Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2016ம் ஆண்டின் சிறந்த டி20 போட்டி எது? #Top10T20 #2016Special

Featured Replies

2016ம் ஆண்டின் சிறந்த டி20 போட்டி எது? #Top10T20 #2016Special

 

west-indies-pti-m1_22195.jpg

டெஸ்ட் போட்டியை உலகச் சினிமா என்றால், டி 20 தான் பக்கா கமர்ஷியல் சினிமா. நிமிடத்துக்கு நிமிடம் சஸ்பென்ஸ், ஓவருக்கு ஓவர் மாறும் வெற்றி வாய்ப்பு, பரபர  சேஸ்,  ஆட்டத்தையே மாற்றி விடும் ஒரு ரன் ..ஒரு விக்கெட் ..ஒரு நோபால்  என  செம த்ரில், செம டிவிஸ்ட் கிரிக்கெட்டுக்கு கியாரண்டி எப்போதுமே உண்டு. அதுவும் இந்த ஆண்டு ஆசியக்  கோப்பை, உலகக்  கோப்பை என டி20 போட்டிகளை நம்மவர்கள் கொண்டாடினார்கள். அப்படி இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்து சிறந்த டி20 போட்டிகளை பற்றிப்பார்ப்போமா? 

10. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் : -

போட்டி

அமெரிக்காவில் நடந்த டி20 போட்டி இது. இந்திய வீரர்கள் முதன் முதலாக அமெரிக்க மண்ணில் ஆடிய டி 20 போட்டி என்ற சிறப்பும் இந்த போட்டிக்கு உண்டு. முதலில் பேட்டிங் பிடித்த  வெஸ்ட் இண்டீஸ்  வீரர்கள், இந்திய பந்துவீச்சை வெளுத்தக்கட்டி  245 ரன்கள் குவித்தார்கள். லீவிஸ் சதம் அடித்தார். இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. ஐந்து ஓவரில் 50 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா.

அதன் பின்னர் ரோஹித் ஷர்மாவும், கே.எல் ராகுலும் இணைந்து கொளுத்தித் தள்ளினர். ரோஹித் 28 பந்தில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்ஸர் விளாசி 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் தோனி, ராகுல் இணையும் வான வேடிக்கை காட்டியது. ராகுல் 51 பந்தில் 110 ரன்கள்  அடித்திருந்தார், தோனி 25 பந்தில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் உதவியுடன் 45 எடுத்த நிலையில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் எட்டு ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற நிலையில் ஃபினிஷிங் கிங் தோனி இருந்தும் ஒரு  ரன் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியை தழுவியதில் ரசிகர்கள் அப்சட் ஆகினர். கடைசி ஓவரை அபாரமாக வீசிய பிராவோ பெரும் பாராட்டுகளை பெற்றார். 

9.  இந்தியா Vs ஜிம்பாப்வே 

IND vs ZIM

ஜிம்பாப்வே நாட்டுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. ஒருநாள் தொடரை வென்ற நிலையில் டி20 தொடர் ஆரம்பித்தது. முதல் டி20 போட்டி ஹரேராவில் நடந்தது. முதலில் பேட்டிங் பிடித்த ஜிம்பாவே 170 ரன்கள் குவித்தது.

அடுத்து பேட்டிங் பிடித்த இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், சீராக  ரன்களையும் குவித்தது. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவை. தோனி களத்தில் இருந்தார்.  முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் தோனி, அடுத்த பந்தில் அக்சர் படேல்  அவுட்டானார். மூன்றாவது பந்தில் மீண்டும் ஒரு ரன் எடுத்தார் தோனி. நான்காவது பந்தில் ரன் இல்லை, ஐந்தாவது பந்தில் வைடு காரணமாக ஒரு  ரன்னும், ரிஷி தவான் ஒரு ரன்னும் எடுத்ததால் இரண்டு ரன்கள் கிடைத்தது. கடைசி பந்தை தோனி சந்தித்தார். பவுண்டரி தேவை. ஆனால் ஒரு ரன் மட்டுமே தோனியால் எடுக்க முடிந்தது. இரண்டு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே. 

8. வெஸ்ட் இண்டீஸ் VS ஆப்கானிஸ்தான் (உலகக்கோப்பை) 

WI vs AFG

இந்த உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது ஆப்கானிஸ்தானிடம் மட்டும் தான். கெயில் இல்லாமல் இந்த மேட்சில் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ். முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 123 ரன்களை குவித்தது. சுழற்பந்துக்குச் சாதகமான நாக்பூர் மைதானத்தில் சேஸிங்கில் திணறியது வெஸ்ட் இண்டீஸ்.வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் ரன்களே எடுக்க முடியவில்லை.

அமீர் ஹம்சா நான்கு ஓவர் வீசி வெறும் 9  ரன் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். முகமது நபி,  ஹமீத் ஹாசன் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினர். கடைசி ஓவரில்  10 ரன்கள் எடுத்தால்  வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறலாம் என்ற நிலை. பிராத்வெயிட் களத்தில் இருக்கிறார். முகமது நபி பந்து வீசினார். முதல் இரண்டு பந்துகளில் ரன், மூன்றாவது பந்தில் பிராத்வெயிட் அவுட்டானார். இறுதியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மேட்சை ஆப்கானிஸ்தான் ஜெயிக்க, அவர்களோடு இணைந்து கெயிலும் குத்தாட்டம் போட்டார். 

7. இந்தியா Vs பாகிஸ்தான் (உலகக்கோப்பை டி20 தொடர்) :-

virat kohli

பாகிஸ்தானும் இந்தியாவும் சாதாரணமாக ஒரு போட்டியில் மோதிக்கொண்டாலே கிரிக்கெட் உலகே  பரபரக்கும். இந்தச்  சூழ்நிலையில் உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்றால் சொல்லவா வேண்டும்?  பதான்கோட் தாக்குதல் காரணமாக ஏற்கனவே இந்திய - பாகிஸ்தான் இடையே கடந்த ஜனவரி மாதம் முதல் பதற்றம் நிலவி வந்தது. இதையடுத்து பதான்கோட்டுக்கு அருகில் இருந்த  தர்மசாலாவில் நடைபெறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது. 

இந்திய அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த நிலையில், பாகிஸ்தானுடனான போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. கொல்கத்தாவில் மழை காரணமாக 18 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. நெஹ்ரா, அஷ்வின், ஜடேஜா, ரெய்னா ஆகியோர் சிக்கனமாக பந்துவீசியதில் 118/5 மட்டுமே எடுத்தது பாகிஸ்தான். இதையடுத்து இந்திய இன்னிங்ஸை தொடர்ந்தது. ஐந்து ஓவர் முடிவில் 23/3  என மோசமான நிலையில் இருந்தது இந்தியா. கோஹ்லியும்- யுவராஜும் இணைந்தார்கள். யுவராஜ் ஒரு முனையில் விக்கெட் விழாமல் தடுத்து நிறுத்தி அவரது இயல்பான ஆட்டத்தை ஆடினார். எதிர்முனையில் கோஹ்லி பயமற்ற ஆட்டத்தை ஆடினார். சமி, ஆமிர், மாலிக் , அப்ரிடி, இர்பான் என அத்தனை பேரின் பந்துகளையும் பவுண்டரிகளுக்கு விரட்டிக் கொண்டே இருந்தார். 15.5 ஓவரில் இந்தியா  வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்தது. விராட் கோஹ்லி  அரை சதம் எடுத்து சச்சினுக்கு அர்ப்பணித்த காட்சி இன்றும் சமூக வலைதளத்தில் உலாவுவதை பார்க்க முடியும். 

6. இந்தியா Vs ஆஸ்திரேலியா ( மூன்றாவது டி20) 

yuvraj singh

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்தியா. ஒருதின தொடரை ஆஸி வென்றாலும், டி 20  தொடரை இந்தியா வென்றிருந்தது. கடைசி  மற்றும் மூன்றாவது டி20 போட்டி சிட்னியில் நடந்தது. இந்த மேட்சில் ஜெயித்தால், ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்து  வரலாற்றுச் சாதனை புரியலாம் என்பதால் ஆர்வமாக இருந்தது இந்தியா. 

 ஷேன் வாட்சனின் அட்டகாசமான சதத்தால் (124) இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 198 ரன்களை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.  கோஹ்லி, ரோஹித், தவான் எல்லோரும் அடித்து நொறுக்கியிருந்தார்கள் எனினும் கடைசி ஓவரில் 17 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆண்ட்ரு டை பந்து வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார் யுவராஜ், அடுத்த பந்தை ஒரு 'வாவ்' சிக்ஸர் விளாசினார் யுவராஜ். மூன்றாவது பந்தில் ஒரு  ரன் எடுத்தார்  யுவி. நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் தலா இரண்டு ரன்கள் ஓடி எடுத்தார் ரெய்னா. கடைசி பந்தில் ஒரு பவுண்டரி வைத்து வின்னிங் ஷாட்டுடன் மேட்ச்சை முடித்தார் ரெய்னா. ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் அடக்கிய கம்பீரத்துடன் கோப்பைக்கு போஸ் தந்தனர் இந்திய வீரர்கள். 

5. தென் ஆப்பிரிக்கா Vs இங்கிலாந்து (உலகக்கோப்பை)

devilliers

இந்த முறையாவது உலகக்கோப்பையை வென்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருந்தது தென் ஆப்பிரிக்கா.  ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே முக்கியமான போட்டிகளில் சொதப்பித் தள்ளியது. 

மும்பையில் நடந்த முதல் லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது தென் ஆப்பிரிக்கா. டாஸ் வென்று பேட்டிங்கில் சரவெடி ஆட்டம் ஆடினார் தென் ஆப்பிரிக்க வீரர்கள். அம்லா, டீ காக்,டுமினி அரை சதங்கள் எடுக்க, தன பங்குக்கு சிக்ஸர்களை விளாசிவிட்டு பெவிலியன் சென்றனர் டிவில்லியர்ஸ், டு பிளசிஸ், மில்லர். 

இங்கிலாந்து பேட்டிங் பிடித்தபோது ஜேசன்  ராய் எடுத்தவுடனே  ராக்கெட் கொளுத்தினார். ரன் ரெட் எகிறியது. 16 பந்தில் 43 ரன் எடுத்து அவுட் ஆனார் ஜேசன் ராய்.  இதற்கிடையில் வைடு, நோ பால் என  ரன்களாக வாரி வழங்கினர் தென்னாபிரிக்க பவுலர்கள். ஜோ ரூட் அட்டகாசமாக நேர்த்தியான ஆட்டத்தை ஆட, 19 ஓவரிலேயே தென் ஆப்பிரிக்கா குவித்த 229 ரன்னை சமன் செய்தது இங்கிலாந்து. கடைசி ஓவரை அபாட் வீசினார். முதல் இரண்டு பந்திலும் விக்கெட், மூன்றாவது பந்தில் ரன் இல்லை. ஒரு  ஓவரில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் மேட்ச் என்னாகும் என எல்லோரும் பரபரப்பு ஆனார்கள், ஆனால் ஓவரின் நான்காவது பந்தில் அந்த ஒரு ரன்னை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் மொயின் அலி. 

4. வெஸ்ட் இண்டீஸ் Vs இங்கிலாந்து (இறுதிப்போட்டி) : -

final match

உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் அந்த பரபர நிமிடங்களை நினைத்தால் இப்போதும் பலருக்கும் சிலிர்க்கும். அப்பேற்பட்ட மேட்ச் அது. மொத்தம் நாற்பது ஓவர்களில் அந்த ஒரே ஒரு ஓவர் மட்டும் மேட்சை, இது வேற லெவல் போட்டி என எல்லோரையும் சொல்ல வைத்து விட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ரூட்டின் அரை சதத்துடன் 155 ரன்கள் குவித்தது. 

சார்லஸ், கெயில், சிம்மன்ஸ் எல்லோரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்  ஆக சாமுவேல்ஸ் மட்டும் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சிம்மன்ஸ், ரஸ்ஸல், சமி ஆகியோரும் ஒற்றை இலக்க  ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் பதினெட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. பிராத்வெயிட் களத்தில் நின்றார். ஆப்கானிஸ்தானுடன் பத்து ரன்களையே இவரால் கடைசி ஓவரில் அடிக்க முடியவில்லை, இவர் எப்படி இப்போது சாதிக்கப் போகிறார் என எல்லோரும் நினைக்க, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி மட்டும் இன்னும் மேட்ச் இருக்கு கண்ணா என நினைத்தபடி சிரித்துக் கொண்டிருந்தார். 

பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு கடைசி ஓவர் வீசி மூன்று ரன்கள் மட்டும் தான்  விட்டுக்கொடுத்திருந்தார். ஸ்டோக்ஸா, பிராத்வெயிட்டா யார் ஜெயிக்கப்போவது என்ற  எதிர்ப்பார்ப்பு எகிறியது. கடைசி ஓவரின் முதல் நான்கு பந்தையும் பேட்டை சுழற்றி 6,6,6,6 என விளாசித் தள்ள மைதானமே கரவொலிகளால்அதிர்ந்தது . ஸ்டோக்ஸ் அப்படியே கிரவுண்டில் உட்கார்ந்து விட, எகிறிக்குதித்து தான் சாம்பியன் என்பதை இந்த உலகக்குக்காட்டிய திருப்தியுடன் சிரித்தார் பிராத்வெயிட். 

3. இந்தியா Vs ஆஸ்திரேலியா (உலகக்கோப்பை) 

kohli

கிட்டத்தட்ட காலிறுதி போட்டி போன்றதொரு பரபரப்பு இந்த போட்டிக்கு  இருந்தது. ஆஸ்திரேலியா  ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியில்  ஆடியது. முதலில் பேட்டிங் பிடித்த ஆஸ்திரேலியா விறுவிறுவென ரன்களைச் சேர்க்க  ரன் விகிதம் பறந்தது. ஆனால் எட்டாவது ஓவரில் வார்னர் அவுட் ஆன பிறகு  ரன் ரேட்டை கட்டுக்குள் கொண்டு வந்தது இந்தியா. 161  ரன் அடித்தால் அரையிறுதிக்குச் செல்லலாம் என்ற விதியோடு இந்தியா களமிறங்கியது. 

எட்டு ஓவருக்கு 49/3 என எடுத்து தேமேவென ஆடிக்கொண்டிருந்தது இந்தியா. யுவராஜ் அவுட்டாகும் போது அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 94 ரன்கள். அந்த ஓவர்களில் 67 ரன் வெற்றிக்குத்தேவை என்ற நிலையில் தோனியும், கோஹ்லியும் இணைந்தார்கள். அடுத்த நான்கு ஓவர்கள் கோஹ்லி அடித்த ஷாட்கள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்   ரகம். சச்சின் டெண்டுல்கரே களத்தில் இறங்கி விளையாடியது போன்ற கச்சிதமான டிரைவ்கள் அவரிடம் இருந்து வெளிப்பட்டன. விராட் கோஹ்லியை ஆஸி பவுலர்களால் அடக்கவே முடியவில்லை. முடிவில், 19.1 ஓவரிலேயே  சேஸிங்கை முடித்துக் ஆஸிக்கு குட்பை சொன்னது இந்தியா.

2. இந்தியா VS பாகிஸ்தான் (ஆசிய கோப்பை) 

amir

டாக்காவில் நடந்த போட்டி இது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானை வெறும் 83 ரன்களுக்குச் சுருட்டியது இந்தியா. யுவராஜ், நெஹ்ரா, பும்ரா, ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்து வீசினார்கள். 

84 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி  காத்திருந்தது. ஆமீர் ரோஹித் ஷர்மாவை டக் அவுட் ஆக்கினார், அடுத்ததாக ரஹானேவையும் டக் அவுட் செய்தார். இந்தியா 2/2 என கதி கலங்கியது. அடுத்ததாக ரெய்னாவையும் ஒரு  ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார் ஆமீர். முகமது ஆமீர் அன்றைக்கு வீசிய பந்துகள் ஒவ்வொன்றும் அட்டகாசம், பந்தை தொடவே முடியாமல்பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டார்கள். விராட் கோஹ்லிக்கும், முகமது ஆமீருக்கும் ஒரு பெரிய போரே நடந்தது எனச் சொல்லலாம். நடப்பது டி20 போட்டியா, டெஸ்ட் போட்டியா என சந்தேகப்படும் அளவுக்கு  ரன் விகிதம் மந்தமானது. எனினும் யுவராஜ் ஒரு பக்கம் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த, விராட் கோஹ்லி நைசாக ரன்களை சேர்த்துக் கொண்டே இருந்தார். சில தவறான பந்துகளை பவுண்டரிக்கு அனுபவம் விராட் தவறவே இல்லை. 51 பந்தில் 49 ரன் எடுத்திருத்தபோது சமி பந்தில் அவுட் ஆனார் கோஹ்லி. எனினும் கேப்டன் தோனியும், யுவராஜும் இணைந்து 16 வது ஓவரில் போட்டியை ஜெயித்தார்கள். சின்ன சேஸிங் என்றாலும் விடா கண்டன் கொடா கண்டன் போட்டியாக இருந்ததால் இந்த ஆண்டின் சிறந்த போட்டிகள் லிஸ்டில் முக்கியமான இடம் இந்த போட்டிக்கு உண்டு. 

1. இந்தியா vs வங்கதேசம் (உலகக்கோப்பை போட்டி)

 நிச்சயமாக, இந்த ஆண்டின் பெஸ்ட் டி20 போட்டி இது தான் என உறுதியாகச் சொல்லிவிடலாம். லீக் சுற்றில் பாகிஸ்தானை வென்ற பிறகு வங்கதேசத்தை சந்தித்தது இந்திய அணி. முதலில்  பேட்டிங் பிடித்து இந்தியா . வங்கதேச பவுலர்களை சமாளிக்க முடியாமல் சராசரிக்கும்   குறைவான  ரன்களையே  எடுத்தது இந்தியா. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது வங்கதேசம். 

எந்த பேட்ஸ்மேனுமே இந்திய பவுலர்களுக்கு கட்டுப்படவில்லை, எளிதாக ரன்கள் வந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை. வங்கதேச அணியில் மஹமதுல்லாவும், முஷ்பிகுர் ரஹீமும் களத்தில் இருந்தனர், முதல் பந்தில் ஒரு  ரன் வந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் ரஹீம் எளிதாக பவுண்டரிகள் விளாசினார். மூன்று பந்துகள் உள்ளன, வெற்றிக்குத் தேவை இரண்டு ரன்கள், டை ஆக ஒரு ரன் போதும் என்ற நிலை இருந்தது. வங்கதேச ரசிகர்கள் மட்டுமல்ல, ரஹீமும், மஹமதுல்லாவும் கூட வெற்றிக் களிப்பில் இருந்தார்கள்.  தோனி ஹர்டிக் பாண்டியாவிடம் வந்து பேசினார். நெஹ்ரா பாண்டியாவுக்கு டிப்ஸ் தந்துவிட்டுச் சென்றார். 

India vs bangladesh t20

ஓடிவந்து நல்ல லென்த்தில் பந்து வீசினார் பாண்டியா, அதை மோசமாக புல் ஷாட் ஆடினார் ரஹீம். பந்து தவான் கையில் தஞ்சம் அடைந்தது. KEEP CALM BELEIVE DHONI வகையறா ஸ்டேட்டஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருந்தன. அடுத்த பந்தை  சந்திப்பதற்கு மஹமதுல்லா தயாராக இருந்தார். பாண்டேவும், தோனியும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். பாண்டியா புல் டாஸ் பந்து ஒன்றை வீசினார், மதமதுல்லாவும் வின்னிங் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு, ரஹீம் அடித்த அதே திசையில் தூக்கி அடித்தார். ஜடேஜா ஓடிவந்து அட்டகாசமாக கேட்ச் பிடித்தார். இந்திய ரசிகர்கள் கொஞ்சம்  சுவாசிக்க ஆரம்பித்தார்கள். கடைசி பந்தை  ஷுவாகதா எதிர்கொண்டார். கிட்டத்தட்ட  வைடு பவுன்சர் ரக பந்தை வீசினார் பாண்டியா, பந்தை பேட்ஸ்மேன் மிஸ் செய்ய, விக்கெட் கீப்பராக இருந்த தோனி, எதிர் முனையில் இருந்து பேட்ஸ்மேன் கிரீசுக்குள் நுழைவதற்கு முன்னதாக  உசேன் போல்ட் வேகத்தில் ஓடி மிகச்சிறப்பான ஒரு ரன் அவுட் செய்தார். வங்கதேச ரசிகர்களின் குரல்கள் ஒரே நொடியில் அடங்கின. மைதானத்தில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மட்டுமல்ல, டிவியில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் ஆர்ப்பரித்தனர்.  

அது வேற லெவல் ரன் அவுட்!  

http://www.vikatan.com/news/sports/75801-which-t20-is-the-best-match-of-2016.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.