Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கும் டி.டி.வி.தினகரன்

Featured Replies

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கும் டி.டி.வி.தினகரன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் சென்னை ஆர்.கே நகர் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

TTV Dinakaran
 

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் பெயரை குழு உறுப்பினர் செங்கோட்டையன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘கட்சியினர் வற்புறுத்தலினால் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். வரும் 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் முதல்வராகும் எண்ணமில்லை. முதலமைச்சராக பழனிசாமியே தொடர்வார். 

TTV Dinakaran

எங்களுக்குப் போட்டியாகக் கருதுவது திமுகவை மட்டுமே. வேறு எந்தக் கட்சியையோ, குழுவையோ போட்டியாகக் கருதவில்லை. தேர்தலில் ஆதரவு தர மதிமுக,தேமுதிக, காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.  

தினகரன்

ஜெயலலிதா மக்களுக்குச் செய்ய நினைத்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றுவேன். ஆர்.கே.நகரில் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன். கருணாநிதி என்னும் தீய சக்தியிடம் இருந்து மக்களைக் காப்பதே அதிமுகவின் கடமை’ என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/83682-ttvdinakaran-to-contest-in-rk-nagar-election.html

  • தொடங்கியவர்

‘நமது குடும்பமே பலி ஆடாக இருக்கட்டும்!’ - தினகரனுக்கு சிக்னல் கொடுத்த சசிகலா #VikatanExclusive

டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்குகிறார் டி.டி.வி.தினகரன். 'சிறைக்குள் சசிகலாவை சந்தித்துப் பேசிவிட்டு வந்த பிறகுதான், போட்டியிடுவது என உறுதியான முடிவை எடுத்தார் தினகரன். நேற்று நள்ளிரவு வரையில் வெற்றி தோல்வி குறித்து விரிவாகவே அவர் ஆலோசித்தார்' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, ஆட்சி மன்றக் குழுவை அமைத்தார் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இன்று காலை ராயப்பேட்டையில் நடந்த அ.தி.மு.க கூட்டத்துக்குப் பிறகு, 'ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுகிறேன். ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என பேட்டியளித்தார் தினகரன். "தி.மு.க உறுதியான வேட்பாளரைக் களமிறக்காது என்ற நம்பிக்கையில்தான் டி.டி.வி போட்டியிடுகிறார். அவரது எண்ண ஓட்டத்திற்கு ஏற்றபடியே தி.மு.க வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். சேகர்பாபுவின் விசுவாசத்துக்கு உரியவராக மருது கணேஷ் இருக்கிறார். 'சிம்லாவை அறிவித்தால் தேர்தல் வேலை நடக்காது' என வடசென்னை நிர்வாகிகள் உறுதியாகக் கூறியதன் விளைவாகவே, மருது அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவே எங்கள் வெற்றியை உறுதி செய்துவிட்டது. வார்டு வாரியாக வாக்காளர்களைக் குளிர்விக்கும் வகையில் பலவிதமான திட்டங்களைக் கையில் வைத்திருக்கிறார் டி.டி.வி. ' அம்மா இடத்தில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார்" என விவரித்த வடசென்னை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

சசிகலா"ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, போட்டியிடும் மனநிலையில் இருந்தார் டி.டி.வி.தினகரன். வடசென்னை நிர்வாகிகளிடமும் தொகுதி நிலவரம் குறித்து ஆய்வு செய்து வந்தார். 'யாரை வேட்பாளராக முன்னிறுத்துவது?' என்ற பேச்சு எழுந்தபோது, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா உள்பட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இதுகுறித்து விவாதிப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று சந்தித்தார் டி.டி.வி. அவரிடம் பேசிய சசிகலா, 'அம்மா இறந்த பிறகு நமது குடும்பத்தின் மீதுதான் அனைத்து பழிபாவங்களும் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்தநேரத்தில் வேறு யாராவது ஒருவரைப் போட்டியிட வைத்தால், பலி கொடுக்கிறார்கள் என்ற பேச்சு வரும். நமது குடும்பத்தை நோக்கித்தான் தேர்தல் தோல்விக்கும் காரணத்தைச் சொல்வார்கள். எத்தனையோ அவதூறுகளைக் கேட்டுவிட்டோம். இதைக் கேட்பதில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. வெற்றியோ, தோல்வியோ நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிடட்டும். தேர்தல் களத்தில் நாமே பலி ஆடாக இருப்போம்' என உறுதியாகக் கூறிவிட்டார்.

இதைக் கேட்ட தினகரனும், 'உண்மைதான். போட்டியிடுவதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. நானே போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறேன்' எனப் பதில் அளித்தார். இதற்கு சசிகலாவும் ஒப்புதல் தெரிவித்துவிட்டார். இதன்பின்னர் மிகுந்த உற்சாகத்தோடு சென்னை திரும்பினார். வடசென்னை நிர்வாகிகளிடமும் தொகுதி நிலவரம் குறித்து விவாதித்தார். நேற்று இரவு வெகுநேரம் வரையில், தொகுதியின் பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் குறித்து ஆலோசித்தார். 'என்ன நடந்தாலும் பார்த்துவிடலாம். நமக்கு எதிராக வலுவான வேட்பாளர்கள் யாரும் நிற்கப் போவதில்லை. உறுதியாக வெற்றி பெறுவோம்' என நம்பிக்கையோடு பேசினார். தேர்தல் வேலைகளும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன" என்றார் விரிவாக. 

"டி.டி.வி.தினகரனின் தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பன்னீர்செல்வம் நன்றாகவே அறிவார். ஆர்.கே.நகர் முழுக்கவே இரட்டை இலை சின்னத்தை வரைந்துள்ளனர். அவர்கள் வரைந்து கொண்டிருப்பது எங்களுக்காகத்தான். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் வழங்கப் போகிறது. இதற்கான பதில் நாளை மாலைக்குள் வெளிவரும். சசிகலா நியமனமே செல்லாது என்று இருக்கும்போது, வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி அளிக்கப்படும் பி படிவத்தையும் ஆணையம் ஏற்காது என நம்புகிறோம். ஐசரி வேலன், மதுசூதனன், ஜெயலலிதா என வி.ஐ.பிக்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. இந்தத் தொகுதியில் இரட்டை இலைக்குத்தான் மக்கள் மரியாதை தருவார்களே தவிர, அம்மாவால் புறக்கணிக்கப்பட்ட தினகரனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அம்மா மரணத்தின் மர்மங்களுக்கு சசிகலா குடும்பம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதையொட்டியே எங்களது தேர்தல் வியூகம் இருக்கும்" என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

தி.மு.க, தே.மு.தி.க, மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க என நான்கு முனைப் போட்டிகளை எதிர்கொள்ள இருக்கிறார் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன். 'திருமங்கலம் ஃபார்முலாவைத் தோற்கடிக்கும் வகையில் ஆர்.கே.நகர் வியூகம் அமையும்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/83687-what-sasikala-told-to-dinakaran-about-rknagar-election.html

  • தொடங்கியவர்

நெக்ஸ்ட் முதல்வர்தானா!? - டி.டி.வி.தினகரனின் வியூகம் #VikatanExclusive

டி.டி.வி.தினகரன் 

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டதும் 'அடுத்த முதல்வர் அண்ணன்தான்' என்று சொல்லத் தொடங்கி விட்டனர் அவரது ஆதரவாளர்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் 'முதல்வர் பதவிக்கு வரமாட்டேன்' என்று தினகரன் அறிவித்ததால் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ள அ.தி.மு.க (சசிகலா அணி), தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொருளாளர் தீபா உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 இந்நிலையில் அ.தி.மு.க.வின் வேட்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிட உள்ளதாக ஆட்சி மன்ற குழு இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவே, டி.டி.வி. தினகரனை வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்துவிட்டதால் கட்சியினர் அமைதியாகிவிட்டனர். இருப்பினும் வேட்பாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டதை கட்சியில் ஒருதரப்பினர் விரும்பவில்லை 

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், " கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்.கே.நகர்த் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து டி.டி.வி. தினகரன், சிறையில் இருக்கும் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'நீயே நில்லு, வேற யாரையும் நம்ப முடியாது' என்று சசிகலா தெரிவித்துள்ளார். அப்போது தினகரன், தற்போதைய அரசியல் சூழ்நிலையை சசிகலாவிடம் எடுத்துக்கூறியிருக்கிறார். அதற்கு, 'அக்காவுக்கு (ஜெயலலிதா) தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது. உன்னை விட்டால் வேற யாரை நிறுத்தினாலும் வெற்றிக்கு வாய்ப்பில்லை' என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

இதன்பிறகே தினகரன், சம்மதம் தெரிவித்தார். ஆட்சி மன்றக் குழுவிலும் வேட்பாளராக தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்போதும், வேட்பாளர் பட்டியலை முதலில் அறிவிப்பது ஜெயலலிதாவின் வழக்கம். இந்தமுறையும் தி.மு.கவின் அறிவிப்புக்கு முன்பே தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆர்.கே.நகர்த் தொகுதியில் தினகரன் நிறுத்தப்பட்டால் மட்டுமே கட்சியினர் கோஷ்டிப் பூசல் இல்லாமல் முழுவீச்சில் வெற்றிக்காக உழைப்பார்கள். இதற்காகவும்தான் தினகரன் இந்தத் தொகுதியில் நிறுத்தப்படுகிறார். 

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்ற பிறகும் உடனடியாக அவர் முதல்வராகப் போவதில்லை. முதல்வர் பதவிக்காக இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபிறகு கட்சியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் முதல்வர் பதவியை ஏற்பது குறித்து தீவிர ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்யப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களுக்கு எதிரணியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தி.மு.க. மட்டும்தான். அவர்களை இந்தத் தேர்தலில் வீழ்த்துவதே எங்களது ஒரே லட்சியம். மற்ற தேர்தல் வெற்றிகளைவிட இந்தத் தேர்தல் வெற்றி என்பது எங்களுக்கு சரித்திரம். இந்தத் தேர்தல் வெற்றி மூலம் எதிரணியினருக்கு நல்லதொரு பாடம் கற்பிப்போம்"என்றார். 

டி.டி.வி. தினகரன்

 தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், " ஆர்.கே.நகர்த் தொகுதியில் போட்டியிடுவது குறித்த முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டதுதான். சசிகலா, சிறைக்குச் சென்றுவிட்டதால் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு தினகரன் கையில் நம்பிக்கையுடன் ஒப்படைத்துள்ளார். இது, அவரது குடும்பத்தில் பலருக்குப் பிடிக்கவில்லை. தினகரனுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பிரச்னைகளை உருவாக்கினார்கள். தற்போது குடும்ப உறவுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். கட்சியில் உள்ள ஓட்டுமொத்த நிர்வாகிகளும் தினகரனை வேட்பாளராக நிறுத்த முன்மொழிந்தனர். இந்தத் தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாகவே கருதுகிறோம். இதனால் எங்களது வெற்றி உறுதியாகிவிட்டது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவி குறித்து ஆலோசிப்போம். எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்வு செய்ததே நாங்கள்தான். ஓ.பன்னீர்செல்வத்தைப் போல அவர் எங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார். இந்தத் தொகுதிக்காக ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துள்ளார். அவர் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடருவோம். ஆர்.கே.நகரில் தி.மு.க, ஓ.பன்னீர்செல்வம் அணி, தீபா என யார் நின்றாலும் எங்களை வெற்றி பெற முடியாது. ஏனெனில் அ.தி.மு.க.வுக்கு என்று தனி வாக்குவங்கி இங்கு உள்ளது.

தினகரனும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே ஆலோசனை நடத்தினர். அப்போது, முதல்வர் பதவி குறித்து பழனிசாமியிடம் சில உறுதிமொழிகளை தினகரன் கொடுத்துள்ளார். இந்த உறுதிமொழியை அவரும் ஏற்றுக்கொண்டார். தினகரன் வெற்றிக்காக ஆர்.கே.நகரில் கட்சியினர் முழுவீச்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதா, தேர்தலில் போட்டியிட்டபோது கட்சியினர் வெற்றிக்காக எப்படி உழைத்தார்களோ, அதுபோல இப்போதும் செயல்பட தயாராக உள்ளனர்"என்கின்றனர். 

 முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கூறுகையில், "ஆர்.கே.நகர்த் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்ற பிறகு அவரது அடுத்த இலக்கு முதல்வர் பதவியாகத்தான் இருக்கும். அவருக்காக அதையும் விட்டுக்கொடுக்கத் தயார் என்று பழனிசாமி தரப்பில் சிக்னல் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நடக்காது. ஏனெனில் சசிகலா, அவசரம் காட்டியதன் பின்விளைவுகளை தினகரன் அறிவார். இதற்கிடையில் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பலவகைகளில் முயன்று வருகின்றனர். இரட்டை இலைச் சின்னத்துக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும். தினகரனால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தச் சிக்கலும் ஏற்படப்போவதில்லை"என்றனர். 

கட்சி வட்டாரங்கள் கூறுகையில், " சசிகலாவும் தினகரனும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்துவிட்டனர். இது, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த அதிருப்தி, ஆர்.கே.நகர்த் தேர்தலில் எதிரொலிக்கும். தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தினர் மீது வெறுப்பு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தினகரன், வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதை மக்களும் கட்சியினரும் விரும்பவில்லை. தினகரன், போட்டியிடப் போவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்ததால் கட்சியினர் யாரும் போட்டியிட விருப்ப மனு கொடுக்கவில்லை. தேர்தல் வெற்றிக்குப்பிறகு அவர் முதல்வரானாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை"என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/83690-probably-cheif-minister-seat-will-be-ttvdinakarans-next-aim.html

  • தொடங்கியவர்

டி.டி.வி தினகரன் ஆர்.கே நகர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி!

டி டி வி தினகரன்
 

“நம்ம குடும்பத்தில் ஒருவர் முதல்வராக வேண்டும்" என ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த சபதத்தின் விளைவாகத்தான் அதிரடியாக டி.டி.வி தினகரன் ஆர்.கே. நகர்த் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறுகின்றனர் அ.தி.மு.க-வினர்.

ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே நகர்த் தொகுதி, அவரது மரணத்துக்குப் பின்னர் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடனேயே அ.தி.மு.கவின் வேட்பாளர் யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் வேட்பாளர் யார் என்ற மில்லியன் டாலர் கேள்வியும் எழுந்தது. அதேநேரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலும் வேட்பாளர் தேர்வுப் படலம் தீவிரமாக நடைபெற்றது.

ஆர்.கே. நகர்த் தொகுதி வேட்பாளர் யார் என்பதை அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு முடிவு செய்து அறிவிக்கும் என்று டி.டி.வி. தினகரன் தரப்பு அறிவித்தது. இதற்குப் போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஆட்சி மன்றக் குழுவை அமைத்து வேட்பாளரை விரைவாக அறிவிப்பதாக அறிவித்தது. மேலும், இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி தேர்தல் கமிஷனுக்கு ஓ.பி.எஸ் சார்பில் வேண்டுகோளும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்.கே. நகர்த் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு இன்று காலை கூடியது. முன்னதாக, நேற்று வேட்பாளர் தேர்வு குறித்து தினகரன் முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஏற்கெனவே அ.தி.மு.க தரப்பில் ஒரு பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் “எம்.ஜி.ஆர் குடும்பத்தைச் சேர்ந்த சுதா விஜயகுமார், முன்னாள் அமைச்சர் எஸ். IMG-20170315-WA0041_12323.jpgகோகுல இந்திரா, ஆதி ராஜராம் உள்ளிட்டோர் பெயர்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டு தினங்களுக்கு முன் பெங்களூரில் சசிகலாவை முக்கிய அமைச்சர் ஒருவர் சந்தித்துள்ளார். அவரிடம் சசிகலா "வேட்பாளர் தேர்வில் கவனமாக இருங்கள். எனது குடும்பத்தில் ஒருவரை ஆர்.கே. நகரில் நிறுத்துவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில், நம்பிக்கைக்குரிய நபரைத்தான் தேர்தலில் நிறுத்த வேண்டும். அதனால் தினகரனிடம் பேசிப் பாருங்கள்” என்று சொல்லியுள்ளார். இந்தத் தகவல் செங்கோட்டையனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரும். "தினகரன் நின்றால் மகிழ்ச்சிதான்" என்று சொல்லியுள்ளார்.

இதையடுத்து போயஸ்கார்டன் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த இருவர், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். சுதாவின் பெயரை முதலில் பரிசீலனைக்கு எடுத்தபோது, "அவர் நாளைக்கே நமக்கு எதிராகத் திரும்பினால் என்ன ஆவது?" சசிகலா உறவினர் ஒருவர் கேட்டாராம். செங்கோட்டையன், "யாரையும் நிறுத்த வேண்டாம். நீங்களே நில்லுங்கள். கட்சியினரும் உற்சாகமாக இருப்பார்கள்" என்று சொல்லியுள்ளார். தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக தினகரன் சற்றே யோசித்தாராம். "தேர்தலில் நிற்க, அது தடையாகாது" என்று சொன்னதையடுத்தே தினகரன் தேர்தலில் நிற்க சம்மதம் தெரிவித்து, அவர் நிற்பது உறுதி செய்யப்பட்டதாம். 

உளவுத்துறையினரிடமும் இதுகுறித்து தினகரன் கருத்து கேட்டுள்ளார். "ஆர்.கே நகர்த் தொகுதி உங்களுக்குச் சாதகமாக இருக்காது. அதிலும் சசிகலா குடும்பத்தில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்” என்று உளவுத்துறையினர் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்கள். சசிகலா அணிக்கு இது வாழ்வா, சாவா என்ற நிலையில் இருப்பதால், எப்படியும் ஆர்.கே. நகரை வளைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக, கரன்சிகளைக் குவிக்கத் தயாராகி வருகிறது அ.தி.மு.க.

http://www.vikatan.com/news/tamilnadu/83697-background-story-on-ttv-dinakaran-being-selected-as-candidate-for-rk-nagar-constituency.html

  • தொடங்கியவர்

 

இனி ஆர்.கே நகர் தொகுதி யாருக்கு? | Voice of Common Man

  • தொடங்கியவர்

ஜெயலலிதா புறக்கணித்த தினகரனுக்கு ஜெ.தொகுதி சீட்! யார் இந்த தினகரன்? #TTVDinakaran

டி.டி.வி தினகரன்

ரு நிறுவனத்துக்குள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நுழைந்து, பின்னர் மேலாளராகவே மாறினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு நிலைதான் இன்றைய அ.தி.மு.க-வின் நிலையும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகருக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருந்தது. இப்போது, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், வெவ்வேறு குழுக்களாக பிரிந்திருக்கும் அ.தி.மு.க-வில், சசிகலா அணி சார்பில் அவரின் அக்காள் மகன் டி.டி.வி தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் சார்பாக ஆர்.கே.நகரில் யார் போட்டியிடுகிறார் என இன்னும் அறிவிப்பு வரவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனைப் பெற்ற பிறகு அ.தி.மு.க-வில் தினகரனை மீண்டும் சேர்த்தார். கட்சியில் சேர்க்கப்பட்டவுடனேயே அவருக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர் ஆன சில நாட்களிலேயே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தினகரனுக்குக் கிடைத்துள்ளது. ஜெயலலிதா இருந்தபோது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்கூட இல்லாத ஒருவரை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஏற்க முடியாது என்று கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆர்.கே நகரில் அவர் போட்டியிடுகிறார் என்றதும் கூடுதல் அதிர்ச்சி அடைந்தனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும், முதலமைச்சர் ஆகும் எண்ணம் எனக்கு இல்லை. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியே தொடர்வார்" என்று தெரிவித்தார். 

யார் இந்த டி.டி.வி தினகரன்?

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் 3 மகன்களில் ஒருவர் டி.டி.வி. தினகரன். ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கிய சசிகலா, அவரின் அக்காள் மகன்களை அரசியலுக்கு வர வைத்தார். தினகரன், பாஸ்கரன் மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரையும் பொதுவாக டி.டி.வி சகோதரர்கள் என்றே அழைப்பார்கள். இவர்கள் மூவரும் அ.தி.மு.க-வில் பல்வேறு சலுகைகளைப் பெற்று கட்சியின் முக்கியஸ்தர்களாக வலம் வந்தனர். 1988-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, தினகரன் கட்சியில் முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தார். பின்பு, 1990-ல் சசிகலா கணவர்  நடராஜனுக்கும், தினகரனுக்கும் இடையே இருந்த நட்பை அறிந்த ஜெயலலிதா, தினகரனை விலக்கி வைத்திருந்தார். ஆனால், சீக்கிரமே சசிகலாவின் மூலம் ஜெயலலிதாவின் குட் புக்கில் மீண்டும் இடம்பிடித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். சுதாகரனை, ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனாக அறிவித்து 1995-ம் ஆண்டு ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து வைத்தார். ஆனால், 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சுதாகரன் தனது வளர்ப்பு மகன் அல்ல என்று ஜெயலலிதா அறிவித்து, அவரை கார்டனில் இருந்து வெளியேற்றினார். கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா உள்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனக்கு எதிராக செயல்பட்டதால், அவர்கள் அனைவரையும் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றினார் ஜெ. பிறகு 2012-ம் ஆண்டு, மன்னிப்புக் கடிதம் அளித்து, சசிகலா மட்டும் போயஸ் தோட்டத்துக்குள் மீண்டும் நுழைந்தார். டி.டி.வி உள்பட மூன்று சகோதரர்களையும் இறக்கும் வரை போயஸ் தோட்டத்துக்குள் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி தினகரனுக்கு எதிராக, 20 வருடத்துக்கு முந்தைய அந்நிய செலாவணி நெறிமுறை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையில் முறைகேடு செய்ததாக அவருக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தினகரனுக்கு இந்தியாவுக்கு வெளியே உள்ள வங்கிக் கணக்கில் அதிக தொகை டெபாசிட் செய்ததற்காகவும், 1991-96-ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதனை இந்தியாவுக்கு மாற்ற முயன்றதற்காகவும்.   2000-வது ஆண்டில் அபராதம் விதித்தது. அவருக்கு மொத்தமாக 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவரின் முறையீட்டுக்கு பின்னர் 25 கோடி ரூபாயாக அது குறைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு தினகரன் எமரால்டு கன்ஸ்ட்ரக்‌ஷன் (Emeralad Construction) என்ற கம்பெனி நடத்தி வந்தார். ஆனால், அதில், மற்றவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ, அவர் மீது வழக்கு தொடுத்தார். பின்பு, ஹவாலா வழக்கிலும் சிக்கியுள்ளார் தினகரன்.

பன்னீர்செல்வம்

தினகரன் - பன்னீர்செல்வம் உறவு எப்படி?

கடந்த 2001-ம் ஆண்டில், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், தமிழகத்தின் முதலமைச்சராக அ.தி.மு.க-வின் சாதாரண தொண்டராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை பதவியேற்கச் செய்தார். அவரை கட்சி ரீதியாக மேம்படுத்திய பெருமை தினகரனையே சேரும். தினகரன் 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளத்தில் போட்டியிட்டபோது, அவர் பன்னீர்செல்வம் வீட்டில் தங்கியிருந்தார். தினகரனின் வெற்றிக்காக பன்னீர்செல்வம் கடுமையாக உழைத்தார்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம், அ.தி.மு.க ஜெயிக்குமா அல்லது மற்ற கட்சிகள் ஜெயிக்குமா என்ற கேள்வி எழும். அ.தி.மு.க-வுக்கும், மற்ற கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டியும், பலத்த எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வில், தினகரன் ஜெயிப்பாரா இல்லை, ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் நிற்பவர் ஜெயிப்பாரா என்ற குழப்பத்தில் தமிழக மக்கள் உள்ளனர். வெவ்வேறு கட்சிகளுக்கு இடையே நிலவிய போட்டி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குள்ளேயே ஏற்பட்டிருக்கிறது. ஆர்.கே நகர் மக்களின் மனோநிலையைப் பொறுத்தே, அடுத்த நான்கு ஆண்டுகளில் அந்தத் தொகுதியின் வளர்ச்சி அமையும். எனவே, இந்த இடைத்தேர்தல் என்பது ஆர்.கே நகருக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் தான்...!

http://www.vikatan.com/news/coverstory/83730-dinakaran-man-who-expelled-from-admk-by-jayalalithaa-is-now-going-to-contest-in-rk-nagar-constituency.html

  • தொடங்கியவர்
gallerye_000515530_1731013.jpg

 

  • gallerye_233846113_1731013.jpg

 

சசிகலாவுக்கு, மக்களிடம் கடும் எதிர்ப்பு நிலவும் நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அவரது அக்கா மகன் தினகரன் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அபராதம் ஆகியவற்றையும் மீறி, அரசியலில் அவர் ஆட்டம் போட தீட்டியுள்ள திட்டம் செல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

Tamil_News_large_173101320170316000021_318_219.jpg

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள் ளது. எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதால், சசி அணியினர், ஆட்சியை தக்க வைத்து கொண்டனர். ஆட்சியை இழந்த பன்னீருக்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும்

தொண்டர்கள், ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு


சசிகலா, கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில், பன்னீர் தரப்பினர் மனு கொடுத்துள்ளனர். அதில், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்; கட்சியும் தங்கள் வசம் வரும் என, பன்னீர் அணியினர் நம்புகின்றனர்.

இந்த சூழ்நிலையில், யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்துள்ளது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, கட்சி தொண்டர் களுக்கும், பொதுமக்களுக்கும் வெறுப்பு உள்ளதால், தினகரன் களம் இறங்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல், அவர் தான் வேட்பாளர் என, நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அவரை வீழ்த்த, பன்னீர் அணியினர், பலமான வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். ஜெ.,

 

அண்ணன் மகள் தீபாவும், சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இது போன்ற நெருக்கடிகளுக்கு இடையில், இரட்டை இலை சின்னத்தை பறிக்கும் முயற்சி யிலும், பன்னீர் தரப்பினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.கட்சியின் பொதுச்செயலர் நியமனமே, சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ள தால், இரட்டை இலை சின்னம், தினகரனுக்கு கிடைப்பது உறுதியாகாத நிலை உள்ளது. இதைப் பற்றி கவலைப்படாமல், தினகரன் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார்.
 

மோசடி வழக்கு


இவர், 1995 - 96ம் ஆண்டு, சட்ட விரோதமாக, வெளிநாட்டு பணத்தை பெற்றதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், அவர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தது. அதிலிருந்து தப்பிக்க, 'நான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவன்' என, தினகரன் வாதிட் டார். இதை, அமலாக்கத்துறை ஏற்கவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 28 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

எனவே, அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் தயாராகி உள்ளன.இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, முதல்வர் பதவியை பிடிக்க முடியும்; கட்சியையும், ஆட்சி யையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற திட்டத்துடன், தினகரன், தேர்தல் களம் இறங்கி உள்ளார்.ஆனால், அவரது வேட்பு மனுவை, தேர்தல் கமிஷன் ஏற்று கொள்ளுமா, அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா, மக்கள் ஓட்டளிப்பரா என, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், தினகரன் திட்டம் செல்லுபடியாகுமா என்பது தெரியவில்லை.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1731013

  • தொடங்கியவர்
தினகரன் போட்டியிடுவதற்கு 10 காரணங்கள்
 

 

 
 

1x

 
 
 
00:03 00:48

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

 

 
 

சென்னை: சசிகலா அணி சார்பில் அ.தி.மு.க.,வின் ஆர்.கே. நகர் வேட்பாளராக சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரன், ‛ஒருமனதாக' தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு 10 காரணங்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

Tamil_News_large_1730908_318_219.jpg

1. அ.தி.மு.க., கட்சி மற்றும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே சசிகலா குடும்பத்தினர் எண்ணம். எனவே தான் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த தினகரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஒருவேளை வெற்றி பெற்றால், முதல்வர் பதவியை தான் குறி வைப்பார். எனவே, இன்னும் எத்தனை நாட்களுக்கு இடைப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறையில் உள்ள சசிகலாவால் இன்னும், 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது; முதல்வராகவும் முடியாது. எனவே தான் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2. தினகரன், சசிகலா, சசிகலா கணவர் நடராஜன், திவாகரன், ராவணன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் பலர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்று விட்டாலும், இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை நீர்த்து போக செய்ய வேண்டும் என்றால், அ.தி.மு.க., கட்சியும், ஆட்சியும் அவர்கள் குடும்பத்தின் வசம் இருக்க வேண்டும். இதற்கு

அச்சாரமாக தான், தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
3. சசிகலாவின் குடும்பத்தினரை எதிர்க்கட்சிகள், ‛மன்னார்குடி மாபியா கும்பல்' என்றே அழைத்து வருகின்றன. இந்த குடும்பத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம். இவர்கள் அனைவருக்கும், ‛படி' அளக்க வேண்டும் என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இதற்காக தான், கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
4. அ.தி.மு.க., கட்சிக்கு வங்கியில் பல கோடி ரூபாய் டெபாசிட்செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கட்சி தொண்டர்கள் அளித்து வரும் நன்கொடையின் அளவும் மிக அதிகம். இதுதவிர, மாநிலம் முழுவதும் கட்சிக்கு ஏராளமான அசையா சொத்துக்கள் உள்ளன. இவற்றை கைப்பற்றவே, கட்சியையும், ஆட்சியையும் அந்த குடும்பத்தினர் கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
5. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீடு, சிறுதாவூர் பங்களா, கோடநாட்டில் உள்ள ஆடம்பர பங்களா ஆகியவை அவற்றில் பிரபலமானவை. சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை கழித்தால் கூட, மிச்சம் இருக்கும் சொத்துக்கள் மதிப்பு பிரமிக்க வைப்பவை. இவற்றை ஒட்டு மொத்தமாக வளைக்கவே சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு, தினகரன் தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாகி, சில நாட்களில் முதல்வர் பதவியில் அமர வேண்டும். இது தான் சசிகலா குடும்பத்தினரின் திட்டம்.
6. தினகரன் மீது அன்னிய செலாணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு உள்ளது. இதில், அவருக்கு 28 கோடி ரூபாய்அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது, தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவன் என்று தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தவிர இன்னும் பல வழக்குகள் அவர் மீது உள்ளன. எனவே, தனிப்பட்ட முறையிலும் தினகரனுக்கு கட்சியும், ஆட்சியும் தேவை. முதல்வர் பதவியும் வேண்டும். இது தான் அவரது ரகசிய திட்டம்.

 

7. அ.தி.மு.க., ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். அப்படி என்றால், நான்கு ஆண்டுகளுக்கு நல்ல சம்பாத்தியம் உண்டு. இதை, ‛பினாமி' முதல்வர் மூலம் பெற விரும்பாமல், நேரடியாகவே வசூலிக்க சசிகலா குடும்பத்தினருக்கு எண்ணம் உள்ளது. இதுவும், தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட முக்கிய காரணம்.
8. அ.தி.மு.க, ஆட்சி இல்லாவிட்டால், தி.மு.க., ஆட்சி அமைய வாய்ப்பு உண்டு. அப்போது சசிகலா குடும்பத்தினர் மீது பல புது வழக்குகள் பாயலாம். இதில் இருந்து தப்பிக்கவும், அ.தி.மு.க., கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றவும். தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கவும் சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர்.
9. எதிர்காலத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் குடும்பத்தினர் விஸ்வரூபம் எடுக்காமல் இருக்க, அவர்கள் வளர்ச்சியை தடுக்க, ஆட்சி அதிகாரம் தேவை. இதுவும், தினகரன் வேட்பாளராக அறிவிக்க முக்கிய காரணம்.
10. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. கிட்டதட்ட, சசிகலா தான் அவரது மரணத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த விவகாரத்தை அடியோடு புதைக்க, கட்சியும், ஆட்சியும் தேவை. இதுவும் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட முக்கிய காரணம். இவ்வாறு கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1730908

  • தொடங்கியவர்

டி.டி.வி.தினகரன் திடீரெனக் களமிறங்கியது இதற்குத்தான்...!

டி டி வி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செய்தியே தற்போது அனைவருடைய உதடுகளிலும் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் நின்ற இந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பி.ஜே.பி எனப் பலமுனைப் போட்டிகள் நிலவுவதுடன்... ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இந்தத் தொகுதியில் வேட்பாளராகக் களத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளார். இதுதவிர, அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் களத்தில் குதிக்கத் தயாராய் இருக்கின்றனர். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க-வின் வேட்பாளராக அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். தீபாவையும் சேர்த்தால், தற்போது நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இவர்கள் அனைவரையும் எதிர்த்து ஜெயிக்கப்போகிறவர் அந்தத் தொகுதி மக்களின் ஆதரவாளராகவும், அதேசமயத்தில் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் யார் வெற்றிபெறுகிறார் என்பதை, தேர்தல் நாள் முடிவன்றுதான் தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலையில் டி.டி.வி.தினகரன், ''இந்தத் தொகுதியில் வேட்பாளராய் களம் காண்பதற்கு என்ன காரணம், அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராய் நிறுத்தப்படுவதற்கு சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தபோது... அவரே இறங்கியது ஏன்'' போன்ற தகவல்களை அ.தி.மு.க-வினர் அடுக்கினார்கள். 

''சசிகலாவின் ஆலோசனை!''

''அ.தி.மு.க சார்பில் யாரை வேட்பாளராக முன்னிறுத்துவது என்று சில நாள்களாகவே பேச்சு எழுந்தது. அதில், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளான சுதாவும் ஒருவர். இதுகுறித்து சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது. அவரோ, 'தற்போது எல்லோரும் நம்மீதுதான் குற்றம்சுமத்தி வருகிறார்கள். அதுதவிர, அ.தி.மு.க-வும் இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. தீபாவும் களத்தில் குதித்திருக்கிறார். நிறையப் போட்டியிருக்கும். ஆகையால் நம் கட்சி சார்பில், ஒரு புது வேட்பாளரை நிறுத்தி... எதிர்பாராதவிதமாக அவர் தோல்வியைச் சந்தித்தால், அதற்கான காரணமும் நம்மீதுதான் விழும். அத்துடன் அவர் வெற்றிபெற்றால், நமக்கு எதிராகத் திரும்பமாட்டார் என்பதில் என்ன நிச்சயம்? ஆகவே, நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களே இந்தத் தேர்தலில் நிற்கட்டும். இதனால், எதுவந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்' என உறுதியாகக் கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

டி.டி.வி.தினகரன்

''தினகரனின் இரட்டைச் சந்தோஷம்!''

இதனைக் கேட்ட டி.டி.வி.தினகரனுக்கு உள்ளுக்குள் ஒருவிதத்தில் சந்தோஷம். எப்படியும் சசிகலாவிடம் சொல்லித் தாமே அந்தத் தேர்தலில் நிற்கலாம் என்று நினைத்திருக்கிறார். இதற்காகத் தன் நெருக்கமானவர்களிடமும் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அத்துடன், தொகுதி பற்றி நிலவரமும் கேட்டிருக்கிறார். அவர்கள் சொன்ன செய்திகள் அனைத்தும் அவருக்கு மனநிறைவைத் தருவதாகவே இருந்திருக்கின்றன. அதனால், தாம்தான் அ.தி.மு.க வேட்பாளர் என்ற முடிவிலிருந்து அவர் மாறவில்லை. இந்தநிலையில், எதிர்க் கட்சியான தி.மு.க-விலிருந்து நல்ல வலுவான, அவருக்கு இணையான வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்றிருந்தவேளையில், மிகவும் எளிமையான மருதுகணேஷை நிறுத்தியதால், அப்போதே அவர் இரட்டை சந்தோஷம் அடைந்துவிட்டார். இனி, நாம்தான்... நம்மை வெல்ல யார்... நமக்கு ஆதரவுகொடுக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அரசு அதிகாரிகள்... அதுபோக ஆட்சி... மக்களைவளைக்கப் பணம்... எனப் பல திட்டங்களை மனதுக்குள் வகுத்த அவர், அடுத்தகட்டமாகத் தாமே அந்தத் தொகுதியில் நிற்க முடிவெடுத்துவிட்டார். 

''அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு!''

இதுபற்றி சசிகலாவிடமும் விளக்க... அவரும் எந்த ஆட்சேபனையும் இல்லாமல் ஓ.கே சொல்லியிருக்கிறார். 'தாம்தான் முதல்வர் ஆக முடியவில்லை. உனக்காவது இந்தச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆகவே, நீ வெற்றிபெற்று ஆட்சியில் உட்கார். அதன்பின், நம்மைப் பகைத்துக்கொண்ட அனைவரையும் ஒருகை பார்க்கலாம். அதுவரை பொறுமையாக இருக்கலாம்' என்று சொன்னதாகத் தெரிகிறது. இதனையடுத்து, சசிகலாவிடமிருந்து உத்தரவு வந்தபிறகு, 'தானே ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்குகிறேன்' '' என்று செய்தியாளர்களிடம் அறிவித்துவிட்டார். இதற்கு, அந்தக் கட்சியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத தினகரன், தேர்தல் வேலைகளில் படுபிஸியாகிவிட்டார். எப்படியோ, நாட்டைக் குட்டிச்சுவராக்க மன்னார்குடி கும்பல் முடிவெடுத்துவிட்டனர்'' எனப் புலம்புகின்றனர், அவர்கள்.  

''கனவு பலிக்காது!''

இந்தநிலையில், '' 'ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுகிறேன். ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்' எனச் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார், தினகரன். இதுதொடர்பாக வடசென்னை அ.தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ''அம்மா இறந்து சில நாள்கள் கழித்து... அதிகாரமிதப்பில் வலம்வந்த சசிகலா, 'நான் முதல்வராதை எவராலும் தடுக்க முடியாது' என சபதமிட்டார். விளைவு, அவரே இன்று ஜெயிலில் இருக்கிறார். இதுபோன்று எத்தனையோ பேர் ஆடி, இன்று ஒன்றும் இல்லாத நிலைக்கே போய்விட்டனர். இவரும், அதேபோல் செயல்படுகிறார். ஆட்சியையும், அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு அனைத்தையும் நிறைவேற்றலாம் என கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது. இது, அம்மா தொகுதிதான். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவரையே இல்லாமல் செய்தவர்களை நாங்கள் எப்படி எங்களின் பிரதிநிதியாய் ஏற்க முடியும். 

டி.டி.வி.தினகரன்

''மக்கள் விரும்பவில்லை!''

'அம்மா, சின்னம்மா ஆசிபெற்ற வேட்பாளர்' என சுவரில் எழுதுவதாலயோ, நோட்டீஸ் ஒட்டுவதாலயோ எதுவும் ஏற்படப்போவதில்லை. 'இரட்டை இலை சின்னத்தில் நிற்போம்' என்கிறார். முதலில், அந்தச் சின்னமே யாருக்கு என முடிவாகவில்லை. அதற்கு மேலே அவரே அந்தக் கட்சியில் நிரந்தர உறுப்பினர் அல்ல. அம்மாவால் வெளியேற்றப்பட்டவர். அத்துடன் பல வழக்குகளில் சிக்கியவர். அம்மா இருக்கும்வரை வாயே திறக்காதவர், அவர் இறந்தபிறகு அனைத்திலும் மூக்கை நுழைக்கிறார். இவையே, அவருக்கு எதிராக இருக்கும். மக்கள் எவரும் அவரையோ, அவரது குடும்பத்தையோ, அவர்களுடைய ஆட்சியையோ விரும்பவில்லை. இப்படியிருக்கும் சூழலில், அவர் எந்த நம்பிக்கையில் ஆர்.கே.நகர் தொகுதியில் களம் காண்கிறார் என்றே தெரியவில்லை. அம்மா நின்ற தொகுதியில் போட்டியிட்டு, அவர் பெயரைவைத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார். அதற்காக வார்டுவாரியாக வாக்காளர்களைச் சந்தித்து அவர்கள் மனங்களைக் குளிர்வித்து வருகிறார். அதற்கு ஒருபோதும் அம்மாவின் அடிமட்டத் தொண்டர்கள் ஆளாகமாட்டார்கள். மொத்தத்தில் எங்கள் ஓட்டு, அம்மாவின் உண்மையான விசுவாசியாய் இருக்கும் வேட்பாளருக்கு மட்டும்தான்'' என்கின்றனர், காட்டமாய். 

''சசிகலாவைப் போன்று டி.டி.வி.தினகரனும், அனைத்துக்கும் ஆசைப்படுகிறார்'' என்பதே, அங்குள்ள தொகுதி மக்கள் சொல்லும் செய்தியாக இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/83781-this-is-why-t-t-v-dinakaran-contesting-in-rk-nagar.html

  • தொடங்கியவர்

"இரட்டை இலை அதிகாரப் போட்டி... சிக்கலில் டி.டி.வி தினகரன்"

தினகரன்

அ.தி.மு.க-வில் ஆட்சி அதிகாரப் போட்டியின் சூடு தணிவதற்குள்... அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. 'இரட்டை இலை சின்னம் யாருக்கு' என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் மோதிக்கொள்ளும் நிலைமை உச்சத்தை எட்டியுள்ளது. இதில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்... ''அ.தி.மு.க-வில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் உறுப்பினராக இருந்தவர்கள்தான் கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும்'' என்று கட்சி விதிகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனர்.

இலை அதிகாரப் போட்டி!

இந்த மனுவைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், இதற்குப் பதில் அளிக்குமாறு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சசிகலா பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அதற்குப் பதில் அளித்திருந்தார். ''ஏற்கெனவே அ.தி.மு.க நிர்வாகிகளாக இருப்பவர்கள் மட்டுமே இதற்குப் பதில் அளிக்க வேண்டும்'' என்று சொல்லி, தேர்தல் ஆணையம் அவர் அளித்த பதிலை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து, சிறையில் உள்ள சசிகலாவிடம் கையெழுத்துப் பெற்று 70 பக்கம் கொண்ட பதிலை தினகரன் மீண்டும் அனுப்பினார். ''சசிகலாவின் பதிலுக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்'' எனத் தேர்தல் ஆணையம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 61 பக்கம் கொண்ட விளக்கத்தைத் தற்போது கொடுத்துள்ளனர். இதைப் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், ''இதன் முடிவை வருகிற மார்ச் 20-ம் தேதிக்குள் அறிவிக்கும்'' என அந்த வட்டாராங்கள் கூறுகின்றன.

விஜயன்''தேர்தல் ஆணையத்தால், சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், தினகரனும் செல்லாதவராக ஆகிவிடுவார்'' என்கிறார் வழக்கறிஞர் விஜயன். மேலும் அவர், ''நடந்துமுடிந்த தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுடைய தேர்தல்களின்போது வேட்புமனுப் படிவத்தில் பொதுச் செயலாளர் கையெழுத்திட வேண்டும். அதன் காரணமாக மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்ட மனுத் தாக்கல் விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. அதைவைத்து மனுத் தாக்கல் செய்யக் கூடாது. அந்த வகையில், சசிகலாவிடமும் கையெழுத்து வாங்கித்தான் மனுத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை தினகரனுக்கு ஏற்படும். இப்படிப்பட்டச் சூழலில் சசிகலாவை நியமித்தது செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால், அது தினகரனுக்கு மிகப் பெரிய சிக்கலை உண்டாக்கும். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாத நிலை ஏற்படும். அதனால், தினகரன் விவகாரத்தை அரசியல் களத்தில் உள்ளவர்கள்தான் பேச வேண்டும்'' என்றார்

சிங்கப்பூரில் சிக்குவாரா?

''அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிங்கப்பூர் குடியுரிமைவாதி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட தினகரனுக்கு, இதுதொடர்பாக ஏதாவது சிக்கல் எழுமா'' என்று நாம் கேள்வி எழுப்பியபோது, '''நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், அந்த நாட்டின் குடிமகன் என்றால் அவர் போட்டியிட முடியாது. குடியுரிமை பெறுவதற்கு ஒரு குறிப்பிட்டத் தொகை கட்டினால் போதும். யார் வேண்டுமானாலும் அதைப் பெற முடியும். ஆனால், தினகரன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதாகத்தான் தெரிகிறது. இதில், எந்தப் பிரச்னையும் வர வாய்ப்பில்லை. மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தினகரன் தாக்கல் செய்துள்ள ஆவணத்தை இந்தியப் பிரஜையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் பேசினோம். ''இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு கோபால்சாமிபன்னீர்செல்வம் கேட்டு வருகிறார். இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் இருப்பதால், உண்மையான அ.தி.மு.க யார் என அவர்கள் அறிவிப்பர். மேலும், இரண்டு தரப்பிலும் வாதங்கள் சரியான முறையில் இருந்து... சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை என்றால், ரிட்டர்னிங் அதிகாரி முன்புவர வாய்ப்புள்ளது. இதில், சரியான முறையில் எந்தத் தரப்பின் வாதங்கள் வைக்கப்படுகிறதோ... அந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் போகும்.

இதேபோன்று உத்தரப்பிரதேசத்தில், அகிலேஷ் - முலாய் சிங் இடையிலான சைக்கிள் சின்னம் ஒதுக்குவதில் போட்டி எழுந்தது. அப்போது இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வந்தபோது,  சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. இருந்தாலும், அதைத் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்ந்து... சின்னம் யாருக்கு என்பதை ஒதுக்கி உத்தரவிட்டது. இங்கும் அதேபோல் சின்னத்தை ஒதுக்குவதற்கு ஏற்றச் சூழல் இருந்தால்,தேர்தல் ஆணையம் அதன் முடிவை அறிவிக்கும்'' என்றார்.

முதலமைச்சர் நாற்காலியில் அமருவதற்கு நகர்த்தப்பட்ட காய்களைவிட, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்... அ.தி.மு.க-வுக்குச் சின்னம் ஒதுக்கும் விவகாரம் புழுதியைக் கிளப்பும் எனத் தெரிகிறது. இதில் அதிகமான சிக்கல் ஆளும் தரப்புக்குத்தான் என்று விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

http://www.vikatan.com/news/coverstory/83787-two-leaves-symbol-issue-dinakaran-may-face-problem.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.