Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக்: மக்கள் எழுச்சிக்கான ஒத்திகை

Featured Replies


ஈராக்: மக்கள் எழுச்சிக்கான ஒத்திகை
 
 

article_1487231520-Iraq-01-new.jpg- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 

சிதைக்கப்பட்ட தேசங்களின் கதை கொடுமையானது. அவ்வாறு சிதைக்கப்பட்ட தேசங்களின் மீளுகை, இலகுவில் நடந்துவிடக் கூடியதல்ல. ஒருபுறம் ஒரு தேசத்தைச் சிதைத்ததன் பின்னணியில் செயற்பட்ட சக்திகள், சிதைத்ததற்கான காரணங்களையும் தாண்டிச் செல்வாக்குச் செலுத்துகின்றன. 

மறுபக்கமாக, சிதைக்கப்பட்டதன் விளைவால் புதிய சக்திகள் அரங்காடிகளாகவும் ஆதிக்க சக்திகளாகவும் தோற்றம் பெறுகின்றன. இவற்றுக்கிடையிலான அதிகாரப் போட்டியும் அதிகாரத்துக்கான அவாவும் அத்தேசத்தின் எதிர்காலத்தை எதுவித ஜயத்துக்கும் இடமின்றிக் கேள்விக்குறியாக்கின்றன. 

இந்நிலையில் அவ்வாறான தேசமொன்றில், மக்கள் எழுச்சி இயல்பாக எழும். ஆனால், அவ்வெழுச்சியை அரசியல் தேவைகருதிக் கைதுசெய்வதும் திசைதிருப்புவதும், மிகவும் எளிமையானது. அன்றாட வாழ்க்கையே போராட்டமான மக்களுக்கு, வேறு வழியற்ற நிலையில், ஏதாவது ஒருபுள்ளியில் இணைந்து போராடுவதே வாழ்க்கையாகிறது.  

ஈராக்கின் முக்கியமான ஷியா இனத்தலைவரான முக்ததா அல் சதாரின் மீள்வருகையும் அதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஈராக்கிய அரசாங்கத்துக்கெதிராக இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டங்களும் இன்னொரு மக்கள் எழுச்சிக்கான பாதையை நோக்கி ஈராக் செல்லத் தொடங்குகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. 

article_1487231566-Iraq-04-new.jpg

ஈராக்கில் முனைப்படையும் ஷியா-சுன்னி பிரிவினருக்கிடையிலான மோதலும் ஷியா குறுங்குழுவாதத்தின் எச்சசொச்சங்களும் ஈராக்கின் தினசரி வாழ்க்கையையே நெருக்கடியில் தள்ளியுள்ளன.

 இதை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு, ஈராக்கின் வரலாற்றையும் அதன்மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் படையெடுப்பையும் விளங்கிக் கொள்வது அவசியமானது.  

மேற்காசிய நாடாகிய ஈராக்கின் எல்லைகளாக வடக்கே துருக்கி, கிழக்கே ஈரான், தென்கிழக்கே குவைத், தெற்கே சவூதி அரேபியா, தென்மேற்கே ஜோர்தான், மேற்கே சிரியா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கின் பிரதான அரங்காடிகள் அனைவரையும் தனது எல்லையாகக் கொண்ட நாடென்ற வகையில், மத்திய கிழக்கின் பூகோளரீதியிலான மையப்புள்ளியாக, ஈராக் திகழ்கிறது. 

‘நாகரிகங்களின் தொட்டில்’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற மொசெப்பதேமிய நாகரிகத்தின் அடிப்படையாக அமைந்த யூப்பிரடீஸ், டைகிறீஸ் ஆகிய நதிகளைத் தன்னுள்ளே கொண்ட நாடென்ற வகையில், வரலாற்று ரீதியான சிறப்பும் ஈராக்குக்கு உண்டு.

 அரேபியர்களையும் குர்துகளையும் பிரதான இனங்களாகக் கொண்ட 36 மில்லியன் ஈராக் சனத்தொகையில், 95சதவீதமானவர்கள் முஸ்லிம்கள் ஆவர். 

கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து அக்காடியன், சுமேரியன், அஸ்ரியன், பாபிலோனியன் பேரரசுகளின் மத்திய பகுதியாக, ஈராக் திகழ்ந்தது. அதைத் தொடர்ந்த ரோமன், மோகல், ஒட்டோமன் பேரரசுகளின் பகுதியாகத் திகழ்ந்ததனூடு, மனிதகுல வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளின் வாழ்விடமாக, ஈராக் திகழ்கிறது.   

முதலாம் உலகப்போரின் பின்னர் தோற்றம் பெற்ற உலக நாடுகளின் சங்கம் (League of Nations) 1920 இல் சேவிஸ் உடன்படிக்கையின் ஊடாக, ஒட்டோமன் பேரரசைத் துண்டாடியது. 

ஈராக், பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, “பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட மொசெப்பத்தேமியா” என அழைக்கப்பட்டது. பிரித்தானியர்களால் 1921 இல், ஈராக்கில் முடியாட்சி உருவாக்கப்பட்டது.
முடியாட்சியின் உருவாக்கத்திலும் அதைத் தொடர்ந்த அரச கட்டமைப்பிலும் சிறுபான்மை சுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வகையில், பிரித்தானிய நிர்வாகம் பார்த்துக் கொண்டது. 

article_1487231604-Iraq-02-new.jpg

1932 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த ஈராக்கின் நிர்வாகக் கட்டுப்பாடு, சிறுபான்மை சுன்னிப் பிரிவினரிடமே இருந்தது. தனது இராணுவத் தளங்களைத் தொடர்ந்து பேணி வந்த பிரித்தானியா, மறைமுகமாக ஈராக்கிய அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி வந்தது. 

இவற்றின் விளைவால், 1958 ஆம் ஆண்டு ஈராக்கில் நடந்தேறிய “14 ஜூலைப் புரட்சி” என அறியப்படும் சதிப்புரட்சி, ஏகாதிபத்தியத்துக்கும் அந்நியத் தலையீட்டுக்கும் எதிரான சோசலிசத் தன்மைகளைக் கொண்டமைந்த புரட்சியாகியது. இதன் விளைவால் முடியாட்சி ஒழிக்கப்பட்டு, இராணுவ ஆட்சி உருவானது. 

1968 இல் இராணுவ ஆட்சிக்கெதிரான புரட்சி, பாத் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தது. இது, ஈராக்கில் ஜனநாயகத் தன்மைகளை தனது ஆட்சியில் அறிமுகப்படுத்தியது.   

1979ஆம் ஆண்டு, பாத் கட்சியின் தலைமைத்துவம் இராணுவ ஜெனரலாக இருந்த சதாம் ஹுஸைனின் கைகளுக்கு வந்தது. இதன் மூலம், ஈராக்கின் ஜனாதிபதியாக சதாம் உருவெடுத்தார். 

இதேயாண்டு, அயதுல்லா கொமேனியின் தலைமையில், ஈரானில் மக்கள் புரட்சி வெற்றிபெற்று, மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. ஈரானின் வெற்றியடைந்த புரட்சி, ஷியாப் பிரிவினருக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் எனவும் இதனால் தனது ஆட்சிக்குப் பங்கம் விளையலாம் என நினைத்த சதாம் (இவர் ஈராக்கின் சிறுபான்மை சுன்னி இனத்தைச் சேர்ந்தவர்), 1980 இல் ஈரான் மீது போர் தொடுத்தார்.

எட்டு ஆண்டுகள் நடைபெற்ற போரில், ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்த புதிய ஈரானிய ஆட்சி, அமெரிக்கா விரும்பும் ஒன்றாக இருக்கவில்லை.

இதனால் ஈரான் - ஈராக் போரில், சதாமின் நெருங்கிய கூட்டாளியாக அமெரிக்கா செயற்பட்டது. கூட்டாளியுடனான உறவு கசந்த நிலையில், 2003இல் “பயங்கரவாதத்துக்கெதிரான போரின்” ஒரு பகுதியாக, ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது. சதாம், தூக்கிலிடப்பட்டார்.   

ஈராக்கின் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும் ஆட்சிக் கவிழ்ப்பும் புதிய திசையில் ஈராக்கை நகர்த்தியுள்ளது. 
அமெரிக்கப் பிரசன்னத்துக்கெதிரான போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கிய நிலையில், அமெரிக்கப் படைகளுக்கெதிரான முதலாவது நேரடியான ஆயுத மோதல், ஏப்ரல் 2004 இல், முக்ததா அல் சதாரின் மஹ்தி இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்கத் தலையீட்டுக்கும் பிரசன்னத்துக்கும் எதிரான பிரதான போரிடும் சக்தியாக, மஹ்தி இராணுவம் கணிக்கப்பட்டது. இது, சாதாரண ஈராக்கியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்றது. 30 வயதான இளம் இஸ்லாமிய மதகுருவான முக்ததா அல் சதாரினால், எவ்வாறு இதைத் செய்ய முடிகிறது என்பது, அப்போது ஆச்சரியத்துக்குரிய விடயமானது.   

முக்ததா அல் சதார், செல்வாக்கு மிக்க ஒரு குடும்பப் பின்னணியை உடையவர். முக்ததாவின் தந்தை அயதுல்லா முகமது அல் சதீக் அல் சதார், மிகவும் புகழ்பெற்ற ஷியா மதகுருவாவார். முக்ததாவின் மனைவியின் தந்தையான முகமட் பாகீர் அல் சதார், நன்கறியப்பட்ட மதகுருவாவார். 

அதேவேளை லெபனானின் ஷியா இனத்தவரின் உரிமைக்காக உருவான அமல் இயக்கத்தின் உருவாக்குனரான மூசா அல் சதார், முக்ததாவின் மைத்துனராவார். முக்ததாவின் பாட்டனார் இஸ்மைல் அல் சதார், ஈரானில் மிகவும் மதிக்கப்பட்ட தலையாய ஷியா மதத்தலைவராவார். 

இவ்வகையில், அரசியல் இஸ்லாம் என்கிற அடிப்படையில் மிகவும் செல்வாக்குள்ள மத்திய கிழக்கின் ஷியா சமூகங்களின், மரியாதைக்குரிய குடும்பத்தின் வழிவந்தவராக முக்ததா இருந்தார்.  

முக்தாவின் மைத்துனரான மூசா அல் சதார், 1978 இல் காணாமலாக்கப்பட்டார். மாமனாரான முகமட் பாகீர் அல் சதார், 1980 இல் சதாமின் ஆட்களால் கொல்லப்பட்டார். 1999 இல் முக்ததாவின் இரண்டு சகோதரர்களும் அவரின் தந்தையும் சதாமின் கொலைப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   

1958 ஆம் ஆண்டு புரட்சியைத் தொடர்ந்து, தலைநகர் பக்தாத்துக்கு வெளியே ஒரு நகரம் உருவாக்கப்பட்டு “புரட்சி நகரம்” என அழைக்கப்பட்டது. இது, பக்தாத்தின் ஒன்பது நிர்வாக மாவட்டங்களில் ஒன்றானது. 

1982 ஆம் ஆண்டு இதை “சதாம் நகரம்” என, சதாம் ஹுஸைன் பெயர் மாற்றினார். 2003 இல் சதாமின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்நகரம், கொல்லப்பட்ட முக்ததாவின் தந்தையின் நினைவாக “சதார் நகரம்” எனப் பெயர் மாற்றம் பெற்றது. இது, ஈராக்கிய சமூகத்தில் சதார் குடும்பத்தின் செல்வாக்கை எடுத்தியம்பும் இன்னொரு செய்தியாகும்.   

இவையனைத்தும், முக்ததாவின் எழுச்சிக்கும் ஆதரவுக்கும் செல்வாக்குக்கும் வழிகோலின. ஓர் இராணுவத் தளபதியாகவும் முக்கியமான மதப்போதகராகவும் முக்ததா, ஈராக்கிய ஷியா சமூகத்தின் பிரதான தலைவராகியுள்ளார்.

article_1487231638-Iraq-05-new.jpg

இன்று, ஈராக்கில் அரச பதவி வகிக்காத அரசியலில் நேரடியாகத் தொடர்புபடாத மிகுந்த செல்வாக்குடைய தலைவராக, முக்ததா திகழ்கிறார். ஈராக்கில் ஷியா பிரிவினருக்கிடையிலான குறுங்குழுவாதம், ஒற்றுமைப்பட்ட ஷியா பிரிவைச் சாத்தியமில்லாமல் செய்துள்ள நிலையில், முக்ததாவின் நிலை, கொஞ்சம் விசேடமானது. 

முக்ததாவின் ஆதரவுத்தளம், ஒடுக்கப்பட்டவர்களாகவும் சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களாகவும் காணப்படும் ஷியா முஸ்லிம்கள் ஆகும். அவர்கள் இவரை, ஒரு மீட்பராகக் கருதுகின்றனர்.   

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கக் கூட்டுப்படைகளின் பிரதான விமர்சகராகவும் போராளியாகவும் முக்ததா இனங்காணப்பட்டார். இவரது “சதார் இயக்கம்”, ஈராக்கிய சமூகத்தின் பல்வேறு அடுக்குகளின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்ற இயக்கமாக உருப்பெற்றது. 

அமெரிக்கா, முக்ததாவைக் கொலை செய்யப் பலதடவைகள் முயன்றுள்ள போதும், எவையும் வெற்றியளிக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு, அமெரிக்கக் கூட்டுப்படைகளின் வெளியேற்றம், முக்ததாவின் முயற்சிகளின் பயன் எனச் சிலாகிக்கப்பட்டது. ஈராக்கிய அரசாங்கத்தை, அமெரிக்காவின் கைப்பொம்மைகள் எனச் சாடி வந்த முக்ததா, ஜனநாயகத் திருத்தங்களை அரசாங்கம் உள்ளடக்கிச் செயற்பட வேண்டும் எனக் கேட்டார்.

அரசியலில் இருந்து தான், முழுமையாக ஒதுங்குவதாக 2014 ஆம் ஆண்டில் அறிவித்தார். இது, மிகப்பெரிய ஆச்சரியத்தை ஈராக்கில் உருவாக்கியது.  

முக்ததா தலைமையில் பக்தாத்தில் ஈராக்கிய அரசாங்கத்துக்கும் அதன் ஊழலுக்கும் எதிராகக் கடந்தவாரம் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணி, நவீன ஈராக்கிய வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய எதிர்ப்பு நிகழ்வாகப் பதிவாகிறது. 

முக்ததாவின் சதார் இயக்கத்தின் மீள்வருகை, ஈராக்கில் ஆழமடைந்துள்ள சமூகப் பொருளாதார, அரசியல் நெருக்கடியை இன்னொரு பரிமாணத்துக்கு இன்று எடுத்துச் செல்கிறது.   

ஈராக்கிய தேசியவாதத்தின் பிரதான இயங்குசக்தியாக முக்ததாவும் அவரது சதார் இயக்கமும் திகழ்கின்றன. பக்தாத்தின் தகீர் சதுக்கத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், ஈராக்கியத் தேசியவாதத்தின் இன்னொரு வருகையும் மேற்குலக ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு நடைபெறுகின்ற ஈராக்கிய அரசாங்கத்தின் தோல்வியையும் தெட்டத் தெளிவாகக் காட்டிநின்றன.

போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய முக்ததா, “அரசாங்கம், முழுமையான சீர்திருத்தங்களைச் செய்யத்தவறுமிடத்து, தொடர்ச்சியான போராட்டங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.   

முக்ததாவின் வருகை இயல்பாக நிகழ்ந்ததல்ல. ஒருபுறம், ஈராக்கிய அரசாங்கத்தின் கையறுநிலை, ஈராக்கியர்களிடையே வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. இதனால் ஒரு மாற்றை நோக்கி மக்கள் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். 
மறுபுறம், ஷியா பிரிவினரிடையேயான குறுங்குழுவாதம், ஒன்றுபட்டுச் செயல்படுவதற்கு தடையாகவுள்ளது. 

இந்நிலையில், மிகுந்த செல்வாக்குள்ள அரசியல் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்துவதற்கான பொருத்தமான தருணமாக, இதை முக்ததா கருதுகிறார்.   

ஈராக்கில் தோற்றம் பெற்று, இன்று ஏனைய மத்தியகிழக்கு நாடுகளுக்குப் பரவியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிராக, 2014ஆம் ஆண்டு முதல் முக்ததாவின் மஹ்தி இராணுவம் போரிட்டு வருகிறது. 

இனியும் அமைதியாக இருப்பது, தீவிரவாதத் தன்மையுடைய இளைஞர்களை சதார் இயக்கத்தில் இருந்தும் மஹ்தி இராணுவத்திலிருந்தும் தனிமைப்படுத்தும் என்பதால், ஈராக்கியத் தேசியவாதத்தின் தளகர்த்தாகவாக தனது பிடியை மீண்டும் தக்கவைக்கும் ஒரு முயற்சியாகவும் இவரது தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கருதலாம்.  

தனது பிரதானமான அரசியல் தளமான ஷியா முஸ்லிம்களின் புனித நகரான நஜாவ்வில் இருந்து பக்தாத்துக்கு, முக்ததா இடம்பெயர்ந்திருப்பது தற்செயலல்ல. இம்மாற்றத்தினூடு, பக்தாத்தின் தெருக்களில் செல்வாக்குச் செலுத்தும் வீதி அரசியலின் முக்கிய பேசுபொருளாக, முக்ததா திகழ்கிறார். 

தனது முதலாவது நடவடிக்கையாக ஷியா, சுன்னி, குர்து என அனைத்துத் தரப்பு கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் ஆகியோரை உள்ளடக்கிய மதச்சார்பற்ற குழுவொன்றை உருவாக்கியுள்ளார். இக்குழுவிடம், அரச சீர்திருத்தங்களை முன்மொழியுமாறு கோரியுள்ளார்.   

இன்று பிளவுற்றுள்ள ஈராக்கிய சமூகத்தின் ஒன்றுபடுத்தும் சக்தியாகவும் இப்போது தோல்வியடைந்துள்ள அரசாங்க மாதிரிக்கு மாற்றான ஒரு சமூக, பொருளாதார, அரசியல் பார்வையை வழங்கக்கூடிய ஒருவராக, தன்னைக் கட்டமைக்கிறார். 

அனைத்தும் ஒரே திசையிலேயே கோடுகாட்டுகின்றன. அது, மக்கள் எழுச்சிக்கான பேரிகையின் முழக்கத்துக்கானது.     

- See more at: http://www.tamilmirror.lk/191662/ஈர-க-மக-கள-எழ-ச-ச-க-க-ன-ஒத-த-க-#sthash.T2nzARQb.dpuf

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி வட அமெரிக்கனுக்கும் ஐரோப்பியனுக்கும் அரேபிய நாடுகள் மீது ஏன் இவ்வளவு அக்கறை?
 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

அது சரி வட அமெரிக்கனுக்கும் ஐரோப்பியனுக்கும் அரேபிய நாடுகள் மீது ஏன் இவ்வளவு அக்கறை?
 

மண்ணைக் கிண்டிப் பார்த்தால் .....தெரியும்!:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.