Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘உட்கனலின் வேகம் இயக்கிக்கொண்டு இருக்கிறது’ - தேவகாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘உட்கனலின் வேகம் இயக்கிக்கொண்டு இருக்கிறது’

நேர்காணல்: தேவகாந்தன்

நேர்கண்டவர்: கருணாகரன்

 

(‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் அதிக கவனிப்பைப் பெற்றவர் தேவகாந்தன். இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்த தேவகாந்தன், சிலகாலம் (1968-74) யாழ்ப்பாணத்தில் வெளியான ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார். பிறகு, 1984 முதல் 2003 வரை அநேகமாக தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தார். தமிழ்நாட்டில் இருந்தபோது ‘இலக்கு’ சிற்றிதழை நடத்தினார். இதுவரையில் ‘கனவுச் சிறை’, ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’, ‘கதாகாலம்’, ‘லங்காபுரம்’ உள்பட ஆறு நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் பரிசு (1998), திருப்பூர்  தமிழ்ச் சங்கம் விருது (1996), லில்லி தேவசிகாமணி விருது (1996) , தமிழர் தகவல் விருது (2003) உள்பட பல இலக்கியப் பரிசுகளைப் பெற்றவர். 2003இல் இலங்கை திரும்பிய தேவகாந்தன் சில ஆண்டுகள் கொழும்பிலிருந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார். என்றாலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அடிக்கடி வந்து தன்னுடைய வாழ்களத்தைப் புதுப்பித்துக் கொண்டிருப்பதிலேயே தேவகாந்தனுக்கு ஈடுபாடு. அப்படியொரு இலங்கைப் பயணத்திலேயே இந்த நேர்காணல் நடந்தது. இது பிரசுரமாகிறபோது தமிழ்நாட்டில் இருப்பார்.)

 

1.   கேள்வி:  நாவல்களை எழுதுவதற்கு முன் எப்படியான தயாரிப்புக்களை நீங்கள் செய்கிறீர்கள்?

பதில்: இதை, மேற்குலகில் கலைநுட்பப் பயிற்சிகள் ஊடாக நாவல் எழுதும் போக்கு இளைஞர்களிடையே வளர்ந்து வருவதையும், கள வரலாறு சார்ந்த வாசிப்புகளும் ஆய்வுகளும் செய்து ஒரு பொருள்பற்றிய நாவலை எழுதும் பாங்கு வளர்ச்சியடைந்த நாவலாசிரியர்களிடையே விரவியிருப்பதையும் கருத்தில்கொண்டுள்ள ஒரு கேள்வியாக நான் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற நிலைமைகள் தமிழ்ப்பரப்பில் பெரிதாக இல்லையென்பதிலிருந்து இதற்கான பதிலை நான் விரிக்கவேண்டி உள்ளது.

சிலர், குறிப்பாக ‘கரிப்பு மணிகள்’ மற்றும் ‘பாதையில் பதிந்த சுவடுக’ளுக்காக ராஜம் கிருஷ்ணனும், ‘அஞ்ஞாடி’க்காக பூமணியும், ‘மாதொரு பாக’னுக்காக பெருமாள் முருகனும் கள மற்றும் வரலாற்று ஆய்வுகள் செய்து நாவல்கள் எழுதினார்கள் என்பார்கள். ஆனால் எழுத்தை முழுநேரப் பணியாகக் கொண்டு கள மற்றும் வரலாற்று ஆய்வுகளைச் செய்து தமிழில் நாவல்கள் எழுதுவோர் பலபேர் இல்லையென்கிற எதார்த்த நிலைமையை முன்வைத்துக்கொண்டு என்னளவில் என் செயற்பாடு இந்த விஷயத்தில் எவ்வாறு இருக்கிறதென்பதை விளக்கலாமென நினைக்கிறேன்.

ஒரு கரு சிறுகதை வடிவத்துக்குள் அடக்கிவிட முடியாத விகாசம் கொள்கிறபோதான தவிர்க்கமுடியாத நிலைமையிலேயே ஒரு சிறுகதைப்  படைப்பாளி வேறு வெளிப்பாட்டு வடிவங்களுக்குள் செல்கின்றான். அந்த வகையில் எனது ஆக்கங்கள் ஆரம்பத்தில் சிறுகதைகளாகவே இருந்தன.  பின்னால் மய்யங்கொள்ளும் கருவைச் சுற்றிய கதைப்பின்னலைப் பொறுத்தும், நேர்நிலை எதிர்நிலைகளில் அதை விரிப்பதற்கான பாத்திர உருவாக்கத்தினாலும் குறுநாவல் வடிவங்களுக்குள்ளோ நாவல் வடிவங்களுக்குள்ளோ செல்ல நேர்ந்தது.

இது அச்சொட்டான plot, theamபோன்ற நாவலின் உட்கிடக்கைகள்பற்றிய ஆய்வுத் தீர்மானங்களினாலன்றி, நினையாப்பிரகாரமாக நிகழ்வது. எனக்கும் அவ்வாறே ஆயிற்று.

எண்பதுகளிலும் அதற்கு முன்னருமிருந்த இந்த நிலைமையே இப்போதும் இருக்கிறதெனச் சொல்ல முடியாது. ஏனெனில் சிறியகதையை சிறுகதையாகவும், பெரிய கதையை நாவலாகவும் வடித்துத் தள்ளிக்கொண்டிருந்த காலமது. பெருங்கதைகள், தொடர்கதைகளினைவிட நாவல் வேறுபட்டது என்ற புரிதல் இன்று வந்தாயிற்று.உத்திகளும் களங்களும் மாறுபட்ட நாவல்களின் காலமாக இருக்கிறது இது. நாவலுக்கான முன் திட்டங்கள் இன்றி இன்று யாரும் நாவல் எழுதத் தொடங்குவதாக இல்லை.

சிறுகதையிலிருந்து நாவல் வடிவத்துக்குள்ளோ, ஒரு இலக்கிய வடிவத்திலிருந்து இன்னொரு இலக்கிய வடிவத்துக்குள்ளோ  புகுவதென்பது, வசதி வாய்ப்புக்கள் கருதியல்ல, அது தவிர்க்கமுடியாமை கருதியதாகவே இருந்தது.

சிறுகதை முயற்சிகளிலிருந்த எனது அடுத்த படைப்பு ‘உயிர் பயணம்’ நாவலாக இருந்தபோதும், உண்மையில் அது ‘எழுதாத சரித்திரங்கள்’ என்ற அதற்கும் அடுத்ததாய் வெளிவந்த தொகுப்பில் இடம்பெற்றிருந்த  குறுநாவல்களையே  கொள்ளவேண்டும். ஏனெனில் அதுதான் ‘உயிர் பயண’த்துக்கு முன்னதாக எழுதி முடிக்கப்பெற்றது. அவ்வாறான ஒரு படிமுறை வளர்ச்சியில் வந்த எனக்கு ஒரு கருப்பொருள் நாவலாக, குறுநாவலாக அமையவேண்டுமென்ற எந்த ஆரம்பத் திட்டமும் இருப்பதில்லை. அப்படைப்பு சிறுகதையாக இருக்காது என்பது மட்டுமே வடிவம் குறித்தளவில் எனது பிரக்ஞையாகவிருக்கும்.

மனத்தில் திரண்டெழும் ஒரு கரு எழுதுவதற்கான கால அவகாசமும் படைப்பின் அவசமும் இணைந்து வரும்வரை என் மனத்துக்குள் சம்பவ அடுக்குகளால் நிர்மாணமாகிக்கொண்டே இருக்கிறது. அந்த நிலையிலேதான் அது எதுவாக இருக்கப்போகிறதென்கிற அனுமானமும் எனக்குள் எழுகிறது.

ஆனால் எழுத ஆரம்பித்த பின்னரே நாவலின் முழு ஸ்திதியும் கட்டுமானமாகின்றது என்று சொல்லவேண்டும். எடுத்துக்கொண்ட கருவை வெளிப்படுத்துவதற்கான அளவுக்கு, கதையானது நீட்சியோ குறுக்கமோ அடைவது அந்த நிலையில்தான். அதன் பன்முகத் தன்மைக்கான வாய்ப்பும் அப்போதே சாத்தியமாகிறது. அதற்கு மேலேதான் இறுதி வாசிப்பின்போது தேவையற்ற பகுதிகளை நீக்கி நாவலைச் செம்மையாக்குவது நடக்கிறது.

தமிழ் பதிப்புத் துறையில் செம்மையாக்கம் என்ற அம்சம் பெரும்பாலும் சமீபத்திய வரவுதான். அதையும் பெரும்பாலோர் கைக்கொள்வதில்லை என்பது பலரும் அறிந்ததே. இது புனைகதைகளுக்கு மட்டுமில்லை, எந்த எழுத்து வடிவத்துக்கும், கவிதையில் மட்டும் அளவாகவென்பதை அழுத்திச் சொல்லவேண்டும், அவசியமென்று தயங்காமல் சொல்வேன்.

ஆரம்பத்தில் பத்திரிகை சஞ்சிகைகளுக்கான தேவைக்காய் எழுதப்பட்ட தொடர்கதைகளாக பலவும் அமைந்திருந்ததில், ஆங்கிலப் பதிப்புலகத்தில் இருந்த இச்செம்மையாக்க முறைமை தமிழில் தீவிரமாக வளரவில்லையோவென நான் பலவேளைகளிலும் யோசித்ததுண்டு. இளங்கீரனின் நாவல்கள் எல்லாமே தொடர்களாக வெளிவந்தவைதான். ஓரிரண்டு தவிர ஏனையவை நாவலின் தன்மையே படராமல் வெறும் நீள்கதைகளாக அமைந்துவிட்டமை இதன் காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம். இதை உதாசீனம்செய்த பேராசிரியர்கள் க.கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி போன்றவர்களின் தேர்வுகள் இன்று தகர்ந்துகொண்டிருக்கின்றன.

கே.டானியலின் நாவல்கள் தொடராக வெளிவராதிருந்தபோதும், நாவலின் வடிவப் பிரக்ஞை பூரணமாக இல்லாமல் எழுதப்பட்டதில் அவையும் கலா விஷயத்தில் குறைவடைந்து இருந்திருந்தனவாகவே சொல்லத் தோன்றகிறது. இருப்பினும் ‘கானல்’, ‘பஞ்சமர்’, ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’ போன்றவை  ஓரளவு வடிவ நேர்த்தியும்கொண்டு ஆரம்ப கால நவீன ஈழத் தமிழிலக்கியத்தின் தன்மையைச் சொல்லுமளவுக்கேனும் நாவலாக அமைந்தனவென்பதை மறுக்க முடியாது.

இறுதி வாசிப்பின்போது படைப்பாளியே செய்துகொள்கிற செம்மையாக்கம்பற்றித் தவிர, வேறு முறைமைகளை நாம் ஒருபோது அறியாதே இருந்தோம். எனது முதல் நாவலான ‘உயிர்ப் பயண’த்தை வடிவம் கச்சிதமாக அமைந்த நாவலாகச் சொல்ல இப்போது என்னால் முடியாதே இருக்கிறது.

ஆக, மனத்தில் சுருங்க எழுத்தப்பட்டிருந்த கதைப் பின்னல், தக்க ஒரு களத்தில் பாத்திரங்களின் ஊடாட்டங்கள் உரையாடல்கள்மூலமாக தன்னை வெளிப்படுத்தியதாகவே  என் ஆரம்ப கால நாவல்களின் தோற்ற மூலத்தைச் சொல்லவேண்டும்.

இக்காலத்தை நான் பேனாவும், தாளும்கொண்டு எழுதிய காலமாகவும் காண்கிறேன். கணினியில் தட்டச்சு செய்யும் இன்றைய காலகட்டத்தில் செம்மையாக்கத்தில் விமர்சனரீதியாக பிரதியை அணுகக்கூடிய வாசக நண்பர்கள் ஓரிருவரின் உதவியை நாட ஆரம்பித்துள்ளேன். சமீபத்தில் வெளிவந்த ‘கந்தில் பாவை’ நாவல் இவ்வாறு செம்மையாக்கம் செய்யப்பட்டதுதான். நாவலுக்கான ஆய்வுகளைச் செய்வதிலும் நான் இப்போது பின்னிற்பதில்லை. கால இட பேதங்கள் தோன்றாதவாறு சடைந்து அல்லது பூசிமெழுகுகிற இடங்களை என் நாவல்களில் காண்பது இதனாலேயே அரிதாக இருக்கிறதென்பது என் அனுமானம்.  

நாவலெழுதுவதில் இதுவே எனக்கு வசதி. இந்த வசதியே எனது முறைமையாக இருக்கிறது.

 

2.   கேள்வி: ஒரு நாவலின் உள்ளடக்கத்தையும் காலத்தையும் களத்தையும் வடிவத்தையும் பாத்திரங்களையும் எப்போது தீர்மானிக்கிறீர்கள்? அவை எப்படி உங்களிடம் உருவாகின்றன?

 

பதில்: நாவலின் உள்ளடக்கமென்பது  என்னளவில் கருதான். கரு, கதைப் பின்னல் என்பதெல்லாம் ஆய்வுநிலைக்குரியவை. படைப்பாளியாக அவை என் அக்கறைகளாக ஆவது குறைவு. நாவலின் வாசகனும், ஆய்வாளனும் கொள்ளவேண்டிய  நுண்துறைகளே அவை. என்னுடைய அக்கறைகளைப்பற்றி மட்டுமே இங்கு நான் சொல்லமுடியும்.

கருவென்பது படைப்பாளியின் கருத்துநிலை சார்ந்ததாகவே உருவாக முடியும். கருத்துநிலை சார்ந்து உருவாகும் கருவுக்கேற்ப சம்பவங்களை உருவாக்கி கதைப் பின்னலை வளர்ப்பதென்றும், சம்பவத்திலிருந்து கருவினை உருவியெடுத்து நாவலைப் புனைவதென்றும் இருவேறு நிலைப்பட்டன படைப்புநிலைத் தளங்கள். முன்னதின் விளைவாக நாவலாக விகாசம் பெறாமல் எழுத்து கதையாக அடங்கிவிடுவதும், பின்னதின் விளைவாக உண்டாகும் புனைவெழுச்சி தகைமைகள் உள்ளடங்கிய நாவலாக விரிவுபெறுவதும் இவ்வண்ணமே நிகழ்கின்றன.

அப்படியாயின் ஒரு நாவலின் கரு எனது மனத்துள் எவ்வாறு குதிர்கிறது என இப்போது நீங்கள் கேட்கலாம். அது ஒரு முக்கியமான கேள்வியுமாகும். எப்போது, எந்தக் களத்தை வைத்து ஒரு கரு உருவாகின்றதென எப்படிச் சொல்ல முடியும்? எப்போதும் தோன்றலாம். எப்படியும், எந்தக் களத்தை வைத்தும் உருவாகலாம். ஒரு படைப்பாளியின் வாசிப்பும் அனுபவமும் கொண்ட மனம் அலைகடல்போல் ஓயாது அடித்துக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் உள்ளேயாக. அதை உருவாக்க உடனடிக் காரணம் ஒன்றிருக்கலாம். மனத்திலறையும் அந்த குறிப்பிட்ட நிகழ்வு மையக் கருவாக சிலவேளை மாதங்கள், ஏன், ஆண்டுகள்கூட ஆகக்கூடும். ஆனால் மனத்துள் கரு கருக்கொண்டுவிட்டால் அதன் பின்னர் அவசம்தான்.   படைப்பின் அவசம்.

ஒரு வித்தியாசமான அனுபவத்தை பல காலமாக நான் யோசித்துவருகிறேன். இலங்கையில் சிறுகதைப் படைப்பாளனாக உருவாகிய நான், இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர்தான் என் முதல் நாவல் ‘உயிர் பயண’த்தை எழுதினேன். நான் தமிழ்நாட்டிலும் அதன் மக்களிடையேயும் வாழ்ந்துகொண்டிருந்தபோதும், நாவலின் கருவும் பாத்திரங்களும் என் மண்ணையும் மக்களையும் சார்ந்தனவாகவே இருந்தன. கனடாவுக்குப் புலம்பெயரந்த பின்னர் நான் வெவ்வேறு எழுத்துத் துறைகளுள் நுழைந்திருந்தாலும், எழுதிய நாவலான ‘நதி’யில் கூட மூன்றில் இரண்டு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பாத்திரங்களாக, களம் கனடா மண்ணாக இருந்தபோதும், ஆகியிருந்தன. பார்க்கிறபோது மரமாக எந்த மண்ணில் நான் நின்றிருந்தபோதும், எனக்கு உயிர்ச்சத்தளிப்பதாக எனது சொந்த மண்ணே இருந்திருப்பது தெரிகிறது. அது அப்படித்தான் இயல்பில் இருக்கவும் முடியும். மரம் எங்கோ நின்று அசைகிறது, ஆனால் அதன் உயிர்த்துவம் சொந்த மண்ணில் கொண்டுள்ள வேர்களிலிருந்து பொசிகிறதென்பது விந்தையில்லாமல் வேறென்ன? 

இவ்வாறு மனத்தில் உண்டாகும் கருவொன்று பொதுப்புத்தி சார்ந்து நாவலாக உருவாகின்றபோது, அதன் வீச்சுக்கு பெரும்பாலும் இடம் இருப்பதில்லை. அது தத்துவப் புலங்கொண்டு இருக்கவேண்டும். அவ்வாறான கருவைச் சுற்றி தர்க்கரீதியாக கட்டியெழுப்பப்படும் நிகழ்வுகளே நாவலை உருவாக்குகின்றன எனச் சொல்ல முடியும். என்னளவில்தான் இப்படி. வேறுபேருக்கு வேறுமாதிரியும் அமைய முடியும். ஆனாலும் இந்த அடிப்படையான விஷயத்தில் மாற்றமிருக்காதெனவே நம்புகிறேன்.

எப்போதும் மனத்தில் எழுந்திருந்த வடிவமே எழுதி முடிக்கப்பட்ட பிரதியாக   என்னிடத்தில்  உருவங்கொண்டுவிடுவதில்லை. மேலோட்டமாகவே நாவல் படைப்பாளியின் மனத்தில் இருந்திருக்கும்.  முடிக்கப்படும் பிரதி அதுவாக பெரும்பாலும் இருப்பதில்லை. படைப்பின் வேகத்தில் அந்த வேலை   சம்பவிக்கிறது.

அடியெடுத்துக் கொடுக்க ஆரம்பிப்பது, கனவில் தோன்றுவதுபோன்ற ஐதீகமெதுவும் படைப்பிலக்கியத்தில் இல்லை. நவீன படைப்பிலக்கியக் கோட்பாடுகள் அவற்றை ஒப்புக்கொள்ளவும் மாட்டா. இதற்கு மேலே படைப்பாளியின் ஆற்றலுக்கும், முயற்சிக்கும், அவன் கற்ற பட்ட அறிவுக்குமேற்ப நாவல் கட்டியெழுப்பப்படுகிறது. கதைப் பின்னல் அமையும் களம் காலத்தை அவனுக்குள் செறிக்கிறது. காலம் அதற்கான வரலாற்று மொழியைக் கண்டடைகிறது. நாவல் உருவாவது இவ்வண்ணம்தான்.

சுயசித்திரவதை ஒரு படைப்புக்கு மிகமிக அவசியம். அதை படைப்பாளியைக் கொன்று படைப்பு உருவாகிறதென நான் மௌனமாய்ச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

 

3.   கேள்வி: நாவலின் மையம் என்பது என்ன? மையத்தைச் சிதைக்கின்ற நாவல்கள் எப்படியாக இருக்கும்?

பதில்: கருவே நாவலின் மையமாக இருக்கிறது. இந்த மையத்தைச் சுற்றி எழுப்பப்படும் நிகழ்வுகள் நாவலாய்க் கட்டுமானமாகின்றன. இது தவிர்க்க முடியாதபடி ஒற்றைப்படையில் கதையினை நகர்த்திச் சென்றுவிடுகின்றதாயினும், மரபார்ந்த ரீதியிலான இவ்வகை ஒற்றைப்படை நாவல்களும் சிறந்த இலக்கியப் பிரதிகளாய் நின்று நிலவுகின்றன. நவீனத்தின்  இலக்கியப் போக்கு இவ்வாறாகவே தோற்றம் கொண்டது. நேர்கோட்டு கதைசொல்லல் ஒரு அம்சமாக இவ்வகை நூல்களில் அமைந்திருக்கும். காவியத்தின் நவீனகால உரைப் பிரதிகளாக இவற்றை அடையாளப்படுத்த முடியும்.

இவற்றை மீறிய நாவலுருவாக்கம் 1970களுக்குப் பின்னர், அமைப்பு மையவாதத்தின் வருகையோடு, ஆரம்பித்ததாகக் கொள்ள முடியும். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியே பின்அமைப்புவாதமெனில், அதுவே வாசகப் பிரதியையும் எழுத்தாளப் பிரதியையும் வேறுவேறாக இனங்கண்டது. அதுவே பல்படைத் தன்மையையும் மையமழிதலையும் பிரதியின் முக்கியமான அம்சங்களாக வரையறை செய்தது. ஒரு நல்ல நாவல் தன் கருவை விரித்துச் செல்கிற வேளையிலேயே அதனுட் பிரதியாக வேறொரு கருவையும் சுமந்து சென்றிருக்கும். இவ்வாறு பல்விகாசம் கொள்ளும் பிரதிகள் inter textual பிரதிகள் எனப்படுகின்றன. இதை முக்கியமான விதியாக்கியது பின்நவீனத்துவம்தான்.

பின்அமைப்பியல் ஆசிரியனின் மரணம்பற்றி அறிவித்தபோதே, வாசகன் பிறந்துவிட்ட நிகழ்வு நடந்துவிட்டது. அவன் பிரதியின் வாசிப்பைப்போல் விமர்சனத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டான். மரபார்ந்த நாவல்களின் வீழ்ச்சி அன்றிலிருந்துதான் துவங்கியது.

இவ்வளவு விபரங்களும் நாவல் எழுது முன்னர் தெரிந்துகொள்ளப்பட வேண்டியவையல்ல. இவை விமர்சகர்களுக்கானவை. ஆயினும் இந்த அறிவு பல்வேறிடங்களில் படைப்பாளியைக் கைதூக்கிவிட வல்லது.

இலக்கியமென்பது உயர்ந்தோர் மேற்றே என இருந்த நிலைமை பின்நவீனத்துவத்தின் வருகைக்குப் பின்னாலேயே உடைந்து சிதறியது. விளிம்புநிலை மக்களின் வாழ்வும் எண்ணங்களும், பலரும் காணக் கண்கூசியிருந்த பால்நிலைப் பிரச்னைகளும், விளிம்புநிலை மனிதர்களின் மன  அவசங்களும்,  வாழ்முறையின் இழிதகைமைகளும் இலக்கியமாகியது அப்போதுதான் நடந்தது.

வாழ்க்கை எவ்வாறு ஏற்றம் இறக்கம் இன்பம் துன்பம் போன்றனவற்றோடு  இருக்கிறதோ, பிரதியும் அவ்வாறே இருக்கவேண்டுமென கோட்பாடுகள் கிளம்பின. இலக்கியம் அதுவரை சொல்லாது விட்ட வாழ்க்கையின் குரூரங்களை அது அடையாளங்கண்டு ஆரவாரமெழுப்பியது. வாழ்வின் அபத்தங்களும், மனநிலைப் பிறழ்வுகளும் பாடுபொருளாயின. அது அதுவரையிருந்த மரபார்ந்த நாவல் இலக்கணங்களை அடித்து  நொருக்கியது. மரபுமீறியதும் மரபு மாறியதுமான படைப்புக்கள் உருவாகத் தொடங்கின. இதன் அனுசரணை காரணமாகவே பல்பிரதித் தன்மையும், மய்யமழிந்த, நேர்கோட்டுத் தன்மையற்ற பிரதிகளும் இலக்கிய உலகில் வலம்வரத் துவங்கின. இது ஆங்கில மற்றும் மேற்குலக மொழி இலக்கியங்களிலேயே ஆரம்பத்தில் பயில்வாகின. தமிழிலக்கியம் அதை உள்வாங்கவே கால் நூற்றாண்டு காத்திருக்கவேண்டியதாயிற்று.

 

4.   கேள்வி: காலத்தையும் களத்தையும் மனங்கொள்ளும்போது புனைவுக்குப் பதிலாக வரலாற்றுத் தன்மை அதிகமாகிவிடக்கூடிய அபாயம் உண்டல்லவா? நாவல் சுட்டுகின்ற காலத்தையும் களத்தையும் அடையாளப்படுத்துவதென்பது எழுத்தாளருக்கு ஒருவகையான அழுத்தமாக – சுமையாக ஆகிவிடுமே! புனைவின் சாத்தியங்களும் சுதந்திரமும் அப்போது குறைந்துவிடலாம் அல்லவா?

பதில்: யதார்த்தரீதியிலான சமகால வரலாற்று நாவல்களில் புனைவென்பது உப்புப்போல அமையவேண்டிய அவசியம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆயினும் சமகால உலக இலக்கியத்தில் புனைவெழுத்தில் அதி உயர்ந்த பட்ச சாத்தியங்கள் அடையப்பட்டாகிவிட்டன. அதற்கான வகைமைகள் அங்கே அதிகம். மிகை யதார்த்தம், மாந்திரீக யதார்த்தம், மாற்று வரலாற்றுப் புனைவு (Alternative historical novel) என பல்வேறு வகைமைகள் மூலம் புனைவுக்கான வெளி அதிகமாகியிருக்கிறது. Master of Alternative history எனப்பட்ட ஹரி என்.டேர்டில்டோவின் நாவல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 

பிலிப் ரொத் எழுதிய The Plot against America இன்னொரு உதாரணம்.  

மற்றுமொரு உதாரணம் எச்.ஜி.வெல்ஸின் Men Like Gods நாவல். இதில்தான் வெல்ஸ் para time travel machine ஒன்றைக் கண்டுபிடித்திருப்பார். இதுவே பின்னால் வந்த பல time travel நாவல்களுக்கும் மூலமாய் இருந்தது. இவ்வகை நாவல்கள் பௌதீகமார்த்மாய் சாத்தியப்பட முடியாதனவெனினும் விஞ்ஞானத்தால் எண்பிக்கப்படக்கூடிய புனைவின் மீது எழுந்தனவாகும்.

இதுபோல் மாந்திரீக யதார்த்த வகை நாவல்களைப் படைத்த மார்க்வெய்ஸ், ஜுவான் ரூல்போ ஆகியோரின் எழுத்துக்கள் இன்னொரு வகைமையை உருவாக்கின. அதன்மூலம் இலக்கியம் புனைவின் அதியுச்சம் அடைந்தது.

ஆயினும் யதார்த்தம் என வருகிறபோது அதற்கான புனைவு வெளி குறைவென்பதை மறுப்பதற்கில்லை. ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ புராணிகத்திலிருந்து தோன்றுவதெனினும் அதுவும் மாற்று வரலாற்றுப் புனைவு நாவல்தான். இன்னொன்று சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’. தமிழில் இந்நாவல்கள் புனைவில் அடைந்த உச்சம் அபாரமானது. இதையே யதார்த்த வகையான நாவலில் சாதாரணமாக அடைந்துவிட முடியாது.

புனைவென்பது கலை இலக்கியம் என்று வந்துவிட்டால் தவிர்க்க முடியாதது என்றே படுகிறது. மேலும் எதில்தான் புனைவு இல்லை? விவரண சினிமாவிலும், நேர்காணலிலும், தன்வரலாற்று நூல்களிலும்கூட புனைவு இருக்கிறதென இன்று வாதிப்பிருக்கிறது. அதன் தவிர்ப்பு கலை இலக்கிய விவகாரங்களிலோ மிகுந்த சாத்தியமற்றது. யதார்த்த வகை நாவல் கால இட வழுக்கள் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே அதை அளவோடு எடுத்துக்கொண்டிருக்கின்றன.

 

5.   கேள்வி: அனுபவத்துக்கும் புனைவுக்குமிடையில் எப்படி இயங்குகிறீர்கள்?

பதில்: அனுபவம் புனைவு இரண்டுமே வேறானவைதான். ஆனால் நாவலின் ஒரு சம்பவம் புனைவா எதார்த்தத்தில் நடந்ததா என்பதை எப்படித் தீர்மானிப்பது? ஒருவருக்கு புனைவாகவும் இன்னொருவருக்கு  எதார்தமானதாகவும் அது இருக்கிறதல்லவா? எனது அனுபவங்கள்   வித்தியாசமானவை. வித்தியாசங்களையே தேடி நானும் நகர்ந்துகொண்டிருக்கிறேன். அது எதன் காரணமாகவுமில்லை. என் இயல்பு அது.

சில பரிசோதனைக் காரியங்களில் இறங்கி எல்லாம் தலைகீழாகிப் போக விழித்துக்கொண்டு நிற்பதுகூட எனக்குப் பிடிக்கும். ஒவ்வாத ஒரு காலத்தில் கொழும்பிலிருந்து 27 மைல் தூர கம்பஹாவின் ஒரு குக்கிராமத்திலிருந்து இரவிரவாக கால்நடையில் உயிர்ப்பயத்தோடு கொழும்பு சேர்ந்த அனுபவம் எவருக்காவது புனைவாக இருந்தால் என்ன செய்ய முடியும்? இன்று இலங்கையின் இறுதிப் போரில் எத்தனை பேருக்கு எத்தனை நம்பமுடியாச் சம்பவங்கள் நடந்திருந்தன? வேறு மனிதர்கள் புனைவு என நினைக்கக்கூடியவை எல்லாம் அங்கே யதார்த்தத்தில் நிகழ்ந்தனவே! யாராவது அவற்றைப் புனைவென்று சொன்னால் படைப்பாளி என்ன செய்ய முடியும்? ஆனால் நிபந்தனை உண்டு. படைப்பாளிக்கு அந்த யதார்த்தத்தை மீறிய நிகழ்வை எழுத மொழி கைகொடுக்கவேண்டும். மொழி வலுவிழந்துவிட்டால் யதார்த்தம்கூட புனைவாகிவிடும். புனைவை எழுதுவதற்கும்கூட மொழி முதன்மையாகக் கைகொடுக்க வேண்டுமென்பது வேறு விஷயம்.

எங்கே பயமிருக்கிறதோ அந்த இடத்திலேயே வாழ விரும்புகின்றேன் என்றான் ரூமி. வித்தியாசமாகவே வாழ்ந்து, வித்தியாசமாகவே இறக்க விரும்பி, வித்தியாசமாக தானே  எழுதிய கல்லறை வாசகத்துடன் அடக்கமும் ஆகியவன் மாண்ட்டோ. புனைவை மீறியும் சிலரின் அனுபவங்கள் நடப்பாக இருப்பது இதனால்தான். இன்னொரு மொழியில் சொன்னால், புனைவுக்கும் அனுபவம் வேண்டும்.

 

6.   கேள்வி: ‘கனவுச் சிறை’ தனித்தனியான நாவல்களாகவும், முழுமையான ஒரு நாவலாகவும் எப்படி மாறியது? தொடக்கத்திலேயே அப்படியான ஒரு தீர்மானம் இருந்ததா? அல்லது முதல் நாவல்களை எழுதும்போது இறுதி வடிவம் எதிர்பாராமல் வந்ததா?

பதில்: நடமாட்டம் குறைந்து படுக்கையிலேயே பெரும்பாலும் கிடக்க நேர்ந்த ஒரு சுகவீன காலத்தில் ‘கனவுச் சிறை’யை எழுதத் தொடங்கினேன்.  புல்ஸ்காப் அளவுத் தாளில் 2000 பக்கங்களுக்கு நாவல் வந்திருந்தது. அளவுபற்றிய பிரக்ஞை என்னிடத்தில் அறவே இருந்திருக்கவில்லை. ஒரு பெரிய நாவலை எப்படி, எந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுவிட முடியும்? ஏற்கனவே எனது சிறுகதைத் தொகுப்பையும் குறுநாவல் தொகுப்பையும் வெளியிட்டிருந்த குமரன் பதிப்பகம், காந்தளகம், ராஜேஸ்வரி புத்தக நிலையம், மித்ர போன்றவற்றால் அந்தளவு பெரிய நூலை வெளியிட்டுவிட முடியாதென்பது எனக்குத் தெரியும். பெரிய பதிப்பகங்களை அணுகத் திட்டமிருந்தது. ஆனால் அது நாவல் எழுதி செம்மையாக்கமும் முடிந்த பின்னால் வந்ததுதான்.

இரண்டு ஆண்டுகள் பிடித்திருந்தன நாவல் பதிப்புக்குத் தயாரென நான் எண்ணுகிறவரையில். நாவலை திரும்பத் திரும்ப கையாலேயே எழுதினேன். ஏறக்குறைய பத்தாயிரம் தாள்களை முடித்து ‘கனவுச் சிறை’  நாவலாக கையிலெடுத்த வேளை அது இரண்டாயிரம் பக்கங்கள் வந்திருந்தது.

தொண்ணூறுகளின் பின் இலங்கைத் தமிழர் நிலையொன்றும் தமிழ்நாட்டில் நல்லமாதிரி இல்லை. தமிழுணர்வுள்ள பல தமிழ் நாட்டவருக்கே அவ்வாறான நிலை இருந்ததே. ஆக, நான் அணுகிய பல பதிப்பகங்களும் நாவலின் பக்கத்தைக் காரணம் காட்டி வெளியிட பின்னின்றபோது, நாவலின் பின்னால் இருக்கக்கூடிய அரசியலில் அவர்களுக்கிருந்த அச்சமே உண்மையான காரணமெனப் புரிந்த நான், தனித்தனிப் பாகங்களாயாவது அது வெளிவரட்டுமென நினைத்து நண்பர்கள் மூலம் முன்வெளியீட்டுத் திட்டமறிவித்து வாசகர்களதும், நண்பர்களதும், சில சிறிய அமைப்புகளினதும் உதவியோடு முதல் பாகத்தை 1998இல் வெளியிட்டேன். இரண்டாவது பாகம் அதே ஆண்டு டிசம்பரில் வெளிவந்தது. இதற்கிடையில், ‘கனவுச் சிறை’ முதல் பாகம் நூலக ஆணைக்குழுவால் ஏற்கப்பட்டதோடு, தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையினது அவ்வாண்டுக்கான நாவல் பரிசும் பெற்றது.

மேலே பதிப்பகங்கள் மூலம் ஏனைய மூன்று பாகங்களையும் வெளியிட தடையிருக்கவில்லை. ஐந்து பாகங்களும் தனித்தனியாக வெளிவந்த கதை இதுதான்.

நாவலை எழுதியது, வெளியிட்டதெல்லாம் பிரயத்தனங்களின்மீது நிகழ்ந்த சாத்தியங்களே.

பல வாசகர்களுக்கு ஏதோ ஒரு பாகம் மட்டுமே வாசிக்கக் கிடைத்திருக்கிறது. சென்றவிடமெல்லாம் இது பற்றிய பேச்சைக் கேட்டே ‘கனவுச் சிறை’யின் ஒற்றைத் தொகுப்புக்கான முயற்சியை நானெடுத்தேன். கடைசியில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம்  2014இல் அது நிறைவேறியது.

நான் ஏற்கனவே சொன்னதுபோல் நாவலெதுவும் முன்னதாகவே முழுமையான வடிவம் பெற்றுவிடுவதில்லை.  அது ஓர் அசுர முயற்சியின் வெளிப்பாடு. கதையையும் கட்டமைப்பையும்போல் நாவலில் கருத்துக்கும் பிரதான இடமுண்டு. அதன் தத்துவ தர்க்க புலங்கள் வலுவாக இல்லாவிட்டால் அது ஆங்காங்கே சரிந்து விழுந்துகொண்டேதான் இருக்கச்செய்யும்.

‘கனவுச் சிறை’யின் அமைப்பில் ஒரு வித்தியாசத்தை கண்டிருப்பீர்கள். அதன் குறும்பகுதி ஒவ்வொன்றும் இவ்விரண்டு ஆண்டுக்கால இடைவெளியில் அமைந்திருக்கும். உதாரணமாக, முதலாவது பாகத்தின் முதலாவது பகுதி 1981இல் ஆரம்பிக்கிறது. அதன் அடுத்த பகுதி 1983இலும், அடுத்த பகுதி 1985இலுமென 1987,1989,1991 சென்று 2001இல் முடிவுற்றிருக்கும். அதனால் 1982,1984 என அததற்கும் முந்திய ஆண்டின் நிகழ்வுகள் ஒரு பின்னோட்டத்திலேயே சொல்லப்பட்டிருக்கும். இவ்வாறு இரண்டாண்டுகள் முன்னே, ஓராண்டு பின்னே, பிறகு இரண்டாண்டுகள் முன்னேயும் ஓராண்டு பின்னேயுமாய் நாவல் முழுக்க நகர்ந்திருப்பது ஒரு கட்டுமான வித்தியாசம்.

மேலும் அதன் மேலோட்டமான கதைக்கும் உள்ளேயாக வேறொரு பிரதி ஓடியிருக்கும். அது சிங்களவர்களின் கதை. அது இரண்டு தேரர்கள்மூலமான உரையாடல்களுக்கும் ஊடாக நகர்ந்திருக்கும். போரின் பிரதாபங்களையல்ல, போரின் மனித அவலத்தைச் சொல்ல வந்த நாவல் அது. பரவசத்துக்கு இடமில்லாதது. போரின் பரவசத்தை நாடிவரும் வாசகன் இங்கே ஏமாறித்தான் போவான். மேலும் அது மரபுகளை மீறியல்ல, செவ்வியல் இலக்கியமாய் தன் வடிவத்தை எடுத்துக்கொண்டு வந்த நாவலும் .

அத்தனை அம்சங்களிருப்பினும் எவற்றுக்கும் என்னிடத்தில் முன் திட்டம் இருந்திருக்கவில்லை. அந்தக் கணத்தில் அவ்வாறு தோன்றிற்று. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கிறது. அவ்வளவுதான்.

 

7.   கேள்வி: எந்தமாதிரியான நாவலை அல்லது நாவல்களை எழுதவேணுமென்று விரும்புகிறீர்கள்?

பதில்: மனத்தில் தோன்றும் கருத்துக்கமைந்த நாவலே விருத்தியாகும்.  இதுபற்றித்தான் எழுதவேண்டுமென்ற திட்டமேதும் என்னிடம் இருப்பதில்லை. என்றாலும் நாட்டின் அரசியல் குறித்து ஓர் ஆதிச் சீற்றம் மனத்தின் ஆழத்துள்  ஆதிதொட்டு  இருந்துவந்ததாயே இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அது பின்னாலேற்பட்ட மார்க்சியத்தினூடான அரசியல் தெளிவினால் இன அரசியலாகக் குறுகாமல் போனமை அதிர்ஷ்டவசமானதென்று நம்புகிறேன். ஆனாலும் பாவப்பட்ட ஜென்மங்களாய்  தமிழர்கள் பரதவித்த வேளையிலெல்லாம் நான் பதறித்தான் போயிருக்கிறேன்.

1983 கலவரத்தில் மலைநாட்டு தமிழருக்கு ஏற்பட்ட பாதிப்பும் அழிவும் புலப்பெயர்வும் பொருளாய் என்னால் புனையப்பட்டதுதான் ‘விதி’ நாவல். இதை அரசியல் சொல்வதற்காக நான் எழுதவில்லை. ஆனாலும் இது ஒரு அரசியலைச் சொல்லிக்கொண்டிருந்தது. அரசியல் என் படைப்புகளில் பொத்துக்கொள்ளாமல் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த நுண்ணரசியல் ‘கனவுச் சிறை’யிலும் இருக்கிறது.

‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ என்ற எனது நாவல் சாதிப் பிரச்னையை, அது குறித்த போராட்டங்களைப் பேசியதாக வாசித்த நண்பர்கள் சொன்னார்கள். இல்லை. அது அப்படியல்ல. அது உட்பிரதியாகக் கொண்டிருந்தது இனத்துவத்தின் முறுகல் எவ்வாறு, எப்போது தீவிரம் கொண்டெழுந்ததென்பதின் வரலாற்றைத்தான். அதனால்தான் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ என்ற தலைப்பையே நான் அதற்கு வைத்தேன்.

மஹாபாரதம் குறித்த என் நீண்ட கால வாசிப்பு அதை ஒரு மறுவாசிப்புக்குட்படுத்த எண்ணியபோது ‘கதா காலம்’ பிறந்தது. அதற்கும் எவ்வளவோ காலத்துக்கு முன்னால் விவிலியத்தில் பிரபலமான மக்தலேனா கதையை வைத்து ‘தீர்ப்பு’ என்ற மறுவாசிப்பு சிறுகதையை எழுதியிருக்கிறேன். அது சில இந்திய மொழிகளிலும், ஆங்கில இந்தியச் சஞ்சிகையான ‘மனுஷி’யில் ஆங்கிலத்திலும் வந்ததாக நண்பர்கள் பின்னால் சொன்னார்கள். அது , எனது மஹாபாரத மறுவாசிப்பான ‘கதா கால’த்தை எழுதுவதற்கு ஒரு உத்வேகத்தைத் தந்திருந்தது மெய். ‘கதா கால’த்துக்குச் சில வருஷங்களுக்குப் பின்னால் ‘லங்காபுரம்’ என்ற பெயரில் ராவணன் கதையை மறுவாசிப்பு செய்து நாவலாக எழுதினேன்.

அண்மையில் வெளிவந்த ‘கந்தில் பாவை’ 135 ஆண்டுக்கால வெளியில் அமெரிக்கன் மிஷனரிகளின் வருகைக் காலத்திலிருந்து ஆரம்பித்து இரண்டாயிரத்து பதினைந்தாமாண்டுவரை கதையை விரித்தது. நான் பிறந்து வளர்ந்து விளையாடிய மண்ணில் என் சமூகம்கொண்ட வாழ்வின் விஸ்தாரங்களைக் காண எண்ணியதின் விளைச்சல் அது. மற்றும்படி எதனையும் அது குறிவைத்துக்கொண்டு புனையப்படவில்லை. ஆனால் சாதிபற்றி, அன்றைய சமூகத்திலிருந்த  பெண்களின் நிலைபற்றி, சமூக அறங்கள்பற்றி, யுத்த காலத்தில் ஏற்படும் தனிமனித மனநிலைச் சிதைவுகளின் அவலம்பற்றியென அது பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது. இவ்வாறு நான் எழுதியவை பல்வேறு விஷயங்களும் குறித்த நாவல்களே.

ஆக எதை எழுதுவதென்ற விருப்பங்கள் என்னில் இல்லாமலிருந்தாலும், பூர்வீகங்களை நோக்கி நகரும் கதைகளில் எனக்கொரு பிடிப்புண்டுதான்.

 

8.   கேள்வி: உங்களை அதிகம் பாதித்த நாவல் எது? எழுத்தாளர் யார்?

பதில்: பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாவல்கள் ஒரு வாசகனாய் என்னைப் பாதித்திருந்தன என்பது நிஜமே. ஆனால் என் வாசிப்பின் வளர்ச்சியில் அவை தம்மிடமிழந்து மனத்தைவிட்டகன்று போயின.  கடந்த பத்தாண்டு  வாசிப்பில் என்  மனத்தை அசைக்குமளவு பாதிப்பைச் செய்த ஒரு நாவல் உண்டு.

சிமோன் டி போவுவாவை அவரது ‘The Second Sex‘ நூல்பற்றி அறிந்ததிலிருந்து சிறந்த பெண்ணிய தத்துவவியலாளரெனவே எண்ணியிருந்தேன். ஆயினும் அவரது ‘The Blood of Others’ நாவலை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கியபோது அதை பெரிய ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்தேன் எனச் சொல்லமுடியாது. ஆனால் வாசிக்க ஆரம்பித்த பின்னால் அது நீண்ட காலத்துக்கு என் மனத்தை அதிர்ந்துகொண்டிருக்கவே வைத்துவிட்டது. இத்தனைக்கும் அது பிரெஞ்சு இலக்கியத்திலோ ஆங்கில மொழிபெயர்ப்பு இலக்கியத்திலோ அவ்வளவு பிரபலப்பட்ட படைப்புமல்ல. ஆம். இந்த தேர்வு முறைகளிலும் வைப்பு முறைகளிலும் எங்கேயும்  ஒரு குறைபாடு இருக்கிறதுதான்.

உணர்வுகள் கிழக்கென்ன மேற்கென்ன, ஒன்றாகவே இருக்கின்றன. கலாச்சாரங்கள்தான் அவற்றைத் தாங்குவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான விதங்களை வேறாக்குகின்றன என்ற ஞானத்தை எனக்குத் தந்த நாவல் அது. அதை இற்றைவரை மூன்று நான்கு தடவைகள் வாசித்துவிட்டேன். ஒவ்வொரு தருணத்திலும் இன்னுமின்னும் ஆழ உணர்ந்துகொண்டே இருக்கிறேன். ஒரு படைப்பாளியாய் என்னை சிறுக்கவைத்த நாவலும் அது. எவ்வாறெனில், அவ்வாறான ஒரு நாவலை என்றைக்காவது என்னால் எழுதமுடியுமா என திகைக்கவைத்ததின் மூலமாக.

மாப்பஸானின் சிறுகதைகளை விரும்பி வாசித்திருக்கிறேன். அது தவிர வேறு பிரெஞ்சுமொழிப் படைப்பாளிகளின் சிறுகதைகளும் அக்காலத்தில் தொகுப்பாக வந்திருந்தன. அவற்றையும் வாசித்திருக்கிறேன். ஆனால் சிமோன் டி போவுவாவின் நடை அற்புதம். அது மனத்தைத் தொட்டு அறிவால் எழுதிய நாவல் என்பதே அதுபற்றி ஒட்டுமொத்தமாக எனது அபிப்பிராயம்.

பிடித்த எழுத்தாளர்களாக பலர் இருந்திருக்கிறார்கள். பதினைந்து வயதுக்கு முன்னால் மேதாவி, பி.எஸ்.ஆர் வகை. அதற்குமேலே அகிலன், கல்கி, நா.பா., Ian Fleming, Harold Robins போன்றோர். பின்னால் ஜெயகாந்தன், எஸ்.பொ., ஆர்.ஷண்முகசுந்தரம், D.H.Lawrence, அன்டன் செகாவ், டால்ஸ்டாய் போன்றோர். பிறகு ஜானகிராமன், கு.அழகிரிசாமி, லா.ச.ரா., சுந்தர ராமசாமி ….. ஆகியோர். எல்லோருமே பிடித்த எழுத்தாளர்கள்தான். ஆனால் மனத்தில் யாருக்கும் தவிசுகள் இல்லை. இன்று எங்கிருந்தோ ஒரு நல்ல நாவல் வருகிறது. நல்ல படைப்புத்தான் என எண்ணிக்கொண்டிருக்கையில், இன்னொரு சிறந்த நாவல் வருகிறது. நல்ல நாவல்களைத் தேடிக்கொண்டிருக்கிறது மனம். நல்ல நாவல்களும் ஊதுகுழல் ஒலிகளையும், விளம்பரங்களையும் மீறி நல்ல வாசகனை வந்தடைந்துவிடுகின்றன. நல்ல படைப்பென்பது பூமிபோல. தன்னச்சில் நின்று சுழன்றுகொண்டே பூமியானது சூரியனைச் சுற்றுவதுபோல, நல்ல படைப்பும் புத்தகக் கண்காட்சிக்கான அதிரடி விளம்பரங்களைத் தாங்கிக்கொண்டும் காத்திரமான இலக்கியப் பங்களிப்பை தந்துகொண்டிருக்கின்றது. நிலைமை இப்போது இதுதான். நல்ல ஒரு பிரதிக்கு பரவசம் தரும் பிரதியோடு ஒரு உயிர்த்திருத்தலுக்கான யுத்தமே புரியவேண்டியிருக்கிறது. காலம் அதன் சார்பில் நின்று வல்லியதை உயிர்வாழ வைக்கிறது.

 

9  கேள்வி:  இலங்கை இந்தியா கனடா என மூன்ற நாடுகளில் வாழ்ந்த அனுபவம் உங்களுக்குண்டு. இதில் படைப்புச் சாத்தியங்களை அதிகமாகத் தரக்கூடிய களமாக எந்த நாடிருக்கிறது? அதற்கான காரணம் என்ன?

பதில்: எந்த மண்ணில் இருந்து, எந்த மண்ணில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் சொந்த மண்போல் படைப்புக்கான சாத்தியங்களைத் தரக்கூடிய மண் வேறெதுவுமாக இருக்கமுடியாது என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. நீண்டகாலம் தமிழ் நாட்டில் வசித்திருக்கிறேன். ஆனாலும் ‘நிலாச் சமுத்திரம்’ தவிர்ந்த என் ஏனைய நாவல்களெல்லாவற்றினதும் களம் இலங்கையாகவே இருந்திருக்கிறது. பாத்திரங்களும் இலங்கையராகவே இருந்திருக்கின்றன. சிறுகதைகளிலும் சில தவிர பிற அனைத்திலும் இலங்கையரையும் இலங்கை அகதிகளையும் மய்யமாகக் கொண்ட பாத்திரங்களே இடம்பெறுகின்றன. களம்தான் கதைக்கேற்றதாய் தமிழ்நாட்டு மண்ணை சிலவேளை தேர்ந்தெடுத்திருந்தது.

இந்த விதியிலிருந்து பெரும்பாலும் எந்தப் படைப்பாளியாலும் விலகிவிட முடிவதில்லையென்றே நினைக்கிறேன். நெரூடாவாக இருந்தாலும், மார்க்வெய்ஸாக இருந்தாலும், சல்மான் ரூஷ்டியாகவோ நைப்பாலாகவோ இருந்தாலும்தான் அப்படி. இந்த நிலைமை மாற தலைமுறைகள் கடக்கவேண்டுமென எண்ணுகிறேன். என் வாழ்வு எங்கிருந்தாலும்தான் வேர் நான் பிறந்த மண்ணிலேயே ஆதாரம் கொண்டிருக்கிறது. அதன் எழுச்சி வீழ்ச்சிகள் அதனால்தான் ஒருவரை ஆழமாகப் பாதிக்கின்றன. 9\11 சம்பவமோ, சிரிய நாட்டு அகதிகளின் நிலைமையோ, ஈராக் சதாமின் முடிவோ எதுவும் ஒருவரைப் பாதிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட முள்ளிவாய்க்காலில் என் மக்கள்பட்ட அழிவும் அவலமும்தான் என்னைப் பதறவைத்தது.

இதுதான் வேரடி மண்ணின் ஈர்ப்பு.

 

10. கேள்வி: இந்தியாவிலே நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். உங்களுடைய நாவலொன்றையோ அல்லது வேறு யாருடைய கதையையோ ஒரு திரைப்பிரதியாக எழுதவேணுமென்ற எண்ணம் ஏற்படவில்லையா?

பதில்: எனக்குள்ள திரைப்படத் துறையின் சம்பந்தங்கள் தெரிந்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்களென எண்ணுகிறேன். நல்லது. ஒளிமறைவின்றிச் சொல்லப்போனால் எனது முதல் திரைப்படத் துறையின் தொடர்பு எதிர்பாராதவிதமாக ஏற்பட்டதுதான். அது மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் அறிமுகம் காரணமாக ஏற்பட்டது. அம்பலம்.காமில் வெளிவந்த சிறந்த படைப்புகளின் தொகுப்பில் எனது சிறுகதை ‘விலை’ இடம்பெற்றதிலிருந்து அவருக்கும் எனக்குமிடையில் வலுவாகியிருந்த அணுக்கம் காரணமாக ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தில் இலங்கைத் தமிழ் சார்ந்த உரையாடலில் ஈடுபட சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. முதலில் மறுத்த என்னை ஒரு எழுத்தாளனுக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தரக்கூடிய துறை அதுவெனக் கூறி என்னை அவர் இணங்கச் செய்தார். அதுவரை சாளரங்கள் மூலமாக தமிழ்த் திரையுலகைக் கண்டுகொண்டிருந்த நான், அதன் அகல்விரிவை அப்போதுதான் கண்டேன். பின்னால் In the Name of Buddha என்ற இன்னொரு சினிமாவிலும் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது.

என் ஒரு சிறுகதையைப் படமாக்குகிறதும், பாலுமகேந்திராவின் கதைநேரத்தில் எனது ஒரு சிறுகதையைத் தயாரிப்பதுமான முயற்சிகள் இருந்துகொண்டிருந்தன. ஆனால் எனக்குத்தான் மேலே இந்தியாவில் தங்க வாய்ப்பு வரவில்லை. இலங்கை வந்து விசாவுக்காகக் காத்திருந்து கடைசியில் கனடா வரவேண்டியதாகிவிட்டது. இங்கேயும் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம். ஆம்னி தொலைக்காட்சியின் ஆரம் தமிழ் ஒளிபரப்பில் செய்தியாளனாக ஓராண்டுக்கும் சிறிது மேலாக வேலைபார்த்தேன்.

என்றாலும் உலக சினிமாவும், மூன்றாம் உலகத் திரைப்படங்களும் கவர்கிற அளவுக்கு திரைப்படத் துறை என்னைக் கவரவில்லையென்பதை நான் சொல்லத்தான் வேண்டும். அது என் வாசிப்புக்கும் எழுத்துக்குமான நேரத்தை விழுங்கிவிடுமென நான் ஏனோ அப்போது நினைத்திருந்தேன். மேலும் அந்தத் துறைக்கான வேஷத்தைப் போடவோ, அதற்கான கலாச்சாரத்தை அனுசரிக்கவோ என்னால் முடியாதுமிருந்தது. அதனாலேயே எனது நாவலையோ, வேறுபேரின் கதையையோ திரைக்கதையாக்கும் எண்ணம் என்னில் எழவில்லை.

என் வழி இது.

கனடாவிலும், புலம்பெயர் மற்றைய இடங்களிலும் பல்வேறான  திரைப்பட, குறும்பட முயற்சிகள்  இருக்கின்றன என்பது மெய்யே. கம்பனின் ஆசைபற்றி அறையலுற்ற கதையாகவே பலதும் இருக்கின்றன என்பதுதான் அதைவிட மெய்யானது. உலகத் திரைப்படத்தின் தன்மையோ, மூன்றாம் உலகத் திரைப்படத்தின் போக்குகள்பற்றியோ, கறுப்பு சினிமா பற்றியோ எதையும் அறிந்துகொள்ளாமல், தமிழ்த் திரைப்பட மாதிரியில் உருவாகும் திரைப்படங்களே இங்கு அதிகம். மேற்குலகிலும்கூட தமிழ்ப் பார்வையாளரின் தன்மையும் மாறவில்லை. கூட, தயாரிப்பாளரின் தன்மையும் மாறவில்லை.

இந்த நிலையிலும் ஒரு குறும்படத்துக்கான எண்ணம் கடந்த பல ஆண்டுகளாகவே என்னுள் இருந்துகொண்டிருக்கிறதுதான்.

காசுச் சாத்தியங்களே காரிய சாத்தியத்திற்கு வேராக இருக்கிறவரையில் எண்ணம் எண்ணமாகவே இருந்துகொண்டிருக்கிறது. அது சிலவேளை மனத்தைச் சுடுகிறது. நானெடுக்க நினைத்திருந்தது, தமிழ்நாட்டில் சில பரிசுகளும், ஜேர்மனில் மொழிபெயர்ப்பானதுமான எனது ‘நெருப்பு’ சிறுகதை. அதனால்தான் அது சுடுகிறதோ என்னவோ?

தங்கி நிற்க நினைத்தாலும் தரித்திருக்க விடாச் சகடமிது. உருண்டுகொண்டிருக்கிறது. அது நிலையாய்த் தங்கும் ஒரு தருணம் வரலாம். அப்போது ‘நெருப்’பைப்பற்றி மீண்டும் யோசிப்பேன்.

மேலும், நல்ல அரங்க ரசிகனும் நான். நல்ல நாடக அளிக்கைகளை ரசிக்க எப்போதும் நான் பின்னின்றதில்லை. இது எனக்கு தமிழ்நாடு தந்த பரிசு. நீண்ட இடைவெளியின் பின் ‘அன்ன யாவினும்’ என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை  எழுதி முடித்திருக்கிறேன். அடுத்த ஆண்டு இது மேடையேறலாம். அல்லது வாசிப்புப் பிரதியாய் மாறி அச்சு வடிவங்கொள்ளலாம்.

கட்டம் கட்டி வாழ்ந்துவிடவா முடிகிறது? திட்டம் போட்டால் நடந்துவிடவா போகிறது? ஆனாலும் உட்கனலின் வேகம் இயக்கிக்கொண்டிருக்கிறது. நாளையை நாளைதான் தீர்மானிக்கும்.

 

(முற்றும்)

 

 

 அம்ருதா, ஜன. 2017

 

http://devakanthan.blogspot.co.uk/2017/01/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.