Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹாபலி ( சிறுகதை) - சுஜாதா

Featured Replies

மஹாபலி ( சிறுகதை) - சுஜாதா

SUJATHA1.jpg


மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்...' என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக் கொள்ள... சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப் பள்ளி'யின் ஆசிரியைகள் டீசல் வேனிலிருந்து ஆரவாரத்துடன் உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்தை விளக்கும் வகையில், ''இங்கதாண்டி 'சிலை எடுத்தான் ஒரு சினைப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க...'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளி சத்தம் எதிரொலிக்க, பிள்ளையர்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?'

இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன், கரைக்கோயிலின் அருகில் வந்து கடற்கரைப்பக்கம் சென்றான். ஆயிரத்து இருநூறு வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான்.

''காமிரா வேணுங்களா... நிக்கான், ஜப்பான்... அப்புறம் ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?"

அவன் மௌனமாக இருக்க, ''செருப்பு வேணுங்களா? ஜோடி இருபது ரூபாதாங்க... கோலாபூரி..."

"..."

"எத்தனைதான் தருவீங்க?"

"..."

"வேற ஏதாவது வேணுங்களா?"

"... ... ..."

"பேசமாட்டீங்களா..?"

அவனுக்கு, பள்ளிச் சிறுவன் போல அறியாத முகம். கருநீலத்தில் தொள தொள சட்டை அவன் சிவந்த நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. முதுகில் பட்டைவார் இறுக்கி பை வைத்திருந்தான். அவன் ஒருவேளை வடக்கத்திக்காரனாக இருப்பானோ என்று 'சேட், பந்த்ரா ரூபாய் மே லேலோ போணி!" என்றான் செருப்பு விற்ற சிறுவன்.

அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்து விட்டு, கடலலைகளின் கோபத்தை மழுப்ப அமைக்கப்பட்ட கருங்கல் தடைகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தவரை அணுகினான்.

''எக்ஸ்கியூஸ் மி..."

அவர் திரும்ப, ''புரொபசர் சந்திரகுமார்..."

"யெஸ்..."

"என் பெயர் அஜய்... நான்தான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். செக்ரட்டரிக்கு விளம்பரம் கொடுத்திருந்தீர்கள்..."

"ஓ! நீதானா அது? 'யங்'காக இருக்கிறாயே?!"

"எனக்கு இருபத்தைந்து வயது!"

"எனக்கு ஏறக்குறைய எழுபது.." என்றார். ''கண்தான் சரியாகத் தெரியவில்லை. ராத்திரி கார் ஓட்ட முடியவில்லை. பொய்ப் பற்கள்... ஒரு முறை 'பைபாஸ்' ஆகிவிட்டது. கடன் வாங்கின ஆயுள்!"

"மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ்..." என்றான்.

கரைக் கோயிலின் கோபுரத்தைச் சிரத்தையாக அமிலம் வைத்துச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

"ஒரு வருஷமாவது இருப்பதாக வாக்களித்தால்தான் உனக்கு வேலை... சான்றிதழ்களை அப்புறம் பாக்கிறேன். என் புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும்... பிரசுரகர்த்தர்கள் கெடு..."

"என்ன புத்தகம்?"

புல் போர்வையையும் கம்பி கேட்டையும் கடந்து சாலை நோக்கி நடந்தார்கள்.

"பல்லவர் காலச் சிற்பக்கலை பற்றி ஒரு அந்தரங்கப் பார்வை..." பஸ் நிறைய மாணவர்கள் இறங்கி, விநோதமான 'போஸ்'களில் படம் பிடித்துக்கொண்டு, "என்ன மச்சி... கலர்ஸ் எல்லாம் ஒரு பக்கமா ஒதுங்கிருச்சு!"

"இவர்களுக்கா பல்லவச் சிற்பக்கலை பற்றிச் சொல்லப் போகிறீர்கள்?"

"ஏன்?"

"பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், ஹ்யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உணவகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசார மற்றது..."

"நீயும் இந்தத் தலைமுறைதானே?"

"ஆம்... ஆனால், வேறு ஜாதி..."

அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ''பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?"

"கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து இருக்கும் இந்தத் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக்கலை பற்றியும் தெரியும்.."

SUJATHA2.jpg



அவன் அவனைச் சிநேகப் பாவத்துடன் பார்த்து, ''ஐ லைக் யூ..." என்றார்.

"எப்போது வேலைக்கு வரலாம்?"

"இப்போதே என்னுடன் வா... உன் பைகள் எல்லாம் எங்கே?"

"எல்லாம் என் முதுகுக்குப் பின்னால்!"

"இவ்வளவுதானா?"

"இதில் கூடப் புத்தகங்கள்தான் அதிகம்..."

"செஸ் ஆடுவாயா?"

"சுமாராக..."

"சுமாராக ஆடி என்னிடம் தோற்பவர்கள்தான் எனக்கு வேண்டும். பேசப்பேச உன்னைப் பிடித்திருக்கிறது. லூயிஸ் தாமஸும் படிப்பேன் என்று சொல்லாதே..."

''மெடுஸா அண்ட் தி ஸ்னெய்ல்..."

"கிரேட்... யங்மேன், உன்னை எனக்கு நிச்சயம் பிடித்துவிடப் போகிறது. என் பெண் வினிதா சம்மதித்தால் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவேன்..."

இருவரும் வெளியே சாலைக்கு வர, அவர் காரருகில் சென்று, ''மாருதி ஓட்டுவாயா?"

"நான் ஓட்டாத வாகனமே இல்லை!" என்று சிரித்தான்.

''சிகரெட் பிடிப்பாயா?"

"இல்லை..."

"கல்யாணம் ஆகிவிட்டதா?"

"இல்லை..."

"பர்ஃபெக்ட்! சம்பளம் எத்தனை வேண்டும்?"

"உங்கள் இஷ்டம்..."

மாருதி காரைத் திறந்து முதுகுச் சுமையைப் பின் இருக்கைக்குத் தள்ளிவிட்டு, முன்னால் ஏறிக் கொண்டான்.

"ஓட்டுகிறாயா?"

"இல்லை, இந்தப் பிரதேசமே எனக்குப் புதிது..."

"எந்த ஊர் நீ?"

"எதும் என் ஊர் இல்லை..."

கடற்கரையோரம் சென்றபோது மௌனமாக வந்தான். அர்ச்சுனன் தவத்தைக் கடந்து, கல்பாக்கம் சாலையைத் தவிர்த்து ஊருக்கு வெளியே சென்று நீல, மஞ்சள் நைலான் வலைகளையும், மீன் நாற்றத்தையும் கடந்து கடலோர வீட்டு வாசலில் சென்றபோது, வெள்ளைச் சடை நாய் வந்து வாலை ஆட்டியது.


"அமைதியான இடம்... இவன் பெயர் ஸ்னோ! இங்கேயே இருப்பதில் உனக்குத் தயக்கம் ஏதும் உண்டா?"

"இல்லை..."

"அலை ஓசை பழகிவிடும்... மாடியில் என் மகனின் அறை இருக்கிறது. எடுத்துக் கொள்... மகன் அமெரிக்காவில் இருக்கிறான், டெக் நிறுவனத்தில்... மகள் சென்னையில் படிக்கிறாள். விடுமுறைக்கு வருவாள்..."

"அப்படியா?!" உள்ளே வந்து சித்திரங்களைப் பார்த்தான்.

"யாருக்கு ஷகால் பிடிக்கும்?"

"எனக்கு... உனக்கு?"

''கன்டின்ஸ்கி..."

"ஏதோ ஒரு விதி என்னிடம் கொண்டு சேர்த்திருக்கிறது உன்னை... நான் இதுவரை தேடிய ஆதர்ச இந்திய இளைஞன் கிடைத்துவிட்டது போலத் தோன்றுகிறது..."

அவன் புன்னகைத்தான். ''மிகைப் படுத்துகிறீர்கள்..."

"நீ எதுவரை படித்திருக்கிறாய்?"

''கல்லூரிக்கு முழுதும் போக வில்லை... படிப்பு தடைப்பட்டு விட்டது. முதல் பி.ஏ. ஹிஸ்டரி படித்தேன்..."

"எங்கே படித்தாய்?"

"லண்டனில்..."

"விட்டுவிட்டாயா?"

"ஆம்... பெற்றோரை ஒரு விபத்தில் இழந்தபின்..."

அவன் பையிலிருந்து சாமான்களை எடுத்து வைத்தான். பெரும்பாலும் புத்தகங்கள்... 101 கவிதைகள், லையால் வாட்ஸன் கட்டுரைகள், ஒரு ரயில்வே அட்டவணை, சதுரங்கம் பற்றிய பாபி ஃபிஷரின் புத்தகம், 'தி டவ் ஆஃப் பவர்', 'மெக்கியா வல்லியின் 'பிரின்ஸ்', மோதியின் 'ஜூரிஸ் புடன்ஸ்'...

"உன்னை வகைப்படுத்த முடியவில்லை..."

மறுபடி புன்னகைத்தான். பதில் சொல்ல விரும்பாதபோதெல்லாம் மையமாகப் புன்னகைப்பான் என்பது புரிந்தது.

"எப்போது ஆரம்பிக்கலாம்?"

"இப்போதே!"

முதல் மாதத்தில் அவன் முழுத் திறமையும் படிப்படியாகப் புரிந்தது.

அஜய் ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டுக் கொடுப்பான். சந்திரகுமாருக்குத் தேவையான ஐஸ் டீ, லெமன் கார்டியல் தேன் கலந்து கொடுப்பான். இரவு அவர் எழுதி வைத்திருந்ததையெல்லாம் மிகச் சுத்தமாகப் பிழையே இன்றி எலெக்ட்ரிக் டைப்ரைட்டரில் அடித்துக் கொடுத்து விடுவான், ஒன்றிரண்டு திருத்தங்கள்தான் இருக்கும். புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசவே மாட்டான். மாலை செஸ் ஆடினார்கள். ஒரு நாள் அவன் தோற்பான். ஒரு நாள் இவர்... சில நாள் ட்ரா!

SUJATHA3.jpgராத்திரி அவருக்கு கண்பார்வை மங்கியதால் படித்துக் காட்டினான்.

"ஒரு நாள் மாறுதலுக்காக ஏதாவது உன் புத்தகத்திலிருந்து படித்துக் காட்டேன்..." என்றார்.

"என் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்காது..."

"நான் தற்போது எழுதும் புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"

"இது நம் நாட்டுக்குத் தேவையற்றது..."

"எப்படிச் சொல்கிறாய்?" என்றார், கோபப்படாமல்.

"மகேந்திரன் கட்டிய தூணுக்கும் ராஜசிம்மன் கட்டிய தூணுக்கும் வித்தியாசங்கள் பற்றி ஒரு அத்தியாயமே விளக்கும் புத்தகத்தால் இன்றைய இந்தியாவுக்கு என்ன பயன்?"

"நம் கலாசார மரபு தெரிய வேண்டாமா?"

"தெரிந்து..."

"நம் இந்தியாவை ஒன்று சேர்த்த இந்த மரபு இப்போது தேவையில்லை என்கிறாயா?"

"இந்தியா ஒன்றல்ல! இந்த மஹாபலிபுரம் பல்லவ ராஜ்யமாக இருந்தது. அவன் விரோதி புலிகேசி சாளுக்கிய ராஜ்யம்... அதுபோல் சோழமண்டலம்... வேங்கி... இந்தியாவாக இல்லை. இந்தியா பிரிட்டிஷ்காரன் அமைத்தது..."

"எங்கள் தலைமுறை அப்படி நினைக்கவில்லை... நாங்கள் சுதந்திர வேட்கைப்பட்டு, தியாகங்கள் செய்தோம்..."

"காரணம், உங்களையெல்லாம் - ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான். இப்போது நம் எதிரி நாமேதான்..."

"இருந்தும் இந்த நாட்டை ஒன்று சேர்ப்பது கலாசாரம்..."

"இல்லை... ஏழ்மை!"

"உனக்குச் சிற்பங்கள் பிடிக்காதோ?"

"கரைக்கோயிலின் ஆர்க்கிடெக்சர் எனக்குப் பிடிக்கிறது. எனக்கு அதன் அழகை நிலவொளியில் பார்க்கப் பிடிக்கும். அதை அமைத்த பெயரில்லாத சிற்பிதான் என் ஹீரோ... மகேந்திரவர்மன் அல்ல..."

''மனம் மாறுவாய்..." என்றார் சந்திரகுமார் புன்னகையுடன்.

நியூஜெர்ஸிக்கு போன் பண்ணி,  ''ராமு, எனக்கு செக்ரட்டரியாக ஒரு இளைஞன், ஏதோ பூர்வஜென்ம பாக்கியத்தால் சேர்ந்திருக்கிறான்..." என்று கால்மணி நேரம் அவனையே புகழ்ந்து பேசி, ''அம்மாவை அனுப்பாதே... நன்றாகப் பார்த்துக் கொள்கிறான். ஐஸ் டீ கூடப் போட்டுத் தருகிறான்..." என்று அவன் முன்னாலேயே போன் பேசியது, அவன் முகத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

வினிதா தசராவுக்கு வந்திருந்தபோது, அவனை அறிமுகப்படுத்தினார். ''வினித், திஸ் இஸ் அஜய்... வினிதா என் பெண்..."

"ஹாய், யு லைக் மியூஸிக்?"

"பிடிக்கும்..."

"ஃபில் காலின்ஸ்?" என்றாள், எதிர்பார்ப்புடன்.

"மோட்ஸார்ட்..." என்றான்.

"யக்..." என்றாள் அருவருப்புடன்.

"புக்ஸ்? ஜெஃப்ரி ஆர்ச்சர்..."

"ஃபிக்‌ஷன் ரெண்டாம் பட்சம்... ஐ ரீட் போயம்ஸ்..."

"போயம்ஸ்! மைகாட்..."

"தேர் கோஸ் மை மேரேஜ் அலையன்ஸ்..." என்றார் சந்திரகுமார்.

"எங்கிருந்து அப்பா இந்தப் பிராணியைப் பிடிச்சுட்டு வந்தீங்க? ஹி இஸ் நாட் நார்மல்..." என்றாள் வினிதா.

இருவருக்கும் ஒரே ஒரு பொது அம்சம் - மே மாதத்தில் பிறந்தவர்கள் இருவரும். அவளுடன் விகற்பமில்லாமல் பழகினான். அவளைக் கவிதைகள் படிக்க வைத்தான். மோட்ஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வீடியோ பார்க்க வைத்தான்.

ஒரு நாள் மாலை 'ரொம்ப போர் அடிக்கிறது' என்று கட்டாயப்படுத்தி அவனை ஊருக்குள் அழைத்துச் சென்றாள். ''கடற்கரைப் பக்கம் வாக்மன் போட்டுக் கொண்டு நடக்கப் போகிறேன், நீயும் வருகிறாயா? நீ பாட்டுக்குக் கவிதை படித்துக் கொண்டு இரு..."

கட்டாயத்தின் பேரில்தான் சென்றான். திரும்பி வந்ததும், ''இரவு எனக்கு நில வொளியில் கரைக்கோயிலைப் பார்க்க வேண்டும்.."

"அழைத்துச் செல்கிறேன், வா!"

அவர்கள் சென்றதும் கொஞ்ச நேரம் சும்மாயிருந்தார். இருவரும் இப்போது நெருக்கமாகப் பழகுவது திருப்தியாக இருந்தது. 'அவனைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும்... இவனைப் போல் மாப்பிள்ளை கிடைப்பது மிக அரிது...'

இருவரும் போனதும் வீடு வெறிச்சென்று இருந்தது. மேஜையில் அவன், அவளுக்குப் படித்துக் காட்டிக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்தார். காது மடங்கியிருந்த பக்கத்தில் திறந்தது...

'How did you die...?'

கவிதையின் தலைப்பே சற்று அதிர்ச்சி தந்தது.

'Death comes witha crawl,
or comes with a pounce
And whether he is slow or spry
It is not the fact that
you are dead that counts
But only, how did you die...?'

வாசலில் ஜீப்பிலிருந்து ஒருவர் மெள்ள இறங்கி வந்து, சுற்றிலும் சவுக்குத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டே அணுகினார்...

''புரொபசர் சந்திரகுமார்?"

"யெஸ்..."

''ஐ'ம் ஃப்ரம் தி போலீஸ் ஸ்பெஷல் பிராஞ்ச்...'' என்று அடையாள அட்டையைக் காட்டி, ''இந்த போட்டோவில் உள்ளவனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?"

கண்ணாடி போட்டுக் கொண்டு வெளிச்சத்தில் பார்த்தார். மீசை இல்லை. கிராப்பு வெட்டப்பட்டுச் சுருக்கமாக இருந்தது. இருந்தும் திட்ட வட்டமாகச் சொல்ல முடிந்தது.

"இவன் பெயர் அஜய், என் செக்ரட்டரி..."

"இவன் உண்மையான பெயர் அஜய் இல்லை... அவன் இங்கே இருக்கிறானா?" என்றார் பரபரப்புடன்.

"என் மகளுடன் கடற்கரைக்குப் போயிருக்கிறான். இப்போது வந்துவிடுவான். ஏதோ அடையாளக் குழப்பம் போலிருக்கிறது..."

வந்தவர் மிக வேகமாகச் செயல்பட்டார் ரேடியோவில் ''சார்லி, திஸ் இஸ் தி ப்ளேஸ்... வி காட் ஹிம்!"

"விவரமாகச் சொல்லுங்களேன்!"

"இவன் யார் தெரியுமா? மை காட்! எங்கே கடற்கரைக்கா?"

"இன்ஸ்பெக்டர், இதில் ஏதோ தப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பையன் என்னுடன் இருக்கும் செக்ரட்டரி... ரொம்ப நல்ல பையன்.."

"புரொபசர், இவன் யார் தெரியுமா? எல்லா போலீஸாலும் தேடப்படும் மிகப்பெரிய தீவிரவாதி... மொத்தம் பதினெட்டுக் கொலை இவன் கணக்கில் உள்ளது..."

அவருக்குச் சிரிப்பு வந்தது. 'இப்படிக் கூட அபத்தமான போலீஸ் அதிகாரிகள் இருப்பார்களோ?'

'சம்திங் பாஸிட்டிவ்லி ராங்... ஆள் மாறாட்டம்... போட்டோ தப்பு..." என்றார்.

"அவன் இங்கேதான் தங்கியிருக்கிறானா?"

"ஆம்..."

"எந்த அறையில்...?"

"மாடியில் என் மகன் அறையில்..."

"மகன் இருக்கிறாரா?"

"அமெரிக்காவில் இருக்கிறான்..."

"என்னுடன் வாருங்கள்..." சரசரவென்று மாடிப்படி ஏறினவரைத் தயக்கத்துடன் பின்தொடர்ந்து, அஜய் தங்கியிருந்த அறைக்குள் முதன்முதலாக நுழைந்தார். ''என் செக்ரட்டரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மணியான பையன். மிகுந்த புத்திசாலி... அழகுணர்ச்சி உள்ளவன்... படித்தவன்... சிந்திப்பவன்..."

அதிகாரி அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், இரை தேடும் சிங்கம் போல் அறைக்குள் அலைந்தார். ஒழுங்கான அறை. சுவரில் கலையம்சத்துடன் நவீன சித்திரம் மாட்டியிருந்தது. அலமாரிப் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தான்... மேஜை மேல் காகிதங்கள் அடுக்காக... ஜன்னல் மலர்ஜாடியில் ரோஜா.

அதிகாரி ஒழுங்கைப் பற்றிக் கவனமின்றி, அவன் மேஜை இழுப்பறைகளைச் 'சரக்... சரக்..." என்று திறந்தார். மலர்ஜாடிகள் உருண்டன. காகிதங்கள் பறந்தன. பூட்டுகள் உடைந்தன."

"புரொபசர், இங்கே வந்து பார்க்கிறீர்களா? உம் நம்பிக்கைக்குரிய காரிய தரிசியின் சொத்துக்களை!"

சந்திரகுமார் அருகே சென்றார்.

"இது உங்களுடையதல்லவே?"

SUJATHA4.jpg



மேஜையின் மேல்மட்ட இழுப்பறையில் துப்பாக்கி வைத்திருந்தது. கீழ் அறையில் ஒரு காலாஷ் நிக்காஃப் ரைஃபிளின் பாகங்களும், மாகஸின்களும் இருந்தன. ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் இருந்தது.

"ஐ காண்ட் பிலீவ் இட்... திஸ் இஸ் இம்பாஸிபிள்..."

"இவன் பெயர் அஜய் அல்ல... இவன் பெயர் டோனு. கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் மகளுடன் எங்கே போயிருக்கிறான்?"

"கடற்கரைக்கு என்று சொன்னேனே!"

"பதட்டப்படாதீர்கள்... அவனுக்கு நாங்கள் இங்கு வந்து தேடுவது தெரியாது. அவனும் உங்கள் மகளும் திரும்பும்வரை பதுங்கியிருக்கலாம்..."

ஜீப்பைப் போகச் சொல்லி ஆணை கொடுத்தார். தபதபவென்று பத்து போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து வாசல்கதவைச் சாத்திக் கொண்டார்கள்.

"வெயிட்... யு காண்ட் டூ திஸ்... அவன் வேறு யாரையோ..."

''ஷட் அப் ஓல்ட்மேன்... கீப் கொயட்! ஒரு பயங்கரவாதிக்கு - தீவிரவாதிக்குப் புகலிடம் அளித்திருக்கிறீர்கள்... வாயை மூடிக்கொண்டு, நடப்பதைக் கவனிப்பது உசிதம்!"

"என்ன செய்யப் போகிறீர்கள்? காட்! என் மகள்... என் மகள் அவனுடன் இருக்கிறாள்!"

"அவளைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம்..."

"வாட் யு மீன்..." என்று அவர் பால் நகர்ந்தவரை, ஒரு கான்ஸ்டபிள் "ஏய் தாத்தா, கம்முனு அப்படிப் போய் உக்காரு... இல்லை அடிபடும்.." என்றார்.

அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது. அலமாரியிலிருக்கும் ஸார்பிட்டால் தேவைப்பட்டது. நாக்கு உலர்ந்தது. 'என்னவோ ஒரு பெரிய தப்பு நேர்ந்திருக்கிறது... ஆள் மாறாட்டத் தப்பு. இவன் இல்லை. இவன் இல்லை... தடுக்க வேண்டும்...'

''வர்றாங்க... எல்லாரும் தயாரா இருங்க. அநாவசியமா சுட வேண்டாம். நான் சொல்லும்போது சுட்டா போதும்!"

சந்திரகுமார் அப்போதுதான் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் துப்பாக்கியைப் பார்த்தார். ஜன்னல் வழியே வினிதாவுடன் அஜய் மெதுவாகப் பேசிக்கொண்டே வந்தான். அவர்கள் கைகோத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது அவன் தோளில் தட்டி ஆரவாரமாகச் சிரித்தாள்.

"ரெடி!"

ஒரு கணம் உலகமே நின்றது.

இங்கே துல்லியமாகத் துப்பாக்கிகளின் ட்ரிக்கரைத் தயாரிக்கும் சத்தம் கேட்டது. வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவன், தரையில் ஈரம் இருந்ததைப் பார்த்தான். அதில் பதிந்திருந்த பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்தான்...

நின்றான்.

வின்னியிடம் ஏதோ சொன்னான். அவள் வியப்புடன் கீழே பார்த்தாள்.

''நாம் வந்திருப்பதைக் கண்டுபிடித்து விட்டான், பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்து... கெட் அவுட்! வெளியே ஓடுங்க... பிடிங்க..!"

இதற்குள் அஜய், வின்னியை இழுத்துத் தன்னை முன்னால் மறைத்துக் கொண்டான்.

போலீஸார் வெளியே வெள்ளமாகப் பாய்ந்தார்கள். அங்கிருந்து கத்தினான். வின்னியின் நெற்றியில் தன் பையிலிருந்து எடுத்த துப்பாக்கியைப் பதித்து, ''ஸ்டாப்! கிட்ட வந்தா பெண் இறந்து போவாள்... நில்லு!"

'சினிமாவில்தான் இந்த மாதிரி காட்சிகள் வரும்' என்று சந்திரகுமார் நினைத்தார். 'இப்போதுகூட அனைத்தும் கனவு' என்று விழிக்கத் தயாராக இருந்தார்.

அவர் பெண்ணை, அவன் தரதரவென்று இழுத்துச் சென்று மருதி காரில் அவளைத் திணித்து ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது, போலீஸார் 'வாக்கி டாக்கி'யில் ஆணைகள் பிறப்பித்தனர். ''க்விக்! செண்ட் த ஜீப்... ஹி இஸ் ரன்னிங்..."

புரொபசரைப் புறக்கணித்து விட்டு அனைவரும் ஓடினார்கள். நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் கேட் வரை ஓடியது. புரொபசர் வெலவெலத்துப் போய், ''என் மகள்... என் மகளைக் காப்பாற்றுங்கள்... அவளைக் காப்பாற்றுங்கள்..."

புழுதிப் படலம் அடங்க, சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க... கிழக்கே முழுசாகச் சந்தன நிலத்தில் நிலா உயர்ந்து கொண்டிருந்தது.

இரவு எட்டு மணிக்கு அவர்கள் திரும்பி வந்து, அவரைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.

''என்ன ஆச்சு... என் மகளுக்கு என்ன ஆச்சு?"

''ஓ! ஷி இஸ் ஆல்ரைட்.."

"பையன்?"

"கடற்கரையில் சுடவேண்டியிருந்தது..." அவர்கள் இந்த இடத்தை அணுக, வின்னி அவரை நோக்கி ஓடி வந்தாள்.

''வின்னி, தப்பித்தாயா! வின்னி, ஆர் யு ஆல்ரைட்!" என்று அவளைக் கட்டிக் கொண்டு, நெற்றியில் முத்தங்கள் அளித்தார். ''எங்கேயாவது அடிபட்டதா?"

"இல்லை அப்பா... அவன் என்னை எதும் செய்யவில்லை..."

''எதும் செய்யவில்லையா?!"

"நான் அகப்பட்டுவிட்டேன். என்னை நிச்சயம் சுட்டுவிடுவார்கள். சாவதற்குமுன் கடற்கரைக் கோயிலை ஒரு முறை நிலவில் பார்த்துவிட வேண்டும்' என்றான். அதற்காகத்தான் என்னைப் பணயக் கைதியாக அழைத்துச் சென்றான். இங்கே வந்ததும் என்னை விடுவித்து விட்டான்!"

சந்திரகுமார் கரைக்கோயிலைப் பார்த்தார். அதன் விளிம்புகளில் வெள்ளி பூசியிருந்தது. தூரத்தில் கடலலைகளின் சுருட்டல்களில் மேலும் வெள்ளி பிரவாகித்தது. அலை புரளும் ஓசை அவ்வப்போது உருண்டது.

"அப்பா, அவர்கள் அவனை...அவனை..." என்று விசித்து அழுதாள்.

கடற்கரைக் கோயிலின் அருகே மணல்வெளியில், நிலவில் நனைந்து அவன் கிடந்தான். மாருதியின் ஹெட்லைட் வெளிச்சத்தில், மார்பில் பாய்ந்திருந்த குண்டின் ரத்த உறைவு தெரிந்தது. சந்திரகுமார் கிட்டே போய் அவனைப் பார்த்தார்.

'உங்களையெல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான்... இப்போது நம் எதிரி நாமேதான்!'

''மைகாட்! வாட் வெண்ட் ராங்?'' என்றார் சந்திரகுமார்.

"என்ன?"

"நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலிவாங்கும் படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட்டோம்? நன்றாகத்தானே ஆரம்பித்தோம்! எங்கே தப்பு செய்தோம்? எங்கே... எங்கே..?"

"அந்த கேள்வியெல்லாம் கேட்கறதில்லை நாங்கள்..." என்றார் அதிகாரி.

 
Bild könnte enthalten: 1 Person, Text und Nahaufnahme

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதா எழுத்தாளர்களுக்கெல்லாம் தாதா.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.