Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண சபை தேர்தலும் அரசியல்வாதிகளின் எதிர்காலமும்

Featured Replies

கிழக்கு மாகாண சபை தேர்தலும் அரசியல்வாதிகளின் எதிர்காலமும்
 

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் சிலவேளை, அதற்கு முன்னதாகவே மாகாண சபைத் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது வெற்றியில் நம்பிக்கையில்லாத பல அரசியல்வாதிகளின் மனது படபடக்கத் தொடங்கியுள்ளது.   

பரீட்சைக்கு முன்கூட்டியே படித்துத் தயாராகாத மாணவனின் மனநிலை போல, ஒருவித அச்சமும் பதற்றமும் அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக,கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இவ்வருட இறுதிக்குள் அல்லது அதிகபட்சமாக அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறலாம் என அனுமானிக்கப்படுகின்ற ஒரு பின்னணியில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கடந்த முறை ‘குதிரையோடி’ வெற்றிபெற்ற பல அரசியல்வாதிகள், இந்த மனநிலைக்கு ஆட்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.   

இலங்கையில் மாகாண சபை முறைமை என்பது, மிகச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும், அது இலங்கை மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.  

காலனித்துவத்தில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த பிற்பாடு, நடைமுறையில் இருந்த ஆட்சி முறைமைகள் வெற்றியளித்திருக்காத நிலையில், 1973 இலும் பின்னர் 1979 இலும் முறையே மாவட்ட அரசியல் அதிகார முறைமையும் மாவட்ட அபிவிருத்திச் சபை முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டன.  

 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி, மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் நோக்கில், இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை மேற்கொண்டு, மாகாண சபைகள் முறைமை உருவாக்கப்பட்டது. இதற்குப் பக்கபலமாக, அதிகாரப் பகிர்ந்தளிப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் மாகாண சபை சட்ட ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், இலங்கையில் மாகாண சபை முறைமை உருப்பெறுவதற்கு, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீது இந்தியா கொண்டிருந்த ‘ஆர்வமும்’ ஒரு காரணம் என்று கூறலாம்.   

இருப்பினும், இலங்கையை அதுவும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க விரும்புகின்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட மேற்சொன்ன அதே ஒப்பந்தத்தின் பிரகாரம், இன்னுமொரு கைங்கரியமும் நடந்தேறியது.   

வடக்கு, கிழக்கு என இரு பிராந்தியங்களை இணைத்து, வடகிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்டதுடன், அதனது அதிகார மையம் திருகோணமலையில் நிறுவப்பட்டது. எவ்வாறிருப்பினும்,இதற்காக மக்களது விருப்பு கேட்டறியப்படவில்லை.   

தற்காலிகமாகவே இவ்விணைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் நிரந்தரமாக இணைந்திருக்கவோ பிரியவோ வேண்டுமென்றால் வடக்கு, கிழக்கில் மக்களிடையேயும் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, மக்களாணை பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. 

இருப்பினும் ஜே.ஆர். ஜயவர்தன முதல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் தமக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தற்காலிகத்தை - சுமார் 19 வருடங்களுக்கு நிரந்தரமாக்கி இருந்தனர்.   

இந்நிலையில்,மக்கள் விடுதலை முன்னணி இதற்கெதிராகத் தொடுத்த வழக்கின் தீர்ப்புக்கமைய 2007 ஜனவரி 01ஆம் திகதி மீண்டும் வடக்கும் கிழக்கும் இரு தனித்தனி மாகாணங்களாக பிரிந்தன. அதன்பிறகும் வட மாகாணத்துக்கு பல வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறவில்லை. இருப்பினும் வடக்கை விடவும் முன்னரே கிழக்கு மாகாணம் யுத்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் அடுத்த வருடமே அதாவது 2008 மே மாதத்தில் முதலாவது மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது.   

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலில், சி. சந்திரகாந்தன் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்து,பின்னர் அதிலிருந்து விலகி, அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்ட பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் என்ன செய்யப் போகின்றாரோ, ஆட்சியை எப்படிக் கொண்டு நடத்துவாரோ என்ற ஒரு சிக்கலான எதிர்பார்ப்பு தமிழ், முஸ்லிம் மக்களிடையே அப்போது காணப்பட்டது.   

ஆனால்,கிழக்கின் கன்னி முதலமைச்சரான சந்திரகாந்தன் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், சில விடயங்களில் ஆளுமைக் குறைபாடு அவதானிக்கப்பட்டாலும்,இப்போது அவர் சிறைவாசம் அனுபவித்தாலும்,அக்காலத்தில் அவர் மேற்கொண்ட தற்றுணிபான செயற்பாடுகளும் தைரியமும் மாகாண சபையின் சேவைகளும் பிற்காலத்தில் ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு சிறப்பாக இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு அவரது ஆளுமையும் மாகாண சபையின் செயற்றிறனும் மட்டுமே காரணம் என்று கூறிவிடவும் முடியாது.   

யுத்தத்தில் இருந்து மீட்கப்பட்ட கிழக்கில் முதலாவது முதலமைச்சர் என்ற ஈர்ப்பு, சுனாமிக்குப் பின்னர் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து கிடைத்துக் கொண்டிருந்த செயற்றிட்ட உதவிகள்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்காக கிடைக்கப்பெற்ற உதவிகள்,வடக்கில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கிழக்கில் அரசியலை செய்து காட்ட வேண்டிய தேவை மத்திய அரசுக்கும் மாநில முதலமைச்சருக்கும் இருந்தமை எனப் பல விடயங்கள் இதற்குக் காரணங்களாக இருந்தன. இருப்பினும்,அந்த ஆட்சிக் கட்டமைப்பு மக்களிடையே அவதானிப்பை பெற்றிருந்ததை மறக்க முடியாது.   

அதற்குப் பின்னர், நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில், நஜீப் ஏ.மஜீத் முதலமைச்சரானார். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பத்துக்கமைய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மதத்தோடும் நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 

சந்திரகாந்தனின் காலத்தில் இருந்தது போன்ற விரைவான அபிவிருத்தியும் செயற்பாடுகளும் கிழக்கில் சில காலம் நீடித்திருந்தது. ஆனால், பிறகு மெல்ல மெல்ல கிழக்கின் ஆட்சிக் கட்டமைப்பு சுறுசுறுப்பற்றதாக மாறியது. இது, பொது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஒரு முஸ்லிம் முதலமைச்சருக்கு ஆசைப்பட்டதால் இந்த நிலைமை வந்து விட்டதே என்று கிழக்கு முஸ்லிம்கள் தமக்குள் புலம்பிக் கொண்டனர்.   

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தல் 2012 செப்டம்பர் 8ஆம் திகதி நடைபெற்றது. இதற்கமைய யார் கிழக்கில் ஆட்சியமைப்பது, யார் முதலமைச்சராக வருவது என்ற பாரிய இழுபறிகள் இருந்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தனித்து ஆட்சியை நிறுவ முடியாதிருந்த சூழலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை இரு தரப்பும் கோரியது. நீண்டதொரு தாமதத்தின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் ஒரு சரியான, பாராட்டத்தக்க முடிவை மு.கா எடுத்தது. 

மு.கா தலைமை எடுத்த ஓரிரு சிறந்த முடிவுகளுள் இதுவும் ஒன்றென்றும் கூறலாம். இதன்பிரகாரம், நஸீர் அகமட் கிழக்கின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அல்லது,தமக்கு ஆதரவளித்தமைக்கு கைமாறாக (மீண்டும்) ஒரு முஸ்லிம் முதலமைச்சரை நியமிப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது என்றும் கூறலாம்.   

வடக்கு, கிழக்கும் இணைந்த மாகாணங்களாக இருந்தபோது, முஸ்லிம்களுக்கு ஆளும் அதிகாரம் கிடைக்கவில்லை. 

எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தலைமையில் எதிர்க்கட்சி வரிசையில் பல நல்ல முஸ்லிம் ஆளுமைகள் இடம்பிடித்திருந்தனர். கிழக்கு பிரிந்த பிறகு நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சராக வந்தாலும் அவர் முஸ்லிம் கட்சியால் நியமிக்கப்பட்டவர் அல்லர். அப்படிப் பார்த்தால், 2012 இல் நிறுவப்பட்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சியிலேயே முஸ்லிம் கட்சி ஒன்றின் உறுப்பினர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டது மட்டுமன்றி, ஆட்சியில் சரிசமமான பங்கும் முஸ்லிம்களுக்கு கிடைத்தது. 

ஆகவே, நஸீர் அஹமட்டை முன்னிறுத்திய கிழக்கின் ஆளுகை, அதனூடான சேவைகள் தொடர்பில் கிழக்கு முஸ்லிம்கள் பாரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். தமது அபிலாஷைகள், பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு வரப்பிரசாதமாக இது அமையும் என்று திடமாக நம்பினர். ஆனால், அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது, காப்பாற்றப்பட்டிருக்கின்றது என்பதே இன்று நம்முன்னுள்ள கேள்வி. 

இந்தக் கேள்விக்கு மக்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றார்கள் என்பதை விரைவில் நடைபெறவுள்ள அடுத்த மாகாண சபைத் தேர்தல் முடிவின் ஊடாகக் காணமுடியும்.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் நடாத்துவதற்கு கடந்த பல மாதங்களாக அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள உள் முரண்பாடுகள்,பெருந்தேசியக் கட்சிகளிடையேயான அதிகாரப் போட்டி, பொது எதிரணியின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாக, தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இத்தேர்தல்களை நடாத்துவது தொடர்ந்து இழுபறியாக இருந்து வருகின்றது.   

இவ்வாறிருக்க, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஏனைய பல மாகாணங்களின் தேர்தல்களை இவ்வருட இறுதிக்குள் நடாத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 உள்ளூராட்சித் தேர்தலை நடாத்துவது தொடர்பில் காணப்படுகின்ற தொழில்நுட்ப சிக்கல்கள் அடுத்த மாதத்துக்குள் தீர்க்கப்பட்டால், இவ்வருடம் நிறைவடைவதற்குள் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த முடியும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் கிழக்கில் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ள மாநில ஆட்சி பற்றிய மீள்பார்வை அவசியமாகின்றது.   

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட்டின் செயற்பாடுகள் ஆரம்பத்தில் சற்று வேகமாக இருந்தன. ஆனால், இடைப்பட்ட காலத்தில் முதலமைச்சரின் செயற்பாடுகள் மந்தமாக மாறியிருந்தன. இப்போது கடந்த சில மாதங்களாக மீண்டும் முதலமைச்சர் சுறுசுறுப்பாகவும் வினைத்திறனாகவும் இயங்க ஆரம்பித்திருப்பதாக சொல்லலாம். 

ஆசிரியர் நியமனம், இனவாத செயற்பாடுகள் போன்ற பல விடயங்களில் தலையிட்டுச் செயற்பட்டு வருவதுடன் அவ்வப்போது வேறு சில பாராட்டத்தக்க முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு முதலமைச்சர் உத்வேகம் பெற்றிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் அவரது எதிர்கால அரசியல் நலன் குறித்த எதிர்பார்ப்புகளும் உள்ளடங்குகின்றன. அதாவது, முதலமைச்சருக்குப் பின்னரான அரசியல் இருப்புக்கு அவர் தன்னை தயார்படுத்திக் கொள்கின்றார் எனலாம்.   

இருப்பினும், வட மாகாண முதலமைச்சருக்கு இருக்கின்ற தைரியத்தை கிழக்கு முதலமைச்சரிடம் காண முடியவில்லை. மு.கா கட்சியின் தலைவரைப் போலவே அக்கட்சியின் மாநில முதலமைச்சரும் மத்திய அரசுக்கு நோகாமல் செயற்படும் போக்கையே பொதுவாக அவதானிக்க முடிகின்றது. கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், மக்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கவில்லை என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. 

குறைந்தபட்சம் நெடுங்காலமாக தீர்க்கப்படாதிருக்கின்ற காணிப் பிரச்சினைகள், எல்லை விவகாரங்கள் உள்ளடங்கலாக சிவில் நிர்வாகப் பிரச்சினைகளுக்கேனும் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு மு.கா சார்பு முதலமைச்சராலும் அக்கட்சியின் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களாலும் ஒட்டுமொத்த மாகாண சபை என்ற அதிகார மையத்தாலும் முடியாது போயுள்ளது என்பதே நிதர்சனம்.  

எனவே, புதிய தடைகள் ஏற்படாதவிடத்து, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் டிசெம்பரில், அல்லது அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும் சாத்தியமுள்ளது. எவ்வாறிருப்பினும் தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும், மாகாண சபையின் ஆட்சிக்காலம் நீடிக்கப்படாதவிடத்து,ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரமெல்லாம் குறிப்பிட்ட திகதியிலேயே வறிதாகிவிடும் என்பது கவனிப்பிற்குரியது. 

அதாவது,கிழக்கின் முதலமைச்சர் நஸீர் அஹமட்,அந்தக் கட்சியின் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மட்டுமன்றி ஏனைய கட்சிகளின் முஸ்லிம் உறுப்பினர்களும் இன்னும் சில மாதங்களே பதவியில் இருக்கப் போகின்றனர். 

இந்நிலையில் இன்னுமொரு தேர்தல் நடந்தால் யார் யார் வெற்றிபெறுவார் என்ற கேள்வி எழுகின்றது.   

அந்த வகையில்,கிழக்கின் முதலமைச்சராக மீண்டும் நஸீர் அஹமட் பதவி வகிக்க மாட்டார். தமிழர் ஒருவரே முதலமைச்சராக வரும் சாத்தியமுள்ளது. 

முஸ்லிம் கட்சிகள் தனித்து ஆட்சியமைக்காத பட்சத்தில் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சியமைத்தாலோ முஸ்லிம் கட்சிகளுடன் த.தே.கூ கூட்டாட்சி அமைத்தாலோ அடுத்ததாக முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க தமிழ்த் தரப்பு சம்மதிக்காது.

அதேபோல,முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் மக்கள் சேவையில் ஜொலிக்கவில்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. அந்த வகையில் சிலர் மீண்டும் வெல்வது என்றால் கடுமையாகப் பாடுபட வேண்டியிருக்கும். வேறு கட்சிகளைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் ஓரிருவரும் தமது பதவி அந்தஸ்தை இழக்க நேரிடலாம்.   

கிழக்கில் புதிய அரசியல் அணிகள் கூட்டாக இணைந்து போட்டியிட்டு அதன்மூலம் வாக்குகள் உபயோகமற்ற விதத்தில் சிதறிப்போகாமல், ஒரு கூடையில் ஒன்றுசேர்க்கப்படுமாக இருந்தால், அந்த அணிகள் சார்பு கட்சிகள் ஊடாக புதிய முகங்கள் மாகாண சபைக்கு வரும். 

இவ்வாறு ஓர் அணி களமிறங்கினால், மு.கா தலைவரும் ஒரு சாணக்கிய நகர்வை மேற்கொண்டு ஓரிருவரை நீக்கிவிட்டு பலமான புதிய நபர்களை மாகாண சபை உறுப்பினருக்கான போட்டியில் ஈடுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.   

எனவே,கிழக்கின் ஆட்சியில் மீதமாக இருக்கின்ற சில மாதங்கள் என்பது அடுத்த ஆட்சிக்காலத்தில் ஆட்சியையும் பதவிகளையும் உறுதிப்படுத்துவதற்கான காலஅவகாசமாகும். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள்,அடுத்த மாகாண சபை தேர்தலில் வெற்றி பெறுவார்கள். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கு-மாகாண-சபை-தேர்தலும்-அரசியல்வாதிகளின்-எதிர்காலமும்/91-199718

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.