Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹர்த்தால் - கான மயிலாட வான்கோழி தானுமாட

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கான மயிலாட வான்கோழி தானுமாட - ஜூட் பிரகாஷ்

 
"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி 
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் 
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே
கல்லாதான் கற்ற கவி"
மூதுரையில் ஒளவையார் 
 
வரலாற்றில் தமிழர் பிரதேசத்தில் நடந்த முதலாவது பகீஷ்கரிப்பாக 1931ல் யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress, JYC), முன்னின்று நடாத்திய தேர்தல் பகீஷ்கரிப்பு பதிவாகிறது. டொனமூர் யாப்பிற்கமைய, நடாத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமையடிப்படையிலான  தேர்தலை, யாழ்ப்பாணத் தமிழர்கள் புறக்கணித்தார்கள். 
 
 
சாதி, மத, பால் பாகுபாடின்றி, ஆசிய கண்டத்திலேயே இலங்கையில் தான் முதன் முதலாக அனைவருக்குமான வாக்குரிமை (universal suffrage) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1950 வரை அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. சுவிஸ்லாந்து 1971ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் போது, உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பதவியேற்று ஆறாண்டுகள் கடந்து விட்டிருந்தன.
 
 
"கீழ் சாதியினரிற்கும் படிப்பறிவில்லாதவர்களிற்கும் பெண்களிற்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனமானது" என்று சேர் பொன் இராமநாதன் எதிர்ப்பு தெரிவிக்க, இலங்கையிலேயே எழுத்தறிவில் முன்னனியில் திகழ்ந்த யாழ்ப்பாண மாவட்டமோ, வேறொரு காரணத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட முதலாவது ஜனநாயக உரிமையை பகீஷ்கரிக்கத் தயாரானது.
 
 
இந்திய தேசிய காங்கிரஸின் வழிநின்ற யாழ்ப்பாண இளைஞர் பேரவை, பிரித்தானியா இலங்கைக்கு சுயராஜ்ஜியம் வழங்காததால் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விட, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்களும் வெற்றிடமாயின. யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாத ஜீஜி பொன்னம்பலம், மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோற்றுப்போனார்.
 
தேர்தல் புறக்கணிப்பால் தேசிய சட்ட சபையில் தங்கள் உரிமைகளும் நலன்களும் புறக்கணிக்கப்படுவதையும் 
பாதிக்கப்படுவதையும் காலங்கடந்து உணர்ந்த யாழ்ப்பாண மக்கள், அடுத்து வந்த காலங்களில் யாழ்ப்பாண இளைஞர் பேரவையை புறந்தள்ளினார்கள் என்பது வரலாறு. 
 
 
இந்த தேர்தல் புறக்கணிப்பு பற்றி Jane Russell எனும் வரலாற்றாசிரியர் எழுதிய விரிவான கட்டுரைக்கு அவர் இட்ட தலைப்பு "The dance of the Turkey-cock: the Jaffna Boycott 1931", அதாவது "வான் கோழியின் நடனம்: யாழ்ப்பாண பகீஷ்கரிப்பு 1931". இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மயிலைப் பார்த்து யாழ்ப்பாண இளைஞர் பேரவை என்ற வான் கோழி ஆடிய நடனமே 1931ம் ஆண்டு தேர்தல் பகீஷ்கரிப்பு என்று Jane Russell விபரிக்கிறார். 
 
 
 
1980களின் மத்தியில் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாண தீபகற்பம் இருந்த காலங்களில், இயக்கங்களின் மாணவர் அமைப்புக்கள் நடாத்திய பகீஷ்கரிப்புக்களையும் ஹர்த்தால்களையும் ஊர்வலங்களையும் அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பெரும்பாலான பகீஷ்கரிப்புக்களை முன்னின்று நடாத்தியது PLOTE அமைப்பின் மாணவர் அணியான TESO, EROS அமைப்பின் GUYS மற்றும் EPRLFன் GUES.
 
 
"இன்று ஹர்த்தால்" என்று காலை எழுந்ததும் ஈழநாடு பத்திரிகையில் கொட்டை எழுத்தில் தலையங்கம் மிரட்டும். இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய ஏதோ ஒரு அநியாத்தை கண்டித்து, நாங்கள் பள்ளிக்கூடங்களை பகீஷ்கரித்து, கடைகளை அடைத்து, அலுவலகங்களை மூடி, கண்டி வீதியால் கச்சேரியை நோக்கி, "மாணவர் சக்தி... மாபெரும் சக்தி" என்று தொண்டை கிழிய கோஷம் எழுப்பிக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் ஊர்வலம் போக, கொழும்பில் அத்துலத்முதலியும் ஜெயவர்த்தனாவும் சுடச்சுட தேத்தண்ணியோடு கொக்கீஸ் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். 
 
 
அதே காலப் பகுதியில், மலையகத்திலும் வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெற்றன. அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்துக் கொண்டே, பெருந்தோட்டங்களில் வேலைநிறுத்த போராட்டங்களிற்கு செளமியமூர்த்தி தொண்டமான் அறை கூவல் விடுப்பார் . இலங்கைப் பிரஜாவுரிமை கோரியும் சம்பள உயர்வு கேட்டும் மலையகத் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுத்தந்தது.  இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டத்துறை வகித்த வகிபாகமும் அந்தத் துறையில் மலையகத் தமிழர்களின் உழைப்பின்  முக்கியத்துவமும் அவர்களடைந்த வெற்றிகளிற்கு பிரதான காரணிகளாகின. 
 
 
கடந்த ஏப்ரல் 24ம் திகதி, இலங்கையின் பெற்றோலியத் துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் விடுத்த வேலைநிறுத்த கோரிக்கைக்கும், அரசாங்கம் 24 மணித்தியாலங்களுக்குள் அடிபணிந்தது. பெற்றோல் நிரப்பு நிலையங்களிற்கு வெளியே ஏற்பட்ட வாகன நெரிசலும் பொருளாதாரத்தையே முடக்கவல்ல அறிகுறிகளும் இலங்கை அரசாங்கத்தை, தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை செவிமடுக்க செய்தது. 
 
 
பெற்றோலிய தொழிற்சங்கத்தின் பணிப் பகீஷ்கரிப்பு மட்டுமன்றி தென்னிலங்கையில் இடம்பெறும் பெரும்பாலான போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான காரணம், அவை பெரும்பான்மையின சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுவது மட்டுமன்றி, அந்த போராடங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் செலுத்தவல்ல எதிர்மறையான தாக்கமும் தான். 
 
 
பெற்றோலியத் தொழிலார்களின் பகீஷ்கரிப்பு
நடந்து மூன்று நாட்கள் கழித்து, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு ஆதரவாக தமிழர் பிரதேசங்களில் நடந்த பகீஷ்கரிப்பிற்கு இலங்கை அரசின் பதில், "நல்லாட்சி அரசில் ஜனநாயக வழியில் போராட ஏற்பட்டுள்ள பொது வெளியை இந்த பகீஷ்கிரிப்பு பிரதிபலிக்கிறது" என்பதாக அமைந்தது. 
 
 
இலங்கைத் தீவின் மூன்றிலொரு பங்கு நிலப்பரப்பையும் மூன்றிலிரெண்டு பங்கு கடற்பரப்பையும் தன்னகத்தே கொண்ட, தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெறும் பகீஷ்கரிப்புகள், வெற்றி பெறாமல் போவதற்கான மிகப் பிரதான காரணம், வடகிழக்கு மாகாணங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் செலுத்தும் தாக்கம் எதுவுமில்லை என்ற கசப்பான உண்மையே. இலங்கையின் 2015ம் ஆண்டிற்கான GDPயில் கிழக்கு மாகாணம் 6.0%ஐயும் வட மாகாணம் 3.5%ஐயும் பங்களிப்பு செய்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது. 
 
 

 
இந்த உண்மைகளை அறிந்தும் தங்கள் சொந்த அரசியல் நலன்களிற்காகவும் அரசியல் சாகஸத்திற்காவும் (political stunt) ஹர்தால்களிற்கு அழைப்பு விடுக்கும் தமிழ் தலைமைகளை பற்றி என்னத்தைச் சொல்ல?
 
 
யுத்தத்தில் அழிவுண்டு சிதைவுண்டு போயிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த வித ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளாத அதே வேளை, பகீஷ்கரிப்புக்களை நடாத்தி, வடகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களையும் துரத்தி விடும் கைங்கரியத்தை, இந்த தமிழ் தலைமகள் செவ்வனே செய்கின்றன. 
 
 
பொருளாதார அபிவிருத்திக்கும் அதனுடனான மக்களின் சுபீட்சமான வாழ்விற்கும் அடிப்படையாக அமைவது தொழில்சார் முதலீடுகளே. இந்த முதலீடுகளை தங்கள் தங்கள் நாடுகளிற்கு கவர உலகிலுள்ள 190 சொச்ச நாடுகளோடு இலங்கையும் போட்டி போடுகிறது. அவ்வாறு இலங்கைக்குள் வரும் முதலீடுகளை தங்கள் தங்கள் மாகாணங்களிற்குள் உள்வாங்க ஒன்பது மாகாணங்களும் முட்டி மோத வேண்டும். 
 
 
எங்களது பகீஷ்கரிப்புகளும் ஹர்த்தால்களும் கடையடைப்புக்களும் வெற்றி பெற வேண்டுமென்றால், நாங்கள் முதலில் பொருளாதார ரீதியில் பலம் பெற வேண்டும். புலம்பெயர்ந்த எங்களுறவுகளின் முதலீடுகளிற்கும் வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளிற்கும் உகந்த பிரதேசமாக வடகிழக்கு மாகாணங்களை மாற்ற வேண்டும். 
 
 
முதலீட்டாளர்கள் ரஜினிகாந்தை வரவழைத்து வவுனியாவில் திறப்பு விழா நடாத்தவும் டென்டுல்கரை கூப்பிட்டு கிளிநொச்சியில் கிரிக்கெட் போட்டி நடாத்தவும் எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். அதைவிட முக்கியமாக எங்கள் தலையில் நாங்களே மண் வாரியிறைக்கும் பகீஷ்கரிப்புக்களிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
 
 
ஒரு விதத்தில் இன்று நாங்கள் அரங்கேற்றும் பகீஷ்கரிப்புகளும், 1931ம் ஆண்டு தேர்தல் பகீஷ்கரிப்பைப் போல், வான் கோழி நடனங்களே. எந்த வித பொருளாதார வலுவுமற்று, ஹர்த்தால் நடாத்துவதால் எதிரிக்கு எந்த வித பாதிப்பும் நேராது என்றறிந்தும், கடையடைப்பு நடாத்தி வியாபாரத்தை முடக்கி, அன்றாட வேதனத்தில் வாழும் எம்மவர்களை நாங்களே நிர்கதியாக்கும் இந்த செயற்பாடுகளை நாங்கள் நிறுத்த வேண்டும். 
 
 
நீதியும் நியாயமுமான எங்கள் கோரிக்கைகளை உலகிற்கு எடுத்துரைக்க, எழுக தமிழ் போன்ற பேரணிகளிற்கும் உண்ணாவிரதங்களிற்கும் பகீஷ்கரிப்புகளிற்கும் அழைப்பு விடுக்கும் அரசியல் தலைவர்களை, எங்களிற்காக ஒரு நாளேனும் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவும் அலரி மாளிகைக்கு பின்பாகவும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் உண்ணாவிரதம் இருக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். 
 
 
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள், அந்த மக்களின் உரிமைக்காக தங்களை வருத்தி போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா? 
 
 
தமிழ் மக்களின் வாக்குகளால், மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களின் கடமை, தேர்தல் மேடைகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் அனல் பறக்க தமிழ்த் தேசியம் பேசுவதோடும், பஜரோ வாங்குவதோடும், மகளின் பிறந்த நாளிற்கு மைத்ரியை அழைத்து கேக் வெட்டுவதோடும், முல்லைத்தீவையும் டொரொன்டோவையும் இணைப்பதோடும், பண்டாரவன்னியனிற்கு சொத்திச் சிலை வைப்பதோடும் நிறைவடையும் கடைமையல்ல என்பதை நாங்கள் எங்கள் தலைவர்களிற்கு உணர்த்த வேண்டிய காலம் வந்து விட்டது. 
 
 
முப்பது ஆண்டுகளிற்கு மேலாக "ஊர் வாழ வேண்டுமென்ற, உன்னத நோக்கம் கொண்டு, ஏராளமான துயர் தாங்கி நின்று" களமாடிய ஆயிரமாயிரம் போராளிகள் உலாவிய எங்கள் தேசத்தில்,  அரசியல் உரிமைகளுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் காணிகளை மீட்கவும் காணாமல் போன தங்கள் உறவுகளை தேடியும் போராடும் எம்மக்களிற்கு தலைமை தாங்கவென முன்வரும் எவரும் அந்த மக்களிற்காக தியாகங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா? 
 
"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி 
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் 
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே" என்றுள்ள எங்கள் பகீஷ்கரிப்புகளிற்கு விடை கொடுப்போம். எங்கள் போராட்ட வடிவங்களை மாற்றி எங்கள் தலைவர்களை முன்னிறுத்தி  போராடங்களில் ஈடுபடுவோம். அதே வேளை எங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்தி வான்கோழிகளாக எங்களைப் பார்ப்பவர் கண்களில் நாங்களும் கான மயில்களாக அவதாரம் எடுப்போம்.
 
போலிப் பகீஷ்கரிப்புகளை பகீஷ்கரிப்போம் !
 

கட்டுரையாளருக்கு அறவழி போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது போல இருக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.