Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சுரங்கம்’ சேகர் ரெட்டி

Featured Replies

‘சுரங்கம்’ சேகர் ரெட்டி- நெட்வொர்க் - 1

 

 

p2aa.jpgலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த ரெய்டு இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. அதிகாரிகளில் உச்சபட்ச அதிகாரியான தலைமைச் செயலாளர் அலுவலகத்திலேயே சோதனை போட்டிருக்கிறார்கள் வருமானவரித் துறையினர். இந்த சோதனையின் ஆணிவேர் சேகர் ரெட்டிதான். அவர் வீட்டில் நடந்த சோதனைக்குப் பிறகுதான் ராம மோகன ராவ் வளைக்கப்பட்டார். ரெட்டியும் ராவும் மட்டும் கூட்டணி போட்டு நடத்திய விஷயம் இல்லை. இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறது. அந்த நெட்வொர்க் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பக்கங்களில் பார்ப்போம். முதலில் சேகர் ரெட்டி!

போயஸ் கார்டனில் இருந்து, சசிகலா 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியேற்றப்பட்டார். அந்த சசிபெயர்ச்சிக்குப் பிறகு, கார்டனில் உருவான வெற்றிடத்தை நிரப்ப பலத்த போட்டி ஏற்பட்டது. புதிய நெட்வொர்க்குகள் புற்றீசல்கள் போல உருவாயின. கார்டனின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட முடியாமல், அவற்றில் சில இடையில் அறுந்துபோயின. கார்டன் ரூல்ஸ்களை அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்த சில நெட்வொர்க்குகள்,  குட் புக்கில் இடம்பிடித்தன. கான்ட்ராக்ட், கமிஷன், அதிகாரம் என்று அந்த நெட்வொர்க்குகள் கொடிகட்டிப் பறந்தன. 3 மாதங்களுக்குப் பிறகு சசிகலா, மீண்டும் கார்டனுக்குள் அடியெடுத்து வைத்தார். புதிதாக உருவாகி இருந்த இந்த நெட்வொர்க்குகளின் பயன்களும் பலன்களும் அவருக்கும் ஏற்புடையதாக இருந்தது. அதனால், அவற்றை சசிகலாவும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நெட்வொர்க்தான் முதலமைச்சர் ஓ.பி.எஸ், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ராமச்சந்திரன், அமலநாதன், ரத்தினம், ஆடிட்டர் பிரேம்குமார், வனத்துறை கல்யாண சுந்தரம் வகையறாக்கள்.

p2a.jpg

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டி என்ற பாத்திரம், தமிழக அரசு அதிகார மையத்துக்கு 2011-க்குப் பிறகே மிக நெருக்கமானது. அதற்கு முன்புவரை, மணல் கான்ட்ராக்டுகளில் கொடிகட்டிப் பறந்தவர்கள், படிக்காசு, ஆறுமுகச்சாமி வகையறாக்கள். அவர்களிடம் பிசினஸ் செய்ய முடியாதவர்கள், அவர்களைப் பகைத்துக்கொண்டவர்கள், அவர்களுக்கு எதிராக ஒன்று திரண்டனர். ஆனால், அவர்களால் ஆறுமுகச்சாமி, படிக்காசுக்கு எதிராக ஒரு பலமான நெட்வொர்க்கை ஏற்படுத்த முடியாமல் இருந்தது. அந்த நேரத்தில் களத்துக்கு வந்தவர்தான் சேகர் ரெட்டி. இவரின் நெட்வொர்க் இரும்புக் கோட்டையாக அமைய அஸ்திவாரம் போட்டவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ‘மணல்’ ராமச்சந்திரன்தான். அவருடைய அறிமுகம் கிடைப்பதற்கு முன்புவரை, சேகர் ரெட்டி, சாதாரண கவுன்சிலர் லெவல் கான்ட்ராக்ட்டுகளை மட்டுமே எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

மணல் ராமச்சந்திரன், ஒயின் ஷாப் நடத்திக் கொண்டிருந்தவர். ஆனால், டாஸ்மாக் வந்தபிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் அடியெடுத்து வைத்தார். அதோடு, ஜல்லி சப்ளை செய்யும் கிரஷர்களையும் ஆரம்பித்தார். அதே நேரத்தில், ராமச்சந்திரனின் உறவினர் ரத்தினம் என்பவர் திண்டுக்கல்லில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்திக்கொண்டிருந்தார். ராமச்சந்திரன் அந்த நேரத்தில், அன்றைய எம்.எல்.ஏ-வும், தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சருமான விஜய பாஸ்கருக்கு நெருக்கமானார். காரணம், விஜய பாஸ்கருக்கும் ஜல்லி கிரஷர்கள் இருந்தன. அதனால், அவர்கள் நெருக்கமானார்கள். இந்த டீமுடன் சேகர் ரெட்டி இணைந்தார். சேகர் ரெட்டிக்கு ஆரம்ப காலத்தில் வருமானவரித் தாக்கல் செய்வதற்கான வேலைகளில் உதவியவர் ஆடிட்டர் பிரேம். இந்த பிரேம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சின்ன வயதில் இருந்தே நண்பர். இந்த லிங்க் மூலம் சேகர் ரெட்டி விஜயபாஸ்கருக்கு நெருக்கமானார். அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சேகர் ரெட்டியை மணல் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் நெருங்கினார்கள். நெட்வொர்க் பலமானது.

விஜயபாஸ்கர் மூலம், இந்த நெட்வொர்க் அரசாங்கத்துக்குள் அடி எடுத்து வைத்தது. அந்தக் காலகட்டத்தில் பொதுப்பணித் துறையை கையில் வைத்திருந்தவர் ஓ.பி.எஸ். நெடுஞ்சாலைத் துறை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தது. சேகர் ரெட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். சேகர் ரெட்டிக்கு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டுகள் கிடைத்தன. கமிஷன் தொகை, கச்சிதமாக அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கார்டனுக்குச் சென்றதால், அசைக்க முடியாத சக்தியாக உருவானார் சேகர் ரெட்டி. விஜயபாஸ்கரும், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷும் நண்பர்கள். அந்த வகையில் வெங்கடேஷ் மூலம் சேகர் ரெட்டி கார்டனுக்குள்ளும் திருப்பதி லட்டுகளை அனுப்ப ஆரம்பித்தார். அதன்பிறகு, சேகர் ரெட்டி ஓகோவென்று வளர ஆரம்பித்தார். ஆனாலும், அவருக்கு அரசியல்வாதிகளைவிட அதிகாரிகளின் நட்புதான் முக்கியம். அரசியல்வாதிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதிகாரிகள் அப்படி அல்ல...!

 மணல் குவாரிகளில் ஆறுமுகச்சாமி, படிக்காசுக்கு பதிலாக சேகர் ரெட்டியின் கொடி பறக்க ஆரம்பித்தது. அதற்கு பிரதி உபகாரமாக ராம மோகன ராவ் மகள் திருமணத்தை சேகர் ரெட்டி மிகப் பிரமாண்டமாக நடத்திவைத்தார்.
இந்தக் கூட்டணியின் புதிய கண்டுபிடிப்புதான், டெண்டர் கேட்கவே 10 சதவிகித கமிஷன் என்பது. அதுதான் பின்னாளில் வளர்ந்து, 30 சதவிகித கமிஷனாக இன்று மாறி இருக்கிறது.

p2.jpg

சேகர்  ரெட்டியின் நிறுவனங்கள் !

சேகர் ரெட்டிக்குச் சொந்தமான நிறுவனம் எஸ்.ஆர் இன்புரோ பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்துக்கு, கடந்த மூன்றாண்டுகளில், 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித் துறை, நெஞ்சாலைத் துறைகள் இந்த ஒப்பந்தங்களை வழங்கி உள்ளன. இதற்காக சேகர் ரெட்டி கொடுத்த கமிஷன், இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் என்று கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

 இதில் 15 சதவிகிதம் போயஸ் கார்டனுக்கும், 5 சதவிகிதம் துறை அமைச்சர்களுக்கும், 5 சதவிகிதம் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் கமிஷனாகக் கொடுத்துள்ளார்.

தமிழக அரசு விதிகள்படி, இப்படிப்பட்ட கான்ட்ராக்ட்டுகளை எடுக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளைக் கடந்து இருக்க வேண்டும். ஆனால், சேகர் ரெட்டியின் நிறுவனம், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில்தான் தொடங்கப்பட்டு உள்ளது.

ஆரணி - படவீடு நெடுஞ்சாலை பழுதுபார்ப்பு கான்ட்ராக்ட், சென்னையில் தாம்பரம் எல்லைக்கு உட்பட்ட நகர சாலைகளைப் பழுதுபார்க்கும் கான்ட்ராக்ட், காட்பாடி சப்டிவிஷன் கான்ட்ராக்ட், சிதம்பரம் தாலுகாவில் கொள்ளிடம் ஆறு கரைகளை சீரமைக்கும் கான்ட்ராக்ட், காஞ்சிபுரத்தில் செய்யூர் - கிள்ளியூர் கான்ட்ராக்ட் போன்றவை சேகர் ரெட்டியின் நிறுவனங்கள் எடுத்து செய்த வேலைகள்தான்.

இந்த நெட்வொர்க்குதான் இப்போது அம்பலம் ஆகி உள்ளது.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

‘சுரண்டல்’ ராம மோகன ராவ் - நெட்வொர்க் - 2

 

 

ஜெயலலிதா ஆட்சியில் ராம மோகன ராவ்தான் எல்லாமே. அவரது கரன்சி வித்தைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட ஜெயலலிதா, அவரையே தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக அதாவது நம்பர் ஒன் ஆக்கினார். இப்படிப்பட்ட ஆட்களுக்குத் தானே அப்படிப்பட்ட பதவிகள் கிடைக்கும்! தர வரிசைப்படி 14-வது இடத்தில் இருந்த ராம மோகன ராவை தலைமைச் செயலாளர் ஆக்கியதன் மூலமாக கரன்சி நெட்வொர்க்கின் நம்பர் ஒன் ஆகவும் அவர் ஆக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவு, நம்பர் ஒன் - ஐ கம்பி எண்ணும் இடத்துக்கு நகர்த்திச் செல்கிறது.

டிசம்பர் 8-ம் தேதி சேகர் ரெட்டியின் வீடுகள், அலுவலகங்கள், குவாரிகளில் வருமானவரித் துறை ரெய்டு நடந்தது. அப்போது சேகர் ரெட்டி கைது செய்யப்படவில்லை. ஆனால், தனியாக அவரிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. அந்த  விசாரணையில் சேகர் ரெட்டி அதிகமாக உச்சரித்த பெயர், ராம மோகன ராவ். தன்னிடம் சேர்ந்த செல்வத்துக்கு மிகப் பெரிய காரணம் என இவரைத்தான் சேகர் ரெட்டி அடையாளம் காட்டினார். அதையடுத்து சில நாட்கள் கழித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோர் வீடுகளிலும்  தலைமைச் செயலகத்தில் உள்ள ராம மோகன ராவ் அலுவலகத்திலும் வருமானவரித் துறை சோதனை நடத்தியது.

p6.jpg

டாஸ்மாக் கடைகளை அரசு நடத்துவதைப்போல, மணல் குவாரிகளையும் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் என்ற யோசனை ராம மோகன ராவின் மூளையில் உதித்ததுதான். இந்த யோசனை அரசாங்கத்துக்குப் பலன் கொடுத்ததோ இல்லையோ... பொதுமக்களுக்குப் பலன் கொடுத்ததோ இல்லையோ... ராம மோகன ராவுக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் மிகப் பெரிய பலனைக் கொடுத்தது. அதன்விளைவுதான், இன்றைக்கு ராம மோகன ராவிடம், பல நூறு கோடிகள் இருப்பதாகக் கிளம்பியுள்ள தகவல்கள்.

ஆந்திராவைச் சேர்ந்த ராமமோகன ராவ் 1957-ம் ஆண்டு பிறந்தவர். எம்.காம் காஸ்ட் அக்கவுன்டிங் முடித்து ஐ.ஏ.எஸ் ஆனார். நில வருவாய் மேலாண்மையில் உதவி கலெக்டராக 1987-ம் ஆண்டு பணியைத் தொடங்கினார்.  விசுவாசம் என்பதுதான் ராம மோகன ராவின் பலம். இதுதான் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு ஆட்சிகளிலும் அவரை ஆக்டிவ் ஆக வைத்திருந்தது. கருணாநிதிக்கு நம்பிக்கையாக இருந்த ராம மோகன ராவை, ஜெயலலிதாவும் தனது செயலாளர்களில் ஒருவராக நியமித்துக்கொண்டார். காரணம், அவருடைய விசுவாசம்தான். சமயங்களில் ஜெயலலிதாவே, ராம மோகன ராவிடம் கருணாநிதியை, ‘உங்கள் தலைவர் எப்படி இருக்கிறார்?’ என்று விசாரிக்கவும் செய்வாராம். முதல்வரின் முதல்நிலை செயலாளர் என்கிற அந்தஸ்து ராம மோகன ராவுக்கு அமைச்சர்கள், பிசினஸ்மேன்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கியது.

p6a.jpgராம மோகன ராவ் தனது காரியங்களைச் செய்வதற்காகக் கண்டுபிடித்த நபர்தான் சேகர் ரெட்டி.  மணல் குவாரிகள் கான்ட்ராக்ட் எடுப்பதில் ரெட்டிக்கு ராம மோகன ராவ் உதவினார். அதற்கு ரெட்டி கைமாறு செய்தார். சேகர் ரெட்டி மூலம், மணல் ராமச்சந்திரனும், சர்வேயர் ரத்தினமும் இவரின் வளையத்துக்குள் வந்தனர். இலவச லேப்டாப்,  தமிழக அரசு அலுவலகங்களுக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் வாங்குவது போன்ற கான்ட்ராக்டுகளை ராம மோகன ராவின் மகன் விவேக் எடுத்துச் செய்தார். அவருக்கு அந்த டெண்டர்கள் எந்த அடிப்படையில், எந்த வழியில் கிடைத்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. மற்றவர்கள் 30 சதவிகித கமிஷன் வெட்ட வேண்டும். விவேக் நிறுவனங்கள் மட்டும், 10 சதவிகித கமிஷனில் வேலையை முடித்துக்கொள்ளும்.

முதலமைச்சரின் முன்னாள் செயலாளர், தலைமைச் செயலாளர் அந்தஸ்து காரணமாக, அமைச்சர்கள் அனைவரும், ராம மோகன ராவைக் கண்டால், பணிந்தனர். ராம மோகன ராவ் போன் செய்தால், தான் எந்த இடத்தில் இருந்தாலும், அடுத்த 5 நிமிடங்களில் வந்து நிற்பார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா-சசிகலாவைத் தாண்டி, ராம மோகன ராவுக்கும் பன்னீர்செல்வம் பணிவு காட்டினார். அமைச்சர்கள் பலரும், இவரை ‘முதலமைச்ச ராக’ நினைக்க ஆரம்பித்தார்கள். இந்தக் கூட்டணி கார்டனையும் கவனித்துக்கொண்டு தங்களையும் வளப்படுத்திக்கொண்டது.

இப்போது வசமாகச் சிக்கிக்கொண்டார் ராம மோகன ராவ். ‘சேகர் ரெட்டியிடம் இருந்து எடுக்கப்பட்டவை அனைத்தும் ராம மோகன ராவின் பணம் என்றும், இவருக்கு ஜெயலலிதா கொடுத்து வைத்திருந்தார் என்றும் விசாரணைகளில் அதிகாரிகள் அறிந்துள்ளார்கள்’ என்று சொல்லப்படுகிறது. ராம மோகன ராவ் இதற்கு என்ன பதில் சொல்ல இருக்கிறார் என்பதை வைத்தே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.
 

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

‘சேஞ்ச்’ லோதா! - நெட்வொர்க் - 3

 

 

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அவரது மகன், நண்பர்கள் வீடுகளில் செப்டம்பர் 12-ம் தேதி ரெய்டு நடத்தியது வருமானவரித் துறை. இதுபற்றி ‘புலி வாலைப் பிடித்த புளி வியாபாரியின் கதை’ என்ற தலைப்பில் 21.09.2016 தேதியிட்ட ஜூ.வி-யில் கட்டுரை வெளியானது. ‘விசுவநாதனின் சொத்து வளர்ச்சியில் அவரது மகன் அமர்நாத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. வியாபாரத்தில் புலியான அமர்நாத், பல துறைகளின் பிசினஸ் புள்ளிகளை நண்பர்களாக்கிக்கொண்டார். அவர்கள் மூலமாகப் பல முதலீடுகளைக் செய்திருக்கிறார். அதில், பியர்லெஸ் பங்குதாரர்களில் ஒருவரான பரஸ்மால் லோதாவும் ஒருவர்’ என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அந்த லோதா இப்போது சிக்கியிருக்கிறார்.

p8.jpg

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோகித் தான்டன் அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் 13.62 கோடி ரூபாய் சிக்கியது. இதில் 2.62 கோடி ரூபாய், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். இதனிடையில், டெல்லியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ரோகித் தான்டன், லண்டன், துபாயில் பல சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். அவரை அமலாக்கப் பிரிவினர் கைதுசெய்து விசாரித்தபோது, கொல்கத்தாவைச் சேர்ந்த லோதாவைக் கைகாட்டியிருக்கிறார் ரோகித் தான்டன். இதனைத் தொடர்ந்து, லோதாவைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள். அவரின் செல்போன்கள், வாட்ஸ் அப் சாட்களை ஆராய்ந்தனர். கமிஷன் அடிப்படையில் லோதா, பணத்தை மாற்றித் தரும் தகவல் தெரியவந்தது. நாடு முழுவதும் அரசியல் புள்ளிகள் லோதாவுக்கு கஸ்டமர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் சேகர் ரெட்டி. லோதாவிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சேகர் ரெட்டி, அவரது பார்ட்னர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரது வீடுகளில் அதிரடியாகப் புகுந்தது வருமானவரித் துறை.

p8a.jpgசேகர் ரெட்டி வீட்டில் இருந்து 177 கிலோ தங்கமும் 131 கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. இதில் 34 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். புதிய ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டிக்கு லோதா மாற்றிக்கொடுத்திருக்கும் தகவலை வருமானவரித் துறையின் அமலாக்கப் பிரிவினர் கண்டுபிடித்தனர். சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த ரெய்டுகளைப் பார்த்து அதிர்ந்துபோன லோதா, மலேசியாவுக்குத் தப்பித்துச் செல்லத் திட்டமிட்டார். தப்பிச் செல்வதற்காகக் கடந்த 21-ம் தேதி மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்த லோதாவைக் கைதுசெய்தது அமலாக்கத் துறை. கமிஷன் பெற்றுக்கொண்டு பல கோடி ரூபாய்க்குப் புதிய பணத்தையும் தங்கத்தையும் மாற்றிக் கொடுத்ததாக லோதா ஒப்புக்கொண்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து 2.6 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கி அதிகாரிகள் உதவி இல்லாமல் லோதாவால் இவ்வளவு பணத்தை மாற்றியிருக்க முடியாது. ஆகவே, லோதாவிடம் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்தில் வைத்திருக்கிறது அமலாக்கத் துறை. லோதாவிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித்  தகவல்கள் வாக்குமூலமாகக் கிடைத்திருக்கிறதாம்.

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அன்புநாதனிடம் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத் கொடுத்தது என்பதை வருமானவரித் துறை அதிகாரிகள் உறுதிசெய்திருக்கிறார்களாம். லோதா கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘கரூரைச் சேர்ந்த அன்புநாதன் எனக்கு அறிமுகமான பிறகு, அவர் மூலமாக தமிழகத்தின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள், தமிழக அரசில் முக்கியப் பதவியில் இருக்கும் ஒரு வி.ஜ.பி ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் மூலமாக தமிழகத்தில் பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நண்பர்களானார்கள். அந்தத் தொடர்பு மூலமாக வி.ஐ.பி-க்களின் பணம் கரூர் பிரமுகர் மூலமாக எனக்கு வரும். அதை நான் வெளிநாட்டில் முதலீடு செய்வேன். அந்தப் பணத்தில் துபாயில் ஒரு வணிக வளாகம் கட்டினேன். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளேன். கரூர் பிரமுகர் கொடுத்த பணத்தில் தாய்லாந்தில் தனித்தீவு வாங்கப்பட்டிருக் கிறது. அதோடு அந்த நாட்டு காசிக்கோன் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேகர் ரெட்டியின் பணத்தையும் முதலீடு செய்தேன். இதில் எங்களுக்குப் பல ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவரும் தமிழகத்தில் முக்கியப் பதவியில் இருப்பவருமான ஏ.டி.ஜி.பி ஒருவரும் எனக்கு உடந்தையாக இருந்தார். எங்களுக்குப் பல்வேறு வகையில் உதவியாக இருந்த அவரும் எங்கள் மூலமாகப் பலகோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை எடுத்துப் பார்த்தால், அவர் எங்களுடன் எந்தெந்த நாடுகளுக்கு வந்தார் என்ற தகவல் தெரியும்’’ என லோதா கொடுத்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் இருக்கின்றன.

p8aa.jpg

லோதா வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் அமலாக்கத் துறை இறங்கியிருக்கிறது. தொடர் விசாரணையில் பலரது பெயர்களும் வெளிவரும் என்பதால் லோதாவுடன் தொடர்பில் இருந்த வி.ஐ.பி-க்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

-ஆர்.குமரேசன், ஆ.நந்தகுமார்


யார் இந்த லோதா?

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் லோதா. தனது தூரத்து உறவினர் மூலமாக, 1977-ம் ஆண்டு கொல்கத்தா வந்தார். அங்கு பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்தார். தனது கல்லூரி நாட்களில் வருமானத்துக்காக, பழைய ஆங்கில மாத இதழ்களை சக மாணவர்களிடம் விற்பனை செய்துவந்த லோதா, பிறகு, வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனையில் இறங்கினார். பிறகு வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுக்கும் தொழிலைச் செய்தார். அந்தத் தொடர்புகள் மூலமாக ரியல் எஸ்டேட் துறைக்குத் தாவினார். அந்தத் துறையில் நுழைந்த சில வருடங்களிலேயே அதிகாரிகளை நட்பாக்கிக்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் கொல்கத்தா நகரின் நம்பர் ஒன் ரியல் எஸ்டேட் நிறுவனமாக தனது நிறுவனத்தை மாற்றினார். அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும்போது, அனுமதிக்கப்பட்ட மாடிகளைவிட, கூடுதலாகச் சில மாடிகளைக் கட்டிக்கொடுப்பார் லோதா.

அதிகாரிகள் அவர் சொன்னபடி தலையாட்டியதால் இவரது நிறுவனத்திடமே ஏராளமான கான்ட்ராக்ட்டுகள் குவிந்தன. இதனால் ‘எக்ஸ்ட்ரா ஃப்ளோர் லோதா’ என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு. இந்த நிலையில், 1990-ம் ஆண்டு பியர்லெஸ் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் எல்.ஐ.சி-க்கு சவால்விடும் அளவுக்கு இந்த நிறுவனம் உயர்ந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே பியர்லெஸ் நிறுவனம் சரிவைச் சந்தித்தது. அதன் பிறகு, தனது தொழிலை மாற்றிக்கொண்ட லோதா, கறுப்புப் பண முதலைகளிடம் உள்ள பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துகொடுக்கும் தொழிலை ஆரம்பித்தார். இந்தத் தொழிலில் இந்தியாவில் முன்னணியில் உள்ளது லோதாதான் என்பதால் நாடு முழுவதும் உள்ள பல பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்கள் ஆனார்கள். கறுப்புப் பண வேட்டையில் லோதாவும் அவர் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கும் புள்ளிகளும் உறைந்துபோயிருக்கின்றனர்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

‘ஸ்கெட்ச்’ அமலநாதன்! - நெட்வொர்க் - 4

 

 

மலநாதனிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, “சார்.. உங்களுக்கு எங்கள் டிபார்ட்மென்ட்டிலேயே இவ்வளவு அதிகாரிகளைத் தெரியுமா?” என்று ஆச்சர்யப்பட்டு இன்கம்டாக்ஸ் அதிகாரிகளே ஆடிப்போய்விட்டனராம்.

p12a.jpg

“உங்கள் டிபார்ட்மென்ட்டில் உள்ள அதிகாரிகளில் நான்கில் மூன்று பங்கு பேர் என் நண்பர்கள்தான். என் நேர்மையை அவர்களிடம் விசாரித்துப் பாருங்கள்” என்று சொல்லிவிட்டு கெத்தாக வந்துள்ளார் வழக்கறிஞர் அமலநாதன்.

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்திய வருமானவரித் துறை அதிகாரிகள், இவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களையும் வளைத்தனர். அதில் சிக்கியவர்தான் வழக்கறிஞர் அமலநாதன். சிவகங்கை மாவட்டம், பாகனேரியைச் சேர்ந்தவர் இவர். சென்னையில் சட்டம் படித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் தொழில்செய்து வருகிறார். ராம மோகன ராவ் சர்வீஸுக்கு வந்து, சிறிய பொறுப்புகளில் இருந்த காலத்தில் இருந்து வழக்கறிஞர் அமலநாதன் அவருடன் நட்பில் உள்ளார்.

p12.jpgகடந்த 25 வருடங்களாக ராம மோகன ராவ் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தாலும், மணல் தொழில், பொதுப்பணித் துறை ஒப்பந்தங்கள் போன்றவற்றில் அமலநாதன் தலையைக்கொடுக்கவில்லை. ஆனால், ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் நிறுவனங்கள் சம்பந்தமான வழக்குகளை முடித்துத் தருவது, அதற்கான மூத்த வழக்கறிஞர்களைப் பிடித்துத் தருவது என்ற ரீதியில் மட்டுமே இருந்துள்ளார். அதனால், தற்போதைய ரெய்டில் அமலநாதனிடம் இருந்தும் எதுவும் சிக்கவில்லை. ராம மோகன ராவுக்கு எதிராகவும் எதுவும் அமலநாதனிடம் இருந்து சிக்கவில்லை. மூன்று நாட்கள் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியும்கூட, கடைசிவரை ஒரு வார்த்தையைக்கூட ராம மோகன ராவுக்கு எதிராக  அமலநாதனிடம் இருந்து அவர்களால் வாங்க முடியவில்லை. வேறு எந்தவகையில்தான் அமலநாதன் பலனடைந்தார் என்றால்,  அதிகாரவர்க்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு, புரமோஷன், டிரான்ஸ்ஃபர் போன்ற விவகாரங்களைச் செய்து கொடுக்கும் மீடியேட்டராக அவர் செயல்பட்டார். அமலநாதன் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தச் சமூகத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளருக்கும் இடையில் மீடியேட்டராகச் செயல்பட்டார். இதுபோன்று பல ஆண்டுகளாக மீடியேட்டராக அமலநாதன் செயல்பட்டு பலன் அடைந்தார். ஆனால், இப்போது ரெய்டில் அமலநாதன் வீட்டில் சிக்கிய பணம் மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். அதில் 6 லட்சம் ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகள். மீதமுள்ள 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்  புதிய ரூபாய் நோட்டுகள். அதற்கும் அமலநாதன் முறையாகக் கணக்குக் காட்டி உள்ளார். வருமானவரித் துறை அதிகாரிகளே துருவித் துருவி விசாரித்துவிட்டு அமலநாதனை அனுப்பிவிட்டனர். அவருடைய பணத்தில் ஒரு பகுதியையும், கைப்பற்றப்பட்ட கொஞ்சம் நகைகளையும் அமலநாதனையே எடுத்துப்போகச் சொல்லிவிட்டனர்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

‘கம்பெனி’ விவேக் - நெட்வொர்க் - 5

 

 

லைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில், வருமானவரித் துறை அதிகாரிகள் அள்ளிய தங்கம், பணத்தைவிட, அவருடைய மகன் விவேக் வீட்டில் அள்ளியதுதான் அதிகம். குறுகிய காலத்தில், விவேக்கின் வளர்ச்சி அந்தளவுக்கு ஜெட் வேகம். 

p14b.jpg

சென்னையில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்தவர் விவேக். 2005-ல் கிண்டி பொறியியல் கல்லூரியில், ‘எலெக்ட்ரிகல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ்’ படித்துவிட்டு அமெரிக்கா பறந்துவிட்டார். அங்கு, ‘ரைட்’ பல்கலைக்கழகத்தில், ‘மனித வாழ்வியல் காரணிகள்’ என்ற தலைப்பில் ‘எம்.எஸ்’ முடித்தார். அத்துடன், ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்திலும் சீனியர் சர்வீஸ் இன்ஜினீயராக வேலை பார்த்துள்ளார். அங்கிருந்து இந்தியா திரும்பியவருக்கு, வரும் காலங்களில் தமிழகத்தின் டெண்டர்களைத் தீர்மானிக்கப் போகும் சக்தியாக மாறுவோம் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

 ஐந்து வருடங்களுக்கு முன்பு தேனாம்பேட்டையில் அலுவலகம் திறந்த விவேக்குக்கு, தொழில் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கின. காரணம், சேகர் ரெட்டி. இருவரும் எந்த அளவுக்கு நெருக்கம் என்றால், 0005 என்ற ஒரே பதிவு எண் கொண்ட கார்களைத்தான் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த டெண்டரும் ராம மோகன ராவ் கைப்படாமல் நகராது. அதற்கான கமிஷனைப் பெற மகனுக்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்கிக் கொடுக்கிறார் ராவ். அப்படி, விவேக் முதலில் தொடங்கியது, ‘மேன்பவர் கன்சல்டிங்’ நிறுவனம். இந்த நிறுவனம் மூலம் மூவாயிரம் பேர் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் கான்ட்ராக்ட் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவிகித  கமிஷனை அந்த நிறுவனம் எடுத்துக்கொள்ளும். அதற்கு அடுத்து ஆரம்பித்தது லாஜிஸ்டிக் நிறுவனம். தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி எடுத்துச்செல்லும் பணி இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2,500 லாரிகள் வரை சொந்தமாக வைத்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் விவேக்.

p14.jpg

அடுத்து ஆரம்பித்தது சாஃப்ட்வேர் தொடர்பான தொழில்கள். 14 லட்சம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தையும் விவேக்கின் நிறுவனம்தான் எடுத்துள்ளது. எல்காட் நிறுவனத்தில் அதிகமாக டெண்டர்களை இவரது நிறுவனம் கைப்பற்றியது. இதேபோன்று ஆந்திர மாநிலத்திலும் பல்வேறு தொழில்கள் நடத்தி வருவதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறதாம். தடா பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு ஏக்கர் ஒரு லட்சம் ரூபாய் என வாங்கி, பல கோடிகளுக்கு  விற்றுள்ளதாகவும் இந்தத் தொழிலில் விவேக்குடன், ஆந்திர முன்னாள் முதல்வரின் மகனும் பார்ட்னராக இருந்துள்ளதாகவும் செய்திகள் வெளி வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்கள் எல்லாம் பணப்பரிவர்த்தனைக்குப் பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள் காட்டியுள்ள வருமானம் என்பது விவேக்கின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது கொசுறு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

 ‘எஸ்.ஆர்.எஸ் மைனிங்’ நிறுவனத்தின் ஆவணங்களை சோதனையிட்டபோது, விவேக்குடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருந்தது தெரிந்தது. விவேக், குறுகிய காலத்தில், பல நிறுவனங்களைத் தொடங்கியுள்ளார். அதற்கு, பதுக்கல் பணம் உதவியாக இருந்ததும் தெரியவந்தது. அது மட்டுமன்றி, திருவான்மியூரில், விவேக் வசிக்கும் சொகுசு பங்களா, பல கோடி ரூபாய் மதிப்புடையது. தந்தையுடன் p14a.jpgதங்கியிருந்த விவேக், அந்த சொகுசு பங்களாவுக்கு, சில மாதங்களுக்கு முன்புதான் குடிவந்துள்ளார். ‘விர்து டெக்னாலஜிஸ்’, ‘3 லாக்’ என்ற நிறுவனங்களின் மேலாண் இயக்குநராக விவேக் உள்ளார். பெங்களூரிலும் விவேக் சில நிறுவனங்களை நடத்தி வருகிறார். சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலையில் பிரபல ஆங்கில நாளிதழ் இயங்கி வரும் கட்டடத்தின் 3-வது மாடியில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவன அலுவலகம், கப்பல் போக்குவரத்து ஏற்றுமதி - இறக்குமதி நிறுவன அலுவலகம் உட்பட மூன்று அலுவலகங்கள் விவேக்குக்குச் சொந்தமானவை.

 விவேக்கின் நிறுவனத்துக்கு பாஸ்கர் நாயுடு என்பவர் இயக்குநராகக் காட்டப்பட்டுள்ளார். பத்மாவதி என்ற மருத்துவம் மற்றும் மருத்துவ மேலாண்மை சேவைகள் சார்ந்த நிறுவனத்துடன், தமிழக அரசின் சுகாதாரத் துறை கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, 63 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை வழங்க, பாஸ்கர் நாயுடுவின் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக, ஆண்டு ஒன்றுக்கு 129 கோடியே 86 லட்சத்து 52 ஆயிரத்து 203 ரூபாய் வரை டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதும் தற்போது விசாரிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

‘அள்ளும்’ ராமச்சந்திரன்! - நெட்வொர்க் - 6

 

 

சேகர் ரெட்டியின் கைது தமிழக அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. அவருடன் நிழல் மனிதர்களாக வலம்வந்த மணல் ராமச்சந்திரன், சர்வேயர் ரத்தினம் இருவரும் கைது செய்யப்பட்டது பல அரசியல் புள்ளிகளைப் பதற்றமடைய வைத்துள்ளது.

எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராக்கோட்டையை அடுத்துள்ள முத்துப்பட்டினம். தனது அப்பா வைத்திருந்த ரைஸ் மில்லை கவனித்து வந்தார் ராமச்சந்திரன். இந்த நிலையில், தனது உறவினர் ரத்தினத்துடன் இணைந்து மாவட்டம் முழுக்க ஒயின் ஷாப்களை எடுத்து நடத்தினார். அரசே டாஸ்மாக்கை நடத்தவே, மணல் வியாபாரம் பக்கம் கவனம் திருப்பினார்.

p16.jpg

தொடக்கத்தில் ராமச்சந்திரன் தி.மு.க-வில் இருந்ததால், புதுக்கோட்டை பெரியண்ணனுக்கு மிக நெருக்கமானார். அதே நேரம் ரத்தினமும் தி.மு.க முக்கியப் புள்ளிகளுடன் தொடர்பை வலுப்படுத்திக்கொண்டார். படிக்காசு, ஆறுமுகச்சாமி ஆகிய இருவரும் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை நடத்திவந்தவர்கள். இவர்களோடு சப் டீலராக இணைந்து திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மணல் குவாரிகள் எடுத்து நடத்தினர் ராமச்சந்திரனும் ரத்தினமும். கூடவே, பொதுப்பணித் துறை மூலம் சாலைகள் போடப் பயன்படும் சிவப்பு கிராவல், செங்கல் சூளை, டயர் விற்பனை, ஹோட்டல் உள்ளிட்ட பிசினஸ்களிலும் கால் பதித்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது அமைச்சர் விஜயபாஸ்கருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவருக்கு வேண்டப்பட்ட சேகர் ரெட்டி, பிரேம், ராம மோகன ராவ் ஆகியோரின் நெருக்கமும் இவர்களுக்குக் கை கொடுத்தது. கடந்த 2012-ல் புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக வந்த ஓ.பி.எஸ். நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை புதுக்கோட்டையை அடுத்துள்ள காரியப்பட்டியில் உள்ள விடுதியில் தங்கவைத்து ராமச்சந்திரன் மூலம் பலமான உபசரிப்புகளைச் செய்யவைத்தார் விஜயபாஸ்கர்.

மணல் பிசினஸ் ஆறுமுகச்சாமியிடம் இருந்து பறிக்கப்பட்டபோது, அது சேகர் ரெட்டி, ராமச்சந்திரன், ரத்தினம் வசம் வந்தது. இவர்கள் ‘எஸ்.ஆர்.எஸ் மைன்ஸ்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்க லைசென்ஸ் பெற்றார்கள். 

பொதுவாக, மணல் ராமச்சந்திரன் தன் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்காக முக்கிய அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் திருமண விழாக்களில் சாப்பாட்டுச் செலவை தானே ஏற்றுக்கொள்வாராம்.  திருப்பதியில் நடைபெற்ற ராம மோகன ராவ் வீட்டு விசேஷத்தில் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி தலைமையில் 60 பவுன் நகையை ராமச்சந்திரன் அன்பளிப்பாக வழங்கினாராம்.

படாடோபம் இல்லாத, அன்பானவராக, பவ்யமாக வலம் வரும் ராமச்சந்திரன் மணல் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை கோயில் திருப்பணிகளுக்குக் கொடுத்துத் தன்னை ஆன்மிகவாதியாகக் காட்டிக்கொள்வார். புதுக்கோட்டை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கும் லட்சங்களை வாரி இறைத்துள்ளார். சொந்த ஊரான முத்துப்பட்டினத்தில் எந்த விழா நடைபெற்றாலும் ராமச்சந்திரன் கொடுக்கும் அன்பளிப்புத் தொகை, மக்களைத் திணறடிக்கும். ஆனால், இவருக்கு நேர் எதிரானவர் ரத்தினம். அடாவடிப் பேர்வழி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் மணல் எடுக்க அரசிடம் அனுமதிகேட்டுப் போன செங்கல்சூளை உரிமையாளர்களை, ரத்தினத்தைப் பாருங்கள் என அதிகாரிகளே சொல்லும் அளவுக்கு அவர்களை ரத்தினம் வளைத்துப்போட்டிருந்தார்.

p16a.jpgசேகர் ரெட்டியின் வீட்டில் ரெய்டு நடந்த அன்றே, மணல் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதை முதலில் ராமச்சந்திரன் தரப்பு மறுத்தது. ஆனால், வருமானவரித் துறை இப்போது அவரைக் கைது செய்துள்ளது.

2001-2006 காலகட்டத்தில்  எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயபாஸ்கர், அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காததால், குவாரி பிசினஸில் கவனம் செலுத்தினார். அப்படித்தான் மணல் ராமச்சந்திரனுடன் நெருக்கம் அதிகமானது. இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் குவாரி தொழிலில் விஜயபாஸ்கர் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பணிகளுக்கு விஜயபாஸ்கருக்கு சொந்தமான ராசி புளு மெட்டல்ஸ், ரெடி மிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்துதான் பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இதனால் அரசின் மொத்தப் பணமும் அப்படியே விஜயபாஸ்கருக்குச் சென்றுவிடுகிறது. சேகர் ரெட்டியோடு இணைந்து ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மெடிக்கல் கல்லூரி நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது. ராமச்சந்திரனும் வெளிமாநிலங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான பலரும் கைதாகி உள்ள நிலையில், விசாரணை வளையத்தில் விஜயபாஸ்கரும் சிக்குவார் என்கிற பேச்சு புதுக்கோட்டையில் பலமாக  ஒலிக்கிறது.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

‘அளக்கும்’ ரத்தினம்! - நெட்வொர்க் - 7

 

 

ராம மோகன ராவ் நெட்வொர்க்கின் முக்கிய புள்ளி ‘திண்டுக்கல்’ ரத்தினம். சேகர் ரெட்டி, ராமசந்திரன், திண்டுக்கல் ரத்தினம் அடங்கிய  மூவர் கூட்டணிதான், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் மணல் அள்ளி வியாபாரம் செய்துவருகிறது. தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மாதம்தோறும் இவர்கள் கொடுக்கும் மாமூல் தொகையே நூறு கோடிகளைத் தாண்டுமாம்.  

p18aa.jpg

‘திண்டுக்கல்’ ரத்தினம் என்று அழைக்கப்பட்டாலும், ரத்தினத்தின் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம். சர்வேயர் ரத்தினம் என்றால்தான் திண்டுக்கலில் இவரைத் தெரியும். தொழிலதிபர், கல்வித் தந்தை என பல பெயர்களில் அழைக்கப்படும் ரத்தினம், நில அளவைத் துறையில் உதவியாளர் பணியில் இருந்தவர். 1999-ம் ஆண்டு, வீடு கட்டுவதற்காக இரண்டு லட்ச ரூபாய் ஹவுசிங் லோன் கேட்டு விண்ணப்பித்தார். ‘போதிய சம்பளம் இல்லை’ என்ற காரணத்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த ரத்தினம் சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டிய ஆடம்பர பங்களாவின் கிரகப் பிரவேசத்துக்காகப் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கான செலவு மட்டுமே பல லட்சம் ரூபாய்.

சர்வேயர் பணியில் இருந்தபோதே, தனது மனைவி பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார்.  ஒரு கட்டத்தில், அரசுப் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, முழுமையாக ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். அப்போது, மணல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த படிக்காசுவின் நட்பு கிடைத்தது. ரத்தினத்தின் சுறுசுறுப்பைப் பார்த்த படிக்காசு, மணல் எடுக்க சப்கான்ட்ராக்ட் கொடுத்தார். மணல் பிசினஸ் மற்றும் தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனுடன் ஏற்பட்ட நட்பு என இவரை பல வி.ஐ.பி-க்களோடு நெருக்கமாக்கியது. ரத்தினத்தின் வருமானமும் பல மடங்கு அதிகமானது.

p18a.jpg இந்த நிலையில், புதுக்கோட்டை ராமச்சந்திரன் மூலமாக சேகர் ரெட்டியிடம் அறிமுகம் கிடைத்தது. ஒருபக்கம் வருமானம் கொட்டிக்கொண்டே இருக்க... சேம்பர், டயர் டீலர், ஹோட்டல், கல்லூரி என முதலீடு செய்துகொண்டே இருந்தார். தொழில் அதிபர், கொடைவள்ளல் என வி.வி.ஐ.பி-யாக மாறினார்.

 திண்டுக்கல் அய்யலூரில் உள்ளது வண்டி கருப்பணசாமி கோயில். இங்கு ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, தனக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான லாரிகளை நிறுத்தி வைத்து, பூஜை செய்து 500  ஆடுகள் வெட்டி விருந்துவைப்பார் ரத்தினம். பிரமாண்டமான இந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட திண்டுக்கல் வி.ஐ.பி-க்கள் அனைவரும் ஆஜராவது வழக்கம்.

 2006 தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்துள்ள ரத்தினத்தின் வருவாய் மலைக்க வைக்கிறது. ரத்தினம் தற்போது திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியின் முதன்மை செயல் அலுவலராக இருக்கிறார். திண்டுக்கல், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாக்கள் உள்ளன. திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் ‘ரத்ன விலாஸ்’ என்ற பெயரில் உணவகம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழாவுக்கான விளம்பரங்களின் செலவு மட்டுமே வாய் பிளக்க வைக்கிறது. திருச்சி சாலையில், செல்வி சேம்பர்ஸ், செல்வி டயர்ஸ் அலுவலகம், ரவுண்ட் ரோடு அருகே தரணி குழும நிர்வாக அலுவலகம், தாடிக்கொம்பில் நவீன இயந்திரங்களைக் கொண்ட சேம்பர் தொழிற்சாலை, கரூர் சாலையில் உள்ள குடோன் என தமிழகம் முழுக்க ரத்தினத்துக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. 

p18.jpg

ரத்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தரப்பில் பேசியவர்கள், ‘‘ரியல் எஸ்டேட் தொழில் செய்தபோது, ரத்தினம் வாங்கிப்போட்ட இடங்கள் எல்லாம் நல்ல விலைக்கு விற்பனை ஆகின. பிறகு, மணல் வியாபாரத்தில் கிடைத்த வருமானத்தைக்கொண்டு பிரிக்ஸ் கம்பெனி, உணவகம், கல்லூரி என முதலீடு செய்தார். அதன் பிறகுதான் புதுக்கோட்டை ராமச்சந்திரன் மூலமாக சேகர் ரெட்டியுடன் எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தார். மற்றபடி வருமானத்துக்கு முறையாக வரி கட்டி வருகிறார் ரத்தினம்’’ என்றார்கள்.

சேகர் ரெட்டி மூலமாக மாற்றப்பட்ட பழைய நோட்டுகளில் சில கோடிகள், திண்டுக்கல் வங்கிகளிலும் மாற்றப்பட்டுள்ளன என்பதை சீரியல் நம்பர் அடிப்படையில் கண்டுபிடித்து உள்ளார்களாம். விரைவில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. ரத்தினம் கைது செய்யப்பட்டு உள்ளதால் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் பலரும் பீதியில் உறைந்துள்ளனர்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.