் தமிழக மக்களுக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காக, அனைத்து நெட்வொர்க்குகளும் சில நிமிடங்கள் தடை செய்யப்பட்டன. இதனிடையே, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மருத்துவமனைக்குள் சென்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு இரவு சரியாக 10.45-க்கு மருத்துவமனயை விட்டு வெளியேற, அவரைத் தொடர்ந்து மற்ற போலீஸ் அதிகாரிகள் தடுப்புக்கயிறு கொண்டு இருபுறமும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யத் தொடங்கினர்.

காவல்துறையினர் மற்றும் என்.எஸ்.ஜி.படைவீரர்கள் பாதுகாப்பை தீவிரமாக பலப்படுத்த, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், “முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி சிகிச்சை பெற்றுவந்தார். உடல்நிலை சீராக இருந்த நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட, அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 11.30 மணியளவில் உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என 12:03-க்கு அறிக்கை வெளியிட்டது. இதனால், நூறடித் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டு அழத்தொடங்கி ,மருத்துவமனை நோக்கி முன்னேறத்தொடங்கினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்ததால் அனைத்தும் கட்டுக்குள்  கொண்டு வரப்பட்டன. பின்னர் ஜெயலலிதாவின் உடலை போயஸ் கார்டன் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அப்போலோ மருத்துவமனை முதல் கிரீம்ஸ் சாலை வழியாக போயஸ் கார்டன் வரை அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டு, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அறிவிப்பு வெளியாவதற்கு முன்புதான் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில், கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆளுநர் மாளிகை விரைந்தது ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி தலைமையிலான குழு. ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வருக்கான பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 32 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.  அதேசமயம் அப்போலோவிலிருந்து, அரசு கார்களில் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். முதல்வர் இறப்பின் மீதான அதிகாரபூர்வ அறிவிப்பும், புதிய முதல்வர் பதவிப் பிரமாணமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் நடைபெற்றன.

முதல்வரின் உடல் எந்நேரமும் அப்போலோவிலிருந்து போயஸ்கார்டன் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் நள்ளிரவு 1.50 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்குள் சென்று ஆலோசனை நடத்தினர். பின் சரியாக அதிகாலை 2.26-க்கு பலத்த பாதுகாப்போடு, ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையை விட்டு வெளிவந்தது. தங்க ப்ளேட்டிங் செய்யப்பட்ட ஐஸ்  பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அந்தப்பெட்டி ஃப்ளையிங் ஸ்க்வாட் ஆம்புலன்ஸ் சர்வீஸில் இருந்து வாங்கப்பட்டது. “வி.ஐ.பி-க்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தனித்தனியே ஐஸ்பெட்டி உண்டு. ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரது உடலை வைக்க எங்களுக்கு ஐஸ் பெட்டி வேண்டும் என அப்போலோ தரப்பிலிருந்து அழைப்பு வந்த நிலையில், அவருக்கென தனியாக அதிக நேரம் குளிர்ந்த நிலையில் இருக்கும், தங்க ப்ளேட்டிங் செய்யப்பட்ட புதுஐஸ் பெட்டியைத் தயார் செய்து அனுப்பினோம். அதன் பெறுமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்’’ என்றார் அதன் உரிமையாளர் சாந்தகுமார்.

இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக, அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே அதாவது 11:00 மணிக்கே ஐஸ்பெட்டி கேட்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் மாலை 5.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டு, தொலைக்காட்சி ஊடகங்கள் மீண்டும் அந்த செய்தியை திரும்பப் பெற்றுக் கொண்டது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

‘‘4-ம் தேதி இரவு 7 மணிக்கு முதல்வருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. அப்போதே அவரது இதயத்தின் செயல்பாடு நின்றுவிட்டது. அதன் பிறகு சிகிச்சை முயற்சிகள் எடுக்கப்பட்டதாகச் சொல்வது சந்தேகமாக இருக்கிறது. எம்.எல்.ஏ-க்களிடம் கையெழுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்பு ஆகியவை நடக்கும் வரை அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டன” என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் வலம் வருபவர்கள் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். உடலை ‘எம்பாமிங்’ செய்ததற்கான அடையாளம் ஜெயலலிதாவின் கன்னத்தில் இருப்பதைப் பார்க்கும்போது இப்படித்தான் நம்பத் தோன்றுகிறது!

http://www.vikatan.com/juniorvikatan

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன்

 

‘‘1971 அக்டோபர் 31-ம் தேதி காலை பத்து மணி... வழக்கம் போல ஷூட்டிங்குக்குப் புறப்பட்டேன். அம்மாவிடம் சொல்லிக்கொண்டு புறப்படுவதுதான் வழக்கம். இடைவேளையின்போது வீட்டுக்கு வந்தேன். பிற்பகல் ஒன்றரை மணி இருக்கும்.

வீடு வெறிச்சோடி காணப்பட்டது... ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியது. சமையல்காரன் ஓடி வந்தான். ‘என்ன சமாசாரம்? யாரும் இல்லையே? அம்மா எங்கே?’ என்று கேட்டேன். ‘திடீரென்று அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க’ என்று தயங்கிச் சொன்னான் அவன்.

p5a.jpg

வாசலில் நின்ற நான் உள்ளே போகவில்லை. காரை அப்படியே அந்த ஆஸ்பத்திரிக்கு ஓட்டச் சொன்னேன். அங்கே அம்மா படுத்திருக்க, அவரைச் சுற்றிலும் டாக்டர்கள் பலர் நின்று சோதனை செய்துகொண்டிருந்தார்கள். படபடப்பால் எனக்கு முதலில் பேச்சே எழவில்லை.

அன்று ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அங்கேயே இருந்தேன். அம்மா பேசத் தொடங் கினார்கள். அம்மா என்னை படப்பிடிப்புக்குப் போகச் சொன்னார்கள். நான் போக மறுத்தேன். மாலையில் ரொம்பவும் உற்சாகமாக இருந்தார்கள். இரவு 10 மணிக்கு என்னை வீட்டுக்குப் போகும்படி சொல்லிவிட்டார்கள்.

விடியற்காலை மூன்று மணிக்கு டெலிபோனில் ‘நிலைமை கவலைக்கிடம்’ என்றார்கள். பறந்தேன் ஆஸ்பத்திரிக்கு.

நவம்பர் முதல்தேதி, என் தாயின் நிலை மோசமாகியது. ஆக்ஸிஜன் செலுத்தியும் பலனில்லை. பிற்பகலில் என்னைவிட்டு ஒரேயடியாகப் பிரிந்துவிட்டார்கள்...”

- இப்படி தன் ‘அம்மா’ சந்தியா மறைவு பற்றி எழுதினார் ஜெயலலிதா. அந்த சந்தியா ஆசை ஆசையாய் கட்டிய வீடுதான் ‘வேதா இல்லம்’. வீட்டைக் கட்டி திறப்பு விழா காண்பதற்குள் சந்தியா இறந்து போனார். தன் அம்மாவின் நினைவாக அந்த வீட்டுக்கு ‘வேதா இல்லம்’ என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா. சந்தியா என்பது சினிமாவுக்காக வைத்துக்கொண்ட பெயர். வேதாதான் அவரது பெற்றோர் வைத்த பெயர்!

அந்த ‘வேதா இல்லத்தில்’ இதோ இன்னொரு கண்ணீர்க் காட்சி. இப்படி ஒரு காட்சியை போயஸ் கார்டன் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்த்து இருக்காது. ஜெயலலிதா ராணியாக வாழ்ந்த வீட்டில் உயிரற்ற சடலமாகக் கொண்டுபோய் இறக்கப்பட்டார். அந்த வீட்டுக்கு என்ன ராசியோ தெரியாது.

‘ஜெயலலிதா காலமாகிவிட்டார்’ என்ற அறிக்கை அப்போலோ மருத்துவமனையில்  இருந்து வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே போயஸ் கார்டனில் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. திடீரென நூற்றுக்கணக்கில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். சாலையின்  இரு புறமும் தடுப்புகளை  வைத்து கூட்டத்தைக்  கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு இருந்தனர். போயஸ்  கார்டனுக்குள் நுழையும் சாலைகளுக்குள் ஆட்கள், கார்கள் நுழையாதவாறு தடுக்கப்பட்டது. கார்டன்  ஊழியர்கள், முக்கியஸ்தர்கள், போலீஸ்  வைத்து இருந்த பட்டியலில்  பெயர்  உள்ளவர்களை  மட்டுமே  அந்த வட்டாரத்துக்குள்  அனுமதித்தனர். நள்ளிரவு 12.54 மணிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வர... தொண்டர்கள்  அதைச் சூழ்ந்துகொண்டனர். அந்த வாகனம் போயஸ் கார்டன் வீட்டுக்குள் சென்றது. அடுத்த 10-வது நிமிடத்தில் கார்டனில்  இருந்து  வெளியே சென்றது. (இந்த வாகனத்தில்தான்  பின்னர் ஜெயலலிதாவின் உடலை ஏற்றி வந்தார்கள்) ‘அப்போலோவில் இருந்து ஆம்புலன்ஸை கார்டனுக்கு முதலில் அனுப்பி, பின்னர் கார்டனில் இருந்து அப்போலோவுக்கு ஏன் அனுப்பினார்கள்?’ என்பதும் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவை சுமந்துகொண்டு அதே ஆம்புலன்ஸ் மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்தது. அப்போது நேரம் இரவு 2.30 மணி.

p5.jpg

அந்த நேரத்தில், அ.தி.மு.க தொண்டர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துக்கொண்டு இருந்தனர். ‘‘கடைசி வரை எங்க அம்மாவைப் பாக்க முடியாம  செஞ்சுட்டீங்களே பாவிகளா’’ என காவல்  துறையினரைப் பார்த்து சிலர் ஆவேசமாகக் கூறிக்கொண்டு  இருந்தனர்.

ஜெயலலிதா அண்ணன்  மகள்  தீபா அந்த இடத்துக்கு வந்தார். தொண்டர்கள் அவரைச்  சூழ்ந்து  கொண்டு, ‘எங்க அம்மா  மாதிரியே  இருக்க!’ என  கட்டிப்பிடித்து அழத் தொடங்கினர். ஆனால், அவரை உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர். போலீஸ் ‘பேரிகேட்’ அருகே காலைவரையில் நின்றுகொண்டு இருந்தார் தீபா. இளவரசியின் உறவினரும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சி பின்னர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவருமான ராவணன் வந்தார். அவரையும் உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். முதலில்  மிரட்டிப் பார்த்த ராவணன்  பின்பு கெஞ்சியும் பார்த்தார்.  பட்டியலில் அவர்  பெயர்  இல்லாததால் உள்ளேவிட  முடியாது எனக் கறாராகச் சொல்லிவிட்டனர் காவல் துறையினர். தேனி தங்கத்தமிழ்செல்வன் வந்தார். அவரையும் அந்த சாலைக்குள் விடவில்லை. முட்டிப்  பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார் அவர்.  அடுத்து  வந்த  செங்கோட்டையனை உள்ளே அனுமதிக்க  மறுத்துவிட, ‘‘நான்  கட்சியின் சீனியர், நான் எம்.எல்.ஏ என்னையே உள்ளவிட  மாட்டேன்றீங்க... இது எல்லாம்  யார் சொல்லி  செய்றீங்கன்னு தெரியும். யார் யாரை அனுமதிக்கணும்னு உங்களுக்குப் பட்டியல்  கொடுத்தது  யாரு?’’  எனக்  கேட்டு டென்ஷன் ஆனார். அப்போது வந்த  செந்தில்  பாலாஜியை எந்தக் கேள்வியும் இல்லாமல் காவல் துறையினர் அனுமதித்தனர். பின்னர் போயஸ்கார்டன் உள்ளே இருந்து, ‘செங்கோட்டையனையும், தங்கத் தமிழ்செல்வனையும் உள்ளே விடுங்கள்’ என்று அனுமதி தந்தார்கள். அவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அப்போதும் ராவணனை உள்ளேவிடவில்லை. அடுத்தடுத்து வந்த எம்.எல்.ஏ-க்கள்  எல்லோரையும் அடையாள  அட்டையைக்  காட்டிய  பிறகு தடை இல்லாமல் அனுமதித்தனர்.

இரவு 2.30 மணியளவில் போயஸ்  கார்டன் சாலையில் ஜெயலலிதாவின் உடல்  ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டது. அதற்கு அடுத்த வாகனத்தில் சசிகலாவும் இளவரசியும் இருக்க, அதற்குப்  பின்னால்  சசிகலாவின் உறவினர்களும் வந்தனர்.போலீஸ் வேனில் அமைச்சர்களும், கட்சியின் சீனியர்களும் வந்தனர்.

p5b.jpg

2.40 மணிக்கு  போயஸ்  கார்டனுக்குள் ஆம்புலன்ஸ்  கொண்டு  செல்லப்பட்டது. சசிகலா, இளவரசி, அவருடைய மகன், மகள்,  டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார், டி.டி. வி. தினகரன் குடும்பத்தினர்,  திவாகரன், அவருடைய மகன்  தவிர மற்ற   அனைவருமே வேதா  இல்ல  வாசலில்  நிறுத்தப்பட்டனர். உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதிகாலை 3.30 மணிக்கு ராஜாஜி ஹாலுக்குக்  கொண்டு  செல்ல வேண்டும் என முதலில்  கூறியிருந்தனர்.ஆனால், அதிகாலை 4.30 மணியளவில்தான் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு  இருந்தது.

‘‘இவர்கள் செல்வதற்கு முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், போயஸ் கார்டன் வீட்டுக்குள் இருந்தார். சசிகலாவின் ஆஸ்தான புரோகிதர் தேவாதியும் உள்ளே இருந்துள்ளார். உடலை வீட்டில் உள்ள அவரது அறைக்குக் கொண்டு சென்று அங்கே சிறிது நேரம் வைத்திருந்தார்கள். அப்போது அனைவரையும் சசிகலா வெளியில் போகச் சொல்லிவிட்டு... அவர் மட்டுமே இருந்துள்ளார். பிறகு கண்ணீருடன் அந்த அறையைவிட்டு வெளியே வந்த சசிகலா, மற்றவர்களை அந்த அறைக்குள் அனுமதித்துள்ளார்.வீட்டின் பூஜை அறைக்கு முன்பாக சில சடங்குகள் செய்யப்பட்டு உள்ளன. இதனை குருக்கள் தேவாதியும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்துள்ளனர்.  அதன்பிறகு வீட்டின் ஹாலுக்கு உடலை எடுத்துவந்தார்கள். அப்போது மற்ற உறவினர்கள் உடல் அருகே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கார்டன் ஊழியர்களும் அங்கே வைத்து அஞ்சலி செலுத்த அனுமதிக்கப் பட்டார்கள். ஜெயா டி.வி. ஊழியர்களும் காவல் துறையினரும் அப்போது அனுமதிக்கப்பட்டனர்” என்று சொல்கிறார்கள்.

இத்தனை நாளும் சிங்கம் இருந்த குகையாக இருந்தது அந்த வீடு. இனி..?

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

அம்மா ‘அங்கே...’ முதல்வர் ‘இங்கே’! - காட்சி 3 - அ.தி.மு.க கட்சி அலுவலகம்

 

‘புரட்சி தலைவி வாழ்க’ என்ற கோஷத்தையே கேட்டுப் பழக்கப்பட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 5-ம் தேதி இரவு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தோடு அந்த மந்திர சொல்லுக்கு விடைகொடுக்கப்பட்டது.

டிசம்பர் 4-ம் தேதி இரவில் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசம் அடைந்தவுடனே, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சென்னை வந்து சேர உத்தரவு போனது. டிசம்பர் 5-ம் தேதி காலை அனைத்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் அப்போலோவில் ஆஜரானார்கள். அவர்களுடன் திவாகரன், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விளக்கிவிட்டு அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டியுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்கள். புதிய முதல்வரை தேர்வு செய்யும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என அந்தக் கூட்டத்தில் அறிவித்துவிட்டு, அனைவரிடமும் வெற்று ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். அதன்பிறகு, ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது எனத் தகவல் வெளியானது. அதன்பிறகு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாலை 6 மணிக்கு அ.தி.மு.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

p8b.jpg

அணிவகுத்த எம்.எல்.ஏக்கள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு நான்கு மணி முதலே எம்.எல்.ஏ-க்கள் வரத் துவங்கிவிட்டார்கள்.

அ.தி.மு.க அலுவலக வாயிலில் தொண்டர்கள் சோகத்துடன் அமர்ந்திருக்க அவர்களைக் கடந்து சட்டமன்ற உறுப்பினர்களும் சோகமாக உள்ளே சென்றனர். நேரம் ஆக ஆக அமைச்சர்கள் சிலரும் அங்கே வரத் துவங்கினர். பாண்டியராஜன், சம்பத், நிலோபர் கபில் உள்ளிட்ட அமைச்சர்கள் ஐந்து மணிக்கே வந்துவிட்டார்கள். வந்தவர்கள் அனைவரும் கீழே அமர்ந்திருந்தனர். பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் வந்த நிலையில் அனைவரும் மாடிக்குப் போனார்கள். தனியாக வந்த செங்கோட்டையன், யாரிடமும் எதுவும் பேசாமல் மாடிக்குப் போனார். எந்த உறுப்பினரிடமும் அவர் பேசிக்கொள்ளவில்லை.

இறக்கி ஏற்றப்பட்ட கட்சிக் கொடி!

 5-30 மணியளவில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாக... வெளியே நின்ற தொண்டர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் ஜெயக்குமாரை கட்டிப் பிடித்து சிலர் அழ துவங்கிவிட்டனர். அவரும் கலங்கிய கண்களோடு உள்ளே சென்றார். அமைச்சர் நிலோபர் கபில் மாடியில் நின்றுகொண்டு கீழே அழுபவர்களைப் பார்த்து அவரும் அழுது கொண்டிருந்தார். அ.தி.மு.க அலுவலகமே கூக்குரலிட்டது. அப்போது அலுவலக ஊழியர் ஒருவர் வேகமாக வந்து, அலுவலகத்தின் முகப்பில் இருந்த கட்சிக் கொடியை அரைக் கம்பத்தில் இறக்கிக் கட்டினார். சில நிமிடங்களில் ஜெயலிலதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, விசில் அடித்து மகிழ்ந்தனர் தொண்டர்கள். இறக்கப்பட்ட கட்சிக் கொடி உயர்த்தப்பட்டது.

p8.jpg

எதற்கு அழைப்பு என்றே தெரியவில்லை!

ஏழு மணியாகியும் கூட்டம் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. முக்கிய அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அப்போலோவில் இருந்து வரவில்லை. மாடியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கீழே நின்ற தனது நண்பருக்கு போன் செய்து “ஐந்து மணிக்கு எல்லாம் வரச்சொன்னார்கள் வந்துவிட்டோம். எதற்காக வரச்சொன்னார்கள் என்றே தெரியவில்லை. கூட்டம் எப்போது ஆரம்பிக்கும், கூட்டம் முடிந்து எங்கு போக போகிறோம் என்று எதுவும் தெரியவில்லை’’ என புலம்பினார். ‘எங்கு செல்கிறோம். என்ன செய்யப் போகிறோம் என்று யாரும் எதுவும் கேட்கக் கூடாது’ என உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. கூட்டம் துவங்கும் முன் செல்போனை ஆஃப் செய்ய சொல்லியிருந்தார்கள்.

வாசலுக்கு வந்த பேருந்து!

7.30 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் செல்ல மூன்று சொகுசுப் பேருந்துகள் கட்சி அலுவலக வாசலுக்கு வந்து நின்றுவிட்டன. அப்போதுதான் பேருந்தில் உறுப்பினர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு ராஜ்பவன் செல்லப் போகிறது என்ற தகவல் வெளியானது. 9 மணிக்கு மேல் கூட்டம் துவங்கும் என்று சொல்லப்பட்டது. கூட்ட அரங்கின் கதவுகளும் அடைக்கப்பட்டன. ஆனால், முக்கிய அமைச்சர்கள் வருகை தள்ளிப் போனதால் கூட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இரவு உணவு இட்லி!

பத்து மணியை தாண்டியும் கூட்டம் நடைபெறவில்லை. அப்போலோவில் என்ன நடக்கிறது என்ற குழப்பம் அலுவலகத்தில் இருந்த உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. உறுப்பினர்களுக்கு இரவு உணவாக இட்லி வழங்கப்பட்டது. உணவுக்குப் பிறகு கூட்டம் நடைபெறும் என்றார்கள். அவைத் தலைவர் மதுசூதனனும் அங்குதான் இருந்தார்.

p8a.jpg

ஒ.பி.எஸ். வருகையும் அப்போலோ அறிக்கையும்

இரவு 11-30 மணிக்கு மேல், ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்டோர் ஒரே காரில் அலுவலகம் வந்தார்கள். வெளியே நின்ற தொண்டர்கள் அவர்களை உள்ளேவிடாத அளவுக்கு கதறினார்கள். அவர்கள் வந்ததும் கூட்டம் தொடங்கியது. மீடியாவினரைப் படம் எடுக்க அழைத்தார்கள். அந்த நேரத்தில் ‘ஜெயலலிதா மரணத்துவிட்டார்’ என்ற  அறிக்கையை வெளியிட்டது அப்போலோ. கூட்டத்தில் இருந்தவர்கள் முகத்திலும் ஒருவித இறுக்கம். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மதுசூதனன் கையில் இருந்த பேப்பரை பார்த்து ‘முதல்வராக பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்படுகிறார்’ என்று மட்டும் சொல்லி அமர்ந்துவிட்டார். அலுவலக ஊழியர் ஒருவர், ஒவ்வொரு உறுப்பினரிடமும் வரிசையாக கையெழுத்து வாங்கினார். அறை முழுவதும் மயான அமைதி நிலவியது, பெண் உறுப்பினர்கள் அழுது கொண்டிருந்தார்கள். பதினைந்து நிமிடங்களில், கூட்ட அறையில் இருந்து அனைவரும் வெளியேறி, வாசலில் நின்ற பேருந்தில் ஏறினார்கள். கவர்னர் மாளிகையான ராஜ்பவனுக்கு பேருந்து கிளம்பும் போது மணி 12-30.
 

http://www.vikatan.com/juniorvikatan

தொடரும்

  • தொடங்கியவர்

நள்ளிரவு... அவசரமாய்... ரகசியமாய் - காட்சி 4 - ராஜ் பவன்

 

 

ப்படியொரு துக்கம் ததும்பிய, இறுக்கம் நிறைந்த, பதற்றம் கலந்த பதவியேற்பு விழாவை தமிழக ஆளுநர் மாளிகை இதற்குமுன் கண்டது இல்லை. கடந்த டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை பதவியேற்றுக்கொண்ட நிகழ்ச்சி விசித்திரமாகவே நடந்து முடிந்தது.  

 அமைச்சரவை பதவியேற்பு என்றாலே, உற்சாகம் ஊற்றெடுக்கும். உள்ளேயும் வெளியேயும் தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆளும் கட்சி வி.ஐ.பி-க்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என அரங்கம் நிரம்பி வழியும். முதல்வராக, அமைச்சர்களாகப் பதவியேற்பவர்களின் முகங்களில் புன்னகையும் பூரிப்பும் வெளிப்படும். ஆனால், இவற்றுக்கு எல்லாம் நேர்மாறாக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.   

p12a.jpg

  ‘முதல்வர் ஜெயலலிதா காலமானார்’ என்று தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதால் ஏற்பட்ட களேபரத்துக்குப் பின்னர், ‘மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் முதல்வர் இருக்கிறார்’ என்று மறுப்பு அறிக்கை வெளியான பிறகும்கூட, அப்போலோ மருத்துவமனையில் பதற்றம் தணியவில்லை. அப்போது, அ.தி.மு.க-வின் தலைமை நிலைய மேலாளர் மகாலிங்கம், அப்போலோவில் இருந்து காரில் வெளியேறினார். ‘ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் மாலை 7 மணி அளவில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவர் செல்கிறார்’ என்று தகவல் வெளியானது. மகாலிங்கம் வெளியேறிய பிறகு, அப்போலோவில் இருந்த அரசு உயர் அதிகாரிகள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர்.

 பின்னர், இரவு 8 மணி அளவில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அப்போலோவில் இருந்து அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்துக்குச் சென்றனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் அப்போலோவில் இருந்து தலைமைக்கழகம் சென்றனர். அங்கு, எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. பின்னர், நள்ளிரவு 12 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். எம்.எல்.ஏ-க்களை ஏற்றிச் செல்வதற்காக ஏசி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட் டிருந்ததன. 12.45 மணி அளவில் விழா அரங்கத்துக்கு கவர்னர், ஓ.பன்னீர் செல்வம் உட்பட அனைவரும் வந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கியது.  

இறுக்கமும் மௌனமும் குடிகொண்டிருந்த அந்த அரங்கத்தில் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். பின்வரிசையில் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஆளுநரின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருந்தனர்.  இவர்களுக்கு எதிரே அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் குறிப்பை கவர்னர் வித்யாசாகர் ராவ் முதலில் வாசித்தார். பின்னர், அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டன. அதன் பிறகு, பதவியேற்பு நடந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். “ஓ.பன்னீர்செல்வம் எனும் நான்...” என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழில் சொன்னதும், பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசித்தார். முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ற உடன், இரண்டு பிரிவுகளாக மற்ற அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பதவியேற்றனர். 20 நிமிடங்களில் நிகழ்ச்சி முடிந்தது. பிறகு, அனைவரும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.

 p12.jpg

  முதல்வர் பதவியில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் மரணம் அடைந்த சமயத்தில், இடைக்கால முதல்வராக ஒருவர் பொறுப்பேற்று, பின்னர் முதல்வராக ஒருவர் தேர்வுசெய்யப்பட்ட முறை பின்பற்றப்பட்டது. அண்ணா மரணம் அடைந்தபோது, இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். அதன் பிறகு, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. அதில், முதல்வராக கருணாநிதி தேர்வுசெய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது,  இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். பின்னர், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று வி.என்.ஜானகி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது, ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, இடைக்கால முதல்வர் என நியமிக்கப்படாமல், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

2014-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது முதல்வர் பதவி பறிபோனது. அதனால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். அவரது தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர். அந்த நிகழ்ச்சியில், ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அனைவரும் சிந்திய கண்ணீர், ஆளுநர் மாளிகையில் ஆறாக ஓடியது. அனைவரும் குலுங்கிக் குலுங்கி அழுதனர். ஆனால், இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் இறுகிய முகங்களுடன் காட்சி அளித்தனர். யார் கண்களிலும் ஒரு சொட்டு கண்ணீர்கூட வழியவில்லை!

தொடரும்

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

உடலைச் சுற்றிக்கொண்டார்கள்! - காட்சி 5 - ராஜாஜி ஹால்

 

 

p18.jpg

முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர் வைக்கப்பட்ட ராஜாஜி ஹாலில்தான் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டது. அங்கு நாம் கண்ட சோகம், பரபரப்பு, நடிப்பு என பலவிதமான காட்சிகள் இங்கே...

சசிகலா, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், சசிகலாவின் சகோதரர் திவாகரன், திவாகரனின் மகன் ஜெயானந்த், சசிகலாவின் அண்ணி இளவரசி, இளவரசியின் மகள் பிரியா, மகன் விவேக்,  விவேக் மனைவி கீர்த்தனா, சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன், சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் உட்பட ஒட்டுமொத்த சசிகலாவின் உறவுகளால் அமைக்கப்பட்ட ‘பாதுகாப்பு வளையத்தில்’தான் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஜெ. உடல் அருகில், அமைச்சர்களால்கூட நெருங்க முடியவில்லை. ஜெயானந்தின் நண்பர் தேவாதான் உணவு, டீ  ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். அடையாறு ஆனந்தபவனில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது.

அமைச்சர் ஜெயக்குமாரும், நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரையும் பரபரப்பாக இருந்தனர். மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தியவுடன், படிக்கட்டில் அமர்ந்திருந்த முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் கையைப் பிடித்தார். எழுந்த பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின், சசிகலா பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. கனிமொழி அஞ்சலி செலுத்திவிட்டு சசிகலாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

p18b.jpg

ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்த வந்தபோது, பிரதமர் மோடி வருவதாக தகவல் வந்தது. ரஜினி குடும்பத்தினரை நாற்காலிகள் போட்டு உட்கார வைத்தனர். மோடி வர தாமதம் ஆனதால் ரஜினியை அஞ்சலி செலுத்த அழைத்தனர். சிரம் தாழ்த்தி ஜெயலலிதா உடலுக்கு ரஜினி அஞ்சலி செலுத்தினார். மனைவி லதா, மருமகன் தனுஷ், மகள்கள் சௌந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் சசிகலாவிடம் பேசிவிட்டுச் சென்றனர். பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபீதாதான் அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் பரபரப்பாக வலம் வந்தார். காலையில் சேலையில் இருந்த சபீதா, மாலையில் வீட்டுக்குப் போய்விட்டு சுடிதாரில் திரும்பினார்.

கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்திவிட்டு, சசிகலாவிடம் பேசிக்கொண்டிருந்தார். விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்த வந்தனர். வெளியேறும் வழியாக விஜயகாந்த் உள்ளே வந்ததால் அவரை போலீஸ் தடுத்தது. விஜயகாந்த் குரலை உயர்த்தியதால் அவர்களை உள்ளே அனுப்பினர். ஓ.பி.எஸ், சசிகலா என யார் பக்கமும்  விஜயகாந்த் திரும்பவில்லை. ஸ்டைலாக கையை உயர்த்தி, பொதுக்கூட்டத்தில் கை காட்டுவதுபோல மக்களை நோக்கி கைகாட்டினார்.

வைகோ அஞ்சலி செலுத்திவிட்டு வந்து பேட்டி கொடுத்தார். அப்போது கேமராமேன்கள், ‘‘சார்... ரெடி’’ என்றதும் கடுப்பான வைகோ, ‘‘எனக்கு நீ ஆர்டர் போடுகிறாயா?’’ என கோபமாகக் கேட்டுவிட்டு, 20 நிமிடங்களுக்கு மேல் முழுங்கிவிட்டுதான் அங்கிருந்து நகர்ந்தார். பல ஆண்டுகளாக ஜெயலலிதா இருக்கும் திசைக்கே வராமல் இருந்த எம்.நடராஜன், ராஜாஜி ஹாலில் ‘கம்பீரமாக’த் தோன்றினார். ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் பரிவாரங்களுடன் வந்தார்.

p18a.jpg

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூட்ட நெரிசலில் சிக்கி அஞ்சலி செலுத்த வந்தார். தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஒரு போலீஸ் அதிகாரியை அழைத்து, “ஒரு மாநில முதல்வரை இப்படித்தான் கூட்ட நெரிசலில் அழைத்து வருவீர்களா?’’ என எச்சரிக்கை செய்தார். மாநில முதல்வர்களும் திரையுலகப் பிரமுகர்களும் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் கருணாஸ் அஞ்சலி செலுத்தி, செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

கேரள கவர்னர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி ஆகிய மூவரும் ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்தனர். அதை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். கேரளாவில் மூன்று நாள் துக்கம், முதல்வர் மறைவுக்கு நாளிதழ்களில் தமிழில் விளம்பரம் என கேரளா அரசு ஏற்படுத்திய ஆச்சர்யங்கள் அதிகம். அப்போலோ, போயஸ் கார்டன் என எல்லா இடங்களிலும் துரத்தியடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது கணவர் மாதவனுடன் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். “என்னை இவ்வளவு நாட்களாகத் துரத்தியவர்கள், இன்று பெரிய மனது வைத்து என் அத்தைக்கு அஞ்சலி செலுத்த அனுமதித்துள்ளனர்’’ என சொல்லிவிட்டு சோகமாக நகர்ந்தார் தீபா.

p18c.jpg

உ.பி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வந்தபோது, ஜெயலலிதாவின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு புறப்படத் தயாரானது. அதை அறிந்த அகிலேஷ் யாதவ், கொஞ்சமும் யோசிக்காமல், காரில் இருந்து இறங்கி கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடிப்போய், அந்த வாகனத்தில் ஏறினார். அந்த வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, இளவரசி மகள் ப்ரியா ஆகியோர்  இருந்தனர்.

- ஜோ.ஸ்டாலின், எஸ்.முத்துகிருஷ்ணன், ஜெ.அன்பரசன்


இறுதி நிமிடங்கள்... விவரித்த சசிகலா!

கராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், சசிகலாவிடம் சென்று துக்கம் விசாரித்தார். கடைசி நிமிடங்களில், ஜெயலலிதா எப்படி இருந்தார்... என்ன அவஸ்தைகளை அனுபவித்தார் என்பதை சசிகலா பட்நாவிஸிடம் சொல்லிக் காண்பித்தார். சாப்பிட முடியாமல் சிரமப்பட்டதை நாக்கை வெளியே நீட்டியும் கண்களில் நீர் வழிந்ததைக் கன்னத்தில் கையை வைத்தும், சொல்லிக் காண்பித்தார். 


கோலிவுட்... கொண்டாடிய கூட்டம்!

ஞ்சலி செலுத்த திரை நட்சத்திரங்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்கும், அவர்களுடன் செல்ஃபி எடுப்பதற்கும் ஒரு கும்பல் சுற்றியது. நடிகர்கள் வெளியில் போகும்போது, ‘‘தலைவா... வாழ்க’’ என சூழ்நிலை புரியாமல் கோஷங்கள் எழுப்பியது எல்லாம் அநாகரீகத்தின் உச்சம்.

தொடரும்

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

திடீர் தீபக்! - காட்சி 6 - எம்.ஜி.ஆர் சமாதி

 

 

எம்.ஜி.ஆர். புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே ஜெயலலிதாவும் புதைக்கப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னாலே ஜெயலலிதா முகம் நினைவுக்கு வரும். ஜெயலலிதா பெயரைச் சொன்னாலே எம்.ஜி.ஆர். முகம் நினைவுக்கு வரும். இந்த பந்தம்தான் மரணத்துக்குப் பிறகும் தொடர்கிறது அவர்கள் இருவருக்குள்ளும்!

p22.jpg

ஜெயலலிதா இறந்துவிட்டார் என்றதுமே ‘அம்மாவை எங்கே அடக்கம் செய்வார்கள்?’ என்பதுதான் அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி. ‘‘கடற்கரையில்தான் வைப்பார்கள்’’ என ஒரு தரப்பு சொன்னது. ‘‘சிறுதாவூர் பங்களாவில் வைக்கப் போகிறார்கள். சில மாதங்கள் கழித்து அங்கு நினைவகம் எழுப்புவார்கள்’’ எனவும் சொல்லப்பட்டது. ஆனால், சிறுதாவூர் சென்னைக்கு வெளியே இருப்பதால் ஒதுக்குப் புறமாகப் போய்விடும் என நினைத்தார்கள். அப்போலோவில் இருந்து ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லப்படும் முன்பே, கடற்கரையில்தான் உடல் அடக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியானது.

இரவோடு இரவாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் எம்.ஜி.ஆர் சமாதிக்குச் சென்று வேலைகளைத் தொடங்கினார்கள்.  எம்.ஜி.ஆர் சமாதிக்கு நேர்கோட்டில் கொஞ்சம் தள்ளி இடம் தோண்டப்பட்டது. அந்த இடத்தை பார்க்கக் கூட்டம் திரண்டிருந்தது. ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடலைப் பார்த்துவிட்டு வந்த கூட்டம் நேராக அங்கே வர, பெரும் கூட்டம் கூடியது. அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிக் கொண்டிருந்தது போலீஸ். லாரி லாரியாக கொண்டுவரப்பட்ட இரும்பு தடுப்புகளைக் கொண்டு சமாதியின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. எம்.ஜி.ஆர் சமாதிக்கு வெளியே இருந்த கூட்டம், ‘‘எங்களை உள்ளே விடுங்கய்யா’’ என போலீஸாரிடம் போராடிக் கொண்டிருந்தார்கள். சமாதியில் சவப்பெட்டியை வைப்பதற்கான உள்பகுதி சிமென்ட் செங்கல்லால் எழுப்பப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் போலீஸ் வாகனம் தவிர, எந்த வாகனமும் கடற்கரை சாலையில் நுழையத் தடை விதிக்கப்பட்டது. நண்பகலுக்குள் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படும் இடம் தயாரானது, வி.ஐ.பி-க்கள் அமர்வதற்கான குஷன் சேர்கள் கொண்டுவரப்பட்டன. ஜெயலலிதா உடலை அடக்கம் செய்வதற்கான சந்தன மரத்தால் செய்யப்பட்ட பெட்டி வந்து சேர்ந்தது. அந்தப் பெட்டியை, அடக்கம் செய்யும் குழி அருகே ரோலிங் கயிற்றைவைத்து குழிக்குள் இறக்கி ஒத்திகை பார்த்தார்கள். ராஜாஜி ஹாலில் இருந்து இறுதி ஊர்வலம் கிளம்பியது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருடைய கான்வாய் போல அமைந்திருந்தது இறுதி ஊர்வலம். தமிழக காவல் துறையினர் அணிவகுத்து முன்னே வந்தனர். அதன்பின் ஜாமர் வாகனம், பைலட், வாகனங்கள் வந்தன. முதலில் வந்த பைலட் காரில் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் அமர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் உடல் கொண்டுவரப்பட்ட ராணுவ வண்டியில் சசிகலா, பன்னீர்செல்வம், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், இளவரசி மகள் ப்ரியா ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதற்குள் சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் குஷன் நாற்காலிகளை ஆக்கிரமித்திருந்தனர். பாதுகாப்பு வாகனத்திலே சசிகலாவின் கணவர் நடராஜனும் வந்து சேர்ந்தார்.

p22a.jpg

ஜெயலலிதாவின் உடலை ராணுவத் தளபதிகள் சுமந்தபடியே சமாதிக்குள் நுழைந்தனர். அங்கே ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மலர்த் தூவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உடல் அடக்கம் செய்யப்பட்ட சந்தன பெட்டியின் உள்ளே உப்பு பாக்கெட்களும் சில கெமிக்கல்களும் போடப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிக்குள் பகவத் கீதையின் ஒரு பகுதி வைக்கப்பட்டது. அதோடு ஜெயலலிதா பயன்படுத்தும் வாசனைத் திரவியம் ஸ்ப்ரே செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் குழிக்கு அருகில் இறக்கப்பட்டதும் சொல்லி வைத்தார் போல அங்கே வந்து நின்றார் சசிகலா. உடலை இறக்கி வைத்த ராணுவத் தளபதிகள், தேசியக் கொடியை மடித்து அதை சசிகலாவிடம் கொடுத்தார்கள். அந்தக் கொடியை வாங்கத்தான் சசிகலா தயாராக அங்கு வந்து நின்றார்.

உடலை சந்தனப் பெட்டிக்குள் வைத்ததும் சசிகலாவின் ஆஸ்தான புரோகிதரான தேவாதி, இறுதிச் சடங்குகளை செய்ய ஆரம்பித்தார். சடங்குகளை யார் செய்வார்கள் என்கிற சஸ்பென்ஸ் சில நிமிடங்களில் உடைந்தது. ஒரு இளைஞரை கையைப் பிடித்து அழைத்து வந்தார் சசிகலா. அவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். இதுவரை தலைக் காட்டாத தீபக் திடீரென வந்தது பலரின் புருவத்தை உயர்த்தியது. பெட்டியைச் சுற்றிலும் சிறிய அளவிலான சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள். திருநீறு தூவி, உடலைச் சுற்றிப் பால் தெளித்தார்கள். தேவாதி, சொல்லச் சொல்ல சசிகலாவும், தீபக்கும் இதை செய்தார்கள். ரத்த உறவுகளே இறுதிச் சடங்குகளை செய்வது வழக்கம். ஆனால், அதிலும் சசிகலாதான் பிரதானமாக இடம்பெற்றார். இறுதிச் சடங்குகள் முடிந்து உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடப்பட்டபோது சுற்றியிருந்தவர்கள் கதறினார்கள். முதல்வர் பன்னீர்செல்வம் அழுகையை அடக்க முடியாமல் தேம்பத் தொடங்கினார். ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு மரியாதை செய்தனர். சந்தனப் பெட்டி குழிக்குள் வைக்கப்பட்டதும் சுற்றி நின்ற சிலர், செயின், பணம் போன்றவற்றை குழிக்குள் வீச முற்பட்டதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. மண்ணால் குழியை முழுவதும் மூடியபிறகே அங்கிருந்து சசிகலா உள்ளிட்டவர்கள் கிளம்பினார்கள்.

p22b.jpg

p22d.jpg

எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்த ஜெயலலிதா, இறுதிப் பயணத்தை எம்.ஜி.ஆர் அருகிலேயே நிறைவு செய்துவிட்டார்.

- அ.சையது அபுதாஹிர், ஐஷ்வர்யா


p22c.jpgகுழிக்குள்  செல்போன்!

சந்தனப் பெட்டியை குழிக்குள் இறக்கிய பிறகு முக்கியப் பிரமுகர்கள், சந்தக்கட்டைகளை குழிக்குள் போட்டு இறுதி அஞ்சலியை செலுத்தினர். அந்த சடங்கில் பி.ஜே.பி தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரியும் பங்கேற்றார். சந்தனக் கட்டைத் துண்டுகளை குழிக்குள் போட்டார். அப்போது, அவர் கையில் இருந்த, ‘மோட்டோ ஜி 4’ செல்போனும் தவறி குழிக்குள் விழுந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘செல்போன் விழுந்து உண்மைதான். அம்மா வைக்கப்பட்ட குழிக்குள் எனது செல்போன் விழுந்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இறுதி மரியாதை என்று நினைக்கிறேன்’’ என்றார். ஆசிர்வாதம் ஆச்சாரியின் செல்போனும் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது.

http://www.vikatan.com/juniorvikatan

 

  • தொடங்கியவர்

சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!

 

ஆஸ்பிட்டல் To சமாதி ஹைலைட்ஸ்!

 

1987 டிசம்பர் 24-ல் மறைந்த எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. உடலுக்கு அருகே தலை மாட்டில் அப்போது நின்றுகொண்டிருந்த ஜெயலலிதா, 29 ஆண்டுகள் கழித்து அதே ராஜாஜி ஹாலில் சடலமாக கிடத்தப்பட்டிருந்தார். ராணுவ வண்டியில் எம்.ஜி.ஆர். உடல் ஏற்றப்பட்டபோது அதில் ஏற முயன்ற ஜெயலலிதா கீழே தள்ளப்பட்ட போதுதான் அவரின் அரசியல் அத்தியாயம் தொடங்கியது. அதேப் போன்றதொரு ராணுவ வாகனத்தில் ஜெயலலிதாவின் உடல் இப்போது ஏற்றப்பட்டது. அன்று எம்.ஜி.ஆருக்காக அஞ்சலி செலுத்த வந்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. இன்று அவரது மகன் ராகுல் காந்தி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்து போனார். 29 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். மறைவின்போது நடந்த சம்பவங்கள் ஜெயலலிதா மறைவின்போது ரீவைண்ட் ஆகிக் கொண்டிருந்தன.

p26b.jpg

TN 09 BE 5969 என்ற பதிவு எண் கொண்ட Toyota Land Cruiser LC 200 மாடல் காரைத்தான் ஜெயலலிதா பயன்படுத்தி வந்தார். செப்டம்பர் 22-ம் தேதி காலையில் கோட்டைக்கு வந்தபோதுகூட அந்த காரில்தான் வந்தார். டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவு TN 11 S 2289 என்கிற பதிவு எண் கொண்ட Flying Squad Redefining Care என்கிற ஆம்புலன்ஸில்தான் ஜெயலலிதாவின் உடல் அப்போலோவில் இருந்து போயஸ் கார்டனுக்கு எடுத்து வரப்பட்டது. சிம்ம ராசிக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா.அவரது உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸிலும் ‘சிம்மம்’ இருந்ததுதான் ஆச்சர்யம். சிம்மம் என்கிற ஆங்கில வார்த்தை அந்த ஆம்புலன்ஸின் முகப்பில் எழுதப்பட்டு சிங்கம் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. சிறகுகளோடு இருக்கும் சிங்கம் படங்களும் அந்த ஆம்புலன்ஸின் பக்கவாட்டிலும் பொறிக்கப் பட்டிருந்தன. இது திட்டமிடப்பட்டதா? எதேச்சையாக அரங்கேறியதா? தெரியவில்லை. அந்த ஆம்புலன்ஸில் Advanced Life Support Ambulance என எழுதப்பட்டிருந்து அந்த சூழலில் அது கொஞ்சமும் பொருந்தவில்லை.

டை அடிக்கும் பழக்கம் உடையவர் ஜெயலலிதா. 75 நாட்கள் சிகிச்சையில் இருந்தததால் அவரின் தலைமுடி வெள்ளையாகி இருந்தது. அதனால் அவரின் முடிக்கு டை அடித்தார்களாம். சிகிச்சையில் இருந்தபோது கையில் வாட்ச் இல்லை. ஆனால், இறந்தபிறகு வாட்ச் மாட்டப்பட்டிருந்தது. இரண்டு கைவிரல்களில் மோதிரங்களும் மாட்டப்பட்டிருந்தன. கழுத்தில் தங்க நகை அணியும் பழக்கம் இல்லை. ஆனால், அவரது உடலில் தங்க சங்கிலியை மாட்டியிருந்தார்கள். ஜெயலலிதாவுக்குப் பிடித்த நிறம் பச்சை. அதே நிறத்தில் மெரூன் பார்டர் போட்ட பட்டுப் புடவையை சுற்றியிருக்கிறார்கள். மிகவும் போராடித்தான் புடவையைக் கட்டியிருக்கிறார்கள். இந்த விஷயங்கள் எல்லாமே கார்டனில் நடந்தன.

p26c.jpg

போயஸ் கார்டனில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு வரப்பட்டபோது கட்சிக் கொடிதான் போர்த்தப்பட்டிருந்தது. பிறகு, கட்சிக் கொடியை எடுத்துவிட்டு தேசியக் கொடி போர்த்தப்பட்டது. உடல் வைக்கப்பட்ட பிறகு அவரது வாய் லேசாகத் திறக்க ஆரம்பித்தது. அருகில் இருந்த இளவரசின் மகள் கிருஷ்ணப் ப்ரியாவும் சசிகலாவும் தாடையைப் பிடித்து வாயை மூட முயன்றனர். ஆனால், சில விநாடிகளிலேயே மீண்டும் வாய் திறந்தது. பற்கள் வெளியே தெரிய...  தொடர்ந்து வாயை மூடுவதற்கு முயன்று தோற்றுப் போனார்கள். கடைசியில் தாடையைச் சுற்றி வெள்ளைத் துணியைக் கட்டி வாயை மூடினார்கள். ராஜாஜி ஹாலுக்கு உடல் கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோக்களில் அந்த வெள்ளைத் துணி இருக்காது.

உடலின் தலைமாட்டில் சசிகலா நின்று ஜெயலலிதாவின் முகத்தை சரி செய்தபடியே இருந்தார். பிரதமர் மோடி வந்தால் சசிகலாவை சந்திப்பார் எனத் தெரிந்து அதற்கு வசதியாக சசிகலாவை கொஞ்சம் தள்ளி நிற்க வைத்தார் அவரது சகோதரர் திவாகரன். மறக்காமல் அவரும் பக்கத்திலேயே நின்றுகொண்டார். மோடி வந்தபோது இரண்டு பேர் பதறினார்கள்; ஒருவர் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, இன்னொருவர் பி.ஜே.பி. ராஜ்யசபா எம்.பி.யான  இல.கணேசன். சசிகலாவை மோடிக்கு அறிமுகம் செய்து வைப்பதிலேயே குறியாக இருந்தார் வெங்கய்யா நாயுடு. சசிகலாவின் தலையை தொட்டு ஆறுதல் சொன்னார். அதன்பிறகுதான் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் பார்வையைத் திருப்பினார். கட்டித் தழுவி அவருக்கும் ஆறுதல் சொன்னார் மோடி. கிளம்பும் போது மீண்டும் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது அருகில் நின்ற இல.கணேசன் அவரைப் பிடித்து எம்.நடராஜனுக்கு அறிமுகம் செய்து வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். எம்.நடராஜனுக்கு வணக்கம் வைத்துவிட்டு காதில் ஏதோ சொன்னார்.  

p26a.jpg

அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் ராஜாஜி ஹாலின் நீண்ட படிக்கட்டுகளில் உட்கார்ந்திருக்க... சாதாரண கவுன்சிலர் சீட்டுக்கு மனு போட்ட தேவா, ஜெயலலிதாவின் உடலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார்.  சசிகலா குடும்பத்தினரோடு தேவாவுக்கு நெருக்கம் அதிகம். அதனால் ஸ்பெஷல் மரியாதை. நடிகை விந்தியா அஞ்சலி செலுத்திவிட்டு அப்படியே படிக்கட்டில் உட்காரப் போன அவரை உட்கார விடாமல் எழுப்பி அனுப்பினார்கள். அஞ்சலி செலுத்த வந்தவர்கள் உடலுக்கு வணக்கம் வைத்து சில விநாடிகள்கூட அந்த இடத்தில் நிற்கவிடாமல் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். பலரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளினார்கள்.  இதில் நீல நிற சட்டை அணிந்திருந்த ஒருவர் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே செயல்பட்டார். அவர் இளவரசியின் மருமகன் ராஜராஜன்.

நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா பங்கேற்றால் மேடையை சுற்றி ஏர் கூலர்களும் ஏசிகளும் வைக்கப்பட்டிருக்கும். சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஒற்றை ஆளாக ஜெயலலிதா மேடையில் இருக்க... அந்த மேடையைச் சுற்றி ஏசிகள் வைக்கப்பட்டிருந்தன. ஹெலிகாப்டரில் ஏறும்போதும்கூட கையில் பிடித்துக்கொள்ளும் சிறிய மின்விசிறியை ஜெயலலிதா பயன்படுத்தினார். அப்படிப்பட்ட ஜெயலலிதா சடலமாக ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டபோது அவருக்கு அருகில் ஏர்கூலர்கள் இருந்தன. ஆனால் அந்த ஏர்கூலர்களை மறைத்துக் கொண்டு மன்னார்குடி கும்பல் நின்றதால் ஏசி மிஷின்களில் இருந்து வந்த குளுகுளு காற்று அவர்களுக்குதான் வீசியது.  

p26.jpg

75 நாட்களும் அப்போலோவை சுற்றியே அரசியல் அரங்கேறிக் கொண்டிருந்தது. ‘‘பேசுகிறார்... எழுந்து நடந்தார்... கிச்சடி சாப்பிட்டார்’’ என அப்போலோவில் இருந்து வந்த செய்திகள் பல ரகம். ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த பிறகும் அப்போலோ செய்திகள் அடங்கிப் போகாமல் ஜெயலலிதாவின் சமாதி வரையில் தொடர்ந்தது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் சமாதியைச் சுற்றி பேரிகார்டுகளை அடுக்கி பாதுகாப்பு வளையத்தைப் போட்டிருந்தது போலீஸ். அந்த பேரிகார்டுகளில் ஒன்றில் அப்போலோ விளம்பரம் பளிச்சிட்டது. அதில் இருந்த வாசகம் Save Time Save Lives!

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி


கூட்டத்தோடு கூட்டமாக!

ஜெயலலிதாவின் நிழல் போல வலம் வந்த அவரது பி.ஏ. பூங்குன்றன், ஜெயலலிதா மருத்துமனையில் அட்மிட் ஆனபிறகு  எங்கே போனார் என்றே தெரியவில்லை. அப்போலோவுக்கு வந்து ஜெயலலிதாவைப் பார்த்தார் என்றுகூட செய்திகள் வரவில்லை. 75 நாட்களும் அவரைப் பற்றிய பேச்சுகள் எதுவும் கிளம்பவில்லை. ஜெயலலிதாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இடத்தில்கூட அவரைப் பார்க்க முடியவில்லை. இப்படிபட்ட நிலையில்தான் அவரது உடல் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டபோது அங்கே பூங்குன்றனின் தலை தென்பட்டது. கூட்டத்தோடு கூட்டமாக அஞ்சலி செலுத்த வந்திருந்தார் பூங்குன்றன்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

முகத்தில் நான்கு புள்ளிகள்... சொல்லும் உண்மைகள்!

 

எம்பாமிங் ரகசியம்

 

ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5, இரவு 11:30 மணிக்குப் பிரிந்தது என அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. அன்று, இரவே இறுதிச்சடங்குகள் போயஸ் கார்டனில் நிறைவேற்றப்பட்டு காலையில் ராஜாஜி ஹாலில் மக்கள் பார்வைக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது. அப்போதுதான் ஜெயலலிதாவின் முகத்தில் நான்கு துளைகள் இருப்பது தெரிய வந்தது.

p16a.jpg

இந்தத் துளைகள் என்ன என்ற விவாதங்களும், சர்ச்சைகளும் கிளம்பின. அதுமட்டுமில்லாமல் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகும் சற்றும் மாறாமல் நாம் எப்போதும் பார்க்கும் ஜெயலலிதாவாகவே அஞ்சலிக்கு வைக்கப்பட்டதும் மக்களிடையே சந்தேகத்தை ஏற்ப‌டுத்தியது. ‘முகத்தில் இருந்த நான்கு துளைகள், அதே முகம்’ எனப் பல விஷயங்களுக்கு விடை தேடினால் கிடைக்கும் பதில்களில் ஒன்று எம்பாமிங். இது உடலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று.

இதில் உடலில் இருந்து எம்பாமிங் செய்ய உதவும் கருவி மூலம் குறைந்த அழுத்தத்தில் ரத்தம் நீக்கப்பட்டு உடலில் அதே சிறுதுளை மூலமாக பார்மால்டிஹைடு கலந்த திரவம் நிரப்பப்படும். இது உடலை உயர் குளிர்நிலையில் வைத்துப் பாதுகாக்கப் பயன்படும். சோவியத் அதிபர் லெனின் உள்ளிட்ட‌ உலகின் முக்கியமான தலைவர்கள் இற‌ந்தபோது இதே போன்ற எம்பாமிங் முறையில்தான் அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டன.

இந்த எம்பாமிங் குறித்து மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘உடலைப் பதப்படுத்தி, பாதுகாக்கத்தான் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையைப் பயன்படுத்தி பதப்படுத்தப்படும் ஒருவரது உடலைக் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை பாதுகாக்க முடியும். ஆனால், உயர் குளிர்நிலையில் உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்படி வைக்க முடிந்தால் ஒருவரது உடலை தாராளமாக மூன்று மாத காலம் வரை எந்த மாற்றமும் இன்று அப்படியே பாதுகாக்க முடியும்.

p16.jpg

இதே போலத்தான் ஜெயலலிதாவுக்கும் செய்யப்பட்டது என்றால் மாலை 5 மணிக்கு `முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்ற அறிக்கையை அப்போலோ வெளியிட்டது. `இரவு 11:30 மணிக்கு இறந்தார்’ என்ற அறிவிப்பு வருகிறது. இரவு 2 மணிக்கெல்லாம் முதல்வர் உடல் மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறது. இதற்கு  இடைப்பட்ட நேரத்தில் எம்பாமிங் செய்யப் பட்டதா? முதல்வரது உடல் காலையில் பார்வைக்கு வைக்கப் பட்டது போல மாலையில் இல்லை. உடலில் சில மாற்றங்களை மக்களால் உணர முடிந்தது. இதன் பின்னால் என்ன நடந்திருக்கும்? எம்பாமிங் செய்யப்பட்ட உடலை நீணட நேரம் உயர் குளிர்நிலையின்றி வைக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் முதல்வர் உடல் ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது’’ என்றார்.

இதையெல்லாம் தாண்டி எம்பாமிங் செய்யப்பட்ட ஒருவரது உடலை மூன்று மாதங்கள் வரை பாதுகாக்கலாம் என்ற தகவலும், முகத்தில் இருக்கும் துளைகளும் முதல்வர் டிசம்பர் 5 அன்று தான் இறந்தாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தக் கேள்விகளுக்கு பதில் அப்போலோவுக்கும், மன்னார்குடி குடும்பத்தாருக்கும் மட்டுமே தெரியும்!

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.