Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசும் படங்கள்: சென்னை களத்தில் கருணின் முச்சத தருணம்!

Featured Replies

பேசும் படங்கள்: சென்னை களத்தில் கருணின் முச்சத தருணம்!

 

 
 
karunnn_3105964f.jpg
 
 
 

சென்னை டெஸ்ட் போட்டியில் 4-ம் நாளான திங்கள்கிழமை கருண் நாயர் தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி 303 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்தார். இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 759 ரன்கள் என்று டெஸ்ட் போட்டியில் தங்கள் அதிகபட்ச ரன்களை எட்டியது. | விரிவான செய்தி > முதல் சதமே முச்சதம்; வரலாறு படைத்த கருண் நாயர் : இந்தியா 759 ரன்கள் குவித்து புதிய சாதனை

கருண் களத்தில் நின்று முச்சதம் எட்டிய தருணங்கள் வீ.கணேசன் கேமரா வழியில்...

karun1_3105947a.jpg

karun10_3105949a.jpg

karun11_3105950a.jpg

karun13_3105951a.jpg

karun2_3105952a.jpg

karun3_3105953a.jpg

karun5_3105954a.jpg

karun9_3105956a.jpg

karun14_3105965a.jpg

karun7_3105955a.jpg

 

http://tamil.thehindu.com/sports/பேசும்-படங்கள்-சென்னை-களத்தில்-கருணின்-முச்சத-தருணம்/article9434509.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

'12 ஆண்டுகள் தனியாக இருந்தேன்' : ஷேவாக்கின் ட்வீட்

 

sehwaggrab_660_010713013718_17225.jpg

டெஸ்ட் அரங்கில் இரண்டுமுறை முச்சதம் அடித்த அசத்தியவர் ஷேவாக். குறிப்பாக இந்திய அணியில் 300 ரன்கள் அடித்த ஒரே வீரருமாக ஷேவாக் இருந்து வந்தார். இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் டெஸ்ட்டில், கருண்நாயர்,டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தையே, முச்சதமாக மாற்றி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் ஷேவாகிற்கு பிறகு முச்சதம் அடித்த பெருமையையும் கருண்நாயர் பெற்றுள்ளார். இதுகுறித்து ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வெல்கம் டூ 300 கிளப். 12 ஆண்டுகள், 8 மாதங்களாக தனியாக இருந்தேன். கருண்நாயருக்கு வாழ்த்துகள்' எனக்கூறியுள்ளார்'.

 

Yay ! Welcome to the 300 club @karun126 . It was very lonely here for the last 12 years 8 months. Wish you the very best Karun.Maza aa gaya!

 
 
 
 

தனியாக இருந்த எனக்கு துணை கிடைத்து வி்ட்டது: கருண் நாயருக்கு சேவாக் வாழ்த்து

முச்சதம் அடித்த ஒரே வீரர் என கடந்த 12 வருடமாக தனியாக இருந்தேன். தற்போது எனக்கு துணை கிடைத்து விட்டது என்று கருண் நாயருக்கு சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
தனியாக இருந்த எனக்கு துணை கிடைத்து வி்ட்டது: கருண் நாயருக்கு சேவாக் வாழ்த்து
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

அதன்பின் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்று 4-வது நாள் ஆட்டம் முடிவதற்கு சற்று முன் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் கருண் நாயர் 381 பந்துகளை சந்தித்து 32 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 303 ரன்கள் குவித்தார். இதன் மூலம் முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் சேவாக் இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார். சேவாக் டுவி்ட்டர் மூலம் கருண் நாயருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘‘300 ரன்கள் அடித்த வீரர்கள் என்ற கிளப்பிற்கு கருண் நாயரை வரவேற்கிறேன். கடந்த 12 வருடம் 8 மாதங்களாக இந்த கிளப்பில் தனியாக இருந்தேன். தற்போது துணை கிடைத்துள்ளது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • தொடங்கியவர்

முச்சத நாயகன் கருண் நாயர் பற்றிய இந்த 10 தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? #KarunNair

 

கருண்

தான்  விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே, குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மூன்றாவது இன்னிங்ஸிலேயே முச்சதம் அடித்து முத்திரை பதித்திருக்கிறார் கருண் நாயர்.  கிரிக்கெட் உலகையே ஒரே நாளில் திருப்பி பார்க்க வைத்திருக்கும் இந்த நாயகன் யார்? இவர் பின்னணி என்ன? 

1. மலையாள வம்சாவளியைச் சேர்ந்த கருண் நாயர் பிறந்தது ராஜஸ்தானில் தான், ஆனால் வளர்ந்தது, கிரிக்கெட் ஆடியது எல்லாமே கர்நாடகாவில். பதினைந்து  வயதிலேயே கர்நாடக அணிக்குள் நுழைந்த பெருமை இவருக்கு உண்டு. 

2. 2012ஆம் ஆண்டு விஜய் ஹஸாரே கோப்பையில் ஆடியது தான் கருண் நாயர்  முதன் முதலில் விளையாடிய முதல் தர போட்டி. அதன் பின்னர்  ரஞ்சி போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.

3. ரஞ்சி போட்டியில் முதல் சீசனிலேயே ஆறு போட்டிகளில் விளையாடி 494 ரன்களை குவித்தார். கருண் நாயரின் ஸ்டைலான டிரைவ்களை பார்த்த ராகுல்  டிராவிட் அவரை 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு  ஏலத்தில் எடுக்க பரிந்துரை செய்தார்.  75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதன் பின்னர் கருண் நாயருக்கு  கேரியர் பிரகாசமானது.

4. 2014 ஐ.பி.எல்  தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 11 போட்டிகளில் ஆடி 330 ரன்கள் குவித்தார். அதில் மூன்று அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த தொடரில் பல போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கிய துருப்புச் சீட்டாய் அமைந்தார். சஞ்சு சாம்சன், கருண் நாயர் இருவரும்  சிறந்த பேட்ஸ்மேன்கள், பெரிய உயரத்துக்குச் செல்வார்கள் என அப்போதே கணித்துச் சொன்னார்  ராகுல் டிராவிட் 

5.  2015 ஆம் ஆண்டு கர்நாட அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடினார். இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. தமிழகமும் கர்நாடகமும் மோதின. தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 134 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணி 31/4 என தத்தளித்தது, பின்னர் 84/5 என்றானது. கருண் நாயரும், லோகேஷ் ராகுலும் இணைந்தார்கள். அந்த போட்டியில் அவர்கள் ஆடிய விதம் மிரட்டல் இன்னிங்ஸ். ராகுல் 188 ரன்களை குவித்தார். கருண் நாயரோ 872 நிமிடங்கள் களத்தில் நின்று 560 பந்துகளைச் சந்தித்து 46 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 328 ரன்கள் குவித்தார். ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் முச்சதம் எடுத்த ஒரே வீரர் கருண் நாயர் மட்டும் தான். அந்த மேட்சில் பெங்களூரு 762 ரன்களை குவித்தது. தமிழ்நாடு 411 ரன்னுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. இன்னிங்ஸ் மற்றும் 217  ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று அசத்தியது. 1988ஆம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்லவே முடியாத சோகத்துடன் வெளியேறியது தமிழ்நாடு. 

6.  சூதாட்ட புகார் தொடர்பாக  ராஜஸ்தான் அணி  இடைநீக்கம் செய்யப்பட்டதால், கருண் நாயர் மீண்டும் ஏலத்துக்கு வந்தார். இந்த  ஆண்டு சுமார் நான்கு கோடிக்கு அவரை  டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் மூன்று  அரை  சதங்களோடு டெல்லி அணிக்காக அதிக ரன்கள்  அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம்  பிடித்தார் கருண்.

7. கடந்த ஜூன் மாதம்  ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தொடரில் முதன் முறையாக  இந்திய அணிக்காக விளையாடினார் கருண் நாயர். கருண் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதை டிராவிட் நேரடியாக அவருக்குச் சொல்லியிருந்தார். அந்த நொடியே இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது எனச் சொல்கிறார் கருண். 

8. கடந்த நவம்பர் மாதம் மொகாலி டெஸ்டில் டெஸ்ட்  அணிக்குள் வந்தார் கருண். லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு ஏற்பட்ட காயங்கள் கருண் நாயருக்கு வாய்ப்பைத் தந்தது. முதல் இன்னிங்ஸிலே விராட் கோஹ்லி செய்த ஒரு சிறு தவறால் 4 ரன்னில்  ரன் அவுட் ஆனார். மும்பை டெஸ்டில் 13 ரன்னில் அவுட் ஆனார்.  இதையடுத்து சென்னை டெஸ்டில் 211/3  என்ற நிலையில் இந்தியா இருந்தபோது களமிறங்கினார். ராகுலுடன் சேர்ந்து அற்புதமாக விளையாடினார். அதன் பின்னர் விஜய், அஷ்வின், ஜடேஜா, உமேஷ் ஆகியோருடனும் பார்ட்னர்ஷிப் போட்டு சிறப்பாக ஆடினார்.  அவர் விளையாடிய மூன்றாவது இன்னிங்ஸில் மெய்டன் 50. மெய்டன் 100, மெய்டன் 150, மெய்டன் 200, மெய்டன் 250, மெய்டன் 300 என அத்தனை சாதனைகளையும் படைத்தார். 

9. வீரேந்திர ஷேவாக்குக்கு பிறகு முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் கருண் மட்டும் தான். முச்சதம் அடித்து நாட் அவுட்டாக இருந்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் கருண் வசம் தான்  இருக்கிறது. ஒருவேளை கோஹ்லி வாய்ப்புத் தந்திருந்தால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே சென்னை மண்ணில் ஷேவாக் நிகழ்த்திய  319  ரன் சாதனையையும் கருண் நாயர் கடந்திருக்க கூடும். 

10 .உலகிலேயே முதல்  சதத்தையே, முச்சதமாக்கிய வீரர்கள் மூன்றே பேர் தான். கேரி சோபர்ஸ், சிம்ப்சன் ஆகியோருக்கு பிறகு அந்த பெருமையைப் பெற்றிருக்கிறார் கருண் நாயர். 

வாழ்த்துகள் கருண் நாயர் 

http://www.vikatan.com/news/sports/75387-ten-things-you-should-know-about-karun-nair.art

  • தொடங்கியவர்

கேரி சோபர்ஸ், பாப் சிம்சனுடன் இணைந்த கருண் நாயர்: சாதனைத் துளிகள்

 

 
கருண் நாயருக்கு கை கொடுக்கும் அலிஸ்டர் குக். | பிடிஐ.
கருண் நாயருக்கு கை கொடுக்கும் அலிஸ்டர் குக். | பிடிஐ.
 
 

சென்னை டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராதவிதமாக முச்சதம் கண்டு 303 நாட் அவுட் என்று சாதனை புரிந்த கருண் நாயர், இதன் மூலம் உயர்தர வீரர்களான கேரி சோபர்ஸ், பாப் சிம்சன் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

கருண் நாயர் முச்சத சாதனைத் துளிகள்:

சேவாக் என்ற ஒரே வீரரே இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சத சாதனை நிகழ்த்தியவர், இவர் பாகிஸ்தானுக்கு எதிராக முல்டானில் 2003-04 தொடரில் 309 ரன்களையும் பிறகு சென்னையில் 2007-08-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்களையும் விளாசியிருந்தார், இவருக்குப் பிறகு தற்போது கருண் நாயர் முச்சத நாயகராகியுள்ளார். சேவாக் இதுதவிர இலங்கைக்கு எதிராக 293 ரன்கள் எடுத்து உலக சாதனை முச்சதத்தை தவற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கேரி சோபர்ஸ் தனது முதல் சதத்தை முச்சதமாக மாற்றினார், இவர் 1957-58-ல் கிங்ஸ்டன் மைதானத்தில் 365 நாட் அவுட் என்று முதலில் சாதனை நிகழ்த்தினார், பிறகு பாப் சிம்சன் 1964 ஆஷஸ் தொடரில் ஓல்ட்டிராபர்டில் 311 எடுத்தது அவரது முதல் சதம் முச்சதமான தருணமாகும். தற்போது இந்தப் பட்டியலில் கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக தன் முதல் சதத்தையே முச்சதமாக மாற்றினார்.

5-ம் நிலை அல்லது அதற்கு கீழே களமிறங்கி முச்சதம் கண்டார் கருண் நாயர். இதற்கு முன்பாக மைக்கேல் கிளார்க் 5-ம் நிலையில் இறங்கி இந்தியாவுக்கு எதிராக 2011-12 தொடரில் சிட்னியில் 329 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. அதே போல் பிரண்டன் மெக்கல்லம், 1934 ஆஷஸ் தொடரில் டான் பிராட்மேன் லீட்ஸில் எடுத்த 304 ரன்கள் உள்ளது.

ஒரே நாளில் இன்று சென்னையில் 232 ரன்கள் எடுத்தார் கருண் நாயர். இது ஒரே நாளில் அதிகபட்ச ரன்களில் 3-வது இடமாகும். இலங்கைக்கு எதிராக சேவாக் ஒரே நாளில் மும்பையில் 284 ரன்களை விளாசியுள்ளார். இதே சேவாக் சென்னையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே நாளில் 257 ரன்கள் எடுத்தார். மேலும் கருண் நாயர் ஒரேநாளில் எடுத்த 232 ரன்கள் உலக அளவில் 10-வது அதிகபட்ச ரன்களாகும்.

கருண் நாயர் தனது 3-வது இன்னிங்ஸில் முதல் சதத்தை முச்சதமாக மாற்றியுள்ளார். இது மிகக்குறைவான இன்னிங்சில் முச்சதம் அடித்த பெருமைக்குரியதாகும்,. முன்னதாக லென் ஹட்டன் தனது முதல் முச்சதத்தை 9-வது இன்னிங்ஸில் அடித்தார். டான் பிராட்மேன், ஜான் எட்ரிச் ஆகியோர் 13 இன்னின்ஸ்களில் முச்சதம் கண்டனர்.

http://tamil.thehindu.com/sports/கேரி-சோபர்ஸ்-பாப்-சிம்சனுடன்-இணைந்த-கருண்-நாயர்-சாதனைத்-துளிகள்/article9434606.ece

  • தொடங்கியவர்

கருண் நாயர் முச்சதம் அடித்த அந்த நொடியில் யாரைத் தேடினார் தெரியுமா?

 

கருண் நாயர்


கேமராமேன்கள்  அந்த கொண்டாட்ட தருணத்தின் சரியான ஷாட்டுக்காக காத்திருக்கின்றனர். மீடியா பாக்ஸில் எல்லா நிருபர்களும், கிரிக்கெட் இணையதளங்களில் இதற்கு முந்தைய 300 ரன் குறித்த ரிக்கார்டுகளை அலசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நிருபர் ட்விட்டரில் ‛சேவாக்குக்கு அடுத்ததாக முச்சதம் அடித்த இந்திய வீரர்’ என டைப் செய்து  Enter  பட்டனை  தட்ட காத்திருக்கிறார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மெய்மறந்து, இரு கம்பிகளுக்குள் முகம் புதைத்து கிரவுண்டை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். பிரஸ் பாக்ஸில், கேண்டீனில் பணியாற்றும் ஊழியர்கள் பணி மறந்து டிவியை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

பி.சி.சி.ஐ. மீடியா மேனேஜர்கள், மேட்ச் முடிந்ததும் பிரஸ் மீட்டுக்கு கருண் நாயரை அழைத்து வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.  ஸ்கோர் போர்டு ஊழியர்கள் கருண் நாயர் பெயருக்கு நேராக 3,0,0 எண்களை எடுத்து மாட்ட தயாராக நிற்கின்றனர். ஹெச் ஸ்டேண்டில் இருந்து இந்திய தேசியக் கொடி  ஒன்று பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. அதீத எதிர்பார்ப்பில் தன்னவனின் தோளில் தலை சாய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஒரு யுவதி.  கிட்டத்தட்ட எல்லா கேலரியில் இருந்த ரசிகர்களும் எழுந்து நிற்கின்றனர். அதில் இங்கிலாந்து ரசிகர்களும் அடக்கம். 

karun_nair_%281%29_20012.jpg

உமேஷ் யாதவ் சிங்கிள் தட்டி விட்டு வந்ததும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும்  மைதானத்தில் ஒரு மயான அமைதி. கருண் நாயர் 299 ரன்னில் இருக்கிறார், அவரால் முச்சதம் அடிக்க முடியுமா என வர்ணனையாளர்கள் அலறுகின்றனர்.  இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், அனைத்து ஃபீல்டர்களையும் உள் வட்டத்தில் நிறுத்துகிறார். நேற்று கே.எல்.ராகுல் 199ல் அவுட்டானது போல ஆகிடுமோ என ஒருவித பதற்றத்துடன் இருக்கின்றனர் ரசிகர்கள்.  

ரஷீத் வீசிய அந்த 191வது ஓவரின் மூன்றாவது பந்தை ஸ்வீப் செய்கிறார் கருண் நாயர். ஸ்வீப் செய்வது நாயருக்கு அசால்ட். ஆனால், இந்நேரத்தில் அது ரிஸ்க். எல்பிடபுள்யு என அப்பீல் செய்கின்றனர் இங்கிலாந்து ரசிகர்கள். அம்பயர் பிடி கொடுக்கவில்லை. நாயர் தப்பிப் பிழைத்தார். அடுத்த பந்து. ஆஃப் சைடில் வருகிறது. அதை கட் செய்கிறார். கவர் திசையில் இருந்து பாய்ண்ட் திசை நோக்கி பாய்கிறார் குக். அவரைக் கடந்து பந்து பவுண்டரிக்கு செல்கிறது. நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு வரும் முன், பந்து எல்லைக் கோட்டைக் கடந்து விட்டதா என்பதை உற்றுப் பார்க்கிறார் நாயர். ஆம். கடந்து விட்டது. சடசடசடவென  கரவொலி. எஸ்... கருண் நாயர் முச்சதம் அடித்து விட்டார். சேவாக்குக்குப் பின் ஒரு வழியாக இந்தியர் ஒருவர் 300 அடித்து விட்டார். அதுவும் நம் சென்னையில் அடித்து விட்டார். முதல் சதத்தை முச்சதமாக மாற்றி விட்டார்.  நாயர் ஹெல்மட்டைக் கழற்றி பேட்டை உயர்த்தி மைதானத்தின் எல்லா ஸ்டேண்டுகளிலும் ஒருமுறை காட்டுகிறார். குறிப்பாக பட்டாபிராமன் கேட் எண்டில், லெவல் - 1ல் இருந்த எஃப் ஸ்டேண்டை நோக்கி ஓரிரு நிமிடம் அழுத்தி காண்பிக்கிறார். ஏனெனில் அங்கு அவர் பெற்றோர் இருக்கின்றனர். 

karun_nair_%283%29_20376.jpg

கைதட்டல் சத்தம் இன்னும் ஓயவில்லை. எதிர்முனையில் இருந்த உமேஷ் யாதவ் வந்து கட்டியணைத்து வாழ்த்துகிறார்.  குக் வந்து  வாழ்த்துகிறார். ஜோ ரூட் வந்து வாழ்த்துகிறார். ஒவ்வொரு இங்கிலாந்து வீரரும் வந்து வாழ்த்துகின்றனர். இந்தியாவின் முதல் இன்னிங்சை டிக்ளேர் என அறிவிக்கிறார் கோஹ்லி. களத்தில் இருந்து இரு அணி வீரர்களும் டிரஸ்ஸிங் ரூம் நோக்கி நகர்கின்றனர். ஓய்வறையில் இருந்த விராட் கோஹ்லி முதல் ஆளாக வந்து பாராட்டுகிறார். அதன்பின் வரிசையாக ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் நாயரை உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர். அடுத்த சில நிமிடங்களில் இந்திய அணி ஃபீல்டிங் செய்ய தயாராகி விட்டது. களைப்பாக இருந்ததால் கருண் நாயர் களமிறங்கவில்லை. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விட்டது.  எல்லாமே சகஜ நிலைக்கு வந்து விட்டது. ஆனால், அந்த பத்து நிமிட இடைவெளியில் இருந்த ‛த்ரில்’ இன்று சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருந்தவர்களின் நினைவில்  காலம் முழுக்க  நிலைத்து நிற்கும். 

அதுதான் ‘டெஸ்ட்’ கிரிக்கெட்!

http://www.vikatan.com/news/sports/75391-whom-did-karun-nair-search-after-hitting-300th-run.art

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கருண் நாயர், பெற்றோர்களுக்கு மடடற்ற  மகிழ்ச்சி

  • தொடங்கியவர்

வாழ்த்து மழையில் கருண் நாயர்: முச்சத நாயகனுக்கு பிரதமர், கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு

 

 
முச்சதம் அடித்த கருண் நாயர்.
முச்சதம் அடித்த கருண் நாயர்.
 
 

பிரதமர் நரேந்திர மோடி:

வரலாற்று முச்சதம் அடித்து உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது சாதனையால் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம்.

மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்:

என்ன ஒரு வீரர், என்னவொரு ஆட்டம்’ உலக அளவில் 3-வது வீரராகவும், இந்திய அளவில் முதல் வீரராகவும் சதத்தை முச்சதமாக மாற்றி சாதனை படைத்துள்ளீர்கள்.

கபில் தேவ்:

கருண் நாயர் செய்த சாதனையை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் நான் தவிக்கிறேன். இளம் வீரர்கள் சிறந்தவராக தெரிகிறார். அவருடைய பேட்டிங் ஒருவித சுவாரசியமாக உள்ளது. இதுபோன்று சாதனை நிகழ்த்த ஒரு சில பேட்ஸ்மேன்களாலேயே முடியும்.

விவிஎஸ் லட்சுமண்:

கருண் நாயம் சதம் அடித்ததும் ரன் வேட்டையாடியதை பார்க்க அருமையாகஇருந்தது.

ராகுல் டிராவிட்:

கருண் நாயரால் பெருமையாக உள்ளது. அவர் கடின உழைப்புடன் போட்டிக்காக தன்னை அர்ப்பணிக்கும் திறன் கொண்டவர்.

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர்:

சேவக்குக்கு பிறகு 2-வது இந்திய வீரராக முச்சதம் அடித்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அஜிங்க்ய ரஹானே:

சிறப்பா விளையாடிதற்கு வாழ்த் துக்கள். இந்த முச்சதத்துக்கு நீங்கள் தகுதியானவர்.

கிறிஸ் கெய்ல்:

இளம் வீரரான உங்களை 300 ரன்கள் குழு பட்டியலில் வரவேற்கிறேன்.

ஷேன் வார்ன்:

படுக்கையில் இருந்தபடி இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை பார்த்தேன். கருண் மிகச்சிறப்பாக விளையாடினார். எனினும் இந்திய அணி 40 நிமிடங்களுக்கு முன்னதாகவே டிக்ளேர் செய்திருக்க வேண்டும்.

சேவக் பாராட்டு

சேவக்: உங்களது அற்புதமான இந்த சாதனைக்கு எனது வாழ்த்துக்கள். உங்களது பேட்டிங் ஒரு கவிதை போன்று இருந்தது. விரைவிலேயே நீங்கள் மீண்டும் ஒரு முச்சதம் அடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் 300 ரன்கள் அடித்தவர்கள் குழுவில் இணைந்த உங்களை வரவேற்கிறேன். இந்த பட்டியலில் 12 ஆண்டுகள், 8 மாதங்களாக நான் தனிமையாக இருந்தேன். என்னுடைய தனிமையை போக்கும் விதமாக முச்சதங்கள் பட்டியலில் என்னுடன் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

அதிர்ஷ்ட நாள்

கருண் நாயர் கூறும்போது, “எனது வாழ்நாளில் சென்னை போட்டி சிறப்பானதாகவும் அதிர்ஷ்ட நாளாகவும் அமைந்தது. கடந்த ஜூலை மாதம் நான் கேரளாவில் நடந்த படகு விபத்தில் சிக்கிக்கொண்டேன். அப்போது அங்குள்ள மக்கள் தான் என்னை காப்பாற்றினார்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

http://tamil.thehindu.com/sports/வாழ்த்து-மழையில்-கருண்-நாயர்-முச்சத-நாயகனுக்கு-பிரதமர்-கிரிக்கெட்-வீரர்கள்-பாராட்டு/article9435101.ece

  • தொடங்கியவர்

குறைந்த வயதில் முச்சதம் அடித்த 6-வது வீரர் கருண் நாயர்

இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடிய கருண்நாயர், டெஸ்டில் குறைந்த வயதில் முச்சதம் அடித்த பட்டியலில் 6-வது இடம் பிடித்துள்ளார்.

 
குறைந்த வயதில் முச்சதம் அடித்த 6-வது வீரர் கருண் நாயர்
 
கருண்நாயர் தனது 25 வயது 10 நாட்களில் டிரிபிள் சதத்தை எடுத்தார். டெஸ்டில் குறைந்த வயதில் டிரிபிள் சதத்தை எடுத்த 6-வது வீரர் கருண்நாயர் ஆவார்.

சோபர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) 21 வயது 213 நாட்களிலும், பிராட்மேன் (ஆஸ்திரேலியா) 21 வயது 318 நாட்களிலும், ஹட்டன் (இங்கிலாந்து) 22 வயது 58 நாட்களிலும், ஹனீப் முகமது (பாகிஸ்தான்) 23 வயது 27 நாட்களிலும், லாரா (வெஸ்ட்இண்டீஸ்) 23 வயது 10 நாட்களிலும் முச்சதம் அடித்து இருந்தனர்.

டிரிபிள் சதம் அடித்த முதல் இந்தியரான ஷேவாக் 25 வயது 160 நாட்களில் இந்த முத்திரையை பதித்தார். தற்போதுள்ள சாதனைப்படி அவர் 9-வது இடத்தில் உள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/20103944/1057154/6th-player-of-karun-nair-for-triple-century-in-youngest.vpf

  • தொடங்கியவர்

சரித்திரம் படைத்து அனைவரையும் வியக்க வைத்த கருண்நாயர்

 

கர்நாடகா ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் 25 வயதான கருண்நாயர் நேற்று முச்சதம் (ஆட்டம் இழக்காமல் 303 ரன்) அடித்து கிரிக்கெட் உலகின் அனைவரையும் வியக்க வைத்ததுடன் பல்வேறு சரித்திரங்கள் படைத்தார்.

 
சரித்திரம் படைத்து அனைவரையும் வியக்க வைத்த கருண்நாயர்
 
சென்னை :

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கருண்நாயர் ஆட்டம் இழக்காமல் முச்சதம் அடித்து அசத்தினார்.

* கர்நாடகா ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் 25 வயதான கருண்நாயர் நேற்று முச்சதம் (ஆட்டம் இழக்காமல் 303 ரன்) அடித்து கிரிக்கெட் உலகின் அனைவரையும் வியக்க வைத்ததுடன் பல்வேறு சரித்திரங்கள் படைத்தார். டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்திய வீரர்களில் ஷேவாக் மட்டுமே முச்சதம் (இரண்டு முறை) அடித்து இருக்கிறார்.

* முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை தனதாக்கிய கருண்நாயர் 5 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பெற்றுள்ளார். குறைந்த இன்னிங்சில் (3-வது டெஸ்டில்) முச்சதம் அடித்து சாதனை படைத்த கருண்நாயர் இளம் வயதில் முச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

* நேற்று ஒரேநாளில் கருண்நாயர் 232 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தார்.

* இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற புகழும் கருண்நாயரின் பெயருடன் இணைந்தது.

* இந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய வீரர் அஸ்வின் 25 விக்கெட்டும், 300 ரன்களுக்கு மேலும் எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் மற்றும் 300 ரன்களை குவித்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

* சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது தான் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இந்திய அணி குவித்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்னும் அது தான். முன்பு 2007-ம் ஆண்டில் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 664 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்னும் இதுவாகும். 1985-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 652 ரன்கள் குவித்ததே இங்கு அதிகபட்சமாக இருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/20083124/1057126/Made-history-that-surprised-everyone-karun-nair.vpf

  • தொடங்கியவர்

குறை பிரசவம்... படகு விபத்து...கலவரமூட்டும் கருண் நாயரின் ஃப்ளாஷ்பேக்! #TripleTonKarun

 

கருண்

தான் விளையாடிய மூன்றாவது இன்னிங்ஸிலேயே முச்சதம் அடித்து முத்திரை பதித்திருக்கிறார் கருண் நாயர்.  உலகிலேயே முதல் சதத்தையே, முச்சதமாக்கிய வீரர்கள் மூன்றே மூன்று பேர்தான். கேரி சோபர்ஸ், சிம்ப்சன் உள்ளிட்ட அந்த வரிசையில் இடம் பிடித்து வரலாறு படைத்திருக்கிறார் கருண். இந்திய வீரர்களில் வீரேந்திர சேவாக்கிற்கு பிறகு முச்சதம் அடித்ததுடன் நாட் அவுட் ஆகாதவர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த கருண் நாயர் இன்று உயிருடன் நம்முடன் உலவிக் கொண்டிருப்பதே  அதிர்ஷ்டத்தால்தான்.  

கடந்த ஜுலை மாதத்தில் கேரளத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்தது.  ஆழப்புலா மாவட்டத்தில் உள்ள செங்கானூர்தான் கருண் நாயரின் சொந்த ஊர். வல்ல சத்யா எனப்படும் படகு போட்டி அங்கே ரொம்ப பாப்புலர். செங்கானுரில் உள்ள பார்த்த சாரதி கோயில் விழாவை முன்னிட்டு, இந்த படகுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். கர்நாடகத்தில் செட்டில் ஆகி விட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் சொந்த ஊரில் நடைபெறும் கோயில் விழாவில் பங்கேற்பதும் படகு போட்டியை காண்பதும் கருண் நாயரின் வழக்கம். 

கடந்த ஜுலையில் செங்கானூருக்கு கருண் நாயர் சென்றார். ஜுலை 17ம் தேதி  பாம்பு படகு ஒன்றில் கருண் நாயர் உள்ளிட்ட 100 பேர் பம்பா நதியில் சென்று கொண்டிருந்தனர். காலை 11.45 மணியளவில் கருண் நாயர் சென்ற பாம்பு படகு நதியில் திடீரென்று கவிழ்ந்தது. ஆரனமுல்லா கோயில் அருகே நடந்த இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் தண்ணீருக்குள் விழுந்து உயிருக்கு போராடினர். 

உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி உயிர் தப்பினர். கருண் நாயருக்கோ நீச்சல் தெரியாது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.  கைகள் தட தடவென அடிந்து ஓய்ந்தன. நீருக்குள் மூழ்கத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் மீட்புப்படையை சேர்ந்த ஒருவர், கருண் நாயரின் தலையை பிடித்து இழுத்து தூக்கி படகில் போட்டார். அப்போது கருண் நாயரை மீட்டவருக்கு கருண் நாயரை யார் என்று தெரியாது. இந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கி இருவர் பலியானார்கள். படகு கவிழ்ந்த அடுத்த நிமிடமே மீட்புக்குழுவினர்  சம்பவ இடத்துக்கு விரைந்ததால், கருண் நாயர் உள்ளிட்ட 98 பேரை பத்திரமாக மீட்க முடிந்தது. 

அதிர்ஷ்டவசமாக கடந்த ஜுலை மாதத்தில் உயிர் பிழைத்த கருண் நாயர் சென்னையில் இங்கிலாந்து அணியின் உயிரை எடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கேப்டன் குக் பதவியை ராஜினாமா செய்து விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே நடு நடுங்கிக் கொண்டிருக்கிறது. 

சென்னை சேப்பாக்கத்தில் கருண் நாயர் முச்சதம் சதம் அடிப்பதை அவரது பெற்றோர் நேரில் கண்டனர். தாயார் பிரேமா மகன் குறித்துக்  கூறுகையில், 'கருண் குறைப்பிரசவத்திலேயே பிறந்து விட்டான். அதனால், நான் மிகுந்த வருத்தத்தில் இருந்தேன். அப்போது மருத்துவர்கள் என்னிடம் இது போன்ற குழந்தைகள் தனித் திறமையுடன் வளர்வார்கள். அதனால் வருத்தப்பட ஒன்றுமில்லை. சந்தோஷமாக இருங்கள் என்று தைரியமூட்டினார்கள். அதனால்தான், நானும் என் கணவரும் எப்போதும் அவனை கண்காணித்துக் கொண்டேதான் இருப்போம். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டினான். அவன் விருப்பப்படி விட்டு விட்டோம். எப்போது பார்த்தாலும் மட்டையும் கையுமாகத்தான் அலைவான். இப்போது அவனை பெற்றதற்கான பலனை அடைந்து  விட்டேன் '' என்கிறார். 

கருணின் தந்தை எம்.கே.டி. நாயர், ''எனது மகன் விளையாடுவதை பெரும்பாலும், மைதானத்திற்கு சென்று நாங்கள் பார்ப்பதில்லை. விதிவிலக்காக இந்த போட்டியைப் பார்க்க வேண்டுமென்று எங்களுக்குள் தோன்றியது. அதனால்தான் பெங்களூருவில் இருந்து சென்னை வந்தோம். சதம் அடிப்பான் என்று எதிர்பார்த்தோம். ஆனால் முச்சதம் அடித்து எங்களை பெருமைப்பட வைத்து விட்டான்.  அவனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது நிச்சயமாக ஒரு மைல்கல். ராகுல் 199ல் அவுட் ஆனது போல கருண் 299ல் அவுட் ஆகி விடக் கூடாது என்ற பதற்றம் எனக்குள் இருந்தது ' என தெரிவித்தார். 

சென்னை சேப்பாக்கத்தில் போட்டி முடிந்ததும் படகு விபத்தில் உயிர் பிழைத்த அனுபவம் குறித்து கருண் நாயர் பகிர்ந்து கொண்டார். ''உண்மையிலேயே எனக்கு நீச்சல் தெரியாது. படகு கவிழ்ந்ததும் அவ்வளவு வேகத்தில் எங்கிருந்துதான் மீட்புக்குழுவினர் வந்தார்களோ என்று தெரியவில்லை.  தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னை தலையைபிடித்து படகில் இழுந்துப் போட்டனர்.  இல்லையென்றால் என்னை உயிருடன் பார்த்திருக்க முடியாது. அந்த சம்பவம் எனக்கு மறுபிறப்பு''  என்றார் அவர்.

http://www.vikatan.com/news/sports/75539-premature-birth-narrow-escape-from-drowning-history-of-karun-nair-tripletonkarun.art

  • தொடங்கியவர்

கருண் நாயர்: முச்சதத்தில் ராயல் முத்திரை!

 

 
karu_nair_3107415f.jpg
 
 
 

சர்வதேச கிரிக்கெட்டில் கன்னி சதத்ததை எந்த வீரராலும் எப்போதுமே மறக்கவே முடியாது. அதுவும் கன்னி சதமே முச்சதமாக அமைந்தால் அது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பாக்கியமாகவே பார்க்கப்படும். இந்தியக் கிரிக்கெட்டின் 84 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அப்படி யாருக்கும் கிடைக்காத பாக்கியம் கருண் நாயருக்குக் கிடைத்திருக்கிறது. தான் விளையாடிய 3-வது இன்னிங்ஸிலேயே அந்தப் பாக்கியம் கருண் நாயருக்குக் கிட்டியது பெரும்பேறுதான். முச்சதம் அடித்து ஊரையே தன் பெயரை உச்சரிக்க வைத்த கருண் நாயரின் சாதனையைப் பற்றியும் அவரைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

> சர்வதேச கிரிக்கெட்டில் முச்சதம் அடிப்பது என்பது எப்போதுமே தனிச் சிறப்புதான். இதற்குமுன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 முச்சதங்கள் விளாசப்பட்டிருக்கின்றன. சென்னையில் கருண் நாயர் விளாசியது சர்வதேச 30-வது முச்சதம்.

> சர்வதேச கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய 26-வது வீரர் கருண் நாயர். மிகக் குறைந்த வயதில் (25 வயது) முச்சதம் விளாசியதும் அவர் மட்டுமே.

> சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேரி சோபர்ஸ் (365 அவுட் இல்லை), ஆஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சன் (311) ஆகியோர் மட்டுமே முதல் சதத்தை முச்சதமாக விளாசியிருக்கிறார்கள். தற்போது மூன்றாவது வீரராகக் கருண் நாயர் (303 அவுட் இல்லை) இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.

> முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய வீரர்களில் மூன்று பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தாலும், இதில் கில்லி வீரர் கருண் நாயர்தான். ஏனென்றால், கேரி சோபர்ஸ் தனது 32-வது இன்னிங்ஸிலும், பாப் சிம்ப்சன் தனது 52-வது இன்னிங்ஸிலுமே அறிமுகச் சதத்தோடு முச்சதத்தைக் கடந்தார்கள். ஆனால், கருண் நாயர் தனது 3-வது இன்னிங்ஸிலேயே இந்தச் சாதனையைப் படைத்திருப்பது புத்தம் புதிய சாதனை.

> முச்சதம் விளாசிய வீரர்களில் மூன்றாவது சதத்தைக் குறைந்த பந்தில் கடந்தது கருண் நாயர்தான். 200 ரன்னைக் கடந்த பிறகு 300 ரன்னைக் கடக்க அவருக்கு 80 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன. இதுவும் ஒரு வகையில் சாதனைதான்.

> இந்திய வீரர்களில் வீரேந்திர சேவாக்குக்குப் பிறகு முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர்தான். சேவாக் இரண்டு முறை (309, 319) குவித்திருக்கிறார்.

> கருண் நாயர் முச்சதம் விளாசிய இதே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்தான் வீரேந்திர சேவாக் 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன் குவித்தார்.

> இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 8 முச்சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இந்த 8 சதங்களில் முதல் 7 முச்சதங்கள் ஆசியாரல்லாதவரால் விளாசப்பட்டவை. இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் விளாசிய முதல் ஆசியர் கருண் நாயர்தான்.

> இந்திய அணி சார்பில் 5-வது ஆட்டக்காரராகக் களமிறங்கி அதிகபட்ச ரன் குவித்ததும் கருண் நாயர் மட்டுமே. இதற்கு முன்பு 2013-ல் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகேந்திர சிங் தோனி 226 ரன் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

> முதல் தர போட்டியில் இரண்டாவது முறையாக முச்சதம் விளாசியிருக்கிறார் கருண் நாயர். கடந்த ஆண்டு ரஞ்சி இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் தமிழ் நாடும் கர்நாடகமும் மோதின. தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 134 ரன்களில் ஆட்டமிழக்க, கர்நாடக அணி 84/5 என்று தத்தளித்தது. பின்னர் களமிறங்கிய கருண் நாயர், லோகேஷ் ராகுலுடன் இணைந்து பேட்டிங்கில் மிரட்டினார்.

அந்தப் போட்டியில் ராகுல் 188 ரன்களைக் குவித்தார். கருண் நாயரோ 872 நிமிடங்கள் களத்தில் நின்று 328 ரன் குவித்தார். ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் முச்சதம் எடுத்த ஒரே வீரர் கருண் நாயர் மட்டும்தான். அதுமட்டுல்ல இரண்டு வீரர்களும் தனித்தனியாகச் சென்னை டெஸ்ட் போட்டியில் (ராகுல் 199, கருண் நாயர் 303) சதங்கள் விளாசியது வரலாற்று நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.

> இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு கருண் நாயர் தேர்வான பிறகு டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகரான டிராவிட்டிடம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காகப் பல டிப்ஸ்களைப் பெற்றிருக்கிறார். ‘இந்தியாவின் சுவர்’ என்றழைக்கப்பட்ட டிராவிட்டிடம் பெற்ற ஆலோசனையோ என்னவோ, அவர் நீண்ட நேர ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியிருக்கிறது.

> கருண் நாயரின் பூர்வீகம் கேரளா. பிறந்தது ராஜஸ்தானில். வளர்ந்தது எல்லாமே பெங்களூருவில்தான். அவரது முழு பெயர் கருண் கலாதரன் நாயர். இவர் கர்நாடக அணி சார்பில் ரஞ்சியில் விளையாடி வருகிறார். கர்நாடக வீரராக அறியப்பட்டாலும் கருண் நாயரின் முச்சதம் கேரளவாசிகளை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது. கேரளக்காரர்கள் இந்தியக் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எதிர்பார்க்கப்பட்ட சாந்தும் கிரிக்கெட் விளையாடத் தடையின் காரணமாக முடங்கியதால், கருண் நாயரைக் கேரளாவின் கிரிக்கெட் அடையாளமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com/society/lifestyle/கருண்-நாயர்-முச்சதத்தில்-ராயல்-முத்திரை/article9440119.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.