Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை இலை முடக்கத்தில்... ரஜினிக்கு மீண்டும் துளிர்விடுகிறதா அரசியல் ஆசை...?!

Featured Replies

இரட்டை இலை முடக்கத்தில்... ரஜினிக்கு மீண்டும் துளிர்விடுகிறதா அரசியல் ஆசை...?!

ரஜினிகாந்த்

'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' என்ற கோஷம் மீண்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் வலுக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் அனுபவம் என்ற வார்த்தையைத்தான் இதுவரை தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்துவைத்திருக்கிறது. ஆனால் 'அரசியல் ஆசை அனுபவம்' என்ற புதிய வார்த்தையை கண்டுபிடிக்கப்பட்டது ரஜினிக்குப்பிறகுதான். 

1995 ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடந்த சமயம், 'பாட்ஷா' படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. ரஜினியின் திரைவாழ்க்கையில் முக்கிய இடம்பெற்ற இந்த படத்தின் தயாரிப்பாளர் அன்றைக்கு அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன். 

உணர்ச்சிப் பூர்வமான மனிதரான ரஜினி மேடையில் ஆர்.எம் வீரப்பன் படத்தின்  தயாரிப்பாளர் மட்டுமின்றி அதிமுக அரசின் ஒரு அமைச்சர் என்பதை மறந்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவியிருப்பதாக பேசி, ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் வாழ்விற்கு குண்டுவைத்தார். அதிமுக அரசை மறைமுகமாக விமர்சித்துப் பேசிய அவரது பேச்சினால் ஆர்.எம். வீரப்பன் அமைச்சர் பதவியிலிருந்து கட்டம் கட்டப்பட்டார். அதன்பிறகு ரஜினி ஜெயலலிதாவுக்கு எதிராக பிம்பமாக கட்டமைக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் ரஜினியின் நடவடிக்கைகள், பேச்சு மற்றும் அறிக்கைகள் அவர் விரைவில் கட்சியைத் துவங்கி தீவிர அரசியலில் இறங்குவார் என்பதற்கான முன்னோட்டங்களாக அமைந்தன. 

தமிழகம் முழுவதிலும் ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு இணையாக பரபரப்பானார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் அவர் அடுத்துவந்த தேர்தலில் திமுக மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக் கூட்டணிக்கு பத்திரிகையாளர் சோவின் அறிவுறுத்தலில் ஆதரவு தெரிவித்தார். முந்தைய அதிமுக ஆட்சியின் மக்கள் விரோத செயல்களால் ஏற்கனவே அதிருப்தியிலிருந்து தமிழக மக்களின் எண்ணத்திற்கு, பொதுவான மனிதரான ரஜினியின் வாய்ஸ் கூடுதல் அழுத்தம் தர அதிமுக படுதோல்வி அடைந்தது. திமுக கூட்டணி வென்று திமுக ஆட்சியமைத்தது. 

அன்று துவங்கியதுதான் ரஜினியின் 'அரசியல் ஆசைப்' பயணம். பத்திரிகையாளர் சோ உடன் ரஜினி தொடர்ந்து இணைப்பில் இருந்தததால் அக்காலகட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே அழுத்தமாக இருந்தது. ரஜினிக்கும் அந்த ஆசை இருந்தது பல படங்களில் வெளிப்பட்டது. எம்.ஜி.ஆரைப்போன்றே ரசிகர்களுடன் திரையில் உரையாட ஆரம்பித்தார் ரஜினி. 
முத்து படத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கதாநாயகன் ரஜினியின் வரவை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருக்க, நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்திற்கு கண்டிப்பா வருவேன் என அவர் கண்ணைடித்துச் சொன்னதை அவர் தன் அரசியல் நுழைவை கோடிட்டுக்காட்கிறார் என புரிந்துகொண்டு திரும்ப திரும்ப வந்து தியேட்ரை நிறைத்து கைதட்டி ரசித்தார்கள் ரசிகர்கள். 

ரஜினி படங்களின் வெற்றிக்கான ஒரு ரகசியத்தை அந்த படத்தின்மூலம் தயாரிப்பாளர்கள் கண்டெடுத்தார்கள். அதை தொடர்ந்து தங்கள் படங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதே முத்து படத்தில் வைரமுத்து கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என ரஜினியின் அடுத்த படத்தின் வெற்றிக்கும் சேர்த்து பாட்டெழுதினார் வைரமுத்து.

தொடர்ந்து பல படங்களில் ரஜினியின் அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம்பெற ஆரம்பித்தன. படம் வெளியாகும் சமயம் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தால் படத்திற்கு பரபரப்பு இன்னும் எகிறிவிடும். இடைவெளி விட்டு படங்கள் வெளிவந்தாலும் வெளியீட்டுக்கு முன் திரைப்படத்தில் ரஜினியின் பரபரப்பான அரசியல் கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி படத்தின் வெற்றியை உறுதி செய்தன. 'படையப்பா'வில் 'என் வழி தனி வழி' என சீறியது, 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்' என்பது வரை தன் படங்களின் வெற்றிக்காக தயாரிப்பாளர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு பஞ்ச் வசனங்களை பேசி இந்த வெற்றியை தக்கவைத்துக்கொண்டார் ரஜினி. ஆனால் ரஜினி ஒரு 'வைக்கோல் கன்னுக்குட்டி' என்பதை மக்கள் உணர ஆரம்பித்தபின் அவர் பற்றிய கவலைகளில் இருந்து விடுபட்டனர்.

தமிழக மக்கள் ரஜினியின் இந்த ஆடுபுலி ஆட்டத்தை புறந்தள்ளிவிட்டாலும் ரசிகர்கள் தங்கள் ஆசையை கட்டுப்படுத்திக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்தின் திரையீட்டின்போதும் ரஜினியை அரசியலுக்கு வரவேண்டும் என அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். 
திரையில் தன் அரசியல் ஆசையை ரஜினி வெளிப்படுத்தினாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர் எல்லோருக்கும் பொதுவானவனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். இயல்பில் ரஜினி அரசியல் ஆசை கொண்டவர்தான் என்றாலும் 1990 களின் மத்தியில்தான் அவருக்கான அரசியல் கனவு பலிப்பதற்கான வாய்ப்புகள் கதவைத்திறந்து காத்திருந்தன. ஆனால் பாட்ஷா வெளியீட்டின்போது அவருக்கு இருந்த எழுச்சியை அவர் பயன்படுத்திக்கொள்ளத்தவறினார். அப்படி ஒரு வாய்ப்பு இனி தனக்கு இல்லை என்பதை அவரும் பிற்காலத்தில் உணர்ந்தார். அதை உணர்த்தியவர்களில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான 'சோ'வும் ஒருவர். 

ரஜினி தன் அரசியல் ஆசையை தன்னிடம் அகற்றிக்கொண்டு ஆன்மீகத்தில் பற்றுக்கொள்ள ஆரம்பித்தபின் அவரது படங்களின் வெற்றி சிறிது பாதிக்கப்பட்டது. 2002 ல் வெளியான பாபா படத்தில் தனது திரைவாழ்வின் முடிவில் தான் தேர்ந்தெடுக்கப்போவது ஆன்மீக வாழ்வை என்பதாக தன் நிலைப்பாட்டை தீர்க்கமாக முன்வைத்தார். ஆனால் அந்தப்படம் படுதோல்வி. ஆக ரசிகர்களுக்காகவாவது அவர் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அந்த படத்தின்மூலம் உருவானது. அப்போதும் அசைந்துகொடுக்கவில்லை ரஜினி. காரணம் சோ. உணர்ச்சியவயப்பட்ட மனிதரான ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்பதை தனிப்பட்ட முறையில் அவரிடம் பலமுறை எடுத்துச்சொன்னவர் சோ. 

ரஜினிகாந்த் மோடி திருநாவுக்கரசு

அதேசமயம் ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு கொண்ட ரஜினி தன் பலம், பலஹினங்களை நன்கு அறிந்தவர் தெரிந்தவர். 96 தேர்தலில் அவரது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நுாற்றுக்கணக்கான பேர் குழுமியிருந்த பொதுவெளியில் தன் டென்ஷனைக் குறைக்க உதட்டுக்கு ஓய்வுதராமல் தொடர்ச்சியாக சிகரெட்டுக்களை ஊதித்தள்ளியவர். 

ஒரு அரசியல்வாதிக்குரிய சிறு விஷயத்திலும் தன்னை  பொருத்திக்கொள்ளமுடியாத ஒருவர் பொதுவாழ்வில் 24 மணி நேரமும் இயங்குவது சாத்தியமற்றது என்பது அவரே உணர்ந்த விஷயம். ஒரு சட்டமன்றத் தேர்தலின்போது வெளியான அவரது திரைப்படம் ஒன்றில் அவர் சிகரெட் புகைக்கும் காட்சியைக் கண்டித்து படத்தின் பெட்டியை துாக்கிச் சென்றது நடந்தது.

அப்போதும் அதன்பிறகும் அரசியல் களத்தில் நேரடியாக தான் சந்தித்த சில நிகழ்வுகளால் தன் அரசியல் ஆசைக்கு ரஜினி மூட்டை கட்டிவைத்தார். ஆனாலும் விடாது கருப்பாய் இன்று வரை ரஜினியை கட்சித்துவக்க வலியுறுத்தி வருகின்றனர் ரசிகர்கள். அரசியலுக்கு வரச்சொல்லி ரசிகர்கள் நடத்தும் போஸ்டர் யுத்தத்தால் சினிமாவிலாவது அவர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது அரசியல் வசனங்களை பேசிவந்தார். சில வருடங்களுக்கு முன் ரஜினிக்கே தெரியாமல் ரஜினிக்கென ஒரு கட்சியை துவக்கி கொடியையும் அறிமுகப்படுத்தி ரஜினிக்கு அதிர்ச்சி தந்தது ஒரு ரசிகர் மன்றம். 

இப்படி ரஜினியின் அரசியல் ஆசைக்கு வெள்ளிவிழா கொண்டாடவேண்டிய இன்றைய தருணம் வரை அவரது ரசிகர்களிடம் பட்டுப்போகாமல்தான் உள்ளது அரசியல் ஆசை. கடந்த 10 வருடங்களாக ரசிகர்களை அவர் முறையாக சந்திக்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய மனக்குறையாக இருப்பதாக அவருக்கு தகவல் சென்றநிலையில்தான் வரும் 12 ந்தேதிமுதல் 17 வரை என 6 நாட்கள் சென்னையில் ரசிகர்களை சந்திப்பதாக மன்ற அமைப்பாளர் சத்தியநாராயணா மூலம் அறிவித்துள்ளார். அதிமுக பிளவு, பாஜகவின் ஆதரவு, இன்னும் ஸ்திரமாக இருக்கும் ரசிகர்களின் பலம் இவற்றை கூட்டிக்கழித்துப்பார்த்து ரஜினி இந்த முறை தன் அரசியல் ஆசையை செயல்படுத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள்.

ரஜினிகாந்த் கருணாநிதி

இதுதொடர்பாக ரஜினியின் திரையுலக சகாவான லதாவிடம் பேசினோம். “அரசியலைப் பொருத்தவரை அவரது முடிவு என்னவென்று எனக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புபவர்களில் நானும் ஒருத்தி. எம்.ஜி.ஆருடன் திரையுலக வாழ்வில் மட்டுமின்றி அவரது அரசியல் வாழ்க்கையையும் கூர்ந்துகவனித்தவள் நான். மக்களின் மீதான எம்.ஜி.ஆரின் பாசம் அளப்பரியது. மக்களை சந்திப்பதிலும் அவர்களின் குறைகளை கேட்டறிவதிலும் அவருக்கு அப்படி ஓர் ஆர்வம் இருக்கும். இந்த மனிதநேயம்தான் அவரை சினிமாவிலும் அரசியலிலும் உச்சியில் உட்காரவைத்தது. பெரும் புகழ் அடைந்தபின்னரும் பழையதை மறக்காமல் அவர் எளிமையாகவே இருந்தார். ரஜினியிடமும் அந்த சில குணங்களை கண்டு நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

நல்ல மனிதர். எளிமையானவர், மனிதநேயவாதி. புகழின் உச்சிக்கு சென்றபின்னரும் அன்றுபோலவே இன்றும் பாசாங்கற்றவராக பழகுபவர். இத்தனைக்கும் மேலாக மக்களின் மீது நிஜமான பாசம் கொண்டவர். யார் யாரோ அரசியலுக்கு வரும்போது ரஜினி போன்றவர் அதற்கு முழுத் தகுதிகொண்டவர். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திற்குப்பின் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப அவர்களைப்போன்றே மக்கள் சக்தி மிக்க ஒருவர் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு  நல்ல விஷயம். வரவேற்க வேண்டிய விஷயமும் கூட. ஆனால் எங்கும் எதிலும் நேர்மையை கடைபிடிக்கவேண்டும் என்ற அவரது ஒரே ஒரு சுபாவம் மட்டும்தான் அரசியலில் அவருக்கு ஒத்துவருமா எனத்தெரியவில்லை. எப்படியிருந்தாலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் முதல் வாழ்த்து என்னுடையதாகத் தான் இருக்கும்” என்றார்.

லதாஉண்மையில் ரசிகர்களுடனான இந்த சந்திப்புக்கு இன்னொரு காரணம் உள்ளதாக சொல்கிறார்கள். தன் குடும்பத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களால் ரஜினி சமீப காலங்களாக மனமுடைந்துள்ளார். தனது பழைய நெருங்கிய நண்பர்களுக்கு தானே போன் செய்து பேசி அதிலிருந்து சற்று ஆறுதலடைகிறார். நீண்ட காலமாக ரசிகர்களை சந்திக்கவில்லை என்ற குறை ரசிகர்கள் மத்தியில் உள்ள நிலையில் ரசிகர்களுடனான அப்படி ஒரு சந்திப்பு தனக்கு மனநிம்மதியைத் தரும் என்பதால் அப்படி ஒரு ஏற்பாட்டை செய்யச்சொல்லி அவரேதான் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். தனது புதிய படமான எந்திரன் 2.0 வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களை சந்திப்பது அவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும் என்பதும் அவரது இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம். அரசியலில் இப்போதுள்ள சூழலில் அப்படியொரு சந்திப்பு பல யுகங்களுக்கு வழிவகுத்துவிடும் என்பதால்தான் ரசிகர்களின் வற்புறுத்தலில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது என்பது போன்று சந்திப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமாக வட்டாரத்தை சேர்ந்தவர்கள். இந்த சந்திப்பு முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட காரணங்களுக்காகத்தானே தவிர இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை” என்கிறார்கள் அவர்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய திரையுலகைச் சேர்ந்த ரஜினியின் நண்பர் ஒருவர், “ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார். எப்போதும் பரபரப்பை விரும்பாத மனிதர் அவர். நல்லவராக, நேர்மையாளராக இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு அது மட்டுமே தகுதியில்லை. இயல்பில் இயல்பில் யாருடனும் எதிர்ப்பை கடைபிடிப்பது அவருக்கு வராது. எந்த தலைவரை விமர்சித்தாரோ அவரிடம் சில வருடங்களில் நட்பு பாராட்டியவர் அவர்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரான கங்கை அமரனை வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்தியவர் மறுநாளே, தான் யாரையுமே ஆதரிக்கவில்லை என அவசர கதியில் பின்வாங்கினார். இப்படி யாரையும் பகைத்துக்கொள்ள விரும்பாத குணம் அரசியலுக்கு சற்றும் பொருந்தாது என்பதை அவரே அறிவார். வெள்ளந்தியான மனிதரான அவருக்கு அரசியல் நெளிவு சுளிவுகள் அறவே வராது. மேலும்அவருக்கு தீவிரமான அரசியல் நிலைப்பாடு என்று ஒன்றும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே அவரது குணம் இதுதான். பா.ம.கவின் எதிர்ப்பில் பின்வாங்கி இனி தான் படங்களில் சிகரெட் புகைப்பதில்லை என அறிவித்தது முதல் சமீபத்தில்சிறிய சர்ச்சைக்குப் பயந்து தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்வதுவரை தான் எடுக்கும் எந்த முடிவிலும் சிறு எதிர்ப்பு வந்தாலும் கூட்டுக்குள் நத்தை உள்வாங்கிக்கொள்வதுபோல் ஒதுங்கிக்கொள்ளும் அவரது சுபாவம் அரசியலுக்கு துளியும் ஒத்துவராது. ஆரம்பத்தில் அவருக்கு அரசியல் ஆசை இருந்தது உண்மைதான். ஆனால் அரசியலில் தான் மட்டுமே நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது. தன்னுடன் இருப்பவர்களும் அப்படி இருக்கவேண்டும். அப்படி எல்லோரையும் கட்டுப்படுத்த முடியாவிட்டால் இருக்கும் புகழை இழக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்தே பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என சாதுர்யமாக தனக்கென ஓர் நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார். 

அதேசமயம் இனி ரஜினியே விரும்பினாலும் அதற்கான களம் இன்று இல்லை. ரஜினி ரசிகர்கள் பலர் பேரன்பேத்தி எடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர் திரையுலகில் பரபரப்பாக இயங்கியநேரத்தில் கட்சித் துவங்கினார். கட்சியைத் துவக்கியது மட்டும்தான் அவர். மற்றவற்றை அவரது ரசிகர்கள் பார்த்துக்கொண்டார்கள். பல ஆண்டுகாலம் நேரடி அரசியலில் அவர் பங்குபெற்றிருந்ததால் அவரால் அரசியலில் நிலைக்க முடிந்தது. ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. அதுமட்டுமின்றி உடலளவிலும் ரஜினி முன்புபோல் இல்லை. அவரால் இன்றுள்ள அரசியல் சூழலில் பரபரப்பாக இயங்குவது என்பது முடியாத காரியம். அதனால் அவர் அரசியலுக்கு வருவார் என நான் நினைக்கவில்லை” என்றார். 

ரஜினிகாந்த் ஜெயலலிதா

சோவின் மறைவுக்குப்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி, சோவைப் பற்றி சிலாகித்துச் சொன்ன விஷயம், அவரது கணிப்பு பற்றியது. “எந்த ஒரு விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையில் ஆராய்ந்து அவர் தீர்வு சொல்வார். அது எப்போதும் சரியாகவே இருக்கும். ஒரு இக்கட்டான ஒரு சூழ்நிலையில் ஒரு பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்;  ஒரு முக்கியமான வழிகாட்டுதல் வேண்டும் என்றால் சோ வை கேட்டால்  சரியான வழி கிடைக்கும்.  அதுதெளிவைத்தரும்” என்றார். 

 

உதாரணத்திற்கு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் 'இது பின்னாளில் பெரிய பிஸினஸ் ஆகும். ஏன் நீங்கள் ஏன் ஒரு அணியை வாங்கக்கூடாது' என்று ரஜினியை சோ கேட்டாராம். அது அப்படியே பலித்தது என பெருமிதப்பட்டார் ரஜினி. 
சாதாரண ஐ.பி.எல் ஆட்டத்துக்கே சோவின் கணிப்பை சிலாகிக்கும் ரஜினி, தன் அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கவும் அவரிடம்தான் ஆலோசனை கேட்டிருக்கவேண்டும். சோ சொன்னதற்காக இத்தனை நாள் மவுனம் காத்த ரஜினி திரும்ப சோ வந்து சொன்னால்தான் ஒருவேளை மவுனம் கலைப்பாரோ என்னவோ...

http://www.vikatan.com/news/coverstory/85320-will-superstar-rajinikanth-join-politics.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நவீனன் said:

இரட்டை இலை முடக்கத்தில்... ரஜினிக்கு மீண்டும் துளிர்விடுகிறதா அரசியல் ஆசை...?!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.