Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக அரசியல் பிரவேசத்துக்கான இலவச ஓடுபாதை

Featured Replies

மலையக அரசியல் பிரவேசத்துக்கான இலவச ஓடுபாதை
 

- சி.அருள்நேசன்

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் மலையகத் தமிழர்கள் 200 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள். எட்டு பிரதான மாவட்டங்களில் செறிந்து வாழும் மலையக மக்கள், அதே லயன் குடிசைகளிலும் முறையற்ற சுகாதார வசதி, கல்வி வசதி, பொருளாதார பிரச்சினை, வரட்சி, வறுமை, வேலைவாய்ப்புத் திண்டாட்டம், மத்திய கிழக்கு நோக்கிய பெண்கள் பயணம், இளைஞர்களின் நகர்ப்புற மோகம் என்ற பல்வேறு சொல்லொணாத் துயரங்களை நாளுக்கு நாள் அனுபவித்து வருகின்றனர். 

image_b1371d9b66.jpg

மனிதன் மரணித்து, அவனை அடக்கம் செய்வதற்கான நிலம்கூட இல்லாத சமூகமாகவே, மலையகச் சமூகம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

மலையகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால், தேயிலைத் தோட்ட நிலத்தில் தேயிலைக் கன்றுகளை அகற்றி, 6 அடி ஆழமான குழியை வெட்டுவதற்கு முகாமையாளரிடம் அதற்குரிய அனுமதி பெறப்பட வேண்டும். சாகும் வரைக்கும் வீடு. ஆனால் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வாறு   சொல்ல முடியாத வேதனைகள் தொடர்கின்றன. 

தோட்டத் தொழிலாளர்கள் பச்சைக்குத்தப்பட்ட  சமூகம். இன்று நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்து, தமது குடும்பம், வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றனர்.

சம்பளப் பிரச்சினை, சுய காணித் தேவை, மாணவர்களின் கல்வி பின்னடைவு போன்ற பல சிக்கல்கள் இருந்து வருகின்ற நிலையில், மலையக அரசியல் தலைமைகள் வெறும் வாய்ச் சவடால்களால் தமக்குள், பல முரண்பாடுகளை உருவாக்கி, அப்பாவி  மக்களைப்  பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும். இதை அறியாத மலையகச் சமூகம், தொடர்ந்து அரசியல் தலைமைகளுக்கு அடிபணிந்து செல்கின்றது. 

நாட்டில், பாரத பிரதமரின் வருகை முக்கியமான தலைப்பாக இருந்தாலும் மலையகத்தில் அரசியல் கட்சிகள், தலைமைகளுக்கு இடையில் யார் வரவேற்பது, யார் உடன்படிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான பல முறுகல் நிலைகள் ஏற்பட்ட வண்ணமே இருந்தது. 

அரசியல்வாதிகளின் பொய்ப் பிரசாரங்கள், மக்களை மேலும் துன்ப நிலைக்கு இட்டுச்செல்கின்றது. பாரதப் பிரதமரின் வருகையையொட்டி, நடைபெற்ற அலங்கோலங்கள், இதுவரை காலமும் மூடப்பட்ட வைத்தியசாலை திறக்கப்படுவதும், பாதைகள் செப்பனிடப்படுவதும், பாடசாலைகள் மூடப்படுவதும் வெறும்  கேலிக்கூத்தாகவும் வெளிவேசம் போடுவதையே காட்டிநின்றது. 

சொந்த மண்ணில் இதுவரை காலம் சுகங்களை அனுபவிக்காத எம்மவர்கள், ஓர் அரசியல்வாதி, கால்தடம் பதிப்பதால்தான் அந்தச் சுகங்களை அனுபவிக்க வேண்டியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

 மலையக தோட்டங்களில் வேலைகள் நிறுத்தப்பட்டு, பாடசாலைகள் மூடப்பட்டு, இந்தியப் பிரதமரை பார்க்கும் நோக்கில், சாரை சாரையாக நாட்டின் எல்லா பக்க மலையக உறவுகளும் ஹட்டன் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தனர். இந்நிலை, மலையக மக்களின் அறியாமையை வெளிக்காட்டுகின்றது. 

இவ்வாறான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எம் தலைமைகள் ஏன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, ஆசிரியர்  பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் காலதாமதப்படுத்துகின்றனர் என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.  மலைகத்தின் கல்விசார் சமூகமும் அரசியல்வாதிகளுக்குச் சோரம்போகும் நிலையே காணப்படுகின்றது.  

மோடியின் வருகையில் அக்கறை காட்டிய அரசியல் தலைமைகள், கல்வி நிலையில் பின்தங்கிப் போகும்,  எமது சமூகத்தைத் துளியும் கருத்திற்கொள்வதில்லை. பாதை எங்கும் தோரணம், கட்டவுட்கள், சுவரொட்டிகள், மேளதாளங்கள், தாரைதப்பட்டையென கொண்டாடப்படும் ஒருநாள் விழா, மக்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தினாலும், மனங்களில் ஏற்பட்ட மாறாவடு தொடர்ந்த வண்ணமே இருக்கும். 

அன்று, ‘கள்ளத்தோணிகள்’ என்று பட்டம்சூட்டப்பட்டு நாடுகடத்தப்பட்ட எம் உறவுகள், குடியுரிமை பறிக்கப்பட்ட எம் உறவுகள், இன்று சொந்தக்காணி இல்லாமல் நாட்டுக்காக உழைத்து தம் உயிரைத் தியாகம் செய்கின்றனர்.     இது,  30 வருடகால வடக்கு, கிழக்கு யுத்த நிலையைவிட கொடிய வேதனையாகும். 

அன்று அமரர் பெ.சந்திரசேகரன் கூறிய காணித் திட்டம், இன்றும் சாத்தியப்படாத நிலையிலும் ஒன்பதுக்கும் மேற்பட்ட மலையக அரசியல் தலைமைகள் இருந்து செயற்படுத்த முடியாத நிகழ்வாகவும் காணப்படுகின்றது.

 எனினும், ஒட்டுமொத்த நாட்டின் தமிழ்ச் சமூகமும் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு, சந்தர்ப்பத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுவரும் நிலைமையே தொடர்கிறது.  

பெருந்தோட்டத் தொழில் தொடர்பாகக் காணப்படும் பிரதான பிரச்சினை யாதெனில், அத்தொழில் பற்றிய சமூக அங்கிகாரத்தைப் பெறுவதாகும். பெருந்தோட்டங்களில் வேலை நிலைமைகளும் மோசமான சுகாதார மற்றும் கல்வி வசதிகள்  மற்றும் மிக இறுக்கமான மேலிருந்து கீழான முகாமைத்துவ முறைமையும் இத்தகைய மனப்போக்குக்குக் காரணமாகும். 

பெரும்பான்மைச் சமூகத்தைப் பொறுத்துவரை, பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை இலங்கையின் முக்கியமானதோர் சமூகப் பிரிவாகவோ பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்யும் முக்கியமானதோர் பிரிவாகவோ ஏற்றுக்கொண்டு அங்கிகரிக்கும் மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை.  

1980 களில் மலையகக் கட்சிகள் அரசாங்கத்தை தெரிவு செய்யும் கட்சிகளாக இருந்ததாக உறுத்தலுடன் நோக்கப்பட்டது. தொண்டமான் அவர்களின் தலைமைத்துவத்துடனான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் இதில் முக்கியம் பெற்றன. ஜே. ஆர். ஜயவர்த்தன அறிமுகப்படுத்திய அரசியல் அமைப்பின் காரணமாக, பின்வந்த காலப்பகுதியில் அரசமைக்கும் கட்சிகளுக்கு, சிறுபான்மைக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவையானதாக இருந்தது. 

இதைப் பயன்படுத்திக் கொண்ட பிரதான மலையக கட்சிகள், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளை, குடியுரிமை, சம்பளம்,கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை பெற்றுக்கொடுத்துள்ளதை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது.

எனினும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி மலையக மக்களின் நிலைமைகளை மேம்படுத்த இதைவிடக்கூடுதலான பங்களிப்பைச் செய்திருக்கலாம் என விமர்சிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும், இன்றைய சூழ்நிலையில் எவருமில்லை. மாறாக சிறுபான்மைக் கட்சிகள் யாவும் காலைச் சுற்றும் நாய்க்குட்டிகளின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையும் தெளிவாகத் தெரிகிறது. 

விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வி, எதிர்க்கட்சியின் பலவீனம், அரசியல் குத்துவெட்டுகள், கட்சித்தாவல்கள் போன்றவை காரணமாக அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசியற்பலம் ஆட்சியாளருக்கு உண்டு.

எனவே, சிறுபான்மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதுவே 1980-2007 வரையில் தென்னிலங்கை அரசாங்கங்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினையாக இருந்தது. சிறுபான்மைக் கட்சிகளின் தயவின்றி ஆட்சியமைப்பதே விரும்பத்தக்க ஒன்றாக அவர்களுக்கு இருந்தது தற்போது நிறைவேறியுள்ளது.

மலையகத் தலைமைகளின் பலவீனம் காரணமாக, இளைஞர் சமூகம் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகிறது. அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் மலையகத்தைச் சாராத ஒரு வேட்பாளர், நுவரெலிய மாவட்டத்தில் வெற்றியீட்டி நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தமையும் இந்த  நம்பிக்கையீனத்தின்  வெளிப்பாடாகவே நோக்கப்படலாம். 

அதேவேளை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் மலையக் கட்சிகள், அம்மக்களின் முன்னோக்கிய சமூக அசைவுக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆயினும் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கக்கூடிய சூழல் தற்போதில்லை.

எனவே சிவில் சமூக அமைப்புகள் மலையக மக்களின் மேம்பாடு குறித்துக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தேவை உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி, தொடர்பான தகவல்களைத் திரட்டி திட்டங்களை வகுக்கவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர் தொடர்பான புள்ளிவிவரங்கள், ஓரளவுக்குக் கிடைத்திருப்பினும் இற்றைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரத் தரவுகள் இல்லை. 

குறிப்பாக மலையகப் பிரதேசங்களிலிருந்து உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் அரச சேவைகள், தனியார் துறை என்பவற்றில் பதவிநிலை தொழில்வாய்ப்புகளில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வெளியில் தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தரவுகளின் பற்றாக்குறை மலையகப் பெருந்தோட்டத்துறைச் சமூகம் பற்றிய ஆய்வுகளைச் செய்வதில் பெருந்தடையாக உள்ளது. 

மறுபுறம் மலையகச் சமூகமானது சமூக அங்கிகாரம் தொடர்பில் ஓரங்கட்டப்பட்ட சமூகமாகவும் அரசியல் மற்றும் இனரீதியான மோதல்களின் போது, அடிவாங்கும் சமூகமாகவும் உள்ளது.

பெரும்பான்மையாகத் தமிழ்பேசும் மக்களைக் கொண்டுள்ள, பெருந்தோட்டத்துறையைக் கையாளும் அமைச்சு, அப்பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கைகளிலன்றி, பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளமை மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல்,செல்நெறிகள் எத்திசையில் நகரும் என்பதைப் புரிந்துகொள்ளப் போதுமானதாகும். 

இவ்வாறானதொரு பின்புலத்தில் மலையக அரசியல்வாதிகள், கல்விச் சமூகத்தினர்,  சிவில் அமைப்புகள், இளைஞர் சமுதாயம் என்பன எவ்வாறு இயங்கப் போகின்றன? சமூக முன்னேற்றத்துக்கு எவ்வாறு பங்களிக்கப் போகின்றன என்பதே எமக்கு முன்னுள்ள வினாவாகும். 

கடந்த காலங்களைப் போலவே, இனிமேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், முரண்பாட்டு அரசியலை மேற்கொள்ள  முடியாது. இன்றைய சூழலில் அது எவ்விதத்திலும் சாத்தியமில்லை. அதனால் மலையக சமூகத்தினருக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. 

அதேவேளை மலையக அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலைக் கைவிட்டு, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் மேம்பாட்டுக்காகக் கூடுதலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். சாத்தியமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளை மலையக மக்களுக்கு நம்மை தரும் வகையில் பயன்படுத்த வேண்டும். 

மலையகப் புத்திஜீவிகள், அதிகார வர்க்கத்தினர், முயற்சியாளர்களை ஒருங்கிணைத்த நிபுணர்கள் சபையொன்று உருவாக்கப்பட வேண்டும். பேரம் பேசுதல்களின்போது, இந்த நிபுணர் குழுவின் பொருத்தமான அங்கத்தவர்களின் பங்குப்பற்றல் இருக்கவேண்டும். நிபுணர்குழு மலையக மக்களின் தேவைகள், முன்னேற்றம் என்பவற்றுக்கான சிந்தனை மற்றும் சாத்தியமான திட்டங்களை வகுக்க  வேண்டும். 

இத்திட்டங்களிடையே ஒருங்கிணைப்பும் தொடர்பாடலும் இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் இத்திட்டங்களுக்கு அவசியமான நாடாளுமன்ற அங்கிகாரத்தையும் சட்ட வலுவையும் பெற்றுக் கொடுப்பவர்களாகச் செயற்படவேண்டும். 

மலையகப் பெருந்தோட்ட மக்களின் சமூக அபிவிருத்தி, சமூகஅங்கிகாரம், சமூகப்பிரதிநிதித்துவம், சமூகத்துக்காக் குரல் எழுப்பும் தன்மை என்பவற்றை மேம்படுத்துவதே எல்லோரதும் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். 
 பெருந்தோட்ட மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள், மேம்பாட்டுக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். 

உள்ளூர் பொலிஸாரின்  அனுசரனை இதற்குப் பெறப்பட வேண்டும். ஏற்கெனவே இருக்கின்ற அமைப்புகள் வலுப்படுத்தப்படவேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை முதல், அரசியல் அபிலாஷைகள் வரையிலான முறையான திட்டமிடலொன்றும் தாபன ரீதியான கட்டமைப்பொன்றும் உருவாக்கப்பட்டு, அரசியல் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 இவ்வாறானதொரு கட்டமைப்பு மாற்றம் ஏற்படாவிட்டால் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான முன்னோக்கிய அசைவு மந்தகதியுடன் சமூகத்துடன் தொடர்பற்ற எவரும், தமது அரசியல் பிரவேசத்துக்கான இலவச ஓடுபாதையாக, மலையக சமூகத்தைப் பயன்படுத்தும் நிலை தவிர்க்க முடியாததாகிவிடும். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மலையக-அரசியல்-பிரவேசத்துக்கான-இலவச-ஓடுபாதை/91-199191

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.