Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை!

Featured Replies

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை!

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Kodanad
 

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது. ஓம் பகதூர் என்பவர், அங்குள்ள பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். ஓம் பகதூர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக  அங்கு பணியாற்றி இருக்கிறார். நள்ளிரவில், காரில் வந்த மர்ம கும்பல், இவரைக் கொலைசெய்துவிட்டுத்  தப்பிச் சென்றுவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில், கொடநாடு எஸ்டேட் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த எஸ்டேட் தற்போது, டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் காவலாளி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், அவரைக் கொன்றுவிட்டுக் கொள்ளையடிக்க முயன்றனரா அல்லது முக்கிய ஆவணங்களைக் கடத்த முயன்றனரா என போலீஸார் தீவிர விசாரணை  நடத்திவருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87359-jayalalithaas-kodanad-estate-watchman-brutally-killed.html

  • தொடங்கியவர்

வி.ஐ.பி. வாகனம், காவலாளியின் நடிப்பு..! கொடநாட்டில் என்ன நடந்தது?

 

கொடநாடு


ஜெயலலிதா இருந்தவரை யாரும் எளிதில் நுழைய முடியாத கோட்டையாக இருந்த கொடநாட்டில் முதல்முறையாக கொள்ளை முயற்சி ஒன்று நடந்திருக்கிறது. காவலாளியை கொன்று, கொடநாட்டு பங்களாவின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள் கொள்ளையர்கள். கொள்ளை முயற்சி தான் என முதல்கட்ட விசாரணையில் சொல்லப்பட்டாலும், கொள்ளை போகவில்லை என்பதை உறுதியிட்டு யாராலும் சொல்லமுடியவில்லை. தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் இந்த கொலையும், கொள்ளை முயற்சியும் பெரும் சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில், நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைந்தது இரு வாகனங்கள். இரு வாகனங்களும் பொலிரோ வாகனம் என சொல்லப்படுகிறது. அரசு வாகனங்களை போல காட்சியளிக்கும் இந்த வாகனங்கள் மிக வேகமாக எஸ்டேட்டினுள் நுழைந்ததாக சொல்லப்படுகிறது.

கொடநாடு

கொடநாட்டு பங்களாவுக்குள் நுழையும் பிரதான கேட்களான 9வது கேட் மற்றும் 10வது கேட் வழியாக இந்த கார்கள் நுழைந்தன.10வது கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த காரில் 10க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். 10வது கேட்டில் இருந்த காவலாளி ஓம் பகதூர்  என்பவர் இவர்களை தடுக்க முயல... அவரை அடித்து தலைகீழாக தொங்க விட்டுச் சென்றது அந்த கும்பல். இதேபோன்று 9வது கேட்டில் இருந்த கிருஷ்ணபகதூர் என்பவரையும் அடித்து அங்குள்ள லாரியில் தூக்கிப் போட்டு விட்டு சென்றனர். தொடர்ந்து பங்களாவினுள் நுழைந்த அந்த கும்பல், பங்களா கண்ணாடியை உடைந்து உள்ளே நுழைந்துள்ளது. சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பினர்.

இன்று அதிகாலை காவலாளி தலைகீழாய் தொங்கிக்கொண்டிருப்பதை கண்ட தொழிலாளிகள், ஓம்பகதூரை சடலமாகவே மீட்டனர். லாரியில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ண பகதூருக்கு உயிர் இருக்க, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொழிலாளர்கள். கிருஷ்ணபகதூர் படுகாயங்களுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நள்ளிரவில் காவலாளிகளை கொல்லும் நோக்கத்துடனே அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் காவலாளி கிருஷ்ணபகதூர் இறந்தது போல் நடித்ததால் அவரை அங்கிருந்த லாரி ஒன்றில் போட்டு விட்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொடநாடு

முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், கொள்ளையர்கள் வந்த பொலிரோ ஜீப் அரசு வாகனத்தை போல இருந்தது என்றும், அதில் வி.ஐ.பி. என குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 10க்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் இரு கேட்களில் நுழைந்து பங்களாவின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாது, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்த கொடநாடு பங்களா அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டிய சொத்து என்பது குறிப்பிடத்தக்கது.. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார். அதன்படி, சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள முக்கிய சொத்து கொடநாடு எஸ்டேட் தான்.

தற்போதைய சூழலில் இந்த சொத்து சசிகலா குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடநாடு மேலாளர் நடராஜன் என்பவர் மூலம் சசிகலா குடும்பத்தினர் தான் இந்த சொத்தை கவனித்து வருகிறார்கள். விரைவில் அரசால் பறிமுதல் செய்யப்படக்கூடும் என சொல்லப்படும் இந்த பங்களாவில் நடந்த இந்த கொலையும், கொள்ளையும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொடநாடு

ஜெயலலிதாவின் சொத்து சார்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை கொடநாட்டில் தான் பாதுகாக்கப்பட்டு வைக்கப்படுவதாக சொல்லப்படுவது உண்டு. யாரும் நுழைய முடியாத கோட்டை என்பது அதற்கு காரணமாகவும் சொல்லப்பட்டது. இப்போது அந்த கோட்டையில்  கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. என்ன கொள்ளையடிக்கப்பட்டது என்பது தான் இப்போதைய மிகப்பெரிய கேள்வி.

கொள்ளை எதுவும் போகவில்லை. இது ஒரு கொள்ளை முயற்சி என சொல்லப்படுகிறது. ஆனால் எஸ்டேட்டுக்கு 3 கி.மீ.க்கு முன்பே மீடியாக்களை நிறுத்தி வைத்துள்ளது காவல்துறை. இது குறித்து தெளிவுபடுத்தாத காவல்துறை, சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டும் சொல்லியிருக்கிறது.

சிறையில் சசிகலா, அடுத்தடுத்த வழக்குகளால் திணறும் தினகரன், கட்சியை விட்டு ஒதுக்கப்படும் சசிகலாவின் குடும்பம் என சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை முயற்சி மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/87387-this-is-what-happened-at-jayalalithaa’s-kodanad-estate.html

  • தொடங்கியவர்

மறைந்த முதல்வர், ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி, நள்ளிரவில், வாகனங்களில் வந்த முகமூடி கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்; மற்றொரு காவலாளி, படுகாயத்துடன் உயிர் தப்பினார். ஜெ., அறையில் உள்ள முக்கிய ஆவணங்களை கொள்ளை அடிக்கும் திட்டத்துடன், மர்ம கும்பல் வந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால், போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட, ஜெயலலிதாவின் பிற சொத்துகளின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள, ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட், 900 ஏக்கர் பரப்பு கொண்டது. இதன் வளாகத்தில், 4,500 சதுர அடியில் பிரம்மாண்டமான பங்களா மற்றும் டீ தொழிற்சாலை உள்ளது. இங்கு, 600 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்; இவர்களுக்கான குடியிருப்புகளும் அங்கு உள்ளன.
 

10 நுழைவாயில்கள்


எஸ்டேட்டிற்குள் நுழைய, 10 நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும், 'ஷிப்ட்' அடிப்படையில், காவலாளிகள் பணியாற்றுகின்றனர். இவற்றில், ஏழு, ஒன்பது, 10வது நுழைவாயில்கள் மட்டுமே பிரதானம்; மற்றவை, தொழிலாளர்கள் மட்டுமே சென்று வரக்கூடியவை.
ஜெ., பெரும்பாலும் ஏழு, ஒன்பதாவது நுழைவாயில்களையே பயன்படுத்துவார். ஜெ., உயிருடன் இருந்த வரை, இந்த எஸ்டேட்டிற்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவர் மறைந்த பின், போலீஸ் பாதுகாப்பு படிப்படியாக விலக்கப்பட்டு, தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டனர்.
 

நள்ளிரவில் கொடூரம்


நேற்று முன்தினம் இரவில், 10ம் எண் நுழைவாயிலில், நேபாளத்தைச் சேர்ந்த, ஓம்பகதுார், 50, என்பவர் காவல் பணியில் இருந்தார். நள்ளிரவில் இரு வாகனங்களில் வந்த, 10க்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த ஆசாமிகள், ஓம்பகதுாரை இரும்பு கம்பியால் தாக்கி, கை, கால்களை துணி மற்றும் ஒயரால் கட்டியுள்ளனர். பின், அருகிலிருந்த மரத்தில் தலைகீழாக தொங்க விட்டனர்; அதில், அவர் இறந்தார்.
சத்தம் கேட்டு, ஒன்பதாம் எண் நுழைவாயிலில் இருந்து ஓடி வந்த சக காவலாளி, கிருஷ்ணபகதுார், 35, என்பவரையும், அக்கும்பல் சரமாரியாக தாக்கியது. அவர் கூச்சலிட்டதும், அருகில் தொழிலாளர் குடியிருப்பில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள், அந்த கும்பல் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
 

உயரதிகாரிகள் அதிர்ச்சி


தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த எஸ்டேட்டில், மேலாளராக பணியாற்றும் நடராஜன், இது பற்றி போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரிவித்தார். எஸ்.பி., முரளிரம்பா, குன்னுார் டி.எஸ்.,பி., முத்தமிழ், ஊட்டி டி.எஸ்.பி., மணிகண்டன் ஆகியோர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
கொலை செய்யப்பட்ட காவலாளியின் உடல், பரிசோதனைக்காக, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயத்துடன் உயிர் தப்பிய கிருஷ்ணபகதுாரிடம், கோவை டி.ஐ.ஜி., தீபக் தமோர், ஐ.ஜி., பாரி, விசாரணை நடத்தினர். எஸ்டேட் பகுதிக்கு, அ.தி.மு.க., நிர்வாகிகள் செல்லக்கூடாது என்ற, மேலிட உத்தரவு காரணமாக, யாரும் வரவில்லை.

காவலாளி கொலை சம்பவம், போலீஸ் உயரதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கும்பலின் நோக்கம் என்ன?


கோடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைய முயன்றது யார்; என்ன நோக்கத்திற்காக வந்தனர்; காவலாளியை கொலை செய்த பின், எஸ்டேட் பங்களாவிற்குள் நுழைந்தனரா என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, போலீசாரிடம் பதில் இல்லை.ஜெயலலிதாவின் சொத்தான இந்த எஸ்டேட், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சொத்து பட்டியலில் உள்ளது.
ஜெ., மறைவுக்கு பின், சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளது. இவரது கட்டுப்பாட்டில் இருந்து எஸ்டேட்டை மீட்க,மற்றொரு தரப்பினர் முயன்று வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக, முக்கிய ஆவணங்களை கைப்பற்றும் நோக்கில், முகமூடி கும்பல், வாகனங்களில் வந்ததா என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மூட்டை மூட்டையாக பணம்


கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'கன்டெய்னர்' லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, திருப்பூரில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் ரொக்கம் யாருடையது என்ற மர்மம் நீடிக்கிறது. தி.மு.க., தரப்போ, 'இப்பணம் ஜெ.,வுக்கு சொந்தமானது தான்' என, அப்போதே குற்றம் சாட்டியது.ஆனால், அதை அவர் அடியோடு மறுத்து விட்டார். எனினும், பணம், மூட்டை மூட்டையாக, கோடநாடு எஸ்டேட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, அவ்வப்போது புரளி கிளம்பியது.
ஜெ., மறைவுக்கு பின், போலீஸ் பாதுகாப்பு, முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், பண மூட்டைகளை அள்ளும் திட்டத்துடன், முகமூடி கும்பல் வந்ததா என்ற சந்தேகமும், போலீசாருக்கு உண்டு. கும்பல் பிடிபட்டால் மட்டுமே, மர்ம முடிச்சுகள் அவிழும்.
 

மாவட்டம் முழுவதும் உஷார்!


கோடநாடு எஸ்டேட் வளாகம் முழுவதும், 80க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது. காவலாளி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து, 10 மீட்டரில் உள்ள கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி துவங்கி உள்ளது.
மாவட்டம் முழுவதும், முக்கிய சாலைகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில், நள்ளிரவு, 12:00 மணி முதல், அதிகாலை வரை, கடந்து சென்ற வாகனங்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
 

'கொள்ளை முயற்சி தான்!'


நீலகிரி மாவட்ட, எஸ்.பி., முரளிரம்பா கூறியதாவது:பங்களாவில் உள்ள, அறை ஒன்றின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகுந்து, எதையோ தேடியுள்ளனர்; அங்கு, அவர்களுக்கு எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை.அருகே இருந்த தொழிற்சாலை அறையின் கதவையும் உடைத்துள்ளனர். எதை எடுத்துச் சென்றனர் எனத் தெரியவில்லை.

 

கும்பலை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பிற விபரங்கள், விசாரணை முடிவில் தெரிய வரும்.இவ்வாறு அவர்கூறினார்.

அவரோ சிறையில்... இவரோ டில்லியில்...


எஸ்டேட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலா, பெங்களூரு சிறையில் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள, தினகரன், டில்லி போலீசாரின் விசாணையில் உள்ளார். இந்நிலையில் தான், எஸ்டேட்டில் கொலை நடந்துள்ளது. இதுவே, பல்வேறு விதமான யூகங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது என்கின்றனர் போலீசார்.
 

ஜெ., அறையில் இருந்த ஆவணங்கள் கொள்ளை?


பங்களாவில், ஜெயலலிதா பயன்படுத்திய பல அறைகள் உள்ளன. அந்த அறைகளில் இருந்த, முக்கிய ஆவணங்களுடன் கூடிய சூட்கேஸ்களை, அந்த கும்பல் துாக்கி சென்று விட்டதாக, 'பகீர்' தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னையில் போயஸ் கார்டன் இல்லம், பல நிறுவனங்கள், இடங்கள் மற்றும் ஆந்திராவில் ஐதராபாத் திராட்சை தோட்டம், பையனுார் பங்களா, சிறுதாவூர் பங்களா என, எண்ணற்ற சொத்துகள், ஜெ.,வுக்கு உள்ளன.இவற்றில் அவருக்கு மிகவும் பிடித்தது, கோடநாடு எஸ்டேட் தான்; கோடையிலும் இங்கு நிலவும் குளு குளு சீதோஷ்ண நிலையே இதற்கு காரணம்.
அரசியல் ரீதியான நெருக்கடி, வழக்குகளால் நிம்மதியிழப்பு என, கவலைகள் அதிகரிக்கும் போதெல்லாம், அவர் இங்கு வருவது வழக்கம். சசிகலாவும், உதவிக்கு ஒரு சிறுமியும் உடன் வருவதுண்டு. மாதக்கணக்கில் தங்கியிருந்து, அரசு நிர்வாகத்தை இங்கிருந்தே நடத்தியதும் உண்டு.
இதற்கான அனைத்து வசதிகளும், இந்த எஸ்டேட் வளாகத்தில் உள்ளன. 4,500 ச.அடி.,யில், 90க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பங்களா உள்ளது. அதில், ஆடம்பர வசதிகள் ஏராளம். மினி சினிமா தியேட்டர், குட்டி படகுத்துறை, விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் நான்கு, 'ஸ்ட்ராங்க் ரூம்'கள் என, சகல வசதிகளும் உள்ளன.
காவலாளியை கொன்று, பங்களாவிற்குள் புகுந்த முகமூடி ஆசாமிகள், சில அறைகளின் பூட்டை உடைத்து, சூட்கேஸ்களுடன் கூடிய முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து, எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 

அன்று சிறுதாவூர் இன்று கோடநாடு!


சமீபத்தில், ஜெ.,வுக்கு சொந்தமான, சென்னை அருகே திருப்போரூர் அடுத்துள்ள சிறுதாவூர் பங்களா வளாகத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு, போலீஸ் ஜீப் ஒன்றும் எரிந்த நிலையில் நின்றிருந்தது. அப்போதே, பல்வேறு விதமான யூகங்களும், சந்தேகங்களும் கிளம்பின. பூட்டி, 'சீல்' வைக்கப்பட்ட நிலையில் இருந்த, கெடுபிடி மிகுந்த, சிறுதாவூர் பங்களாவிற்குள் நுழைந்து, முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை கடத்தும் திட்டத்துடன், தீ விபத்து நாடகம் நடத்தப்பட்டதாக, தகவல்கள் கசிந்தன.
ஆனாலும், இது, ஆளுங்கட்சி சார்ந்த விவகாரம் என்பதால், போலீசார் எவ்விதமான விசாரணையிலும் ஈடுபடவில்லை. இந்நிலையில் தான், கோடநாடு எஸ்டேட்டில், ஆவணங்கள் நிறைந்த, மூன்று சூட்கேஸ்களை திருடிச் சென்று விட்டதாக, போலீஸ் தரப்பிலேயே கூறப்படுகிறது.இது போன்ற சம்பவங்கள் தொடர்வதாலும், தடுக்க வேண்டிய போலீஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதும், பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதாவின் பிற சொத்துகள் கதி என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிறுதாவூர், கோடநாடு வரிசையில், போயஸ் கார்டன் வீடும் சேர்ந்து விடுமோ என்ற அச்சம், அ.தி.மு.க.,வினரிடம் காணப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758064

  • தொடங்கியவர்
கோடநாடு காவலாளி கொலையில் திடீர் திருப்பம்
குற்றவாளிகளை 'காட்டி கொடுத்த ஜெ., அறை'
 
 
 

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், திடீர் திருப்பமாக, போலீசாருக்கு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. காயத்துடன் உயிர் தப்பிய காவலாளி, கிருஷ்ண பகதுாரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

 

Tamil_News_large_1758788_318_219.jpg

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெ.,க்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் காவலாளி ஓம்பகதுார், நேற்று முன்தினம் அதிகாலை, மர்ம நபர்களால் அடித்து கொல்லப்பட்டார். உடன் வேலை செய்யும் காவலாளி கிருஷ்ண பகதுார், 35, என்பவர் காயத்துடன் தப்பினார். இவர் அளித்த வாக்குமூலத்தில், '10க்கும் மேற்பட்ட முகமூடி ஆசாமிகள், ஓம் பகதுாரை அடித்து கொன்று, என்னையும் தாக்கினர்; நான் மயங்கி விட்டேன்' என, கூறினார்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட கோவை ஐ.ஜி., பாரி, டி.ஐ.ஜி., தீபக் தமோர், நீலகிரி எஸ்.பி., முரளி ஆகியோர், எஸ்டேட்டில் உள்ள ஜெ., பங்களாவை ஆய்வு செய்தனர். இரு அறை களின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந் தன.தடயங்கள் சிக்கின: நீலகிரி மாவட்ட தடய அறிவியல் துறையினர், காவலாளி கொல்லப் பட்ட இடத்தில் படிந்திருந்த ரத்தக்கறை மாதிரி கள், பங்களா அறைகளின், ஜன்னல் கண்ணாடி களை உடைத்த இடத்தில் படிந்திருந்த ரத்தக் கறைகள், விரல் ரேகை பதிவுகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர்.

இதற்கிடையே, முகமூடி ஆசாமிகளின் தாக்கு தலில் காயமடைந்து தப்பியதாக கூறப்படும்

கிருஷ்ண பகதுாரை, சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று, 'என்ன நடந்தது' என்பதை விளக்குமாறு போலீசார் உத்தரவிட்டனர். அவரும், கொலை நிகழ்ந்த நாளில் நடந்த சம்பவத்தை அப்படியே நடித்து காட்டினார். தான் ஒன்பதாம் எண் நுழைவாயிலில் இருந்த தாகவும், 10ம் எண் நுழை வாயில் பணியில் இருந்த ஓம்பகதுாரின் கதறல் கேட்டு ஓடி வந்ததாகவும், அப்போது அங்கு அவரை தாக்கியமுகமூடி அணிந்த நபர்கள், தன்னையும் தாக்கியதாக கூறினார்.

இங்கு தான் போலீசாருக்கு இடித்தது. இரு நுழை வாயில்களுமே மிகமிக அருகில் உள்ள நிலையில், வாகன போக்குவரத்தோ, ஆள் நடமாட்டமோ அறவே இல்லாத அதிகாலை நேரத்தில், 'இரு வாகனங்கள் வந்தது தெரியாது' எனக்கூறிய இந்த நபர், ஓம்பகதுாரின் கதறல் கேட்டே தான் அங்கு ஓடியதாகவும் தெரிவித்ததை, போலீஸ் அதிகாரி களால் நம்ப முடியவில்லை. இதையடுத்து, கிருஷ்ண பகதுாரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று, ரத்த மாதிரி சேகரித்து, ஒப்பீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
 

கேமரா ஆய்வு:


கோடநாடு செல்லும் சாலை மற்றும் நீலகிரி மாவட்ட எல்லை சாலைகளில் பல்வேறு நிறுவனங் கள் உள்ளன. இவற்றின் சார்பில், சி.சி.டி.வி., கேமராக்கள் ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ளன. 22ம் தேதி இரவு முதல் மறுநாள் வரை பதிவான காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார், சந்தேக வாகன பட்டியலை தயாரித்து, உரிமையாளர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர்கூறியதாவது: காயத்துடன் தப்பியதாக கூறப் படும் காவலாளி மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்நபரே முன்விரோதம் காரணமாக, சக காவலா ளியை கொலை செய்துவிட்டு, கொள்ளை முயற்சி நாடகமாடுகிறாரா அல்லது வெளியில் இருந்து வந்த முகமூடி கும்பலுக்குதுணை புரிந்தாரா, என்ற யூகத்தின் அடிப்படையிலான சந்தேகங்களும் உள்ளன; இதையும், உறுதிப்படுத்த வேண்டி

 

இருக்கிறது. கிருஷ்ண பகதுாரின் ரத்த மாதிரி யும், ஜெ., அறையின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்ட இடத்தில் படிந்திருந்த ரத்தக்கறை படிம மாதிரியும், ஆய்வகத்தின் பரிசோதனையில் ஒத்துப்போகும் பட்சத்தில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்வதில் சிரமம் இருக்காது.
அதற்கு வாய்ப்பில்லை என்றால், வேறு கோணங்களிலும் விசாரணை தொடரும். குற்ற வாளிகள், விரைவில் அடையாளம் காணப் பட்டு கைது செய்யப்படுவர்.

குற்றவாளிகளால் உடைக்கப்பட்ட அறைகளின் நுழைவுக் கதவுகள் மிக உறுதியானவை. வலு வான ஆயுதமின்றி எளிதில் உடைத்துவிட முடியாது. ஆனால், அவையும் இரும்பு கடப் பாரை போன்ற பொருளால் நெம்பி உடைக்கப் பட்டிருக்கிறது. என்ன பொருள் கொள்ளை போனது என்ற விபரங்கள் எல்லாம், குற்ற வாளிகள் பிடிபட் டால் மட்டுமே தெரிய வரும்.

ஜெயலலிதா இறந்து, நான்கு மாதங் களுக்கு மேல் ஆன நிலையில், முக்கிய ஆவணங்கள் பங்களாவில் வைக்கப்பட்டிருக் குமா, அவற்றை திருடி செல் லும் நோக்கில் கொலை நடந்திருக்குமா, என்பதெல்லாம் யூகங்களின் அடிப்படையி லான சந்தேகங்களே. எல்லாவற் றிற்கும் விரைவில் விடை தெரியும்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
- நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758788

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுத்தல்....சுத்துமாத்து......சுத்துமாத்து செய்திகளுக்கு இந்தியாவை கேட்டுத்தான்.....சினிமா எப்பிடியோ அதே மாதிரித்தான் செய்திகளும் அரசும்.....:grin:

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் பிடிபட்டார்!

 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு  எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலையில், உடன் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர்தான் குற்றவாளி என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

kodanadu murder
 

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது. அங்கு, ஓம் பகதூர் மற்றும் கிருஷ்ண பகதூர்  ஆகியோர் காவலாளிகளாகப் பணிபுரிந்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் ஓம் பகதூர். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவரைக் கொன்றுவிட்டுக் கொள்ளையடிக்க முயன்றாரா அல்லது முக்கியப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களைக் கடத்த முயன்றாரா என போலீசார் தீவிர விசாரணை  நடத்தினார்கள்.

விசாரணையில் இப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓம் பகதூரைக் கொன்றது, உடன் இருந்த கிருஷ்ண பகதூர்தான் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ண பகதூர், கையுறை அணிந்துகொண்டு கொலைசெய்துள்ளார். பிறகு,அந்தக் கையுறையைத் தீயிட்டு எரித்துள்ளார். ஆனால், அந்தக் கையுறையில் ஒரு விரல் மட்டும் எரியவில்லை. இந்தத் தடயத்தைக் காவல்துறை கைப்பற்றி, ஆய்வுசெய்தது. அந்தக் கையுறையில் இருந்த கைரேகையை ஆய்வுசெய்தபோது, கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் பொருந்தியது. எனவே, கிருஷ்ண பகதூர்தான் கொலைக் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அவர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/87571-jayalalithaas-kodanad-estate-watchman-murder-police-traced-murderer.html

  • தொடங்கியவர்

கொடநாடு கொலை... கொள்ளை போகும் ஜெ. சொத்துகள்!

 

 

விதிகளை மீறிக் கட்டப்பட்டு இருப்பதாகப் புகார் எழுந்தபோது அரசு அதிகாரிகளே நுழைய முடியவில்லை. காவல்துறை தலைவரே சென்றாலும் கொடநாடு கேட்டை கடந்து செல்வதற்கு பிரத்யேக அனுமதி தேவை. ஜெயலலிதா இருந்தவரை யாரும் நுழைய முடியாத கோட்டையான கொடநாடு எஸ்டேட்டில்தான், இப்போது கொலையும் கொள்ளையும் நடந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டுக்கு, தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. ஜெயலலிதாவின் விருப்பமான இடங்களில், இதற்குத்தான் முதல் இடம். 1991-ம் ஆண்டு முதன்முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, நிறைய இடங்களை ஜெயலலிதா, சசிகலா தரப்பு வாங்கியது. அவற்றில் மிக முக்கியமான இடம், கொடநாடு எஸ்டேட். ஜெயலலிதாவின் அனைத்து ரகசியங்களும் கொடநாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் அளவுக்கு, முக்கியத்துவம் வாய்ந்தது இந்த எஸ்டேட்.

சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் அமைந்துள்ள இந்த எஸ்டேட்டில் மூன்று தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. ஜெயலலிதா வந்தால் தங்குவதற்கு இரண்டு சொகுசு பங்களாக்கள் உள்ளன. ஆரம்ப நாட்களில், எஸ்டேட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள பங்களாவில்தான் ஜெயலலிதா தங்கினார். பின்னர், எஸ்டேட்டின் மேல் பகுதியில் பிரமாண்டமான பங்களா கட்டப்பட்டது. வெளியில் இருந்து பார்க்கக்கூட முடியாத அளவுக்கு, மிகப்பெரிய சுற்றுச்சுவரைக் கொண்டிருக்கிறது இந்த பங்களா.

p2b.jpg

உச்சபட்சப் பாதுகாப்புடன் இருந்த இந்த எஸ்டேட்டுக்கு மொத்தம் 13 கேட்கள். அவ்வளவு எளிதில் யாரும் எஸ்டேட்டின் உள்ளே நுழைந்து விட முடியாது. 8, 9 மற்றும் 10-வது கேட்களில் பாதுகாப்பு மிக அதிகமாக இருக்கும். இந்த கேட்கள் வழியாகத்தான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பங்களாவுக்குச் செல்வார்கள். ஒரு சிலர் மட்டுமே பங்களா பகுதிக்குள் செல்ல முடியும். ஜெயலலிதா இருந்தவரை, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்தது. அவர் இறந்த பின்னர், போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. காவலாளிகள்தான் எஸ்டேட்டை பாதுகாத்து வந்தனர். இந்தச் சூழலில்தான், கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

எஸ்டேட்டின் அனைத்து கேட்களிலும் நேபாளி காவலர்கள்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, 9, 10-வது கேட்களில் கிருஷ்ண பகதூர், ஓம் பகதூர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த கேட்களின் அருகே இரண்டு பொலிரோ ஜீப்கள் வந்துள்ளன. அவற்றில் வந்தவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை ஓம் பகதூர், கிருஷ்ண பகதூர் ஆகியோர் தடுத்துள்ளனர். உடனே, மயக்க மருந்து ஸ்பிரேவை அடித்து, இந்த இருவரின் கழுத்தை மர்ம நபர்கள் நெரித்துள்ளனர். அதில், ஓம் பகதூர் மரணம் அடைந்தார். அவரை அருகே ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்க விட்ட மர்ம நபர்கள், காயமடைந்த கிருஷ்ண பகதூரை அங்கிருந்த லாரி ஒன்றில் தூக்கி வீசி விட்டு பங்களாவை நோக்கிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து பங்களாவின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள், அங்கிருந்த சில அறைகளை உடைக்க முயன்றிருக்கிறார்கள். சில நிமிடங்களுக்குப் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். லாரியில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ண பகதூரின் சத்தம் கேட்டு,  அவரை தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸாருக்குத் தகவல் தெரிந்து, அதிகாலையில் ஓம் பகதூரின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, கொடநாடு எஸ்டேட் முழுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர். மேற்கு மண்டல டி.ஐ.ஜி தீபக் தாமோதர், நேரில் சென்று விசாரணை நடத்தினார். ‘இது ஒரு கொள்ளை முயற்சி’ என போலீஸாரால் சொல்லப்பட்டாலும், இதில் பல சந்தேகங்கள் உள்ளன.

p2a.jpg

‘கொடநாடு பங்களாவில்தான், ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான விவரங்களும், சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன’ எனத் தகவல்கள் கசிந்தன. ஏராளமான அறைகள் கொண்ட கொடநாடு பங்களாவில் இரண்டு அறைகள் மட்டும் உடைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஜெயலலிதா தங்கும் அறை. மற்றொன்று, சசிகலா தங்கும் அறை. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மீடியாக்களிடம் பேச போலீஸ் அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. எஸ்டேட்டுக்கு அருகே மீடியாவினரையும் அனுமதிக்கவில்லை. ‘‘ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறோம்’’ என்று மட்டுமே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“இரு காவலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்திருக்கலாம். ஒரு காவலாளி இன்னொரு காவலாளியைக் கொன்றுவிட்டு நாடகமாடி இருக்கலாம் என முதலில் சந்தேகப்பட்டோம். அல்லது இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகித்தோம். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. வந்தவர்கள், எதற்காக வந்தார்கள், ஏன் இந்தக் கொள்ளை முயற்சி என்பது தெரியவில்லை” என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, கொடநாடு எஸ்டேட் முழுக்க சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, பங்களாவுக்குச் செல்லும் 8, 9 மற்றும் 10-வது கேட்களில் சி.சி.டி.வி கேமராக்கள் அதிகமாக இருக்கும். ஆனால், ‘இப்போது சி.சி.டி.வி கேமராக்கள் அகற்றப்பட்டிருப்பது ஏன்’ என்பதும் மர்மமாக உள்ளது.

p2.jpg

“பங்களாவைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும். அதனால்தான்  பாதுகாப்பு     தளர்த்தப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. காவலாளி தாக்கப்பட்டார். அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்போது அலட்சியமாக விட்டதால், இப்போது கொலை நடந்திருக்கிறது” என்கிறார்கள் அப்பகுதியினர்.

அரசியல் வட்டாரத்திலும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்த கொடநாடு பங்களா, சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட வேண்டிய சொத்து. ‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்’ என கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார். தற்போதைய சூழலில் இந்த சொத்து,  சசிகலா குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடநாடு மேலாளர் நடராஜன் என்பவர் மூலம் சசிகலா குடும்பத்தினர்தான் இந்த சொத்தை நிர்வகித்து வருகிறார்கள். கொடநாடு பங்களாவைப்பற்றி முழுமையாக அறிந்தவர்களில் முக்கியமானவர், மேலாளர் நடராஜன். இந்தச் சம்பவத்தில் நடராஜன் மீதுதான் பலரின் சந்தேகப் பார்வையும் விழுந்திருக்கிறது.

விலை உயர்ந்த ஆபரணங்கள் மற்றும் பணத்தைக் குறிவைத்து இந்தச் சம்பவம் நடந்ததா, அல்லது சொத்து குறித்த ஆவணங்களைக் கொள்ளையடிக்க வந்தார்களா என இரு சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து நடந்தது. அது ஆவணங்களை அழிக்கும் முயற்சி எனச் சொல்லப்பட்டது. இப்போது ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது.

மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

- ச.ஜெ.ரவி
படங்கள்: தி.விஜய்
ஓவியம்: பிரேம் டாவின்ஸி


“எங்களுக்குப் பாதுகாப்பே இல்லை!” - கதறும் ஊழியர்கள்

கொடநாடு எஸ்டேட் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். “எஸ்டேட்டில் அனைத்து கேட்களிலும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாலை ஆறு மணிக்கு வந்தால், அடுத்த நாள் காலை ஏழு மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்ப முடியும். அதுவரை டீ கூட எஸ்டேட் தரப்பிலிருந்து தரமாட்டார்கள். காட்டெருமை அடிக்கடி வரும். நாங்க வேலை பார்க்கிற எந்த கேட்டிலும் லைட் வசதிகள்கூட கிடையாது. இருட்டில் டார்ச் லைட் மட்டும்தான் துணை. ‘லைட் போட்டுக் கொடுங்க, இருட்டுல நிற்கவே பயமா இருக்கு’ன்னு பல தடவை சொல்லியிருப்போம். எஸ்டேட்காரங்க அதைக் கண்டுக்கவே இல்லை. இரவு முழுவதும் நடுங்கும் குளிரில் நின்று எஸ்டேட்டை காவல் காக்்கணும். இதில் ஏதாவது சின்ன குறை இருந்தாகூட, உடனே வேலையை விட்டு தூக்கிடுவாங்க. ஒருநாள் லீவ் கிடைப்பதே ரொம்ப சிரமம்.

எங்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா மேனேஜரோட உதவியாளரைத்தான் கேட்கணும். அவர் பார்த்து மேனேஜர் கிட்ட சொன்னாதான் உண்டு. ஒன்பதாம் கேட்டில் ஓம் பகதூரை கொலை பண்ணிட்டாங்கன்னு காலை ஐந்து மணிக்கே தகவல் வந்தது. ஆனால், ‘ஏழு மணி வரைக்கும் வேலை செஞ்சுட்டு ஷிப்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் போய் பாதுக்கோங்க’ன்னு எஸ்டேட்காரங்க சொன்னாங்க. இவ்வளவுதாங்க எங்களுக்கு பாதுகாப்பும், உரிமையும்” என்றனர்.

ஓம் பகதூரின் மாமா தில் பகதூர் தாபாவிடம் பேசினோம். “நானும் பல வருடமா கொடநாடு எஸ்டேட்ல வேலை பார்த்துட்டுதான் இருந்தேன். ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒண்ணாதான் வருவாங்க. எங்களுக்கு இருக்கும் குறைகளை அவங்ககிட்ட சொல்லலாம்னு போனா, மேனேஜர் நெருங்கவே விட மாட்டார். ஜெயலலிதா இறந்த பிறகு நிறைய பேர் வேலைல இருந்து நின்னுட்டாங்க. ஓம் பகதூர் அடிக்கடி செல்போன்ல பேசுவான். மூன்று நாட்களுக்கு முன்பு கூட போன் செய்தான். காட்டெருமை அடிக்கடி வருதுன்னு சொன்னான். அதுதான், அவன் கடைசியா என்கிட்டே பேசுனது. இன்னைக்கு காலைல செத்துட்டான்னு போன் வந்தது” என்றார் சோகமாக.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

கொடநாடு கொள்ளையனின் வாக்குமூலம்... கேமரா கண்கள்... ஜொள்ளு அதிகாரி! #NewsChat

 
 

கொடநாடு


கொடநாடு கொள்ளை கும்பல் வாக்குமூலம்:

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது. அங்கு, ஓம் பகதூர் மற்றும் கிருஷ்ண பகதூர் ஆகியோர் காவலாளிகளாகப் பணிபுரிந்து வந்தனர். கடந்த திங்களன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் ஓம் பகதூர். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   இதனிடையே, கொடநாடு எஸ்டேட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனரா அல்லது முக்கிய ஆவணங்களைக் கடத்த முயன்றனரா என போலீஸார் தீவிர விசாரணை  நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ஓம் பகதூரைக் கொன்றது, உடன் இருந்த கிருஷ்ண பகதூர்தான். இருவருக்குள் முன்விரோதம் இருந்ததாக ஒரு தகவலை போலீஸ் தெரிவித்தது. கிருஷ்ண பகதூர், கையுறை அணிந்துகொண்டு கொலைசெய்துள்ளார். பிறகு, அந்தக் கையுறையைத் தீயிட்டு எரித்துள்ளார். ஆனால், அந்தக் கையுறையில் ஒரு விரல் மட்டும் எரியவில்லை. இந்தத் தடயத்தைக் காவல்துறை கைப்பற்றி, ஆய்வுசெய்தது. அப்போது, கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் அது பொருந்தியதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தது. 

இதையடுத்து, கிருஷ்ண பகதூரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக செய்தி பரவியது. இதற்கிடையில், கேரள போலீஸாரிடம் ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களின் ஸ்பெஷல் விசாரணையில், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். “விலை உயர்ந்த நகைகள், பணம் இருக்கும் என்று கணக்குப்போட்டு 11 பேர் சென்றோம். ஆனால், அங்கே சின்னச்சின்ன பொருட்கள்தான் சிக்கின. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் பொறித்த கை கடிகாரம்தான் பெரிய அயிட்டம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வாசலில் நின்ற காவலாளிகளில் ஒம் பகதூர் என்பவன் எங்களை மூர்க்கத்தனமாக தாக்கினான். வேறு வழியில்லாமல், அவனைக் கொன்றோம். இன்னொருவன், கிருஷ்ண பகதூர் பணி நேரத்தில் அங்கிருந்த லாரியின் பின்புறம் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். கீழே கிடந்த கம்பியால் அவனையும் தாக்கினோம். ரத்தவெள்ளத்தில் மிதந்தான். அப்புறம்தான்...உள்ளே புகுந்தோம். பெரிய ஏமாற்றத்தோடு கேரளா திரும்பினோம். எதிர்பாராதவிதமாக போலீஸில் சிக்கிக்கொண்டோம். எங்களுடன் வந்த ஐந்து பேர் பிரிந்துசென்றுவிட்டனர். எங்கேயிருககிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்களாம்.

கேரள போலீஸின் உதவியுடன் பிடிப்பட்ட 6 பேர்களை கோவைக்கு கொண்டுவருகிறார்கள். அவர்களிடம், கொடநாட்டில் இருந்து அடிக்கடி உளவு சொன்னது யார் என்று விசாரிக்க உள்ளார்கள். தப்பி ஒடிய 5 பேர்களை தமிழக, கேரள போலீஸார் வலை வீசித் தேடிவருகிறார்கள். 

கேமரா கண்கள்

சென்னை மாதிரி பல ஊர்களில் போலீஸாரின் கண்காணிப்பு கேமராக்களில் பல செயலற்று நிற்க...கோவையில் நிலைமையே வேறு! இங்குள்ள முக்கிய இடங்களில், போலீஸ் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே இருந்ததுதான். கமிஷனராக அமல்ராஜ் வந்த பிறகு, நிறைய மாறுதல்களை செய்து வருகிறார். விமான நிலையத்தில் சந்தேகத்துக்குரிய யாராவது நபர் இறங்கி வெளியே வந்து மாநகருக்குள் வந்தால்...அவரை கேமரா கண்கள் பின்தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு துல்லியமாக ஃபாலோ பண்ணுகிறார்கள் கோவை கமிஷனர் ஆபீஸில் உள்ள நவீன கன்ட்ரோல் ரூம் போலீஸார். பிரம்மாண்ட டி.வி. ஷோ ரூம் மாதிரி ஏராளமான டி.விக்களை வைத்திருக்கிறார்கள். ஒரு க்ரைம் காட்சி என்றால்... 70 எம்.எம். திரையில் பார்க்கும் அளவிற்கு ஜூம் செய்து பார்க்கிறார்கள். நீலகிரியில் இருந்து வீட்டை விட்டு ஒடி வந்த மாணவிகள் கோவை நகருக்குள் நுழைய..அவர்கள் கேமராவில் சிக்கினர். பெண்மணி ஒருவரிடம் செயினை பறித்துக்கொண்டு ஒடிய திருடனை கேமரா வழியாக துரத்தி போலீஸ் மைக்கில் தகவல் சொல்லி ரோந்து ஜீப் விரைந்து போய் திருடனை அமுக்கியது. ஆள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்ற கார் ஒன்றை விரட்டிப் பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் உதவியிருக்கின்றன. தற்போது நகரின் பல்வேறு இடங்களில் போலீஸாரின் கேமராக்கள் சுமார் 500. இவை தவிர, வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள்...என தனியார் நிறுவனங்களின் கேமராக்கள் சுமார் 4000.  இவற்றையும் படிப்படியாக நவீன கன்ட்ரோல் ரூம் இணைப்பில் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்கள். எல்லாம் முடியும்போது, கோவை ஒருவேளை கிரைம் ஃப்ரீ சிட்டியாக கூட மாறலாம். 

ஜொள்ளு அதிகாரி

திருச்சி மாவட்ட போலீஸில் லேட்டஸ்ட் டாக் -  மன்மத பானம் விடும் போலீஸ் அதிகாரி ஒருவரைப் பற்றித்தான். சமீபத்தில் 'மணமான ஊரின்' போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறார். அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவரைப் பார்த்து ஜொள்ளு விட்டிருக்கிறார். அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி, அந்த குறிப்பிட்ட போலீஸிடம் தகவல் சொல்லி தன்னுடைய செல் எண்ணுக்கு போன் பண்ணச் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த பெண் போலீஸ் மிரண்டு போய் போன் பண்ணவில்லையாம். பிறகு, அந்தப் பெண் போலீஸின் செல்லுக்கு நேரிடையாக தொடர்பு கொண்டிருக்கிறார் அந்த அதிகாரி. இந்த விஷயத்தை சக போலீஸாரிடம் சொல்லிவிட, அத்தோடு அந்த அதிகாரி சைலண்ட் ஆகிவிட்டாராம். இதன்பிறகு இன்னொரு பெண் போலீஸிடம் வழிந்திருக்கிறார். அவரோ, விஷயத்தை போலீஸ் மேலிடத்திடம் சொல்லி மாறுதல் வாங்கிக்கொண்டு ஒடிவிட்டாராம். இப்போது மூன்றாவதாக பெண் போலீஸ் ஒருவருக்கு ஏகப்பட்ட சலுகை வழங்கி வருகிறாராம் அதிகாரி. வெளியூர் வேலைகள் எல்லாம் தராமல் பார்த்துக்கொள்கிறாராம். மாவட்டமே சிரிக்கிறது! 

 டெல்லி மேலிடம் போட்ட திடீர் 'தடா'

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார்.. ஆகியோரது வீடுகளில்  வருமான வரித்துறை ரெய்டு நடந்தபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன்..ஆகிய நால்வரும் பணி செய்யவிடாமல் தடுத்ததாக சென்னை போலீஸில் புகார் பதிவானது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவை எளிதில் பெயிலில் வரக்கூடிய சட்டப்பிரிவுகளாக இருந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் டென்ஷன் ஆனார்கள். இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நீதிமன்ற கதவுகளைத் தட்ட தயாரானார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் டெல்லி மேலிடம் அவர்களுக்கு 'தடா' போட்டுவிட்டது.

இரண்டு லட்சம் பண்டல்

டெல்லி தேர்தல் கமிஷனில் சில நாட்களுக்கு முன்பு, எடப்பாடி கோஷ்டியினர் இரட்டை இலை சின்னத்தைப் பெற கட்சி நிர்வாகிகள் 6,500 நிர்வாகிகளின் கையெழுத்து அடங்கிய டாக்குமெண்டுகளை சமர்ப்பித்து தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். ஆனால், எடப்பாடி கோஷ்டியினரோ இரண்டு லட்சம் நிர்வாகிகளின் பெயர் விவரங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். மேலும் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்திவருகிறார்கள். எடப்பாடி கோஷ்டியினர் தேர்தல் கமிஷனிரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு வாங்கியிருப்பதால், நிதானமாக செயல்படுகிறார்கள். மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஒருவர் பேசும்போது, சசிகலாதான் பொதுச்செயலாளர் என்று தேர்தல் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறோமே, அதை வாபஸ் பெற்றால், ஒ.பன்னீர்செல்வம் கோஷ்டியினர் திருப்தியாகிவிடுவார்கள் அல்லவா? என்றாராம். அதற்கு அமைச்சர் வேலுமணி, “ஒ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவி, முதல்வர் பதவியெல்லாம் இருந்தவர். அவர் கட்சிக்குள் இருந்தபோது, சசிகலா குடும்பத்தினரை தூக்கி அடித்தாரா? அவர் செய்யத்தவறியதை நடத்திக்காட்டிவிட்டோம். அதற்கு என்ன கிரடிட் கொடுக்கிறார்கள்? நீங்கள் சொல்வது போல, புகாரை வாபஸ் பெற்றால், எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு என்கிற பெயரில் இரட்டை இலை சின்னத்தை ஒ. பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிடுவார்கள். அப்புறம் நாம் அவரிடம் காவடிதான் தூக்கவேண்டும்," என்று கோபமாக கேட்க...கேள்வி கேட்ட பிரமுகர் கப்சிப் ஆகிவிட்டாராம்.  

தினகரன்

 

எடப்பாடிஎடப்பாடி நிர்வாகம் எப்படி?

தலைமைச் செயலகத்தில் இப்படி சொல்கிறார்கள்...ஜெயலலிதா காலத்தில் ஆரம்பித்து இதுவரை  2000 அரசுத்துறை ஃபைல்கள் பெண்டிங் கிடந்ததாம். பல மாதங்களாக கிடந்த அவற்றை பார்த்து முதல்கட்டமாக சுமார் 1540 ஃபைல்களில் கையெழுத்துப்போட்டுவிட்டாராம் முதல்வர் எடப்பாடியார். முதல்வரை யார் வேண்டுமானாலும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலே சந்திக்கலாம். காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் அமர்ந்து ஃபைல் பார்க்கிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார். இதெல்லாம் பாஸிட்டிவ் விஷயங்கள். சில நெகட்டிவ் ஆன விஷயங்களும் இருக்கின்றன. 

தமிழக போலீஸின் உளவுப்பிரிவு எஸ்.பி பதவி முக்கியமானது. இந்த பதவியில் தற்போது இருப்பவர் கண்ணன். இவருக்கும் சசிகலாவின் அக்காள் மகன் தினகரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஒரு திரியை கொளுத்திப்போட்டிருக்கிறார்கள். தகவல் கசிவது இப்படித்தான் என்று என்று பழியை கண்ணன் மீது போட்டதன் விளைவு... அடுத்த சில நாட்களில் கண்ணன் டம்மியான பதவிக்கு தூக்கியடிக்கப்போகிறார்கள். சென்னை ஆர்.கே. நகர் தேர்தல் நின்றுபோய் இரண்டுவாரங்கள் முடிந்துவிட்டன. தேர்தலுக்கு முன்பு, எதிர்க்கட்சியினரின் புகார்களுக்கு ஆளான போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர் சாரங்கன் உள்ளிட்ட 22 பேர்கள் + 10 வருவாய்துறை அதிகாரிகள் நற்றாற்றில் நிற்கிறார்கள். தேர்தல் நின்ற மறுநாளே இவர்கள் அனைவரும் பழைய இடங்களில் நியமித்திருக்கவேண்டும். ஆனால், பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியும், அவர்களை எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை.  தினகரனை ஜெயிக்க வைக்கவா பார்த்தீர்கள்? என்று சொல்லி ஃபைலை பெண்டிங் வைத்துவிட்டாராம் முதல்வர் எடப்பாடி . இதற்கிடையில், அ.தி.மு.கழகத்தில் சமீபத்தில் நடக்கும் உள்குத்துகளைப் பார்த்து, “வேண்டவே வேண்டாம்” என்று ஏதேதோ சாக்குப் போக்குகளை சொல்லி லீவு போட்டு போனார் உளவுத்துறை ஐ.ஜி-ஆன சத்தியமூர்த்தி. ஒரு மாதம் ஆகியும் அந்தப் பதவியில் அமர யாரும் வரமறுக்கவே, வேறுவழியில்லாமல் மீண்டும் சத்தியமூர்த்தியை இழுத்துவந்து வலுக்கட்டாயமாக அதே பதவியில் உட்காரவைத்துவிட்டார்கள். என்ன இருந்தாலும், எடப்பாடி சமூகத்தவராச்சே? இதேபோலவே, முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையும் அவரது செக்யூரிட்டி பிரிவு எஸ்.பி- ஆக இருந்தவர் சுதாகர். அவருக்குப் பிறகு, ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலகட்டத்தில் சுதாகர்தான் செக்யூரிட்டி எஸ்.பி -ஆக நீடித்தார். அவரைத்தொடர்ந்து எடப்பாடியார் முதல்வர் ஆனதும் சுதாகரே தொடர்ந்தார். ஆனால், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் சுதாகர் என்று கொங்கு மண்டலத்து பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடி காதில் போட, சுதாகரை அங்கிருந்து தற்போது மாற்றிவிட்டார்கள். 

http://www.vikatan.com/news/politics/87863-news-today-this-is-what-happened-in-tn-newschat.html

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

கொடநாடு காவலாளி கொலையில் தேடப்பட்டு வந்த ஜெ.வின் கார் டிரைவர் விபத்தில் பலி! திட்டமிட்ட கொலையா?

 
 

Kodanadu_Estate_10307.jpg

கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பலியானார். திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றிவந்த ஓம்பகதூர் (50) கடந்த 25ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் காயத்துடன் கிடந்தார். இவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க ஐந்து டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடந்த அன்று பதிவான சிசிடிவி கேமராவை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையத்தில் இன்று காலை நடந்த விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராஜை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் விபத்தில் பலியானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி கனகராஜ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87911-kodanad-security-guard-murder-case-accused-driver-dies-in-accident.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.