Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தருணங்கள் 2016

Featured Replies

தருணங்கள் 2016

 

 
Desktop_3111193f.jpg
 
 
 

2016-ன் தருணங்கள் இவை. உலகெங்கும் இந்த ஆண்டில் எவ்வளவோ நடந்திருக்கின்றன என்றாலும், வழக்கம்போல இந்தியப் பார்வையில் நம்மை அதிகம் கவனிக்கவைத்த, கலங்கவைத்த, நெகிழவைத்த மிகச் சில தருணங்களை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம். 2015 தருணங்களில், ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும் நடத்தும் பயங்கர மோதல்களின் இடையில், சாமானிய மக்களின் வாழ்க்கை எப்படி சிக்கிச் சின்னாபின்னமாகின்றன என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். 2016-ல் கூடவே, வலதுசாரி எழுச்சியும் அவற்றுடன் சேர்ந்திருக்கிறது. சாமானிய மக்கள் இந்தப் பூவுலகை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், 2017-ல் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கின்றன. பொறுப்புணர்வுடன் புத்தாண்டை வரவேற்போம்!

அமைதி... அமைதி!

peace_3111201a.jpg

கொலம்பியாவில் ஃபார்க் எனும் கெரில்லா கிளர்ச்சிப் படையினருக்கும் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அரை நூற்றாண்டாக நடந்துவந்த மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரு தரப்புக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அக்டோபர் 2-ல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு தோல்வியடைந்தது.

எனினும், இந்த முயற்சியில் தளராது ஈடுபட்ட கொலம்பிய அதிபர் யுவான் மானுவெலுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 7-ல் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் நவம்பர் 24-ல் இரு தரப்புக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று.

 

மையத் தலைவர் ஜின்பிங்!

xi_3111195a.jpg

உலகின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான சீன அதிபர் பதவியில் தற்போது இருக்கும் ஜி ஜின்பிங், அவருக்கு முந்தைய தலைவரைக் காட்டிலும் கூடுதலான அதிகாரங்கள் கொண்டவராக உருவெடுத்தார். சீனப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய மாவோ, சீனத்தின் பொருளாதாரக் கொள்கைகளைத் தலைகீழாக மாற்றிய டெங்சியாவோ பிங் ஆகியோருக்கு நிகரான அதிகாரக் குவிப்பின் மூலமாக ‘நிகரில்லாத் தலைவர்’ ஆகியிருக்கிறார் ஜின்பிங்.

 

குலுங்கியது பிரேசில்!

brazil_3111205a.jpg

பிரேசிலில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 21 வரை நடந்தன 31-வது ஒலிம்பிக் போட்டிகள். 205 நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டிகளில் 46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என்று மொத்தம் 121 பதக்கங்களை வென்று முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது அமெரிக்கா. பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை வென்றன. முன்னதாக, உள்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் நிலவும் சூழலில், இப்படி ஒரு பிரம்மாண்ட செலவில் போட்டிகளை பிரேசில் நடத்துவதைக் கண்டித்துப் பல்வேறு தரப்புகளின் போராட்டங்களையும் எதிர்கொண்டது அரசு.

போலீஸாருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் முறையாகச் சம்பளம் வழங்கப்படாதது பெரிய பிரச்சினை ஆனது. ‘எங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை’ எனும் பதாகையுடன் விமான நிலையத்தில் போலீஸார் நின்ற படம் உலக அளவில் கவனிக்கப்பட்டது!

 

அமலுக்கு வந்த அணு ஒப்பந்தம்!

nuclear_3111202a.jpg

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடைசெய்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஈரான் அணு ஒப்பந்தம் 2015-ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கையெழுத்தாகியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை என்று ஈரானும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்வது என்று ஆறு வல்லரசு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. இவை 2016-ல் செயல்பாட்டுக்கு வந்தது, மத்தியக் கிழக்கில் ஒரு முக்கியமான திருப்பம்!

 

புனிதர் அன்னை தெரசா!

punidhar_3111200a.jpg

தொண்டின் உருவமாக இந்தியாவில் வாழ்ந்தவர் அன்னை தெரசா. ரோமன் கத்தோலிக்க மதத்தின் துறவியாக கல்கத்தா வந்த அவர், நோயாளிகள், பசியால் வாடுவோர்களின் துன்பத்தைப் போக்குவதை முதல் கடமையாகக் கொண்டார். 1997-ல் மறைந்த அன்னையின் அற்புதங்களை அங்கீகரித்து, செப்டம்பர் 4-ல் அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்கியது வாடிகன்.

 

பிரெக்ஸிட் பிரளயம்!

brexit_3111204a.jpg

ஐரோப்பிய ஒன்றியத்தின் நலிவடைந்த நாடுகளுக்கான சுமையையும் பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்க வேண்டிய நிலை இருப்பதால், அந்த அமைப்பிலிருந்தே பிரிட்டன் விலக வேண்டும் என்ற கருத்து உருவாகத் தொடங்கியது. நைஜல் ஃபராஜ், போரிஸ் ஜான்சன் போன்ற தலைவர்கள் இதை வலியுறுத்த, விலகக் கூடாது என்றனர் பிரிட்டனின் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன், எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உள்ளிட்ட மற்றொரு தரப்பினர். ஜூன் 23-ல் நடந்த பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்பில் 52% பேர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகலாம் என்று வாக்களித்தது உலகெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

 

ட்ரம்ப்பெட் முழக்கம்!

trump_3111197a.jpg

உலகமே அதிர்ச்சியுடன் பார்த்த ஒரு சம்பவம், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றியடைந்ததுதான். குடியேறிகள் - சிறுபான்மையினருக்கு எதிரானவர், பெண்களை அவமதிப்பவர், பிற்போக்குத்தனமானவர் என்று எக்கச்சக்கக் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் மீதும் அமெரிக்கர்களிடம் பெரிய நம்பிக்கை இல்லை. எனினும், தேர்தல் விவாதங்களில் ஹிலாரியின் குரல்தான் எடுபட்டது.

‘தோற்றால் தேர்தல் முடிவை ஏற்க மாட்டேன்’ என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ட்ரம்ப். ஆனால், நவம்பர் 8-ல் அமெரிக்காவுக்கு மட்டும் அல்லாது ஒட்டுமொத்த உலகுக்கும் அதிர்ச்சி கொடுத்தார் ட்ரம்ப். அவரது வெற்றியை ஏற்க மறுத்து அமெரிக்காவின் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர். மூன்று மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கைகூட நடத்தப்பட்டது. டிசம்பர் 20-ல் இறுதியாக வெளியான மக்கள் நேரடி வாக்குகளின் எண்ணிக்கையில், ஹிலாரிக்குத்தான் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தன. எனினும், எலெக்டோரல் காலேஜின் முடிவின்படி ட்ரம்ப்தான் வெற்றியாளர். தன்னுடைய வெற்றியோடு உலகெங்கும் வலதுசாரிகளின் எழுச்சிக்கும் ஒருவகையில் அடிகோலியிருக்கிறார் ட்ரம்ப்!

 

மறக்க முடியுமா அலெப்போ!

 

aleppo_3111206a.jpg

ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருந்த பகுதிகளை மீட்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு அதிகரித்தன. இராக்கின் மொசூல் நகரை மீட்பதற்கான நடவடிக்கையின்போது ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதேபோல், சிரியாவின் அலெப்போ நகரைக் கைப்பற்ற சிரியா ராணுவம் எடுத்த நடவடிக்கையின்போதும் கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டன. சமூக வலைதளங்களில் தங்களது பரிதாப நிலையை அலெப்போவாசிகள் வெளிப்படுத்தியபோது, உலகம் கலங்கி நின்றது. இதற்கிடையே துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த புகைப்படக் கண்காட்சியின்போது ரஷ்யத் தூதர் ஆண்ட்ரே கார்லோவை, போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொன்றார் (சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா இந்தப் போரில் ஈடுபட்டிருக்கிறது). ‘அலெப்போவை மறக்காதீர்கள், சிரியாவை மறக்காதீர்கள்’ என்று அந்த போலீஸ்காரர் முழங்கிய கோஷம் உலகை அதிர வைத்தது.

 

விதைக்கப்பட்ட புரட்சி!

castro_3111203a.jpg

முதலாளித்துவத் தலைமையின் மூக்கிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் வாழ்ந்தவர் கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. ரஷ்யாவிலும் சீனாவிலும் பறந்த சிவப்பை கியூபாவிலும் தவழவிட்டவர். அமெரிக்க உளவுத் துறையின் 634 கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்தவர் எனும் ஒரு வரித் தகவல், ஃபிடலின் போராட்ட வாழ்க்கையைச் சட்டெனச் சொல்லிவிடும். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கியூபாவைக் கல்வியிலும், மருத்துவத்திலும் உலகுக்கே முன்னுதாரணமாக மாற்றிக்காட்டியவர் ஃபிடல். 2008-ல் தனது தம்பியிடம் ஆட்சியை ஒப்படைத்து ஓய்வுபெற்ற ஃபிடல், தன்னுடைய 90-வது வயதில் நவம்பர் 25-ல் காலமானார். அவரது புரட்சிப் படை தொடங்கிய மலைத் தொடர்களில் அவரது சாம்பல் காற்றில் தூவப்பட்டது. அவரது பெயரை எந்தத் தெருவுக்கும் வைக்கக் கூடாது என்று சட்டம் போட்டுவிட்டது அரசு. அது அவரது இறுதி ஆசை!

 

அபாயம் ஜிகா!

ziga_3111194a.jpg

கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் ‘ஜிகா’ வைரஸ், கருவில் இருக்கும் சிசுவின் மூளையைப் பாதிக்கக்கூடியது. டெங்கு, சிக்குன் குனியாவைப் போலவே, ஜிகா கிருமியும், ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மூலம் பரவக் கூடியது. 1947-ல் உகாண்டாவின் குரங்குகளில் காணப்பட்ட ‘ஜிகா’ வைரஸ், 10 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க நாடுகளில் தலைகாட்டியது. 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரேசில் நாட்டில் சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்த 4,000-க்கும் மேலான குழந்தைகள் ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பின் விளைவாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். அமெரிக்காவில் 40 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டது. இது உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. அதனால் பிப்ரவரி 2-ல் உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச நெருக்கடிநிலை’யை அறிவித்தது. நவம்பர் மாதத்துக்குப் பிறகு அதை ரத்து செய்தது

 

சூரியனோடு ஒரு விமானப் பயணம்!

solar_3111199a.jpg

பெட்ரோலே இல்லாமல் உலகத்தைச் சுற்றியது ஒரு விமானம். ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற பெயர் கொண்ட அந்த விமானத்தின் இறக்கைகள் முழுவதும் 17,000 பேட்டரிகள். சூரிய சக்தியால் இயங்கும் பேட்டரிகளை நம்பி மார்ச் 9 அன்று அபுதாபியிலிருந்து வானில் ஏறியது விமானம். சுவிட்சர்லாந்து விமானப் படையின் முன்னாள் விமானி ஆண்ட்ரி போர்ஸ்பெர்க்கும் அவர் நண்பர் பெர்ட்னட் பிகார்ட்டும் இந்த விமானத்தில் பயணித்தார்கள். மத்தியக் கிழக்கு நாடுகள் தொடங்கி, ஆசியா, அமெரிக்கா, பசிபிக் நாடுகள் என 17 இடங்களில் மட்டுமே நின்றது விமானம். இரவில் தாழ்வாகவும் பகலில் உயரமாகவும் பறந்து சிக்கனத்தைக் கடைப்பிடித்த விமானி, நீண்ட கடல்களைக் கடந்தபோது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டோம் என்றார். 23 நாட்களில் 43,041 கிலோ மீட்டர்கள் பறந்தார்கள். சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதே பயணத்தின் நோக்கம். மனித இனத்தின் வரலாற்றில் இது ஒரு சாதனை என்று பாராட்டியது ஐநா!

 

பிரபஞ்சத்தின் ஒலி!

sound_3111198a.jpg

130 கோடி வருடங்களுக்கு முன்பாக, சூரியனைப் போல 29 மற்றும் 36 மடங்கு நிறை கொண்ட இரண்டு ராட்சதக் கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டே மோதிப் பிணைந்தன. அப்போது ஏற்பட்ட ஈர்ப்பு அலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது, இந்த ஆண்டின் மிக முக்கியமான அறிவியல் சாதனை. 15 நாடுகளைச் சேர்ந்த 83 நிறுவனங்களில் பணியாற்றும் 1,006 விஞ்ஞானிகளால் 1997 முதல் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தின் ‘சென்னை கணிதவியல் நிறுவனம்’அதில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்பே விஞ்ஞானி ஐன்ஸ்டைன் ஈர்ப்பு அலைகள் உண்டு என்று கணித்தார். அவரது கணிப்பை உறுதிசெய்தது இந்தக் கண்டுபிடிப்பு. பிரபஞ்சத்தை ஆராய விஞ்ஞானிகள் பயன்படுத்தும் கருவிகளில் மூத்தது ஒளி. அதன்பிறகு, ரேடியோ அலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஈர்ப்பு அலைகளுக்குள்ளும் நிறைய பிரபஞ்சத் தகவல்கள் பொதிந்துள்ளன. அவற்றையும் ஆய்வுக் கருவிகளாகப் பயன்படுத்தலாம். அவை மேலும் புதுப் புது ரகசியங்களை வெளிப்படுத்தும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

http://tamil.thehindu.com/world/தருணங்கள்-2016/article9452731.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

2016 ஆம் ஆண்டில் உலகம் கண்டவை: ஒரு மீள் பார்வை

 

2016 ஆம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

கோல்டன் குளோப் விருதுகளை அள்ளிய 'தி ரெவனன்ட்' மற்றும் 'தி மார்ஷியன்'

சிறந்த திரைப்படங்கள் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்கு வழங்கப்படும் விருது கோல்டன் குளோப். நாடக பிரிவில் 'தி ரெவனன்ட்' திரைப்படத்திற்கும், இசை அல்லது நகைச்சுவை பிரிவில் 'தி மார்ஷியன்' திரைப்படத்திற்கும் இந்த ஆண்டின் 73வது கோல்டன் குலோப் விருதுகள் வழங்கப்பட்டன. நாடக பிரிவில் சிறந்த நடிகராக லியனார்டோ டிகாப்ரியோவும், நடிகையாக பிரி லார்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள். இசை அல்லது நகைச்சுவை பிரிவில் சிறந்த நடிகராக மேட் டாமனும், நடிகையாக ஜெனிஃப்பெர் லாரன்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதேபோல், ஆண்டுத்தோறும் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படமாக ஸ்பாட் லைட் திரைப்படமும், சிறந்த நடிகராக லியனார்டோ டிகாப்ரியோவும், சிறந்த நடிகையாக பிரி லார்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோல்டன் குளோப் விருதுகளை அள்ளிய 'தி ரெவனன்ட்' மற்றும் 'தி மார்ஷியன்'
 

ஸீகா வைரஸ் : குழந்தை பெற்றெடுக்க 2 ஆண்டுகள் வரை ஒத்திவைக்க பரிந்துரை

பிரேசில் நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸீகா வைரஸ் திடீரென பரவியது. இதன் காரணமாக, கொலம்பியா, எக்வடார், எல் சால்வடோர் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில் குழந்தைகள் பெற்றெடுப்பதை 2 ஆண்டுகள் வரை ஒத்திவைக்க அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஏடிஸ் என்கிற கொசுக் கடியால் பரவும் இது, குழந்தைகள் பாதிப்புடன் பிறப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பிறக்கும் குழந்தைகளின் மூளையில் மிகவும் அரிதான மூளை பாதிப்பை இந்த ஸீகா வைரஸ் ஏற்படுத்துகிறது.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

"பிறவிக் குறைபாட்டுக்கு காரணமான வைரஸ் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் பரவக்கூடும்"

சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா ஏவுகணை சோதனை

நீண்ட தூரம் செல்லும் ராக்கெட் ஒன்றை விண்வெளியில் வட கொரியா ஏவி, ஐ.நா சபையின் பல ஒப்பந்தங்களை மீறியது மட்டுமின்றி உலக நாடுகளின் கண்டனங்களுக்கும் உள்ளானது. இதற்கு முன்னர், ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டதாக வட கொரியா தெரிவித்திருந்தது. தொடர் ஏவுகணை சோதனைகளால் சர்ச்சையில் சிக்கிய வட கொரியா மீது அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐ.நா சபை பல பொருளாதார தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

  2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை (காணொளி)

1000 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்த கிறிஸ்துவ மதம்

கிறிஸ்துவர்கள் இடையேயான ஒற்றுமையை மீண்டும் சீரமைக்கும் நோக்கில் போப் பிரான்சிஸ் மற்றும் ரஷ்ய மரபு வழி முதுபெரும் தலைவருமான கிர்ரியல் இரு திருச்சபைகள் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தையை கியூபாவில் நடத்தினர். 11 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கிளைகள் தனித்தனியாக பிரிந்து சென்றதிலிருந்து போப் மற்றும் ரஷ்ய திருச்சபைகளின் தலைவர் இடையே நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

75 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் முதல் இடத்தில் பில் கேட்ஸ்

2016 ஆம் ஆண்டிற்கான உலகில் உள்ள பில்லியனர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் 75 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் பில் கேட்ஸ் முதல் இடத்தை வகிக்கிறார். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் 44.6 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் ஆறாம் இடத்தை பெற்றுள்ளார். 19.8 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி 36வது இடத்தையும், 16.7 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் திலீப் சங்வி 44வது இடத்தையும் பிடித்துள்ளனர். உலகில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 1,810 ஆக குறைந்துள்ளதை ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

 

உலகின் 3-வது பெரும் பணக்காரர் அமேஸான் தலைவர்

விண்வெளியில் 340 நாட்கள் : சாதனை படைத்த அமெரிக்க, ரஷ்ய விண்வெளி வீரர்கள்

அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் மிகாய்ல் கொர்னியன்கோவும் தங்களுடைய 340 நாள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். சாதாரணமாக விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்குத்தான் ஒருவர் தங்கவைக்கப்படுவர். ஆனால், புவியீர்ப்பு விசையின் தாக்கம் குறைவதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக இவர்கள் அதிக காலம் தங்கவைக்கப்படுகின்றனர். செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான தகவல் சேகரிப்புக்காக நாஸா இந்த சோதனையை நடத்தியது.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

விண்வெளி நிலையத்தில் ஓராண்டு தங்கபோகும் இருவர்: நாஸா சோதனை

90 ஆண்டுகளுக்குப்பிறகு கியூபா மண்ணில் அமெரிக்க அதிபர்

அமெரிக்கா மற்றும் கியூபா வரலாற்றில் இந்நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கியூபா சென்றார். 1959 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியை தொடர்ந்து, அமெரிக்கா - கியூபா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இச்சூழலில், கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டார் ஒபாமா. 90 ஆண்டுகள் கழித்து கியூபாவிற்கு வருகைததரும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றார். ஹவானாவில் திறக்கப்பட்ட புதிய அமெரிக்க தூதரகத்தில் உரையாற்றிய அவர் இந்த விஜயம் ஒரு சரித்திரம் வாய்ந்தது என்று குறிப்பிட்டு பேசினார்.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

'ராவூலுடனான சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் மிக்கது' - ஒபாமா

கசிந்த 11.5 மில்லியன் ரகசிய ஆவணங்கள் ; கிடுகிடுக்க வைக்கும் பனாமா முறைகேடு

உலகின் அதிகாரமிக்க செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை வரி ஏய்ப்பு செய்து பதுக்க தேர்ந்தெடுத்த நிறுவனம்தான் பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனம் மொஸாக் ஃபொன்செக. இந்த நிறுவனம் வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறது என்ற விவரம் கசிந்துள்ளது. இந்நிறுவனத்தின் சுமார் 11.5 மில்லியன் ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்களை 78 நாடுகளில் 107 ஊடக நிறுவனங்கள் ஆராய்ந்து செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் அமிதாப்பச்சன் முதல் ரஷ்ய அதிபர் புதின் வரை, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இதில் விவகாரத்தில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

  2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

ஆவணங்கள் கசிந்ததது எப்படி?: சிறப்புக் குழு அமைக்கிறது பனாமா

லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான்

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயர் சாதிக் கான். தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் 56.8 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தன் வெற்றி குறித்து பேசிய சாதிக் கான், "அச்சுறுத்தும் அரசியலை" வாக்காளர்கள் புறக்கணித்திருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும், லண்டன் மாநகரம் தனக்கு அளித்த அனைத்து வாய்ப்புகளையும் லண்டன் குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே தமது குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

 

லண்டன் மாநகர மேயரானார் சாதிக் கான்

தாலிபன் தலைவரை ஆளில்லா விமானம் மூலம் வீழ்த்திய அமெரிக்கா

பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத குழுவான தாலிபன் அமைப்பின் தலைவர் முல்லா அக்தர் முகமது மன்சூர். ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை உறுதி செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தாலிபன்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

அடுத்த தலைவர் குறித்து தாலிபான்கள் விவாதம் ?

கடலில் விழுந்து நொறுங்கிய எகிப்து விமானம்; தொடரும் மர்மம்

ஈஜிப்ட் ஏர் என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான எம் எஸ் 804 என்ற விமானம் பாரிஸிலிருந்து கெய்ரோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மத்திய தரைக்கடல் மீது பறந்து கொண்டிருந்த போது நடுவானிலே ரேடாரின் பார்வையிலிருந்து விலகிப்போனது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என மொத்தம் 69 பேர் அதில் பயணம் மேற்கொண்டிருந்தனர். விமானம் கடலில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. யாரும் உயிர்பிழைக்கவில்லை. உயிரிழந்த பயணிகளின் உடல்களில் வெடி பொருட்களின் தடயங்கள் இருந்ததாக எகிப்து விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் அறிவித்து விசாரணையை நடத்தி வருகிறது.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

 

ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ள எகிப்து விமானம்

கொத்து கொத்தாக மத்திய தரைக்கடலில் மடிந்த குடியேறிகள்

இந்தாண்டு குடியேறிகளுக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த நாடுகளிலிருந்து வெளியேறி தஞ்சம் பெறுவதற்காக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர். அவ்வாறு மே 23 லிருந்து 29 வரை ஒருவாரத்தில் மட்டும் குடியேறிகளை சுமந்து சென்ற மூன்று கப்பல்கள் மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில், மட்டும் சுமார் 700 மூழ்கி உயிரிழந்ததாக மீட்புதவி பணியாளர்கள் கூறுகின்றனர். குடியேறிகளின் இந்த ஆபத்தான கடல் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்  

ஐரோப்பாவை அடையும் முயற்சியில் 700க்கும் மேற்பட்ட குடியேறிகள் உயிரிழப்பு

குத்துச்சண்டை உலகின் ஜாம்பவான் முகமது அலி மறைவு

சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் தனி முத்திரை பதித்து, ஜாம்பவானாக விளங்கியவர் முகமது அலி. அவர் தன்னுடைய 74 வது வயதில் காலமானார். அதிக எடைப்பிரிவில் மூன்று முறை உலகப்பட்டங்களை வென்றுள்ள முகமது அலி சுவாச பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1964 ஆம் ஆண்டில் தன்னுடைய முதல் உலக பட்டத்தை வென்றவுடன் இஸ்லாத்திற்கு மதம் மாறினார். அவருடைய இயற் பெயர் காசியஸ் க்ளே. முகமது அலியின் மறைவிற்கு உலகத்தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். முகமது அலி பிறந்த ஊரான லூயிஸ்வில்லில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானார்

அமெரிக்காவில் ஒருபாலுறவுக்காரர்கள் விடுதியில் 49 பேர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பல்ஸ் என்ற ஒருபாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் ஒமர் மடீன் என்ற 29 வயது இளைஞர்அதிகாலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 53 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டையும் நடத்திவிட்டு அதுகுறித்த தகவல்களையும் பதற்றமின்றி தொலைபேசி மூலம் போலிசாருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் உமர் மடீன். நவீன அமெரிக்க வரலாற்றில் ஓர்லாண்டோ துப்பாக்கிச்சூடு ஒரு மோசமான படுகொலை சம்பவமாகும். ஐ.எஸ் அமைப்பினரின் விசுவாசியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் ஒமர் மடீன்.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

துப்பாக்கிச்சூடு குறித்து போலிசுக்கு அமைதியாகவும், பதட்டமின்றியும் தகவல் கொடுத்த ஒமர் மடீன்

கொலம்பியாவில் 50 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டு வந்த ஒப்பந்தம்

கொலம்பியாவில் கடந்த 52 ஆண்டுகளாக ஃபார்க் போராளிகள் மற்றும் அரசாங்கம் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு மோதல் ஒரு சமாதான அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில், ஃபார்க் போராளி குழுவின் தலைவர் டிமோலியோன் ஜிம்மேனேஸ் மற்றும் கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டிருந்தனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் கொலம்பிய மக்கள் இதனை நிராகரித்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் ஒன்றில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

 

கொலம்பியா அரசுக்கும், ஃபார்க் போராளிகளுக்கும் இடையே இணக்கப்பாடு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஐக்கிய ராஜ்ஜியம்

28 நாடுகள் உறுப்பினராக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா அல்லது தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய ஐக்கிய ராஜ்ஜியத்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டன் வெளியேறக் கூடாது என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். வாக்கெடுப்பின் இறுதியில் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவாக மக்கள் அதிகளவில் வாக்களித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெறியேறுவதற்கான நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்?: ஜூன் 23-ம் தேதி வாக்கெடுப்பு

தடையை நீக்கியது அமெரிக்கா; ராணுவத்தில் திருநங்கைகளுக்கு பணி

உலகிலே மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள அமெரிக்கா, தனது ராணுவத்தில் திருநங்கைகளை பணியமர்த்துவதிலிருந்த தடையை நீக்கியது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஆஷ் கார்டர், ராணுவ தலைமையகமான பென்டகன் விதித்திருந்த தடை உத்தரவை நீக்கினார். இந்த விதிமுறை காலாவதி ஆகிவிட்டதாகவும், ராணுவத்திற்கு தீங்கிழைப்பதாகவும் ஆஷ் கார்டர் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த தடை நீக்க உத்தரவு திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடும் பிரசாரகர்களால் வரவேற்கப்பட்டது.

தடையை நீக்கியது அமெரிக்கா; ராணுவத்தில் திருநங்கைகளுக்கு பணி

 

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கான தடை நீங்குகிறது

போக்கிமான் கோ உலகளவில் வெளியான தினம்

இந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட் ஃபோன் விளையாட்டுகளிலேயே மிகவும் பிரபலமானது இந்த போக்கிமான் கோ விளையாட்டு. நின்டெண்டோ மற்றும் நியான்டிக் நிறுவனங்கள் இணைந்து இதனை வெளியிட்டன. இளம் பருவத்தினரிடையே மிகவும் வேகமாக பரவிய இந்த விளையாட்டு நின்டெண்டோ நிறுவனத்திற்கு பல பில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக குவித்தது. இந்த விளையாட்டில் ஜி.பி.எஸ் மூலம் போக்கிமான் இடத்தைக் கண்டுபிடித்து, அதை பயிற்றுவித்து, சண்டையில் ஈடுபடுத்த முடியும். பல இளைஞர்களை அடிமைப்படுத்தியதோடு மட்டுமின்றி இந்த விளையாட்டு காரணமாக பலர் காயமடைந்தனர்.

  2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

சர்ச்சையில் சிக்கி இருக்கும் போக்கிமான் விளையாட்டு: பிபிசி கிளிக் காணொளி

http://www.bbc.com/tamil/global-38467358

  • தொடங்கியவர்

முஸ்லிம் பெண்களின் நீச்சல் உடைக்குத் தடை முதல், தலை குனிந்த பெண் அதிபர் வரை - ஓர் உலகப் பார்வை

  •  

2016 ஆம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். ஒவ்வொரு செய்திக்கும் அந்த செய்தியின் முழு தகவலை தெரிந்து கொள்ளும் விதமாக அந்த செய்தியுடன் அதுகுறித்த கட்டுரைக்கான லிங்கையும் இணைந்துள்ளோம்.

உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் முதல் தொகுப்பு 2016 ஆம் ஆண்டில் உலகம் கண்டவை: ஒரு மீள் பார்வை

பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மே பதவியேற்பு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல வேண்டுமா அல்லது வேண்டாமா என்று மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 50 சதவிகிததற்கு அதிகமானோர் பிரிந்து செல்ல வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். வாக்கெடுப்பை தொடர்ந்து தனது பிரதமர் பதவியை டேவிட் கேமரன் ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக தெரீசா மே பதவியேற்று கொண்டார். ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார்.

 
  2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

இது குறித்து மேலும் படிக்க : பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார்

துருக்கியில் அட்சிக்கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்ட நாள்

துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் திடீரென துருக்கியின் நாடாளுமன்ற கட்டடத்தில் டாங்கிகளாலும், விமானங்களாலும் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, நாட்டை ஒரு "அமைதிக் கவுன்சில்" நடத்துவதாகவும், நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மற்றும் ராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தனர். பின் தொலைக்காட்சி நேரலையில் பேசிய அதிபர் எர்துவான், பொதுமக்கள் சாலைகளில் வந்து போராடும்படி அழைப்பு விடுத்தார். இதன் காரணமாக, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியானது தோல்வியில் முடிந்தது. அமெரிக்காவில் வாழும் மத போதகர் ஃபேதுல்லா குலன் மீது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

இது குறித்து மேலும் படிக்க : துருக்கியில் ராணுவ அதிரடிப் புரட்சி முயற்சி

ஆகஸ்ட் - 5பிரேசிலின் மரக்கானா மைதானத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கின. 207 நாடுகளிலிருந்து 11,237 போட்டியாளர்கள் 306 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். பதக்கப்பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றனர். ஃபிஜி, ஜோர்டன் மற்றும் கொசோவா ஆகிய நாடுகள் முதல் முறையாக பதக்கம் வென்றன. தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே நான்கு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றும் 19 வயது சிமோன் பைல்ஸ் சாதனை புரிந்தார்.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

இது குறித்து மேலும் படிக்க : ரியோ ஒலிம்பிக்: ஒரு நுட்பமான அலசல்

ஆகஸ்ட் - 12முஸ்லிம் பெண்களின் முழு நீச்சல் உடைக்கு கேன்ஸ் நகரம் தடை

பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி கடற்கரையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்ஸில் உள்ள கேன் நகரம் தடைவிதித்தது உத்தரவிட்டது. கடற்கரைக்கு செல்பவர்கள், நல்லொழுக்க நெறிமுறைகள் மற்றும் மதச்சார்பின்மையை மதிக்க வேண்டும். பிரான்ஸ் மற்றும் அதன் மதம் சார்ந்த தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் வேளையில், மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் நீச்சல் உடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

இது குறித்து மேலும் படிக்க : முஸ்லிம் பெண்களின் நீச்சல் உடைக்கு கேன் நகரில் தடை

ஆகஸ்ட் - 24 மத்திய இத்தாலியை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம்

இத்தாலியின் மத்திய பகுதியில் 6.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 268 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 400 பேர் காயம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலிப் பிரதமர் மட்டையோ ரென்ஸி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோர்ட்ச்சா நகரமும் ஒன்று. இடைக்காலத்தை சேர்ந்த புனித பெனடிக்ட் பேராலயம் தரைமட்டமானது.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

 

இது குறித்து மேலும் படிக்க : இத்தாலி நிலநடுக்கம் ; மீள்கட்டமைப்புக்கு அவசர நிதி திரட்ட அமைச்சரவை கூட்டம்

ஆகஸ்ட் - 31 பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிரேசில் அதிபர் தில்மா ருசெஃப்

பிரேசிலில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் பற்றாக்குறையை மறைக்க பட்ஜெட்டில் மோசடி செய்ததாக அந்நாட்டு அதிபர் தில்மா ருசெஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த மே மாதம் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இச்சுழலில், பிரேசில் செனட்டில் தில்மா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மொத்த 81 உறுப்பினர்களில் 61 பேர் தில்மாவுக்கு எதிராக வாக்களித்து அவரை பதவிநீக்கம் செய்தனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை தில்மா திட்டவட்டமாக மறுத்து வந்தார்.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

இது குறித்து மேலும் படிக்க : பிரேசில் அதிபர் தில்மா ருசெஃப் பதவி நீக்கம்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முடிவு

செப்டம்பர் - 4 அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் சூட்டினார் போப் பிரான்சிஸ்

ரோமன் கத்தோலிக்க பெண் துறவியான அன்னை தெரஸாவை வத்திக்கானில் போப் ஃபிரான்சிஸ் புனிதராக பிரகடனப்படுத்திய தினம். இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள், 13 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். அல்பேனியாவை சேர்ந்த அன்னை தெரஸா 1997 ஆம் ஆண்டு இறந்தார். இந்தியாவின் தெருக்களில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மக்களை பராமரிப்பதற்காக அன்பின் மறைபரப்பு கன்னியர் சபையை அவர் நிறுவினார்.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

 

இது குறித்து மேலும் படிக்க : அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்: மக்கள் மகிழ்ச்சி

செப்டம்பர் - 7ஒலிம்பிக்ஸுக்கு இணையாக பாராலிம்பிக்ஸ் போட்டிகள்

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேசிலில் சிறப்பாக நடைபெற்றுள்ளன. 159க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 4,316 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். பாராலிம்பிக்ஸ் வரலாற்றிலே முதன் முறையாக அதிக பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 22 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீனா, பிரிட்டன், யுக்ரைன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பதக்கப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெற்றன.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் (இரண்டாம் தொகுப்பு)

செப்டம்பர் - 21 உலக மக்களுக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்த ஆய்வறிஞர்கள்

உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மக்களிடமிருந்து மரபணுத் தொகுதி சேகரிக்கப்பட்டு விரிசைப்படுத்தப்பட்டன. 40 ஆயிரம் ஆண்டிலிருந்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆஃப்ரிக்காவைவிட்டு வெளியேறிய ஒரு மக்கள் தொகையினருடன் இந்த மரபணுக்கள் ஒத்துப் போவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 'நேச்சர்' என்ற இயற்கை தொடர்பான இதழில் இரண்டு ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதே இதழில், மூன்றாவதாக வெளியான ஆய்வில், பப்புவா நியு கினியாவில் நடைபெற்ற குறைந்தது ஒரு முந்தைய ஆஃப்ரிக்க இடம்பெயர்வில் இருந்து எஞ்சி உயிர்ப்புடன் இருக்கும் மனித டி என் ஏவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

 

இது குறித்து மேலும் படிக்க : உலகில் உள்ள மக்களுக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் நெருங்கிய தொடர்பு: ஆய்வறிஞர்கள் கண்டுபிடிப்பு

செப்டம்பர் - 25 உலகிலே மிகப்பெரிய சீன தொலைநோக்கி செயல்படத் தொடங்கிய நாள்

சீனாவின் குவேஜோ மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியை சீனா முதல்முறையாக கவனிப்பாய்வு செய்த நாள். இந்த தொலைநோக்கி 500 மீட்டர் அளவு பரப்பளவு கொண்டது. பூமியிலிருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த தொலைநோக்கி தகவல்களை பெற்றுள்ளது. அண்டம் குறித்து விஞ்ஞானிகள் மேலும் புரிந்து கொள்வதற்கும், வேற்றுலக உயிர்கள் குறித்த புரிதலுக்கும் இந்த தொலைநோக்கி உதவியாக இருக்கும்.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

இது குறித்து மேலும் படிக்க : உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம்

ஹேய்ட்டியை புரட்டிப்போட்ட மேத்யூ சூறாவளி

அட்லாண்டிக் பகுதியில் சமீப ஆண்டுகளில் உருவான மிக சக்திவாய்ந்த சூறாவளி தான் மேத்யூ. வீரியம் குறையாத மேத்யூ ஜமைக்கா, ஹேய்ட்டி, கியூபா, பஹாமஸ் மற்றும் அமெரிக்கா என அது சென்ற பாதைகளில் மில்லியன் கணக்கான டாலர் சேதங்களை உருவாக்கியது. இதில், ஹேய்ட்டியானது மேத்யூ சூறவாளியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர் மழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களை குடிபெயர வைத்தது. ஹேய்ட்டியில் மட்டும் 800க்கும் அதிகமானோர் மேத்யூவால் கொல்லப்பட்டனர். அதனால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் ஆயிரத்தை தாண்டின.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

இது குறித்து மேலும் படிக்க : மேத்யூ சூறாவளியின் உக்கிரத்தை ஹேய்ட்டி தாங்குமா?

அக்டோபர் - 7 : 50 ஆண்டுகால போரை முடித்து வைத்த கொலம்பியா அதிபருக்கு நோபல் பரிசு

கொலம்பியாவில் 52 ஆண்டுகாலமாக ஃபார்க் போராளிகள் மற்றும் கொலம்பிய அரசாங்கம் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு மோதலை ஓர் சமாதான உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வந்ததற்காக அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக ஃபார்க் போராளிகளுடன் ( FARC- Revolutionary Armed Forces of Colombia) நடத்திய அமைதி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தத்திற்காக நார்வே நீதிபதிகள் அவரைப் பாராட்டினர். ஃபார்க் கிளர்ச்சியாளர்களோடு நிகழ்ந்த மோதல்களின்போது கொல்லப்பட்டோருக்கு இந்த நோபல் பரிசை யுவான் மானுவேல் சாண்டோஸ் அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

இது குறித்து மேலும் படிக்க : கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஆக்டோபர் - 13 இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு பாப் டிலனுக்கு

புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகரான, பாப் டிலன், இசையுலகில் பெரும் ஆளுமையாகத் திகழ்பவர். அவரது 'தெ டைம்ஸ், தே ஆர் எ சேஞ்சிங்' , ( The times, they are a changin') , 'ப்லோயிங் இன் தெ விண்ட்' ( Blowing in the Wind) போன்ற பாடல்கள் 1960களின் மிகப் பிரசித்தி பெற்ற பாடல்களாக ஒலித்தவை. அவை போருக்கெதிரான மற்றும் சிவில் உரிமைகள் இயக்கத்துக்கு ஆதரவான முழக்கமாகவும் ஒலித்தன. ''அமெரிக்க பாடல் பாரம்பரியத்துக்குள் புதிய கவித்துவ வடிவங்களை உருவாக்கியதற்காக'' அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

    2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

இது குறித்து மேலும் படிக்க : அமெரிக்க பாடகர் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

ஆக்டோபர் - 13உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் மரணம்

ஓர் இளைஞனுக்கே உரிய துடிப்புடன், புகைப்படக்கலை, விளையாட்டு, சாக்ஸபோன் இசைக்கருவிக்கேற்றவாரு பாடல் எழுதுதல், ஓவியம், எழுத்து என பல்வேறு கலைகளை ஆர்வமுடன் கற்றுக் கொண்டவர் தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட். தன்னுடைய 18 வயதில் தாய்லாந்து மன்னராக முடிசூடப்பட்டார். தனது ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான ராணுவ புரட்சிகளை சந்தித்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, உயர்ந்த தலைவராகப் போற்றப்பட்டவர்.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

 

இது குறித்து மேலும் படிக்க : தாய்லாந்து அரசர் பூமிபோன் - வாழ்க்கைக் குறிப்பு

நவம்பர் - 8 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலரியை வீழ்த்தினார் டொனால்ட் டிரம்ப்

நியு யார்க்கின் ரியல் எஸ்டேட் வணிகர் ஃப்ரெட் டிரம்ப்பின் நான்காவது மகன் டொனால்ட் டிரம்ப். பள்ளியில் தவறாக நடந்து கொண்டதால் 13வது வயதிலேயே ராணுவப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்பட்டார். அவர் தந்தை காலமானதை தொடர்ந்து, தனது குடும்ப வணிகத்தை லாபகரமாக பெருக்கி பல கட்டடங்களை கட்டினார். நெக் டைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விற்பனை வரை பல பொருட்கள் அவர் நடத்தும் பல நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டனை தோற்கடித்து அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள்

 

இது குறித்து மேலும் படிக்க : அமெரிக்க அதிபரான பெரு வணிகர்

நவம்பர் - 25 கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்த தினம்

1926 ஆம் ஆண்டு கியூபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறந்தார் காஸ்ட்ரோ. 1956 ஆம் ஆண்டு செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கொரில்லா போர்களை நடத்தினார். சர்வதேச அளவில், உலக மக்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவானஓர் உணர்வை உருவாக்கத் துணை நின்றவர் ஃபிடெல் காஸ்ட்ரோ. ஃபிடேல் காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ 638 முறை முயற்சித்து தோல்வியை தழுவியது. 2008 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக காஸ்ட்ரோ பதவி விலகினார். தன்னுடையை 90வது வயதில் ஃபிடெல் காலமானார்.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

இது குறித்து மேலும் படிக்க : கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்

டிசம்பர் - 9தென் கொரியா அதிபர் மீதான குற்ற விசாரணைக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

தன்னுடைய பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்யும் நோக்கத்தில், தென் கொரியாவில் அதிபர்கள் இரண்டாவது முறையாக அதிபர் பதவியை வகிக்க அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்தும் யோசனையை தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை முன்மொழிந்தார். சில நாட்கள் கழித்து, நாட்டின் உள்துறை விவகாரங்களில் தன்னுடைய நீண்டகால தோழியான சோய் சூன்-சில் அதிகாரம் செலுத்த அனுமதித்தை பார்க் குன் ஹை ஒப்புக் கொண்டார். அதிலிருந்து, அவருக்கு எதிராக தென் கொரியாவில் போராட்டங்கள் வெடித்தன. இச்சூழலில், அதிபர் மீது விசாரணை நடத்தி பதவியிறக்கும் நடைமுறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

இது குறித்து மேலும் படிக்க : தென் கொரியா: அதிபர் மீதான குற்ற விசாரணைக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

டிசம்பர் - 22சிரியாவில் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது

சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு சண்டை மூண்டு போராளி குழுக்கள் உருவாகின. இந்த போராளி குழுக்கள் பழம்பெரும் நகரமான அலெப்போவின் மையப்பகுதியை கைப்பற்றின. பின், உலக நாடுகளின் உதவியோடு இந்த பயங்கரவாத குழுக்களை ஒழித்துக்கட்ட சிரியா அரசாங்கம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்த போரில் சுமார் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக கணிக்கப்படுகிறது. இறுதியாக, போராளிகளின் கோட்டையாக கருதப்பட்ட அலெப்போ நகரை சிரியா அரசாங்கம் மீண்டும் கட்டுப்பாட்டில் எடுத்தது.

  2016 ஆம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்வுகள் 

இது குறித்து மேலும் படிக்க : சிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது

http://www.bbc.com/tamil/global-38477908

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.