சிலுவை இறக்கம்: துயரொழி காவியம்
சு. தவச்செல்வன் கதை வழிப் பயணம்
கருணாகரன்
பிரமாண்டமாகவே விரிந்திருக்கும் இயற்கையின் வினோதங்கள் எல்லையற்றவை. சொல்லி மாளாத அழகுடையவை. பார்த்துத் தீராத அழகொளிர் காட்சி அது. அப்படியான அழகிய – வசீகர இயற்கையின் பின்னணியில் அல்லது அவ்வாறான பேரெழில் இயற்கைக்குள், நாம் பார்த்துக் கொண்டிருக்கப் பகிரங்கமாகவே நிகழ்கின்றது இலங்கையில், மலையக மக்களின் நூற்றாண்டுகளாக நீளும் அவல வாழ்க்கை. இது நாம் பார்த்து வியக்கின்ற அழகுக்கு நேர் மாறான ஒன்று. இந்த மக்களுக்கான அபிவிருத்தி, மக்களின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எனச் சொல்லப்படும் திட்டங்கள், பெருந்தோட்டத்துறைக்கும் மக்களுக்குமான தனியான அமைச்சு, அந்த அமைச்சின் நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்புகள் எனப் பல இருந்தும் மக்களுடைய வாழ்க்கை நூறாண்டுகளாக ஒரே நிலையில்தான் உள்ளது. துயரமும் வலியும் அவலமும் வேதனையும் நிறைந்த இந்த வாழ்க்கையைப் பற்றி, அந்த விதியை மாற்றி எழுத வேண்டும் என்பதைப்பற்றி, நூற்றுக்கும் அதிகமானோரால் பல கோடி சொற்கள் எழுதியாயிற்று. இந்த வாழ்க்கையை மாற்றி எழுதுவதற்கென்று நடத்தப்பட்ட அரசியற் போராட்டங்களும் பல நூறுக்கும் மேலானவை. ஆனாலும், இந்த மக்களுடைய வாழ்க்கை விதி (அமைப்பு) மாறவே இல்லை. இந்த வேதனையும் துயரமும் வலியும் நூற்றாண்டுகளைக் கடந்தவை. அவற்றை ஏற்றுத்தான் அவர்கள் வாழ வேண்டும் என்ற மாதிரியே அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அல்லது அதற்குள்தான் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின்போதும் கடின உழைப்பாளிகளான இந்த எளிய மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிப் பூக்கள் அத்தனையும் உடனேயே வாடிச் சருகாகி விடுகின்றன. வரலாறு முழுதும் அதீத நம்பிக்கையூட்டல்களால் களைப்படையப்பட்டவர்கள். இவர்களுக்கு முன்னே எத்தனையோ காட்சி மாற்றங்கள், நிறமாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒரே நாடகமே திரும்பத்திரும்ப நிகழ்கிறது.
அதொரு மாபெரும் சிலுவையேற்றம்.
இந்தத் துயர – அவல – நிலையைக் கதைகதையாக, நூறாண்டாகவே சொல்லத் தொடங்கினர், முதற் தலைமுறைப் படைப்பாளிகள். முதற்தலைமுறை, 19 ஆம் நூற்றாண்டில் வாய்மொழிப் பாடல்களாகத் தொடங்கியது. இன்றைக்கும் அந்தப் பாடல்கள் புழக்கத்தில் உண்டு. ‘படிப்பறியாத மக்கள், தங்களின் கவலைகளை எத்துணை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கு நாட்டார் பாடல்கள் மிக முக்கியமான சாட்சியாகும்’ என்று ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப்பாடல்கள்’ நூலுக்கு எழுதிய வாழ்த்துரையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் சொல்வதைப்போலவே அந்தப் பாடல்களும் சாட்சிபூர்வமாக உள்ளன.
“மலைநாட்டு மக்களெல்லாம் தங்கமே தங்கம் – நாங்க
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் – நாங்க
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்…“
இன்னொரு பாடல் –
கண்டின்னா கண்டி – நாங்க
பொழைக்க வந்த கண்டி- எங்க
அயித்த மக குண்டி –
அது சோத்துப் பான தண்டி
வேறொரு பாடல் –
மாடிமனை வீடு இல்ல
கோடிப் பணம் எமக்கு இல்ல
ஓடியோடி உழைச்சாலும்
உள்ளத்தில தாழ்ந்ததில்ல
மற்றொரு பாடல் –
சீரான சீமை விட்டு
சீரழியக் காடு வந்தோம்
கூடை தலை மேலே
குடி வாழ்க்கை கானகத்திலே….
இப்படி ஏராளம் பாடல்கள். எப்படித்தான் பாடித் தங்களுடைய துயரத்தை அந்த மக்கள் வெளிப்படுத்தியபோதும் அந்த நிலை, அந்த வாழ்க்கை முடியவில்லை; மாறவில்லை. தங்களுடைய கவலைகளை இப்படிப் பாடியாவது உளரீதியாக ஆற்றிக் கொண்டனர். அதாவது தங்கள் அளவில் பாடி மனமாறிக் கொண்டனர். அவ்வளவுதான்.
இந்தப் பாடல்கள் தமிழ்நாட்டில் பாடப்படும் நாட்டார் பாடல்களை அடியொற்றிய வடிவத்திலானவை. காரணம், இந்த மக்கள் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கையின் மலைப்பகுதிகளான கண்டி, மாத்தளை, ஹற்றன் போன்ற இடங்களில் தோட்டப்பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்டவர்கள் என்பதே. என்பதால், அவர்களுடைய நாட்டார் பாடல்களும் வாய்மொழி இலக்கியமும் தமிழ்நாட்டின் சாயலையும் சாரத்தையும் கொண்டமைந்தது. அதே மொழி, அதே மரபு. அதே தொனி.
1823 தொடக்கம் கடல்வழியாகப் படகுகளில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த மக்களுடைய வாழ்க்கையைச் சாராம்சப்படுத்தி எச். டி. டானியல் (H.D.Deniel) எழுதிய Red Tea (எரியும் பனிக்காடு – தமிழ் மொழிபெயர்ப்பு: இரா. முருகவேல்) உங்கள் நினைவுக்கு வரலாம். பின்னர் இயக்குநர் பாலா இதனை அடியொற்றி ‘பரதேசி’ என்ற சினிமாவை உருவாக்கியிருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
வாய்மொழிப்பாடல்களுக்குப் பிறகு, பல்வேறு கலை, இலக்கிய வடிவங்கள் உருவாகின. இதற்கான பெரும் பங்களிப்பைச் செய்தவர் தஞ்சாவூரிலிருந்து வந்து இந்த மக்களோடு இணைந்து வாழ்ந்த கோ. நடேசய்யர். நடேசய்யரே இந்த மக்களின் ‘விடிவெள்ளி‘ என்ற அளவுக்கு அன்றைய சூழலில் கல்வி, சமூக மேம்பாடு, கலை, இலக்கிய வெளிப்பாடு, இதழியல், தொழிற்சங்கங்கள், அரசியற் பிரதிநிதி, எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர், தொழிலாளர் நலனுரிமைக்கான போராட்டக்காரர் எனப் பல தளங்களில் செயற்பட்டார். இதனால் மலையகத்தில் ஒரு புதிய வெளிப்பாடு வளர்ச்சி அடைந்தது. மக்களுடைய வாழ்க்கையில் பெரிய மாறுதல் இல்லாது விட்டாலும், சமூக ஊடாட்டங்களினால் இலக்கிய வெளிப்பாட்டில் மாறுதல்கள் ஏற்பட்டன. பின் வந்த தலைமுறையினர் அதைத் தொடர்ச்சியாக எழுதி ‘மலையக இலக்கியம்’ என்றொரு இலக்கிய வரைபடத்தையே உருவாக்கினர். இந்த வரைபடத்தை உருவாக்குவதற்குப் பங்களித்தவர்களில் முக்கியமானவர்களாக கோ. நடேசய்யர், கே. கணேஸ், சி.வி. வேலுப்பிள்ளை, மீனாட்சி அம்மை, பொ. கிருஷ்ணசாமி, த. ரஃபேல், என். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், ஏ. பி. வி. கோமஸ், சி. பன்னீர்ச்செல்வம், எம் வாமதேவன், அ. சொலமன்ராஜ், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், கோகிலம் சுப்பையா, அந்தனி ஜீவா, மு. நித்தியானந்தன், அல் அஸூமத், மல்லிகை சி. குமார், மு. சிவலிங்கம், மொழிவரதன், மலரன்பன், க.ப. லிங்கதாசன், குறிஞ்சித் தென்னவன், லெனின் மதிவானம், சு. முரளிதரன் எனப் பல நூறுபேரைக் குறிப்பிடலாம். தொடரும் இந்தநெடு வரிசையில் இப்பொழுது வே. தினகரன், சு. தவச்செல்வன், சிவனு மனோஹரன், பிரமிளா, பதுளை சேனாதிராஜா, சந்திரலேகா கிங்ஸ்லி, நாகபூசணி, மஞ்சுளா, எஸ்தர் லோகநாதன், சண்முகப்பிரியா, இஸ்மாலிகா, இராகலை தயானி, சர்மிளாதேவி எனப் பலர் இணைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோருடைய எழுத்துகளிலும் சில பொதுவான பண்பை, குணத்தை அல்லது அடிப்படையை நாம் பார்க்க முடியும். அது தலைமுறை வேறுபாடுகளைக் கடந்தும் தொடர்கிறது என்பது கவனத்திற்குரியது.
முதலாளிகள், கங்காணிகள், அரசு, காலனிய சக்திகள் எனப் பல அடுக்குகளில் உள்ள அதிகாரத்துக்கு எதிரான குரல்.
துன்பியல் வாழ்வின் கதைகள்.
எழுச்சி, புரட்சி என்ற கனவோடு தொடரும் போராட்டங்களும் அவற்றின் பலவீனங்களும்.
பெண்களின் பாடுகள்
மலையக மக்களின் விடுதலைக்கென உருவாகிய தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், தலைமைகள் மீதான விமர்சனம்.
சிங்கள இனவாதத்தின் அச்சுறுத்தலும் அதற்கெதிரான எதிர்ப்புணர்வும்.
கேள்விக்குறியின் முன்னே நிற்கும் இளைய சமூகத்தினர்.
ஆக, மலையக மக்களின் – தோட்டத் தொழிலாளரின் – வாழ்க்கையை நெருக்கும் விடயங்களையே மலையக இலக்கியம் பிரதிபலித்தது. இந்த மரபு அவர்களுடைய வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களிலிருந்து உருவாகியது. மக்களின் துயரங்களையும் பிரச்சினைகளையும் பேசுவது, அவற்றுக்குக் காரணமான சக்திகளை விமர்சனத்துக்குள்ளாக்குவது என்பதே நாட்டார் பாடல்களின் பிரதான அடிப்படையாக இருந்தது. மலையக நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல, அன்றைய நாடகங்களும் கடுமையான அரசியல் விமர்சனத் தொனிப்பைக் கொண்டவையே. என்பதால், அதற்குப் பிறகு வந்த நவீன இலக்கியமும் தவிர்க்க முடியாமல், அதே செல்வழியில், வலிமையான முறையில் அரசியலைப் பேசும் இலக்கியமாகவே – எழுத்தியக்கமாகவே வெளிப்பட்டது. அது கவிதையாக இருந்தாலென்ன, சிறுகதை, நாவலாக இருந்தாலென்ன, இதை விட்டு விலகவில்லை. என்பதால்தான் அது அந்த மக்களையும் அவர்கள் வாழும் பிரதேசத்தையும் அடையாளப்படுத்தும் வகையில் ‘மலையக இலக்கியம்’ என்று உணரப்பட்டது; அடையாளம் பெற்றது. இதையே பின்வந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களும் தொடருகின்றனர். அதை விட்டு விலக முடியாத அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் நெருக்குவாரங்கள் உள்ளன.
இலங்கையில் மிக மோசமான ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் மக்கள் (சமூகம்) என்றால், அது மலையக மக்களே. மட்டுமல்ல, நீண்டகால ஒடுக்குமுறையை (இரண்டு நூற்றாண்டுகளுக்கும்மேல்) எதிர்கொள்கின்றவர்களும் இந்த மக்களே! ஆகவேதான் மலைய இலக்கியம் தலைமுறை வேறுபாடுகளைக் கடந்தும், புதிய போக்குகள், கோட்பாடுகள் போன்றவற்றின் செல்வாக்குகளின் மத்தியிலும் சில பொதுக் கூறுகளில் மாறாது நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
இந்த மக்கள் இலங்கைக்கு வந்து – தோட்டத் தொழிலாளர்களாகி இரண்டு நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 1800 களில் எப்படி இருந்தார்களோ, எப்படிக் கையாளப்பட்டனரோ அவ்வாறே இப்போதும் உள்ளனர். அவ்வாறே கையாளப்படுகின்றனர். இடையில் பிரித்தானியரின் காலனித்து ஆட்சி மாறி, சுதேச ஆட்சி வந்த பிறகும் நிலைமை பெரிய அளவில் மாற்றமுறவில்லை. சுதேச ஆட்சி வந்த பிறகுதான் 1949 நவம்பர் 15 இல் இந்த மக்கள் ‘நாடற்றவர்‘ ஆக்கப்பட்டனர். (இதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் தனியானவை). சுதேச ஆட்சியில் மலையக மக்களுடைய விடுதலைக்கும் நலனுக்குமென்று தொழிற் சங்கங்களும் அரசியற் கட்சிகளும் வந்த பின்னரும் கூட நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை என்பது பெருந்துயரம். ஆனால், மலையகத்தில் ஒரு படித்த மத்தியதர வர்க்கம் உருவாகியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். அதனுடைய குரலே இன்றைய (1980 க்குப் பிந்திய) இலக்கியத்திலும் வெளிப்படுகிறது. அது மத்தியதர வர்க்கத்தின் குரலாக மட்டுமில்லாமல், ஒடுக்கப்படும் மக்களின் குரலாக 2000 வரையிலும் இருந்தது. இது முக்கியமானது. அந்தக் குரல் தன்னைப் பின்வரும் உள்ளடக்கத் தன்மைகளை வெளிப்படுத்தியது.
மலைகள் அழகு. அதற்கு மாறான வகையில் அங்குள்ள மனிதரின் கதைகள் வலியும் துயரும் மிக்கவை.
அவலமும் துயரமும் நிறைந்த நூற்றாண்டுகளைக் கடந்த வாழ்க்கை.
எத்தகைய அரசியல் முன்னெடுப்புகளும் தொழிற் சங்கப் போராட்டங்களும் அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை.
ஆட்சி மாற்றங்கள், அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை.
குடியுரிமை, நில உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்காகவே போராட வேண்டிய வாழ்க்கைப் பின்னணி.
தொடர்ந்தும் சுரண்டப்படும் மக்களாகவே இருப்பது.
மலையகத்தை விட்டு வெளியிடங்களுக்கு – கொழும்பு போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை. குறிப்பாக சிற்றூழிய வேலைகளுக்காக.
இந்திய வம்சாவழி மக்களாக இருந்ததால் நாடற்றவர்கள் என்று ஒரு தொகுதியினர் மறுபடியும் இந்தியாவுக்குப் பலவந்தமாகவே திருப்பி அனுப்பட்டமை.
ஏனைய மக்கள் தம்மை இலங்கையர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரி வேண்டிய நிலை.
இனவன்முறைகளின் தாக்கமும் பாதிப்பும்.
தோட்டங்களை – மலையகத்தை – விட்டு வெளியேறிக் கொழும்புக்கும் பிற இடங்களுக்கும் செல்வோர் பற்றியது.
நெடுங்காலமாகப் பேசப்பட்டும் பேணப்பட்டும் வந்த இந்தத் தன்மை இப்போது சற்று மாறுதலடைந்துள்ளது. இதைப்பற்றி மலையக எழுத்தாளரான சு.தவச்செல்வன் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ‘இன்றைய கதைகள் அல்லது இலக்கிய வெளிப்பாடுகள் தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவனவாகவும் மக்கள் அல்லது தொழிலாளர் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்த்து, உதிரிகள் பற்றிய கதைகளைப் புனைவதும் அல்லது முக்கியத்துவமற்ற பிரச்சினைகளுக்கு முனைப்புக் கொடுத்து படைப்புகளை உருவாக்குவதுமாக மாறியுள்ளது’ என்கிறார் தவச்செல்வன். உருவாகியிருக்கும் அல்லது வளர்ச்சியடைந்திருக்கும் மத்தியதர வர்க்கத்தின் குணாம்ச வெளிப்பாடு இது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
2000 க்குப் பிறகு உருவாகிய புதிய தலைமுறையில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்ளே புத்திஜீவிகளாவும் விமர்சகர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கும் மக்களுக்குமிடையிலான நெருக்கம் குறைவடையத் தொடங்கி, இன்று அது குறைந்தே விட்டது. இவர்கள் மலையகத்தை – தோட்டங்களை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர்; செல்கின்றனர். இதனால் தோட்டங்களைப் பற்றிய அனுபவங்களும் சமூக உறவும் இவர்களிடம் குறைவடைகிறது. பதிலாக வெளியே சென்று குடியேறுகின்ற – வேலை செய்கின்ற – இடங்களில் சந்திக்கின்ற – சந்திக்க நேர்கின்ற பிரச்சினைகளே இவர்களுடைய எழுத்தைச் சாரப்படுத்துகின்றன. அதுவே இவர்களைச் சீண்டும், தீண்டும் பிரச்சினைகளாக உள்ளன. அத்துடன் இன்றைய உலகமயமாதல் உருவாக்கியிருக்கும் குழப்பமான சூழல், நவீனத்துக்குப் பிந்திய படைப்பாக்கம் பற்றிய கருத்தாக்கம், பின்நவீனத்துவச் சிந்தனைகள் போன்றவற்றின் செல்வாக்கும் இந்தப் புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் தாக்கம் செலுத்துகின்றன.
என்பதால் இப்பொழுது மலையகத்தில் தொழிலாள வர்க்கம் ஒன்றாகவும் அதனுடைய பிரச்சினைகள், அவனுடைய வாழ்க்கை போன்றவை அது சார்ந்தவை அதனோடு இணைந்ததாகவும் உள்ளது. மத்தியதர வர்க்கம் இன்னொன்றாகவும் அதனுடைய பார்வைகளும் அணுகுமுறைகளும் அனுபவங்களும் பிரச்சினைகளும் வேறொன்றாகவும் உள்ளன. என்பதால் மலையக இலக்கியம் இந்த நூற்றாண்டில் இன்னொரு வடிவில், இரு நிலைகளை (தன்மைகளை) உடைய புதிய தன்மையைக் கொண்டுள்ளது.
இந்தப் பின்னணியில் மலையக எழுத்தாளரான சு. தவச்செல்வனின் சிறுகதைகள் குறித்துப் பார்க்கலாம். சு. தவச்செல்வன், 2010 இலிருந்து எழுதி வருகிறார். மலையகத்தில் உள்ள ஹற்றன் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் பிறந்து வளர்ந்து, அங்கேயே படித்து, அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பட்ட மேற்படிப்பை மட்டும் யாழ்ப்பாணத்திலும் பேராதனை (கண்டி) பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்திருக்கிறார். சிறுகதை, விமர்சனம், கவிதை, ஆய்வு ஆகிய துறைகளில் தவச்செல்வனின் எழுத்து முயற்சிகள் பல்தன்மை விரிவில் உள்ளன. இதுவரையில், சிவப்பு டைனோசர்கள் (கவிதை), மலையகத்தில் பாரதியின் சிந்தனை (ஆய்வு), ஆடுபாலம் (சிறுகதை), டார்வினின் பூனைகள் (கவிதை), படைப்பும் படைப்பாளுமைகளும் (விமர்சனம்), புனைகதையும் சமூகமும் (ஆய்வு), இலக்கியம் – கலகம் – அரசியல் ( விமர்சனம்), இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் (ஆய்வு), சிங்கமலை (சிறுகதை) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
பன்முக ஆற்றலுடைய தவச்செல்வன், இன்னமும் தோட்டத்து மக்களைக் (மலையகத்திலேயே வாழும் மக்களை) குறித்து எழுதுவதும் மலையச் சமூக, இலக்கிய, அரசியல் வரலாற்றைக் குறித்து ஆய்வுகளைச் செய்வதும் அவருடைய சமூகக் கரிசனையையும் இலக்கிய நோக்கையும் அடையாளப்படுத்துகிறது. என்பதால் தவச்செல்வனுடைய கதைகள் தொழிலாளர் பிரச்சினை, முதியவர்களின் வாழ்க்கை, மலையகப் பெண்களின் பாடுகள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள நெருக்கடி, தோட்ட மற்றும் அரச அதிகாரத்தரப்புகளின் நடத்தைகள், சிறாரின் உலகம், மலைகளின் கதைகள் (அந்தச் சூழலின் வரலாற்றுணர்வு பற்றியவை), இளையோரின் சவால்கள், வறியவர்களின் வாழ்க்கை, இந்திய வம்சாவழி என்ற அடையாளத்தினால் ஏற்படும் சிக்கல்கள், புதிய அரசியல் பொருளாதாரச் சூழலில் தோட்டங்கள் மூடப்படுதலின் விளைவுகள், இந்திய வம்சாவழி உறவுகளைப் பேணவும் முடியாது, கை விடவும் முடியாது தத்தளிக்கும் உளநிலை எனப் பலவற்றைப் பற்றிப் பேசுகின்றன.
இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கான கதைகளா இவை? அல்லது தன்னுடைய கதைகளில் இவற்றையெல்லாம் பேசுகிறாரா? என்று தெரியாத வகையில், கலைத்துவமாக அழகியலோடு எழுதியிருக்கிறார் தவச்செல்வன். வர்க்க நிலைப்பட்ட பார்வையே தவச்செல்வனுடைய கதைகளின் பொதுத் தன்மை. இதனை அவர் இரண்டு வகையாக நிகழ்த்துகிறார். ஒன்று, உழைப்பாளிகளாக உள்ள மக்களின் பாடுகளைச் சொல்வது. இதன் மூலம் அந்த மக்களின் நிலைமையை உலகின் முன்னே வைப்பது. உலகின் முன்னே வைப்பதென்பது, அரசு, சமூக அமைப்புகள், கட்சிகள், கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், மனித உரிமைவாதிகள், சட்டவாளர்கள், நீதியாளர்கள், ஊடகங்கள், சர்வதேசச் சமூகம் எனச் சகல தரப்பின் முன்னும் வைப்பதாகும். முக்கியமாக இந்திய அரசின், தமிழக அரசின் முன்னாலும். “உங்களின் முன்னே நூற்றாண்டுகளாக ஒரு சமூகம் மிகக் கீழ்நிலைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் பங்களிப்பே அதிகமானது. அதற்குப் பெரும் பங்களிப்பை நூற்றாண்டுகளாக இந்த மக்களே வழங்கி வருகின்றனர். அப்படிப் பெரும் உழைப்பை வழங்கி வரும் மக்கள், அதற்கான தகுதிநிலையைப் பெற முடியாமல், ஒதுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, கீழ்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இது என்ன நீதி? இதற்கு என்ன நியாயம்?…“ என்று முகத்தில் அறைந்தாற்போலக் கேட்கின்றன. இதன் மூலம் அந்த மக்களின் பிரதிநிதியாக நிற்கிறார் தவச்செல்வன். இது உழைப்பாளர்களின், ஒடுக்கப்பட்டோரின் நிலை நிற்றலாகும். இரண்டாவது, நூற்றாண்டுத் துயரைத் தன்னுடைய முன்னோடிகள் – முதற் தலைமுறையினர் மட்டுமல்ல, தானும் சொல்லவும் பேசவும் வேண்டியுள்ளது. அது தன்னுடைய பொறுப்பு, கடமை என்று உணர்வது. ‘இது தலைமுறையாகத் தொடரும் ஒரு தீராத நோய். தலைமுறைகளாகக் கிடைக்கப்பெறாத நீதி‘. என்பதால் தானும் இதைப்பேசுவதன் மூலம் தன்னுடைய பங்களிப்பைச் செய்வதோடு, இதற்கெதிரான போர்க்குரலை, போராட்ட உணர்வை உருவாக்கும் போராளிக்குரிய நிலையிற் செயற்படுவதாகும். இந்த இரு தன்மைகளில் உள்ள கதைகள், ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்புக் குரலாகவும் போராட்ட எழுச்சிப் படைப்புகளாகவும் சமனிலையில் தொழிற்படுகின்றன. இவற்றை அக – புற நிலையில் பயணித்து எழுதி அளித்திருக்கிறார். தொகுத்துச் சொல்வதாயின், இவை ‘கலகக் கதைகள், எதிர்ப்புக் கதைகள்‘ எனலாம். ஆக கலகக் குரலே தவச்செல்வனுடையது. எதிர்ப்பிலக்கியமே தவச்செல்வன், எழுதி அளித்திருப்பது. ஆனால், வாசிக்கும்போது முதல் நிலையில் இவை ‘துன்பியல் கதைகள்‘ என்றே தோன்றும். மக்களின் வாழ்க்கைப் பாடுகளை விவரிக்கும்போது, அவற்றை நாம் நேரில் காண்பதைப்போல, அதற்குள் வாழ்வதைப்போல உணரும்போது அந்த மக்களின் துயரம், நம்முள் சுவறுகிறது. ஆனால், அப்படியே துன்பத்தைப் பகிர்வதோடு எந்தக் கதையும் முடியவில்லை. அப்படித்துன்பியலைப் பரப்பி, கழிவிரக்கத்தைக் கோருவதற்குத் தவச்செல்வன் விரும்பவில்லை. அப்படிக் கழிவிரக்கப்படுவது தேவையில்லை என்பதே அவருடைய நிலைப்பாடுமாகும். ‘உழைப்புக்கு மதிப்புத் தாருங்கள். மனிதருக்கு உரிமையை வழங்குங்கள்‘ என்பதே அவருடைய வலியுறுத்தல். அதைப் பெறுவதற்கு ‘நாமெல்லாம் தகுதியுடையோர்‘ என்பதே அவர் தன்னுடைய மக்களுக்கும் உலகத்துக்கும் சொல்லும் சேதி.
இதைத்தானே முந்திய தலைமுறை மலையக எழுத்தாளர்களும் செய்திருக்கிறார்கள்! இதில் தவச்செல்வன் என்ன புதிதாகச் சொல்லியிருக்கிறார்? மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக வளர்ச்சியை, மத்திய தர உருவாக்கத்தை, அந்த மத்தியதர வர்க்கத்தினர் மலையகத்தை விட்டு வெளியேறிச் செல்வதை, அந்த வெளியேற்றம் மலையகச் சமூகத்தில் அகத்திலும் புறத்திலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை, கூலி உழைப்பாளிகளும் கூட தோட்டங்களை விட்டு புறநகர்களை நோக்கிச் செல்கிறார்களே அந்த வெளியேற்றம் உண்டாக்கும் சமூகப் பண்பாட்டு நொதிப்புகளை, புதிய உலக ஒழுங்கில், உலக மயமாதற் சூழலில் மலைகத்தின் நிலையை தவச்செல்வனின் கதைகள் என்ன விதமாகப் பேசியுள்ளன? மொத்தமாக மலையகக் கதைகளில் தவச்செல்வனின் கதைகளுக்கான இடமென்ன? தவச்செல்வனுடைய கரைதகளின் தனித்தன்மை என்ன? போன்ற கேள்விகள் பலருக்கும் எழலாம்.
தவச்செல்வன் புதிதாக அதிகம் சொல்லவில்லைத்தான். ஆனால், சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார். அதற்கான சொல்முறையையும் வெளிப்பாட்டு வடிவத்தையும் செம்மையாகக் கையாள்கிறார். அவர் ஒரு சமூகவியல் ஆய்வாளர் என்ற வகையிலும் இலக்கிய விமர்சகன் என்ற அடிப்படையிலும் தன்னுடைய கதைகளின் உள்ளீட்டிலும் வெளிப்பாட்டிலும் கவனம் கொண்டு இந்தச் செழுமையாக்கத்தைச் செய்திருக்கிறார். இதற்குச் சான்றாக, ‘சாக்குக்காரன்’, ‘ புதைமேடு’, ‘அப்பாவின் ரேங்குப்பெட்டி’, ‘வரிச்சி வரிசை’, ‘முதிர்கன்னி’, ‘காலையும் கிழவனும்’, ‘வெறுங்கல்லும் வேட்டை நாய்களும்’, ‘ஆடுபாலம்’, ‘காணிக்கொழுந்து’ போன்ற கதைகள் இதில் முக்கியமானவை. ‘சாக்குக்காரன்’ கதை, மலையகத்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிளை, அந்தத் தோட்டத்தில் வேலையாட்களுக்குப் பொறுப்பாக இருக்கும், வேலையாட்களைக் கண்காணிக்கும் அதிகாரிகள் எப்படி அடிமைகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறது. தோட்ட விதிமுறைகளுக்கு மாறாக நடைமுறைகளை மாற்றித் தங்களுடைய குடும்பத்துக்கான சேகவத்தைச் செய்விக்கும் இடைநிலை அதிகாரிகள், கங்காணிமார், ‘சாக்குக்காரன்‘ என்ற நேர்மையான உழைப்பாளியின் குடும்பத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவனுக்கும் குடும்பத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரமில்லை. அவனுடைய அப்பாவித்தனத்தை அவர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அன்று நள்ளிரவு வரையில் அவனுடைய வருகைக்காக மனைவியும் குழந்தைகளும் காத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்தபோதுதான் அவனுக்குப் புரிகிறது, குழந்தைகளுக்கும் அன்றைய சமையலுக்குமாக வாங்கிய பொருட்களை தான் வேலை செய்யும் வண்டியில் கொழுவி விட்டு, மறந்து வந்துவிட்டேன் என்பது. அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அன்றைய இரவும் பசித்திருத்தல், துயரில் வாழ்தல்தான் கதை. இந்த அநீதி விளையாட்டுத் தலைமுறையாகத் தொடருகிறது. தொழிற்சங்கங்களுக்கும் அரசியற் கட்சிகளுக்கும் இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் என்ன? இருளும் துயரும்தான் விதி. இந்த விதி இப்படியே தொடர வேண்டுமா? என்பதைப் படிக்கும்போது நாம் உணர்ந்து கொள்கிறோம்.
‘அப்பாவின் ரேங்குப்பெட்டி’ – இலங்கையின் வாழ்ந்தாலும் இந்தியாவில்தான் வம்சாவழி உறவுகள் என்பதைச் சொல்லும் கதை. ஒரு தடவையேனும் போய் அந்த உறவுகளைப் பார்த்து வரமுடியுமா என்று ஏங்குகிறார் தந்தை. அங்கே, தமிழ்நாட்டில் உள்ள உறவுகளின் மரணச் சேதிகள், திருமண நிகழ்வு பற்றிய அறிவிப்புகள் எல்லாம் வரும்போது உறவுகளைப் பார்க்க வேண்டும் என்ற தாகம் மேலெழுந்து தவிக்க வைக்கிறது. பயணத்துக்கான பாஸ்போட்டை எடுத்தாலும் பயணத்துக்கான சாத்தியங்களில்லை. எல்லாவற்றையும் (தன்னுடைய ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும்தான்) அந்த ரேங்குப் பெட்டிக்குள் போட்டிப் பூட்டி வைத்திருக்கிறார் அப்பா. அதை அவர் பக்குவமாகவே வைத்திருக்கிறார். இந்தப் பெட்டிக்குள் என்னதான் இருக்கிறது என்று அறியத் துடிக்கின்றன பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளின்பார்வையிலிருந்தே கதை சொல்லப்படுகிறது.
பிந்திய தலைமுறைக்கு இந்த உறவின் தன்மையோ, விவரமோ தெரிவதற்கு வழியில்லை. காலமும் சூழலும் நாட்டு நிலைமைகளும் சட்டங்களும் அவற்றைச் சிதைத்து விட்டன. ஆனால், அப்பாவுக்கு அந்த நினைவுகளிலிருந்து விடுபட முடியவில்லை. அவர் தன்னுடைய இந்த உறவுகள் அனுப்பிய கடிதங்களோடும் பொருட்களோடும் வாழ்கிறார். அதற்கென ஒரு ரேங்குப் பெட்டியை வைத்திருக்கிறார். அது அவருடைய ரகசியப் பொக்கிஷம். அதைப் பிள்ளைகள் திறந்து பார்த்து விடுகிறார்கள். இப்படியே செல்லும் கதை இந்த மக்களின் பூர்வீகத்தைப் பற்றியும் அந்த நினைவுகளின் பாடுகள் எப்படி மனித மனங்களில் வலியாக மாறி நீடிக்கின்றன என்பதையும் ஆராய்கிறது. மட்டுமல்ல, அந்த நினைவுகளோடு வாழ்தலையும் அதன் வலிகளையும் உறவுகளைப் பிரிந்திருத்தலின் துயரையும் புதிய தலைமுறைகள் இதையெல்லாம் தொடர முடியாத நிலையையும் சிறப்பாகச் சொல்கிறது.
மானுடத் துயரங்கள் எப்படியெல்லாம் உள்ளன!
‘வரிச்சி வரிசை‘ – விழிப்புணர்வுக் கதை எனலாம். பொதுவாகவே எல்லாக் கதைகளிலும் விழிப்புணர்வுத் தன்மை அடிப்படையாக இருந்தாலும் இந்தக் கதையில் அது சற்று நேரடியாகச் சொல்லப்படுவதைப்போல ஓருணர்வு ஏற்படுகிறது. சுரண்டப்படும் மக்களுக்குள் அல்லது ஒடுக்கப்படும் உழைப்பாளர்களுக்குள் ஏற்படுகின்ற கொதிப்பு, எதிர்ப்புணர்வாக எப்படி மாறுகிறது? எப்படிப் புரட்சிக்கான உணர்வெழுச்சியை உருவாக்குகிறது என்பதை இயல்பாகச் சொல்கிறது. அப்படி உணர்வெழுச்சி அடையும் இளைஞரின் தலையில் சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டிருப்பது, சிவப்ப ரீசேர்ட் அணிந்திருப்பது என்பது சற்று மிகைப்படுத்தப்பட்டதுதான். அல்லது அந்தக் குறியீட்டுக்கான அழுத்தம் செயற்கையாக உள்ளதென உணரப்பட வாய்ப்புண்டு. இருந்தாலும் கதைப்போக்கில் கொதிப்பு எதிர்ப்புணர்வாக உருவாகி வரும் விதம் இயல்பாக – யதார்த்தமாகவே உள்ளது.
முன்னோரின் வாய்மொழிக் கதையாக தாத்தாவின் மூலமாகச் சொல்லப்படுகிறது ‘சிங்கமலை’. மலைக்காடுகளை எப்படி ‘முன்னோடிகளான முதற் தலைமுறை தொழிலாளர்கள் தோட்டங்களாகவும் இன்று நாம் பார்த்து வியக்கின்றன செழிப்பான மலையகமாகவும் மாற்றினார்கள். அதில் இந்த மாதிரி மலைக்குன்றுகள்தான் அன்று அவர்களுடைய வாழிடமாக இருந்தன. அப்பொழுது வீடுகளே இருக்கவில்லை. காடுகளிலும் மலைக்குன்றுகளின் கீழும் குகைகளிலும்தான் மக்கள் வாழ வைக்கப்பட்டனர். அப்படி வாழ்ந்துதான் இந்த மலையகத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பேரனுக்குச் சொன்னதாக, பேரனின் வழியாகச் சொல்லப்படுகிறது.
கடந்து வந்த காலத்தின் வரலாறும் துயர்வழிப் பாதையும் அப்படியே நமக்குள் விரிகிறது. மலையகத்தைப் பற்றிய, அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நம்முடைய பார்வையும் அனுபவமும் மாறுகிறது. இனி மலையகத்துக்குச் செல்லும்போது அல்லது மலையகக் காட்சிகளை எங்கேனும் பார்க்கின்றபோது, நாம் அந்தப் பசிய மலைமுகடுகளையோ, வரிசையாக நின்று தேயிலைக் கொழுந்து கொய்யும் பெண்களையோ ஒரு அழகிய காட்சி என்ற கோணத்திலிருந்து பார்க்காமல் நம்முடைய பார்வையை மாற்றி விடுகிறது கதை. பதிலாக அந்த மனிதர்களின் வாழ்க்கை நிலையின் ஊடாகவே பார்க்க வைக்கிறார் தவச்செல்வன். இது அவருடைய நோக்கத்தின் – எழுத்தின் – வெற்றி. இலக்கியத்தின் நுட்பமும் அடிப்படையும் இதுதானே. அக விரிவுகளை உருவாக்குவது. புதிய பார்வைகளை (நோக்குகளை) வழங்குவது. இருட்பிராந்தியங்களை ஒளிப்படுத்திக் காட்டுவது. நீதிக்கான பக்கத்தில் நம்மை நகர்த்துவது. நம்முடைய மனதை திருப்பிப் போடுவது….
‘பொடிமாத்தயாவும் மாடசாமியும்‘ சிங்கள வன்முறையை, சிங்கள ஆதிக்கத்தைச் சொல்லும் கதை. தமிழ் பேசும்மக்கள் செறிவாக வாழும் மலையகப் பகுதிகளில் சிங்கள இனவாதிகள் எப்படி மேலாதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனாலும் தொழிலாளி என்ற அடிப்படையில் அந்த வன்முறையை பொடிமாத்தயா என்ற சிங்களவர் எதிர்க்கிறார். அவர் தமிழ் மக்களின் பக்கமாகவே நின்று போராடுகிறார். இங்கே தொழிலாளர்களுக்கிடையிலான உறவும் உணர்வும் வர்க்க உணர்வாக அமைந்திருக்கிறது. இது தவச்செல்வனின் வர்க்கப்பார்வைக்கு அடையாளமான கதை எனலாம்.
‘காணிக் கொழுந்து‘ வெளியார் உற்பத்தி முறை(Outsider production system) மூலமாக நிலமற்ற மக்களின் பிரச்சினையையும் அதனால் ஏற்படும் வாழ்க்கைச் சிக்கல்களையும் சொல்கிறது. முக்கியமாக இதில் உள ரீதியாக உருவாக்கும் தாக்கங்களைக் கவனப்படுத்துகிறார் தவச்செல்வன்.
இன்னொரு முக்கியமான கதை, ‘ஆடுபாலம்‘. காலனத்துவ காலத்தில் பிரிட்டிஷாரினால் அமைக்கப்பட்ட ‘ஆடுபாலங்கள்‘ இன்னும் மலையகத்தில் உண்டு. ஆறுகளின் மேலாக அமைக்கப்பட்ட இந்தப் பாலங்கள் பாதுகாப்பற்றவை. இந்தப் பாலத்தின் வழியே பயணித்தவர்கள் இறந்த சம்பவங்கள் பலவுண்டு. அப்படியான ஒரு சம்பவத்தில் எட்டுப்பேர் ஒன்றாக பலியானதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது.
‘காலையும் கிழவனும்‘ மலையகத்துக் கதையாக இருந்தாலும் வழமையான – அறியப்பட்ட – கதைப் பிராந்தியத்துக்கு வெளியே உள்ள ஒன்று. மலையகத்தில் காளை மாடுகளை வளர்ப்பது ஒரு சிறிய தொழில் முயற்சியாக அங்குள்ள ‘லயம்‘ வாழ் மக்களிடம் இருந்தது. காளை மாடுகளைக் கொண்டு பசுமாடுகளைச் சினைப்படுத்துதல் (கருவூட்டுதல்) தான் காளை மாடுகளை வளர்ப்பதற்கான காரணம். செயற்கை முறைச் சினைப்படுத்தல் வந்தபோது காளை மாடு வளர்ப்புச் சவாலுக்குரியதாகி விடுகிறது. உலகமயமாதல், புதிய தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றினால் ஏற்படுகின்ற தொழில் நெருக்கடி, சுதேச, பாரம்பரியத் தொழிலில் எத்தகைய சிக்கல்களை உண்டாக்குகிறது என்பதை உணர்த்துவது. கவனம் பெற்ற கதைகளில் இதுவும் ஒன்று.
இதைப்போலப் பெண்களின் பாடுகளையும் அவர்களுடைய உளநிலையையும் சிறார்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய சவால்களையும் அகமெடுத்துத் தவச்செல்வன் எழுதியிருக்கிறார். தொழிற்சக்க அரசியலின் பலவீனம், தொழிலாளர்களை எப்படிப் பாதிக்க வைத்தது, தோட்டங்கள் மூடப்படுவதற்குப் பயன்படுத்தும் அதிகார வர்க்கத்தின் பொறிமுறை, அந்தச் சவாலை எதிர்கொள்வதற்குப் பெண்கள் உட்படத் தொழிலாளர்கள் படுகின்ற அவதியும் போராட்டமும், சம்பளப்பிரச்சினை, வாழிடப்பிரச்சினை, பாலியற் சுரண்டல்கள், சிறாரைத் தொழிலுக்கு அமர்த்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்க இழப்பீட்டில் நடக்கும் ஒழுங்கீனங்களும் ஏமாற்றும் – அதற்கான நிவாரணத்தைப் பெறுவதில் உள்ள நெருக்கடிகள் என ஏராளம் ஏராளம் பிரச்சினைகள் அறியத்தரப்படுகின்றன. ஒவ்வொன்றும் எத்தகைய அக – புறத் தாக்கத்தை ஒரு சமூக மனிதர்களிடம் உருவாக்குகின்றன. அது எப்படிச் சமூகத துயரமாக உறைந்து கிடக்கிறது. இதையெல்லாம் தாங்கியும் தாங்கிக்கொள்ள முடியாமலும்தான் அந்த மக்கள் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நாம் வாழும் இந்த உலகத்தில்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நம்முடைய வினைகள் என்ன? என்பதைக் கேள்விகளாக எழுப்பி விடுகின்றன இந்தக் கதைகள். ஒவ்வொரு சொல்லையும் படித்துச் செல்லும்போது நம்முடைய மனம் கனக்கத் தொடங்கி விடுகிறது. குற்றவுணர்ச்சியும் கோபமும் சமாந்தரமாக எழுகின்றன. நம்முடைய ரத்தக் கொதிப்பின் அளவு உயர்கிறது. தனியே ரத்தக் கொதிப்பை அதிகரிக்கப்பண்ணுவதுதான் இந்தக் கதைகளா என்றால், நிச்சயமாக இல்லை. நிதானமாகச் சிந்தியுங்கள். அந்த மக்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களோடு இணைந்திருங்கள். அவர்களுக்காக போராடுங்கள் – குரல் எழுப்புகள். அவர்களும் சக மனிதர்கள். சக மனிதர்களின் மீது கொள்ளும் நேசமே மானுட மகத்துவம். அதுவே அன்பின் அடையாளம். அதற்கே அன்புறவிலும் பண்பாட்டிலும் இடமுண்டு. பண்பாடு என்பதே சக மனிதர், சக சமூகத்தினரின் மீது கொள்ளும் கரிசனையிலும் அன்புறவிலும் அவர்களுடைய துயர் களைதலிலும்தான் சிறப்புறுகிறது என்பதை உணர்த்துகின்றன. அப்படி உணர்த்தப்பட்டதானால்தான் இந்தக் கதைகளைப் பற்றிய இந்த வார்த்தைகளை எழுத முடிகிறது. அவையே இந்தச் சொற்களை இங்கே தூண்டுகின்றன.
தவச்செல்வனுடைய கதைப்பரப்புகளில் மேலும் சில அம்சங்களைக் காணலாம்.
சூழல் தேசியவாதம் குறித்த அக்கறையும் அக்கறைப்படுத்தலும்.
மலையக மக்களின் சமகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, வாழ்க்கைச் சித்திரங்கள்.
மலையக மக்களின் தேசிய இருப்பும் சவால்களும்.
மலையக மக்களின் தலைமுறைகள் – அவற்றிடையே ஏற்படுகின்ற மாற்றங்களும் மோதல்களும் விலகல்களும்.
இவை பற்றித் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். விரிவு காரணமாக இங்கே அதை இந்த அடையாளப்படுத்துலோடு நிறுத்திக் கொள்கிறேன்.
வெவ்வேறு கதைப் பரப்புகளிலும் கவனம் கொண்டிருப்பது தவச்செல்வன் கதைகளின் முக்கியத்துவம் அல்லது தனித்துவம் எனலாம். ஆனால், மலையகத்தில் ஏற்பட்டுள்ள மத்தியதர வர்க்க வளர்ச்சியையும் அதனுடைய விலகிச் செல்லும் அக – புற நிலைகளையும் கவனிக்கவில்லை என்பது ஒரு குறையே. ஆனால், அவருடைய கட்டுரைகளிலும் ஆய்வுகளிலும் இதைப்பற்றிய முறையான அவதானங்கள் உண்டு. கதைகளில்தான் இல்லை. அதைப்போல, தோட்டங்கள் காலனித்துவம், சுதேச அரசு, அரசுடமை, கம்பனிகள் ஆகியவற்றின் கீழ்மாறிச் சென்றதைப் பற்றிய சித்திரங்களும் பெரிய அளவில் இல்லை. ஒரு சமூகத்தின் அத்தனை பிரச்சினைகளையும் உள்ளெடுத்துப் படைப்பாளி பேச வேண்டும் என்ற நிபந்தனையை யாரும் விதிக்க முடியாது. அப்படியான கேள்விகளையும் எழுப்ப முடியாது. அப்படிச்செய்வது அவருடைய முழுநேர வேலையும் அல்ல. அவருடைய பரப்பெல்லைக்குள் கவனப்படுத்தய விடயங்களைக் குறித்து, அவற்றின் செழுமை, உள்ளடக்குகள், அவை பேச விழைகின்ற அரசியல், பண்பாட்டு விடயங்கள் போன்றவற்றின் மீதுதான் நாம் கவனம் செலுத்திப் பேசலாம். அவற்றில் குறித்த எழுத்தாளருடைய வெற்றி – தோல்விகளைப் பற்றி உரையாடலாம். அப்படிப் பேச விளையும்போது மலையக எழுத்தாளர்களில் தவச்செல்வனுடைய இடம் வலியது. அவருடைய கதைகள் மலையக இலக்கியத்தில் தனி முகமுடையவை.
இதை மேலும் சான்றுப்படுத்துவதாக இருந்தால், மக்கள் அழகியல் என்று உணர்ந்து கொள்வதற்கான பண்பாட்டு அம்சங்கள், வாழ்க்கைக் கோலங்கள், மக்களுடைய பண்பு, நம்பிக்கைகள், வரலாறு, நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழும் திறன் போன்றவற்றைப் படைப்பாக்கி, மலையக மக்களின் முழுச்சித்திரமொன்றை நமக்குத் தருகிறார். ஒரு கதைத் தொகுதியை வாசிப்பதன் வழியாக அந்தச் சமூகத்தின் வரலாறு, பண்பாடு, அதனுடைய மொழி, சடங்குகள், அந்த மக்களுடைய வாழ்க்கை, தொழில்முறைகள், அவற்றில் ஏற்படுகின்ற சவால்கள், அவர்களைப் பலியிடுகின்ற அல்லது ஈடேற்றுகின்ற அரசியல், அவர்களிடையே ஏற்படுகின்ற வளர்ச்சி, சூழல் தாக்கங்கள், அமைவிடம், இயற்கையின் செல்வாக்கு எனப் பலதையும் அறிய முடியுமாயின் அது மிகப் பெரிய வெற்றியே. இவற்றில் குறித்த சமூகத்தின் ஆன்மா தொழிற்படும் விதமே அதனுடைய வரலாறாகவும் பண்பாடாகவும் வளர்ச்சியாகவும் அமைகின்றது. அதைக் கண்டுணர்வதே எழுத்தாளரின் சிறப்புப் பணி. தவச்செல்வனிடம் இதைச் செழிப்புறக் காண்பது மகிழ்ச்சிக்குரியது.
மலையகக் கதைகள் ஈழத்தின் பிற தமிழ்மொழிச் சமூகங்களான இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்களின் கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. வாழிடம் (திணை –குறிஞ்சி), மொழி (தமிழ் மொழியாக இருந்தாலும் ஆட்களின் பெயர்கள், சொற்கள் போன்றவை தமிழ்நாட்டுடன் நெருக்கமானவை அல்லது தமிழ்நாட்டைச் சாரப்படுத்தியவை), பண்பாடு (இதுவும் ஏறக்குறைய தமிழகப் பண்பாட்டை அடியொற்றியதே), அரசியல், வாழ்க்கை அமைப்பு (இதிலும் தமிழகச் சாயல்கள் உண்டு), நம்பிக்கைகள், சவால்கள் எனப் பலவற்றாலும் வேறானவை. ஆனால், மலையக இலக்கியமும் ஈழ இலக்கியமே. அந்த மக்களும் இன்று இலங்கையின் பன்மைச் சமூகங்களில் ஒன்றாகவே உள்ளனர். தேசிய அரசியற் பிரச்சினைகளில் அவர்களுடைய பங்கேற்பும் இடையூடாட்டமும் உண்டு. மட்டுமல்ல, வலிமையானது. பிரத்தியேகத்தன்மைகள்தான் அவர்களைத் தனிச் சமூகத்தினராகவும் தனிப் பண்பாட்டுக்குரியவர்களாகவும் தனியான இலக்கிய அடையாளத்தைக் கொண்டவர்களாகவும் தனித்துக் காண்பிக்கின்றன. இந்தக் காண்பித்தலை – உணர்தலை – தவச்செல்வன் கதைகள் முறையாகச் செய்கின்றன.
ஆபிரிக்க இலக்கியம், அரபு இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், தமிழிலக்கியம், வங்க இலக்கியம் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்வதில் அந்தப் பிரதேசங்களும் அங்குள்ள அரசியல், பண்பாடு, தொழில்முறை போன்றவை எப்படிச் செல்வாக்குப் பெறுகின்றனவோ, அப்படியான அடையாளப் பெறுமானத்தை மலையக இலக்கியமும் கொண்டுள்ளது. மலையக இலக்கியத்தின் பொதுப் பண்பில் ஒன்று, அவற்றைப் படிக்கும்போது கொள்ளும் துயரமும், துயரத்துக்கு எதிரான தூண்டலும் மட்டுமல்ல, இன்னொன்றும் உள்ளது. அது இந்த மக்களைத் தங்களுடைய முதலாளித்துவப் பொருளாதார உற்பத்திக்காக நாடு விட்டு நாடு (தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு) மாற்றிக் கொண்டு வந்து கைவிட்டுச் சென்ற பிரித்தானியர்கள் கொள்ளக் கூடிய குற்றவுணர்ச்சியாகும். அதை எழுப்பக் கூடிய சாட்சியங்களே மலையக இலக்கியத்தின் ஒரு பொருள். இந்தக் கதைகளைப் படிக்கும் ஒரு பிரித்தானியர் தமது மூதாதையர் இழைத்த கொடுமைக்கும் அநீதிக்குமாக வெட்கப்படுவார், துயருறுவார். தலைமுறைகளாக – நூற்றாண்டாகத் தலையையும் தோள்களையும் அழுத்தும் சுமையோடு தங்களின் முன்னே – எதிரே – உற்று நோக்கியவாறு நிற்கும் மனிதர்கள் அவர்களுடைய அகக் கண்களில் தோன்றுவர். அது அவர்களுடைய இதயத்தை உருக்கும். அது இதயமாக இருந்தால். கண்களில் நீரைக் கசியச் செய்யும். அவை ஒளியுடைய கண்களாக இருந்தால்.
இன்னொன்று அந்த மக்களை வேண்டா வெறுப்போடு ஏற்றுக் கொண்ட இலங்கை ஆட்சியாளர்கள் கொள்ளக் கூடிய குற்றவுணர்ச்சி. இந்த மனிதர்கள் 200 ஆண்டுகளாக தங்களுடைய இரத்தத்தை அட்டைக்கும் நாட்டுக்குமாகச் சிந்தியிருக்கிறார்கள். அட்டையும் இந்த நாடும் அவர்களுடைய இரத்தத்தை உறிஞ்சியிருக்கின்றன. அதற்குப் பதிலாக இந்த மனிதர்களுக்கு எதையும் இந்த நாடு கொடுக்கவில்லை. அந்தக் குற்றவுணர்ச்சி தலைமுறைகள் கொள்ளக் கூடியது. அதற்கடுத்து, சக மனிதர்கள் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் கொள்ள வேண்டிய குற்றவுணர்ச்சி. இதை விட முக்கியமானது, இந்திய ஆட்சியாளர்களும் தமிழக ஆட்சித்தரப்பினரும் கொள்ள வேண்டிய குற்றவுணர்ச்சி.
ஒடுக்கப்பட்டோரின் இலக்கியத்தில், பிரதானமாக இருக்கும் ஓரம்சமும் அடிப்படையும் இந்தக் குற்றவுணர்ச்சியைத் தூண்டுதல் ஆகும். அது எதிர்த்தரப்பையும் (எத்தரப்பையும்) பணிய வைக்கக் கூடியது. தவச்செல்வனும் மலையக இலக்கியமும் அழகிய பிராந்தியத்தின் (வளமான குறிஞ்சித் திணையின் – மலைநாட்டின்) மலர்ச் செண்டுகளை ஏந்தி நிற்கவில்லை. இலங்கையின் விக்டோரியா என்று வர்ணிக்கப்படும் அழகிய – செழிப்பான நுவெரெலியாவிலும் அதைச் சூழலும் மலர்கின்ற அழகிய ரோஜாக்களில் நிரம்பியிருப்பது பனித்துளிகளோ, மழைத்துளிகளோ அல்ல. அது அங்குள்ள மலையக மக்களின் கண்ணீர்த்துளிகளும் வியர்வைத்துளிகளும். மலர்த் தோப்பென விரிந்திருக்கும் கண்டி – பெரெதெனியாவில் மலர்கின்ற மலர்களில் நீங்கள் கண்டு வியக்கும் அழகின் அடியில் கேட்பது மலையக மக்களின் நூற்றாண்டுகாலத் துயரப் பாடலிசை. மலையகத்தில்தான் மிகச் செழிப்பான மரக்கறிச் செய்கை நடக்கிறது. ஆனால், அங்குள்ள மலையக மக்களின் வீடுகளில் கஞ்சிப் பானையே உண்டு. அதைப் பொங்கல் பானையாக்குவதற்கு தவச்செல்வன்கள் தலைமுறைகளாக முயற்சிக்கிறார்கள். அதற்குச் சாட்சியமான சொற்களே இந்தக் கதைகளிலும் கதைகளாகவும்.
தலையில் மூங்கில் கூடை
இடுப்பில் ரெட்டு படங்கு
மட்டக்குச்சி
மட்டக்கத்தி
அவளை விடியல் அலங்கரிக்கிறது
அவளின் விடியலில் ஆகத்துயரம்
பிள்ளை மடுவத்தில் தேவீயின்
குழந்தையை கைவிடுதல் தான்
என்ற கவிதையை எப்போதோ படித்த நினைவு இங்கே எழுகிறது. இது காலத்துயரா? மானுடத்தின் இயலாமையா?
00
சு. தவச்செல்வன் புத்தகங்களை நூலகம் தளத்தில் வாசிக்க ,
கருணாகரன்
https://akazhonline.com/?p=11032
By
கிருபன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.