Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் ஏமாற்றம் கடந்த ஆட்சியிலிருந்த நிலைமையே தொடர்கிறது; சபையில் சம்பந்தன் விசனம்

Featured Replies

தமிழ் மக்கள் ஏமாற்றம்

p025-3997272de092aebebf7c15e3acbc813229e017de.jpg

 

கடந்த ஆட்சியிலிருந்த நிலைமையே தொடர்கிறது; சபையில் சம்பந்தன் விசனம்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

ஆட்சி மாற்றத்தின் மீது  எதிர்பார்ப்புக்களைக் கொண் டிருந்த தமிழ் மக்கள் ஏமாற்ற  மடைந்திருப்பதாக  குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித்தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த ஆட் சிக்காலத்தில் இருந்த நிலைமைகளே தற்  

போதும் நீடிப்பதாகவும் சபையில் சுட்டிக் காட்டினார்.  தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு நிரந் தரமான முற்றுப்புள்ளி  வைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தினார். 

தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் தீர்ப்பதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை நினைவு கூர்ந்த அவர் உடனடிப்பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆட்சியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாமை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் மூகூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனால் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள், அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை கொண்ட பொது முக்கியத்துவம் வாய்ந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டு வரப்பட்டது. அப்பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சிங்களவராயினும், தமிழராயினும், முஸ்லிம்களாயினும் அல்லது பறங்கியராயினும், இலங்கையில் வாழ்ந்தமக்கள் அனைவரும் தமது இனம்,மதம் அல்லது வேறு ஏதேனும் வேறுபாடுகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது சுதந்திரத்தை அடைவதற்குத் தமது முழுமையான பங்களிப்பை வழங்கினர்.

இலங்கை காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று ஏறத்தாழ 70 ஆண்டுகள் ஆகின்றது. சுதந்திரமடைந்த சிறிது காலத்திலிருந்தே இன மோதல் இந்நாட்டைபீடித்துள்ளது. அந்த இன மோதல்களைத் தீர்த்துவைப்பதற்காகவும் அனைத்து பிரசைகளும் சமத்துவத்துடனும் நீதியுடனும் ஒன்றிணைந்து அமைதியாக வாழ்வதற்கு உதவுதற்காகவும் பிரதமமந்திரிகளுக்கும் தமிழ் தலைமைத்துவத்திற்குமிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் ஆளும் உயர்வர்க்கத்தினரால் நிறைவேற்றப்படவில்லை.

1950 களிலும் 1960களிலும் 1970களிலும் 1980களிலும் அதன் பின்னரும் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட அத்தகைய இன மோதல்களினாலும் இன வன்முறைகளினாலும் இலங்கைத்தமிழருள் 50 சதவீதம் வரையிலானோர் குறிப்பாக பாதுகாப்பின்மை காரணமாக தமது சொந்தநாட்டை விட்டு வெளியேறி உலகம் முழுதும் பல்வேறுநாடுகளில் குடியமர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதன் விளைவாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிரிந்து வேறுபட்டுள்ளன. இந்த நாட்டில் சமமான பிரஜைகளாக தாம் வாழ்வதற்கு உதவக்கூடிய அரசியல் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தபோது தான் அவர்களுக்கெதிராக வன்முறைகட்ட விழ்த்து விடப்பட்டதென்பதை சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.

வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதுமேலும் அதிகமான தமிழர்கள் நாட்டை விட்டுதப்பியோட வழிவகுக்கும். இம்முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வு ஏற்படும் வரை தமிழருக்கெதிரான இன வன்முறை என்பது விரைவில் ஏற்படக்கூடிய அபாயமாகவே உள்ளது.

அரசியல் அமைப்பிற்கான கருத்துருவாக்கம்

1978ஆம் ஆண்டின் பின்னர் நீண்டகாலத்திற்கு பின்னர் தற்போதே புதிய அரசியலமைப்பிற்கான கருத்துவாக்கம் ஏற்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டிலும், 1978ஆம் ஆண்டிலும் அனைத்து மக்களினதும் ஒருமித்த கருத்துவாக்கத்தில் அமைந்த அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவில்லை. 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்குப் பின்னர் புதிய அரசியலமைப்பிற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதும் அவை முழுமை பெறவில்லை.

கடந்த கால சந்தர்ப்பங்கள்

கடந்த காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஆகிய செய்யப்பட்டன. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவை நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவுகளே காணப்படுகின்றன.

நீடித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி பிரமாஸவின் காலத்தில் மங்கள முனசிங்க தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. அதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்க காலத்தில் 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி அரசியலமைப்பு சட்டமூலம் சபையில் சமர்பிப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டது.

அந்த முன்னேற்றகரமான விடயங்களை கொண்டமைந்த சட்டமூலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சரவையில் அங்கம்வகித்து அச்சட்டமூலத்தை ஆதரித்திருந்தனர். ஆனால் துரதிஸ்டவசமாக அந்த முயற்சியும் தோல்வியடைந்தது

அதற்கு அடுத்தபடியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் காலத்தில் ஆயுத முரண்பாடு முற்றுப்பெற்ற பின்னர் சுவாரஸ்யமான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வகட்சி குழு அமைக்கப்பட்டது. பல்இனகுழு அமைக்கப்பட்டது.

இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை அவர் பேணி வந்ததோடு வாக்குறுதிகளையும் வழங்கினார். இருப்பினும் அவர் அதனை நடைமுறை ரீதியாக மேற்கொள்வதில் பின்னடிப்புக்களையே செய்து வந்தார். இவ்வாறான சந்தர்ப்பங்கள் அனைத்தும் கடந்த நிலைமையிலேயே தற்போதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

ஜி.எல்.பீரிஸ் மீதான விசனம்

அரசியலமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் தற்போதைய சமயத்தில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடுமையான கருத்துக்களை முன்வைக்கின்றார். அவர் அரசியலமைப்பு செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்த காலத்தில் அதாவது சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து அப்போதைய அரசியலமைப்பு சட்டமூலத்தை தயாரித்தார்.

அதன் பின்னர் 2002இல் விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையின் போது பிரிக்கப்படாத நாட்டினுள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தவராகவும் காணப்படுகின்றார்.

அதுமட்டுமன்றி தனிநாட்டுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஒஸ்லோவிலேயே பகிரங்கமாக தெரிவித்த அவர் பிரிக்கப்படாத நாட்டில் சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்களை பகிர்வதற்கு தயாராகவிருப்பதாக குறிப்பிட்டார். அத்தகையவர் தற்போது என்ன கூறுகின்றார்?

இந்தியாவின் வகிபாகம்

இவ்வாறிருக்கையில், ஐக்கியமான, பிரிக்கப்படாதமற்றும் பிரிக்கப்படமுடியாத இலங்கைக்குள் தீர்வொன்று அவசியம் என்றுதான் நாம் வலியுறுத்திவருகிறோம். இலங்கை இனப்பிரச்சினை தொடர்பிலான தீர்வு நடவடிக்கைகளுக்கு முடிவொன்றை காண்பதற்கு இந்தியாபல முயற்சிகளை செய்தது.

முன்னாள் பிரமர்களான ராஜீவ் காந்தி, மன்மோகன்சிங் முதல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரையிலானவர்களும் இராஜதந்திர ரீதியில் செயற்பட்ட எஸ்.எம்.கிருஸ்ணா, சிவசங்கர் மேனன் உள்ளிட்ட பலரும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அதிகாரங்கள் பகிரப்படுவதை வலியுறுத்தியிருந்தார்கள்.

இலங்கையின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் மதிப்பதாகவும் பிளவுப்படாத நாடொன்றுக்குள்ளேயே தீர்வு அமைந்திருக்க வேண்டும் என்பதையும் இந்திய ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

13ஆவதுஅரசியலமைப்புதிருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அதனடிப்படையில் அர்த்தபு‘்டியான அதிகாரப் பகிர்வொன்றுக்கு முன்னேறிச் செல்லவேண்டும் என்றும் தமிழ் மக்கள் அவர்களது பிரதேசத்தில் கௌரவமாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றுமே இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தியே வருகின்றது.

ஐ.நா.வின் தீர்மானம்

இலங்கையின் விடயத்தில் தொடர்ச்சியாக கரிசை செலுத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையானது இலங்கையில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் குறித்து தீர்மானங்கள் ஊடாக வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக அர்த்தப்புஷ்டியான அதிகாரப் பகிர்வுக்கு அரசியலமைப்புரீதியான தீர்வொன்று கொண்டுவரப்படும் என்றும் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை தீர்மானத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தின்

பின்னரான எதிர்பார்ப்பு

தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. நாம் அதுதொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெற்றியளிப்பதற்கு பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளோம். அதனை வௌிப்படையாகவே தெரிவித்துள்ளோம்.

பிளவுபடாத ஐக்கிய நாடொன்றுக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு தௌிவாக கூறுகின்றேன். அதில் எமதுகௌரவமும் எமது பிரதேசத்தில் நாமே எமது தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்த பிரச்சினையினால் கடந்தகாலங்களில் ஒருமில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டைவிட்டுச் சென்றுள்ளதுடன், ஒரு இலட்சத்து 50 போர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்புபடையினரும் எமது போராளிகளும் ஏனைய சிவில் மக்களும் உயிரிழந்துள்ளனர்.

நாம் அவ்வாறான உயிரிழப்புக்கள் நடைபெறவில்லையென்று சொல்லவில்லை. வன்முறைகள் மற்றும் யுத்தம் ஆகியவையே இதற்கு காரணமாக இருந்தன. பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வுகாணப்பட்டிருந்தால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டார்கள்.

நீண்ட ஆயுத போராட்டம் உருவாகியிருக்காது. இத்தகைய இழப்புகளும் ஏற்பட்டிருக்காது. எனவே நீண்டகாலமாகவிக்கும் பிரச்சினை எதிர்காலத்திலும் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது. அதற்கான தீர்வொன்றை கண்டு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

மாற்றமில்லாத நிலைமை

எமது மக்களின் காணிபிரச்சினை, காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதிகள், உண்மைமற்றும் நல்லிணக்கம், இழப்பீடு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல், நிலைமாறு கால நீதி ஆகியன உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை விடயங்களாக உள்ளன.

அவ்வாறிருக்கையில் இவ்விடங்களில் எமது மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த விடயத்தில் நாம் வௌிப்படையாக இருக்க வேண்டும். முன்னைய அரசாங்கத்தை போன்றே இந்த அரசாங்கமும் தங்களைகொடுமைப் படுத்துவதாகவே எமது மக்கள் கருதுகின்றனர். இந்த பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் முன்னைய அரசாங்கத்தைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் கையாள்வதாகவே மக்கள் நம்புகின்றனர்.

காணி விவகாரம்

காணிவிவகாரத்தை பொறுத்தவரையில், சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் மேலும் பல காணிகளை விடுவிக்க இராணுவத்தினர்தயாராக இல்லை. சொந்தகாணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது குடும்பம், பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பரவிப்பாஞ்சானில் புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

சொந்த நிலங்கள் என்பது பிறப்புரிமையாகும். ஆகவே அம் மக்களின் காணிகள் உட்பட விடுவிக்கப்படாதுள்ள அனைத்து காணிகளும் உரித்துடையவர்களிடத்தில் திரும்பவும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டை நாம் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கிறோம். நாம் அந்த மக்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டை எண்ணி கவலையடைகின்றோம்.

நியாயமற்ற காரணம்

இந்த காணிகள் புலிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காணிகளாக இராணுவத்தினர் கருதுகின்றனர். புலிகள் பிடித்து வைத்திருந்த போது அன்று எதிர்க்காத மக்கள் தற்போது எப்படி உரிமைகோர முடியும் என்று இராணுவத்தினர் கேட்கலாம். இராணுவம் என்பது சர்வதேச தர அங்கீகாரங்கள் கொண்ட அரசாங்கமொன்றினுடையதாக இருக்கும் போதுவிடுதலைப் புலிகளைப் போன்று செயற்பட முடியாது. அரசாங்கம் ஜனநாயகத்தினை பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டது. ஆகவே அவ்வாறு சிந்திக்க முடியாது. இந்த நாட்டு பிரஜைகளின் விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

யுத்தக் குற்ற விவகாரம்

அனைத்து படையினரும் யுத்தக் குற்றங்களை இழைத்தார்கள் என்று நாம் கூறவில்லை. மேல் மட்டங்களில் கிடைத்த உத்தரவுகளின் பிரகாரம் அவர்கள் செயற்பட்டிருக்கலாம். சில படையினர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை போன்ற தனிப்பட்டரீதியிலான குற்றங்களிலும் ஈடுபட்டிருந்திருக்கலாம். அவைப் பற்றி தகுந்த விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

உதாரணமாக கூறுவதாயின் 1977இல் ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது மனம்போி என்ற இளம்பெண் ஒருவர் படையினராலேயே படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்தக்குற்றத்துடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. அவ்வாறு தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவிக்க வேண்டும்.

படையில் அங்கத்துவம்

படையினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான மனக்கசப்பும் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். டி.எஸ். சேனாநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் படைத் தளபதிகளாக தமிழர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் திறமைமிக்க அதிகாரிகள். ஆகவே, தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மனக்கசப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் படையில் அங்கம் வகிக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

காணமலாக்கப்பட்டவர்கள் விடயம்

காணமலாக்கப்பட்டவர்களின் விடயம் தற்போதும் கேள்விகுறியாகவே உள்ளது. அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான இழப்பீடுகள் உள்ளிட்டவற்றை அரசாங்கம் வழங்கியிருந்தால் அவர்கள் போராட மாட்டார்கள். ஆனால், அந்த வசதிகள் எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை. அரசாங்கம் இதற்கு பதிலளித்து செயற்படவேண்டும்.

உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு இழப்பீடுகள் வழங்கவேண்டும். படையினர் தரப்பிலும் காணாமல்போனோர் இருக்கின்றனர். அதனையும் நாம் மறுக்கவில்லை. அதற்குரிய நடவடிக்கைளும் சமச்சீராக முன்னெடுக்கப்படவேண்டும்.

ஓரளவேனும் திருப்தி

அளிக்க வேண்டும்

தமிழ் மக்கள் எதிர்பார்ப்புக்களை கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்தவர்களாக முடியாது. அவர்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளில் மக்களுக்கு முழுமையான திருப்தி இல்லாவிட்டாலும் கூட,ஓரளவேனும் திருப்தி அளிக்கும் வகையில் நடவடிக்கைளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றார்

 

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-23#page-1

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நாங்க மைத்திரிக்கு வாக்குக் கேட்கேக்கையே சொல்லிட்டமே.  இப்ப தான் எங்கட அரசியல்வாதிகளுக்கு விளங்கி இருக்கு. எல்லாம் தமிழனின் தலையெழுத்து.  மைத்திரிக்கு ரணிலுக்கு சந்திரிக்கா.. கூட்டுக்கு.. ரணிலும் சந்திரிக்காவும் இனப்படுகொலையின் பங்காளிகள்.. மைத்திரி மகிந்த இனப்படுகொலையின் கூட்டுப்பங்காளி.. இருந்தும்.. சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கச் சொன்னவை.. இப்படி ஏமாறுவினம்.. மக்களை ஏமாத்துவினம் என்று அப்பவே சொல்லிட்டம். இப்ப தான் செய்தியா போடினம். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.