Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்

Featured Replies

உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்
 
 

article_1486625376-Ukraine-02-new.jpg- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  

போர்க்களங்கள் உருவாகிய காலம் கடந்து வெகுநாட்களாகி விட்டன. இப்போது போர்க்களங்கள் உருவாக்கப்படுகின்றன. போரின் வடிவங்கள் மாறியுள்ளது போல, போர்க்களங்களின் தன்மையும் உருவமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன.   

இப்போது போர்க்களங்கள் வலிந்து உருவாக்கப்படுவது அதன் சிறப்பம்பம். அமைதி வழியில் அடைய இயலாததை, அடாவடித்தனத்தின் வழியில் அடைவதற்கான திறவுகோலாக போர்க்களங்கள் பயன்படுகின்றன.   

உக்ரேனின் கிழக்குப் பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள மோதலும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய கவனமும் அமெரிக்க - ரஷ்ய மோதலினை இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் அனைத்து சாத்தியங்களையும் உருவாக்கியுள்ளன.   

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியின் வருகை அமெரிக்க - ரஷ்ய உறவில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் ரஷ்யாவின் எல்லைப்புறங்களில் அமைதியின்மையை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு வலுச்சண்டைக்கு அழைப்பு விடுப்பதை நோக்காகக் கொண்டு இப்போது உக்ரேனில் காட்சிகள் நகர்கின்றன.   

அமெரிக்காவும் நேட்டோவும் இன்று எதிர்நோக்கும் உள்ளார்ந்த நெருக்கடிகள் மிகப்பாரிய திசைதிருப்பலை வேண்டி நிற்கின்றன. இதன் விளைவாக அமெரிக்காவினதும் நேட்டோவினதும் நடவடிக்கைகள் ரஷ்யாவை ஆத்திரமூட்டும் புதிய கட்டத்தை அடைந்துள்ளன.   

article_1486625441-Ukraine-03-new.jpg
இது அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட ‘புதிய உலக ஒழுங்கு’ என்பதன் சர்வதேச அரசியல் நெருக்கடியைப் புலப்படுத்துகிறது.

இன்னமும் முடியாத சிரிய உள்நாட்டு யுத்தமும் அதில் சிரிய அரசாங்க விரோதப் போராளிகளுக்கு அமெரிக்க ஆதரவும் சிரிய அரசாங்கத்துக்கு ரஷ்ய ஆதரவும் உலகை மீண்டுமொரு இரு-மையக் கெடுபிடிப் போர்க்காலத்துக்குக் கொண்டுபோவது போன்ற தோற்றம் உருவாகக் காரணமாயின.   

ரஷ்யாவின் அண்டை நாடும் அதன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களையும் கொண்ட உக்ரேனில், ரஷ்ய சார்பு ஆட்சியைக் கவிழ்த்து மேற்குலகச் சார்பான ஆட்சியின் உருவாக்கமும் அதையடுத்து உக்ரேனின் சில பகுதிகள் சுதந்திரத் தனியரசுகளாகவும் ரஷ்யாவுடன் இணைய வேண்டுவதுமான அறிவிப்பு அமெரிக்க-ரஷ்ய முரண்பாட்டை மறைமுக மோதலுக்குள் தள்ளியது.   

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆழமடையும் பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவான சிக்கன நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் அரசாங்கங்களின் மீது அதிருப்தியையும் வெறுப்பையும் உருவாக்குகின்றன.   

அதைக் கையாள இயலாது மேற்குலக அரசுகள் திண்டாடுகின்றன. இதன் விளைவாக மேற்குலகில் வலுப்பெறும் வலதுசாரித் தீவிரவாதம் மேற்குலகால் உலகெங்கும் போதிக்கப்பட்ட ‘தாராண்மைவாத ஜனநாயகத்தை’ கேள்விக்குட்படுத்தியுள்ளது.   

இவ்வகையான முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதே ஒரே வழி. எனவே, ஜ.எஸ்.ஜ.எஸ்.ஐத் தொடர்ந்து ரஷ்யாவும் விளாடிமிர் புட்டினும் ‘புதிய எதிரி’ உருவாக்கத்துக்குப் பயன்படுகின்றனர்.   

கெடுபிடிப் போரின் இரண்டாம் பாகம் என அட்டைப்படம் வரைந்து அமெரிக்காவிலிருந்து வரும் ‘டைம்’ பத்திரிகை அச்சமூட்டுகிறது. மொத்தத்தில் ரஷ்யா குற்றவாளி போலவும் அமெரிக்கா, ரஷ்ய அடாவடித்தனத்தை தடுக்கும் மீட்பர் போன்றதுமான ஒரு சித்திரத்தை மேற்குலக ஊடகங்கள் கட்டியெழுப்புகின்றன. ஆனால் அது உண்மையான சித்திரமன்று. 

உக்ரேனின் பூகோள ரீதியான அமைவிடம் அதைக் கேந்திர ரீதியில் கிழக்கு ஜரோப்பாவின் முக்கிய நாடாக்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் கிழக்கு ஜரோப்பாவில் அதிகரித்துள்ள ரஷ்யச் செல்வாக்கும் ரஷ்யாவுக்கும் கிழக்கு ஜரோப்பாவின் முன்னைய சோவியத் ஓன்றிய நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவும் கூட்டிணைவும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஊறானவை. 

article_1486625691-Ukraine-04-new.jpg  

அதைக் குலைக்கவும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் அமெரிக்கா தொடர்ந்து முயன்றுள்ளது. 2000 ஆம் ஆண்டை ஒட்டிய காலத்தில் முன்னாள் சோவியத் ஓன்றிய நாடுகளாக இருந்த ஐரோப்பிய நாடுகளில், அமெரிக்கா ‘நிறப் புரட்சிகள்’ என்ற பெயரில் மக்கள் எழுச்சிகள் மூலம் ஆட்சி மாற்றங்களைத் தூண்டித் தனக்குச் சார்பான ஆட்சிகளை உறுதிசெய்தது.   

அவ்வகையில் 2003 இல் ஜோர்ஜியாவில் நடந்த ‘இளஞ்சிவப்புப் புரட்சியும்’ 2004இல் உக்ரேனில் நடந்த ‘செம்மஞ்சள் புரட்சியும்’ 2005இல் கஸக்ஸ்தானில் இடம்பெற்ற ‘ற்யூலிப் புரட்சியும் ‘ 2006 இல் பெலரூஸில் இடம்பெற்ற ‘ஜீன்ஸ் புரட்சியும்’ குறிப்பிடத்தக்கவை.   

1989 இல் யுகோஸ்லாவியாவின் வெல்வெற் புரட்சியின் வழியாக அமெரிக்கா திட்டமிட்ட நிறப் புரட்சிகள், அமெரிக்க ஆதரவு 
என்.ஜீ.ஓக்களின் ஆதரவுடன் கிழக்கு ஐரோப்பாவில் நடந்தேறி அமெரிக்கச் சார்பு ஆட்சிகளைப் பதவியிலிருத்தின.  

கிழக்கு ஜரோப்பாவில் நிறப்புரட்சிகள் அமெரிக்க சார்பு ஆட்சிகளை உருவாக்கியபோதும், அவை நீண்டகாலம் நிலைக்கவில்லை. சிலகாலத்திலேயே ரஷ்ய ஆதரவுடன் எதிர்ப் புரட்சிகள் அரங்கேறின. அதற்குக் கோடுகாட்டுவதாய் 2008இல் ரஷ்யா, ஜோர்ஜியாவின் அத்துமீறலுக்குப் பதிலளிக்கும் வகையில் தனது படைகளை அனுப்பி ஜோர்ஜியப் படைகளைப் பின்வாங்கச் செய்தது.   

இது வல்லரசு அரசியலில் ரஷ்யாவின் மீள்வருகையை உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அமெரிக்க எதிர்ப்பு ஆட்சிகள் உக்ரேன் உட்பட்ட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் மூலம் பதவிக்கு வந்தன. அப்போக்கைத் தடுக்குமுகமாகவும் ரஷ்யாவைத் தனிமைப்படுத்துமாறும் அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடியது.   

ஜரோப்பிய ஒன்றியம் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஜரோப்பிய ஒன்றியத்துக்குள் இணைய அழைத்தது. முதலில் அழைப்பை ஏற்றுப் பின்னர், அதன் மோசமான விளைவுகளை உணர்ந்து மறுத்த உக்ரேன் ஜனாதிபதி, அமெரிக்க சார்ப்புப் புரட்சியால் அகற்றப்பட்டதுடன் சிக்கல் அதிகரித்தது.   

உக்ரேனில் உருவாகிய புதிய ஆட்சி ஜனநாயகத்தின் பெயரிலான ஆட்சி என முதலில் புகழப்பட்டது. அமெரிக்க ஆசீர்வாதத்துடன் உக்ரேனில் நடந்த புரட்சி இனவெறி, யூத எதிர்ப்பு, ஹிட்லர் வழிபாடு ஆகியவற்றையுடைய நாற்சிக் கட்சியான ஸ்வபோடாக் கட்சியை அதிகாரத்தில் இருத்தியது.   

இது நவநாற்சிச் சக்திகளின் கையை வலுப்படுத்தியுள்ளன. ஜனநாயகம் தொடர்பிலான வினாக்களை இது எழுப்பியுள்ள போதும், உக்ரேனின் புதிய ஆட்சிக்கான நிபந்தனையற்ற ஆதரவு தனது தேவைக்காக நவநாற்சிசத்தையும் அமெரிக்கா ஆதரிக்கத் தயங்காது என்பதையும் காட்டி நின்றது.   

இது ஒருபுறமிருக்க, ரஷ்யாவைச் சுற்றிவளைக்கும் நோக்கத்துடன் ரஷ்யாவின் அண்டை நாடுகளில் அமெரிக்கா இராணுவத் தளங்களை நிறுவிவந்துள்ளது. சில முன்னாள் சோவியத் நாடுகளையும் நட்புநாடுகளையும் அமெரிக்கா நேட்டோவினுள் இணைத்து ரஷ்யாவைச் சுற்றிவளைப்பது போலச், சீனாவையும் சுற்றிவளைக்கும் வகையில் இராணுவத் தளங்களை அமைத்துள்ளது.  

ஐரோப்பாவிற் போல, மத்திய ஆசியாவிலும் அமெரிக்கா இவ்வகையான முயற்சிகளை எடுத்தபோது சீனா, ரஷ்யா, கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த ‘ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமையத்தை’ உருவாக்கி அமெரிக்க விஸ்தரிப்பு நோக்கங்களுக்குப் பாரிய தடையானது.   

இன்று, உக்ரேனில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்படுத்தியுள்ள ஆட்சி மாற்றத்தின் தாக்கத்தை ரஷ்யா உணர்ந்ததால், அது ரஷ்யப் பெரும்பான்மையையுடைய கிரிமியா தீபகற்பம் சர்வசன வாக்கெடுப்பு மூலம் பிரிந்து ரஷ்யாவுடன் சேர்வதை ஊக்குவித்தது.   

ரஷ்யா, கிரிமியாவை இணைத்ததன் மூலமும் உக்ரேனின் தென், கிழக்கு எல்லைகளில் படைகளைக் குவித்துள்ளதன் மூலமும் வலிய செய்தியொன்றைக் கூறுகிறது. 

 

article_1486625731-Ukraine-05-new.jpg  

தனக்கு நட்பான நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்காவோ வேறு எந்த நாடுமோ தலையிடுவதை ரஷ்யா விரும்பாது என்பதை ஜோர்ஜியாவிலுள்ளான ரஷ்யப் படைநடப்பு உலகுக்கு முதன் முதலில் உணர்த்தியது.   

இப்போது இரண்டாவது தடவையாகத் தனது படைகளை கிரிமியாவுக்கும் உக்ரேனிய எல்லைக்கும் அனுப்பியதன் மூலம் வலிய செய்தியொன்றை அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ரஷ்யா சொல்கிறது.  

இந்நெருக்கடியின் இன்னொரு அத்தியாயம் வேறு வகையில் நடந்தேறியது. உக்ரேனில், ரஷ்யாவின் ஆதிக்கம் ஓங்குவதையும் பிராந்தியத்தில் ரஷ்யா வலியதொரு சக்தியாக உருவாகுவதையும் கண்ட அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைவிதித்தன.   

ஆனால் பொருளாதாரத் தடைகள் எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை. ரஷ்யாவின் எண்ணெய் வருமானத்தைப் பாதிக்கும் நோக்கத்துடன் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கச் சார்பு எண்ணெய் உற்பத்தி நாடுகள் அளவுக்கதிகமான எண்ணெயைச் சந்தைக்கு அனுப்பி எண்ணெய் விலை வேகமாகக் குறைய வழி செய்தனர். அதன்மூலம் ரஷ்யப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே நோக்காக இருந்தது.   

மாறாக, எண்ணெய் விலைவீழ்ச்சி உலகெங்கும் எண்ணெய் உற்பத்தியிலுள்ள அமெரிக்க, ஜரோப்பியக் கம்பெனிகளுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவுகளை அமெரிக்காவும் ஜரோப்பாவும் இப்போது அனுபவிக்கின்றன. வேலை இழப்பு, நாணய மதிப்பிறக்கம் என மேற்குலகின் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.   

இதன் பின்னணியில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனை மையப்படுத்திய அமெரிக்காப் போர் முழக்கத்தைக் கவனிக்கவேண்டும். அமெரிக்கா எப்படியாவது உக்ரேனை, ஜரோப்பிய ஒன்றியத்துக்குள் கொண்டுவருவதன் மூலம் நேட்டோவின் விஸ்தரிப்பையும் ரஷ்யாவை அதன் எல்லைகளிலேயே அச்சுறுத்தும் நிலையொன்றையும் உருவாக்க விரும்புகிறது.   

இந்நிலையிலேயே உக்ரேனுக்கு நேரடி இராணுவ உதவி வழங்குவதன் மூலம் அமெரிக்கா, பிராந்தியத்தில் முடிவற்ற போருக்கு அச்சாரமிடத் தயாராகிறது. உக்ரேனுக்கு ஆயுத உதவி வழங்கும் நோக்கம் உக்ரேன் அரசு, கிளர்ச்சியாளர்களைப் போரில் வெல்வதல்ல. மாறாக மொத்தப் பிராந்தியத்தையும் யுத்தமயமாக்கி முடிவிலாப் போருக்குள் ரஷ்யாவைத் தள்ளுவதன் மூலம் நீண்ட காலத்தில் ரஷ்யாவில் ஓர் ஆட்சிமாற்றத்தை உருவாக்குவதாகும்.  

இதனாலேயே 2015 இல் மின்ஸ்க்கில் நடைபெற்ற பேச்சுக்களுக்குப் பின்னர் ஜேர்மன் ஆட்சி முதல்வருக்கும் ரஷ்ய, பிரெஞ்சு, உக்ரேனிய ஜனாதிபதிகளுக்கும் இடையே எட்டப்பட்ட உக்ரேனிய போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்க அமெரிக்கா மறுத்ததோடு நேரடியாக உக்ரேனிய அரசாங்கத்துக்கு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்தது.   

மொத்தத்தில் உக்ரேன் நெருக்கடி முடிவுக்கு வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால், ஜேர்மனியினதும் பிரான்சினதும் நிலைப்பாடுகள் அவ்வாறல்ல. முடிவுறாத போரும் ரஷ்யாவுடனான உறவில் ஏற்படும் விரிசலும் பொருளாதார ரீதியில் இரு நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கும்.   

ஜேர்மனியும் பிரான்ஸும் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த விரும்பும் அதே வேளை, ஜரோப்பாவை மையப்படுத்திய இன்னொரு போர் ஜேர்மனியையும் பிரான்சையும் மோசமாகப் பாதிக்கும். இதை இவ்விரு நாடுகளும் நன்கறியும்.   

ஆனால், தவிர்க்கவியலாமல் ஜேர்மனி நேட்டோவின் நிகழ்ச்சிநிரலில் சிக்குண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கடந்த வாரம் லித்துவேனியாவினுள் ஜேர்மனியப் படைகள் வரத் தொடங்கியுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் படைகள் முன்னாள் பால்டிக் சோவியத் குடியரசுக்குள் நுழைந்ததுக்குப் பிறகு, இப்போதுதான் முதன் முறையாக ஜேர்மன் படைகள் அந்நாடுகளுக்குள் உள்நுழைந்துள்ளன. இது இன்னொரு வகையில் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்ததாகும்.   

அமெரிக்கா, ரஷ்யாவில் ஓர் ஆட்சிமாற்றத்தை விரும்பப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமான மூன்று மேல்வருமாறு: முதலாவது, புதிய நிலவரங்களின்படி ஆசியா தவிர்க்கவியலாத பகுதியாகியுள்ளது. குறிப்பாக மத்திய ஆசியா பூகோளரீதியிலும் இராணுவ மூலோபாய ரீதியிலும் அதி முக்கியமாகிறது.

அமெரிக்கா மத்திய ஆசியாவில் ஆதரவுத் தளத்தை உருவாக்கப் பெரிய தடையாக ரஷ்யா உள்ளது. அமெரிக்கா தனது இராணுவத் தளங்களை ஆசியாவில் நிறுவமுடியாமைக்கு ரஷ்யச் செல்வாக்கே பிரதான காரணம்.  

அத்தோடு ‘யூரேசியா’ எப்படும் கிழக்கு ஜரோப்பிய - மத்திய ஆசியப் பகுதி வளம் மிகுந்த, பொருளாதார வலுவுள்ள பிராந்தியமாகும். அதைக் கட்டுப்படுத்துவது உலகப் பொருளாதாரத்தின் கணிசமான அளவைக் கட்டுப்படுத்துவதற்குச் சமனானது. எனவே, அமெரிக்கா இப்பகுதியின் கட்டுப்பாட்டுக்கு ஏங்குகிறது. அதற்காக எதையும் செய்யத் தயாராகிறது.   

புட்டினை அகற்ற அமெரிக்கா விரும்ப இரண்டாவது காரணம் சிரியா, ஈரான், உக்ரேன் ஆகிய விடயங்களில் அமெரிக்கா நினைத்ததைச் செய்ய இயலாமைக்கு முக்கியமான ஒரு காரணம் புட்டின். அல்லாவிடின் அமெரிக்காவின் திட்டப்படி சிரியாவிலும் ஈரானிலும் ஆட்சிமாற்றங்கள் ஏற்படுவதோடு உக்ரேனை முற்றாக ஜரோப்பிய ஒன்றியத்துக்குள் இணைத்து, ரஷ்ய எல்லையில் நேட்டோ பிரசன்னத்தின் மூலம் அமெரிக்க ஏவுகணைகளை நிறுவியிருக்கலாம். ஆனால் இன்றுவரை அவை இயலவில்லை.  

மூன்றாவது, பூட்டின் பல கூட்டமைப்புக்களில், குறிப்பாக பிரிக்ஸ் வங்கி (BRICS bank), யுரேஷியன் பொருளாதார ஒன்றியம் (Eurasian Economic Union), ஷங்ஹாய் கூட்டிணைவு அமையம் (Shanghai Cooperation Organization) இணைந்து அவற்றை வலுவான கூட்டமைப்புகளாக்கவும் உதவியுள்ளார். இவை அமெரிக்காவுக்கும் நவதாராள நிதி நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்குச் சவாலாகவும் மாற்றாகவும் ஆகியுள்ளன.   

அதே வேளை, சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கச் சார்பு உக்ரேனிய அரசாங்கத்துக்கு 17 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க உடன்பட்டுக், கடனைப் பெற மொன்சாண்டோ என்ற அமெரிக்கப் பல்தேசிய நிறுவனம், மரபணு மாற்றிய பயிர்களைக் கட்டற்று உற்பத்தி செய்ய உக்ரேன் அனுமதிக்கவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.   

வளமான விவசாய நிலங்களைக் கொண்ட நாடு உக்ரேன். மொண்சாண்டோ கால்பதிக்குமாயின் சிலகாலத்திலேயே விளைநிலங்கள் நஞ்சாகிப் பாவனைக்குதவாது போகும். இவ்வாறு உக்ரேன் நெருக்கடி பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. உக்ரேன் நெருக்கடியில் அமெரிக்காவும் ஜரோப்பிய ஒன்றியமும் ஒரு பக்கத்திலும் ரஷ்யா மறுபக்கத்திலும் அதற்கு ஆதரவாகச் சீனாவும் உள்ளன.   

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் எதிர்பார்த்த பலனைத் தராததால், அமெரிக்கா இன்னொரு போருக்கான முரசை அறைகிறது. இப் போர் நிகழுமாயின் அமெரிக்கா பாரிய அழிவை விளைவிக்கக் கூடிய யுத்தத்துக்கான சாவுமணியை அறைகிறது எனலாம். முதலாம் உலகப் போரும் இதே பால்ட்டிக் பகுதியில் ஒரு நிகழ்வுடனேயே தொடங்கியமை கவனிக்கத்தக்கது.  

- See more at: http://www.tamilmirror.lk/191272/உக-ர-ன-ம-யம-க-ள-ள-ம-ப-த-ய-ப-ர-க-களம-#sthash.OmsNXiSy.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.