Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்துள்ளோம்: முதல்வர் ஓபிஎஸ் தகவல்

Featured Replies

  • தொடங்கியவர்

ஜெயலலிதா பொதுக்குழு... சசிகலா பொதுக்குழு! என்ன இருந்தது... என்ன இல்லை...?

 

admk

ண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம், ‘தீபாவளி’ திருவிழாபோலக் கொண்டாடப்படும். போயஸ் தோட்டத்தில் இருந்து கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கட்சியினர் வழிநெடுக நின்று வரவேற்பார்கள். முக்கால் மணி நேரத்தில் கடக்க வேண்டிய இந்த 18 கிலோ மீட்டர் தூரத்தை... ஜெயலலிதாவின் கார், கடந்துசெல்ல ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே அவர் செல்வார்.
 
போயஸ் கார்டன் கேட் திறந்து ஜெயலலிதாவின் கார் வெளியே வரும்போது... அஞ்சுலெட்சுமி என்ற அ.தி.மு.க பெண் தொண்டர் ஒருவரின் குரல் விண்ணைத் தொடும் அளவுக்கு, ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று குரல் கொடுப்பார். ஆரத்தி எடுத்து... பூசணிக்காய் உடைத்துத்தான் வழியனுப்புவார். போயஸ் கார்டனில் இருந்து இரட்டை விரலை காட்டிப் புன்னகைத்தவாறு செல்லும் ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சிப் பொங்கி இருக்கும். வழிநெடுக நின்று வரவேற்கும் தொண்டர்கள் முகத்திலும் அத்தகையதொரு சந்தோஷம் விளையாடும். ஃப்ளெக்ஸ் பேனர்கள், கொடி தோரணங்கள், வாழை மரங்கள் என வழிநெடுகிலும் கழகத் தொண்டர்கள் கட்டிவைத்துக் கலக்குவார்கள். இந்த உற்சாகப் பயணம், மண்டபத்தை நெருங்கும்போது அங்கு வேறு விதமான வரவேற்பு ஜெயலலிதாவுக்கு காத்து இருக்கும்.

ops

ஸ்ரீவாரி மண்டபம் அருகே... ஒரு கிலோ மீட்ட தூரத்தில் இருந்தே பேண்டு வாத்தியங்கள், சென்டை மேளம் முழங்க வரவேற்பார்கள். குதிரை மீது அமர்ந்த வீரர்களின் வரவேற்பு, பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் எல்லாம் அல்லோலப்படும். ஸ்பெஷல் மேடை அமைத்து ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிபரப்ப டான்ஸ் தூள் கிளப்புவார்கள். சில இடங்களில் ஸ்பீக்கர் செட் கட்டி பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். மண்டபத்தின் நுழைவாயில் அருகே மகளிர் அணியினர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஜெயலலிதாவுக்கு கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார்கள். கூட்டம் நடக்கும் மண்டப வாசல் அருகே நின்று மூத்த நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவை பவ்யமாக வரவேற்பார்கள். 

அதன் பிறகு, பொதுக்குழு கூடும். ஜெயலலிதாவுக்கு, தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று அடிக்கும் விசில் சத்தங்களும் கைதட்டல்களும் காதை பிளக்கும். நடுநாயகமாக ஜெயலலிதாவுக்கு இருக்கை போடப்பட்டு இருக்கும். அதற்கு இரு பக்கமும் இரண்டு அடி தூரம் விட்டுத்தான் மற்றவர்கள் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். தனது சேரில் ஜெயலலிதா உட்கார்ந்தவுடன்... மகளிர் அணியினர் ஜெயலலிதாவுக்கு ஆளுயர மாலை அணிவிப்பார்கள். அதன் பிறகு பொதுக்குழு நடவடிக்கைகள் தொடங்கும். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான நூர்ஜகான், தனது வெண்கலக் குரலால் சிறுசிறு முன்னுரையுடன் நிகழ்ச்சிகளை நகர்த்திக் கொண்டிருப்பார். வரவேற்பு, தீர்மானங்கள், முக்கிய நிர்வாகிகள் சிலரின் பேச்சுகள், இறுதியாக ஜெயலலிதாவின் பேச்சோடு கூட்டம் முடியும். கடந்த ஆண்டு நிகழ்வுகளையும் அடுத்த ஆண்டுக்கான திட்டங்களையும் மேற்கோள் காட்டி ஜெயலலிதா பேசுவார். அது, ஜெயலலிதாவின் அரசியல் நகர்வுகளைத் தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்கும். ஜெயலலிதா தனது பேச்சை முடிக்கும்போது, ‘‘ஊருக்கு பத்திரமாகப் போய்ச்சேர வேண்டும்’’ என்று அறிவுரை சொல்லித்தான் தனது பேச்சை முடிப்பார். ‘‘சைவம், அசைவம் என்று இரண்டு பிரிவுகளிலும் உணவு தயாராக உள்ளது. அனைவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொள்வார்.

jayalalithaa

பொதுக்குழுவில் பரிமாறப்படும் சைவை உணவுகளை ஒவ்வொன்றாகக் கேட்டுச் சாப்பிட்டுவிட்டுத்தான் ஜெயலலிதா வீட்டுக்குப் புறப்படுவார். காரில் ஜெயலலிதா உட்கார்ந்த பிறகு, அங்கு விருப்பப்படும் தொண்டர்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் பூங்கொத்துகளைப் பெற்றுக் கொள்வார். இப்படித்தான் கலகலப்பாக முழு உற்சாகத்துடன் பொதுக்குழு நடந்து முடியும். ஆனால், கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் அழுது வடிந்தது. போயஸ் தோட்டத்தில் இருந்து வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கொடி தோரணங்கள் இல்லாமல்... சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பொதுக்குழு நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜெயலலிதாவைக் பார்ப்பதற்காக காத்து நின்ற தொண்டர்கள் யாரையும் இந்தப் பொதுக்குழுவில் சாலை ஓரங்களில் பார்க்க முடியவில்லை. 

‘பொதுக் குழுவுக்கு வாருங்கள்’ என்று கட்சியினருக்கு அனுப்பப்படும் அழைப்பிதழ்கள்கூட இந்த முறை தபால் இலாகா மூலம் அனுப்பாமல் பொதுக்குழு உறுப்பினர்களைச் சென்னைக்கு வரவழைத்து அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் கொடுத்தார்கள். அழைப்பிதழ்களைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. மார்கழிப் பனியையும் கண்டுகொள்ளாமல் காலை 7 மணிக்குள் மண்டபத்துக்குள் ஆஜராகிவிட்டார்கள் கழக நிர்வாகிகள். அமைச்சர்கள் அனைவரும் 8 மணிக்கு ஏசி பஸ்களில் அழைத்து வரப்பட்டார்கள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 9 மணிக்கு கடைசி ஆளாக பொதுக்குழுவுக்கு வந்தார். போயஸ் கார்டனில் இருந்து டவேரா காரில்... ஜெயலலிதாவின் பிரத்யேக சேர், அவரின் அதிகாரபூர்வ போட்டோ ஆகியவை எடுத்து வரப்பட்டு பொதுக்குழு மேடையின் நடுநாயகமாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

ஜெயலலிதா முன்னிலையில் பொதுக்குழு நடக்கும்போது இரண்டு வரிசைகள் அளவுக்குத்தான் சேர்கள் போடப்பட்டு நிர்வாகிகள் அமரவைக்கப்படுவார்கள். ஆனால், இந்தத் தடவை ஐந்து வரிசைகளில் 45 நிர்வாகிகள் மேடையில் உட்கார வைக்கப்பட்டனர். ஜெயலலிதா மரணத்தையடுத்து அமைச்சராக பதவி ஏற்றபோது கண்ணீர் சிந்தாத ஓ.பன்னீர்செல்வம் கண்ணீரோடுதான் பொதுக்குழுவில் தனது பேச்சைத் தொடங்கினார். அதே பாணியில்தான் தீர்மானங்களை வாசித்த ஒவ்வொரு நிர்வாகியும் கண்ணீர் வடித்தனர். 14 தீர்மானங்களையும் வாசித்து முடித்தபோது பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் அமைதியே குடிகொண்டிருந்தது. பொதுக் குழு தீர்மானங்களை நிறைவேற்றச் சம்பிரதாயங்கள் முடிந்தவுடன்... ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் அந்தத் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு போயஸ் தோட்டத்துக்குப் பறந்தனர். சசிகலாவைச் சந்தித்து, பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தகவலையும், தீர்மானங்களையும் கொடுத்தபோது... சசிகலாவும் ஜெயலலிதாவாகவே மாறி இருந்தார். அவரது உடையில், திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. டி.டி.வி.தினகரன், இளவரசி மகன் விவேக் என்று மன்னார்குடி சொந்தங்கள் புடைசூழ ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி பொதுச்செயலாளர் நியமனப் பதவியை 11.30 மணிக்கு நல்ல நேரத்தில் ஏற்றுக் கொண்டார்.

sasikala

சசிகலாவைச் சந்திக்க சென்ற ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் பொதுக்குழு கூட்டத்துக்கு வரவே இல்லை. அங்கிருந்தபடியே கூட்டத்தை முடிக்கச் சொன்னார். ‘‘சசிகலா, பொதுக் குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்’’ என்று திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்க, பொதுக் குழு முடிந்தது. மதிய சாப்பாடு தயார் நிலையில் இருந்தாலும்... அந்த உணவு அரங்கம் காலியாகவே கிடந்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/76378-admk-general-body-meeting-then-and-now.art

  • தொடங்கியவர்

ஜெயலலிதா நினைவிடத்தில் நடந்தது என்ன! - சசிகலா எடுத்த உறுதிமொழி!

 

சசிகலா

பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மானத்தை வைத்து வணங்கி ஆசிபெற்றார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி காலையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடக்கும் விழாவில், பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்கிறார்.

அ.தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக நேற்று (டிசம்பர் 29) நியமிக்கப்பட்டார் சசிகலா. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 30) மாலை 5.20 மணிக்கு சிவப்பு கலர் புடவை அணிந்த நிலையில், ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில், முன் சீட்டில் அமர்ந்தபடி மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தார் சசிகலா. அவரை அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். சசிகலா, பொதுக்குழு தீர்மானத்தை ஜெயலலிதாவின் காலடிப் பகுதியில் வைத்து வணங்கினார். சிறிது நேரம், மெளனமாக உறுதிமொழி எடுத்துக்கொள்வது போல நின்றுக்கொண்டிருந்தார். பின்னர் ஒரு தடவை ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்து திரும்பவும் வணங்கினார். 

ops_19551.jpg

அதன் பின்னர் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்றார். அங்கும் மலர்வளையம் வைத்து வணங்கினார். அதன் பின்னர் பக்கத்தில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்றார். அங்கும் மலர் வளையம் வைத்து வணங்கினார். அப்போது அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் அனைவரும் உடன் சென்றனர். 20 நிமிடங்களில் இந்த மூன்று பேரின் சமாதிக்கும் போய்விட்டு ஜெயலலிதாவின் TN 07 AD 0006 பதிவெண் கொண்ட காரில் போயஸ் கார்டன் கிளம்பிச் சென்றார். சசிகலா வருகையை முன்னிட்டு சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

sasikala4_19566.jpg

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா வருகிறார் என்றால் போயஸ் கார்டனிலிருந்து சம்பவ இடம் வரை அ.தி.மு.க தொண்டர்கள் வரிசை கட்டி நிற்பார்கள். அவர் பயணித்துவரும் பகுதிகளில் மட்டும் சுமார் 10 நிமிடங்கள் வாகனப் போக்குவரது நிறுத்தப்படும். 

சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தபோது வரவேற்பு ஏற்பாடுகள் குறைவாகவே இருந்தன. ஜெயலலிதா சமாதி பகுதியிலும் தொண்டர்களின் எண்ணிக்கை தள்ளு முள்ளு ஏற்படும் அளவுக்கு இல்லை. புரட்சித் தலைவி என்ற கோஷத்துக்குப் பதிலாக 'சின்னம்மா வாழ்க' என்ற கோஷம் மட்டும் ஒரு சில இடங்களில் ஒலித்தது. சாலைப் போக்குவரத்தும் நிறுத்தம் செய்யப்படவில்லை. இதனால், கார்களும் இருசக்கர வாகனங்களும் வாலாஜா சாலை மற்றும் காமராஜர் சாலையில் சகஜமாக பயணித்தன.

sasikala3_19180.jpg

நாளை (டிசம்பர் 31) காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வர இருக்கிறார். அதனால், ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்திருந்த அ.தி.மு.க தொண்டர்கள்,  ராயப்பேட்டை கட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்த்தனர். ஒரு சில தொண்டர்கள் தாங்கள் வந்த காரிலேயே போயஸ் கார்டனுக்கும் சென்றனர்.! 

http://www.vikatan.com/news/tamilnadu/76407-this-is-what-happened-at-jayalalithaa-memorial-today.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா தோழி சசிகலா. சசிகலா தோழி யார் தெரியுமா?

 

வாழ்ந்த வரை எவ்வளவு மர்மங்களோடு ஜெயலலிதா இருந்தாரோ அதில் துளி கூட குறைவில்லாமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களும் வெளிவராமல் பாதுகாத்து வந்திருக்கிறார் சசிகலா. சிறிய உதாரணம் அவரின் குரலை  கேட்க  இன்று தமிழகமே காத்திருக்கிறது. சசிகலாவை ஜெயலலிதாவின்  தோழியாக  மட்டுமே  பார்த்துப்  பழகிய மக்களுக்கு  அவரை  ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக ஏற்று  கொள்ளும் மன  நிலைக்கு  வரவில்லை எனலாம்.  அதற்கு முன்பு அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்குமே உள்ளது. கணவரைப்  பிரிந்து, குழந்தை இல்லாமல், தன் வாழ்நாளில் வெளிநாடுகளுக்கு கூட செல்லாமல் ஜெயலலிதாவுக்காக  'தியாக வாழ்கை' வாழ்ந்தவர் என முன்னிறுத்துகிறார்கள் அவரது  ஆதரவாளர்கள். சசிகலாவை பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள். 

சசிகலா

உடையும்  நிறமும் 

கிராமத்து நடுத்தர பெண்ணின் ரசனையிலேயே சசிகலாவின்  உடை தேர்வுகள்  இருந்துள்ளன என்பது அவரை  நன்றாக  கவனித்து வந்தவர்களுக்கு தெரியும். அவரின்  உடை  நிறங்கள் எல்லாமே  'டல்' கலரில்  தான்  இருக்கும். மர கலரிலும், தேன் கலரிலுமான புடவைகளை மட்டுமே  விரும்பி  அணிவாரம். இது  குறித்து ஜெயலலிதா  கூட  பல முறை கூறியும் அந்த நிறங்களில் மேல் அவருக்கு அப்படி ஒரு பிரியம். இதற்காக சவுகார்பேட்டையில் உள்ள துணிக் கடையில் மொத்தமாக ஆர்டர் செய்து சேலைகள் வரவழைக்கப்படுமாம். ஜெயா டிவி, சசிகலா கட்டுப்பாட்டில் வந்த பிறகு ஜெயலலிதா அறிக்கைகளைக் காட்டும் கிராபிக்ஸ்  கார்டுகள் கூட 'டல்' கலரிலேயே இருக்குமாறு  பார்த்து  கொண்டார்  சசிகலா. ‘பொது  இடங்களில் தனியாக  தெரியக் கூடாது என்று  தனக்குத் தானே போட்டு கொண்ட வைராக்கியத்தின் அடையாளம் தான், நான் இது போன்ற உடைகளை தேர்வு  செய்யக் காரணம்’ என்று சசிகலாவே பலமுறை தனது உறவினர்களிடம் கூறியுள்ளாராம். 

 'ஆக்ரோஷ சாமிகள்'

ஜெயலலிதாவை  விடவும்  தெய்வ  பக்தி அதிகம் கொண்டவர் சசிகலா. வைணவ  கடவுள்களை  அதிகமாக வழிபடும் ஜெயலலிதாவில் இருந்து சசிகலாவின்  வழிபட்டு  முறை  முற்றிலும்  மாறுபட்டது. பெண் தெய்வங்களான காளி, துர்க்கை வழிபாடுகளில் அதிக விருப்பம் கொண்டவர் சசிகலா. ஆரம்ப காலங்களில் கல்கி, சாய்பாபா பக்தராகவும் இருந்துள்ளார். பில்லி, சூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சசிகலா குரல்!?
 
திராவிட  இயக்கங்களில் பேச்சும், குரலுமே ஒருவருக்கு முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவருக்கு குரல் மிகவும் முக்கியம். அரசியலில் ஒருவரின் ஆளுமையை  நிறுவிப்பதில் குரலும் முக்கிய  பங்கு  வகிக்கிறது.  அண்ணாவின் குரலும், கருணாநிதி குரலும் தனித்தன்மை உடையது, எம்.ஜி.ஆருக்கு தொண்டையில் குண்டடிபட்டபிறகு அவர் குரல் மாற, அவரது தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டாலும், அதுவும் அவரது ‘சிக்னேச்சர்’ ஆனது. ஜெயலலிதாவின் கணீர் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டது, அதன்படி இன்றைக்கு  தமிழகமே எதிர்பார்ப்பது சசிகலாவின்  குரலைத்தான். எப்படி இருக்கும் அவரின் குரல்!? தஞ்சாவூரில் ஒரு கிராமத்து நடுத்தர குடும்பத்து பெண்ணின் பேச்சு  மொழியாக  இருக்கும். கொஞ்சம் கட்டை குரலாகவும் இருக்கும்  என்கின்றனர். ஆனால் அவர் கார்டனில் இருந்தால் பயத்துடனே பணியாளர்களும் கட்சி நிர்வாகிகளும் இருப்பார்கள். தவறு செய்பவர்களை அவர் திட்டும்போது எதிரே நிற்பவர் நிலை குலைந்து விடுவாராம். குரல் எப்படி இருந்தாலும் அது ஒலிக்குமிடம் அதிகாரமிக்கதாக இருப்பதால் அதற்கு வலிமை அதிகமாகத் தானே இருக்கும். 

உறவும்  தோழியும் 

சசிகலாவுக்கு ஜெயலலிதாவைத்  தவிர  தனியாக  தோழிகள்  என்று யாரும் கிடையாது. குடும்ப  உறவுகளில் இளவரசியிடம் நட்புடன் இருப்பது போல்  தெரிந்தாலும் அவரை  விட சசிகலா  மிகவும்  நேசித்தது நடராஜனின் தங்கை மாலாவைத் தான்.  திருமணம் ஆகி அவர் வீட்டுக்கு வரும் போது  மாலா சின்னப் பெண்ணாக  இருந்ததால் அப்போது அவருக்குத் தோழி, உறவு எல்லாமே மாலா தான். பின்னர் அவருக்கு  திருமணம்  முடித்து சென்னை  வந்த பிறகும்  இருவரும் நெருங்கிய  நட்புடன் தான்  இருந்துள்ளனர். அரசு அலுவலகம் 
ஒன்றில்  நூலகராக  உள்ளார் மாலா. ஜெயலலிதா போயஸ்  தோட்டத்தை  விட்டு  சசிகலாவை  வெளியேற்றிய  போது  அவர் முதலில் சென்றது  தி.நகரில்  உள்ள  மாலா  வீட்டுக்குத்  தான். இப்போதும் கஷ்டமான  நேரங்களில்  மாலாவிடம் பேசுவதை வழக்கமாக  வைத்து இருக்கிறார்  சசிகலா. 

கண்டிப்பும் சிக்கனமும் 
        
இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு என்றெல்லாம் அதிமுக  வர்ணிக்கப்பட ஜெயலலிதா காரணம் எனக் கூறப்பட்டாலும். அதன் பின்னணியில் இருந்தவர் சசிகலாதான் என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றனர் கட்சியினர். கட்சியினர் கொண்டு வரும் பிரச்னைகளை எல்லாம் ஜெயலலிதாவிடம் கூற முடியாது. முழுவதுமாக கேட்பவர் சசிகலாதான். தீர்ப்பு மட்டுமே ஜெயலலிதா வசம். வெறும் வார்த்தைகளில் இருக்கும் கண்டிப்பை 'வேறு' வகையில் மாற்றுவதும் சசிகலாவின் கோபத்தை பொறுத்ததுதான். தனக்கு எதிரானவர்களை, ஜெயலலிதா கூட மன்னித்து விடுவார். ஆனால் சசிகலாவைப் பொறுத்தவரை அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள். நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி, அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் கார்டன் போன்றவற்றில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை குறைத்ததுடன் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்களை வேலையை விட்டும் நிறுத்தி சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டதிலும் சசிகலாவின் பங்கு உண்டு. ஜெயலலிதாவிடம் இருந்த தாராளத்தை சசிகலாவிடம் எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள்.  

http://www.vikatan.com/news/tamilnadu/76409-details-about-friend-of-jayalalithaas--aide-sasikala.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.