Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ?

Featured Replies

3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ?

சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ்
 
 

தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வென்று, மே 23-ஆம் தேதியன்று அதிமுகவின் பொது செயலாளரான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவிடம் ஆசி பெறும் ஒ.பன்னீர் செல்வம் Image captionமுதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவிடம் ஆசி பெறும் ஒ.பன்னீர் செல்வம்

இன்றோடு (மே 23-ஆம் தேதி, 2017) ஆட்சி பொறுப்பேற்று தனது முதல் ஆண்டை அதிமுக அரசு நிறைவு செய்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில், தற்போதைய ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவுதான் மிகவும் சவால் மிகுந்தது என்றே கூறலாம்.

 

2016-ஆம் ஆண்டுசெப்டம்பர் 22-ஆம் தேதியன்று, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5-ஆம் தேதியன்று காலமானார்.

காலமானார் ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாலமானார் ஜெயலலிதா

2016 டிசம்பர் 29-ஆம் தேதியன்று அதிமுகவின் பொது செயலாளராக வி. கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் அதிமுகவிலும், தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆளும் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைமைப் பொறுப்புக்கு வி. கே. சசிகலா தேர்ந்தெடுப்பு, ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு முதல்வரான ஓ. பன்னீர்செல்வம் 2017 பிப்ரவரி மாதத்தில் பதவி விலகல், ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ், பதவி விலக தான் வற்புறுத்தப்பட்டதாக தெரிவித்த குற்றச்சாட்டு, சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ்ஸை ஆதரிக்க, கூவத்தூர் விடுதியில் சசிகலாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் வைக்கப்பட, அடுக்கடுக்காக நிகழந்த தமிழக அரசியல் நிகழ்வுகளை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுநோக்கியது.

ஜெயலலிதாவின் சமாதியில் ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம் Image captionஜெயலலிதாவின் சமாதியில் ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம்

சொத்து குவிப்பு வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வி.கே. சசிகலா சிறை செல்ல, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஓராண்டு ஆட்சியில் மூன்றாவது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக தலைமை செயலகத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனை, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை விலக்க கோரி தமிழகம் முழுவதும் நடந்த போராட்டம், நெடுவாசல் போராட்டம், வறட்சி நிவாரணம் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி கோரி தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாட்கள் நடத்திய போராட்டம், நம்பிக்கையில்லா தீர்மானம் கோரலின் போது தமிழக சட்டமன்றத்தில் நடந்த அமளி என ஓராண்டில் ஆட்சி அதிகாரம், மக்கள் களம் மற்றும் அரசியல் என அனைத்து மட்டங்களும் விறுவிறுப்பான நிலையில் இருந்தன.

5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்குமா?

இந்நிலையில் சவால்கள் மிகுந்த இந்த ஓராண்டு அதிமுக ஆட்சியில் மக்களுக்கு விளைந்த நன்மைகள் என்னவென்று பிபிசி தமிழிடம் உரையாற்றிய பத்திரிகையாளர் மணி கூறுகையில், '' இந்த ஓராண்டில் பெரிய சாதனைகள் எதுவும் நிகழ்த்தப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்த 7 மாதத்தில் செல்வாக்கு மிகுந்த ஜெயலலிதா காலமானார் '' என்று தெரிவித்தார்.

முதல் அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி Image captionமுதல் அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி

''அதன் பின்னரும் 2 மாதங்கள் ஒழுங்காகத்தான் ஆட்சி நடைபெற்றது. பின்னர், சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. வரும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது'' என்று மணி மேலும் தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்று கேட்டதற்கு, ''பிரதான எதிர்க்கட்சியான திமுக எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. ஆளுங்கட்சி பலவீனப்பட்டு இருப்பது போல திமுகவும் பலமிழந்து காணப்படுகிறது'' என்று தெரிவித்த மணி, தற்போது நடைபெறும் ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக பதவியில் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.

பொய்த்த பருவமழை: வறட்சியின் பிடியில் சிக்கிய தமிழகம்

2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்த சூழலில், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போனது.

பொய்த்த பருவமழை: வறட்சியின் பிடியில் சிக்கிய தமிழகம்

காவிரி நீர் உரிய காலத்தில் திறக்கப்படாததால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே குறுவைப் பயிர்களைச் சாகுபடி செய்வது பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரியில் திறந்துவிட வேண்டிய நீரும் உரிய காலத்தில் உரிய அளவில் திறந்துவிடப்படவில்லை. தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏறி வறண்ட நிலையில் காட்சியளித்தது.

இதனால் வறட்சியின் பிடியில் சிக்கிய தமிழக விவசாயிகள், வறட்சி நிவாரணம் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் எலிக்கறி, சாட்டையடி, மண்சோறு என பல்வேறு நூதன போராட்டங்களை மேற்கொண்டனர்.

எலிக்கறி உண்ணும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் Image captionஎலிக்கறி உண்ணும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்

உதய் திட்டத்தில் இணைந்த தமிழ்நாடு

இதே காலகட்டத்தில், முந்தைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை காட்டிலும், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரு தமிழக முதல்வர்களும், மத்திய அரசிடம் சரணாகதி அடைந்து, தமிழகத்துக்கு ஆதரவான குரல் எழுப்பவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் மின் வாரியங்களின் கடன்களைச் சீரமைப்பதற்காக உருவாக்கப்பட்ட 'உதய்' மின் திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இந்தத் திட்டம் தொடர்பாக ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் பல்வேறு சலுகைகளைக் கோரியிருந்தார்.

ஆனால், கடந்த ஜனவரி மாதத்தில் உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்த போது, வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகம் கோரிய சலுகைகள் தொடர்பாக எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை.

உதய் திட்டத்தில் இணைந்தது தமிழ்நாடு Image captionஉதய் திட்டத்தில் இணைந்தது தமிழ்நாடு

தமிழக அரசு குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அதிமுக சசிகலா அணியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ''500 டாஸ்மாக் கடைகள் மூடல், உயர்கல்வித்துறையில் சீர்திருத்தம் என பல மறுமலர்ச்சி திட்டங்கள் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் நடந்துள்ளன'' என்று குறிப்பிட்டார்.

''உதய் மின் திட்டம் தொடர்பாக நாங்கள் முழுமையாக மத்திய அரசுடன் சரணாகதி அடையவில்லை. உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகுதான் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய சில சலுகைகள் கிடைக்கும் என்பதால்தான், தமிழக அரசு இத்திட்டத்தில் கையெழுத்திட்டது'' என்று வைகைச்செல்வன் தெரிவித்தார்.

இது போல, ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த உணவுப் பாதுகாப்புத் திட்டம், சரக்குகள் மற்றும் சேவை வரி போன்றவற்றிற்கும், அவரது மறைவுக்குப் பின் அதிமுக அரசு ஒப்புதல் அளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுகவின் நிலைப்பாடு என்ன?

அதிமுகவின் ஓராண்டு ஆட்சி காலம் குறித்து திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான ஆர். எஸ். பாரதி கூறுகையில், ''இந்த ஆட்சியில் எத்திட்டமும் சிறப்பாக நடைபெறவில்லை. சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவித்த பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. அவரது ஆட்சியிலும், அதற்கு பிறகு வந்த இரண்டு முதல்வர்களின் ஆட்சிக்காலத்திலும் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இல்லை'' என்று குற்றம்சாட்டினார்.

ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் தர்ணா Image captionஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் தர்ணா

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான். இதற்கு தமிழக அரசு உரிமை கொண்டாட முடியாது என்றும் தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழலில், தேர்தலுக்கு முன்பு ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால், திமுக அதனை பயன்படுத்திக் கொள்ளுமா என்று கேட்டதற்கு பதிலளித்த ஆர். எஸ். பாரதி, மறைமுகமாக ஆட்சியமைக்க திமுக விரும்பவில்லை, தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் வாக்கை பெற்றே திமுக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

 

தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்த ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்கள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடைவிதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு விதித்திருந்தது.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் பல நாட்களாக நடந்த போராட்டத்தில் பெண்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் பகுதியில் பல நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிற பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

பின்னர், கடந்த ஜனவரி 23-ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில் பெருந்திரளாகக் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டங்களைப் போலிசார் கலைக்கத் தொடங்கிய போது பல வன்முறை சம்பவங்கள் நடந்தன

சில ஊடகங்களில் காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியதாக தகவல் வெளியன் நிலையில், இந்த நிகழ்வுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெடித்த வன்முறைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெடித்த வன்முறை

இப்போராட்டங்களில் அதிமுக அரசின் நிலைப்பாடு குறித்து பேசிய வைகைச்செல்வன், ''கடந்த 50 ஆண்டு கால போராட்டம் இரண்டு மாதத்தில் தமிழகத்தில் நடைபெற்றது என்றே கூறலாம். அதே போல் 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி நிலை தற்போது உள்ளது. அதனால் முந்தைய ஆட்சிகள் மற்றும் காலகட்டங்களோடு, இப்போதைய நிலையை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது'' என்று தெரிவித்தார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு பற்றி குறிப்பிட்ட வைகைச்செல்வன், இது சிறிய அளவிலான பிளவுதான். செங்குத்தாக கட்சி உடையவில்லை. இந்த ஆட்சி நிச்சயமாக 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள வேளையில், கட்சியில் ஏற்பட்ட பிளவு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்படும் கருத்து மோதல்களால் ஆட்சிக்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

http://www.bbc.com/tamil/india-40009940

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.